பாட்டொன்று கேட்டேன்

0
11

தமிழ் சினிமா தொடங்கும்போதே பாடல்களும் தொடங்கிவிட்டன என்றார் ஒரு நண்பர் ஒரு உரையாடலின்போது. எனக்குத் தோன்றியது, பாடலுக்குள் தான் தமிழ்சினிமாவே எழுந்து வந்திருக்கிறது என்று. நமக்கு பிரதி கிடைக்காத பழைய படங்களில் பாடல்களின் எண்ணிக்கை அசரடிக்கின்றன. சர்வசாதாரணமாக எழுபது பாடல்கள் ஒரு படத்தில் இடம்பெற்றிருக்கின்றன.

பின்னர் அது மெதுவாகக் குறைந்தது. ‘அன்பே..என்னருகில் உட்காரு’; என்று நாயகன் சொன்னால் அடுத்து உடனே பாடல் வரும்..”ம்ஹும்..நான் உட்கார மாட்டேன்” என்று நாயகி சொன்னால் அதற்கொரு பாட்டு. இப்படியான பாடல்கள் எல்லாம் மறந்து போய் வசனங்களுக்கு முக்கியத்துவம் வந்தது. தமிழ்சினிமாவின் வசனங்கள் ஆட்சியையே பிடித்திருக்கின்றன. ஒரு படத்தில் பாடல்கள் என்பது இந்தந்த சூழலுக்குப் போதுமானது என்று வரையறுக்கப்பட்டுவிட்டன. காதலுக்கு, சோகத்துக்கு , தத்துவத்துக்கு, பிரிவுக்கு, என பாடல்கள் வந்தன.

இதில் பெண்கள் மட்டுமே பாடும் தனிப்பாடல்கள் சுவாரஸ்யம் கொண்டவை. ஒரு பெண் எந்தச் சூழலில் எல்லாம் பாட முடியும் என்று தமிழ்சினிமா கொண்டிருக்கும் கற்பனைகள் அலாதியானவை. ‘வடிவுக்கு வளைகாப்பு’ என்று ஒரு படம். சாவித்திரி நடித்தது. அந்தப் படத்தில் சாவித்திரி புளியமரத்தின் பயன்கள் குறித்து தோழிகளுடன் பாடுவார்.

ஒருவகையில் ஒரு பெண்ணின் அந்தரங்கமான உணர்வுகளை சொல்வதற்கு பாடல்கள் சரியான வழியாக இருந்திருக்கிறது. அக்கம்மா தேவி, ஆண்டாள், காரைக்கால் அம்மையார் என பக்தி இலக்கியம் படைத்த பெண்களின் பாடல்களில் உள்ள உணர்வுகள் ஏக்கத்தையும் பக்தியையும் உருக்கத்தையும் சற்று கண்டிப்பையையும் கொண்டவை. இதன் தொடர்ச்சியை நாம் தமிழ்ப் படங்களின் பெண் குரல் பாடல்களில் கேட்க இயலும்.

கதாநாயகியை அறிமுகப்படுத்துவதே பாடலின் வழியாக என்பதை சில இயக்குனர்கள் தொடர்ந்து செய்து வந்திருக்கிறார்கள். இப்படியான பாடல்கள் அநேகமும் வெற்றி பெற்றிருக்கின்றன.

அகநானூறு பாடல்களில் தன்னை விட்டு பொருள் தேடவோ, போருக்கோ பிரிந்து போன தலைவனை நினைத்து தலைவி பாடுவதாக பல பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. இதனை இன்று வரையிலும் உள்ள தமிழ்த் திரைப்படங்களில் காண முடியும். பழைய  கர்ணன் படத்தில் இரண்டு பெண் கதாபாத்திரங்கள் பாடும் பாட்டு இடம்பெற்றிருக்கின்றன. இரண்டும் தலைவனை நினைத்து தலைவி பாடும் தனித் தனி பாடல்கள். “என்னுயிர் தோழி கேளொரு செய்தி…இது தானோ உன் மன்னவன் நீதி” இது தன்னைக் கண்டுகொள்ளாமல் எப்போதும் அரண்மனையே கதி என்றிருக்கும் துரியோதனனைக் குறித்து மனைவி பாடும் பாடல் இது. ஒரு பெண்ணின் ஏக்கத்தை வெளிப்படுத்தும் பாடல்.

“இன்றேனும் அவன் எனை நினைப்பானோ..

இளமையைக் காக்க துணை வருவானோ”

இத்தனை எளிமையாகவும் பூடகமாகவும் ஒரு பெண்ணின் ஏக்கத்தை சொல்லிவிட முடியாது. இது போன்ற பாடல்களின் மேதை கவிஞர் கண்ணதாசன் அவர்கள்.

இதே படத்தில் கர்ணனின் மனைவி கர்ணனை நினைத்து பாடுகிற பாடல் வரும். “கண்கள் எங்கே சென்றன அங்கே” பாடலில் எனக்கு ஒரு வரி மிகப்பிடிக்கும். கர்ணனின் கதை தெரியும் நமக்கு. ஒருவரின் குலத்தையும், பிறப்பையும் கேள்விக்குட்படுத்தபட்டதின் வலியை நமக்கு சொன்ன கதாபாத்திரம் கர்ணன். அந்தக் கர்ணனின் மனைவி அவரை நினைத்து பாடுகிறார்.

“நிலமென்ன குலமென்ன குணமென்ன அறியேன்

ஈடொன்றும் கேளாமல் எனை அங்கு கொடுத்தேன்”

குடை கொண்ட மதயானை

உயிர் கொண்டு நடந்தான்

குறை கொண்ட உடலோடு

நான் இங்கு மெலிந்தேன்”

உங்கள் பார்வைக்கு கர்ணன் எப்படியாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் எனக்கு அவன் ஒரு களிறைப் போல சபையில் கம்பீரமாக் நடந்து வந்தது பிடித்திருந்தது…என்னை ஈடொன்றும் கேளாமல் தந்துவிட்டேன்..என்று பாடுகிற ஒரு பாடல் அது. இதில் “ஈடொன்றும் கேளாமல் எனை அங்கு கொடுத்தேன்’ என்கிற வரிகள் அர்த்தம் அறிந்து முதன்முறை கேட்டபோது எது மாதிரியான வியப்பினை ஏற்படுத்தியதோ அது இன்னும் நீங்கவில்லை.

இதே போன்ற பாடல் முதல்வன் படத்திலும் இடம்பெற்றிருக்கும். “முதல்வனே..கண்பாராய்” இதிலும் தன்னைக் கண்டுகொள்ள நேரமில்லாத தலைவன் குறித்து தலைவி பாடும் பாடல் தான்.

பொதுவாய் பாடல்களைக் கேட்பது என்பது ஒரு அனுபவம். பலமுறை கேட்ட பாடலாக இருக்கும், அதிக முறை முணுமுணுத்திருப்போம்.. இருந்தாலும் ஏதோ ஒரு கணத்தில் அந்தப் பாடல் நமக்கு வேறொரு தரிசனத்தைக் காட்டிவிடும். ஒரு பாடல் அதன் இசையில், வரிகளில், லயத்தில் மட்டும் நமது வாழ்க்கையின் பாகமாக மாறிவிடுவதில்லை. அது நமது நினைவில் எதையோ கிளறுகிறபோது அது நம்முடைய அங்கமாகிவிடுகிறது.

எத்தனையோ பேருக்கு பெண் பார்க்க வந்தபோது பாடிய பாடல்கள் அவர்கள் வாழ்நாள் பயணியாக உடன்வந்திருக்கிறது. என் அத்தையைப் பெண் பார்க்க என் மாமா வந்தபோது, “கொஞ்சி கொஞ்சிப் பேசி மதிமயக்கும்” என்ற பாடலை பாடியிருக்கிறார். அது பலமுறை அத்தையால் பகிரப்பட்டு, இப்போது எங்கு அந்தப் பாடலைக் கேட்டாலும் எனக்கு என் அத்தையின் ஞாபகம் வந்துவிடும். அந்தப் பாடலைப் பற்றி சொல்லும் கணந்தோறும் எழுபது வயது கடந்த என் அத்தைக்கு வெட்கம் வந்துவிடும்.

இப்படி பெண் பாக்க வரும்போது தமிழ்ப்பட நாயகிகள் பாடிய பாடல்களை ஒரு தொகுப்பாகவே கொண்டு வரலாம். அதில் என்னை ஈர்த்த பாடல்களில் ஒன்று, பாசமலர் படத்தில் இடம்பெற்ற “பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்” பாடல். அந்தப் பாடலை பலமுறை கேட்டிருந்தேன். ஆனால் ஒருநாள் அந்தப் பாடலை நிதானமாக கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. பாடல் வரிகள்  என்னை அதிகம் வியக்க வைத்தன.

“நான் சொன்ன வார்த்தை

அவர் மட்டும் கேட்டார்

சிரித்தார் பேசவில்லை

அவர் சொன்ன வார்த்தை

நான் மட்டும் கேட்டேன்

சிரித்தேன் காணவில்லை

இருவர் நினைவும் மயங்கியதாலே

 யாரோடும் பேசவில்லை”

ஒரு புதிர் போல, ரகசியம் போன்றதான பாடல். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமலும் இருப்பது போன்றதுமான மயக்கத்தைத் தரக்கூடிய பாடல் இது.

சம்சாரம் அது மின்சாரம் படத்தின் பாடல் பெண் பார்க்கும் பாடல்களினால் தவிர்க்க முடியாதது, மூன்று பெண்கள் பாடுகிற பாடல்..” ஜானகி தேவி... ராமனைத் தேடி...இரு விழி வாசல் திறந்து வைத்தாள்..” என்பது. கமலா காமேஷ் பாடுகிறபோது விசுவின் மனநிலை தான் நமக்கு என்றாலும் அந்தக் குரலின் அப்பாவித்தனம்..பல பெண்களின் பிரதிநிதித்துவம் கொண்டது.

இப்படி எத்தனையோ பெண் பார்க்கும் பாடல்களை சொல்லிக் கொண்டே போகலாம். எத்தனை சொன்னாலும் நிறைவு பெறாத பட்டியல் அது.

பொதுவாக இந்தப் பாடல்கள் அனைத்துமே தலைவனுக்காக காத்திருந்தேன்..என நாயகிகள் சொல்வதாகவே இருக்கும்.

அடுத்தது தாலாட்டு பாடல்..இதுவும் தமிழ்சினிமாவின் நிரந்தர ஹிட். குழந்தைக்காக படும் தாலாட்டு என்பதைக் கடந்து, வளர்ந்த எம்ஜிஆருக்காக “பச்சைகிளிக்கொரு செவ்வந்தி பூவில் தொட்டிலைக் கட்டி வைத்தேன்” மாதிரியான பாடல்கள் இனி வரும் காலத்தாலும் அழியாதது. எம்ஜிஆரை தன வீட்டுப் பிள்ளையாக நினைத்து அவர் மேல் பிரியம் கொண்ட தாய்மார்களுக்காக எழுதப்பட்ட பாடல் அது.

எங்களுக்குத் தெரிந்த ஒரு பாட்டி இருந்தார். அவர் தீவிர சினிமா ரசிகை. 25 வருடங்களுக்கு முன்பு அவர் எனக்கு அறிமுகப்படுத்திய பாடல் “காலமிது காலமிது..கண்ணுறங்கு மகளே” இத்தனைக்கும் அப்போது நான் கைக்குழந்தை எல்லாம் இல்லை. பள்ளி படித்துக் கொண்டிருந்தேன். அசதியில் படுத்தால் தூங்கிவிடுவேன்..ஆனாலும் அவர் என்னருகில் அமர்ந்து மெல்லிய குரலில் இந்தப் பாடலைத் தான் பாடுவார். அந்தப் பாடலின் அர்த்தம் பெரிதாக அப்போது ஈர்க்கவில்லை..அதன் பின்பு பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு , வேலைக்கெல்லாம் போகத் தொடங்கிய பின் அந்தப் பாடலை கேட்டபோது அவர் குரலும் என் தலைகக்ருகில் அமர்ந்து பாடியதும் அப்படியே நினைவில் வந்தது. அந்தக் குரலின் உருக்கத்தின் காரணம் பாடலின் வரிகள் சொன்னது. தன்மனதில் உள்ளதை வெளிப்படுத்த திரைப்படப் பாடல்கள் எத்தனை பெரிய வடிகாலாக இருந்திருக்கிறது.

பெண் பாடும் பாடல்கள் பொதுவாக சமையலறைகளில், பூஜை அறைகளில் யாருமற்ற வீடுகளின் தனிமையில் பாடப்பட்டிருக்கும். எப்போதேனும் தான் வானொலியில் பாடல்கள் கேட்க முடியும் என்கிற காலத்தில் திரைப்பட பாடல் புத்தகங்களைப் பெண்கள் ஆவலாக சேகரித்ததின் பின்னணி என்பது அவர்களின் இலக்கியமாக அது இருந்திருக்கிறது. ஒவ்வொரு பாடலின் வரியையும் பெண்கள் மனப்பாடம் செய்தார்கள். அது அவர்களது ஆழமான உணர்வுகளுக்கு பெரும் வடிகாலாக இருந்திருக்கிறது.

மிக மெல்லிய அடங்கிய குரலில் சமைக்கும்போது, “உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல..” என்றும், “மயங்குகிறாள் ஒரு மாது” என்றும் பாடுவதற்கு அவர்களுக்கு பாடல் புத்தகங்கள் பெரிதும் பயன்பட்டன.பாடல்கள் பெண்களின் வாய்மொழியாலேயே பிரபலமடைந்திருக்கின்றன. அதிலும் இந்த மயங்குகிறாள் ஒரு மாது பாடல் அலாதியானது. அண்ணியின் முதல்நாள் இரவுக்காக நாத்தனார் பாடுவது. அத்தனை எளிதல்ல இது போன்ற சூழலுக்கு பாடல் அமைப்பது. ஆனாலும் தமிழ் சினிமா இதை சாத்தியப்படுத்தியிருக்கிறது.

“தோழியர் கதை சொல்லித் தரவில்லையா

துணிவில்லையா பயம் விடவில்லையா

நாழிகை செல்வதும் நினைவில்லையா”

இந்தப் பாடலின் மற்றுமொரு சிறப்பு, பூச்சரம் தொங்கும் அந்த அறையில் அண்ணன் தன் தங்கையும் கணவனும் இருக்கும் புகைப்படத்தை சுவர் பக்கமாகத் திருப்பி வைத்துவிட்டு வருவார்.

தலைவனைப் பிரிந்த தலைவியின் ஏக்கம் கொண்ட, தாபப் பாடல்கள் உண்டு. இதையே ஆண்களுக்கு என்றால் காதல் தோல்வியினால் பாடப்படும் பாடல்களாக உருமாற்றம் அடைந்துவிடும். பழைய படங்களில் பெண்கள் காதல் தோல்வியினால் பாடும் பாடல்கள் குறைவு. பின்னாட்களில் இந்த வகைப் பாடல்கள் சற்று வரத் தொடங்கின. “எவனோ ஒருவன் வாசிக்கிறான்”, “எங்கே எனது கவிதை”, “ஆத்தோரம் தோப்புக்குள்ள” போன்ற பாடல்கள் அதிகம் முணுமுணுக்கப்பட்ட பாடல்கள். ஆண்கள் காதல் தோல்விப் பாடல்கள் பாடுகிறபோது அநேகமும் காதலி மேல் நேரடியான குற்றச்சாட்டு இருக்கும். இதே பெண்கள் பாடுகிறபோது அவளது ஆசை நிறைவேறாமல் போன அவஸ்தைகளும் ஏக்கமும் மட்டுமே இருக்கும்.

இப்போதும் அவ்வப்போது பெண் தனிக்குரல் பாடல்கள் வருகின்றன. ஒரு நுணுக்கமான அம்சம் என்னவெனில்,  ஒரு பெண் கதாபாத்திரம் திரைப்படத்தில் தோற்கிறது அல்லது ஏதேனும் வீழ்ச்சியினை சந்திக்கிறது என்றால், அதை ஆறுதல்படுத்த அநேகமும் ஆண் குரல் பாடல்களே இடம்பெறுகின்றன.

“இதுவும் கடந்து போகும்..:  “சிங்கப்பெண்ணே” போன்ற பாடல்கள் சில உதாரணம்.

இப்படிப் பெண்களை மையப்படுத்தி அல்லது பெண்களின் அந்தரங்க உணர்வுகளை வெளிச்சொல்ல திரைப்படப்பாடல்கள் பெரிதும் பயன்பட்டிருக்கின்றன. ஐம்பதுகள் தொடங்கி எண்பதுகள் அவரை இது மாதிரியான பாடல்கள் தனி ராஜ்ஜியம் நடத்தியிருக்கின்றன. எந்த விதமான பெண் மைய சூழலுக்கும் நம்மிடம் பாடல்கள் உண்டு. எல்லாவற்றையும்  பாடல்களில் சொல்லவும் செய்திருக்கிறார்கள். காதல், காமம், விரகதாபம், பிரிவு, சோகம், தனிமை, ஏக்கம், வேட்கை, வெற்றி , குடும்ப பாரம், அச்சுறுத்தல்கள் என எல்லாவற்றிற்கும் நம்மிடையே பாடல்கள் உண்டு.

ஹரிதாஸ் படத்தில் கதையின் நாயகி தனது வீட்டை விட்டு மாமனார் மாமியாரைத் துரத்தி விடுவார். அதன் பின் ஒரு பாடல் பாடுவார் “நானே ராஜகுமாரி” என்கிற பாடல். இனி அந்த வீட்டுக்கு அவர் தான் எஜமானியாம். இப்படியெல்லாம் கூட பாடல்கள் எழுதியிருக்கிறார்கள்.

பெண்களுக்கு எழுதுகையில் தான் இத்தனை உணர்வுகளை சொல்ல முடியும். ஆண்களைப் பொறுத்தவரை தன புகழைப்பாடுவதும், காதல் பாடல்களும், காதல் தோல்விகளும் என சிறு வட்டத்தில் முடிந்து போகும். எல்லாக் கவிஞர்களும் இசையமைப்பாளர்களும் பெண்கள் பாடுவதற்கான சூழலில் இசையமைத்த, எழுதிய பாடல்களில் தங்களின் தனித்துவத்தைக் காட்டியிருக்கிறார்கள்.

முந்தைய தலைமுறை வரை பாடல்கள் கேட்கப்பட்டதை விட அதிகம் முணுமுணுக்கப்பட்டிருக்கின்றன. தன் வாழ்க்கையைப் பற்றி முழுமையாக சொல்கிற ஒரு பாடலையாவது ஒவ்வொரு பெண்ணும் கண்டுகொண்டிருப்பார். அவர்கள் மறையும்போது அந்தப் பாடல் ரகசியமாக அவர்களுக்குள் கோடானுகோடி முறை இசைக்கப்பட்டு அவர்களை வழியனுப்பிவிட்டு மற்றொரு ஆன்மாவைத் தேடிப் போயிருக்கும்..

தமிழ்சினிமாவின் பெண் பாடல்கள் நாவால் அல்ல, மனதால் கடத்தப்பட்டவை…

(மல்லிகை மகள் இதழில் வெளிவந்த கட்டுரை)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here