வைபவம் காத்திருக்கலாம் !

0
7

உறவு முறையில் அத்தை ஒருவரை பார்க்கப் போயிருந்தேன். அத்தை செய்திதாள்கள், பத்திரிக்கைகள் படிக்கும் ஆர்வமுள்ளவர். இதனை முன்னிட்டு நீங்கள் அவரிடம் ‘பிரதமர் மோடி இப்போது எந்த நாட்டில் இருக்கிறார்?” என்று கேட்டுவிடக்கூடாது. ‘அவர் எந்த நாட்டுக்குப் போனா நமக்கென்ன, அதைக் கொண்டு ஒருவேளை சாப்பாடு கிடைக்குமா?” என்பார். என்றுமே அவர் செய்தித்தாளின் முதல் பக்கத்தைப் பார்த்ததேயில்லை. ‘தங்கம் விலை எவ்வளவு?’, ‘கொலை’, ‘கொள்ளை’, ‘நடிகையினரின் வருமானம்’ போன்ற செய்திகள் தான் அவரைப் பொறுத்தவரை பொது அறிவுக்கான தேடல்.

செய்தித்தாளை படித்து முடித்து அவர் அதை கீழே வைக்கும் விதத்தில் இருந்து நாட்டின் நிலவரத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியும். தொப்பென்று கீழே போட்டால், அன்றைய தினம் நாட்டில் அசம்பாவிதங்கள் குறைவு என்றும், எதையேனும் பேசிக்கொண்டே அவர் சாதரணமாக செய்தித்தாளைப் பக்குவமாக கீழே வைத்தார் என்றால் ரத்தம் தெறிக்கும் சம்பவங்கள் பல நாட்டில் உருவாகியிருக்கின்றன என்பதையும் நாம் புரிந்து கொள்ளலாம்.

சமீப காலங்களில் செய்தித்தாளின் வரவை ஆவலோடு அவர் எதிர்பார்த்திருந்ததையும் அதைப்பற்றி பேசுவதற்கு யாரேனும் கிடைப்பார்கள் என்ற நம்பிக்கையில் அவர் காத்திருந்ததும் எனக்கு அவரை சந்தித்த ஐந்தாவது நிமிடத்தில் புரிந்து போனது. ஏனென்றால் சென்ற மாதத்தில் தான்  பெண்கள் தொடர்பான கொலை, கொள்ளை, தற்கொலை என பதைப்பூட்டும் சம்பவங்கள் பற்றி தொடர்ந்து செய்தித்தாளில் வந்தபடி இருந்ததே. 

ஒவ்வொரு சம்பவம் குறித்தும் அலசி ஆராய்ந்த என்னுடைய அத்தை கடைசியாக அவர் தரப்புத் தீர்ப்பாக ஒன்றைச் சொன்னார். ‘பொண்ணுங்களுக்கு பதினஞ்சு வயசுலேயே கல்யாணம் பண்ணிக் குடுத்துரனும்…அந்தக் காலத்துல பத்து வயசுலேயே கல்யாணம் பண்ணதுனால தான் இந்த மாதிரி எந்தப் பிரச்சனையும் இல்லாம இருந்தது” என்றார்.

இதைக் கேட்டதும் அவருடன் வாதாடும் எண்ணம் ஏற்பட்டு உடனே மறைந்தது. தொடர்ந்து வந்த செய்திகளின் பாதிப்பினால் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அவர் பேசியிருக்கலாம். அதுவும் தவிர இது அவரின் கருத்து. அதனால் ஒன்றை மட்டும் அவரிடம் கேட்டு வைத்தேன். ‘கல்யாணம் ஆனா எல்லாம் சரியாயிடுமா?” அவர் தீர்க்கமாகச் சொன்னார், “ஆமாம்..பின்னே?” இந்தப் பதிலை அவர் சொல்லும்போது இருந்த உறுதி அவரிடம் மேலும் விவாதம் செய்யவேண்டாம் என்று நினைக்க வைத்தது.

அன்றைய தினமே ‘AN EDUCATION’ என்கிற ஒரு ஆங்கிலப்படத்தைப் பார்க்க நேர்ந்தது. உலகத்தின் எந்தவொரு மூலையிலும் நடந்து கொண்டிருக்கிற ஒரு கதை. ஜென்னி என்கிற பதினைந்து வயது பள்ளிக்கூடச் சிறுமி படிப்பில் சுட்டியாக இருக்கிறாள். எப்படியும் அவளை மேற்படிப்புக்கு ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்திற்கு அனுப்பிவிட வேண்டுமென்று அவளது பெற்றோர் விரும்புகின்றனர். ஜென்னியின் ஆசிரியையும் இதற்கு ஆதரவாக இருக்கிறாள்.

ஒருநாள் மாலை நேரம். மழை பெய்து கொண்டிருக்கிறது. பேருந்துக்காக தனியாளாக ஒரு பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருக்கிறாள் ஜென்னி . இசை வகுப்பு முடித்து வந்திருப்பதால் அவள் கையில் கனமான ‘செல்லோ’ இருக்கிறது. அந்த நேரம் அவளருகில் விலைமதிப்புள்ள ‘ஸ்போர்ட்ஸ் கார்’ வந்து நிற்கிறது. அதனுள் கம்பீரமும், நாகரீகத் தோற்றமும் கொண்ட ஜென்னிக்கு அறிமுகமில்லாத நபர் ஒருவர் இருக்கிறார். ஜென்னியிடம் அவளை வீட்டில் விடுவதாகச் சொல்கிறார். ஜென்னி மறுக்கிறாள். ‘உன் கையில் இருக்கும் செல்லோ நனைந்துவிடக்கூடாது என்பது இசைப்பிரியனான எனது ஆசை..வேறொன்றும் இல்லை’’ என்று சொல்ல அவர் சொன்னவிதம் ஜென்னியைக் கவருகிறது.

தனது ‘செல்லோ’வை மட்டும் காரில் ஏற்றிக்கொள்ள சம்மதிக்கிறாள். அவள் மழையில் நடைபாதையில் நடந்து கொண்டே வர காரினுள் இருந்தபடி அவளிடம் பேச்சுக் கொடுத்தபடி காரினை மெதுவாக ஓட்டி வருகிறார் அந்த மனிதர். அவர் இசையைப் பற்றி பேசியவிதம் ஜென்னியை ஈர்க்கிறது. ஒருகட்டத்தில் அவள் காரில் ஏறிக்கொள்ள அவர் அவளை வீட்டு வாசலில் இறக்கி விடுகிறார்.

ஜென்னிக்கு அதன்பிறகு அவருடைய நினைவு அடிக்கடி வர ஆரம்பிக்கிறது. அதன் பின் அவர்கள் ஒரு இடத்தில் எதிர்பாராதவிதமாக சந்திக்கிறார்கள். அதன்பின் எதிர்பார்த்து சந்திக்கிறார்கள். அவருடைய முப்பத்தைந்து வயதென்பது ஜென்னிக்கு அவருடன் பழகுவதிலும், சேர்ந்து வெளியில் போவதிலும் எந்த சிக்கலையும் ஏற்படுத்தவில்லை.

ஜென்னியின் பெற்றோரும் இந்த வயது வித்தியாசம் காரணமாகவே அவருடன் பழகுவதில் எந்தத் தயக்கத்தையும் வெளிப்படுத்தவில்லை.

விதவிதமான உணவகங்கள், அவர் வாங்கித் தரும் விலையுயர்ந்த பரிசுப்பொருட்கள், அவள் போக விரும்பிய ஊர்களுக்கு அழைத்துச் செல்வது என்று ஜென்னியைத் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கிறார் அவர்.

ஜென்னிக்கு படிப்பில் நாட்டம் குறைகிறது. இது அவளது ஆசிரியைக்கு வருத்தத்தைத் தருகிறது. அக்கறையின் பேரில் அவளை அழைத்து அறிவுரை சொல்கிறாள். “நீங்கள் நிறைய படித்திருக்கிறீர்கள் மிஸ்.. அதனால் என்ன பயன்..? என்னைப் போன்று வகைவகையாய் சாப்பிட்டிருக்கிறீர்களா, உடை அணிந்திருக்கிறீர்களா? நான் பாரிசுக்கெல்லாம் போய் சுற்றிப் பார்த்திருக்கிறேன்..சமூகத்தின் உயர்தரமான மனிதர்களோடு பழகுகிறேன்..இதை விட்டு நான் ஆக்ஸ்போர்ட் போய் படித்து  என்னவாகப் போகிறது? வாழ்க்கை வாழ்வதற்குத் தானே’ என்று ஜென்னி பதில் அறிவுரையை ஆசிரியைக்கு வழங்கிவிட்டு பள்ளிக்கூடத்திற்கு இனி தான்  வரப்போவதில்லை என இறுமாப்புடன் சொல்லிவிட்டு வந்துவிடுகிறாள்.

ஜென்னியைத் திருமணம் செய்துகொள்ளப்போவதாக அந்த நடுத்தர வயது மனிதன் சொல்ல ஜென்னியும் சம்மதிக்கிறாள். திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் போதெல்லாம் ஜென்னி கனவுகளில் மிதக்கிறாள். ஒரு மகாராணி போல வீட்டிற்குள் நடந்துகொள்கிறாள். அவளது நடை, உடை எல்லாமே மாறுகிறது. எதிலும் ஒரு அலட்சியப்போக்கு வந்துவிடுகிறது.

இப்போது தான் அவளுக்குத் தெரிய வருகிறது தன்னுடைய வருங்காலக் கணவன் ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தைக்குத் தகப்பன் என்பது. ஒரே நொடியில் அவளது வாழ்க்கை மாறுகிறது. இது பற்றி அந்த மனிதனிடம் கேட்க அவன் ஏதேதோ சொல்லி ஜென்னியை சமாதானப்படுத்துகிறார். அந்த நாளோடு அவன் காணாமலும் போகிறான்.

அறையைப் பூட்டிக் கொண்டு அழுதுகொண்டே இருக்கிறாள் ஜென்னி. இந்த இடைப்பட்ட காலத்தில் தான் என்னவெல்லாம் இழந்திருக்கிறோம் என்பதை நினைத்து அவள் வெம்புகிறாள். ‘நான் தான் பதினைந்து வயதுப் பெண்..உங்களுக்காவது பொறுப்பு இருக்க வேண்டாமா..அவனுடன் பழகவேண்டாம் என்று சொல்வதற்கென்ன?” என்று பெற்றோரிடம் கோபித்துக் கொள்கிறாள். அவளுடைய அப்பா உள்பக்கமாக பூட்டப்ட்ட அவளது அறைக்கதவுக்கு வெளியில் நின்றபடி தன்னுடைய இளமை முழுவதும் கஷ்டங்களால் நிரம்பியது என்பதைப் பற்றிச் சொல்லத் துவங்குகிறார். எல்லாப் பெற்றோருக்கும் இருப்பது போல ‘என் மகளின் சந்தோசம் முக்கியம் என்று நினைத்து விட்டதாகச் சொல்கிறார்’ அவர் பேசப்பேச அந்த உருக்கத்தில் கரைந்து போகிறாள் ஜென்னி.

நீண்டத் தனிமைக்குப் பிறகு மீண்டும் ஆக்ஸ்போர்ட் தான் இனி தனது லட்சியம் என முடிவுக்கு வருகிறாள். ஆசிரியையைப் போய்ப் பார்க்கிறாள். அவரின் உதவியோடு ஆக்ஸ்போர்டுக்கு பல்கலைகழகத்த்தில் படிக்கத் தன்னைத் தயார் செய்து அதில் இடமும் பிடிக்கிறாள்.

மிக நேர்த்தியாக சொல்லப்பட்ட கதை.

மூன்று தலைமுறைக்கு முன்பு வரை கூட பாலிய திருமணம் என்பது சகஜமான ஒன்றாக இருந்திருக்கிறது. தி.ஜானகிராமன் தனது கதைகள் சிலவற்றில் பாலிய திருமணம் பற்றி எழுதியிருக்கிறார். அதில் ஒரு கதையில் பத்து வயதுப் பெண் வீட்டு வாசலில் உட்கார்ந்து தாயம் ஆடிக்கொண்டிருப்பாள். மாங்கல்யச்சரடு அவளது சட்டைக்கு மேலாகக் கிடக்கும். அவளது அத்தை அதனை உள்ளே போட்டுக்கொள் என்று சொல்லிவிட்டுப் போவாள். கணவன் வீட்டிற்கும் அந்தப் பெண் குழந்தையின் அப்பாவுக்கும் ஏற்பட்ட மனத்தாங்கல் காரணமாக அவள் திருமணத்திற்குப் பிறகும் அப்பா வீட்டிலேயே இருப்பாள். அன்றைய தினம் ஒரு மாட்டுவண்டியில் மாப்பிளை வீட்டினர் வந்திறங்குவார்கள். ‘எங்களோடு வர்றியா உன் ஆத்துக்காரர் இருக்கற இடத்துக்கு அழைச்சிட்டுப் போறோம்?” என்பார்கள். அவளது அத்தை தயங்கிக் கொண்டிருக்கும்போதே அந்த குட்டிப்பெண் அவளுடைய உடைகளை சுருட்டி மடக்கி எடுத்து வைத்துக் கொண்டு ‘வாங்கோ போகலாம்’ என்று வந்து நிற்பாள். அத்தைக்கு ஆச்சரியமும், அதிர்ச்சியுமாக இருக்கும். ‘என்ன ஒரு தீர்மானம் இந்த வயசுல?’ என்று மாய்ந்து போவாள். இப்படியாகப் போகும் கதை.

பாலிய வயதில் பெண்களுக்குத் திருமணம் என்பதால் வளம் பெற்றவர்களை விட பாதிக்கபபட்டவர்கள் தான் அதிகமிருந்திருக்கின்றனர்.

இப்போதும் கூட அவசரப்பட்டு வீட்டிற்குத் தெரியாமல் பள்ளியில் படிக்கும்போதே திருமணம் செய்து கொள்ளும் பலரும் இருக்கிறார்கள்.

பள்ளியில் படிக்கும்போது எங்களுடன் வனிதா என்றொரு சக மாணவி இருந்தாள். அவளுடைய வீட்டிற்கும் பள்ளிக்கூடத்திற்கும் இரண்டு கிலோமீட்டர் தூரம் இருக்கும். அவள் பனிரெண்டாவது படிக்கும் வரை அவளது அம்மாவோ , அப்பாவோ அவளுடன் பள்ளிக்கு வருவார்கள், மாலை திரும்ப வந்து அழைத்துச் செல்வார்கள். இத்தனைக்கும் எங்கள் பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவிகள் அவளது பக்கத்து வீடுகளிலும் உண்டு என்றாலும் அவர்களுடன் வனிதாவை அனுப்புவதற்குக் கூட தயங்கினார்கள் அவளின் பெற்றோர். அவளைக் கடைக்குத் தனியாக அனுப்பமாட்டார்கள், கூட்டம் கூடும் இடங்களான பொருட்காட்சி, தேரோட்டம், திரையரங்குகள் எங்குமே அவள் போனதில்லை. இன்னும் சொல்லப்போனால் பள்ளிக்கூடக் காலகட்டத்தில் அவள் ஒரு ஆண்டு விழாவிற்கும் வந்ததில்லை. எதற்காக அவளைப் படிக்க அனுப்புகிறார்கள் என்பதே கேள்விக்குறியாக இருக்கும்.

அதனால் வனிதாவிற்கு பள்ளியில் இருக்கும் நேரமென்பது  பொற்தருணங்கள். பொருட்காட்சிக்கு போய்வந்த கதையை யாராவது சொல்லத் தொடங்கினால் அதை அவள் கேட்கும் ஆவல் அலாதியானதாக இருக்கும். புதிதாக வந்தத் திரைப்படங்களை அவளுக்கு காட்சி காட்சியாக நடித்தேக் காட்ட வேண்டியிருக்கும். பத்தாம் வகுப்புக்குப் பின்  அவளுடனான தொடர்பு விட்டுப்போனது. இரண்டு வருடங்களுக்கு முன்பு அவளைப் பற்றி வேறொரு தோழியிடம் விசாரித்தபோது அவள் சொன்னத் தகவல் ‘இதற்குத் தான் பெண்ணை இப்படி பொத்தி பொத்தி வளர்த்தார்களா?’ என்று நினைக்கத் தோன்றியது.

வனிதாவின் வீட்டின் பக்கத்தில் ஒரு கடையில் வேலைப் பார்த்த பையன் அவ்வப்போது மளிகைப் பொருட்களை வீட்டுக்கு வந்து ‘டெலிவரி’ தருவானாம். அவனுடன் பழகியதில் உலகமே அவன் தான் என நம்பியிருக்கிறாள். ஒரு நாளில் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டார்கள். வீட்டிலிருந்த நகையையும் கூடவே எடுத்துச் சென்றிருக்கிறாள். இதுவரை அவளுக்கு எதையும் கற்றுத் தராத வாய்ப்பினை சேர்த்துப் பயன்படுத்திக்கொண்டது வாழ்க்கை. மொத்தமாய் முடங்கிப்போய் திரும்பவும் அம்மா வீட்டிற்கே வந்து நின்றிருக்கிறாள். நகையோடு அவள் இழந்தது மீட்டுக் கொள்ள முடியாதது. அவமானம் தாங்காமல் அவளுடைய அப்பா படுக்கையில் விழுந்தார். சம்பாதித்தேயாக வேண்டிய நிலையில் வனிதாவை சூழல் கொண்டுவிட்டது. ஏற்கனவே வெளி உலகை அணுகுவதற்கு அவளுக்கு பயம் இருந்தது. திருமணம் என்ற பெயரில் மோசமான சில அனுபவங்கள் கிடைத்ததால் ஒரு வருட காலம் தன்னைத் தேற்றிக் கொள்ளவே நேரம் எடுத்துக் கொண்டிருக்கிறது. இப்போது வனிதா ஒரு கடையில் வேலைப் பார்ப்பதாகச் சொன்னாள் என் தோழி.

கணவனிடம் பெண்ணை ஒப்படைக்கும்வரை வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டிருக்க வேண்டியிருப்பதாய் அழுத்தமாய் இந்த சமூகத்தின் மனதில் பதிந்திருக்கிறது. ஆனால் திருமணத்திற்குப் பிறகும் பிரச்சனைகள் பல்வேறு வழிகளில் வரலாம். அதை எதிர்கொள்ளும் தைரியமும், பக்குவமும் வயதும், சில நேரங்களில் காலம் கற்றுத் தரும், அல்லது நமக்கென்ன என்று காலமே கூட கைவிரித்துவிடும். வேண்டியதெல்லாம் எதையும் எதிர்கொள்ளும் துணிவோடு குழந்தைகளை வளர்க்க வேண்டுமே தவிர, திருமணத்துக்கு தயாராகும் பொருட்டு அல்ல. ஏனெனில் திருமணங்கள் எந்த வயதில் செய்தாலும் அது வாழ்க்கைக்கான நிரந்தர நிம்மதியான முடிவு அல்ல.

‘இந்தக் காலத்துல யாரு சின்ன வயசுலையே கல்யாணம் பண்றாங்க’ என்று நாம் நினைக்கலாம். ஆனால் அப்படி நினைத்துவிட முடியாதபடி செய்கிறது ஒரு புள்ளிவிவரம். ‘இந்தியாவில் மூன்றில் ஒரு பெண்ணுக்கு பதினெட்டு வயதுக்குள் திருமணம் நடைபெறுகிறது’ என்கிறது அதன் முடிவு. இந்த செய்தியைக் கூட என் அத்தைப் படிக்கும் செய்த்தித்தாள் ஒன்றில் தான் வாசித்தேன்.

(மல்லிகை மகள் இதழில் ‘நினைவு திரும்பும் நேரம்’ என எழுதப்பட்ட தொடரின் ஒரு அத்தியாயம் இந்தக் கட்டுரை)

1 COMMENT

  1. மிக நிதர்சனமான உண்மைகள். இன்றும் மாய வார்த்தைகளால் மயங்கிடும் இளம் வயதினோரும், இதுதான் சரி,சிறந்ததென விடாப்பிடியாக முட்டுக்கொடுக்கும் பெற்றோர்களும் உணர்ந்து மாற வேண்டும் ! மிக சிறப்பான கட்டுரை. தேவையானோருக்கும் நண்பர்களுக்கும் பகிர்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here