Saturday, June 20, 2026

கருப்பு படம்

0

கருப்பு படத்தினைத் திரையரங்கில் பார்த்தேன். இந்தப் படம் திரையரங்கின் கொண்டாட்டதுக்காக எடுக்கப்பட்ட படம் , அதனால் நிறைய லாஜிக் பிரச்சனைகள் இருக்கும் என படத்தின் இயக்குநர் ஆர்.ஜே பாலாஜி சொன்னபிறகும் படம் குறித்து எழுத வேண்டுமா என்று கேள்வி எழுந்தது. தமிழ் சினிமாவில் லாஜிக் மீறுவது என்பது மரபாக மாறிவிட்ட பிறகு அது குறித்து அதிகமும் ஆராயாமல் படம் பார்க்க பழகியாயிற்று. ஆனால், கருப்பு படம் சில கேள்விகளை எழுப்பியது.

தென்மாவட்டங்களில் ஹைகோர்ட் மகராஜா என்கிற ஒரு தெய்வம் உண்டு. சிலருக்கு குலதெய்வம். பலருக்கும் இஷ்டதெய்வம். பிரிட்டிஷ் ஆதிக்கம் செலுத்திய காலகட்டத்தில் கொலை குற்றத்தில் சிக்க வைக்கப்பட்ட ஒருவர், தான் நிரபராதி என வாதாடுகிறார். நீதிமன்றம் ஏற்க மறுக்கிறது. சாட்சியங்களும் தடயங்களும் அவருக்கு எதிராக இருக்கின்றன. ‘நான் கும்படற சுடலமாடன் தான் நான் கொலைகாரன் இல்லைன்னு சொல்றதுக்கு ஒரே சாட்சி’ என்கிறார் அவர். அடுத்த முறை வழக்கு விசாரணையில் ஆறடி உயரமும், மரியாதைக்குரிய கம்பீரத் தோற்றத்திலும் ஒருவர் வருகிறார். குற்றம்சாட்டப்பட்டவர் கொலைகாரன் இல்லை என நிரூபிக்கிறார். குற்றம்சாட்டப்பட்டவர் விடுவிக்கப்படுகிறார். அதன் பிறகு சாட்சி சொன்ன நபரை யாரும் பார்க்கவில்லை. அதற்கு முன்பும் பார்த்ததில்லை. மாடன் தான் சாட்சி சொன்னது என்று எல்லோரும் நம்புகிறார்கள். சுடலை மாடன் ஹைகோர்ட் மகராஜாவானார். இப்போதும் வழக்கில் தன பக்கம் நீதி வேண்டுவோர் எங்கிருந்தாலும் வழிபடும் தெய்வமாக இருக்கிறார் ஹைகோர்ட் மகராஜா.

வண்டிமறிச்சியம்மன், பேராத்து செல்வி என மக்களை நேரடியாக காக்க வந்த கடவுளர்களை வழிபடும் மரபு இங்கு உண்டு. இந்த அடிப்படையில் இருந்து ‘கருப்பு’ கதை எடுத்தாளப்பட்டிருக்கிறது. நாயகன் உக்கிர தெய்வமாக அவதாரம் எடுத்து வருவது வணிகரீதியான படத்துக்கு ஏற்ற கதை.

ஆண்டாண்டுகாலங்களாய் நாம் கடவுள் படங்கள் எடுத்துக் கொண்டு தான் இருக்கிறோம். இந்திய சினிமா தொடங்கப்பட்டதே கடவுளர்களின் கதையைச் சொல்லித் தானே! அதனால் ‘ஐடியா’ புதிதில்லை. ‘கருப்பு’ படம் பார்க்கும்போது ஆடிவெள்ளி, பாளையத்தம்மன், ராஜகாளியம்மன் போன்ற படங்களும் நினைவுக்கு வந்தன. அதன் தொடர்ச்சி தான் இந்தப் படமும்.

2026 ஆம் ஆண்டு வெளிவந்த ‘கருப்பு’ உக்கிரமான ஆண் தெய்வமான கருப்பசாமியை முன்னிருத்துகிறது. ஏழுகிணறு என்கிற நீதிமன்ற வளாகத்துக்குள் இருக்கும் கருப்பு என்கிற காவல் தெய்வத்திடம் மிளகாயை அரைத்து பூசி வேண்டினால் அவர் நீதி பெற்றுத் தருவார் என்பது கருப்பு குறித்த் அறிமுகம். அவர் கடைசி வரை யாருக்கும் நீதியே வாங்கித்தரவில்லை என்பது கதை கூறும் செய்தி. இவரை நம்பியவரின் மகள் இறந்தபிறகு நிர்க்கதியாய் நிற்கும் தகப்பனைப் பார்த்து கருப்பு அழுகிறார். அவருக்கு அப்போது தான் உரைக்கிறது நமது ஆளுகைக்கு உட்பட்ட நீதிமன்றத்தில் இத்தனை கொடுமைகள் நடக்கிறதா என்று ! இலஞ்சம் வாங்குவதை  தனது குணமாக வைத்திருக்கும் நீதிபதியும், அடாவடி செய்து அடியாட்களை வைத்து மிரட்டி கேஸ் ஜெயிக்கும் வழக்கறிஞரும் இருக்கிற வளாகத்திற்குள் வாழும் தெய்வத்துக்கு மனித அவதாரம் எடுத்த பின்பு தான் தன் முன் நடக்கும் எல்லா அநியாயங்களும் தெரிகிறது. இத்தனை பலவீனமான ஒரு கடவுள் கதாபாத்திரத்தை இதற்கு முன்பு இந்திய சினிமா கண்டதில்லை.

எல்லைத் தெய்வங்கள் என்பதைப் பற்றிய அடிப்படையைக் கொஞ்சமேனும் தெரிந்து கொண்டு படம் எடுத்திருக்கலாம். எல்லை காவல் தெய்வம் என்பது அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளி அல்ல. கருப்பசாமியும், அய்யனாரும், சுடலைமாடனும் தமிழ்நாடு முழுக்கவுமே உண்டு. ஒரு ஊரில் பல தலைமுறையாக வாழ்ந்தவர்கள் அங்கிருந்து ஏதேனும் காரணத்துக்காக குடிப்பெயர்வை மேற்கொள்ளும்போது தங்களது  குலசாமியையும், காவல் தெய்வமும் இருக்கும் இடத்தின் பிடிமண்ணை எடுத்துக் கொண்டு போய் தாங்கள் குடியேறும் இடத்தில் வைத்து அதே இடத்தில் கோயில் கட்டுவார்கள். கங்கையில் இருந்து சாளக்கிராம கற்களைக் கொண்டு வந்து பூஜை செய்வதில்லையா? நம்பிக்கைக்குகந்த கடவுளின் சக்தி எல்லைத் தாண்டினால் வலுவிழந்துவிடும் என்கிற மேம்போக்கான பிரசாரத்திற்கு ஒரு படம் எடுத்திருக்கிறார்கள்.

இதெல்லாம் கூட பொறுத்துக் கொள்ளலாம். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இதனைத் திரும்பத் திரும்ப சொல்ல வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். நீதிமன்றங்கள் சாதி, மதம் பாலினத்துக்கு அப்பாற்பட்டது என்பது நியதி. இந்துக்கள் தவிரவும் எல்லோரும் நீதிமன்றத்தை நாடுவார்கள் இல்லையா? அவர்களுக்கு கருப்பு என்ன செய்வார்? அவர்கள் கருப்பை அணுக வேண்டுமா? இதற்கு முன்பு மூடநம்பிக்கைகளை மட்டுமே கொண்டு படம் எடுத்த தமிழ் இயக்குநர்கள் கூட இந்தளவுக்கு தவறாக யோசித்ததில்லை.

சிலருக்கு தவறான நீதி வழங்கப்பட்டிருக்கலாம். நீதித்துறையில் சிலர் சுரண்டப்பட்டவர்களாக இருக்கலாம். பலருக்கும் நியாயங்கள் கிடைக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், அரசியலமைப்பும், சட்டமும் சமமாக எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று அறிஞர்களால் சிந்தித்து அமைக்கப்பட்டுள்ளது. சட்டத்துறையையும், நீதிமன்றங்களையும் மக்கள் நம்புகிறார்கள். பாதிக்கப்ப்பட்டவர்களுக்கான முதலும், கடைசியுமான பாதுகாவல் அது. அந்தத்துறை குறித்து ஒரு படத்தினை அதிலும் இது போன்ற கடவுள் நம்பிக்கையோடு சொல்லும்போது பெரும் பொறுப்பு இயக்குனருக்கு இருந்திருக்க வேண்டும்.

அறுபது வருடங்களுக்கு முன்பு பராசக்தி என்றொரு படத்தினை தமிழ்நாடு பார்த்திருக்கிறது. அரசியல், சமூக மாற்றத்தினை ஏற்படுத்திய படம் அது.. அதன் நீதிமன்றக் காட்சி இன்றளவும் பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது. நமது தமிழ் சினிமாவின் பெருமை என அந்தப் படத்தினைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். சமூக சினிமாவின் தொடக்கமாகவும் இருந்தது. இப்போது கடவுளர் நம்பிக்கையைக் குழப்பியடிக்கும் ‘கருப்பின்’ காலம்.

கடைசி பத்து நிமிடங்களில் இருக்கிற எல்லா தாள வாத்தியங்களையும் தட்டிவிட்டு அருள் வரவழைப்பது போல ஒரு பாடலை எழுதி மக்களை ஏமாற்றி vibe ஏற்றி அனுப்பிவிடுவது எந்த வகையிலும் சினிமாவுக்கு நல்லதில்லை. சாமி வர்ற மாதிரி ஒரு பாட்டு, க்ளைமாக்ஸ்ல ஒரு செண்டிமெண்ட் சீன் , நீளமா எதையோ கருப்பு சாமியை பேசவைக்கறது ..இது போதும் மக்கள் படத்தை ஹிட் பண்ணிருவாங்க என்று டிஸ்கஷனில் பேசியிருக்கக்கூடும். அது நடக்கத் தான் செய்திருக்கிறது.

அதுவே வருத்தமாகவும் இருக்கிறது.

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted