Homeகட்டுரைகள்உலக சினிமாபராக்கா – ஆவணப்படம்

பராக்கா – ஆவணப்படம்

இருபது வருடங்கள் கழித்தும் ஒரு ஆவணப்படம் நம்மை பேச வைக்கிறது. தேம்ப வைக்கிறது, அமைதியாக்குகிறது, தோளைத் தட்டிக் கொடுக்கிறது. இதனைத் திட்டமிட்டே செய்திருக்கிறார் ரான் ஃபிரிக். இவர் Baraka ஆவணப்படத்தின் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர்.
இந்தப் படத்தைப் பார்ப்பது ஒரு உள்ளார்ந்த அனுபவம். எந்தத் தொந்தரவுமின்றி இருளின் நடுவில் படத்தைப் பார்க்கும் எவரும் தன்னை அதனுடன் ஒப்புவித்து விடுவார்கள். இந்தப் பேரண்டத்தில் தான் ஒரு அற்பமான சிறு துளி என்பதை உணருவார்கள். இதனை சாத்தியப்படுத்த ரான் ஃபிரிக்கும் அவரது குழுவினரும் எடுத்துக் கொண்ட சிரமங்கள் பல.

இருபது வருடங்களுக்கு முன்பு இந்த ஆவணப்படத்தின் வழியே பகிரப்பட்ட கெஞ்சுதல்களும், கோபங்களும், அறிவுறுத்தல்களும், எச்சரிக்கைகளும் இன்றைய காலகட்டத்தில் இன்னும் கூடியிருக்கிறதே தவிர குறையவில்லை.
எந்தவொரு பின்னணிக் குரல்களும், பேட்டிகளும் இல்லாமல் எதை உணர்த்த வேண்டுமோ அதனைக் காட்டியிருக்கிறார்கள். மனிதனுக்கும், இயற்கைக்குமான முரண்கள் இந்த பூமியில் மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே உருவாகியிருக்கின்றன. நமது மூதாதையர் இயற்கையைக் கண்டு அஞ்சினர், பிறகு வழிபட்டனர், தங்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இயற்கையை அவர்கள் மாற்ற முற்பட்டதில்லை. மாறாக இயற்கையின் அங்கமாக மாறினார்கள். காலங்கள் மாறின. மனிதனுக்கு இயற்கை சவாலான ஒன்றாக மட்டுமே தெரியத் தொடங்கியது. சவால்களை விரும்பியும் மனிதன் அதை எதிர்கொள்ளத் தயாராகிறான். இயற்கை அவனிடம் தோற்றும், ஜெயித்தும் இன்று வரை போராடுகிறது.

இதனை இந்த ஆவணப்படம் காட்டுகிறது. இது ஒரு புள்ளி மட்டுமே. இன்னும் இன்னும் இதைப் பார்க்கையில் ஒவ்வொரு முறையும் வேறுவேறான புரிதல்களை நம்மிடம் ஒப்படைத்தபடி இருக்கிறது இந்தப் படம்.

இந்த ஆவணப்படம் 1992ல் வெளியிடப்பட்டது. இதற்காக இந்தக் குழு ஆறு கண்டங்களில் உள்ள 24 நாடுகளுக்கும் பயணப்பட்டிருக்கிறது. இதற்காக பதினான்கு மாதங்கள் செலவிட்டிருக்கிறார்கள். மிகுந்த உழைப்பும், பொறுமையும், உறுதியும் இருந்திருந்தால் மட்டுமே இது சாத்தியப்பட்டிருக்கும்.
இந்தப் படத்தின் கேமரா கோணங்கள், படத்தொகுப்பு என தொழில்நுட்ப ரீதியாகவும் அணுகமுடியும். தொழில்நுட்பத்தில் மைலகல்லைத் தொட்ட படம். இவை யாவும் இயற்கை குறித்த அற்புதமான உணர்வுகளைக் கடத்த பயன்பட்டிருக்கிறது என்பது தான் முக்கியம்.
உயர்ந்து நிற்கிற மலைகளும், பனிப்பாறைகளும் நம் முன் விரிந்தபடி காட்சி தொடங்குகிறது. மான்களும், நம்மை வசீகரிக்கும் நமது மூதாதையரை நினைவுபடுத்துகிற ஒரு மந்தியும் காட்ட்ப்படுகின்றன. இயற்கை எத்தனை பேரற்புதமானது!!! பிரம்மாண்டமானது!!! பேரழகானது..என்று நாம் நினைக்கையில் ரம்பம் ஒன்று மரத்தினை கரகரவென அறுத்தபடி இருக்கிறது. மரங்கள் மனிதனுக்கானது மட்டுமல்ல, எறும்புகளுக்குமானதும் தான். தான் வாழும் கூட்டினை பெருஞ்சத்தத்தோடு ஒரு கருவி அறுக்கையில் பதறி ஓடுகின்றன எறும்புகள். அந்த மரம் தன்னிடத்தில் இருந்து பெயர்ந்து மெதுவாய் மற்ற மரங்களோடு உரசிக்கொண்டு வீழ்கையில் நம் மனம் துடிக்கிறது. அவை அடங்குவதற்குள் வருகிற அடுத்த காட்சி..நம்மை குற்றஉணர்வுக்குள்ளானது. ஒரு பழங்குடியின் வெறித்த பார்வை நம்மைக் கேள்வி கேட்கிறது. அவை இறைஞ்சுவதில்லை. கேள்வி கேட்கிறது. நம் மனதோ அதைக் கடக்க நினைக்கிறது. பழங்குடி சிறுவனின் செடிக்குள் இருந்து எட்டிப் பார்க்கும் கண்கள் நம்மைப் பதற வைக்கிறது. அது அவன் நம்மை புரிந்து கொண்டான் என்கிறபோது வருகிற பதற்றம். நாம் நம் கைகளால் மரங்களை ரம்பம் கொண்டு அறுக்கவில்லை, நிலக்கரி சுரங்கத்திற்காக காடுகளை சூறையாடவில்லை, வெடிப்பொருட்கள் கொண்டு காட்டினை சேதப்படுத்தவில்லை. ஆனால் இதற்கு சாட்சியாக இருந்திருக்கிறோம் என்கிற குற்றஉணர்வு நம்மைத் திடுக்கிட வைக்கிறது.

மனிதன் இயற்கையை வழிபடும் வரை அதன் அங்கமாக இருந்திருக்கிறான். எப்போது அதற்கு ஒரு உருவமும், இடமும் அமைத்தானோ அன்றிலிருந்து இயற்கையை அவன் தூர விலக்கினான்.
சாலையின் நடுவே ஒரு சிறு வழிபாட்டுத்தலம் குறுக்காக உள்ளது என்று வைத்துக் கொள்வோம். அதனால் வாகன ஓட்டுனர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. விபத்துகளும் ஏற்படுகிறது. இதற்காக அரசு அந்த வழிபாட்டுத்தலத்தை அப்புறப்படுத்த நினைக்கிறது என்றால், நம் மக்களின் மனநிலை என்னவாக இருக்கும்? அதன் ஒரு செங்கலைக் கூடத் தொட அனுமதிக்கப்போவதில்லை நாம்.
ஆனால் வளர்ச்சியின் பெயரால் ஒரு காடே துண்டாடாப்படும்போது நிலக்கரி சுரங்கம் அமைக்க ஒரு இலட்சம் மரங்கள் வெட்டப்படும்போது, பழங்குடியினர் இடம் மாறும்போது நாம் அதனை சுலபமாகக் கடக்கிறோம். அது ஒரு செய்தியாக பாவித்து ஒரு வினாடி பரிதாபத்தை அந்தச் செய்தியின் மீது வீசுகிறோம்..
இதனையும் வெவ்வேறு வழிகளில் Baraka பேசுகிறது. நீர்நிலைகளை இந்தியா போன்ற நாடுகளில் வளமாகப் பார்ப்பதில்லை, புனிதமாகப் பார்க்கப்படுகிறது. எவையெல்லாம் புனிதமாக கருதப்படுகிறதோ அதன் மேல் தான் நம் மக்கள் சேற்றை வீசுவார்கள். புனிதத்தைக் கொண்டே மதிப்பீடுகளை உருவாக்குவார்கள், அதை மீறவும் செய்வார்கள். கங்கை நதிக்கரையை புனிதமாக நினைக்கும் நாம் தான் எந்த உறுத்தலுமின்றி அதில் சடலங்களை மிதக்க விடுகிறோம்..அதன் கரையில் சடலங்களை எரிக்கிறோம். பல வகையான மீன்களை நமது சடங்குகளால் கொல்கிறோம்.
காசியின் ‘காட்’களில் எரியூட்டப்படும் சடலங்கள் காட்டப்படுகின்றன. பற்றி எரியும் விறகுகளுக்கிடையே கங்கை நதி நோக்கி நீட்டப்பட்டிருக்கும் சடலத்தின் கால்கள் தெரிகின்றன. வெந்து தணிந்துவிடக்கூடிய அந்த உடல் அதே கங்கையில் கலக்கவிடப்படுகின்றன. அதே கங்கையில் ஆராதனை பூசைகளும் நடக்கின்றன. ஆண்டாண்டு காலங்களாக எரியூட்டபப்டும் சடலங்களை உள்வாங்கி அந்த கங்கை கரிய நிறத்தில் தானே ஒரு சடலமாய் மிதப்பதை நாம் பார்க்கிறோம். ஒரு சடலத்துக்கு நாம் தருகிற மதிப்பையும், புனிதத்தையும், அதன் பெயரால் சீரழிக்கப்படும் இயற்கையையும் படம் வழி உணர முடிகிறது.
மலைகளின் மடியில் இருந்து பேரருவியாய் பொங்கும் நீருக்கு முன் நாம் எத்தனை சிறியவர்கள்..அதன் ஒரு தூசி நாம். அதை ஒப்புக் கொள்வதில் மனிதனுக்கு இருக்கும் அகந்தை தான் கோயில்களாகவும், மசூதி, தேவலாயங்களாகவும், புத்த சிலைகளாகவும், பிரமீடுகளாகவும் உறுமாறியிருக்கின்றன. ஒவ்வொரு மனிதனும் தனக்கென்று தனித் தனியான பிராமாண்டங்களை ஏற்படுத்திக் கொள்ள முடியாத காரணத்தால் தான் வழிபாட்டுத் தலங்களின் பிரம்மாண்டத்தில் தன் பங்கினை செலுத்தியிருக்கிறான். இது ஒரு வகையில் தன் அகந்தை மீது நின்று அவன் செய்த காரியம். இதனை நேரடியாக Baraka வெளிப்படுத்தவில்லை என்றாலும் இதனைப் பார்க்குந்தோறும் இது போன்ற தெளிவுகளும் ஏற்படவே செய்கின்றன. உள்ளார்ந்த அமைதியே தெய்வீகம் என்று மதங்கள் போதித்தபோதும் இயற்கைக்கு தொல்லை கொடுத்து காட்டின் நடுவே மத வழிபாட்டுத் தளங்களை உருவாக்கி அதை ஆன்மீகத்தின் மையம் என்கிறோம்.
எதைத் தொலைத்துவிட்டு நாம் வழிபாட்டுக் கட்டடங்களுக்கு எதைத் தேடுகிறோம் என இந்தப் படம் தனது ஆதங்கத்தை முன்வைக்கிறது.
Sherni என்கிற படம் சமீபத்தில் வெளிவந்தது. மத்தியப்பிரதேச காட்டில் இருந்து வருகிற பெண் புலி ஒன்று அருகில் உள்ள கிராமத்துக்குள் புகுந்து மனிதர்களையும், கால்நடைகளையும் வேட்டையாடிக் கொல்கிறது. அதை எப்படியாவது உயிரோடு பிடிக்க வேண்டும் என்று வனக்குழுவினரும், அந்தப் புலியை சுட்டுக் கொன்று புகழ் பெற வேண்டும் என்று வேட்டை சமூகமும் காட்டினைச் சுற்றி வருகிறது. அந்தப் புலி அரசியல் பிரசாரத்தின் மையமாகவும் ஆகிறது. இதில் ஒரு காட்சி உள்ளது. ஏன் புலி காட்டை விட்டு நாட்டுக்குள் வருகிறது என்கிற அடிபப்டைக் கேள்விக்கான பதிலை சொல்லியிருப்பார்கள். நிலக்கரி சுரங்கம் என்ற பெயரில் காட்டின் நடுவே மாபெரும் அழித்தொழிப்பு வேலைகளை செய்து காட்டின் பாதையை மாற்றினால் புலி எப்படி தனக்கான உணவைப் பெறும்? அது தன் எல்லையை பல்லாயிரம் மைல் தூரத்துக்கு வனத்துக்குள் விவரித்துக் கொள்ளும் தன்மையுடையது. அதன் பாதையில் நிலக்கரி சுரங்கத்தை வெட்டினால் அது உணவுக்கு எவ்விடம் போகும் என்கிற கேள்விகளுக்கு அரசிடமும், அதிகாரிகளிடமும் பதில் இருக்காது.
அணைக் கட்டுமானத்தின் பெயரால் விரட்டியடிக்கப்பட்ட பழங்குடியினத்தவரின் கேள்விகளை அவர்கள் சார்பில் முன் வைக்கிறது ஆவணப்படம்..
இந்த ஆவணப்படத்திற்கு முன்பாக இதன் இயக்குனர் காட்ஃபிரே ரெகியோ என்பவர் இயக்கிய koyaanisqatsi என்கிற ஆவணப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார். அந்தப் படங்களும் கூட மனிதனுக்கும் இயற்கைக்குமான உறவையேப் பேசுகிறது. அதில் இருந்து பெற்ற அனுபவம் மற்றும் மனநிலையிலேயே அவர் Barakaவினை இயக்கியிருக்கிறார்.
பராகா என்பதற்கு அரபியில் இப்படியொரு அர்த்தம் உண்டு. இறைவனிடத்தில் இருந்து உருவாகிற ஒரு ஆசிர்வாதம் மீண்டும் இரன்வைடத்தோல் சேரும் ஒரு வட்டம் தான் பராக. எங்கிருந்து தொடங்குகிறதோ அங்கே முடிவது என்கிற பொருள்.
இந்த ஆவணப்படம் அதைத் தான் சொல்கின்றன. நாம் எல்லோருமே பிரபஞ்சத்தின் ஆற்றலால் உருவானவர்கள். அதோடு இறுதியில் ஒன்று கலக்கிறோம். இடையில் நாம் அந்த பிரபஞ்சத்தின் ஆசிர்வாதத்தை கைவிடுகிறோம். நம் கண் முன்னால் தனது ஆற்றலை இந்தப் பிரபஞ்சம் இயற்கையின் மூலமாகக் காட்டியபடி இருக்கிறது. ஒரு புலியின் பார்வையிலும், கடலின் ஓசையிலும், காடுகளின் குளிர்ச்சியிலும் பறவைகளின் குரல்களிலும் நாம் பிரபஞ்சத்தைத் தரிசிக்க வேண்டும் என்பது அது நமக்கு கொடுத்த ஆசிர்வாதம். அதனை சொந்தம் கொண்டாடுவதன் மூலம் அந்த பேராற்றலை நிராகரிக்கிறோம், உடைமை கொள்கிறோம். அழிக்கிறோம்..
இதனால் என்னவாகும்? இயற்கை ஒரு கட்டத்தில் தன்னை சமன் செய்து கொள்ளும். அந்த ஆற்றல் அதற்கு உண்டு. ஆனால் மனிதன்? அவன் மீது பரிதாபம் கொண்டே இந்தப் படம் இயக்கப்பட்டிருக்கிறது.
இன்னும் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படம் மிக உக்கிரமாகத் தனது பணியை செய்து கொண்டிருக்கும்.. இயற்கையும் தான்..

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments