ஜோர்டான் பீல் வெகு காலமாக அமெரிக்கர்களின் செல்லப்பிள்ளையாக இருக்கிறார். தொலைகாட்சிகளில் நகைச்சுவை நிகழ்ச்சிகளை பல வருடங்களாக தொடந்து வெற்றிகரமாக இயக்கியும், நடித்தும் வந்தவர் 2008 ஆம் ஆண்டு அவற்றை விட்டு விலகினார். ஆனாலும் தனது தயாரிப்பு நிறுவனம் வழியாக தொடர்ந்து நகைச்சுவை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்தபடி இருக்கிறார். அதோடு இயக்குனர் ஸ்பைக் லீ இயக்கிய Blackkksman திரைப்படத்தின் இணை தயாரிப்பாளரும் ஆனார்.
இவருடைய அப்பா கருப்பினத்தைச் சேர்ந்தவர். அம்மா வெள்ளை இனத்தை சேர்ந்தவர். தனது ஏழாம் வயதில் கடைசியாக அப்பாவைப் பார்க்கிறார் ஜோர்டான் பீல். அப்பா தங்களை விட்டுப் போனபின்பு அம்மாவுடன் வளர்கிறார்.
ஜோர்டான் பீலுக்கு திரைக்கதைகள் அமைப்பது விருப்பமான ஒன்று. ஒரு திரைப்படத்தை எழுதி இயக்கவேண்டும் என்று யோசிக்கிறார். ஆனால் அது நகைச்சுவைப் படமாக இருக்க வேண்டாம் என்றும் முடிவு செய்கிறார். இயல்பிலேயே த்ரில்லர் வகை நாவல்களின் ரசிகரான பீல் இதுவரை இயக்கிய மூன்று படங்களையும் த்ரில்லர் வகையிலேயே தந்துள்ளார். இவரது படங்கள் நிச்சயம் மற்ற த்ரில்லர் வகையில் இருந்து வேறுபட்டவையே.
முதல் படமான GET OUT வெளிவந்த உடனேயே பெரும் அளவில் வரவேற்பைப் பெற்றது. 2013 ஆண் ஆண்டின் சிறந்த படங்களுள் ஒன்றாகவும், வணிக ரீதியாக பெரும் வசூலைப் பெற்ற படமாகவும் குறிப்பிடப்பட்டது. அதோடு அந்த வருடத்தின் சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதும் பீலுக்கு வழங்கப்பட்டது. இத்தனை வருடங்களாக நாம் பார்த்த ஜோர்டான் பீலிடம் இருந்து இப்படியொரு திரைப்படமா என்று வியந்தவர்கள் அதிகம்
Get out படத்தின் கதை மட்டுமல்ல, அதை அவர் எழுதிய விதமும், அதில் அவர் நமக்கு சொல்லித் தருகிற பாடமும் கூட முக்கியமானது.
க்றிஸ் வாஷிங்டன் என்கிற கருப்பினத்தைச் சேர்ந்த இளைஞன் வெள்ளை இனப் பெண்ணான ரோஸ் என்பவளைக் காதலிக்கிறான் . ரோஸ் தனது குடும்பத்தாரையும், உறவினர்களையும் க்ரிஸுக்கு அறிமுகம் செய்ய நினைக்கிறாள்.
தனது ஊருக்கு அழைக்கிறாள். “உன்னுடைய குடும்பத்தாருக்கு நான் கருப்பினத்தவன் என்பது தெரியுமா?” என்று கேட்கிறான் க்றிஸ். “தெரியுமே…அவர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்” என உறுதி தந்து அழைத்துப் போகிறாள் ரோஸ்.
இருவருமாகக் கிளம்புகிறார்கள். காரில் சென்று கொண்டிருக்கிறார்கள். எதிர்பாராதவிதமாக காட்டுப்பகுதியில் ஒரு மான் துள்ளி வந்து அவர்கள் கார் கண்ணாடியில் மோதி இறக்கிறது. இந்த மரணம் க்ரிஸுக்கு சொல்லத் தெரியாத தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த மரணம் தந்த பதைபதைப்போடு க்றிஸ் ரோஸின் ஊருக்குச் செல்ல, அங்கு ரோஸினால் எல்லோருக்கும் கிரீஸ் அறிமுகம் செய்து வைக்கப்படுகிறான். எல்லோரும் மேற்பார்வைக்கு சாதரணமாகவும், சகஜமாகவும் க்ரிஸிடம் பழகினாலும் அவனுக்கு அங்கு எதோ ஒரு ஒவ்வாததன்மை சூழ்ந்து கொண்டே இருக்கிறது. ரோஸ் உட்பட அந்தக் குடும்பத்தினரிடம் உள்ள உளவியல் சிக்கல்களும், அங்கு க்றிஸ் எதிர்கொள்கிற எதிர்பாராத ஆபத்துகளுமே கதை.
Get out படத்தின் கதை பல அடுக்குகளால் ஆனது. தொடக்கத்தில் ஒரு காதல் கதை போல நம்மை யூகம் செய்யவைத்து எதிர்பாராத காட்சிகளை நமக்குக் காட்டுவது. ஒருவகையில் நம்மை வசியப்படுத்துகிற திரைமொழி அது. திரில்லர் வகைப் படங்களுக்குமான திருப்பங்களிருந்த போதிலும் இந்த வகைப் படங்களில் இல்லாத பல அம்சங்களை இது கொண்டிருக்கிறது.
வெள்ளை இன மக்கள் சூழ்ந்த ஒரு குடும்ப நிகழ்வில் கருப்பினத்தனவனாய் நிற்கும்போது அவர்கள் அவனை இயல்பாக ஏற்றுக்கொள்வது போல பாசாங்கு செய்கிறார்கள். “ஒ..கருப்பினத்தவர்கள் முன்னேறிவிட்டார்கள்..டைகர் வுட்ஸ் போன்றவர்களை எங்களுக்குத் தெரியும்” என்று சொல்வதின் மூலமாக, “பாத்தியா.. உங்களைப் பற்றியெல்லாம் நாங்கள் தெரிந்துவைத்திருக்கிறோம்” என்கிற பாவனையைக் கொண்டு வருகிறார்கள். இது போன்று அநேகமான உள்ளீடுகளைக் கொண்ட திரைமொழி தான் ஜோர்டான் பீலின் பலம். க்றிஸ் அங்கிருக்கிற ஒவ்வொரு நிமிடமும் அவனுடடைய செயல்கள் கண்காணிக்கப்படுகின்றன. அவன் அந்த சூழலில் இருந்து விடுபட நினைக்கிறான். கடைசி வரை அவனால் அது முடியவேயில்லை.
ஒவ்வொரு காட்சியுமே ஊகிக்க முடியாத நிகழ்வுகளைக் கொண்டதாக அமைந்திருக்கின்றன. “பார்வையாளர்கள் திரையில் அடுத்து இந்தக் காட்சி தான் வரும், இப்படித் தான் காட்சிகள் நிகழும் என்கிற முன்தீர்மானத்தோடு காத்திருப்பார்கள்.
நாம் அவர்களுக்கு ஆச்சரியத்தை அளிக்க வேண்டும், அவர்களை சற்று ஏமாற்றவும் வேண்டும்..அப்போது தான் அவர்களால் ஆர்வத்துடன் படத்தோடு ஒன்றிணைய முடியும்” என்பது திரைக்கதை குறித்த ஜோர்டான் பீலின் பாணி.
இவருடைய அடுத்தப் படைப்பான US இன்னும் ஆச்சரியங்களைக் கொண்டிருந்தது. எல்லோருக்கும் வெளிப்பார்வைக்குத் தெரிகிற நாம் என்பதற்கும், நமக்குள் இருக்கும் அடக்கப்பட்ட நாமும் சந்தித்துக் கொண்டால், எந்தப் பக்கம் நாம் இருப்போம் என்கிற சிக்கலான ஒரு கேள்வியோடு படம் தொடங்கவும், முடியவும் செய்கிறது. நமக்குள் இருக்கும் மறைக்கப்பட்ட குற்றங்கள், தீமைகள், குற்றஉணர்வுகள் நம்மைப் போலவே உருக்கொண்டு நம்மைத் தாக்க வருகின்றன என்று வைத்துக் கொள்வோம், நம்முடைய மற்றொரு அகமனது அதை எப்படி எதிர்கொள்ளும் என்பதே US. இது போன்ற கடினமான புரிந்து கொள்ள சிரமம் கொள்கிற உளவியல் சிக்கல்களை திரைப்படமாக மாற்றுவது என்பது சற்று பிசகினாலும் தவறாகப் போய்விடும் வாய்ப்பு கொண்டது. ஆனால் அதனைக் கச்சிதமாக திரைவடிவத்துக்குள் ஜோர்டான் பீல் கொண்டு வந்துவிடுகிறார்.
இதற்கு அவர் சொல்வது, “எல்லோராலும் அது முடியும்..ஆனால் நாம் அதை செய்ய மறுக்கிறோம்” என்கிறார். திரைக்கதை எழுதுபவர்கள் மற்றும் இயக்குபவர்களுக்கு அவர் அடிக்கடி சொல்லும் செய்தி இது தான். “உங்கள் ஆழ்மனதை சந்திப்பதை நீங்கள் எத்தனை தூரம் வெறுக்கிறீர்களோ அந்தளவுக்கு உங்கள் படைப்புகளில் உண்மைத் தன்மை குறைந்து விடும்., உங்கள் ஆழ்மனம் கசடுகளாலும், தீமைகளாலும் நிரம்பியிருக்கலாம், அது அச்சத்தால் நடுங்கியிருக்கலாம். அதை அப்படியே விட்டுவைப்பதை விட, அதன் ஆழம் காணுங்கள். அதனுடன் நேரடியான உரையாடலை நிகழ்த்துங்கள்., அது உங்களுக்கு பல உண்மைகளைச் சொல்லும், அந்த உண்மைகளை காட்சியாக்க வேண்டியது மட்டுமே நீங்க செய்ய வேண்டியது” என்பது ஜோர்டான் பீல் அடிக்கடி சொல்வது
இவருடைய முதலிரண்டு படங்களைக் கொண்டும் இதனை நாம் புரிந்து கொள்ளலாம். GET OUT படத்தில் கருப்பினத்தவர்களாய் வாழ்வதென்பது எந்நேரமும் அடிமனதில் ஒருவித அச்சத்தைக் கொண்டிருப்பது என்பதை சொல்லுகிற விதத்தில் அமைந்திருந்தது. இவர்கள் வாழ்க்கைக் குறித்த முடிவுகளை கண்ணுக்குத் தெரியாத யாரோ எவரோ தீர்மானித்துக் கொண்டிருப்பதை ஒரு குடும்பத்தில் அகப்பட்டுக்கொள்ளும் கறுப்பின கதாபத்திரங்கள் மூலமாக சொல்லியிருக்கிறார் ஜோர்டான் பீல். படத்தில் கதாநாயகியின் அம்மா, மனதை வசியப்படுத்தும் வித்தையைத் தெரிந்து வைத்திருப்பார், அதன் மூலம் ஒருவரின் ஆழ்மனதினை தங்களுக்கு சாதகமாக அவர் மாற்றுவதை ஜோர்டான் பீல் கறுப்பின சமூகத்தினரைத் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் அரசியலோடு ஒப்பிடுகிறார்.
இரண்டாவது படமான US படம் இரண்டு விதமான அமெரிக்காவைக் குறிப்பிடுவதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். எல்லோருக்கும் அறிமுகமான அமெரிக்கா அனைத்துத் துறைகளிலும் தன்னை முன்னிறுத்திக் கொள்கிறது. உலக அரங்கில் தலைமையை தானே முன்வந்து ஏற்றுக்கொள்கிற ஒரு நாடு, இன்னொரு பக்கம் அதன் முகமானது சமூக நீதியைப் புறக்கணிக்கிற ஒரு இன மக்களை எப்போதும் மனதளவில் அடிமையாக வைத்துக் கொள்ளப் பழக்கப்பட்ட ஒருநாடு.
சமூகத்திலும், புறத்திலும் நடக்கிற எதுவும் தனிமனிதனை பாதிக்கக்கூடியது என்பது ஜோர்டான் பீல் புரிந்து கொண்டிருக்கிற அரசியல். ஒருவர் விழிப்புடன் இருப்பதென்பது தன்னையும், தன்னை சுற்றி நடப்பவையும் கண்காணித்தபடி இருப்பது என்கிறார் ஜோர்டான் பீல்.
மேடைகளில் வெற்று ஜோக்குகளை அள்ளி வீசுகிற ஒரு நகைச்சுவை கலைஞராய் அவர் இருந்ததில்லை. எதிலும் ஆழ்ந்த கருத்தினை போகிறபோக்கில் சொல்லக்கூடிய ஆற்றல் பெற்றவராக இருக்கிறார். நகைச்சுவையும் த்ரில்லரும் அடிப்படையில் ஒரே தன்மையிலானவை என்கிற அவர் அதற்கு சொல்லும் காரணம், இரண்டிலுமே சற்று உண்மை இருக்க வேண்டும், உண்மையின் மீதே இரண்டும் கட்டமைக்கப்பட வேண்டும் என்கிறார். உண்மைத் தன்மை இல்லாத எதுவும் காலத்தால் மறைந்து போகும் என்பது இவரது திரைமொழி முன்வைக்கும் அம்சம்.
மூன்றாவதான இவரது NOPE படம் கடந்த வருடத்தில் மிகுந்த எதிர்பார்ப்பைப் பெற்றிருந்தது. 2014ஆம் ஆண்டு ஒரு நாள் ஜோர்டான் பீல் இப்படி ட்வீட் செய்திருந்தார். “ஒரு சிறிய மனிதக்குரங்கு எல்லோரையும்ம் தாக்கிவிட்டு என்னை அச்சத்துடன கட்டியணைத்துக் கொண்டது. அழுகையோடு எழுந்தேன். என் முகத்தில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது”. இது தனக்கு வந்த கனவாக அவர் ட்வீட் செய்திருந்தார்.
எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய Nope படத்தின் ஒரு காட்சியில் சினிமா படப்பிடிப்புத் தளம் ஒன்றில் ஒரு கொரிய சிறுவனின் கண் முன்னால் ஒரு சிம்பன்சி எல்லாரையும் தாக்கி விட்டு அவனருகில் வருகிறது. அதற்குள் அந்த மனிதக்குரங்கினை அங்குள்ளவர்கள் சுட்டு விடுவார்கள். இந்தக் காட்சியை அவர் எழுதி முடித்தபிறகு அவரது நண்பர்கள் “இது உன்னுடைய கனவின்
உங்களது கதையில் நீங்கள் எங்கேனும் இருக்க வேண்டும் அல்லது உங்கள் அனுபவம் இருக்க வேண்டும். அப்போது தான் அதோடு நெருக்கமாக நீங்கள் உணரமுடியும்
எழுதுவதென்பது எப்போதுமே ரசித்து செய்யக்கூடியதாய் அமையவேண்டும், அப்படி இல்லையென்றால் நீங்கள் தவறு செய்கிறீர்கள் என்று அர்த்தம். ஒரு திரைக்கதையை நாள் முழுவதும் மாதக்கணக்கில் உட்கார்ந்து எழுத வேண்டும் என்கிற அவசியமில்லை. ஆனால் எப்போதெல்லாம் எழுத உட்காருகிறீர்களோ அப்போது ரசிக்கிற மகிழ்ச்சி தருகிற செயலாக இருந்தால் மட்டுமே எழுத வேண்டும்.
ஒரு நல்ல கதை என்பது சமூக மாற்றதிற்கானதாய் இருக்க வேண்டும்,
- உங்களது கதையில் நீங்கள் எங்கேனும் இருக்க வேண்டும் அல்லது உங்கள் அனுபவம் இருக்க வேண்டும். அப்போது தான் அதோடு நெருக்கமாக நீங்கள் உணரமுடியும்
- எழுதுவதென்பது எப்போதுமே ரசித்து செய்யக்கூடியதாய் அமையவேண்டும், அப்படி இல்லையென்றால் நீங்கள் தவறு செய்கிறீர்கள் என்று அர்த்தம். ஒரு திரைக்கதையை நாள் முழுவதும் மாதக்கணக்கில் உட்கார்ந்து எழுத வேண்டும் என்கிற அவசியமில்லை. ஆனால் எப்போதெல்லாம் எழுத உட்காருகிறீர்களோ அப்போது ரசிக்கிற மகிழ்ச்சி தருகிற செயலாக இருந்தால் மட்டுமே எழுத வேண்டும்.
- ஒரு நல்ல கதை என்பது சமூக மாற்றதிற்கானதாய் இருக்க வேண்டும்,
- உங்களது ஆழமான பயங்கள், துன்பங்கள், இருண்மைகளை எதிர்கொள்ள தயங்காதீர்கள். ஏனெனில் அவை அந்தரங்மானவை. உங்களுக்கு மட்டுமே தெரியக்கூடியவை. அதை நேர்கொள்ளும்போது உங்களது படைப்புத்திறன் அதிகரிக்கும்.
இவை ஜோர்டான் பீல் தனது அனுபவத்தின் மூலமாக சொல்வது.
தமது Monkeypaw தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக படங்களையும் தொலைக்காட்சி நிகழ்சிகளையும் தொடர்ந்து வெளியிடுகிறார். அனைத்துமே தனது இன மக்களுக்கானது என்கிறார்.
பொதுவாக கறுப்பின மக்கள் குறித்து இயக்குகிற இயக்குனர்கள் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட நிகழ்வுகளையும், ஒடுக்கப்பட்ட மக்களின் சிக்கல்களையும் யதார்த்தமாக பதிவு செய்து கொண்டிருக்கும் பொழுது, ஜோர்டான் பீல் அதனை வேறொரு தளத்தில் இருந்தே எதிர்கொள்கிறார்.
இதற்கு அவர் வெள்ளை இனத்தவரை தனது தாய்வழி உறவினர்களாகக் கொண்டதும் காரணமாக இருக்கலாம். அம்மாவின் ஆதரவும், அன்புமிருந்தபோதும் அவரின் சொந்தங்கள் மூலமாக அவருக்குக் கிடைத்த அனுபவங்களை அவர் மறக்கவில்லை. .அதனால் ஏற்பட்ட பாதுகாப்பின்மையை அவர் தனது திரைமொழியாகக் கொண்டிருக்கிறார். இப்படி வேரும் விழுதும் தனித்தனியாகப் பரவிக்கொண்ட வாய்ப்பு கொண்ட ஜோர்டான் பீல் அதன் தாக்கங்களை உள்வாங்கிக் கொண்ட விளைவுகளே அவரது படங்கள்.
தனது தனிப்பட்ட வாழ்க்கையினைக் குறித்து அதிகம் பகிர்ந்து கொள்ளாத ஜோர்டான் பீல் தனது படைப்புக்கான மூல காரணம் தனது தனிப்பட்ட வாழ்க்கையே என்றும் சொல்வதில் தயங்காதவர்.
ஒவ்வொரு படைப்பாளரும் இங்கு தனித்துவமானவர்கள். அவர்களின் சூழல்களே அவர்களை உருவாக்குகின்றன. அதனால் அவர்கள் தங்களின் கதைகளையே படமாக்க வேண்டும் என்பது ஜோர்டான் பீல் நமக்கு சொல்வது. யோசித்துப் பார்த்தால் ஆழமான அர்த்தம் தரக்கூடியதும் தான்.