Monday, June 15, 2026
Home கட்டுரைகள் தமிழ் சினிமா ஹபீபி திரைப்படம்

ஹபீபி திரைப்படம்

0

‘ஹபீபி’ படம் பார்த்தேன். எனக்குப் பிடித்திருந்தது. எத்தனையோ விஷயங்களை நினைவுபடுத்திவிட்டது. பதினெட்டு வருடங்களுக்கு முன்பு மீரான் மைதீன் எழுதிய ‘ஓதி எரியப்படாத முட்டைகள்’ நாவலைப் படித்திருந்தேன். அப்போது வாட்ஸ் ஆப் வசதி கிடையாது. போன் செய்து என்னுடன் படித்த நஸ்ரினுக்கும், சுபைதாவுக்கும், ரசியாவுக்கும் இன்னும் சிலருக்கும் உடனே படிக்கும்படி சொன்னேன். அதில் ரசியா கதை என்ன என்று கேட்டாள். அவளிடம் அந்தக் கதையை சொன்னபோது ‘எங்க எல்லார் வீட்டுலயும் நடக்கது தான..புதுசா என்னட்டீ இருக்கு?” என்றாள். இஸ்லாமியக் கல்லூரியில் படித்திருந்ததால் உடன் படிக்கும் தோழிகளின் அக்காமார் கதைகள், சித்தப்பாக்களின் பிரிவுகளால் சித்திகள் படுகிற உளவியல் சிக்கல்கள், ‘பொட்டி பிரிப்பது’, திருமணங்கள் என எல்லாவற்றையும் பற்றி அவர்கள் பகிரும்போது கேட்டிருக்கிறேன். ஆனாலும் அந்த நாவல் இவை எல்லாவற்றையும் பதிவு செய்தது மிக அவசியமானதாக இருந்தது. ரசியாவுக்கு அது வாழ்க்கையின் ஒரு பகுதி. எனக்கு அது தெரிந்துகொள்ளப்பட வேண்டிய வாழ்க்கை.

ஹபீபி படத்தையும் இதே மனநிலையில் தான் அணுகுகிறேன். இதுவரை இத்தனை நேர்த்தியாக ஒரு இஸ்லாமிய வாழ்க்கைமுறை தமிழ்த்திரைப்படத்தில் பதிவு செய்யப்பட்டதில்லை. மிஞ்சிப்போனால், கதாநாயகனுக்கு ஒரு இஸ்லாமியத் தோழன் உண்டு என்பதைக் காட்டியிருக்கிறது நமது சினிமா. பிறகு ஒரு இஸ்லாமியக் குடும்பத்தைக் கிளைக்கதையாகக் காட்டியிருக்கிறது. முழுத் திரைப்படமும் ஒரு சமூகத்தின் வாழ்வியல் முறையோடு சேர்த்து சொல்லப்பட்டதில்லை.

திருநெல்வேலிப் பகுதியின் குடியேற்றப்பகுதியின் வரைபடம் என்பது இப்படியாக அமைந்திருக்கும். ஆற்றங்கரைக்கு அருகில் சற்று மேடான பகுதியில் இஸ்லாமியர்கள் தறி நெசவு செய்வார்கள். அவர்களின் தெருவும், வீட்டின் உள்மைப்புமே அதற்கு ஏற்ற மாதிரி அமைந்திருக்கும். இப்போதும் கல்லிடைகுறிச்சி, கடையநல்லூர், மேலப்பாளையம் பகுதிகளில் பார்க்க முடியும். இந்தப் படம் கடையநல்லூர் பகுதியை முன்வைக்கிறது. ஒரு மாவட்டத்தின் பொருளாதாரம் பெண்கள் பீடி சுற்றுவதும், ஒரு குடும்பமே தறி போடுவதை சார்ந்தும் இருந்திருக்கிறது. வளைகுடா நாடுகளுக்கு வீட்டிற்கு ஒருவர் வேலை செய்யத் தொடங்க, வீடுகள் தங்கள் அடையாளங்களையும் பெயர்களையும் மாற்றி வைத்துக் கொண்டது. எந்தக் குடும்பத்திலும்  வழிவழியாக வந்த குடும்பத்தொழில் கைவிட்டுப் போவதைப் பார்க்கும் தலைமுறை துரதிருஷ்டவசமானது. ஒரு ஊரின் தொழில் இல்லாமல் ஆவதை ஊரின் கடைசி காக்குழியும் மூடியாகிவிட்டதன் மூலமாக சொல்லும் படம் தமிழில் வந்திருக்கிறதா என்று யோசித்துப் பார்த்தேன். என் நினைவுக்குத் தெரியும் வரையில் இல்லை.

இது ஒரு குடும்பத்தின் கதை மட்டுமல்ல. ஒரு ஊரின் கதை. அந்த ஊரில் உள்ள ஒவ்வொரு வீட்டின் கதையுமே இதுவாகத் தான் இருக்க முடியும். ஒரு சோற்றுப் பதம் தான் யூசுஃப் குடும்பத்தினர். ஒரே இனமாக இருந்தாலும் விரும்பினால் கூட சொல்ல முடியாமல் அன்பை மறைத்து வைத்திருந்த தோழிகளை நான் அறிவேன். அப்போதெல்லாம் ‘என்ன பிரச்சனை வந்துறப்போகுது..வீட்டுல சொல்லலாம்ல’ என்று அவர்களைக் கேட்டிருக்கிறேன். ஒரு திருமணம் என்பது ஜாதி, மதத்தினால மட்டும் தடுக்கப்படுவதில்லை, அதைக் கடந்தும் சில கொடுக்கல் வாங்கல்முறைகள் உண்டு என்பது பின்னாட்களில் புரிந்தது.

திருமணம், ‘சுன்னத்’ சடங்கு, பெண்ணுக்கு பூ வைத்தல் தொடங்கி மரணம் வரையிலான வாழ்கை முறைகளை உறுத்தாமல், திணிக்காமல் சொல்லப்பட்டிருக்கிறது.

இந்தப் படத்தில் முக்கியமாகச் சுட்டிக் காட்டப்பட வேண்டிய ஒன்றிருக்கிறது. அது ஒவ்வொரு தலைமுறையிலும் உள்ள பெண்களை இதில் காட்டிய விதம். கணவன் முன் அதிர்ந்து பேசாத யூசுபின் மனைவி இருக்கிறார். அபுதாகிர் வந்தாலே உள்ளே ஓடிப்போய் நின்று கொள்ளும் நிலோஃபரின் குரலையே கடைசியில் தான் கேட்கிறோம். இதே ஊரில் இந்தத் தலைமுறை பெண்ணாக வரும் பர்வீன் சுயமரியாதை தான் முக்கியம் என முடிவெடுக்கிறாள். வண்டி ஓட்டுகிறாள், திருமணத்தில் தன்னுடைய முடிவைத் தெளிவாக வைத்திருக்கிறாள். அதற்கு அவளுடைய அப்பாவும் காரணமாக இருக்கிறார் என ஒரே  காட்சியின் மூலம் தெரிய வந்துவிடுகிறது.

இந்தச் சமுதாயத்தில் வாழ்கிற ஒரு சமூகத்தைக் குறித்து நாம் எத்தனைத் தெரிந்து வைத்திருக்கிறோம் என்கிற கேள்வியினை இந்தப் படம் உருவாக்கிவிடுகிறது. இங்கேயே வாழ்ந்து பிழைப்புக்காக வேற்று நாட்டுக்கு அவர்கள் செல்வதை அவர்களின் கலாசாரத்தின் ஒரு பகுதியாகவே பலரால் பார்க்கப்படுகிறது. ஆனால், அப்படிப்போவதால் அவர்கள் எதையெல்லாம் இழக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்வதில்லை. அவர்களால் குடும்பம் நிமிர்கிறது. ஒரு ஊர் மாற்றம் பெறுகிறது. அவர்களின் காலமும் சேர்ந்தே தொலைகிறது.

இந்தப் படம் அந்த இழப்புகளைச் சொல்கிறது. மாற்றங்களைப் பேசுகிறது. ‘வீடுங்கறது நாலு சுவர் மட்டுமில்ல’ என்கிற பெண்களின் சிந்தனையில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தைச் சொல்கிறது. ஒரு ஆண் பலவீனமானவாக முடிவெடுக்கத் தயங்கி நிற்கும் இடங்களில் எல்லாம் பெண் முடிவெடுக்கிறாள். இத்தனையையும் சொல்கிற ஒரு படம் தமிழில் வந்ததில்லை.

இயக்குநர் மீரா கதிரவன் அவர்களுக்கும் படக்குழுவினருக்கும் வாழ்த்துகள்

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted