முதல் காட்சி

டாம் மார்ட்டின் உலகின் முன்னணி பட விளம்பர மற்றும் போஸ்டர் வடிவமைப்பாளர். மார்டினின் ஹாலிவுட் பிரவேசம் ஓஹியோவில் 1970ஆம் ஆண்டு தொடர்கிறது. அங்கே அவர் ஒரு உள்ளூர் பதிபப்க நிறுவனத்தின் கீழ் நாளிதழ் விளம்பரங்களுக்கு வரைந்து கொடுத்துகொண்டிருந்தார். அந்த பதிப்பகத்தார் லாஸ் எஞ்சல்சுக்கு  தங்களது தொழில்தளத்தை மாற்றிக்கொண்ட போது அவர்களுடன் சென்றார் மார்ட்டின்.

சில நாட்களிலேயே ஒரே மாதிரி வரைந்து கொண்டிருப்பது அவருக்கு அலுப்பினைத் தர ஆரம்பித்தது. அங்கிருந்து விலகி ஒரு துணிக்கடைக்கு விளம்பர போஸ்டர் வரைந்து கொடுத்தார். அந்த போஸ்டர் தான் அவரை சினிமா நோக்கி அழைத்து வந்தது. வாய்ப்பு அவரை தேடி வந்தது.

யூனிவர்சல் பிக்சர்ஸில் இணைந்தார். தன்னுடைய ஓவியங்கள், வடிவமைப்புகள், போஸ்டர்கள் அனைத்தையும் மார்கரெட் ஜெர்ரிக் நூலகத்திற்கு தானமாகக் கொடுத்துள்ளார். அவை ஆய்வு மாணவர்களுக்கு பயன்பட்டு வருகிறது.

இவருடைய பட போஸ்டர்களைப பார்ப்பவர்கள் ஹாலிவுட்டின் மாறி வந்த வரலாறைத் தெரிந்து கொள்ள முடியும். மார்ட்டின் பணி செய்த படங்கள் சிலவற்றை குறித்து பகிர்ந்து கொண்ட நேர்காணல்களில் இருந்து …..

ஜுராசிக் பார்க் படக்குழுவோடு எப்படி இணைந்தீர்கள்?

1993ஆம் வருடம் நான் யுனிவர்சல் பிக்சர்சின் விளம்பரப்பிரிவில் மூத்த கிரியேட்டிவ் துணைத் தலைவராக இருந்தேன். அனைத்து நாளிதழ்களுக்கும் விளம்பரத் தொடர்புகளை நான் தான் கையாண்டேன். அது இன்டர்நெட்டுக்கு முந்தைய காலகட்டம். சுவரொட்டிகள், பதாகைகள், செய்தித்தாள் மற்றும் வார இதழ்களில் வெளிவருவது இது தான் விளம்பரங்கள். அந்த வருடத்தில் 21 படங்கள் வெளிவந்தன.

அவற்றில் ஜுராசிக் பார்க் தனித்துத் தெரிந்தது. அதற்கு காரணம் அதன் லோகோ தான் என்றார்கள். அந்த ஜுராசிக்பார்க்கினுள் ஒரு பரிசுப்பொருட்கள் கடை இருக்கும். அந்தக் கடையின் ஒரு பகுதியாக இருந்த படத்தை லோகோவாக பயனபடுத்திக் கொண்டோம். ஜுராசிக் பார்க்கின் லோகோ ஒரு தனித்த ‘பிராண்ட்’ஆக உருவாக வேண்டும் என படத்தின் இயக்குநர் விரும்பினார். பொதுவாக படத்தின் லோகோ என்பது படம் முழுவதும் எடுத்து முடிக்கப்பட்டதும் உருவாக்கப்படும். நாங்கள் அந்தப் படத்தைப் பார்க்காமல் தான் லோகோ உருவாக்கினோம். அதாவது டைனோசர் திரையில் எப்படி இருக்கப்போகிறது என்பது கூட எங்களுக்குத் தெரியாது. படத்தின் திரைக்கதையை வைத்தே உருவாக்கப்பட்ட லோகோ அது.

ஒரு நல்ல போஸ்டர் எப்படி அமைய வேண்டும்?

தொண்ணூறு நிமிட திரைப்படத்தை வடிகட்டி ஒற்றை சதுரத்தில், தனித்துவமாக , பிரத்யேகமாகத் தர வேண்டும். அந்தக் குறிப்பிட்ட படத்தில் நீங்கள் என்ன எதிர்பார்த்து வருவீர்களோ அதை போஸ்டர் சொல்லிவிட வேண்டும்.  அல்லது எதிர்பார்ப்பை உருவாக்க வேண்டும். ஜுராசிக் பார்க்கினை எடுத்துக் கொண்டால், பயம், ஆபத்து கூடிய காவியத்தன்மை கொண்ட படம் என்கிற அர்த்தம் கொண்டதாக போஸ்டர் அமைந்திருந்தது. கப்பல் கொள்ளைக்காரர்களின் கொடி மற்றும் விஷ போத்தல்களில் உள்ள அடையாளக் குறியீடு போன்றவற்றை மையமாக வைத்து அமைக்கப்பட்ட போஸ்டர் வடிவம் அது. ஆபத்தினை குறிப்பது.

முழுமையான டைனோசரின் உருவம் காட்டாமல் அதன் எலும்புக்கூடு வடிவத்தை வரைந்ததும் ஒரு அச்ச உணர்வினை ஏற்படுத்துவதற்குத் தான். படத்தலைப்புக்குக் கீழ் நிழலுருவத்தில் அமைந்திருக்கிற காடு, மரத்தின் வெளித்தோற்றம் ஆகியவை அது ஒரு பெரிய காட்டின் பின்னணியில் நடக்கிற கதை எனச் சொல்லும்.

1983 ஆம் வருடம்  Strange Brew வெளிவந்தது. அந்தப் படத்தின் போஸ்டர் கைகளால் உருவாக்கப்பட்டது போன்றதான உணர்வினைத் தந்தது.

அப்போது கம்ப்யூட்டர் டிஜிட்டல் போன்றவை இல்லை. அதனால் பழைய பாணியின்படி உருவாக்கப்பட்டிருந்தது. அது ஒரு ஓவியம்.

இது போன்ற தோற்றத்தைக் கொண்டு வருவது கடினம். ஒரு ஓவியத்தை புகைப்படம் எடுத்துக் கொண்டோம். அதன் பிறகு கலர் ட்ரான்ஸ்பாரன்சியாக மாற்றினோம். அந்த ட்ரான்ஸ்பாரன்சியை நான்கு பிரிண்ட் பிளேட்டுகளாக (சியான், மேஜெந்தா, மஞ்சள், கருப்பு) மாற்றுவதற்கு ஸ்கேன் செய்தோம். அதிலிருந்து பிரிண்ட் எடுத்தோம். இது முழுக்கவுமே அனலாக் முறையில் கையினால் உருவாக்கப்பட்டது. போடோஷாப்புக்கு முன்பிருந்த ஏர்பிரஷ் கொண்டு கையினால் சரிசெய்தோம்.

  • இயக்குநர் ஸ்பீல்பெர்க் படங்களில் மிக வித்தியாசமானது Schindler’s List . அதனுடைய போஸ்டர்கள் கூட சுவாரஸ்யமானதாக இருந்தன. போஸ்டர் வடிவமைப்பாளர்கள் நோக்கி கவனத்தைத் திருப்பியது அந்த போஸ்டர்கள். அதை நீங்கள் உருவாக்கவில்லை என்றாலும் உங்களது பங்கு அதில் இருந்தது.

ஆமாம்…அந்த போஸ்டரினை முதலில் உருவாக்க இருந்தது எனக்கு மிக விருப்பமான, எனது முன்னோடியான சால் பாஸ். அவருடன் இந்த போஸ்டர் எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து கலந்தாலோசித்தேன். அப்போதே சால் பாஸ் வடிவமைப்பாளராக பிரபலமடைந்திருந்தார். ஆனாலும் கூட  ஸ்பீல்பெர்க்கிடம் ஐடியாக்களை சொல்லி ஒப்புதல் பெறுவதற்கு அவர் போராட வேண்டியிருந்தது. இறுதியில் ஜார்ஜியா யங் என்கிற சுயாதீனக் கலைஞர் ஒருவரின் போஸ்டர்களே தேர்ந்தெடுக்கப்பட்டன.

  • ஸ்பைக் லீயின் பல படங்களுக்கு நீங்கள் போஸ்டர் வடிவமைப்பு செய்திருக்கிறீர்கள்..

ஸ்பைக் லீயின் படமான Do the Right Thing ,1989ஆம் ஆண்டின் ப்ரூக்ளின் நகரத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. ஆனால் அது அங்கிருந்து ஆயிரம் கிலோமீட்டர் தாண்டி இங்கே யூனிவர்சல் ஸ்டுடியோவின் உள்ளே படம்பிடிக்கப்பட்டது. ஒரே ஷாட்டில் எடுத்த போஸ்டர். 

ஒரு செட் போட்டோம். அதில் ஒரு கிரேனை கொண்டு நிறுத்தினோம். சில போலிஸ் கார்கள், ஒரு டாக்சியை வாடகைக்கு எடுத்தோம். துணி வைக்கும் பயணப்பெட்டி, ஒரு பிட்சா டப்பா இவற்றையெல்லாம் கொண்டு ஒரே ஒரு ஷாட்…அதுவே போஸ்டரானது. நான்  ஸ்பைக் லீயின் பல படங்களுக்கு போஸ்டர்கள் வடிவமைத்திருக்கிறேன். அதில் முக்கியமானது Jungle Fever.

அறுபதுகளில் வெளிவந்து கொண்டிருந்த ஈராஸ் பத்திரிகையில் வெவ்வேறு இனக்குழுவைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் பற்றிய புகைப்படத் தொடர் ஒன்று இடம்பெற்றிருந்தது. அதன் பாதிப்பில் உருவானது தான் அந்த போஸ்டர்.

நாங்கள் அந்த புகைப்பட நிபுணரிடம் மீண்டும் இது போன்ற ஒரு புகைப்படத்தை உருவாக்குவதற்கு அனுமதி கேட்டு பெற்றோம்.

அதே போல் Babe படத்தின் போஸ்டரையும் குறிப்பிட வேண்டும். அனைத்துத் தரப்பினரையும் ஈர்த்த ஒரு போஸ்டர் அது.

மறக்கமுடியாத போஸ்டர் என Babe படத்தினைச் சொல்வேன். போஸ்டருக்கு புகைப்படம் எடுப்பதற்காக புகைப்பட நிபுணருடன் ஆஸ்திரேலியா சென்றோம். இந்தப் படம் குழந்தைகளுக்கான ஒரு திரைப்படம் , இதற்கு போய் இப்படி மெனக்கிடுவதா என ஸ்டுடியோவில்த எல்லோருக்குள்ளும் ஒரு தயக்கம் இருந்தது. அவர்கள் இந்தப் படத்திற்கு அதிகக் கவனம் கொடுக்கவில்லை.

ஆனால் எனக்கு அந்தப் படத்தின் இயக்குநர் ஜார்ஜ் மில்லரின் மேல் நல்ல நம்பிக்கை இருந்தது. ஏற்கனவே அவருடன் பணி செய்திருக்கிறேன். அதனால் தான் நான் சுயமுயற்சி எடுத்து ஆஸ்திரேலியாவுக்கு புகைப்படம் எடுப்பதற்காக சென்றேன். அங்கு போனால் டஜன் கணக்கில் பன்றிகளும் நூற்றுக்கணக்கான  விலங்குகளும் படப்பிடிப்பு நடக்குமிடத்தில் நின்று கொண்டிருந்தன. சுற்றிலும் மலைகள் சூழ்ந்த ஒரு கிராமத்தில் ஒரு பண்ணையில் வைத்து படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

அந்தப் பண்ணையில் நிறைய பன்றிக்குட்டிகள் இருந்தன. இரண்டு அல்லது மூன்று வாரங்களில் பன்றிக்குட்டிகள் வளர்ந்துவிடும். அதனால் அடுத்தடுத்து பன்றிக்குட்டிகளுக்கு பயிற்சி கொடுத்து தயாராக வைத்திருப்பார்கள். பன்றிக்குட்டிகள் வளர வளர அவற்றை அனுப்பிவிட்டு புதிதான பயிற்சி எடுத்த குட்டிகளை வைத்து படமெடுத்தார்கள்.

 படத்தின் கதபாத்திரத்தில் நடிக்கிற ஒவ்வொரு விலங்கின் புகைப்படத்தையும் தனித்தனியாய் எடுத்து அதை கம்ப்யூட்டரில் பதிவு செய்து அவை அனைத்துக்கும் வலதுபுறத்தில் இருந்து லைட் வருவது போல அமைத்தேன். போஸ்டரும் படமும் ஒரு சேர மாபெரும் வெற்றியடைந்தன.

எடி மர்ஃபியினுடைய படத்தின் போஸ்டர்களைப்  மொத்தமாய்ப் பார்க்கையில் அது நீங்கள் கடந்து வந்த அனுபவத்திணை சொல்வது போல இருக்கிறது.

ஆமாம். நாம் எப்போதும் ஐடியாக்களைக் கொண்டிருப்போம். அவை எப்போதும் நல்ல ஐடியாவாக இருக்காது. நல்ல ஐடியாக்கள் விற்பனையாகிவிடும். எடி மர்ஃபி தொடரில் Coming to Americaவிற்காக சின்ன சின்ன படங்களாக டஜன் கணக்கில் வரைந்து வைத்திருந்தேன். ஒவ்வொரு படத்துக்கு அருகிலும் சிறு குறிப்பு இருக்கும், “நடைபாதை அருகே அமர்ந்திருப்பது”, “போத்தலைத் தூக்கிப் போடுவது” இப்படி ஏதேனும்.

அந்த போஸ்டர்கள் ஸ்டுடியோ வாசலில் மாட்டிவைக்கபப்ட்டன. அவற்றிலிருந்து தங்களுக்கு பிடித்ததை இயக்குநர்கள், தயாரிப்பு நிர்வாகிகள், நடிகர்கள் தேர்ந்தெடுத்தனர். அவையெல்லாம் தான் பினனர் சரித்திரமானது.

ஒரு போஸ்டர் வடிவமைப்பாளரின் பணி முக்கியமானது. ஒரு படத்தின் முழுமையையும் போஸ்டர் மூலமே பார்வையாளர்கள் முதலில் உள்வாங்குகிறார்கள். அதனால் திரைக்கதையை நன்றாக உள்வாங்கிக் கொள்ள வேண்டியது வடிவமைப்பாளரின் கடமை.

Subscribe
Notify of
4 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

சினிமாவின் ஒவ்வொரு துறையிலுமே யுனிக் ஆன விஷயங்களை தொடர்ந்து எழுதி வருகிறீர்கள்.
டிஜிடல் தொழில் நுட்பம் இல்லாத காலங்களில் வியக்கவைத்த விஷயங்களை இப்படி எடுத்துரைக்கும் போதுதான் இக்கால தலைமுறையினருக்கு சென்று சேர்கிறது. இல்லையெனில் மறந்தே போய்விடுவார்கள். அதைப்பற்றிய தகவல்களும் அறிந்து கொள்ள தேவையில்லை என்றே நினைப்பார்கள். ஆனால் அதன் முக்கியத்துவத்தை, வரலாற்றை, கடந்து வந்த பாதைகளை அறிய இவ்வகையான கட்டுரைகள் பலமாக பாலமாக அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக இருக்கின்றன. தொடர்ந்து எழுதுங்கள் மேம். வாழ்த்துகள் !

ஆம், போஸ்டர்கள் மிகப் பெரிய ஈர்ப்பு கொண்டவை. படைப்பாளிக்கும், பார்வையாளனுக்குமான முதல் தொடர்பை அவையே ஏற்படுத்துகின்றன. கட்டுரை சிறப்பு!

Super Akka