நிணம்

செல்லா அமர்ந்திருந்தாள். ஓடி வந்த களைப்பில் தலைசாய்த்தாள். பெருமூச்சுகளாக வெளிவந்து கொண்டிருந்தன. அவள் தலை சாய்த்திருந்தது நான்கைந்து வருடங்களுக்கு முன்பு மரணித்திருந்த கனியம்மாவின் சிமென்ட் பூசப்பட்ட மடியில். கனியாம்மாவை செல்லாவுக்குத் தெரியாது. செல்லா அந்த ஊருக்கு புதியவள். கனியம்மா நிலைத்து வாழ்ந்து மடிந்தவள். செல்லா புடவையின் வியர்வை  நசநசப்பில் இருந்து விடுபட வேண்டி கால்களை நீட்டினாள். கால்கள் எதிரில் கிடந்த மற்றொரு சிமென்ட் சமாதியில் இடித்தன. ஆசுவாசம் மெதுவாய்த் திரும்பியது.  இடுகாட்டை காவல் காக்கும் பசுபதியின் குடிசையில் அந்த நள்ளிரவில் ஒரு சினிமா பாடல் கேட்டுக் கொண்டிருந்தது.

சுற்றிலும் கிடந்த சமாதிகளுக்கு இடையில் கிடந்த குத்துச் செடிகள் தலை தூக்கிப் பார்ப்பது போல இருந்தன. “புந்தி கலங்கி மதிமயங்கி  இறந்தவரை புறங்காட்டில் இட்டுச் சந்தியில் வைத்துக் கடமை செய்து தக்கவர் இட்ட செந்தீ விளக்கா” என்று வரிவரியாய் முணுமுணுத்தாள். அப்படி வந்திங்கு சேர்ந்தவர்கள் இவர்கள். ஆழக்குழியில் கிடப்பவர்கள் மீது அவளுக்கு எப்போதும் தோன்றும் பிரியம் வந்தது. அவர்களுள் தான் தன் அம்மையும் அப்பனும் கிடப்பார்கள். தானோ கண்ணுக்குத் தெரியாத குழியில் விழுந்து கிடக்கிறோம் என்று நினைத்துக் கொண்டாள். ஒளிந்து கொள்ளக் கிடைத்த இந்த இடத்தை இனி ஒவ்வொரு இரவும் விட்டுவிடக்கூடாது என்று செல்லா நினைத்துக் கொண்டாள். தியாகு தேடிக்கொண்டிருப்பான். போதை கண்ட அவனது வார்த்தைகள் செல்லாவைக் கிழித்துத் தொங்க விட்டுக் கொண்டிருக்கும். ஒரே மாதத்தில் கேட்டு அலுத்த சொற்கள் அவளுக்கு.

திருமணத்தின் முதல் நாள் இரவில் தியாகு வந்து நின்ற கோலத்திலும் அவளைக் காண விருப்பப்பட்ட கோலத்திலும் செல்லா மொத்தமாய் அவனை வெறுத்தாள். ஒவ்வொரு இரவும் அவளுக்கு விடிவு தேவைப்பட்டது. முப்பது நாட்களாகி விட்டன. நான்கைந்து இரவுகள் அவன் வென்றான். மற்ற இரவுகளில் அவள் விதவிதமான இடங்களை ஒளிந்து கொள்ளத் தேடினாள். மாடியில் உள்ள தண்ணீர்த் தொட்டிக்குள் ஒருநாள் கால் மடங்கிக் கிடந்தாள். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு தியாகுவால் கண்டுகொள்ளப்பட்டாள். பிறகொரு நாள் ஊர்ச் சாவடியில் தூணுக்குப் பின் ஒளிந்து கொண்டாள். மிகச் சுலபமாக பத்தே நிமிடங்களில் பிடிபட்டாள். ஊராருக்கும் தியாகுவின் அம்மாவுக்கும் கூடத் தெரியாமல் நடந்து கொண்டிருந்தது இந்த கண்ணாமூச்சி விளையாட்டு. பகல் முழுவதும் இரவில் ஒளிய வேண்டிய இடத்தை யோசித்தபடி கிடந்தாள்.

ஒரு பகலில் தியாகு செல்லாவிடம் தன்னிடம் எது பிடிக்கவில்லை என்று கேட்டான். “அவள் எதுவுமே பிடிக்கவில்லை” என்றாள். அவன் முகம் சுணங்கி எழுந்துபோனான். அவனது நாற்றம், சிரிப்பு, போதை , பேச்சு என எதுவுமே அவளை ஈர்க்கவில்லை. லாரி ஒட்டி நன்றாக சம்பாதிப்பதாக செல்லாவின் அண்ணனிடத்தில் இருந்து அவளைத் திருமணம் செய்து அழைத்து வந்திருந்தான். இனி திரும்பிப்போக இடமில்லாதவளானாள். அவள் திருமணம் வெறுத்தவளாய் இருந்தாள். திருமணத்தின் அந்த இரவில் தான் அவளுக்கு வரிவரியாய் உள்ளே அவை ஓடின. அவளுடைய அப்பா வாசித்து மீதம் வைத்த புத்தகங்களின் எழுத்துகள். அதை வாசிக்கையில் அவளுடைய அப்பாவின் முகம் கனிந்து போயிருக்கும். அதையே அவள் வாசிக்கையில் உள்ளுக்குள் அவளுக்கு விருப்பமான நடுக்கம் உருவாகும். அந்த வரிகளை அவள் போதை போல் உள்ளே ஏற்றிக்கொண்டாள்.  பாடலை எழுதியவள் போல கால் அளக்க நடந்து கொண்டே இருக்க விரும்பினாள். எல்லாம் போயிற்று.

செல்லாவின் மாமியார் உள்ளூர் கோயிலில் பிரபலமான பக்தை என அறியப்பட்டவள்.  திருமணமான இரண்டு நாட்கள் கழித்து செல்லாவை அவள் கூட்டம் சற்று அதிகம் இருக்கும் செவ்வாய்க்கிழமை ராகு கால நேரத்தின்போது கோயிலுக்கு அழைத்துச் சென்றாள். கோயிலில் செல்லாவின் மாமியாருக்கு முதல்நிலை இடம் கிடைத்தது. செல்லாவை தன்னருகில் அமரவைத்து அவளாகவே அங்கிருக்கும் திருநீரை செல்லாவின் நெற்றியில் ஏதோ முணுமுணுத்தபடி வைத்துவிட்டாள். சுற்றிலும் உள்ள பெண்கள் அதைக் கவனித்தார்கள். அதன் திருப்தியாய் மாமியார் தன் கைகளால் திருநீரை அள்ளி மூன்று விரல்களால் நெற்றியில் வைத்து இழுத்துக் கொண்டாள். அது பழக்கப்பட்ட பாதை போல கச்சிதமாய் அவள் நெற்றியில் பொருந்திக் கொண்டது. குங்குமத்தை நடுவிரலால் அள்ளி எடுத்து  மேல்நோக்கி முகத்தை வைத்து சரியாய் நடு நெற்றியில் வைத்தாள். அதை அகலப்படுத்தினாள். முகத்தைக் கீழே சாய்த்தாள். குங்குமத் துகள்கள் பறந்தன. வட்ட குங்குமத்தில் இருந்து நடு உச்சிக்கு ஒரு கோட்டினை இழுத்தாள். மாமியார் துலங்கிய பக்தையாக உருக்கொண்டதை செல்லா பார்த்துக் கொண்டிருந்தாள்.

அந்தக் கோயிலின் மூலவர்  ஒரு பீடத்தினை தானாகிக் கொண்டவர். சிவனின் சொரூபம் என்றாதித்தார்கள். ராகு கால பூஜை தொடங்கியது. ஒவ்வொரு ஆராதனையும் நடக்க, செல்லாவுக்குள் ஏதோ உடைந்தது. அவளையறியாமல் முந்தைய இரவின் ஒழுங்கற்ற ரகசியங்கள் கண்ணீராய் வெளிவந்தபடி இருந்தன.  செல்லா கண்களை மூடினாள். கண்ணீர் தாடையைவிட்டு இறங்கியது. சுற்றிலுமுள்ள பெண்கள் செல்லாவை ஓரக்கண்ணால் கண்டுகொண்டிருந்தனர். 

மாமியார் செல்லாவை உற்றுப் பார்த்தாள். லேசாக தன் தோளால் அவளை இடித்தாள். செல்லாவின் காதில், “தீபாராதனை காட்டப்போறாங்க..கண்ணைத் தொற” என்றாள். தனக்குள் அமிழ்ந்திருந்த செல்லா அதில் ஒருவித அமைதி பரவியதை உணர்ந்தாள். கண்ணைத் திறக்க மனமற்றுக் கிடந்தாள். இப்போது பக்கவாட்டில் இருந்த மூன்று பெண்களும் செல்லாவையே பார்க்க, மாமியார் புடவைத் தலைப்பால் தன் கண்களை பீடத்தைப் பார்த்தபடி நாசூக்காகத் துடைத்துக் கொண்டாள். மூக்கினை உறிஞ்சிக் கொண்டாள். அவள் முகம் உடனடியாக ஒரு உருக்கத்துக்குள் போனது.

பெண்களில் சிலர் செல்லாவையே பார்த்துக் கொண்டிருந்தனர். தீபாரதனையின்போது சங்கிலியால் கட்டப்பட்ட மேளம் உயரத்தில் முழங்கியது. ஒரே விதமான தாளம். ஒரே விதமான ஜால்ரா. திரும்பத் திரும்ப இசைக்கப்பட்ட இசையின் ஒழுங்குக்குள் தன்னை முற்றிலுமாய் இழந்தாள் செல்லா. அவள் உடல் முறுக்கிக் கொண்டது. முதலில் இதை மாமியார் தான் கவனித்தாள். அவளுக்குள் எப்போதேனும் வந்துபோகும் பரிவாரத் தெய்வங்களை செல்லாவுக்கு விட்டுக்கொடுக்க முடியாத உறுதியில் இருந்தாள். தீப ஆராதனைகள் இன்னும் ஜொலிப்பாய் நடந்து கொண்டிருந்தன. தாளம் உச்சகதியில் நின்று அடித்தது. செல்லா தனது பற்களைக் கடிக்கும் ஒலி மாமியாருக்கு மாத்திரம் லேசாகக் கேட்டது. சந்தேகத்தை சரிசெய்து கொள்ள மாமியார் செல்லாவைத் திரும்பிப் பார்க்க, அவள் உடல் ஒரு இசைவுக்குள் போவதை உணர்ந்தாள். நிலைமையின் விளைவினை எண்ணிக்கொண்டே செல்லாவைக் கலைக்க வேண்டி உலுக்கினாள் மாமியார்.

கண்களை சிரமப்பட்டுத் திறந்தாள் செல்லா. இப்போது தாளம் அவள் நரம்பில் அல்லாமல் செவியில் கேட்டது. மசமசப்பான அவளது பார்வையின் முன்பு தீப ஒளியில் பீடம் தெரிந்தது. எங்கோ ஒரு ஆழக் குழிக்குள் தான் மட்டும் தள்ளப்பட்டு இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பது போல செல்லா உணர்ந்தாள். அவள் கனவில் வந்துபோகும் பறவையை கண் முன் இப்போது  கண்டாள்.  அது ஒவ்வொருமுறையும் தன் தலையை திருப்பிப் பார்க்கையிலும் ஒவ்வொருவரின் சாயலை முகத்தில் கொண்டிருந்தது. இப்போது அதற்கு தியாகுவின் சாயலைப் பெற்றிருந்தது. முகங்கள் கொண்ட அந்தப் பறவை கூவிய ஒலியில் மரத்தின் மீது இருந்த ஆந்தை சடசடவென்று இறைக்கையை வானில் வீசிக் காயப்போட்டபடி பறப்பதையும் கண்டு கொண்டே இருந்தாள் செல்லா. புகையும், நெருப்பும் புற்களும்,புதர்களும் நிரம்பிய சரளைக்கற்கள் கால்களில் ஏறிக்குத்துகிற அந்த இடத்தை அவள் நெருக்கமாக உணர்ந்தாள். கனவில் அவை வருந்தோரும் விடியலில் எழுகையில் மனம் நிறைந்தாள். எங்கோ ஒரு புள்ளியில் அவளை ஆட்கொண்ட அந்த இடம் ஒலியும் வாசமுமாக அவளுக்குள் இறங்கிக் கிடந்தன. தன் எதிரில் பீடத்தின் முன்பாக சுடர்விட்ட தீபத்தின் ஒளி அவளுக்கு  கனவில் தான் கண்ட  இடத்துக்குள் ஆழத் தள்ளியது. அடுக்கு தீபம் பீடத்தை சுற்றி வந்து இறக்கப்பட்டதும் மேளமும் நின்றது. சுற்றம் சட்டென்று அமைதியானது. செல்லா இன்னும் சூழலை முழுவதும் புரிந்து கொள்ள வலுவில்லாமல் கைகால்கள் கீழ் நோக்கி இழுக்க ஒரு பிடிவாதம் போல நின்று கொண்டிருந்தாள். “எனக்கவனைக் கொண்டேன் பிரானாக” என்றாள் தன்னையறியாது.

“என்ன சொன்னே?” என்றாள் மாமியார்.

“தெரியல..எதோ சொன்னேன்”

மாமியார் அவளை விழித்துப் பார்த்துவிட்டுத் திரும்பிக் கொண்டாள்,

தீபத் தட்டினை பூசாரி வெளியில் எடுத்து வந்தார். செல்லாவின் மாமியார் கண்களில் ஒத்திக் கொண்டே, “நம்ம சாமில்ல..எனக்கே தாங்கல” என்றாள். மீண்டும் சேலைத் தலைப்பால் கண்களின் ஓரத்தைத் துடைத்துக் கொண்டாள். அவள் சொன்னதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருந்தது அந்த வார்த்தைகளில் எதிரில் நின்ற பெண்கள் தலையாட்டிக் கொண்டனர். செல்லா தீபத்தைக் கண்களில் ஒத்திக் கொண்டாள். அதற்கே அவள் கைகளை ஒரு கணம் தூக்குவது போல மேலே இழுக்க வேண்டியிருந்தது. “

“அள்ளி அவிக்க நின்றாடும் எங்கள் அப்பன் இடந்திரு ஆலங்காடே” முணுமுணுப்பாய் சொல்லிக் கொண்டாள். பூசாரி ஒரு வினாடி செல்லாவை உற்றுப் பார்த்துவிட்டு அடுத்தடுத்து தீபத்தட்டினை எடுத்துப் போனார். அந்த ஒற்றைப் பார்வை மாமியாரை பதற்றப்படுத்தியது, வேறெவரும் செல்லாவை அப்படிப் பார்ப்பதற்குள் அகன்று விட அவசரப்படுதினாள். செல்லாவின் முகத்தில் கண்ணீர் இறங்கியத் தடம் மறையாமல் இருந்தது. “நல்லா முகத்தைத் துடைச்சிக்கோ..போகலாம்..இங்க நிக்க வேண்டாம்” என்று சொன்னதோடு தன் புடவை தலைப்பை எடுத்து செல்லாவின் முகத்தை அழுத்தித் துடைத்து விடவும் செய்தாள். அவள் அழுத்தியதில் செல்லாவுக்கு முகத்தின் தோல் எரிந்தது.

கோயிலை விட்டு வெளியே வருகையிலும் கூட செல்லா தன் இயல்புக்கு வராது உடலின் நடுக்கம் தொடர வந்து கொண்டிருந்தாள். எதிரில் நின்றிருந்த இரண்டு பெண்களில் ஒருத்தி செல்லாவின் அருகில் வந்தாள். கூடவே மற்றவளும் வந்து நின்றாள்.  “உன் மாமியாருக்கு ஏத்த மருமக  தான் நீ..உங்க மாமியாரும் இப்படித் தான் சாமியைக் கண்டா உருகிருவாங்க..” என்று சொல்ல, மாமியாருக்கு வெற்றியும், தன் நிகரையொத்த மருமகள் என்பதில் சிறு தோல்வியும் உண்டானது. “ஊரைப்  பாருன்னா..உத்தரத்தைப் பாத்துருக்காளுக..சாமியைக் கும்பிடாம இவளையாட்டி வேடிக்கைப் பார்த்தீங்க” என்று அங்கிருந்து செல்லாவுடன் அகலப் பார்த்தாள். செல்லா நகராமல் அங்கேயே நின்றாள். அந்தப் பெண்களும் வேறு வழியின்றி மேற்கொண்டு செல்லாமல் நின்றனர். “நிணம் உருகி நிலத்துல நனைக்கறதை நீங்க பாத்துருக்கீங்களா?’ என்றாள். செல்லா சொல்ல வருவதை அவர்களால் புரிந்து கொள்ள முடியாமல், “என்னம்மா சொல்ற?” என்றனர்.

“என்னோட அப்பா வீட்டுல நிறைய புத்தகம் வச்சிருப்பாரு..அதுல ஒரு புஸ்தகத்துல இருந்தது. நிணம் உருகி நிலத்துல நனையுதாம். இதை எழுதினது யாரு தெரியுமா..உங்களையும் என்னையும் மாதிரி ஒரு பொண்ணு…கல்யாணமாகி வந்த சின்னப்பொண்ணு.. அந்தப் பொண்ணு பிணம் எரியறதை எவ்வளவு உத்துப் பாத்திருந்தா அது அவளுக்கு ஒரு பாட்டா மாறியிருக்கும்?” என்றாள். அந்தப் பெண்கள் செல்லாவின் மாமியாரை அவசரகதியில் பார்த்தனர்.

“வா..வீட்டுக்கு போகலாம்” என்றாள் மாமியார்.

“நிணம்னா என்னன்னு தெரியுமா? எங்காப்பக்கிட்ட கேட்கும்போது அவரு உடம்பு கொழுப்புன்னு சொன்னாரு. சுடுகாட்டுல பிணத்தை எரிக்கும்போது அதோட உடம்புல இருந்து கொழுப்பு தீ பட்டு தரையை நனைக்குமாம்..வெண்ணை உருகி ஓடற மாதிரி” என்றதும் அந்தப் பெண்களில் ஒருத்தி  தனது சேலைத் தலைப்பால் தன் வாயை மூடிக்கொண்டாள். அது மிக தற்செயலாக இருந்தது. “சாவித்திரிம்மா உங்க மருமகளை வீட்டுக்குக் கூட்டிட்டு போங்க” என்றாள் மற்றொருவள்.

மாமியாரான சாவித்திரிக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது. சாமியின் முன் தனக்கு இருக்கும் உருக்கத்தைக் காட்டிலும் இவளுக்கு அதைச் சொல்ல என்னவோ சில வார்த்தைகளும் கிடைத்திருக்கிறதே என்று எண்ணினாள் சாவித்திரி. ‘கண்டமேனிக்கு ஏதாவது உளறுதாளா..இல்ல பயமுறுத்துதாளா’ என்று நினைத்தபடி செல்லாவை அளப்பது போல பார்த்தாள். செல்லாவின் உடலுக்குள் மேளத்தின் கனத்த இசையும் தீபத்தின் செவ்வொளியும் பரவிக்கிடந்தன. உடல் வெம்மையாய் தகித்தது. தன் நிணமே உருகி வழிவது போல இருந்தது. அது அவளுக்குப் பிடித்திருந்தது. இன்னும் எரியவேண்டுமாய் நின்றிருந்தாள். அவள் பார்வை எங்கோ கிடப்பதை புரிந்து கொண்ட சாவித்திரி அவளை உலுக்கினாள். சாவித்திரிக்கு ஒரு நொடி தீண்டலில் கை சுட்டது போல இருக்க, உதறி எடுத்த விரல்களை மீண்டும் செல்லாவின் தோளில் வைத்து அழுத்தினாள். “போகலாம்..வா” என்று செல்லாவை இழுத்துக் கொண்டு போனாள். நின்றிருந்த பெண்களில் ஒருத்தி செல்லா வெறித்தபடி இருந்த திசை நோக்கிப் பார்த்தாள். அங்கு எட்டிமரம் ஒன்று தனித்து நின்று கொண்டிருந்தது.

அன்றைய இரவு சரியானதொரு இடத்தைத் தான் மறைவதற்காகத் தேர்ந்தெடுத்திருந்தாள் செல்லா. அதற்காகவே மதிய நேரம் மாமியார் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து தொழுவத்தில் இருந்த விறகுகட்டைகளை பரணில் இருந்து ஒதுக்கியிருந்தாள். பல்லிகள் இரண்டு அங்கும் இங்கும் ஓடின. “இந்த ஒருநாள் மட்டுக்கும்” என்று அவற்றிடம் சொல்லி தூசி தட்டி மூன்று குத்தாலத் துண்டுகளையும் விரித்து வைத்தாள். அவை சற்றுத் தள்ளி ஆளுக்கொரு திசையில் நின்று கொண்டன, காவல் தெய்வங்கள் போல.

பரணை அடையப்போகும் நேரத்துக்காகக் காத்திருந்தாள். ‘வேலைகளை வேகமாக முடித்துக் கொண்டாள். இனி பரணுக்கு ஏறிவிடலாம் என்று நினைக்கையில் தியாகு வந்து சேர்ந்தான். இதை அவள் எதிர்பார்க்கவேயில்லை. அவள் கணக்கிட்ட நேரத்துக்கு முன்னதாக வந்திருக்கிறான். வந்ததும் எந்த முன்அடவுமின்றி அவளை எட்டிப் பிடித்தான். அந்த போதை வாசமும் வியர்வை நெடியும் புசித்த விலங்கின் வாய் நாற்றமும் செல்லாவுக்கு மூச்சினை அடைத்துக் கொண்டு வந்தது. சட்டென்று உட்புகுந்த ஒரு உந்துதலில் அவனை நெட்டித் தள்ளி எழுந்தாள். கதவினைத் திறந்து ஆவேசம் கொண்டவளாய் பின்பக்கம் ஓடினாள். தியாகு பின்தொடர்ந்தான். பரணுக்குக் கீழே நின்று கொண்டாள். தவறியும் மேலே பரணைப் பார்த்து விடக்கூடாது என்கிற எண்ணம் வந்தது. ஒளியக் கண்டடைந்த இடம் அது. விறகுகள் சிதறியிருக்க, அங்கேயே சுவற்றை ஒட்டியபடி நின்று கொண்டிருந்தாள். தூசிப்படலம் போல கொசுக்கள் அவர்களை சுற்றி வந்தன. அவளுடைய மாமியார் பக்கத்து வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தாள். அங்கிருந்தபடி அவள் அந்த வீட்டின் தொலைக்காட்சி நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அதில் எப்போதுமே வந்திராத ஒரு காட்சி அவள் வீட்டில் நடந்து கொண்டிருந்தது.

“கோயில்ல எங்கம்மைகிட்ட என்னமோ புரியாமப் பேசினியாம்..நல்லா நாடகம் போடத் தெரிஞ்சாச்சு” என்றபடி ஆவேசமாய் முன்வந்த தியாகுவைத் தள்ளியதில் அவன் அங்கேயே சொத்தென விழுந்தான். ஒரு பல்லி மட்டும் லேசாக அசைந்து கொடுத்தது. தியாகு தடுமாறி எழுந்து செல்லாவினை ஏசினான். அவனுடைய ஏச்சு அன்று மிதமிஞ்சிய சொற்களைக் கொண்டிருந்தன. அவை செல்லாவின் கோபத்தினை உக்கிரமாக மாற்றிக்கொண்டிருந்தன. “பெரிய ..இவ பெரிய..பெரிய” என்று வார்த்தைகளைத் தேடினான். கொட்டித் தீர்ந்து போன சொற்களை திரும்பவும் பேசிவிடக்கூடாது என்கிற கவனத்தை குடிபோதையிலும் அவன் கொண்டிருந்தான். “பெரிய…இவளாட்டி..நீ” என்று அவன் அன்றைய தினம் உதிர்த்திடாத ஒரு சொல்லைத் துழாவினான். அது அவனுக்குக் கிடைப்பதற்குள் செல்லா ஒரு விறகுக்கட்டையைத் தூக்கியிருந்தாள். முந்தைய நொடி வரை அவள் கொண்டிராத தீர்மானம் அது.

இருகைகளாலும் பலங்கொண்ட மட்டும் தூக்கி விறகுக்கட்டையை அவனை நோக்கி அடித்தாள். அவன் மிரண்டு பின்வாங்க, ஒற்றை அடியை தரை வாங்கிக்கொண்டது. சில்லு சில்லாய் மரத்துகள்கள் பறந்தன. தியாகு அவளையே வெறித்தான். மொத்த சொற்களையும் திருப்பிப் பெற்றுக்கொண்ட திகைப்பு அவன் கண்களில் தெரிந்தது. செல்லாவுக்கு மூச்சு வாங்கியது. அன்று அவளுக்கு ஒளிய இடம் தேவைப்படவில்லை. பல்லிகள் இரண்டும் தங்களின் இடத்திலேயே கூடின.

இது நடந்த பின் இரண்டு நாட்களும் செல்லாவை தியாகு கண்ணெடுத்தும் பார்க்கவில்லை. செல்லா அதன்பிறகு நான்கு மணிக்கே பூஜை அறைக்குள் நுழைந்தாள். அவள் திருமணமாகி வரும்போது தன்னோடு கொண்டு வந்திருந்த அப்பாவின் புத்தகங்களை வாசிக்கத் தொடங்கியிருந்தாள். வாசிக்க வாசிக்க அவளுக்குள் அர்த்தங்கள் துலக்கம் பெற்றன. உள்ளுக்குள் ஒவ்வொரு முறையும் நெருப்பொன்று கனன்று பொங்கியது.

“கொங்கை திரங்கி நரம்பெழுந்து

குண்டு கண் வெண்பற் குழிவாயிற்று “ என்று தொடங்கும்போதே அந்த வரிகளின் போதை அவளை உள்ளிழுத்தது. ஒரு பெண் தனது கணவரைக் காட்டிலும் பேயினை ரசித்திருக்கிறாள் என்பதே செல்லாவுக்கு ஆச்சரியம் தந்தது. மேல்பூச்சற்ற மனங்களுக்கான பாடல்களை புரிந்து கொண்டாள் செல்லா.

தாய் பேய் ஒருத்தி காளி என்று பெயர் வைத்து வளர்த்த தன் பிள்ளையை விட்டுச் சென்ற திருப்பதிகத்தை செல்லா ஒவ்வொரு முறையும் இரண்டு முறை வாசித்தாள். செல்லாவின் இந்தப் பக்திப் பெருக்கத்தை சாவித்திரியால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. தன் மகனுக்கு அழகியென்று பார்த்துக் கட்டி வைத்தது இப்படி கொண்டு விட்டுவிட்டதே என்று பதறினாள். குறிப்பிட்ட எல்லைக்குள் நின்று தொழுது கொள்ளும் பெண்களிடையே செல்லா காட்டும் இந்த தெய்வப்பரிவினைக் கண்டு அவள் அச்சம் கொண்டாள்.

செல்லா தான் அமர்ந்திருந்த இடுகாட்டினை அந்த இருளின் ஊடாகப் பார்த்த்படி சாய்ந்திருந்தாள். தான் கற்பனையில் கண்ட சுடுகாடு அல்ல அது என்பதே அவளுக்கு ஏமாற்றமாக  இருந்தது. தன்னைப் போலவே எவரிடமோ தப்பித்து முன்பொரு புனிதவதி இது போன்று சுடுகாட்டில் தஞ்சமடைந்திருக்க வேண்டும் என்று நினைத்தாள். அப்படி நினைக்கும்போது அவள் எதிரில் பசுபதி வந்து நின்றான். தள்ளி நின்று அவன் பார்த்த அவளது அசைவிலேயே ஒரு பெண்ணென கண்டுகொண்டான். செல்லாவின் அருகில் வந்தவன்,  “இங்கெல்லாம் கூடாது…கிளம்பு” என்றான். செல்லாவுக்கு புரியவில்லை. அவன் அவளை அதிராமல் எதிர்கொண்டதைக் கண்டு தான் அவள் ஆச்சரியப்படடுப் போனாள். “இன்னைக்கு மட்டும் இங்க இருந்துக்கட்டுமா?” என்றாள் பசுபதி முடியாது கிளம்பு முதல்ல என்றார். அவர் முகத்தில் மிகுந்த எரிச்சல் பற்றிக் கொண்டிருந்தது. “எவ்வளவு முழிச்சு காவல் காத்தாலும் உள்ள வந்துர்றீங்க?” என்றார். செல்லாவுக்கு தன்னைப் போலவே ஒளிந்து கொள்ள பெண்கள் வருவார்கள் என்பதாக நினைத்துக் கொண்டாள். “வேற யாரும் வருவாங்களோ?” என்றாள். அவர் எதற்கும் பதில் சொல்லாமல் அவளை அனுப்பவதிலேயே அவசரமாக இருந்தார்.

“எனக்கு இங்க பிடிச்சிருக்கு” என்றாள்.

“கிளம்பு”

“இங்க எரிக்கறதில்லையோ..அதான் இப்படி இருக்கு”

“பேசிட்டு இருக்காத..கிளம்பு”

பசுபதி அவளையே பார்த்தார். மண்டைக்கு விளங்காதவளிடம் மாட்டிக் கொண்டோமோ என்கிற அவஸ்தை அதில் தெரிந்தது.

“இங்க இருந்தா..பிறகு வாழ்க்கையில எதுவுமே நிரந்தரமில்லைன்னு தோணிரும்லா”

“அப்படியெல்லாம் தோணாது..நீ கிளம்பு”

“நான் இனி இங்க வரமாட்டேன்..எனக்கு இந்த இடம் பிடிக்கவேயில்ல..முதல்ல பிடிச்சா மாதிரி தான் இருந்தது. இனி வரமாட்டேன். நான் கிளம்பறேன்” என்றாள்.

பசுபதி பார்த்துக்கொண்டிருக்கவே, அவள் அங்கிருந்து கிளம்பினாள்.

 வீடடையும்போது தியாகு தூங்காமல் இருந்ததை அறிந்தாள். செல்லா தானாக கட்டிலில் அமர்ந்தாள். தியாகு அவளிடம் ஒன்றும் கேட்கவில்லை. செல்லா இனி தான் எங்கும் ஒளிவதில்லை என்றாள். தனக்கு தந்த அங்கீகாரமாக அதனை எடுத்துக் கொண்டு அவள் மேல் விழுந்தான். காடலையும் பேயினையும் எலும்பு உடையும் ஒலியையும் தனக்குள் உருவாக்கிக் கொண்டாள். முள்ளி தீந்து முளரி கருகிய வாசனை தொண்டை வரை அவளுள் கமறியது. அது அவளை கிளர்ச்சியுறச்செய்தது.  தியாகு சோர்ந்தான். “செத்த பிணத்தை தெளியாதொரு பேய்” என்றாள் தியாகுவிடம் ரகசியம் போல.

அவன் “ம்” என்று முணங்கித் திரும்பினான்.

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments