Homeகட்டுரைகள்உலக சினிமாவிந்தைகளின் வழியே கலையைத் தொடர்பவன்

விந்தைகளின் வழியே கலையைத் தொடர்பவன்

2024ஆம் வருடத்திற்கான ஆஸ்கர் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த முறை அதிக விருதுகள் Oppenheimer வசம். படத்தின் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன். அவருக்குக் கிடைத்திருக்கிற முதல் ஆஸ்கர் இது. கிறிஸ்டோபர் நோலனின் நேர்காணல்களை ‘மேதைகளின்குரல்கள் தொகுப்ப்புகாக மொழிபெயர்த்திருந்தேன். இந்தத் தருணத்தில் அந்த நேர்காணலை இங்கு தருகிறேன்

“திரைக்கலையும் கட்டடக்கலையும் எனக்கு ஒன்று தான்.” – கிறிஸ்டோபர் நோலன்

ஒரு படத்தைப் போல மற்றொரு படம் இருக்கக்கூடாது என்பதை வெகு தீர்மானமாகக் கொண்டிருப்பவர். 21ம் நூற்றாண்டின் முக்கியமான இயக்குனர் என்று பாராட்டப்படும் கிறிஸ்டோபர் நோலனின் (Christopher Nolan) ஒவ்வொருத் திரைப்படத்தையும் எதிர்நோக்கி விமர்சனங்கள் காத்திருக்கின்றன. அதே நேரத்தில் படமோ வசூலையும் வாரிக் குவிக்கின்றன. மாணவப் பருவத்தில் முளைவிடத் தொடங்கிய இயக்குதலின் மீதான ஆர்வமே இன்று உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இவரை உயர்த்திப் பிடித்திருக்கிறது இளம் வயதிலேயே.

அறையினுள் தொந்தரவு செய்தபடி சுற்றித் திரியும் சிறு பூச்சியினைக் கொல்வதற்காக ஒரு மனிதன் அதனைத் துரத்திக் கொண்டே இருக்கிறான். முடிவில் தான் தெரிய வருகிறது அந்த பூச்சியே அவன் தான் என்று. இந்த வகையிலானக் கதைகளை அவர் தனது கல்லூரி வயதில்  சிந்தித்ததோடு மட்டுமல்லாது அதனைப் படமாகவும் மாற்றுகிறார். இந்தத் தொடர்ச்சியின் காரணமாகவே  தனதுத் திரைப்படங்களில் கதை சொல்கிற தன்மையிலும் காட்சிப்படுத்துகிற விதத்திலும் வெவ்வேறு வடிவங்களை வேறு வேறு தூரங்களில் அவர் தாண்ட வேண்டி வந்திருக்கிறது. சிறந்த திரைப்படங்களுக்காக வழங்கப்படுகிற விருதுகளை தனது படம் வெளியாகிற வருடங்களில் தவறாமல் பெற்றுவிடுகிறவராகவும் இவர் திகழ்கிறார். அடுத்து என்ன? என்பதுவே இவரது படம் வெளியானதற்கு பிறகு உந்தித்தள்ளுகிற ஒரு எதிர்பார்ப்பு மனநிலையாக நமக்கும் இருக்கிறது. அந்த எதிர்பார்ப்பினை சமன்செய்யும் வகையிலேயே இவரது படங்கள் வியப்பினை சுமந்து கொண்டே வருகின்றன ஒவ்வொரு தடவையும்.

 • சிறுவயதிலேயே திரைப்படங்களைத் தேடிப் போயிருக்கிறீர்கள் இல்லையா? உங்களுக்குப் பிடித்தமான திரைப்பட  இயக்குனர்கள் யார் யார்?

சிறுவனாக இருந்தபோது நிறையப் படங்களைத் தேடிப் போய்ப் பார்த்திருக்கிறேன். எனக்கு ஏழு வயதாக இருந்தக் காலக்கட்டத்தில் தான் ஜார்ஜ் லூகாஸின் ‘Star wars’ படம் வெளிவந்தது. அந்தப்படம் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியது. பார்வையாளருக்கு புதியதொரு உலகத்தையும் விசித்திர அனுபவத்தையும், காண்பித்தத் திரைப்படம் அது. ஒரு உலகத்தின் மேல் இன்னொரு உலகத்தினை உருவாக்குகிற யோசனை என்பது அப்போது முற்றிலும் புதியதான அனுபவம். அதே ஏழாம் வயதில் தான் ஸ்டான்லி குப்ரிக்கின் ‘2001’ படமும் வெளிவந்தது. பெரிய திரையில் பார்த்தபோது எனக்குள் புதிய அனுபவம் கிடைத்தது. படம் எதைச் சொல்ல வருகிறது என்பதை அப்போது நான் புரிந்து கொண்டேனா என்பதே  எனக்குத் தெரியவில்லை. ஆனால் விண்கலங்கள், வேறொரு உலகம் எனக் காண நேர்ந்த போது புதியதொரு கூடுதலான பார்வையை அடைந்ததை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அது பகிர்ந்து கொள்ள இயலாத அளவிற்கு எனக்குள் பாதிப்பையும் ஏற்படுத்தியிருந்தது.

 • திரைப்படம் இயக்குவது என்று எப்போது தோன்றியது? அதையேத் தொடரலாமென்ற முடிவினை எப்போது எடுத்தீர்கள்?

அநேகமாக ஏழாவது வயதில் தான் என்று நினைக்கிறேன். என்னுடைய அப்பாவின் சூப்பர்8 கேமராவை வைத்து சின்னச் சின்ன துண்டுப்படங்களை எடுத்துக் கொண்டிருந்தேன். அவையெல்லாம் யுத்தம் சார்ந்தப் படங்களாக இருந்தன. Star wars’ படத்தினைப்  பார்த்த பிறகு எனது படங்கள் விண்வெளிப்படங்களாக மாறின. பனிரெண்டு அல்லது பதிமூன்று வயதில் தான் எனக்கு இயக்குனர் என்பவர் யார், அவருடைய சக்தி என்ன என்பதெல்லாம்  புரிந்தது. ஒரு சூப்பர்8 கேமராவை வைத்துக்கொண்டு எதையாவது எடுத்து கோர்த்துக் கொண்டிருக்கிறேன் நான் என்பதும் தெளிவானது.  

அப்போது வெளிவந்த ரிட்லி ஸ்காட்டின் ‘Blade Runner’ படம் என்னைத் திகைப்பில் தள்ளியது. அதன் ஒவ்வொரு அம்சமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதே போல் அவரது ‘Alien’ படமும். இரண்டுமே முற்றிலும் வேறான படங்கள், வெவ்வேறான கதைகள். வேறு வேறு நடிகர்கள் . ஆனால் ஒரு இயக்குனராக இரண்டு படங்களையும் அவர் கையாண்டிருந்த விதம், அதன் ஊடாக படைப்புத் திறனை வெளிப்படுத்தியிருந்த சாரம் இவை அனைத்துமே எனக்கு முக்கியமாகப்பட்டது. பிறகு நானே திரைக்கதையினை எழுதத் தொடங்கினேன். ஏனென்றால் முதல் படத்தினை இயக்குகிற போது யாரும் தேடி வந்து திரைக்கதையைத் தரப்போவதில்லை. அதனால் நானே திரைக்கதை எழுதினேன். பிறகு அப்படியே இயக்கத்திற்குள்ளும் வந்துவிட்டேன்.

பெற்றோர் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தனர். அப்பா விளம்பரத்துறையில் இயக்குநராக இருந்தார். அம்மா ஆங்கிலம் கற்றுத்தரும் ஆசிரியை. நான் ஏதோ புதியதாக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் என்பது அவர்களுக்கு சந்தோஷமாக இருந்தது. அதனால் தங்களின் விலையுயர்ந்த கேமராவான சூப்பர்8-ஐ எனக்குப் பரிசளித்தார்கள். படமெடுக்கிறேன் என்று அடிக்கடி காரை நசுக்கிவிடுவேன் அல்லது உடைத்துவிடுவேன். இது தான் என்னுடைய அப்பாவுக்குப் பிடிக்காது. அவர்கள் எனக்கு ஒரு கிறிஸ்துமஸ் தினத்தன்று படத்தொகுப்பு இயந்திரத்தை வாங்கிக் கொடுத்தார்கள். அது எடிட்டோலா இயந்திரம். ரீல் ரிலாக அதில் எடிட் செய்யலாம். நான் ஃபிலிம்களைத் துண்டாக எடுத்து வெட்டி படமாக மாற்றிக்கொண்டிருப்பேன்.

பின்னர் லண்டன் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் படித்தேன். அங்கு நானும் எனது மனைவியும் சேர்ந்து ஒரு திரைப்பட சங்கத்தை ஆரம்பித்தோம். அதன் மூலம் 35எம்எம் படங்களை எடுத்தோம். அது தான் படமெடுப்பதற்கு கற்றுக் கொள்ளும் அனுபவமாக கிடைத்தது.

 • உங்கள் மனைவி உங்களுக்கு மிகப்பெரிய உந்துதலாக இருக்கிறார். உங்கள் படங்களை அவர் தான் தயாரிக்கிறார்அவரைப் பற்றிக் கூறுங்கள்

என்னுடைய மனைவியை கல்லூரியின் முதல் நாளில் சந்தித்தேன். படம் இயக்குவதில் எனக்கிருந்த ஆர்வத்தை அவர் புரிந்து கொண்டார். இருவரும் சேர்ந்து நிறைய படங்களை எடுத்தோம். அதன் பின் அவர் திரைத்துறையில் வேறொரு வேலையில் சேர்ந்தார். அதன் பின் நீண்ட வருடங்கள் கழித்து தான் அவரை மீண்டும் சந்தித்தேன்.

எனக்கு எல்லாமே அவர் தான். ஒரு தயாரிப்பாளர் பணி என்பது மிகவும் கடினமானது. தயாரிப்பின் போது அவர் எல்லாத் துறைகளிலும்  ஈடுபடுவார். படைப்புத்திறன் கொண்டவர். நான் முதலில் அவரிடம் தான் கலந்தாலோசிப்பேன். பிறகு அனைத்துப் பணிகளிலும் நாங்கள் இருவரும் சேர்ந்தே  ஈடுபடுவோம். திரைப்பட ஆக்கத்தில் 16 எம்எம் காலத்தில் இருந்து நாங்கள் சேர்ந்தே இருப்பதால் மற்றவர்களை விடவும் அவருக்கு திரைப்பட நுணுக்கங்கள் அதிகமாகவேத் தெரியும். எதையும் எளிதான முறையில் கையாளும் திறன் பற்றியும்  அவருக்குத் தெரியும்.

குடும்ப உறுப்பினர்களோடு படைப்புரீதியாக வேலை செய்கையில், அவர்களுக்கு நம் எண்ணத்தை புரிந்து கொள்ள எந்தத் தடையும் இல்லை எனும்போது கிடைக்கிற சுதந்திரம் தனித்துவமானது. மற்றவர்கள் என்றால் நம்முடைய தொழில் முறையை அவர்கள்  புரிந்து கொள்ளும்படி விளங்கச் செய்ய வேண்டும், நமது ஆளுமையை வலுவாகக் காட்ட வேண்டி வரும், நமது எல்லா எண்ணங்களையும் சுதந்திரமாக வெளிப்படுத்த முடியாது. இதையெல்லாம் ஒரு படைப்பாளியாக சமரச சமன் செய்ய வேண்டியிருக்கும். மனதில் நினைத்ததை வடிகட்டாமல் சொல்வதற்கு நமக்கு நெருக்கமானவர்கள் உடன் இருப்பதே நல்லது.  

 • டிம் பர்டன் மற்றும் ஜோயல் ஷூமேக்கர் இருவரும் ‘Batman’ படத்தை இயக்கியதற்குப் பிறகும் ‘BATMAN BEGINS’ படத்தை நீங்கள் மறுஉருவாக்கம் செய்ததற்கான காரணம் என்ன?

திரைப்பட வியாபாரம் எப்படி வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதற்கான அடையாளம் அது. BATMAN’ படத்தைப் பார்க்கும்போது அதைத் திரும்ப எடுக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வரவில்லை. வார்னர் பிரதர்ஸிடம் இந்த அருமையான கதாபாத்திரம் கைவசம் இருந்தது. அதைக் கொண்டு என்ன செய்வதென்று அவர்களுக்குத் தெரியவில்லை. முந்தைய BATMAN’ மறுஉருவாக்கத்தோடு அதற்கு ஒரு முடிவு ஏற்பட்டு விட்டதாகத் தான் நினைத்திருந்தார்கள். இந்த சுவாரஸ்யமான இடைவெளியை என்னால் நிரப்ப முடியும் என்று எனக்குத் தோன்றியது. யாருமே பேட்மேனுடைய ஆரம்பகாலக் கதையைச் சொல்லவில்லை. டிம் பர்டன் படம் கூட பேட்மேனுடைய கதாபாத்திர சாகசங்களைத் தான் பட்டியலிட்டுச் சொன்னது.

நான் அதன் பின்னணிக் கதையை விரிவாக சொல்ல வேண்டுமென முடிவெடுத்துக் கொண்டேன். சித்திரக்கதையில் கூட அது குறித்து பேசப்படவில்லை. இரண்டாவது, சாதாரண உலகத்தில் உலவும் அசாதரணமான கதாபாத்திரம் என்பதாக இருப்பதால் காதம் நகரவாசிகள் அந்தக் கதாபாத்திரத்தை வேற்றுமனிதராகத் தான் நம்பவேண்டும் என தீர்மானித்துக் கொண்டேன்.

 • சித்திரப் பட கதாபாத்திரங்கள் தோன்றும் திரைப்படங்களை விட உங்களுடைய பேட்மேன்ஐ சுற்றியிருந்த உலகம் யதார்த்தமானதாக இருந்தது. அவருடைய கதாபாத்திரமும் கூட மிகைப்படுத்தப்படாமலேயே காட்டப்பட்டிருந்தது..

யதார்த்தம்என்ற வார்த்தை எனக்கு எப்போதும் ஒரு குழப்பத்தையே தருகிறது. ஒரு நிச்சயமற்றத் தன்மையிலேயே யதார்த்தம்என்பதை பயன்படுத்தி வருகிறோம். வேறொரு உலகத்தில் நடக்கும் சம்பவங்கள் என்றாலும் கூட நிஜமானவற்றை கொண்ட உலகமாகத்தான் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். இந்த அசாதரணமான கதாபாத்திரம் வீதிகளில் நடந்து போகும்போது அந்தத் தெரு மற்ற சண்டைப்படங்களில் வருவது போலவே வழக்கமானதாக இருக்க வேண்டுமெனவே முடிவெடுத்திருந்தேன். எவ்வளவுக்கெவ்வளவு தொழில்நுட்பம் மூலமும், கட்டுமானம் வழியாகவும் உறுதியானத் தன்மையைப் படைக்கிறோமோ அவ்வளவுக்கு வலுவான தரம் திரைப்படத்திலும் கைகூடும். இது போன்றதொரு உலகத்தின் வாசனை எப்படியிருக்கக்கூடும்? சுவை என்ன விதமானதாக இருக்கும்?, மக்களின் குணாதிசயங்களை வெளிப்படுத்தும் விகிதாசாரம் எவ்வளவு?….. போன்றவற்றையெல்லாம்  நீங்கள் உணர வேண்டும். இல்லையென்றால் கணிப்பொறி வரைகலை கொண்டு ஒரு உலகத்தை உருவாக்கி உலவவிட்டது போன்ற ஒரு வெற்றுத்தன்மை உருவாகி, அது படம் முழுக்கவும் பரவிவிடும்.

கதாபாத்திரங்களை எப்படி உருவாக்குவது என்பது தான் எனக்கு முக்கியமானதாக இருந்தது. முதலில் நான் அந்த உலகத்தை நம்பவேண்டும். காதம் என்பது கிராமம் அல்ல. நியூயார்க் போன்ற நவீன நகரம். நானே அதன் தெருக்களில் இறங்கி நடப்பது போல கற்பனை செய்துகொள்ள வேண்டும். நான் நடக்கிற அந்தத் தெருவில் தான் பேட்மேன்போல ஒரு கதாபாத்திரம் ஒரு பிரத்யேக உடையில்  தனித்துவமான அம்சத்தில் வருகிறது எனும்போது அது என்னைப் பரவசப்படுத்தும்.

ஒரு சாதாரண மனிதன் அசாதாரணத்தன்மையை எப்படி அடைகிறான் என்பதற்கான சாத்தியங்களைக் காட்டுவதில் எனக்கு அதிக விருப்பம் இருக்கிறது. ‘THE PRESTIGE’ படத்திலும் கூட இந்த சாத்தியத்தன்மைகளைக் காட்டும்போது பார்ப்பதற்கு சுவாரஸ்யமாகவும், நம்பக்கூடியதாகவும் படத்தின் பொழுதுபோக்குக்கானக் காட்சிகளாகவும் அமைந்தது.

 • ராஸ் அல் கல் அற்புதமான ஒரு வில்லன் கதாபாத்திரம்.  எப்போதும் கொதிநிலையில் இருக்கும் அப்பட்டத்தனமான, வில்லத்தனம் இல்லாத ஒரு கதாபாத்திரம். அது மேற்கத்திய முதலாளித்துவத்தைப் பற்றி சொற்பொழிவாற்றும் ஒரு வில்லன் கதாபாத்திரம்  இல்லையா?

சக எழுத்தாளர்களான டேவிட் கோயர் மற்றும் எனது சகோதரனுமான ஜோனதான் நோலனும், நானும் ஒரு தீர்மானத்திற்கு வந்தோம். எந்த ஓர் படத்தினுடைய சிறந்த வில்லனும் உண்மைப் பேசுகிறவனாகவே இருக்கிறான் என்பதைக் கண்டுகொண்டோம். ரா’ஸ் அல் கல் கூட தான் நம்பும் உண்மையைப் பேசக்கூடியவன். அவன் உலகத்தை அவனுடைய பார்வையில் எது நேர்மையாக படுகிறதோ அப்படித்தான் பார்க்கிறான். இதையே தான் நாங்கள் ஜோக்கருக்கும், பேனுக்கும் பொருத்த வேண்டும் என்று முடிவு செய்தோம் . அவர்கள் எதைச் சொல்ல விரும்புகிறார்களோ அதைத் தீவிரமாகவே சொல்வார்கள். அவர்களின் கொள்கைப்படி முடிவு ஒன்று தான் நீதி. ‘BATMAN’ படத்தில் டூகார்டுடன் ப்ருஸ் சாலையில் வெகுதூரம் போவது கூட திருடிய ஒருவனின் தலையை வெட்டுவதற்காகத் தான். அந்த சந்தர்ப்பத்தில் ப்ருஸ் கார்டிடம் “நீ தீவிரமாக இருக்கத் தேவையில்லை” என்பான். அது நகைப்புக்குரியதாக இருந்தாலும் எந்தளவுக்கு அவர்கள் பயிற்சி கொடுக்கப்பட்டிருக்கிறார்கள், மூளை மழுங்க செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது நமக்கு  ஆச்சரியமாக இருக்கும்.

அதன் பின் காதம் நகரத்தை அழிக்கும்போது அவன் சொல்லும் எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் இருக்கும். என்னைப் பொறுத்தவரை துன்புறுத்துகிற வில்லன்கள் எல்லோருக்குமே காரணங்களுடன் கூடிய தீவிரமான கொள்கைப்பிடிப்பு இருக்கும்.

 • உங்கள் படங்களில் நடிக்கும் நடிகர்களின் தேர்வு உடனடி கவனத்தைப் பெற்றுவிடுகிறது

எனக்கு நடிகர்களைப் பிடிக்கும். சிறந்த நடிகர்கள் கதாபாத்திரத்திற்குள் சென்று படத்தின் தன்மையை உயர்த்திவிடுவார்கள். நடிகர்கள்  கதாபாத்திரமாக மாறும் அதிசயத்தை நான் பார்க்கிறேன். நான் நடிகன் அல்ல. அதனால் ஒரு நடிகனுக்குள் நடக்கும் இந்தப் புதிர்த்தன்மை என்னை ஆச்சரியப்படுத்துகிறது. எனக்குத் தெரிந்ததெல்லாம் அவர்களை கூர்ந்து கவனிப்பது மட்டும்தான்.

 ‘BATMAN BEGINS’ படத்தின் நடிகர்களின் தேர்வு பொருத்தமானதாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். இதற்காக ரிச்சர்ட் டானரின் ‘Superman’ படத்தைப் பார்த்தேன். அவர் அதில் மர்லன் பிராண்டோ, கிளென் போர்ட் மாற்றம் நெட் பெட்டி போன்ற பெரிய நட்சத்திரங்களை நடிக்க வைத்திருப்பார். காதம் போன்ற ஒரு உலகத்தை உருவாக்கி இது போன்ற பெரிய நட்சத்திரங்களைப் பயன்படுத்தும்போது அந்த அசாதாரண சூழலில் உலாவும் புராண கதாபாத்திரங்கள் உண்மைத்தன்மையைக் கொடுக்கும்.

 • இது போன்ற படங்களை இயக்கும்போது என்ன மாதிரியான தொழில்நுட்ப சவால்களை சந்திக்க நேரும்படி ஆகும்? பெரிய படங்களை இயக்கும்போது பயமாக இருக்குமா?

நிறைய சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். பெரிய படங்களை இயக்குகிறபோது அந்தத் துறையில் அனுபவம் பெற்றவர்களைத் தான் குழுவில் இணைத்திருப்போம். இது ஒரு பாதுகாப்பான வலையை ஏற்படுத்தும். ஆனால் இதுவே சில நேரங்களில் தவறுகள் நடக்கவும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்துவிடும். சிறிய படங்களை எடுக்கும்போது படப்பிடிப்புத் தளத்தில் கூட தேவையான மாற்றங்களை செய்துகொள்ள முடியும். பெரிய படங்களில் அதற்கான சாத்தியங்கள் குறைவு. அனுபவமின்மை, பயம் இரண்டும் இருந்தால் பெரிய படங்களை இயக்க முடியாது.

இன்னொன்றையும் நான் கற்றுக்கொண்டேன். நீங்கள் எவ்வளவு பெரிய படத்தை எடுத்தாலும் கூட அது சின்ன படமாகத் தான் மக்களுக்குத் தோன்றும். அதனால் தேவை என்னவோ அதில் மட்டும் பிரம்மாண்டத்தைக் காட்ட வேண்டும். அதற்கு நாம் நம்முடைய உள்ளுணர்வை நம்பவேண்டும்.

ஏனென்றால் ஏற்கனவே ‘BATMAN BEGINS’ படத்தை நாங்கள் பெரிய அளவில் எடுத்திருந்தோம். அதில் ஒரு மடாலயம் இடிந்துவிழுவது போலவும், மலை உடைவது போலவும் எடுக்கப்பட்டிருந்தது. அதனால் ‘DARK KNIGHT’ படத்தின்போது எங்களுக்கு வசதியாக இருந்தது. நகரத்தின் குற்றப்பின்னணி கொண்ட கதையில் பெரிய கதாபாத்திரங்களையும் பெரிய முரண்களையும் திரையில் காட்டும்போது அதன் தன்மை இயல்பாகவே பெரிதாகிவிடும். ஜோக்கர் தெருவில் இறங்கி இயந்திரத் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே போவதென்பது பெரிய திரையில் காட்சியின் அகலத்தை மேலும் கூட்டிவிட்டது. ஒரு சட்டத்துக்குள் என்ன தேவை என்பதை மட்டுமே திட்டமிட்டு கச்சிதமாக இதற்கு முன்னால் படப்பிடிப்பு செய்ததில்லை.

என்னிடம் அதிகமும் ‘BATMAN’  படத்தைப் பற்றித் தான் கேட்கப்படுகிறது. ஆனால் நான் எனதுத் தொழிலில் எடுத்த மிகப்பெரிய முயற்சி என்பது ‘FOLLWING’ படத்தை முடித்து அடுத்து ‘MOMENTO’வை எடுத்ததுதான். நண்பர்களோடு இணைந்து வேலை செய்த அந்தப்படத்தில் எல்லாமே எங்களது சொந்தப்பணம் தான். எங்களது நேரத்தையும், உழைப்பையும் முயற்சியையும் செலவு செய்து கோடிக்கணக்கான டாலர்களை மற்றவர்களிடமிருந்து பெற்று ட்ராலி, ட்ராக் என்று முழுமையான குழுவோடு வேலை செய்தோம். ஹாலிவுட்டைப் பொறுத்தவரை அது சின்னப்படமாக இருந்தாலும் அப்போது மூன்றரை மில்லியன் என்பது என்னைப் பொறுத்தவரை மிகப்பெரிய தொகை. நாங்கள் படப்பிடிப்பினை வேகமாக நடத்தினோம். மொத்தம்  இருபத்தைந்தரை நாட்களில் படப்பிடிப்பு முடிந்தது. அடுத்த  பிரச்சனை ஐந்து வாரங்களில் படத்தொகுப்பை முடிக்க வேண்டிய கட்டாயம். பைத்திய நிலையிலேயே அனைவரும் வேலை பார்த்தோம். என் மனைவி எம்மா என்னுடன் இருந்ததால் நிலைமையை சமாளிக்க முடிந்தது.

‘MOMENTO’ படம் முடிந்ததும் அதை வாங்க யாரும் முன்வரவில்லை. நிறைய நாட்கள் அநேகமாய் எல்லா நாட்களும் இது தொடர்பாக விநியோகஸ்தர்கள் யாரையாவது சந்திக்க வேண்டியது வந்தது.  அவர்களுக்குப் படத்தைப் போட்டுக்காட்டுவோம். கையிருப்பு எல்லாமே கரைந்து போயிருந்தது. ஒருகட்டத்தில் வார்னர் பிரதர்ஸ் என்னுடைய அடுத்த படத்திற்காக ஒப்பந்தம் போட்டார்கள். மிகவும் சோர்ந்து போயிருந்த எனக்கு அது பெரியதொரு உத்வேகத்தைக் கொடுத்தது. அதன் பிறகு எல்லாமே நன்றாக நடைபெறத் துவங்கியது. வார்னர் பிரதர்ஸ் என்னை நம்பினார்கள். அல்பசினோ, ராபின் வில்லியம்ஸ், ஹிலாரி ஸ்வான்க் போன்ற பெரிய நடிகர்களுடன் வேலை செய்த அனுபவத்தை மிகவும் சிறப்பானதாக கருதுகிறேன். அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, இந்தப் படத்தில் இதை செய்துவிட்டீர்கள், அடுத்தப் படத்தில் இதைத் தாண்ட வேண்டுமே என்று எல்லோரும் கேட்டார்கள். அடுத்தடுத்து தாண்டத்தான் வேண்டியிருக்கிறது.

 • INCEPTION’ மாதிரியான ஒரு படத்தை எடுக்க ஹாலிவுட் எப்போதும் கனவு கொண்டிருக்கும். நீங்கள் பார்வையாளர்களின் புத்திசாலித்தனத்தின் மீது கொண்ட நம்பிக்கையினால் தான் அந்தப் படத்தை எடுத்திருந்தீர்கள்…..

ஆமாம். பார்வையாளர்களின் மேல் உள்ள நம்பிக்கை மட்டுமல்ல, தெளிவான திரைப்படங்களின் மீது இருக்கும் நம்பிக்கையும் காரணம். திரைப்படத்தின் மூலம் பார்வையாளர்களுக்கு ஒன்றை நீங்கள் கடத்த விரும்பினால் அங்கு சினிமா ஒரு வலுவான தொடர்புடைய ஒன்றாக மாறுகிறது. துண்டு துண்டாகக் காட்சிகளை எடுத்து பார்வையாளர்கள் எதை அனுபவிக்க வேண்டுமோ அதைத் தருகிறேன். அவர்களும் அதை வரவேற்கிறார்கள். எனக்கு இந்த அணுகுமுறையில் நம்பிக்கை இருக்கிறது.

 • ‘BATMAN’ படங்கள் முடிவதற்குள் ‘THE PRESTIGE’, ‘INCEPTION’ இரண்டு படங்களையும் முடித்துவிட்டீர்கள். இது மிகவும் ஆச்சரியமானது. எப்படி அவ்வளவு வேகமாக நடந்து கொள்ள முடிந்தது?

ஆமாம். உங்களை நீங்கள் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டுமானால், அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டுமானால், நீங்கள் புரிந்து கொள்ளப்பட வேண்டுமானால் சில அழுத்தங்களையும் தாண்டி வேலை செய்தாக வேண்டும். இங்கு நேரம் என்பது மிக முக்கியமானதாக இருக்கிறது. அதற்காக முழுநேரமும் வேலை செய்து கொண்டிருக்க வேண்டுமென்று சொல்லவில்லை.

சில யோசனைகள், கதைக் கரு என தோன்றியவுடன் அதைப் பற்றிக் கலந்தாலோசிப்போம். பிறகு அப்படியே விட்டுவிடுவோம். கொஞ்ச நாள் கழித்து மீண்டும் அதனைத் தொடருவோம். அப்போது எது சரியென்று தெரிந்துவிடும்.

 • INTERSTELLAR’ படத்தில் எப்படி ஈடுபட்டீர்கள்?

இதனை வடிவமைத்தது லிண்டா ஆப்ஸ்ட் தான். அவருக்கும் அவருடைய நண்பரான விண்வெளி இயற்பியலாளர் கிப் தாரன் இரண்டு பேருக்கும் ஒரு விஞ்ஞான புனைவுக்கதையை எடுக்க வேண்டும் என்பது கனவாக இருந்தது. இந்தப் படத்தை பாரமவுண்டுக்காக ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்குடன் சேர்ந்து உருவாக்கினார்கள். அதற்காக என்னுடைய சகோதரனை அழைத்துக் கொண்டார்கள். நான்கு வருடங்களாக அவர்கள் கலந்தாலோசிப்பது எனக்குத் தெரியும். மனிதனுக்கும் பிரபஞ்சத்துக்குமான தொடர்பு குறித்து ஒரு கதை உருவாகி வருவது எனக்கு அந்தக் கதையோடு நெருக்கத்தை உருவாக்கியது. அதனால் வாய்ப்பு கிடைத்ததும் உடனேயே ஒப்புக் கொண்டேன். ஏனென்றால் எப்படியும் இப்படியொரு வாய்ப்பு எப்போதாவது தான் வரும் அல்லது வராமலே கூட போகலாம். அந்தக் கதையில் உணர்வுகளுக்கான வெளியும், பிரம்மாண்டமும் கலந்து இருந்தது. அதைத் தான் கதை சமன் செய்தது.

 • உங்களது படங்கள் அனைத்துமே வியாபார ரீதியாவும், விமர்சனரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன. ஆனால் உணர்ச்சிவசப்படுதலை அதிகமாக முன் நிறுத்துகிறீர்கள் என்றும் சிலர் விமர்சிக்கிறார்கள். அது சரியான விமர்சனம் தான் என்று நினைக்கிறீர்களா? ‘INTERSTELLAR’ படம் அதற்கு பதில் சொல்லும் விதத்தில் எடுக்கப்பட்ட படமா?

இல்லை. அப்படி இல்லை. நான் என்ன செய்கிறேனோ அதற்கு எதிர்வினை ஆற்ற வேண்டாம் என்று கருதுகிறேன். சில நேரங்களில் மோசமான விமர்சனம் கோபத்தை ஏற்படுத்திவிடும். நமது படம் பிடித்திருக்கிறது என்று சொன்னால் சந்தோசத்தைக் கொடுக்கும். இதை மறுக்க முடியாது. ஆனால் இந்த இரண்டுமே எல்லாப் படங்களுக்கும் தான் நடக்கும். நானும் பல படங்களைப் பார்க்கிறேன். எனக்கும் கருத்துகள் தோன்றும். ‘INCEPTION’ படத்தைப் பார்த்துவிட்டு பார்வையாளர்கள் அழுதுகொண்டே வெளியே வந்தார்கள். ‘THE DARK KNIGHT RISES’ படத்திலும் பார்வையாளர்கள் அழுதார்கள். ‘MOMENTO’ படத்தில் இருந்தே இந்த மாதிரியான உணர்வுகளுக்கு பார்வையாளர்கள் ஆளாவதை கவனித்திருக்கிறேன்.  

அந்தப்படத்தில் கய் பியர்சின் நடிப்பு அந்தளவுக்கு ஈர்த்திருந்தது. நான் தொழில்நுட்பமாக சார்ந்து மட்டுமே இயக்க முடியும். கய் பியர்சின் நடிப்பு எல்லாவற்றையும் பின் தள்ளிவிட்டு அனைவரையும் பாதித்திருக்கிறது. இவையெல்லாம் இல்லாமல் வெற்றி பெற முடியாது. ‘INTERSTELLAR’ படமே மனித உணர்வுகளுக்குள் நிகழும் கதை தான். அதை எப்படி வேறான கோணத்தில் பார்ப்பது என்பது தான் படத்தின் மையமே. அதனால் இதுபோன்ற விமர்சனங்களுக்கு பதில் சொல்லாமல் இருப்பது தான் நல்லது.

ஒரு திரைப்பட படைப்பாளியாக நேர்மறையான விஷயங்களை விட எதிர்மறையான அம்சங்களுக்குத் தான் அதிகமும் தாக்கப்படுவீர்கள். எதை விரும்புகிறோமோ அதை மனிதர்கள் வெறுப்பதையும் பார்க்கிறோம். என்னைப் பொறுத்தவரை உள்ளுணர்வை நம்பினால் போதும். 

 • தொழில்நுட்பத்தில் புகுந்து விளையாடும் நீங்கள் நவீன தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்துவது இல்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது

நான் இ–மெயில் பயன்படுத்துவதில்லை. எனக்கு இதுவரை அதன் அவசியம் வந்ததுமில்லை. “நியூயார்க்கில் எங்கிருந்தாலும் இரண்டடி தூரத்தில் எலி இருக்கும்’ என்பார்கள் அது போலவே இரண்டடி தூரத்தில் எப்போதும் ஒரு செல்போன் இருக்கிறது. என்னைச்சுற்றி  இருக்கும் பத்து பேரிடமும் செல்போன்கள் இருக்கின்றன. அதனால் என்னைத் தொடர்பு கொள்வது சுலபம். திரைப்படத் துறைக்கு வரும்போது யாரிடமும் செல்போன்கள் கிடையாது. என்னிடமும் இல்லை. அதன்பிறகும் எனக்கென்று ஒன்று வேண்டும் என்று தோன்றியதில்லை. அதிர்ஷ்டவசமாக எப்போதும் என்னைச் சுற்றி நண்பர்கள் இருப்பதால் தேவைப்படும்போது அவர்கள் தருவார்கள். நாம் சிந்திக்கும் நேரத்தை இந்த நவீன இயந்திரங்கள் பிடுங்கிக்கொள்கின்றன.

 • இந்த நூற்றாண்டுக்கான திரைப்படங்களை அடுத்த தலைமுறையினர் பார்க்க நேரிடும்போது உங்கள் படங்களை அவர்கள் எவ்வாறு நினைவில் கொள்ள வேண்டும் என கருதுகிறீர்கள்?

‘இவர்கள் இலட்சியவாதியாக இருந்திருக்கிறார்கள். எல்லாவற்றையும் உள்ளார்ந்த இலட்சியத்தோடு செய்திருக்கிறார்கள்’ என்று நினைக்கலாம். எனது படத்தில் நல்லது கெட்டது என எது இருந்தாலும் அவர்களுக்குப் பிடிக்கும் என்று நினைக்கிறேன். இல்லாமலும் போகலாம்.

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments