ரயான் கூக்ளரின் The Black Panther கருப்புத் திரை 1

0
325

ரயான் கூக்ளர் மார்வெல் ஸ்டூடியோவுக்கு படம் இயக்குவதற்கான ஒப்பந்தத்தில்
கையெழுத்தினை இடுகிறார். மார்வெல் நிறுவனத்துக்கும் கூக்ளருக்கும் மறக்க முடியாத தினமாக
அது பதிவாகிவிட்டது. இந்தத் தயாரிப்பு நிறுவனம் முதன்முறையாக இளம் இயக்குனர் மேல்
நம்பிக்கை வைத்து பெருங்கதையை சொல்ல நினைத்தது. அது அந்தக் கதையின் மீதான
நம்பிக்கை மட்டுமல்ல, கூக்ளர் அந்தக் கதையை மிகச்சரியாக, உணர்வுப்பூர்வமாக
காட்டிவிடுவார் என்பதில் கொண்டிருந்த நம்பிக்கை அது.


படத்திற்கு The Black Panther என்றே பெயர் வைத்தார்கள். பல சாதனைகளை படம் தொடக்கி
வைத்தது. படத்தின் இயக்குனர் ரயான் கூக்ளரின் பெயர் என்றென்றைக்குமாய் ஒரு
சாதனையாளராக பதிவு செய்யப்பட்டது. அப்படி இந்தத் திரைப்படம் செய்த சாதனையில்
முக்கியமானது ஆப்ரிக்க அமெரிக்க இயக்குனர் இயக்கிய படங்களில் அதிக வசூலைப் பெற்றுத்
தந்த முதல் படமாக இருந்தது என்பது தான். இந்த வசூல் சாதனையை அத்தனை
முக்கியத்துவப்படுத்துவதன் காரணம் உள்ளது.

திரைப்படம் தோன்றிய காலந்தொட்டு திரையில் கறுப்பின மக்கள் கூலிக்காரர்களாக வீட்டுப்
பணியாளர்களாக அடிமைகளாக தொடர்ந்து காட்டப்பட்டு வந்தனர். அவர்களுக்கு வசனங்கள்
கூட தரப்பட்டதில்லை. தரப்பட்ட வசனங்களும் கூட ‘வந்தேன் எஜமான்..சொல்லுங்க எஜமான்’;
பாணி வசனங்களே. அல்லது அவர்களை சேரிகளில் வாழும் சுத்தமற்றவர்களாகவும் போதைப்
பழக்கம் கொண்டவர்களாக, திருடர்களாகத் திரையில் கொண்டு வந்தார்கள். ஏனெனில்
திரைப்படங்களை இயக்குவதும் தயாரிப்பதும் வெள்ளை இன மக்களாக இருந்தார்கள்.
பார்வையாளர்களும் அவர்களே தான். திரையரங்கில் தங்கள் வாழக்கைக்கு தொடர்பில்லாத ஒரு
திரைப்படத்தை சொந்த மண்ணிலேயே பார்க்க வேண்டிய நிலை கறுப்பின மக்களுக்கு வெகு
காலங்களுக்கு இருந்தது.


கறுப்பின மக்கள் தங்களின் குரலை, வாழ்க்கையைத் திரையில் சொல்ல வேண்டுமெனில் முதலில்
எவையெல்லாம் தேவைப்பட்டிருக்கும்..தயாரிப்பு நிறுவனம்..அதன் பிறகு
தொழில்நுட்பக்கலைஞர்கள், நடிகர்கள்..இவர்கள் எல்லோரையும் ஒருங்கிணைத்த பின்னர்
.அவர்களுக்குத் தங்கள் படத்தினைப் பார்க்க பார்வையாளர்கள் வேண்டும் இல்லையா?
வெள்ளை இன மக்கள் கறுப்பின மக்கள் இயக்கிய படங்களைப் பார்க்க பல ஆண்டுகளாக
விரும்பவில்லை. இந்தப் பின்னணியில் The Black Panther படத்தினை பொருத்திப் பார்த்தால்,
வசூலில் அது பெருமளவு வெற்றி பெற்றதை பெரும் சாதனையாக முக்கியப்படுத்தியதின் நோக்கம்
புரியும்.


அதோடு The Black Panther திரைப்படம் சாகச வீரர்களைப் பற்றிப் பேசியது. அரசியல் பேசியது.
ஆப்ரிக்க இனக்குழுக்களின் அரசர்கள் பற்றிய பார்வையைத் தந்தது. இது மற்றுமொரு சாதனை.

ரயான் கூக்ளர் வாசிப்பில் ஆர்வம் உள்ளவர். சாகசக் கதைகளும் காமிக்ஸ்களும் அவரது
கற்பனையின் தோழர்கள். அவர் வளருகையில் கேள்விகளும் எழுந்தன. ஏன் எல்லா சாகச
வீரர்களும் வெள்ளை இனத்தவராக இருக்கிறார்கள்? என் இனத்தின் சாகச வீரர்கள் எங்கே?
அவர்கள் ஏன் பதிவுசெய்யப்படவில்லை. இந்தக் கேள்வி தான் The Black Panther படத்துக்கான
அடித்தளம். அவரின் அந்தக் கேள்வி தான் மிக காத்திரமான படைப்பாக நம் முன் நிற்கிறது.
கூக்ளர் இரண்டு படங்களை முடித்திருந்தார் அவரது இரண்டாவது படமான Creeps
வெளிவந்தபிறகு மார்வல் நிறுவனம் அவரைத் தங்களது அடுத்த படத்திற்காக அழைத்தது. டா
நெஹிசி கோட்ஸ் எழுதிய காமிக்ஸ் புத்தகமான The black panther படத்தை இயக்க வேண்டும் என
மார்வெல் கூக்க்லரிடம் தெரிவித்தது. டா நெஹிசி கோட்ஸ் பத்திரிகையாளர். கறுப்பின
மக்களுக்கான பிரபலமான எழுத்தாளர். இவர் எழுதிய கட்டுரைகளும் தொகுப்புகளும்
பெருவாரியான மக்களால் விரும்பி வாசிக்கக்கூடியவை. இவர் எழுதிய காமிக்ஸ் The Black Panther
வெளிவந்த உடனேயே விற்பனையில் முதலிடத்தைப் பெற்றது. இதனைத் திரைப்படமாக
எடுப்பதற்கு மார்வெல் தயாரிப்பு நிறுவனம் கூக்ளரை அணுகியதும் The Black Panther காமிக்ஸ்
மட்டுமல்லாது டா நெஹிசியின் அனைத்து படைப்புகளையும் கூக்ளர் வாசிக்கத் தொடங்கினார்.
அவற்றை வாசிக்கையில் கூக்ளருக்கு ஏற்பட்ட உந்துதல் எல்லாம் உடனடியாக ஆப்பிரிக்கா
கிளம்பிப் போக வேண்டும் என்பதாக இருந்தது. அதற்கு முன்பு வரை அவர் ஆப்பிரிக்க
நிலத்தினைக் கண்டதில்லை. அதனால் தன் மனைவியுடன் பயணப்படுகிறார். அதுவரை
எழுத்தின் வழி கூக்ளர் கண்ட ஆப்பிரிக்கா அவர் முன் நிலமாக, மக்களாக, சடங்குகளாக
தெய்வங்களாக உருக்கொண்டிருந்தது.


மூவாயிரம் அடி உயர மலையான டேபிள் மேல் ஏறிநின்று ஆப்ரிக்காவைப் பார்த்தபோது “இது
என் நிலம்…இது என் வேர்..இது என் ஆன்மா” என்கிற எண்ணம். அவருக்குள் தோன்றியது. “நான்
யார்? என்று எவரேனும் கேட்டால், அமெரிக்காவில் நான் வசித்த பகுதியினை பெருமையாக
சொல்வேன். ஆனால் அந்த மலையின் மேல் நின்றபோது, “அது தான் எனது மண் என
நினைத்தேன். எனக்கு மட்டுமல்ல..மனித இனமே அங்கு தான் தொடங்கியது..இது என்னை
அதிகம் சிந்திக்க வைத்தது” என்று சொல்லியிருக்கிறார். அவர் அந்த நேரத்தில் எப்படி
உணர்ந்திருப்பார் என்பதற்கு ஒரு காட்சியினை The Black Panther படத்தில் பார்க்க முடியும்.
படத்தின் இறுதியில் தன் தம்பியின் நெஞ்சில் வாளை செருகிவிட்டு மலையின் உச்சியில் அவனை
நிறுத்தி சூரிய அஸ்தமனத்தின் போது ஜொலிக்கும் வகாண்டாவை டி சல்லா காட்டுவாரே…அந்த
மனநிலை தான் டேபிள் மலை மீது நின்ற கூக்ளருக்கும் ஏற்பட்டிருக்கும்.


இறந்துபோகும் தருவாயில் அஸ்தமன சூரியனின் தங்க நிறம் ஜொலிக்கும் முகத்தோடு
வகாண்டாவைப் பார்த்து தம்பி சொல்வான் ,”பியூட்டிஃபுல்’. இந்தத் தம்பி கடுமையானவன் என
அறியப்பட்டவன், அண்ணனை சிம்மாசனத்துக்காக கொல்லவும் தயங்காதவன். அவன்
இலட்சியம் அவனுக்கு நியாயம் என்றாலும் அதற்காக அவனது வேரான வகாண்டாவுக்கு வரும்
ஆபத்தை அறியாத ஒருவன். அவனுக்கு அந்த மலையின் மேல் ஒரு தரிசனம் கிடைக்கிறது.
இறப்பதற்கு முந்தைய நொடி அவனுக்கு இப்படித் தோன்றியிருக்கும், “இந்த வகாண்டா நான்
எதிர்பார்த்ததை விட, என் கற்பனையில் இருந்ததை விட அற்புதமானது..இதற்கு அந்நியர்

தேவையில்லை..அந்நியர்களுக்கும் வகாண்டா தேவையில்லை…” என்று. இதை இயக்குனர்
நமக்கு சொல்லவில்லை. ஆனால் கடுமையான மனம் கொண்ட ஒருவனின் அகத்தில் இருந்து
வெளிவந்த அந்த ‘பியூட்டிஃபுல்’ என்பதன் அர்த்தம் இதுவன்றி வேறு எதுவாக இருக்கமுடியும்.
அவனுடைய அப்பா அவனுக்குக் காட்டித் தர நினைத்த நிலம் அது. அவன் இரத்ததில் கலந்திருந்த
கனவு தேசம் அது. அவனுடைய அப்பாவைக் காட்டிலும் அந்த நிலத்தின் மீது நேசம்
கொண்டவனாக அவன் இருந்த காரணத்தில் தான் அந்த மண்ணின் மீது அதன் அழகைக்
கண்டுகொண்டே மரிக்கும் வாய்ப்பு அவனுக்குக் கிடைத்திருக்கும்.


கூக்ளருக்கு அந்தமலையின் மீது நின்று பார்த்த ஆப்பிரிக்கா இதே உணர்வைத் தான் தந்திருந்தது.
இந்தத் தேசம் அந்நியர்களுக்கு விட்டுக்கொடுக்காமல் வைத்திருந்த வளங்களினால் இன்னும்
செழிபுற்றிருக்கிறது, பிடுங்கிகொள்ளப்பட்ட வளங்களினால் தடுமாறுகிறது என்று.
THE Black Panther படம் இயக்குவதற்கு முன்பு கூக்ளர் இயக்கியிருந்தவை இரண்டே படங்கள்.
அதற்கு முன்பு பெரிய பட்ஜெட் படத்தினை கூக்ளர் இயக்கியிருக்கவில்லை. ஆனாலும் மார்வெல்
நிறுவனம் முப்பது வயதுக்குள் இருந்த ஒரு கறுப்பின இயக்குனரை அழைத்து இந்தப் படம்
குறித்து பேசக் காரணம், ஒன்று தான். அவர் இயக்கியிருந்த மற்ற இரண்டு படங்களில் கூக்ளர்
தன் இன மக்களுக்காக சொல்லியிருந்த கருத்துகள் தான் அந்தக் காரணம். கூக்ளரை அழைத்துப்
பேசியபோது, அவர்கள் அவரிடம் கேட்ட முதல் கேள்வியின் பதில் கூக்ளர் மேல் மேலும்
நம்பிக்கையை வலுப்பெற வைத்தது.


இந்த ஒட்டுமொத்த காமிக்சில் இருந்து படம் எதை முன்னிறுத்தும் என்பது தயாரிப்பு நிறுவனம்
கூக்ளரிடம் கேட்ட கேள்வி. இந்தக் கதையை கூக்ளர் எப்படி உள்வாங்கிக் கொண்டார் என்பதை
புரிந்து கொள்வதற்காகவே அவர்கள் அப்படிக் கேட்டார்கள். கூக்ளரின் பதில் நேர்மையாக
இருந்ததை அவர்கள் பின்னாட்களில் நடைபெற்ற ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில்
தெரிவித்தார்கள். கூக்ளர் தெரிவித்த பதில் என்பது, “என் படம் மூலமாக ஆப்பிரிக்கர்களாக
இருப்பதின் அர்த்தம் என்ன என்பதை கண்டடைவேன்” என்றிருக்கிறார்.


ஆப்பிக்கர்களா வாழ்வதின் அர்த்தம் என அவர் சொன்னது ஆழ்ந்த பொருள் கொண்ட ஒரு
வாக்கியம். இந்தப் படம் காமிக்ஸில் இருந்து எடுத்தாளப்பட்ட படம் என்றபோதும் அதில் எப்படி
‘ஆபிரிக்கர்களாக’ வாழ்வதின் தனி அர்த்தத்தைத் தந்துவிட முடியும் என்ற கேள்வி இயல்பாக
எழக்கூடும். இதற்கு பதில் படத்திலேயே உண்டு. பொதுவாக ஆபிரிக்கர்கள் பற்றியான கருத்து
என்பது அவர்கள் நவீன தொழில்நுட்பத்தை அதிகம் உள்வாங்காதவர்கள் என்பதும் சடங்கு,மூட
நம்பிக்கை போன்றவற்றில் தங்களைத் தொலைத்தவர்கள் என்பதும். இந்தப் படத்தில் அந்தக்
கருத்து உடைபட்டிருக்கிறது. தங்களிடம் உள்ள வளத்தினைக் கொண்டு தனி ஒரு உலகத்தினை
பிரமாண்டமானதாக உருவாக்கிக் கொள்ளும் தகுதி ஆப்பிரிக்காவிற்கு உண்டு என்பதை படம்
சொல்கிறது. மிக முக்கியமாய் இப்படி வலுவான நாடாக மாறுவது என்பது மற்ற நாடுகளுடன்
போட்டிப் போட்டுக் கொள்ள அல்ல, தங்களை தற்காத்துக் கொள்ளவும், தன்னிறைவோடு
வாழ்வதற்கும் தான் என்பதும் படத்தில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

ஆப்பிரிக்க மண் தொன்மையான வரலாறைக் கொண்டது. பல்வேறு இனக்குழுக்களால் ஆனது.
ஒவ்வொரு இனக்குழுவிற்கும் அதற்கென்று ஒரு சிறப்பு உண்டு. இதனை அந்நிய தேசத்தின் கண்
வழியே பார்ப்பவர்கள் வெறும் காட்டுமிராண்டித்தனமாகவே நினைத்துக் கொள்ள முடியும்.
இதனை டி சல்லா கதாபாத்திரம் அழுத்தமாகத் தன் பார்வையில் குறிப்பிட்டிருக்கும். “வாகாண்டா
இனி ஒருபோதும் நிழலில் இருந்து கண்காணிக்கப்படப்போவதில்லை. சகோதர சகோதரிகளாக
ஒருவருக்கொருவர் எப்படி நடந்து கொள்ள முடியும் என்பதை வகாண்டா இனி உலகிற்குக்
காட்டும். நம்முடைய உள்ள பிரிவுகள் நம்முடைய இருப்பையே கேள்விக்கு உட்படுத்துகின்றன.
எது நம்மை பிரித்திருக்கிறதோ அதுவே நம்மை இணைத்தும் இருக்கிறது என்கிற உண்மை
நமக்குத் தான் தெரியும். நாம் எல்லோரும் ஒரே இனக்குஇழு என்பதை நாம் உணர்ந்து கொள்ள
வேண்டும்,” இது ரான் கூக்ளர் தன் அடையாளம் குறித்து சொல்ல நினைத்தது.


ஒரு கடவுளிடம் இருந்து பிறந்த ஐந்து இனக்குழுக்களில் இருந்து கதை தொடங்குகிறது. அவை
ஒன்றுக்கொன்று முரண்பட்டும் ஒற்றுமையாக் இருந்தும் தங்களை பாதுகாத்துக் கொண்டது
என்றாலும் மொத்தமாகத் தங்கள் நிலத்துக்கு ஒரு பாதிப்பு ஏற்படும்போது அவை ஒன்று கூடி
நிற்கும் என்பதையும் படம் வலியுறுத்தியது. இது உலகம் முழுவதும் உள்ள வெவ்வேறு
பார்வையாளர்களிடம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. அதற்கு முன்பு வெளிவந்த சூப்பர்
ஹீரோ படங்களில் ஒரு நகரத்துக்கு ஏற்படப்போகும் பாதிப்பை அந்த ஹீரோ தடுத்து
நிறுத்துகிறான் என்ற ரீதியிலேயே இருக்கும். The Black Panther படமும் அவ்வாறானது தான்
என்றாலும் அவை வெறும் ஒரு நகரத்தைக் காப்பதாக மட்டுமில்லை. அது தன் ஒட்டுமொத்த
கலாசாரத்தைக் காப்பதாக இருந்தது. ‘நாங்க யாரு தெரியுமா?’ என்று தங்களைப் பற்றி
வெளியுலகத்துக்குக் காட்டக்கூடைய கதையாக இல்லை, அதே நேரம் தேவைப்படும் போது
வலுவானவற்றை காட்டவும் தயங்காத ஒரு நாடு என்பதையும் காட்டியது.


காலனிய ஆதிக்கத்தின் அத்தனை குரூரங்களையும், அடிமைத்தனத்தையும் பார்த்த மூன்றாம்
உலக நாடுகள் விடுதலை அடைந்ததும் தான் தங்களின் முழு மகத்துவத்தை உணர்ந்தன.
தங்களால் ஆகக்கூடாதது எதுவும் இல்லை என்கிற இடத்துக்கு நகர்ந்தன. இந்தத் தனித்த
எழுச்சியை வேறெந்த நாட்டினராலும் பெற முடியவே இல்லை. அதனால் தான் முன்னேறிய
நாடுகளில் கு இருந்து வெளிவரும் சூப்பர் ஹீரோ படங்கள் அதிகமும் ஒற்றைக் கோட்பாட்டை
கொண்டிருந்தது. அது ஒரு நகரத்தைக் காப்பது என்ற அளவிலேயே இருந்தது. The Black Panther
போன்ற படங்கள் சர்வ சாதாரணமாக எல்லாவற்றையும் தாண்டிச் சென்றது. இதையெல்லாம்
மனதில் கொண்டே படம் ‘ஆப்ரிக்கர்களாக வாழ்வது’ குறித்து பேசும் என ரான் கூக்ளர்
தெரிவித்திருக்க வேண்டும்.

ஒரு கதை நாவல் அல்லது காமிக்ஸ் போன்றவற்றிலிருந்து திரைப்படம் வெளிவரும்போது அந்த
இயக்குனருக்கு அந்தப் படைப்பு ஒரு உள்ளார்ந்த தொடர்பினை ஏற்படுத்த வேண்டும். அந்தப்
படைப்பின் வழி தான் கண்டடைந்தது குறித்த தெளிவு இயக்குனருக்கு வேண்டும். இது
கூக்ளருக்கு இருந்தது.

திரைக்கதை எழுத அமருகையில் கூக்ளர் மனதில் ஆப்பிரிக்கா குறித்த வேறொரு பார்வை தான்
மேலெழும்பிக் கொண்டிருந்தது. ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இருந்து பெயர்ந்து வெவ்வேறு
பகுதிகளில் வாழும் மக்கள் அவர்களின் குழந்தைகளுக்கு சொல்லும் கதைகள் மாயக்
கதைகளாகவே இருக்கும். தன்னுடைய மூதாதையர் சொந்த நிலத்திலும் அந்நிய நிலத்திலும்
அடிமைகளாக வாழ்ந்தனர் என்பதை ஒரு இனம் உண்மையைப் பேசுகையில் மட்டுமே
வெளிப்படுத்தும். கதையாக சொல்லுகையில் தன் நிலம் சார்ந்த ஆழ்மனப் பதிவுகளையே
கற்பனைககளாக குழந்தைகளுக்கு எடுத்துக்காட்டும். இது மனித இனத்தின் உளவியல். இந்த
உலகின் கதைகள் பலவும் கற்பனை கதைகளாக பெருமளவு உலாவுவதின் உளவியல் இது தான்.
எந்த நிலமெல்லாம் அடிமைப்பட்டுக் கிடந்ததோ அந்த நிலத்தில் தான் கற்பனைக் கதைகள்
அதிகம். தங்கள் நிலத்தின் மூதாதையர் குறித்து அவர்கள் கொண்ட பிம்பத்தினை தங்கள்
சந்ததியினர் மேல் இன்னும் வலுப்படுத்த ஒவ்வொருவரும் கைக்கொண்ட வழி தான் கற்பனைக்
கதைகள்.


ஆப்பிரிக்க நிலத்தில் உலாவும் மாய மந்திரக் கதைகள் யாவும் அந்த மக்களின் ஆழ்மனத்தின்
ஏக்கங்கள். கூக்ளரும் கதை கேட்டு வளர்ந்தவர் தான். தன் அப்பாவின் சொல் வழி அவர்
ஆப்பிரிக்கா குறித்த கதைகள் கேட்டிருந்தார். அந்தக் கதைகளில் ஆப்பிரிக்கா செழித்து
வளர்ந்ததேசமாகவும் மற்ற நாடுகளை விட கலாசார வேர் கொண்ட பூமியாக இருந்தது. கூக்ளர்
திரைக்கதை எழுதுகையில் இந்தக் கற்பனை தான் அவரை செலுத்தியது. தான் கண்ட ஒரு
பெருங்கனவான ஆப்பிரிக்காவினை அவரால் வகாண்டாவுக்குள் கண்டுகொள்ள முடிந்தது.
ஒரு கறுப்பின பெண்ணின் உறுதியை அவர் தன மனைவி வழியாக அவர் உணர்ந்திருந்தார்.
அதனால் தான் எழுத்தாளர் டா நெஹிசி கோட்ஸ் தன காமிக்ஸில் சொன்னதைக் காட்டிலும்
திரைக்கதையில் பெண் கதாபாத்திரங்களுக்கான வலுவை கூட்டியிருந்தார் கூக்ளர். அவர்கள்
வீரமானவர்களாக, எதையும் எதிர்கொள்பவர்களாக நாட்டின் மீது பற்றுக் கொண்டவர்களாக,
கலாச்சாரத்தை விட்டுத் தராதவர்களாக அறிவுள்ளவர்களாக தொழில்நுட்ப வல்லுனர்களாக
இருந்ததை அவர் இன்னும் விரிவாகத் திரையில் காட்டினார். அவர்கள் அரசியலின்
நுணுக்கத்தைப் பேசினார்கள். டி சல்லாவின் அம்மா தன மகனுக்கு இப்படி சொல்லித் தருகிறார்,
“உன்னுடைய அப்பா உனக்கு எல்லா போர் வித்தைகளையும் கற்றுத் தந்திருக்கிறார் அதில்
முட்டாள்தனங்களும் அடக்கம்..ஆனால் அதைவிட அவர் உனக்கு எப்படி சிந்திக்க வேண்டும்
என்பதையும் சொல்லித் தந்திருக்கிறார். இந்தப் யுத்தத்தினை துப்பாக்கிகளோடு
எதிர்கொள்ளாதே” என்பார். புத்தியைப் பயன்படுத்தி வெற்றி கொள் என்பதை அவர் வலியுறுத்தி
அது சரியான அறிவுரையாக மாறவும் செய்யும். ஒரு நாகரீகமான அரசாங்கம் என்பது பெண்களை
சரிசமமான இடத்திற்கு அழைத்து வரும் என்பதன் உதாரணத்தையும் படம் சொல்கிறது.
ஒரு நாடு மற்றொரு நாட்டுக்கோ இனத்துக்கோ அடிமையாக இருந்து விடுதலையடையும்போது
அதன் வரலாறு அடிமைப்படுத்தியவர்களுக்கு உவப்பாக இருந்திருக்கிறது.
அடிமைப்படுத்தப்பட்ட நாட்டில் இருந்து இதற்கான எதிர்வினை வந்தாக வேண்டும் அல்லாவா?
அந்த எதிர்வினை எப்போதும் கலை வடிவமாக வெளிப்படும்போது அது என்றைக்குமான

வெற்றியாக எழுதப்பட்டுவிடுகிறது. The Black Panther புத்தகம் எழுதப்பட்டதும், அதை படமாக
எடுக்கப்பட்டதும், இந்த வெற்றியை சொல்வதற்குத் தான்.


அடிமைப்படுத்திவிட்ட கதையை எழுதுபவர்களுக்கு நாங்கள் ஓய்வதில்லை என்று திருப்பிச்
சொல்லும் படங்கள் இவை.


கறுப்பின நாயகன், நாயகி, கதாபாத்திரங்கள் , தொழில்நுட்ப கலைஞர்கள், இயக்குனர்,
எழுத்தாளர் என பிராம்மாண்ட கூட்டு முயற்சியில் வெளிவந்த இந்தத் திரைபபடம் எல்லோராலும்
மீண்டும் மீண்டும் பார்க்கப்படுகிறது.


இந்தப் படத்தின் தாக்கம் இன்று வரை உலகின் பல பகுதிகளில் இருந்தும் வெளிவரும் படங்களில்
உள்ளது.


இந்தப் படம் நிலவியலை, அரசியலை, பண்பாட்டினை , மனிதத்தை பேசுகிறது.
இதைக்காட்டிலும் முக்கியமாய் படம் பேசிய ஒரு கருத்து உண்டு. சுய ஆதாயத்திற்காக ஒரே
நாட்டின் குடிமக்களையே ஒருவருக்கொருவர் எதிரிகளாக இரத்தம் சிந்தவைக்க அதிகாரத்தால்
முடியுமெனில், நான் என்பது நாம் தான் என்று அறிந்து கொள்வதின் வழியாக அதனை
எதிர்க்கவும் முடியும் என்கிறது திரைப்படம்.

இன்றைய சூழலில் தேவைப்படுகிற ஒரு கருத்தும் கூட.

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments