Homeகட்டுரைகள்ராஜநாதம்

ராஜநாதம்

தமிழை வாசிக்கத் தெரிந்த ஒருவராய் இருப்பதின் பேறு சில எழுத்தாளர்களை படிக்கும்போது உணர முடியும். தமிழ் தெரியாமல் போயிருந்தால் கி. இராஜாநாராயணனை வாசிக்காமல் அல்லவா  இருந்திருப்பேன் என்று நினைத்துக் கொள்வேன். குறிப்பாக,அவரது எழுத்துக்களை வாசித்து முடிக்கும் ஒவ்வொரு தருணங்களிலும். கரிசல் நிலத்தின் வழக்காறுகளை அதன் இயல்பு மாறாமல் தருகிற செய்நேர்த்தியை அதே மொழியில் வாசிப்பது தானே அற்புதமான அனுபவமாக இருக்கும். ஆங்கிலத்திலும் மற்ற மொழிகளிலும் அதன் தன்மையைக் கொண்டு வர முடியவே முடியாது.

கி.ரா என்கிற கி.இராஜநாராயணன் தொட்டு எழுதாத களம் இல்லை. விஞ்ஞானமும், இசையும், காதலும், பண்பாடும் தன்னை புதுப்பித்துக் கொண்டே போகும் எழுத்து அவருடையது. விஞ்ஞானம் எனில் கரிசல் நிலத்திற்கேயுரிய விஞ்ஞானம். ஒரு வெற்றிலையை, பருத்தியை எப்படி பயிரிட வேண்டும், எந்த வெற்றிலையை எதன் சேர்த்தியோடு எப்படி சுவைக்க வேண்டும், அதன் நரம்பின் ஓட்டத்தை எப்படி அணுக வேண்டும், விதவிதமான பருத்தி விளைச்சல்கள் என சொல்லும் விஞ்ஞானம். நமது நிலத்தின் விஞ்ஞானம்  அது.

காதல் என்றால், எல்லா வகையான காதலும் அடங்கும். கணவன் மனைவியின் காதலும், பதின்பருவ ஈர்ப்புகளும், வயதான பின் தொடங்குகிற ‘புதுவித’ காதலும், நாய்களின் காதலும் கூட உண்டு. இசை எனில், அதன் உயரத்தில் இருந்தே தொட்டு தொடங்குவார், அருவியை நாம் ஒவ்வொரு முறையும் அண்ணாந்து  பார்ப்பது போல.

கி.ராவை அவருக்குள் ஓயாமல் சீண்டிக்கொண்டே இருக்கும் ஒரு ரசிகர் இயக்கிக் கொண்டே இருந்திருக்கிறார். இதனை அவர் 95 வயதுக்கு மேல் எழுதிய ‘எசப்பாட்டு’ புத்தகத்தின் கட்டுரைகளில் புரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு கட்டுரையையும் இதழோர புன்னகையுடனோ, மெல்லிய கூச்சத்துடனோ தான் வாசித்து முடிக்க இயலும். இதைத் முக்கால் நூற்றாண்டு காலத்துக்கு மேலாக அவர் தமிழ் சமூகத்துக்கு செய்து கொண்டிருந்தார்.

நான் பல்கலைகழகத்துக்குள் மேற்படிப்புக்கென நுழைந்த காலகட்டம். அதுவரை கிராவின் புத்தகம் எதையும் நான் வாசித்ததில்லை. பல்கலைகழகத்தின் நூலகம் அதற்கு முன்பு நான் பார்த்திராத அளவுக்கு பெரியதாக இருந்தது. எந்தப் புத்தகத்தை எடுத்துச்சென்று வாசிப்பது என்கிற ஒரே சந்தோஷக் குழப்பம். கிராவின் சிறுகதைத் தொகுதியை எடுத்து வந்திருந்தேன். வீட்டின் மொட்டைமாடியில் அமர்ந்து நான் வாசித்த முதல் கதை ‘கோமதி’. வாசித்ததும் அடுத்த கதைக்குள் செல்ல முடியவில்லை. அத்தனை கனமான கதை. ஆனால் சொன்ன விதத்தில் இருந்த ஒரு ‘இலாவகம்’ என்னை மேலும் கிராவை நோக்கி ஈர்த்தது. அந்த வருடத்தில் அவருடைய அனேக புத்தகங்களை  நூலகத்தில் இருந்து வாசித்து  முடித்திருந்தேன். சம்பாதிக்கத் தொடங்கியபின் கிராவின் அத்தனைத் தொகுதிகளையும் வாங்கியாக வேண்டுமே என்கிற வைராக்கியமும் என்னுள் இருந்தது. அதையும் நிறைவேற்றிவிட்டேன். ஊர் மீதான ஏக்கங்களும், நமது மூத்தோர் மீதான பரிவும் ஏற்படுகையில் கிரா தான் முன்வந்து நிற்பார் அவர் சொற்கள் வழியாக.

இவருடைய பெண் கதாபாத்திரங்கள் யாவும் கிராமத்து சௌந்தர்யங்கள். ‘பேதை’ கதையில் வரும் பேச்சி போன்றவள் இல்லை, ‘ஓர் இவள்’ கதையில் வரும் மஞ்சம்மா. ‘கன்னிமை’ கதையில் வரும் நாச்சியாரு முற்றிலும் வேறு ராகம். பேச்சி சுடுகாட்டில்  அலைந்து நாயுருவி புற்களின் மீது படுத்துறங்குபவள். மஞ்சம்மா தன கணவன், பிள்ளைகளின் கவனம் வேறெங்கோ சிதறுவதை இயல்பாக கோபத்தில் வெளிப்படுத்துபவள், மூன்று கொலைகள் செய்து வருடக்கணக்காக சிறையில் இருந்தவ முரடனை ஒரு நொடியில் அழ வைப்பவள் நாச்சியாரு. இவர்களைப் போல பல பெண்களும் கிராவின் கதைகளின் மூலம் நமக்கு பரிச்சமயமான போன தலைமுறைப் பெண்கள்.

ஒரு நிலத்தின் பண்பாட்டினை கதைகளாக அவர் எழுதிச் சென்றது எத்தனை பெரிய கொடை! ‘மகாலெச்சுமி’ கதையில் கரிசலின் திருமணத்தை விவரித்திருப்பார். அதற்காகவே எழுதப்பட்ட கதை போன்றது அது. பரிசம் போட வந்தது தொடங்கி மாப்பிள்ளை வீட்டார் செய்யும் முறைமைகள், பெண் வீட்டார் அழைப்பு என ஒவ்வொரு சடங்கையும் அவர் விவரித்த விதம், கதைக்குள் அதை சேர்த்த நேர்த்தி..அவரே சொல்வது போல வெந்தயம் சரியாகக் கலந்த மோரும் கம்மங்கூழும் போன்றது.

அப்படியே நாச்சியாரு, கோமதி கதைகளில் அவர் உணவுப் பதார்த்தங்களையும் உண்ணும் முறையையும் விவரிக்கும்போது அப்போது நமக்கு எது கிடைக்கிறதோ அதை உண்டுவிட்டு அடுத்த கதைக்குப் போகலாம் என்று தோன்றிவிடும்.

இவரது பெண்பாத்திரங்கள் காத்திரமானவர்கள். இயல்பாக போராட்டக் குணம் கொண்டவர்கள். சமீபமாக திருநெல்வேலியின் அருகே ஆத்தூர் என்கிற ஊருக்கு செல்ல வேண்டியிருந்தது. அங்கு ஒரு நூற்றாண்டினைக் கடந்த ஒரு வீட்டுக்குள் சென்றபோது கூடத்துத் தூணோரம் கட்டிலில் ஒரு முதிய பெண்மணி சாய்ந்து அமர்ந்திருந்தார். நான் உள்ளே போனதும் அவர் கண்களை சுருக்கிப் பார்த்தார். காது நன்றாகக் கேட்கும் என்றார்கள் வீட்டில் உள்ளவர்கள். என்னை அவருக்கு அறிமுகம் செய்தார்கள். ஊரும் பேரும் கேட்டப் பின்னர் , திருநெல்வேலியில் நான் வசித்த பகுதிகள் குறித்த அவரது நினைவுகளை சொன்னார். அவை எல்லாமே முன்னரே அறியபப்ட்டிருந்த வாய்மொழித் தகவல்கள் என்றபோதும் பெரும்பாலும் வரலாற்றிலும் அது உறுதி செய்யப்பட்டிருந்தது. நூறு வயசினை நெருங்குகிறார் என்றார்கள். எனக்கு கோபல்ல கிராமத்தின் மங்கத்தாயாரு அம்மாள் தான் நினைவுக்கு வந்தார். அவரிடம் பேசிய சில நொடிகளில் நான் பேசிக்கொண்டிருப்பது மங்கத்தாயாருவிடம் என உறுதி கூடிக் கொண்டே வந்தது. ஏனோ அவரிடம் பேசும்போதே கண்கள் கலங்க ஆரம்பித்தன. மங்கத்தாயாருவை ‘கோபல்ல கிராமம்’ நாவலில் அறிமுகம் செய்தபோது கிரா என்ன எழுதினாரோ அதை நேரடியாக அனுபவித்துக் கொண்டிருந்தேன். நான் பார்த்த அந்த முதியபெண்மணி வெறும் மோரும், சர்க்கரையும் மட்டுமே சாப்பிடுவதாக சொன்னார். மங்கத்தாயாரு கருப்பட்டியும் ,தயிரும் மட்டுமே சாப்பிட்டவர். அந்த வீடு காரைக்குடி பாணியில் ஏன் கட்டப்பட்டது என்று அவர் சொல்லத் தொடங்கியபோது என் முன் ஒரு வீட்டின் கதையல்ல, ஒரு தலைமுறைக் குடும்பத்தின் கதை எழுந்து வந்து கொண்டிருந்தது. நடுங்கிய கைகளால் என்னை அவர் தொட்ட கணம் அவர் கண்களும் கலங்கியிருந்தன. அதற்கு முன்பு அவருக்கும் எனக்கும் எந்த அறிமுகமும் இல்லை. அவர் என்னிடத்தில் யாரைக் கண்டார் என எனக்குத் தெரியாது. நான் அவரிடத்தில் கிராவையும், அவர் படைத்த பாத்திரங்களையும் கண்டு கொண்டிருந்தேன்.

அந்த வீட்டில் உள்ளவர்கள் என்னிடம் “ஆச்சி..ரொம்ப பேசும்..உங்களுக்கு ரொம்ப பொறுமைங்க” என்றார்கள். இது பொறுமையாக அல்ல, கொடையாக நினைத்து கேட்க வைத்தது நிச்சயம் கிரா தான்.

கிராவின் கோபல்ல கிராமம், கோபல்ல கிராமத்து மக்கள் நாவல்களைப் போல மற்றொன்று தமிழில் இன்னும் எழுதப்படவில்லை. தங்களின் குலப் பெண்ணைக் காக்க ஒரு கிராமமே தெலுங்கு தேசத்தில் இருந்து கிளம்பி கரிசல் மண்ணை செப்பனிட்டு குடிபெயர்ந்த கதை. கூடவே தெய்வமும், உழைப்பும் கரிசல் நிலத்தில் குடிகொண்ட வரலாறு அது. இப்படி ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு மூதாதைக் கதைகள் இருக்கும். நாம் நமது நேரடி மூதாதைகள் குறித்து தெரிந்து கொள்ளவீல்லையே என்கிற ஏக்கத்தைக் கொண்டு சேர்க்கும் கதைகள் அவை.

கிரா இசையில் மாபெரும் ரசிகர். அவர் காலத்தில் வாழ்ந்த விளாத்திகுளம் சுவாமிகள் என்கிற ஒரு சங்கீத மேதையை  பரவலாக இன்றளவும் அறியச் செய்தவர் அவர். சுவாமிகளின் அற்புத குரல் வளத்தையும் பாடும் முறையையும் கிரா எழுதும் ஒவ்வொரு சமயமும் நாம் கற்பனையில் அதைக் கேட்டுக் கொண்டிருப்போம். திருவாவடுதுறை இராஜரத்தினம் அவர்களின் நாதஸ்வர  இசையின் மீது கிராவுக்கு ஒரு ‘கிறுக்கு’. திமிறி நாயனத்தையும், பாரி நாயனத்தையும் இரண்டின் வேறுபாடுகளையும், நாதசுரம் செய்யும் முறையினையும் கிரா விளக்கி எழுதியக் கட்டுரைகள் இசைக்கு மட்டுமல்ல, வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் கிடைத்திருக்கும் பெரும் வரம். முக்கால் முழ நீளமும், வெண்கல அனசும் கொண்ட திமிறி நாயனம் வாசிக்க மிகக் கடினமானது. அதற்கு மாற்றாகவும், இணையாகவும் பாரி நாதஸ்வரத்தை உருவாக்கி அறிமுகம் செய்தவர் ராஜரத்தினம் அவர்கள்.  ‘அயிரை மீனைப் போல இருந்த திமிறி நாயனம், விலாங்கு மீனைப் போல நீண்ட பாரி வாத்தியமானது” என்று எழுதியிருப்பார் கிரா தனது கட்டுரை ஒன்றில். இந்த பாரி வாத்தியத்தை ராஜரத்தினம்  எப்படி உருவாக்கினார், அதன் சீவாளியை எப்படி பதம் பிரித்தார் என்கிற விலாவாரியான குறிப்பும் இவரதுஅழிந்து போன நந்தவனம்’ கட்டுரையில் உண்டு. இப்போது வித்வான்கள் பயன்படுத்தும் நாதஸ்வரங்கள் யாவும் ராஜரத்தினம் அவர்கள் கண்டுபிடித்த பாரி நாதஸ்வரங்களே. சீவாளிக்காக தஞ்சாவூர் காவிரிக்கரையில் இருந்து கொண்டு வந்த நாணலை சீவி வாய் நிறைய வெற்றிலை போட்டு அதன் எச்சிலோடு ஊதி ஊதிப் பார்த்து குறிப்பிட்ட லயம் வந்ததும் பயன்படுத்தும் விதம் தான் பதம் பார்ப்பது. நாம் நேரில் பார்த்திராத, கேள்விப்பட்டிராத  ஒன்றினைக் குறித்து அவர் பலவற்றையும் இப்படியாக பதிவு செய்திருக்கிறார்.

நாதஸ்வரக் கலைஞர் காருகுறிச்சி அருணாச்சலத்தின் நண்பர் இவர். இருவரும் பக்கத்து ஊர்க்காரர்கள். இடைச்செவலும் காருகுறிச்சியும் அடுத்தடுத்த ஊர்கள். கிராவின் சங்கீதப் புலமைக்கு ஒரு சான்று, காருகுறிச்சியாரிடம் உரிமையாக அவர் குறைகளை சுட்டிக் காட்டுவதில் தெரிகிறது. சில இடங்களில் சங்கதிகளை அழுத்தி வாசிப்பதால் உப்பு சற்றுத் தூக்கலாக போட்ட உணவு போல் ஆகிவிடுகிறது என வாதம் செய்திருக்கிறார். இதனை காருகுறிச்சி புன்னகைத்தபடி கேட்பார் என்றும் எழுதியிருக்கிறார்.

விவசாயிகளின் வாழ்வினைத் தொடர்ந்து பதிவு செய்துவந்தவர். பெண் குழந்தை பிறக்குந்தோறும் கொண்டாடும் குடும்பங்களைக் காட்டியவர். நிலத்தில் இறங்கி வேலை செய்ய பெண்களின் பொறுமையை விட்டால் என்ன கதி , மகாலச்சுமியே பிறக்கட்டுமே ன்று நினைப்பார்களாம். அரசாங்கம், ‘இலவசம்’ என்ற பெயரில் கிராமத்து விவசாயிகளுக்குத் தரும் திட்டங்கள் அவர்களை எப்படி நஷ்டப்படுத்துகின்றன என்பதை சொல்லும் கதைகளும் உண்டு. பருத்தி விளையும் பூமியையும், நெல் தரும் வயல்களையும் அவர் எழுத்தில் வேறுபடுத்திக் காட்டியிருக்கிறார். இன்று ஏர் உழவு அற்றுப்போன நிலையில் விதவிதமான ஏர் சாதனங்களைப் பற்றிய பதிவும் இவரது கட்டுரைகளில் உண்டு. நாய்களின் குணங்களையும் விதங்களையும் பற்றி இவர் எழுதிய ஒரு கட்டுரை ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தால் அதனை உலகம் முழுவதும் கொண்டாடியிருப்பார்கள். அத்தனை தகவல்கள் உள்ளூர் நாய்கள் குறித்து அதில் இடம்பெற்றிருக்கும்.

கிரா கரிசல் நிலத்தில் பிறந்து வளர்ந்தது என்பது அந்த நிலம் செய்த பாக்கியம். வேறு எந்த நிலமும் இப்படி எழுத்தில் கூடி எழுந்து வரவில்லை. அவர் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலத்தை நெருங்கிக்கொண்டிருந்தார். இன்றைய தினம் அவர் இருந்திருந்தால், நூறாண்டினைக் கொண்டாடியிருப்பார். அத்தனை வருடங்களிலும் அவர் கண்ட சமூக, பொருளாதார, மானுட மாற்றங்களை பதிவு செய்து கொண்டே தான இருந்தார். விவசாயம், வேளாண்மை, வட்டார மொழி எல்லாம் திரிந்து ஒரு பொதுவான தன்மைக்குள் வந்து கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் அவரின் படைப்புகளை வாசிப்பது என்பது நாம் தவறவிட்ட ஒன்றைக் கையிலேயே இருப்பது போன்றதான நிறைவைத் தந்துவிடுகிறது. ஒரு எழுத்தாளனின் கடமையும் அதுவாகவே இருக்கிறது.

கிரா இதனை மட்டும் செய்யவில்லை. அவர் வெறும் கதைசொல்லி மட்டுமல்ல, அவர் சொன்ன கதைகளின் வழியே மனநல ஆலோசகராகவும் இருந்திருக்கிறார். வெளிப்படையாகப் பேசத் தயங்குகிற அகச் சிக்கல்களை அவரால் கதைகளுக்குள் கொண்டு வந்து அதற்கான தீர்வையும் அவரால் சொல்லி விட முடிந்திருக்கிறது.  இவரது படைப்புகளை வாசிக்கும் அளவுக்கு சுவாரஸ்யமானது இவரது நேர்காணல்களும். ஒரு நூற்றாண்டின் அனுபவங்களை அவர் தான் வாழ்ந்த நிலத்திலிருந்தே சேகரித்துத் தந்திருக்கிறார். கிரா எழுத்தில் வாழ்கிறார் என்பது பொதுவாக அனைவரும் சொல்வது. அது உண்மையும் கூட. ஆனால் அவர் மட்டுமா எழுத்தில் வாழ்கிறார், அவர் நமக்குக் காட்டித் தந்த மனிதர்களும், குணங்களும், உணவு வகைகளும், நிலமும், தெய்வமும், இசையும் அவர் காலத்து இரவும், பகலும் , அந்தியும் கூட இன்னும் வாழ்கின்றன. அவர் எழுத்தில் அவை கிடக்கின்றன. நாம் வாசிக்கிறபோது எழுந்து நம்முடன் அமர்ந்து கொள்கின்றன. கிராவை வாசிக்கிற ஒவ்வொருவரும் அவற்றைத் திரும்பத் திரும்ப உயிர்ப்பித்தபடி இருக்கிறார்கள். ஒவ்வொரு குடும்பத்தின் பாட்டையாக்களும் செய்ய வேண்டியதை அவர்கள் சார்பாக கிரா பாட்டையா செய்துவிட்டு போயிருக்கிறார். செய்ய வேண்டும் என நமக்கும் வலியுறுத்தியிருக்கிறார்.

(மல்லிகை மகள் இதழில் வெளி வரும் எழுத்து வாசம் தொடருக்காக எழுதியது)

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments