ராமு கதை

0
304

“ராமு கதை சொல்லட்டுமா” என்றால்  மித்ராவும் மயூராவும் உற்சாகமாகி விடுவார்கள். அவர்களுக்கு ராமு கதைகள் பிடிக்கும். எங்கள் இரவுகளில் காட்டில் இருந்து ஊருக்குள் தப்பி வந்த ராமுவுக்கு ஒரு இடமுண்டு. ராமு ஒரு குரங்கு.

சிறு வயதில் இருந்தே மயூராவும், மித்ராவும் கதை கேட்டு வளர்கிறவர்கள். அவர்களுக்கு கதைகளில் நிறைய திருப்பங்கள் வேண்டும். நிறைய சிரிக்க வேண்டும். பேய்க்கதைகள் வேண்டும், ஆனால அந்தப் பேய் சிரிக்க சிரிக்க எதையாவது செய்து கொண்டே, நல்ல பேயாக உலாவ வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒரு கதை என்பது வழக்கத்துக்கு வந்தபோது மாலை எட்டு மணி ஆகும்போதே என் மூளை கதை தேட ஆரம்பித்துவிடும். அவர்களுக்கு தேவதை கதைகளும், மந்திரவாதி கிளிக்குள் உயிரை அடைத்து வைக்கும் சாகசங்களும் சீக்கிரமாக அலுத்துவிட்டன. கதைகள் எதுவும் சிறுகதைகளாகவும் இருத்தல் கூடாது..எல்லாமே குறுங்கதைகள். ஒவ்வரு நாளும் அவர்களைத் தூங்க வைப்பதே சாகசமானது. எத்தனை சவால்களைத் தான் சந்திப்பது!! ஒருநாள் “இனி தொடர்கதை மட்டுமே” என்று முடிவுக்கு வந்தேன். கைவசம் ஒரு கதை இருக்கும், கதாபாத்திரங்கள் இருப்பார்கள்..சம்பவங்களும், நிகழ்வுகளும் தான் தேவை..இது கொஞ்சம் யோசிக்க சுலபமாக இருந்தது.இப்படி பல சீரிஸ்கள், சீசன்கள் என வெவ்வேறு தொடர்கதைகளை வளர்த்துக் கொண்டே இருக்கிறோம். இப்படித் தான் எனக்கும் அவர்களுக்கும் ராமு அறிமுகமானான்.

ராமு காட்டில் இருந்து ஊருக்குள் தப்பி வந்துவிட்ட குரங்கு. அவன் ஒரு ஜன்னல் வழியாக ஒரு வீட்டு சமையலறைக்குள் வந்துவிடுகிறான். பயலுக்கு நல்ல பசி. அந்த வீட்டில் ஒரு பாட்டியும், பேரனும் மட்டுமே. பாட்டிக்கு பெயர் சுப்புப் பாட்டி. பேரனின் பெயர் பொக்கு (Bokku).  குரங்கு வீட்டுக்குள் வந்த அன்று பாட்டி தோசை சுட்டுக் கொண்டிருந்தாள். பேரனை சாப்பிட அழைக்க, என்றும் இலலமல் அவனும் அன்று சலித்துக் கொள்ளாமல் வந்தமர்கிறான். பாட்டிக்கு சற்று கண் மங்கலாகத் தெரியும், ஜன்னலுக்கு அடியில் அமர்ந்த பேரனுக்கு தோசை போட்டுக் கொண்டே இருக்க, அவன் சாப்பிட்டுக்கொண்டே இருகிறான். பாட்டிக்குத் தாள முடியாத சந்தோசம். “இப்படித் தான்டா பொக்கு தினமும் சாப்பிடனும்..அப்பத் தான் பலசாலியா ஆக முடியும்” என்று சொல்ல, ‘எனக்கு தோசை வேண்டாம்..ஸ்கூலுக்கு டயமாச்சு பாட்டி’ என்று சமையலறையை எட்டிப் பார்த்து சொன்ன பொக்கு அப்படியே திகைத்து நிற்கிறான். பாட்டியும். அங்கே ஜன்னலுக்கு அடியில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது குரங்கு. பாட்டியும் பொக்குவும் அதை விரட்ட ஜன்னல் வழியே குதித்து சென்ற குரங்கு மதியம் அதே ஜன்னல் வழியாகத் திரும்பி வந்தது. பாட்டிக்கு இப்போது அதைப் பார்க்க பாவமாகத் தோன்றுகிறது. பாட்டி அதனிடம் பேச்சுக் கொடுக்கிறாள். தான் பேசும்போது இப்படித் தன்னை மட்டுமே கவனிக்கும் ஒரு ஜீவனை பாட்டி அன்று தான் முதலில் சந்திக்கிறாள். அடிக்கடி பாட்டி எம்பி எம்பி மேல் அலமாரியில் இருக்கும் டப்பாக்களை எடுப்பதை ராமு பார்த்துக் கொண்டே இருக்கிறது. பாட்டி ஒருமுறை எம்புகையில், சட்டென்று ஒரு டப்பாவை எடுத்து பாட்டிக்குத் தருகிறது. சுப்புப் பாட்டிக்கு ஒரே சந்தோசம். அதற்கு சமையல் அறையில் உள்ள ஒவ்வொரு பொருட்களையும் பற்றிச் சொல்கிறாள். “இது நல்ல எண்ணெய்…” பாட்டிக்கு இப்போது நல்ல என்றால் குரங்குக்கு எப்படி புரிய வைப்பது என்கிற சந்தேகம் வருகிறது.. ‘நல்ல அப்படின்னா நல்ல விஷயம்னு சொல்லுவோம்ல…அதாவது கெட்ட விஷயம் எதுவும் செய்யாம இருக்கறது..கெட்டதுன்னா என்னன்னு தெரியுமா?” என்று பாட்டி அதற்கு நீதிநெறி வகுப்புகள் எடுக்க, அது ஆடாமல் அசையாமல் கண்கள் மின்ன அமர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறது. பாட்டி சொல்கிறாள், ”உங்க அப்பா அம்மா உன்னை நல்லா வளர்த்துருக்காங்க”. அன்று பாட்டியும் ராமுவும் சேர்ந்து அமர்ந்து சாப்பிடுகிறார்கள். இப்படியே பொக்குவுக்கும் ராமு பழக்கமாகிறது. இப்படி பாட்டி, பொக்கு, ராமு இந்த மூன்று கதாபாத்திரங்களும் அந்த ஊரும் தான் கதையின் மையம்.

எங்கள் கதையில் பாட்டி ஒரு அத்தியாயத்தில் ராமுவையும் ஸ்கூலில் சேர்க்க வேண்டும் என்று அடம்பிடிப்பாள். ஸ்கூலில் சேர்ந்த ராமு என்ன செய்தது என்று ஒரு அத்தியாயம்..தீபாவளி அன்று பட்டாசு சத்தம் கேட்டு ராமு செய்த அட்டகாசம்…இப்படி நாங்கள் இரண்டு மாத காலங்கள் ராமுவை எங்கள் வீட்டின் உறுப்பினராகவே மாற்றிவிட்டோம். மயூவும், மித்ராவும் குரங்கு வளர்க்கலாமா என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள். சாதாரணமாய் கேட்கிறார்கள் என்று நினைக்க, அவர்கள் தீவிரமாக குரங்கினை வளர்க்கும் வழிமுறைகளை கூகிளில் ஆராய ஆரம்பித்து விட்டார்கள்.

இந்தக் கட்டத்தில் தான் ராமு கதை க்ளைமாக்ஸ் நோக்கி சென்று கொண்டிருந்தது. “இன்னைக்கு ராமு கதைக்கு க்ளைமாக்ஸ்” என்று ஒருநாள் சொன்னதும் இருவரும் “நல்ல க்ளைமாக்ஸா இருக்கனும்” என்று சொல்லிவிட்டு ஸ்கூலுக்கு சென்றார்கள். கதையில் அப்போது ராமுவைத் தொலைத்த அதன் அம்மா, அப்பா குரங்குகள் காட்டில் இருந்து ஊருக்குத் தேடி வந்திருந்தார்கள். அவர்கள் ராமுவை அன்று சந்திப்பார்களா, ராமு அவர்களுடன் செல்வானா, சுப்பு பாட்டி, பொக்குவுடன் இருப்பானா என்பது தான் கதையின் முடிவு..

அன்றைய தினம் க்ளைமாக்ஸ் சொல்லும்போது நானே கலங்கிவிட்டேன். மயூராவும் மித்ராவும் நான் சொன்ன முடிவினை ஏற்றுக்கொள்ளவில்லை. இருவருமே அழுதுவிட்டார்கள். ஆனால் நான் முடிவினை மாற்ற மாட்டேன் என்று சொல்லிவிட்டேன். “நீங்க மோசம்..” என்றார்கள். அதன் பிறகு வந்த இரவுகளில் அவர்கள் ராமுவின் கதையைக் கேட்கவில்லை. அடுத்தத் தொடரையும் நாங்கள் ஆரம்பிக்கவில்லை.

ராமு அவர்களை மிகவும் பாதித்திருந்தான். ராமு இப்போதும் இருக்கிறான் என்றே நம்ப விரும்புகிறார்கள். ஒருநாள் அந்த ராமுவைப் பார்ப்பார்கள் என்றும் அவர்கள் மனம் நம்புகிறது. நானே கூட ராமு இருப்பது போலவே நினைக்கத் தொடங்கிவிட்டேன்.

அவர்களின் விருப்பம் நான் ராமு கதையை எழுத வேண்டும் என்பதாக இருக்கிறது. அதனை ஒரு சத்யபிரமாணம் போல பெற்றிருக்கிறார்கள். எழுதலாம் என்று நினைக்கும்போதெல்லாம் , நான் விரித்து வைத்திருந்த சிக்கலுக்குள் நானே வீழ்கிறேன். சாதரணமாய் ஆரம்பித்த கதை, என்னையே பாதிக்கும் என்று நான் அறிந்திருக்கவில்லை. அந்தக் கதைக்கான முடிவினை சொல்லாமல் இருந்திருந்தால் கூட இந்தக் கதையை எழுதியிருப்பேன் என்று நினைக்கிறேன். எங்கள் மூவருக்கும் ராமு கதையின் முடிவு தெரியும் என்பதால், அந்தக் கதையை தொடக்கத்தில் இருந்த உற்சாகத்தோடு எழுத இயலவில்லை. இதனை நான் மயூரா மித்ராவுடன் பகிர்ந்து கொண்ட போது அவர்கள் முடிவினை மாற்றச் சொன்னார்கள் பிறகு அவர்களே அது வேண்டாம் என்றனர்.

இப்போது மற்றொரு தீர்வினைத் தந்திருக்கிறார்கள். ராமு கதைக்கான சீசன் 2 தொடங்க இருக்கிறோம். இப்போது கதையை மீண்டும் தொடங்குவதால், முதல் சீசனுக்கான கதை எழுதுவதில் சிக்கல் இருக்காது என்றனர். எத்தனை எளிய தீர்வு இது!

சில பிரச்சனைகளை குழந்தைகள் பார்வையில் அணுகுகிறபோது அவை தீர்வினைக் கண்டடைகின்றன. குழந்தைகள் குழப்பிக் கொள்ள விரும்புவதில்லை, தீர்வினை மட்டுமே யோசிக்கின்றனர்.

ராமு வளர்ந்து கொண்டிருக்கிறான்..விரைவில் எல்லாருக்கும் அறிமுகவான்.

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments