தெல்மா ஸ்கூன்மேக்கர்

0
14

தெல்மா ஸ்கூன்மேக்கர் ஒரு அற்புதம். இவரது எடிட்டிங்கில் முதன்முதலாகப் பார்த்த படம் Kundun.இந்தப் படத்தின் இயக்குநர் மார்ட்டின் ஸ்கார்ஸிஸி. இவரது இயக்கத்தில் நான் பார்த்த முதல் படமும் இது தான். மார்ட்டின் ஸ்கார்ஸிஸி பற்றித் தெரிந்து கொண்ட அளவுக்கு தெல்மாவைப் பற்றி எனக்குத் தெரிந்திருக்கவில்லை.  ஒரு தற்செயல் போல, ஸ்கார்ஸிஸியின் படங்கள் அனைத்துக்கும் ஒரே எடிட்டர் தான் பணி செய்கிறார் எனத் தெரிய வந்தபோது தெரிந்து கொண்ட பெயர் தான் தெல்மா ஸ்கூன்மேக்கர். அவர் பெண் என்றதும் ‘அப்படி போடு’ என்றிருந்தது.

இன்று ஹாலிவுட்டின் மிக மூத்த தொழில்நுட்பக் கலைஞராக இருக்கிறார் தெல்மா. இவர் தன்னை அப்டேட் செய்து கொண்டிருக்கும் விதம் சிறப்பானது. முதல் படத்தினை 1967ல் எடிட் செய்கிறார். 56 வருடங்கள் ஆகிவிட்டன. மார்ட்டின் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான Killers of the Flower moon படத்தில் தெல்மாவுக்கு டைட்டில் கார்ட் போடும்போது எழுந்து நின்று கைத்தட்ட வேண்டும் போலத் தோன்றியது. அதற்கு என்னிடம் நிறைய காரணங்கள் இருந்தன. தொடர்ந்து மார்ட்டினுடன் அவர் கொண்டிருக்கும் நட்பு, இப்போதும் மணிக்கணக்காக அவர் தனது வேலைக்குத் தருகிற கவனம், ஒரு ஸ்க்ரிப்ட்டுக்கு அவர் தருகிற முக்கியத்துவம், சளைக்காமல் ஒவ்வொரு படத்திற்கும் புதிது புதிதாக யோசித்து செயல்படும் திறன், ஒவ்வொரு ஃபிரேமையும் செதுக்கும் மனநிலை எல்லாவற்றுக்கும் மேலாக அவர்  தனது தொழிலில் காட்டும் ஈடுபாடு..

தெல்மாவுக்கும் சினிமாவுக்கும் கல்லூரி காலத்தில் எந்தத் தொடர்புமில்லை. இவரது பெற்றோர் அமெரிக்கர்கள், பிரான்சில் குடியிருந்தவர்கள். இரண்டாம் உலகப்போரில் பிரான்ஸ் வீழ்ச்சியடைந்ததும் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார்கள். தெல்மாவுக்கு அமெரிக்காவைப் பிடிக்கவில்லை. ஆனால் வேறு வழியுமில்லை. அவருக்கு அரசியல் பாடத்தினைக் கற்றுக்கொண்டு தூதரகத்தில் பணியாற்ற வேண்டும் என்கிற விருப்பம் இருந்தது. அது நடக்கவில்லை.

நாளிதழில் ஒரு செய்தியைப் பார்க்கிறார். நியூயார்கில் ஒரு எடிட்டருக்கு உதவியாளர் தேவை என்பது செய்தி. லாஸ் ஏஞ்சல்சில் இருந்து நியூயார்க் போவதற்கான ஒரு வாய்ப்பாக அதை எடுத்துக் கொண்டு அந்த எடிட்டரிடம் உதவியாளராக சேர்கிறார். அந்த எடிட்டரின் வேலை அங்குள்ள ஒரு தொலைகாட்சி சேனலுக்கு இரண்டரை மணி நேர படத்தினை இரண்டு மணி நேர படமாக எடிட் செய்து தர வேண்டும் என்பது. அங்கு வேலைக்கு சேர்ந்தபிறகு தெல்மாவுக்கு எடிட்டிங் பிடித்துப் போனது, ஆனால் வேலை பிடிக்கவில்லை. ஃபெலினி, விஸ்காண்டி என ஆளுமைகளின் படங்களை ஒருவர் சுருக்கி இரண்டு மணிநேரமாக மாற்றுகிறார் என்பதே அவருக்கு ஒவ்வாமையத் தந்திருந்தது. அதனால் அங்கிருந்து வெளியேறி நியூயார்க் பல்கலைகழகத்தில் எடிட்டின் பிரிவு மாணவியாக சேர்கிறார். அங்கு தான் அவருக்கு மார்ட்டின் ஸ்கார்ஸிஸி அறிமுகமாகிறார்.

மார்ட்டின் ஸ்கார்ஸிஸி அதே பல்கலையில் படித்துக் கொண்டிருக்கும்போது ஒரு குறும்படம் இயக்குகிறார். அந்தப் படத்துக்கு எடிட்டிங் செய்த ஒரு மாணவர் அதனை சோதனைக்களமாக்கி என்னென்னவோ வித்தைகள் செய்து கடைசியில் மார்ட்டின் நினைத்த படமாக இல்லாமல் வேறு ஒரு படமாகத் தருகிறார். பதட்டமடைந்த மார்ட்டின் தனது பேராசியரிடம் இதைச் சொல்லி வருத்தப்பட, அந்தப் பேராசிரியர் மார்ட்டினுக்கு தெல்மாவை அறிமுகம் செய்கிறார். தெல்மா அதனை மார்ட்டினின் படமாக எடிட்டிங்கில் உருவாக்கித் தருகிறார். அப்போது தொடங்கிய நட்பு 2023ல் வெளிவந்த “Killers of Flower Moon’வரைத் தொடர்கிறது. இனியும் தொடரும்.

தெல்மா மற்றும் மார்ட்டின்

மார்டின் காதலைக் காட்டவே காட்டாத படங்களை எடுத்திருக்கிறார் ஆனால் துப்பாக்கியும் இரத்தமும் இல்லாதப் படத்தினை எடுத்ததே இல்லை. அவருடைய படங்களில் உள்ள வன்முறைக் காட்சிகளைத் தொகுத்தாலே அதுவே இரண்டு மணி நேரங்கள் ஓடும். ஒவ்வொரு படங்களிலும் கதாபாத்திரங்கள்  விதவிதமாய்த் துப்பாக்கியைக் கையாள்வார்கள். கூட்டம் கூட்டமாய் சண்டை போடுவார்கள். இரத்தம் தெறிக்கும் காட்சி என்றால் என்னவென்பதை இவரது படங்களில் புரிந்து கொள்ளலாம். தெல்மாவுக்கு மார்ட்டின் காட்டுகிற வன்முறைக்கு முன்னும் பின்னுமான காட்சிகளும் உணர்வும் தெரியும். அதனால் எதனை எப்படிக் காட்ட வேண்டும் என்பதையும் அறிந்திருக்கிறார். தெல்மாவின் திறமைகளைச் சொல்கிற இடங்கள் இவை. Good Fellas படத்தின் வன்முறைக்காட்சிகளில் ஒரு நிதானம் இருக்கும், Irishman நொடிக்குள் நடந்துமுடிந்து  விடுகிற துப்பாக்கிச்சூடுகள்.

மார்ட்டின் படத்தின் கதைகள் வெவ்வேறானவையாக இருந்தாலும், சொல்லப்படும் விதம் பல நேரங்களில் ஒன்ரு போல இருப்பதைப் பார்க்கலாம். அது ‘மார்ட்டின் டச்’. ஒரு காட்சியின் முடிவில் எதிர்பாராத கொலை நடக்கும் என வைத்துக் கொள்ளலாம், அதற்கு ஒரு நொடிக்கு முன்பு வரை அப்படியொரு கொலை நடப்பதற்கான எந்த அறிகுறியும் இருக்காது. ஆனால், ஏதோ நடக்கப்போகிறது என்கிற அறிகுறி மட்டும் தெரியும். இந்தப் பாணியை தொடர்ந்து மார்ட்டின் பின்பற்றுகிறார். இதற்கு தெல்மா பழகியிருக்கிறார் என்பது தான் முக்கியம். சற்றுப் பிசகினாலும் காட்சியின் தன்மை மாறிவிடும் அபாயம் கொண்ட காட்சிகள் அவை.

மார்ட்டினுடன் வேலை செய்வதில் மட்டுமல்லாமல் எந்த இயக்குநரோடு பணி செய்தாலும் தெல்மாவால் இயக்குநரின் கனவுக்குள்ளும், கற்பனைக்குள்ளும், கதைக்குள்ளும் சென்று விட முடியும்.

தெல்மாவின் எடிட்டிங் முறையை பலரும் பின்பற்றி வருகிறார்கள். குறிப்பாக, ஒரு கதாபாத்திரத்தை அறிமுகம் செய்யும் காட்சிகளைச் சொல்லலாம். ஒரு சம்பவம் நடக்கும், அதை அப்படியே நிறுத்தி “என் பேர் ஜோ..நான் ஒரு கேங்ஸ்டர்” என்று சொல்கிற யுத்தி. இதனை தெல்மா எடிட் செய்யும் படங்களில் அதிகம் பார்க்கலாம். அதே போல தெல்மாவின் ஒரு விதி, நடிகர்களின் நடிப்புக்கு முக்கியத்துவம் தருவது, ஒரு குறிப்பிட்ட ஷாட்டில் நடிகர்கள் பேசி முடித்ததும், தங்களையறியாமல் அவர்கள் தரும் சில பாவனைகளை அவர் அப்படியே பயன்படுத்திக் கொள்வார். இது தெரிந்தே மார்ட்டின் தன்னுடைய நடிகர்களிடமிருந்து சிலவற்றை காட்சிகளில் கேட்டும் பெறுகிறார். இசை அறிந்தவர். பியானோ வாசிப்பதில் தேர்ந்தவர். ஒரு எடிட்டருக்கு இசை ஞானம் முக்கியம் என்பதை வலியுறுத்துபவர்.

தெல்மா

ஒரே காட்சியை எந்தெந்த விதத்தில் எடிட் செய்தால், எப்படியான விளைவுகளை ஏற்படுத்தும் எனத் தெரிந்தவர் தெல்மா. தெல்மா இதிலும் பரிசோதனை செய்கிறார். jump cuts செய்வது ஹாலிவுட் அகராதியில் விலக்கப்பட்ட ஒன்றாக இருந்தபோது அதை வைத்து ‘மேஜிக்’செய்தவர் இவர். வேண்டுமென்றே விதிமீறல்களை தனது எடிட்டிங்கில் கொண்டிருப்பார்.

ஐம்பத்தாறு வருடங்களில் அவர் எல்லா விதமான படங்களுக்கும் எடிட்டிங் செய்துள்ளார்.  கதை சொல்லும் படங்கள், சண்டைக்காட்சிகள், விஷுவல் எபெக்ட்ஸ் படங்கள் என எல்லாவற்றிலும் அவருக்கு அனுபவங்கள் உண்டு. இன்னும் அவர் புதிதான வரவுகளுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு படங்களின் திரையிடல்களுக்கும் நாடு நாடாக பயணிக்கிறார். ஒரு தூதுவராக அவர் நாடுகளுக்குப் பயணம் செய்யவேண்டும் என விரும்பியவர். அவருடைய பணி அவரை கடந்த ஐம்பது வருடங்களாக கலாசார தூதுவர்போல மாற்றியுள்ளது.

திரைப்படங்களுக்காகத் தரப்படுகிற உயரிய விருதுகள் அனைத்தும் இவர் வசம் உள்ளன. எடுத் முறை ஆஸ்கருக்கு பரிந்துரைக்கபட்டுள்ளார். மூன்று முறை ஆஸ்கர் வென்றுள்ளார்.

திரையரங்குக்குள் நாம் அமர்ந்த உடன் நம்மை வசப்படுத்தும் பொறுப்பினை இயக்குநருடன் சேர்ந்து எடிட்டரும் எடுத்துக் கொள்கிறார்கள் என்பார். எங்கே ஒரு பார்வையாளர் அதிர வேண்டும், சாய்ந்து அமரவேண்டும், சீட்டின் நுனிக்கு வரவேண்டும் என  ஒரு எடிட்டர் தீர்மானிக்க முடியும் என்பது தெல்மாவின் இத்தனை வருட அனுபவத்தின் மூலம் அவர் புரிந்து கொண்டது. அதனை ஒவ்வொரு படங்களிலும் செய்யவும் செய்கிறார்.

வயதைக் குறித்து அவரிடம் ஒவ்வொரு முறையும் கேள்வி எழுப்பப்படும்போது “அப்படியா..வயதாகிவிட்டதா!” என்பார் சிரித்தபடி.. இன்றைய தலைமுறையினர் என்ன செய்கிறார்கள் என இவர் கவனிக்க, இப்போதுள்ள எடிட்டர்கள் இவரைப் பின்பற்றுகிறார்கள்.. திரைப்படத்துறையில் இந்த வாய்ப்பு எந்தத் தொழில்நுட்பக் கலைஞருக்கும் அவ்வளவு எளிதாக கிடைத்துவிடாது..அதுவும் ஒரு பெண்ணுக்கு..தெல்மா அதனாலும் ஒரு அற்புதம்.

1 COMMENT

  1. ஆஹா. மிக அற்புதம். படிக்க படிக்க கண்முன்னே, ” ஜா.தீபா மேடம் மற்றும் B.R. விஜயலக்‌ஷ்மி மேடம் இருவரின் பணிகளும் படைப்புகளும் கண் முன்னே வந்து போகின்றன.

    ஒரு வேளை தெல்மா அவர்களை நான் சந்திக்க நேர்ந்தால், உங்களிருவரையும் சந்திக்க வைப்பேன். கூடவே சன் டிவி சுஜாதா மேடம் அவர்களையும். அவரும் எடிடிங் நன்கு அறிந்தவர் என ஒரு நிகழ்ச்சியொன்றில் சொல்லியிருக்கிறீர்கள்.

    தெல்மா அவர்களைப்பற்றி தெரியாதோர் பலருக்கும் தெரியவைத்தமைக்கு நன்றி. நிறைய விபரங்களை எழுத வந்து, அதனையும் ரத்தின சுருக்கமாக , திரைப்பட எடிட்டிங் போலவே , நச்சென எழுதிழுள்ள எழுத்துக்கோர்வை இடங்கள் அழகாக உள்ளன. நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here