Tuesday, June 30, 2026
Home கட்டுரைகள் பொது இயக்குநர் பாரதிராஜாவுக்கு அஞ்சலி

இயக்குநர் பாரதிராஜாவுக்கு அஞ்சலி

0

இயக்குநர் பாரதிராஜாவுக்கு அஞ்சலி

அல்லிநகரம் எனும் தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தில் இருந்து முந்நூறு ரூபாய் பணத்துடன் லாரி ஏறி சென்னைக்கு வந்தவர் சின்னசாமி என்கிற பால்பாண்டி. நடிக்க வேண்டும் என்கிற ஒரே ஆசை. தமிழ் வாத்தியார் ‘நீ பெரிய இயக்குனரா வருவப்பா’ என்று சொல்ல, அதெல்லாம் வேண்டாம் நாம நடிப்போம் என்று உறுதிகொண்டு வந்தவர். அதன் பின் நாற்பது வருட காலங்கள் தமிழ்சினிமாவின் அடையாளத்தை மாற்றினார்.

எழுபதுகளில் தமிழ்சினிமா ஒரு ஓய்வுக்குள் மெதுவாக சென்று கொண்டிருந்தது. சிவாஜி கணேசன், எம்ஜிஆர் இவர்கள் எல்லோரும் நாயகர்களாக தங்களை வளர்தெடுத்தப் பின் அரசியல் பக்கம் சென்றனர். அரசியலும், சினிமாவும் நெருக்கம் கொண்டிருந்தன. இவர்களை வைத்துப் படமெடுத்தவர்கள் தங்கள் திசையை எப்படி மாற்றி  கொள்ள என்று யோசிக்கத் தொடங்கினார்கள். அங்கங்கு தொலைக்காட்சிகளின் வரவு தொடங்கியிருந்தது. நாடக அரங்குகள் திரையரங்குளாக மாறத் தொடங்கியிருந்தன. எழுத்தும், கனவும் இருப்பவர்களின் ஒரு உலகமாக சினிமா வசீகரிக்கத் தொடந்கியிருந்தது. சினிமாவின் பிரபலங்களால் அரசியல் அதிகார மையத்துக்கு வரமுடியும் என்பதை படித்த இளைஞர்கள் மாணவர்கள் கவனித்தனர்.

இந்தப் பின்னணியில் தான் பால்பாண்டி தன்னுடைய பெயரை பாரதிராஜா என்று மாற்றிக் கொண்டார். அதுவரை தமிழ் சினிமா சொல்லிக் கொண்டிருந்த கதைகளில் இருந்து வேறு பாதை நோக்கித் திருப்பினார். இவரைப் பற்றி சொல்லும்போதெல்லாம் ஸ்டுடியோவில் இருந்து கிராமத்துக்கு கேமராவைக் கொண்டு வைத்தவர் என்பார்கள். இவருக்கு முன்பும் சில இயக்குநர்கள் வழக்கமான மேடை நாடகத் தன்மை கொண்ட படங்களில் இருந்து கிராமங்களிலும், நகர வீதிகளிலும் படங்களை எடுத்திருக்கிறார்கள். ஆனால், இவரை அப்படிச் சொல்வதன் காரணம், கிராமம் என்பது அழகும், எழிலும் கொண்ட ஒரு ஊரைக்காட்டுவது அல்ல, அதன் இயல்புகளைச் சொல்வது என்று காட்டியதில் முன்னோடி என்பதால்.

கிராமத்தின் தன்மைகளுள் ஒன்று, அதன் கட்டமைப்பு. ஒவ்வொரு கிராமமும் ஒரு உலகம். எல்லாமே அங்கே ஊரறிந்த ரகசியங்கள். எல்லார் வீட்டு கதவுகளுக்கும் காதுகள் உண்டு. இதனை அழுத்திச் சொன்னத் திரைப்படமாக இருந்தது ‘பதினாறு வயதினிலே’. அப்படிப்பட்ட ஊரில் தகப்பன் இல்லாமல் அம்மா வளர்க்கும் ஒரு அழகான பதின்பருவத்து பெண் தனக்கென அந்தரங்கங்களைக் கொண்டிருக்கவே முடியாது. அவளுக்கு துணையாக ஒரு ஆண் வீட்டில் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கவே முடியாது. ஆனால், இது எல்லாம் இந்தப் படத்தில் நிகழும். எல்லா அவமானங்களையும், கேலி, கிண்டல்களையும் எதிர்த்துக் கொண்டு தன்னையும், தன்னை  நேசிக்கிற சப்பாணியையும் மயில் எப்படி தக்க வைத்துக் கொள்கிறாள் என்பது தான் படம். ஒவ்வொரு காட்சியும் அத்தனை அர்த்தம் கொண்டவை. இப்படியான வாழ்க்கையை அதற்கு முன்பு நாம் திரையில் பார்த்திராத காரணத்தினாலேயே கிராமத்தைத் திரையில் காட்டியவர் பாரதிராஜா என்று வியந்து பார்க்கப்பட்டார்.

ஒரு படைப்பாளி தான் எதனால் பாதிக்கப்பட்டிருந்தாரோ அதனையே சமூகத்துக்குக் கலையாக திருப்பித் தருவார். கிராமத்தின் அத்தனை சாதக பாதகங்களையும் பார்த்திருந்த இவர் அதைச் சொல்லும் துணிச்சலோடு இருந்தார் என்பது தான் முக்கியமானது.

தமிழ்சினிமா எப்போதுமே கதைகளுக்கு முக்கியத்துவம் தந்து வந்தது. எழுபதுகளுக்கு முன்பு சொல்லப்பட்ட கதைகள் வெவ்வேறானவை என்றாலும் அதில் ஒரு நீதிநெறி விளக்கம் இருக்கும். நல்லவராக வாழ வேண்டும் என்பதை வெவ்வேறு சொல் கொண்டு சொல்லிக் கொண்டிருந்தன. ஆனால், மனித இயல்பு நல்லது கேட்டது துக்கம், மகிழ்ச்சி, வஞ்சனை, பக்குவம் எல்லாம் சேர்ந்தது தான். அனுபவமே ஒருவரை மாற்றுகிறது என கதை சொல்ல படைப்பாளர்கள் ஒரே நேரத்தில் தமிழ் சினிமாவுக்கு வந்தார்கள். இந்த ‘நல்லவர் கெட்டவர்’ பிரிவினை கழன்றபோது கதைகளும் கட்டற்று வந்து கொண்டிருந்தன. பாலச்சந்தர், பாலு மகேந்திரா, மகேந்திரன், ருத்ரய்யா என சினிமா என்கிற கலையை தங்களுடைய நோக்கத்திற்காக மாற்றிக் கொண்டவர்கள் வந்தார்கள். இவர்களிடம் பெருங்கனவு இருந்தது.  இவர்களில் ஒருவராகவும் தனித்தும் நின்றார் பாரதிராஜா. கிராமங்கள் புனிதமானவை என்று சொல்லுமிடத்தில், அது எத்தனை தூரம் மூடநம்பிக்கை, சாதி அடுக்குகள், பெண்ணை இழிவுபடுத்தலில் கீழ்பட்டுக் கிடக்கிறது என்று சொன்னார். அதற்கு அவர் இயல்பான கிராமத்து மனிதர்களையே பயன்படுத்திக் கொண்டார்.

இவரது ஒவ்வொரு படத்திலும் நகரத்தில் இருந்து ஒருவர் வருவார். அவர் அந்தக் கிராமத்தின் சிடுக்குகளை சரிசெய்ய சொல்லிக் கொண்டேயிருப்பார் அல்லது மேலும் சிடுக்கினை உண்டு பண்ணுவார். அதற்கு மையமாக ஒரு பெண் கதாபாத்திரம் இருக்கும். இப்படியான ஒரு அச்சில் பல கதைகளை, நாம் அறிந்தும், அறிந்திடாத சம்பவங்களைக் கொண்டு கதை சொல்லும் திறன் கொண்டிருந்தவர்.

மிக முக்கியமாக, எழுத்தாளர்களை நம்பினார். அவருடைய படங்களின் வெற்றிக்கு கதையாசிரியர் ஆர்.செல்வராஜ், பாக்யராஜ், கலைமணி, கலைஞானம், ராஜேஸ்வர், சீமான் , ரத்னகுமார் போன்றவர்கள் இருந்தார்கள். ஆனால், எந்தக் கதை மக்களிடம் போய்ச்சேரும், அதனை எப்படி உள்வாங்குவது என்பதை அறிந்திருந்தார் பாரதிராஜா. அவரது படங்களை ஒட்டுமொத்தமாக யோசித்துப் பார்த்தால், அவர் எந்தளவுக்கு மனிதர்களின் வாழ்க்கையினை ஊடறுத்துக் காட்டியிருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளலாம்.

கிராமம் இப்படியாக இருந்தது என்று சொல்வதற்கான எல்லாவற்றையும் அவர் காட்டியிருக்கிறார். ஆர்ப்பாட்டங்கள் இல்லாத மரத்தடி காவல்தெய்வத்தின் முன்பு நடைபெறும் திருமணங்கள், திருமணம் ஆனதும் கணவரின் ஊருக்குள் செல்லும் முன் அங்குள்ள காவல்தெய்வத்தை வணங்கிச் செல்வது, குழந்தை பிறந்ததும் தாய்மாமன் கொண்டு வரும் சீர், வயல்வெளிகளில் வேலை செய்பவர்களின் வாழ்க்கை முறை, நாம் இனி காணவே முடியாத நீர்பாய்ச்சும் கமலைகள், கிராமப் பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு, அறுத்துக் கட்டும் வழக்கம், பெண்களுக்கான சொத்துரிமை சுரண்டப்படுவது என அவர் பதிவு செய்திருப்பதெல்லாம் ஆவணங்கள்.

பாரதிராஜாவின் பெண் கதாபாத்திரங்கள் கண்ணாடி போன்றவர்கள்.  உடனிருப்பாவ்ர்களின் நடத்தைக்கேற்ப தங்களை வெளிப்படுத்துபவர்கள். இதனை அவர் தொடர்ந்து எல்லாப் படங்களிலும் காட்டி வந்தார். கிழக்கு சீமையிலே விருமாயி அத்தனை பொறுமைசாலி. தொடர்ந்து கணவனால் அண்ணனுக்கு பாதிப்பு ஏற்படுவதைப் பொறுக்க மாட்டாமல் தான் கடைசி மூச்சுக்கு முன்பு காத்திரமாக முடிவெடுப்பாள். பதினாறு வயதினிலே மயிலு, பதின்பருவதுக்கே உரிய அத்தனை  குண இலட்சணங்களையும் கொண்டவள். ஊர் தன்னை எவ்வாறு பார்க்கிறது என்பது தெரிந்ததும் தான் அவர்களுக்கு முன்பு சுயமரியாதை காட்டுவாள். முதல் மரியாதை பொன்னாத்தா காதல் கொண்டவன் ஒருவன் திருமணம் செய்து கொண்டிருப்பவன் வேறொருவன் என்கிற கோபமும், தான செய்த ஒரு தவறுக்காக வாழ்நாள் முழுக்கவும் தன்னை ஒதுக்கி வைத்த கனவுடன் வாழ வேண்டிய சூழலோடு இருப்பவள். தன்னைச் சந்தேகப்படும் கணவனை எதிர்க்கிற ‘புதுமைப்பெண்’ சீதா என ஒவ்வொரு படங்களிலும் உதாரணங்கள் உண்டு.

தமிழ்சினிமா காலப்போக்கில் சிலவற்றை இழந்து வருகிறது. அதில் ஒன்று எந்தக் கதையையும் அதன் ஆழம் வரை சொல்லாததது. ஒரு படத்தினைப் பார்த்து படம் எடுக்கும் சூழல் தீயென பற்றியிருந்தது. அசலான படைப்புகள் என்பது அரிதான ஒன்றாக மாறியிருந்த சூழல் இருந்தது. நாயக வழிபாடு, வேகமான திரைக்கதை அமைப்பு, பின்னணி இசையை நம்பி எடுக்கப்படும் காட்சிகள் என ரசிகர்களை திசைதிருப்பும் வேலைகள் நடந்து கொண்டே இருக்கின்றன. நம்மைப் பற்றி சொல்லும் கதைகளும், இப்படியொரு உலகம் இங்கு தான் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று சொல்லவும் தேவைப்படுகிற படைப்பாளிகளை நாம் இழந்து வருகிறோம். அவர்களில் ஒருவராக பாரதிராஜா இருக்கிறார்.

அவர் நமக்குத் தந்த பெருங்கொடைகள், நமது வருங்கால சந்ததியினருக்கு உன் முப்பாட்டனும், பாட்டியும் இப்படியான வாழ்க்கை வாழ்ந்திருந்தார்கள் என்று சொல்வதற்கான உதாரணங்களை திரையில் காட்டியிருக்கிறார். இதோடு நாற்பது வருட காலங்களில் தமிழ்சினிமா தன் திசை மாறும்போதெல்லாம் உடன் பயணித்து தன் முத்திரையைப் பதித்திருக்கிறார்.

மேம்போக்கான இரங்கல் வார்த்தைகளாக இல்லாமல் உள்ளார்ந்து சொல்ல வேண்டிய ஒன்று – இந்திய சினிமாவுக்கும், சமூகத்துக்கும் பாரதிராஜா நீங்கியது பேரிழப்பு தான்.

(சிந்தை இணைய இதழுக்காக எழுதியது)

இயக்குநர் இமயத்தின் பெண் கதாபாத்திரங்கள்

(அவள் விகடனுக்காக எழுதிய கட்டுரை)

பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி படங்கள் எடுத்த இயக்குநர்கள் என்கிற வரிசையில் இயக்குநர் பாரதிராஜாவுக்கு நாம் இடம் கொடுத்ததில்லை. ஆனால், முதல் தரமாக சொல்லப்படவேண்டியவர் அவர். அவருடைய பெரும்பாலான படங்களின் கதைகளை யோசித்துப் பார்த்தால், அவை பெண்களின் கதைகளாகவே இருக்கும்.

பாரதிராஜாவுக்கு முன்பும் கிராமத்துக் கதைகள் படமாக்கப்பட்டிருந்தன. அதற்கும் பாரதிராஜா இயக்கியப் படங்களுக்கும் பெரும் வேறுபாடுகள் இருந்தன. இவருடையது அசலான மாந்தர்களால் ஆன கதைகள். பெண்களால் ஆனது இந்த உலகம் என்பது போன்றதான தோற்றம் தருபவை.  அதற்கு முன்பு கிராமத்துப் பெண்கள் அடக்கமானவர்களாக, அப்பாவிகளாகக் காட்டப்பட்டார்கள். இவர் வந்தார். ‘பொம்பளையா அவ..தஞ்சாவூரு தவிலு’ என்று  பதினாறு வயதினிலே குருவம்மாவை அறிமுகப்படுத்தினார். கோழிக்காக தெருவில் இறங்கி சண்டை போடும் பெண்ணை அதற்கு முன்பு தமிழ் சினிமா கண்டதில்லை. ஊரே அடிமையாக வைத்திருக்கும் ஒருவனை சுயமரியாதை கொண்ட ஒருவனாக மாற்றும் மயில் தமிழ் சினிமா பின்பற்றக்கூடிய உதாரண கதாபாத்திரமாக மாறிப் போனாள். கிராமத்தின் அழகையும், எழிலையும் காட்டிக்கொண்டிருப்பது அல்ல, பாரதிராஜாவின் படங்கள். அங்குள்ள அடக்குமுறைகள், அவலங்கள், மூடநம்பிக்கை இவையெல்லாம் குறிப்பாக பெண்களை எப்படி சீர்குலைக்கின்றன என்பதையும் சொன்னவை. ‘கிழக்கே போகும் ரயில்’ ஒரு உதாரணம்.

படம் முழுக்கவுமே கணவனின் பேச்சைக் கேட்டு அடங்கி வாழும் ஒரு கதாபாத்திரம் ‘கிழக்குச் சீமையிலே’ விருமாயிக்கு. வீட்டு ஆண்களின் ஈகோ பிரச்சனைகளுக்கு நடுவில் சிக்கிக்கொண்டு போராடுகிற ஒரு பெண். இந்தப் படத்தைப் பார்த்த பெண்கள் விருமாயியுடன் தங்களை ஒப்பிட்டுக் கொண்டார்கள். நம் கதையைத் தான் சொல்கிறார் என்று மீண்டும் மீண்டும் பார்த்தார்கள். ஒரு கிராமத்தில் திருவிழாவின்போது திரைகட்டி ‘கிழக்கு சீமையிலே’ படத்தினைப் போட்டார்கள். க்ளைமாக்ஸ் கட்சியில், ‘ஒனக்கு தங்கச்சியா சாவறேன் அண்ணே’ என்று தாலியை பிடுங்கி வீசும் காட்சியில் ஒரு பாட்டி எழுந்து ‘நாசமத்து போறவன்..தாலியைக் கழட்டி வைக்க வச்சிட்டானே..பாவி..அவ பொம்பளை ஜென்மமா எடுத்து என்னை மாதிரி நாயி பாடு பட்டாளே; என்று மண்ணை வாரி தூற்ற ஆரம்பித்தார். வெறும் படமாக இல்லாமல் இரத்தமும் சதையுமான ஜீவன்களை பாரதிராஜாவால் உலாவச் செய்ய முடியும். அதற்குக் காரணம் அவர்கள் இயல்பானவர்கள், நம்மில் ஒருவராக இருப்பவர்கள்.

கணவன் வெளிநாட்டிலோ, வெளியூரிலோ வேலை செய்கிறபோது, மனைவி புகுந்த வீட்டினரோடு வாழ வேண்டியிருக்கும். என்றேனும் தேவதூதன் போல வந்திறங்கும் கணவனுக்காகக் காத்திருப்பதைக் கடமையாக நினைக்கும் பெண். அவன் வந்து நின்று ‘உன் வயிற்றுக் குழந்தைக்கு நான் தகப்பன் இல்லை என்று சந்தேகிக்கிறேன்’ என்றால் அவள் என்ன ஆவாள்? அழுவாள். தன் நிலை சொல்வாள். அதன் பிறகு என்னவாகும் என்பதை ‘புதுமைப் பெண்’ படத்தில் சொல்லியிருப்பார். மனஅழுத்தம், விரக்தி, கோபம் எல்லாம் சேர்ந்து கொள்ளும். கத்தியை வைத்து மெத்தையைக் கிழிப்பாள். அதற்கு ஆயிரம் அர்த்தங்கள்.

தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றிய ஒரு படம் உண்டு. திரைப்படத்தினால் என்ன மாற்றத்தினை சமூகத்தில் கொண்டு வந்துவிட முடியும் என்பதற்கான ஒரு உதாரணம் ‘கருத்தம்மா’. பெண் சிசுக்கொலை என்பதை சட்டம் கொண்டு தடுத்து, தொட்டில் குழந்தை திட்டம் வருவதற்கான அத்தனை சாத்தியங்களையும் இந்தப் படம் ஏற்படுத்தியது.

‘முதல் மரியாதை’ படத்தின் ‘பொன்னாத்தா’ வடிவுக்கரசி பற்றி சொல்லியே ஆக வேண்டும். எப்போதும் சிடுசிடுப்பும், எரிச்சலும் வெடுக்கென்று பேசும் குணமும் கொண்ட அவள் எதனால் அபப்டி மாறியிருக்கிறாள் என்பதற்கான பின்னணி படத்தில் உண்டு. மிகப்பெரும் உளவியல் சிக்கல் அது. ஒரு பெண் செய்த தவறுக்காக அவள் வாழ்வதற்கான இலட்சியத்தையும், நோக்கத்தையும் இல்லாமல் ஆக்கிய பின் அவள் பொன்னாத்தாளாக மாறக்கூடும். அன்பு என்பதன் உச்சம் அந்தப் ராதா காதாபதிரம் என்றால், அது திரிந்து போனால் கிடைப்பது தான் பொன்னாத்தா.

இத்தனைக்குப் பிறகும் அவரது பெண் கதாபாத்திரங்களில் சொல்லப்பட வேண்டியவர்கள் அதிகம். ஆண்களின் ஆதிக்கம், திணிக்கப்பட்ட குடும்பப்பொறுப்பு, பெண் பிறக்கவே கூடாது என்கிற மனோபாவம், வேலைக்குப் போகும் பெண்களை ஆதிக்க மனநிலையில் உள்ள குடும்பம் படுத்துகிற பாடு, கடவுளின் பெயரில் செய்யப்படுகிற வஞ்சனை என அவர் தொடாத இடங்கள் இல்லை. நாற்பது ஆண்டு காலத்துக்கும் மேலாக ஒரு இயக்குநர் சமூகத்தில் நடப்பதைக் காட்டியிருக்கிறார் என்பதை விடவும், அது எப்படி பெண்களை பாதித்திருக்கிறது என்பதை சொல்லியிருக்கிறார் என்பது தான் கொண்டாடப்பட வேண்டியது.

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted