அயல் சினிமா என்கிற இதழுக்கு பொறுப்பாசிரியராக பணியாற்றிய சமயம். உலக சினிமாவுக்கான முதல் தமிழ் இதழ் அது. அந்த இதழில் ஒரு தொடர் வெளிவர வேண்டும் என விருப்பப்பட்டேன். நாவல்கள், சிறுகதைகள் போன்றவற்றில் இருந்து திரைக்கதை எழுதுவது எங்கும் சகஜமான ஒன்று. அவற்றில் நாவலாகவும், திரைப்படமாகவும் வெற்றி பெற்ற பல படைப்புகள் உண்டு. அவற்றில் காலத்துக்கும் பேசப்படும் படங்கள் மற்றும் நாவல்கள் குறித்து ஒரு தொடர் ‘அயல் சினிமா’வில் வரவேண்டும் என்பது எனது விருப்பமாக இருந்தது. இதற்காக சில எழுத்தாளர்களையும், சினிமா குறித்து எழுதி வருபவர்களிடமும் பேச வேண்டியிருந்தது. எல்லோருமே இது பெரும் பணி என்றார்கள். உண்மை தான். முழு நாவலையும் மாதத்திற்கு ஒருமுறை படித்து அந்தப் படத்தையும் பார்த்து எழுதுவதென்பது கடும் உழைப்பைக் கோரக்கூடியது. என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் எனக்கு அந்தத் தொடரை விடவும் மனமில்லை.
நானே எழுதலாம் என்ற எண்ணம் வந்தபோது முதலில் உற்சாகமாகவும், பின்னர் தயக்கமாகவும் இருந்தது. அப்போதிருந்த சூழலில் அது இயலுமா என்கிற தயக்கம் தான் அது. முயற்சித்துப் பார்க்கலாம் என்றே தொடங்கினேன். பதினைந்து நாவல்களைப் படித்து, அந்தப்ப் படங்களையும் பார்த்து, தேவைப்பட்ட படங்களின் ஸ்க்ரிப்ட்டையும் வாசித்து எழுதியது அற்புத அனுபவம். ஒரு ஆய்வு மாணவிக்கான மனநிலையும், சினிமா ரசிகைக்கான ஆர்வத்தையும் ஒரு சேர பெற்றத் தருணங்கள் அவை.
இதில் மறக்க முடியாதது, அந்த வருடம் ஆஸ்கர் விருது அறிவித்த அந்த மாதம். அயல் சினிமா ஆஸ்கர் சிறப்பிதழாக வரவிருக்கிறது என்று அறிவிப்பு செய்துவிட்டோம். அந்த வருடத்தில் எந்தப் படம் ‘சிறந்த தழுவல் திரைக்கதைக்கான’ விருது பெறவிருக்கிறது என்பது தெரியவில்லை. ஐந்து படங்கள் அந்தப் பிரிவின் கீழ் அறிவிக்கபப்ட்டிருந்தது. ஐந்து நாவல்களையும் படித்து வைத்திருக்கக்கூடிய சாத்தியம் இல்லை. ஆனாலும் இதனை சவாலாக ஏற்றுக் கொள்ளலாம் என்றே நினைத்தேன். விருது அறிவிக்கப்பட்டது. “CALL ME BY YOURA NAME’ என்ற படத்திற்குத் தான் அந்த வருடம் ‘சிறந்த திரைக்கதை தழுவல்’ விருது அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த நாவலை வாங்கிவிடலாம் என்று நினைத்தால், ஐந்து நாட்களுக்குப் பிறகே நம்மை வந்து சேரும் என்றது இணையதளங்கள். நேரம் இல்லை. என்னவெல்லாமோ செய்து அந்த நாவலைப் படித்து முடித்தேன். அது எப்படி என்பது தனிக்கதை. நாவல் என் கைக்குக் கிடைத்த பிறகு 24மணிநேரத்துக்குள் படித்தால் மட்டுமே படத்தையும் பார்த்து கட்டுரையை எழுதி நேரத்துக்கு அச்சுக்கு அனுப்ப முடியும். புத்தகத்தைக் கையில் இருந்து கீழே வைக்கவில்லை. பதினாறு மணி நேரத்தில் அந்த நாவலைப் படித்தேன். இத்தனைக்கும் வீட்டு வேலைகளும், குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பும் இருந்தது. எப்படி அது சாத்தியமாயிற்று என்பது ஆச்சரியம் தான். ஆச்சரியம் ஏற்படுத்தும் எந்த செயலுக்கும் அடிநாதமாக ஆர்வமும், உந்துதலும் இருக்கும். படத்தையும் பார்த்து கட்டுரையும் முடித்த அன்று பெரும் ஆசுவாசமாக இருந்தது. உணர்சிவசப்பட்டிருந்தேன்.
ஒவ்வொரு நாவலும் படிக்கையில் ஏற்பட்ட பிரமிப்பும், வியப்பும் அதனை எப்படி எதற்காக திரைப்படமாக்க முடிவு கொண்டார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுதலும் பெரும் திறப்பினை எனக்குள் கொண்டு வந்திருந்தது.
இந்தப் புத்தகம் குறித்து பலரும் தங்களின் மகிழ்ச்சியையும்ம் அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இப்போது இந்தப் புத்தகம் மூன்றாவது பதிப்பாக மயூ பதிப்பகத்தின் மூலமாக வெளிவருகிறது.
மீண்டும் இந்தப் புத்தகத்தினை நான் படிக்கும்போது நான் எழுதியதாக இல்லாமல் ஒரு சினிமா ரசிகையாக, மாணவியாக படிக்க முடிந்தது. சில கட்டுரைகள் அவை எழுதப்பட்ட காலத்திற்குள் என்னை நிறுத்தியது.
சொல்லப்போனால் இந்தப் புத்தகம் எழுதியதற்கு பெருமையும் கொள்கிறேன். இந்தப் புத்தகத்தினைக் குறித்து பேசியவர்கள், இதனை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்தவர்கள், எனக்கு கடிதங்கள் எழுதியவர்கள் என எல்லோருக்கும் எனது நன்றிகள்.
புத்தகம் வாங்க 9042887209 என்கிற எண் அல்லது
https://www.commonfolks.in/books/d/kathai-to-thiraikkathai-mayoo-veliyeedu