கோட்சே ஆர்எஸ்எஸ் உறுப்பினரே தான். – உண்மை வரலாறு

0
8

75 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் டெல்லி பிர்லா ஹவுசில் ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தில்
காந்தி சுடப்பட்டு கொல்லப்பட்டார். ஒரு தேசத்தின் முகம் அவர். சூரியனின் நேரடி பார்வையில்
மக்கள் கூட்டத்திற்கு நடுவில் நிகழ்த்தப்பட்ட படுகொலை அது. எப்போதுமே இந்தியாவின்
தலைகுனிவாக அமைந்திருக்கிற மரணம்.


காந்தியின் படுகொலை இந்திய அரசியலிலும், சமூகத்திலும் அதிர்வலைகளைக் கடுமையாக
ஏற்படுத்தியது. ஒவ்வொரு இந்தியருக்கும் பதற்றமும் அச்சமும் தொற்றிக்கொண்டது. காந்தியை
சுட்டுக் கொன்ற நாதுராம் விநாயக் கோட்சே தூக்கிலடப்பட்டு இறந்து போனார். நாதுராம்
கோட்சேயின் பின்புலம் யாவரும் அறிந்ததே. அவருடைய கொள்கை , காந்தியைக் கொன்றதன்
காரணம் என யாவுமே சரித்திரத்தில் பதிவானவையே. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும்
அவற்றைப் பற்றி பேசும்படியாகியிருக்கிறது. வரலாற்றைத் தவறாக மாற்றியமைக்கும்போது
அதை சரிசெய்யும் எதிர்க்குரல் வலுவாக அமையத் தானே வேண்டும்!!

பாஜக அரசு ஆட்சிக்கு வந்தபிறகு கோட்சேவுக்கு புதுமுகம் கிடைத்திருக்கிறது. போராளியாகவும்,
தியாகியாவும், வழிகாட்டியாகவும் கோட்சே பொதுவெளியில் மாற்றப்படுகிறார். அவருக்கென
பக்தர்கள் கூட்டம் பெருகுகிறது. அதன் உச்சமாக அவருக்கென கோயில் கட்டும் பணியையும்
தொடங்கினார்கள். கோட்சே காந்தியைக் கொன்றதை நியாயப்படுத்தி, வீரச்செயலாக
கொண்டாடுபவர்களுக்கு பாஜக அரசு அரசியலிலும், அதிகாரத்திலும் முக்கியத்துவம் தருகிறது.
மற்றொருபுறம் காந்தியை படுகொலை செய்தபோது கோட்சே ஆர்எஸ்எஸ் உறுப்பினராக
இல்லை என்கிற செய்தியும் தொடர்ந்து அறிவுறுத்தபடுகிறது. இதனை வரலாற்று ஆய்வாளர்ளும்,
நடுநிலையாளர்களுமே ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். ஆனால் கோட்சே தனது வாழ்நாளின்
இறுதிவரை ஆர்எஸ்எஸ் உறுப்பினராகவே இருந்திருக்கிறார் என்று ஆதாரங்களுடன்
விவரிக்கிறார் வரலாற்று ஆய்வாளரும், எழுத்தாளருமான தீரேந்திர கே ஜா.

அவர் எழுதிய கட்டுரை The Caravan இதழில் வெளிவந்துள்ளது. மிக நீண்ட கட்டுரையான அதில்
கோட்சே குறித்தும் , இந்துத்துவ அமைப்புகள், காந்திக்கு எதிரான நிலைப்பாடு, அதன் பின்னணி
போன்ற தகவல்களை அதன் சரியான பின்னணியோடு விளக்குகிறார். இவை யாவும் கோட்சே
ஆர்எஸஎஸ் உறுப்பினராகவே இறுதி வரை இருந்திருக்கிறார் என்கிற புள்ளியில்
ஒன்றிணைகின்றன.

தீரேந்திர கே ஜா அரசியல் பத்திரிகையாளர், விமர்சகர். ஒவ்வொரு கட்டுரையையும்,
புத்தகங்களையும் மிக நீண்ட, ஆழமான தேடுதல் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையிலேயே
எழுதுகிறார். நாதுராம் கோட்சே காந்தியின் மரணத்தின்போது ஆர்எஸ்எஸ்சோடு தொடர்பு
கொண்டிருந்தார் என்பதை அவர் பலவாறு தரவுகள், ஆதாரங்கள் மூலமாக விரிவாக்கியதின்
சுருக்கமான வடிவமே இந்தக் கட்டுரை. இந்தக் கட்டுரைக்காக ஜா எட்டு மாத காலங்கள்
ஆய்வுக்காக செலவழித்திருக்கிறார்.

கோட்சேக்கும் ஆர்எஸ்எஸுக்குமான தொடர்பினை அவரது மரண காலத்தில் இருந்து எடுத்து
வைக்கிறார்.

நவம்பர் 15 1949. நாதுராம் விநாயக் கோட்சே தூக்கிலிடுவதற்கு முன்பு
சமஸ்கிருத ஸ்லோகத்தை சொல்கிறார்.
நான்கு வரிகள் கொண்ட அந்த ஸ்லோகம் ஆர்எஸ்எஸ் சின்
அதிகாரப்பூர்வமான பிரார்த்தனைப் பாடல். 1938ல் அவர் ஆர்எஸ்எஸ்ஐ விட்டு
விலகியதாக நம்பப்படுகிறது. ஆனால் இந்தப் பாடல் 1939ல் தான்
ஆர்எஸ்எஸின் பிரார்த்தனைப் பாடலானது.. அதன்பிறகு தான் ஆர்எஸ்எஸ்
தொண்டர்களிடையே இந்தப் பாடல் பரவியது. கோட்சேக்கு இந்தப்
பிரார்த்தனைப் பாடல் தெரிந்திருக்கிறது என்பதும் தூக்கிலிடுவதற்கு முன்பு
முக்கிய தருணத்தில் ஆவர் இதனைப் பாடியிருக்கிறார் என்பதும் அவர்
ஆர்எஸ்ஈஸ்சுடன் தொடர்பில் இருந்திருக்கிறார் என்பதற்கான ஒரு
ஆதாரமாக முன்வைக்கிறார் ஜா.

காந்தியின் மரணத்துக்குப் பிறகு ஆர்எஸ்எஸ் மற்றும் அனைத்து இந்துத்துவ
அமைப்பின் மீதும் தடை போடப்பட்டிருந்தது. அந்தத் தடையை நீக்கக்கோரி
இந்துத்துவ தலைவர்கள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டிருந்தனர்.
அதனால் கோட்சேவை தானகலு அமைப்பைச் சேர்ந்தவர் என்று
சொல்லிக்கொள்வதில் சிக்கல்கள் ஆர்எஸ்எஸுக்கு இருந்தன.
ஜா முன்வைக்கும் முக்கிய தரவு ஒன்று கோட்சேயின் வாக்குமூலம். மிக
முக்கியமாக சிறப்பு நீதிமனறத்தில் நவம்பர் மாதம் தந்த வாக்குமூலத்திற்கு
ஆறு மாதங்களுக்கு முன்பு மார்ச் 1948 அன்று கோட்சே தந்த
வாக்குமூலத்தை ஆய்வாளர்கள் கண்டுகொள்ளவில்லை. ஏனெனில் அவை
முழுவதும் மராத்தியில் இருந்தது. அந்த வாக்குமூலம் கிட்டத்தட்ட சுய
அறிமுக பத்திரமே. அதில் கோட்சே எங்கேயும் ஆர்எஸ்எஸிலிருந்து
விலகியைத் பற்றி சொல்லவில்லை. அதோடு மட்டுமல்லாமல் ஆர்எஸ்எஸ்
மற்றும் இந்து மகா சபை என இரண்டு அமைப்புகளிலும் ஒரே நேரத்தில்
சேவகம் செய்ததை உறுதி செய்துள்ளார். அந்த வாக்குமூலத்தின் 18, 19 ஆம்
பக்கங்களில் இதனை விளக்குகின்றன.

“திரும்பவும் நான் இந்து மகாசபையின் பணியை மேற்கொள்ளத்
தொடங்கினேன். அதே நேரம் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக்கிலும் இருந்தேன்”
என்று குறிப்பிட்டிருக்கிறார் கோட்சே.

அதே போல் ஜாவுக்குக் கிடைத்த மற்றொரு ஆவணமும் இதனை உறுதி
செய்கிறது. 11, மே 1940ன் ஆவணம் ஒன்று இப்படி சொல்கிறது. “N.V கோட்சே
, டெய்லர், பூனாவிலிருந்து கலந்து கொண்ட ஆர்எஸ்எஸ் பங்கேற்பாளர்”என்கிறது அந்த ஆவணம். இது இந்துத்துவ மாநாடு ஒன்றின்
பங்கேற்பாளர்களின் பதிவேட்டில் கிடைத்த ஆவணம்.


கோட்சே ஆர்எஸ்எஸ் உறுப்பினராகத் தான் இருந்தார் என்பதற்கான இந்த ஆவணம் காந்தி
மரணத்துக்குப் பிறகு நாக்பூரில் இருந்த ஆர்எஸ்எஸ் தலைமையகத்திலிருந்து அகற்றப்பட்டது.
அது தற்போது டெல்லி நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தில் காணக்கிடைக்கிறது.
ஆனால் நவம்பர் மாதம் கோட்சே கொடுத்த மற்றொரு வாக்குமூலத்தில்
ஆர்எஸ்எஸில் இருந்து தான் விலகியதாக கோட்சே குறிப்பிடுகிறார். இதுவே
சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் தான உள்ளது. வழக்கறிஞர்
சொன்னதைக் கேட்டு சிலரைத் தப்புவிப்பதற்காக இப்படி
சொல்லியிருக்கக்கூடும் என்கிற சந்தேகம் எழுகிறது.

150 பத்திகள் அடங்கிய தனது வாக்குமூலத்தை கோட்சே ஐந்து மணிநேரமாக
நீதிமன்றத்தில் வாசிக்கிறார். அவை முழுவதும் அவர் தயாரித்த வாக்குமூலம்
அல்ல, இதனை பின்னாளில் வழக்கறிஞர் P.L இனாம்தார் உறுதி செய்கிறார்.
இவர் இந்து மகாசாபாவால் குற்றவாளிக்காக வாதாடிய வழக்கறிஞர்
குழுவில் இருந்த ஒருவர். “நாதுராம் வழக்கில் பாம்பே வழக்கறிஞரான
ஜம்னாதாஸ் மேத்தா தான் வாக்குமூலத்தை தயார் செய்வதில் உதவியாக
இருந்தார் “ என்றார் இனாம்தார். விநாயக் தாமோதர் சவார்கரின் நெருங்கிய
நண்பர் ஜம்னாதாஸ் மேத்தா.

கோட்சே ஆர்எஸ்எஸ்-ஐ விட்டு விலகவில்லை என கோட்சேயின்
சகோதரரான கோபால் உட்பட அவரது குடும்பத்தினர் எப்போதுமே சொல்லி
வந்திருக்கின்றனர். 1994ல் ஃபிரண்ட்லைன் இதழுக்கு அளித்த நேர்காணலில்,
“அவரது வாக்குமூலத்தில், தான் ஆர்எஸ்எஸ் ஐ விட்டு விலகியதாக
சொல்லியிருக்கிறார். ஆனால் கோவால்கர் மற்றும் ஆர்எஸ்எஸ்
உறுப்பினர்கள் காந்தியின் மரணத்துக்குப் பிறகு கடும் சிக்கலுக்கு
ஆளாகியிருந்தனர். அதனாலேயே விலகியதாகச் சொன்னார். ஆனால் அவர்
ஆர்எஸ்எஸ்சை விட்டு விலகியதில்லை. எல்லா சகோதரர்களுமே
ஆர்எஸ்எஸ் ல் தான் இருந்தோம். நாதுராம், தத்தாத்ரேயா, நான், கோவிந்த்
என நாங்கள் எங்கள் வீட்டில் வளர்ந்ததை விட ஆர்எஸ்எஸ்ல் தான்
வளர்ந்தோம் என்றே சொல்லலாம். எங்களுக்கு அது குடும்பம் போன்றது”
என்று சொன்ன கோபால், ஆர்எஸ்எஸ் தன்னுடைய சேவகர்களை
கண்டுகொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
தீரேந்திர கே ஜாவின் சிறப்பென்பது அவர் வெறும் தரவுகளில் இருந்து மட்டும் நம்மிடையே
கருத்துகளை முவைப்பதில்லை. ஒரு சம்பவம் அல்லது ஒரு நபர் குறித்து எழுதுகிற போது அந்த

பின்னணி, உளவியல் போன்றவற்றையும் சேர்த்தே ஆராய்கிறார். எதுவும் ஒரே நாளில்
நடந்துவிடுவதில்லை எதற்குமே அதன் பின்னணியை ஆராய வேண்டும் என்கிற நோக்கில்
தீரேந்திர ஜா மேற்கொள்கிற ஆய்வுகள், வெறும் ஆய்வுக்கட்டுரையாக இல்லாமல்
வாசிப்பனுபவமாக மாறுகிறது.


இந்தக் கட்டுரையிலும் கூட நாதுராம் கோட்சேயின் சிறுவயது அனுபவங்கள் மூலம் அவர் எப்படி
இந்துத்துவ கொள்கையில் ஆழமான பிடிப்பு கொண்டார் என்பதாக விளக்குகிறார். நாதுராம்
தன்னை ஆண்மைமிக்கவராகக் காட்டிக் கொள்ளும் தேவை இருந்தது என்பதை அரசியல்
உளவியலாளரும், சமூஒக விமர்சகருமான ஆஷிஷ் நந்தி இது குறித்து எழுதிய ஒரு கட்டுரை
வழியாகவும் விளக்குகிறார் ஜா.


கோட்சேயின் பெற்றோருக்கு முதலில் பெண் குழந்தை பிறக்கிறது அதன் பின் அடுத்தடுத்து
மூன்று ஆண்குழந்தைகள் பிறந்து இறந்தும் போகிறார்கள். இதனால் ஆண் குழந்தைகள் மேல்
தங்கள் குடும்பத்துக்கு சாபம் இருப்பதாக நாதுராமின் பெற்றோர் நம்புகின்றனர். அடுத்து
நாதுராம் பிறக்கிறார். விதியை ஏமாற்ற முடிவெடுக்கின்றனர் அவரது பெற்றோர். நாதுராமினை
பெண் குழந்தை போல் வளர்க்கின்றனர். அவருக்கு மூக்கு குத்தி மூக்குத்தி அணிவிக்கன்றனர்.
இது அவர்களது குலதெய்வத்தை சாந்திபடுத்தும் என்று நம்புகின்றனர். அதனால் ராமச்சந்திரா
என்கிற அசல் பெயர் கொண்ட கோட்சே மூக்கு குத்தியதால் நாதுராம் என்றழைக்கப்படுகிறார்.
பெண் குழந்தைகளுக்கான உடையையே தருகிறார்கள். சிறுமிகளுடன் மட்டும் விளையாடுகிறார்
நாதுராம். பிறகு அடுத்து மூன்று ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் நாதுராமின்
பெற்றோருக்கு பிறக்கின்றனர்.


நாதுராமினால் தங்கள் குடும்பம் சாபம் நீங்கியதாக அவரது பெற்றோரும் நாதுராமும் நம்பத்
தொடங்குகின்றனர். நாதுராமுக்கு தனது குலதெய்வத்தின்’ மீதும், மந்திர தந்திரங்கள் மீதும்
பற்றுதல் ஏற்படுகிறது. தன்னிடம் தெய்வீக சக்தி இருப்பதாக நம்பத் தொடங்குகிறார். அவரது
சகோதரிக்கு ஏற்பட்ட நீண்ட நாள் உடல் பிரச்சனையில் இருந்து நாதுராம் தனது சக்தியின் மூலம்
சரி செய்ததாக நாதுராமின் சகோதரர் கோபால் தனது நினைவுக் குறிப்பில் எழுதியிருக்கிறார்.
சிறுவயதில் தனிமையையும் அனுபவித்திருக்கிறார் நாதுராம். பதினாறாவது வயதில் நாதுராம்
மந்திரங்கள் ஓதுவதை நிறுத்துகிறார். நண்பர்களுடன் நேரத்தை செலவு செய்ததில் மெட்ரிக்
தேர்வில் தோற்கிறார். அப்போது வருடம் 1929. இந்த நேரத்தில் இந்தியா குழப்பங்களின்
உச்சத்தில் இருந்தது. 1922ல் ஒத்துழையாமை இயக்கத்தால் ஏற்பட்டிருந்த சீர்குலைவில் இருந்து
இந்திய தேசிய காங்கிரஸ் மீளத் தொடங்கியிருந்தது. காந்தி அப்போது சுதந்திரப் போராட்டத்தின்
தலைவராக இருந்தார். கோட்சே அப்போது இருபதுகளின் தொடக்கத்தில் இருந்தார். மாறி வரும்
அரசியல் சூழலின் மேல் ஈர்ப்பும் கவனமும் கொண்டிருந்தார். தனது பகுதிகளில் நடைபெற்ற
காங்கிரஸ் கூட்டத்தில் தானும் கலந்து கொண்டு மேடையில் பேச்சாளராகவும் ஆனார்.
அங்கு தான் அவர் மேடைப் பேச்சைக் கற்றுக்கொண்டார்.


மார்ச் 1948ஆம் ஆண்டு கோட்சே அளித்த வாக்குமூலத்தில் முக்கிய அம்சம் என்பது விநாயக்
தாமோதர் சவார்கருடனான கோட்சேயின் தொடர்பு பற்றியது. சவார்கர் 1920களின்
பிற்பகுதியிலும், 1930களின் முற்பகுதியிலும் ரத்னகிரியில் உள்ள தனது வீட்டில் இருந்தபடி தனது
சீடர்களுக்கு இந்துத்துவ ஒற்றுமை குறித்து பிரசாரமும், செயல்பாடுகள் பற்றியும் கட்டளையிட்டுக்

கொண்டிருந்தார். அவர் நோக்கம் பிரிட்டிஷை எதிர்ப்பதாக இல்லை. ஆனால் இஸ்லாமிய
எதிர்ப்பாக இருந்தது. ஏனெனில் 1924 ஆம் வருடம் தான் அவர் பதினான்கு வருடங்கள்
அந்தமான் சிறையில் ஆயுள் தண்டனையை முடித்து கருணை மனுவின் அடிப்படையில்
வெளிவந்திருந்தார்.


1923ல் சிறையில் இருக்கையில் சவார்கர் Who is Hindu? என்கிற கட்டுரையை எழுகிறார். அதில்
தான் இந்தியா இந்துக்களின் தேசம் என்றும், இந்துக்கள் ஒரே இனம் ஒரே மொழியான
சமஸ்கிருதத்தைக் கொண்டவர்கள் என்றும் எழுதுகிறார். இந்துக்களுக்கான தனி தேசம் என்பதன்
முதல் தெளிவான வாக்குமூலமாக இருந்தது இது தான். பதினேழு வருடங்களுக்குப் பிறகு தான்
முகமது அலி ஜின்னா முஸ்லிம் லீக்கை தொடங்குகிறார். 1940களில் தான்
இஸ்லாமியர்களுக்கான தனி நாடு என்கிற கோரிக்கை எழுகிறது. 1925ல் சவார்கர் மற்றும் பிற
இந்துத் தலைவர்களின் எழுத்தால் ஈர்க்கப்படும் K.B ஹெட்ஜ்வார் , ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக்
(ஆர்எஸ்எஸ்) நிறுவி இந்து நாடு , கலாசாரம் போன்றவற்றிக் குறித்து பரப்புகிறார்.
முதன்முறை சவார்கர் கோட்சேயை 1930களில் சந்திக்கிறார். கோட்சே சுதந்திரப் போராட்டத்தில்
ஈடுபட்டது குறித்த எரிச்சல் சவார்கருக்கு இருந்திருக்கிறது. அதனை கோட்சேவிடம்
வெளிப்படுத்தவும் செய்கிறார்.


சவார்கருக்கு சித்பவன் பிராமணர்களிடையே செல்வாக்கு இருந்தது. இவர்கள் மராத்திய
ஆட்சியாளர்களான பெஷாவர் வழி வந்தவர்கள். பெஷாவர்கள் வழிவந்த நம்பகமான
ஒருவராகவே அந்த சமூகத்தினர் சவார்கரைப் பார்த்தனர். தன்னுடைய பக்தர்களை சவார்கர் இந்த
வழியாகவே விரிவாக்குகிறார். சித்பவன் பிராமண வகுப்பைச் சேர்ந்த கோட்சே தனது சமூகத்தின்
பெருமைமிகு அடையாளமான சவார்கரிடம் நெருங்குவதற்கு உற்சாகம் கொண்டிருந்தார்.
கோட்சேவுக்கு மற்ற இந்துக்களைக் காட்டிலும் தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம்
இருந்தது. மற்ற பிராமண சமூகத்தினர் வேத, மந்திர அந்தணர்களாக இருந்தனர். சித்பவன்
பிராமணர்கள் அரிதாக போர்முனையில் வீரர்களாக இருந்தனர். முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கு
எதிரான போரில் அவர்கள் அதிகம் ஈடுபட்டிருந்தனர். சித்பவன் வகுப்பை சேர்ந்தவர்களில்
பாலகங்காதர திலகர் போன்றவர்கள் வீரத்திற்கானவர்களாய் அங்கிகரிக்கப்பட்டவர்கள்.
இவர்கள் வழி வந்தவராய் சவார்கரை மற்றவர்கள் போல கோட்சேயும் நினைக்கத்
தொடங்கியிருந்தார். சவார்கர் எழுதிய புத்தகங்கள் கோட்சேவை வசீகரித்தன. அவரது கவனம்
சுதந்திரப் போராட்டத்தில் இருந்து இந்துத்துவத்தை நோக்கி திரும்பியது.


இதற்கிடையில் குடும்பம் வறுமைக்குள் செல்ல, வேறு வழியின்றி தையல் வேலையைத்
தொடங்கினார் நாதுராம் கோட்சே. அதில் வருமானம் வந்த பிறகு மீண்டும் தன்னை இந்துத்துவ
அமைப்புகளில் இணைத்துக் கொண்டார். ஆர்எஸ்எஸ் சேவகர்களுக்கு சீருடை தைத்துத் தருவது
போன்ற வேலைகளில் ஈடுபட்டார். தானும் ஆர்எஸ்எஸ் சீருடையையே எப்போதும் அணிந்து
கொண்டார். பின்னாட்களில் ஆவர் இந்து மகாசாபையின் அங்கத்தினராக இருக்கும்போது கூட
சீருடையை மாற்றினாலும் ஆர்எஸ்எஸ் தொப்பியை அவர் மாற்றவேயில்லை.


ஆர்எஸ்எஸ் ஒருபக்கம் வளர்ந்து கொண்டிருக்க, இந்து மகாசாபையின் செயல்பாடுகளும்
ஆர்எஸ்எஸ்சை ஒத்து இருந்தன. இரண்டு சங்கங்களுக்கும் இந்து நாடு என்பதே ஒரே
கொள்கையாக இருந்தது. கோட்சேக்கு இந்து மகாசபையின் தொடர்பு 1938ல் கிடைத்தது. இந்து
மகாசபை அப்போது ஹைதராபாத் நிஜாமுக்கு எதிரான கலகத்தில் ஈடுபட்டிருந்தது. அதனை

அவர்கள் சத்யாகிரகம் என்று அழைத்துக் கொண்டனர். ஹைதராபாத் பகுதிகளில் வாழும்
இந்துக்களுக்கு உரிமை வேண்டி இந்தப் போராட்டம் நடைபெற்றது என்றாலும், மைய
அரசியலை நோக்கி நகர்வதே அதன் நோக்கமாக அமைந்திருந்தது. கலகக்காரர்கள் சிறு
குழுக்களாக பிரிக்கப்பட்டிருந்தனர். ஒவ்வொரு குழுவுக்கும் தலைமையேற்றவர்கள் சர்வாதிகாரி
எனும் பொருள்பட ‘டிக்டேட்டர்’ என்று அழைக்கப்பட்டனர். ஒரு குழுவின் டிக்டேட்டராக
இருந்தார் கோட்சே. இந்து மகாசபையில் செயலாற்றிக் கொண்டிருக்கும்போதே ஆர்எஸ்எஸ்
எப்படி எதிர்காலத்தில் இந்து மகாசபை போல ஒழுங்குடன் செயல்பட வேண்டும் என
சவார்கருக்கு கோட்சே கடிதம் எழுதுகிறார். கலகம் காரணமாக சிறைக்கு செல்லும் கோட்சே
அங்கே இந்துமகாசபை உறுப்பினர்களிடையே ஆர்எஸ்எஸ் உறுதிமொழியையும், உடல்கல்வியும்
கற்றுத்தருகிறார். இதனை இந்து மகாசபையின் அப்போதைய பொதுச் செயலாளர் வி.ஜே
தேஸ்பாண்டே தன்னிடம் தெரிவித்ததாக ஆர்எஸ்எஸ் பிரசாரகர் தபன் கோஷ் The Gandhi
Murder Trial புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.


1940ல் இரண்டாம் உலகப்போரின் அச்சம் எங்கும் பரவியிருந்தது. எந்த அமைப்பும் தங்களது
உறுப்பினர்களுக்கு சீருடை போன்றவற்றை அனுமதிக்கக்கூடாது என்று அரசு தடை
செய்திருந்தது. ஒவ்வொரு இயக்கமும் கண்காணிப்புக்குள் இருந்தது. சில இடங்களில்
இயக்கங்களுக்கு தடையும் இருந்தது. கண்காணிப்பு, தடை போன்றவற்றின் காரணமாக
ஆர்எஸ்எஸ் தொண்டர்களிடையே சோர்வு ஏற்பட்டிருந்தது. இந்தியாவின் ஆட்சியை பிடிக்க
வேண்டும் என்பது போய், தற்போது இயக்கத்தை வீழாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டிய
நிலைக்கு ஆளானார்கள்.


இந்து மகா சபா தன்னுடைய அங்கமாக இந்து ராஷ்ட்ரிய தளத்தை உருவாக்கியது. இதில்
சவார்கருக்கு நெருக்கமாக இருந்தவர்கள் பதவிகளில் இருந்தார்கள். ஆர்எஸ்எஸ் இந்து ராஷ்ட்ரிய
தளத்துக்கு ஆதரவு தெரிவித்தது. கோட்சே இந்த இந்து ராஷ்ட்ரிய தள அமைப்பில் வேகமாக
முன்னேறினார். அவருக்கு செல்வாக்கு ஏற்படத் தொடங்கியது. இந்துத்துவ சங்கங்களும்
அமைப்புகளும் பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்ப்பதை செய்யவேயில்லை. கோவல்கரின்
சுயசரிதையை எழுதிய B.N பார்கவா இதற்கான காரணத்தை இப்படி சொல்கிறார், “மக்களை
ஒன்றுபடுத்தி வலிமையாக்குவது தான முக்கியமே தவிர போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில்
அமைதியாக இருப்பது அல்ல” என்பதாக அவர்களது முடிவு இருந்ததாக சொல்கிறார்.
கோட்சேவுக்கு இப்போது நாராயண ஆப்தே நண்பராகிறார். காந்தி கொலைக்காக நாதுராம்
கோட்சேயுடன் தூக்கிலடப்பட்டவர் இந்த நாராயண ஆப்தே.


ஆப்தேயும், கோட்சேவும் இணைந்து ‘அக்ரனி’ என்கிற பத்திரிகையைத் தொடங்குகின்றனர்.
அதில் காங்கிரசையும், அஹிம்சை முறையைக் கையாண்டதற்காகவும், முஸ்லிம்களுக்கு சமமான
உரிமை என்கிற கொள்கைக்காகவும் காந்தியை விமர்சித்து காட்டமாகக் கட்டுரை எழுதுகிறார்
கோட்சே. கோட்சேவுக்கு தான் வளர்ந்து வரும் ஒரு தலைவர் என்கிற எண்ணம்
ஏற்படத்தொடங்குகிறது. இந்தப் பத்திரிகைக்கு ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள், தொண்டர்கள்
நன்கொடை அளிக்கின்றனர். ‘அக்ரனி’ பத்திரிகை வன்முறையத் தூண்டுவதாக இருக்கிறதென்று
தடை செய்யப்படுகிறது. தடையை நீக்கக் கோரி அப்போதைய அமைச்சராக இருந்த மொரார்ஜி
தேசாயை கோட்சே சில முறை சந்திக்கிறார். இதனை The Story of my Life’ என்கிற தனது

சுயசரிதையில் தேசாய் குறிப்பிடுகிறார். அவர் கோட்சேயை இந்து மகாசபையின் உறுப்பினர்
என்று எங்கும் குறிப்பிடவில்லை, மாறாக ஆர்எஸ்எஸ் உறுப்பினர் என்றே சொல்கிறார்.
பிறகு ‘ஹிந்து ராஷ்டிரா’ என்கிற பத்திரிகையை தொடங்குகிறார் கோட்சே. ‘அக்ரனி’
பத்திரிகையின் அதே போன்றதான கருத்துகளை உள்ளடக்கிய பத்திரிகையாகவே ‘ஹிந்து
ராஷ்டிரா’ இருந்தது.


இந்திய பாகிஸ்தான் பிரிவின் போது பஞ்சாபிலும், வங்கத்திலும் ஏற்பட்ட வன்முறை மற்றும்
பூனா இந்துக்களிடையே அவர் ஏற்படுத்த நினைத்த மதரீதியான தூண்டுதல் தோல்வியடைந்தது
போன்றவை கோட்சேவை நிதானமிழக்கச் செய்தன. அதனால் சுதந்திரப் போராட்டத்தில் அவர்
கலந்து கொள்ளாமலே இருந்திருக்கிறார். அது போன்றதான் சமயத்தில் இந்து மகாசபையின்
உறுப்பினரான M.S தீக்ஷித்திடம் அவர் உரையாடியதை தீக்ஷித் தனது புத்தகமான Mi Ma Sriல்
பதிவு செய்திருக்கிறார்.


“பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த மராத்திய துறவி தியாநேஸ்வரர் ஏன் மரணத்தை விரும்பி
ஏற்றுக்கொண்டார் என்பது தெரியுமா?” என்று கேட்டிருக்கிறார் கோட்சே.

“தெரியாது”


“நான் சொல்கிறேன்..எத்தனையோ துன்பங்களுக்கு இடையிலும் அவர் கர்ம யோகத்தை
போதித்து வந்தார். ஆனால் மக்கள் அதற்கு செவிகொடுகவில்லை. இது அவரை
கோபப்படுத்தியது. அதனால் அவர் ஆழ்ந்த தியானத்தின் வழியாக சமாதி நிலையை
அடைந்துவிட்டார். ஒருவகையில் இது தற்கொலை தான். இதை நீங்கள் ஒத்துக்
கொள்கிறீர்களா?” என்று கேட்டிருக்கிறார்.

“இது அவ்வளவு பெரிய விஷயமா?”

அப்படியென்றால் விட்டுவிடுங்கள்”

தன்னைப்பற்றிய உயர்ந்த சிந்தனை கொண்ட ஒருவர் அது தளரும்போது
ஏற்படுகிற சுயபச்சாதாபத்தை கோட்சேயிடம் பார்த்ததாக தீக்ஷித் பதிவு
செய்கிறார்.

இந்திய பாகிஸ்தான் பிரிவினையால் பாதிக்கப்பட்ட மக்கள் காந்தி மரணமடைந்தால்
மகிழ்ச்சியடைவார்கள் என்றே கோட்சே கணித்திருந்தார். ஆனால் காந்தியின் மரணமென்பது
காந்தியை மாபெரும் அசைக்க முடியாத இடத்துக்கு கொண்டு செல்லும் என்பதை கோட்சே
எதிர்பார்த்திருக்கவில்லை.

வழக்கறிஞர் இமான்தார் தன்னுடைய நினைவுக்குறிப்பில் இப்படி எழுதுகிறார், “நீதிமன்றத்தில்
கோட்சே சவார்கரிடம் பேசவில்லை. இருவரும் அருகருகே அமர்ந்திருந்தாலும் கூட
ஒருவருக்கொருவர் திரும்பிக் கூட பார்த்துக் கொள்ளவில்லை. நாதுராம் மற்றும் மற்ற
குற்றவாளியுடந சதிச்செயலில் ஈடுபட்டதாக் வைக்கப்பட்ட குற்றச்சாட்டில் இருந்து தன்னைவிடுவித்துக் கொள்ள அவர் இப்படி நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கலாம்” என்று குறிப்பிட்டிருந்தார்.


காந்தியின் மரணம் என்பது இந்துத்துவ அமைப்புகளை களையிழக்க செய்தது. செயல்படாமல்
ஒடுக்க வைத்தது. சில மாதங்களிலேயே இந்து அமைப்புகளுக்கான தடை நீங்கியபோதும்
உடனடியாக அதிரடியாக எதுவும் சொல்ல முடியாத நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டார்கள்.
அதனால் தான் அவர்கள் தங்கள் இருப்பை மீண்டும் நிலைநிறுத்த வேண்டி அயோத்தியில் ராமர்
கோயில் வியாகாரதைக் கையிலெடுத்தனர் என தீரேந்திர கே ஜா தன்னுடைய ‘AYODHYA the
DARK NIGHT என்கிற தன்னுடைய மற்றொரு புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.


தீரேந்திர ஜாவின் இந்தக் கட்டுரை இன்றைய காலத்தில் எடுக்கப்பட்ட மாநேரும் முயற்சி.
சரித்திரத்தைத் திரிப்பது கொஞ்சம் எளிது தான். காந்தி படுகொலை செய்யப்பட்டு இறக்கவில்ல,
இயற்கை மரணத்தில் உயிரிழந்தார் என பள்ளிக் குழந்தைகளுக்கு போதிப்பதன் வழி வரலாறை
மாற்ற அரசு நினைக்கலாம். ஆனால் சரித்திரத்தின் உண்மை என்பது எவர் மூலமாகாவாவது
தொடர்ந்து தன்னை வெளிப்படுத்திக் கொண்டு தான் இருக்கும். அதன் வெளிப்பாடே இந்தக்
கட்டுரை.


இந்தக் கட்டுரை The Caravan இதழில் வெளிவந்தபோது சலசலப்பு எழுந்தது.
கவனிக்கப்பட்டது. கடந்த பாராளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது ராகுல் காந்தி,
கோட்சேயை ஆர்எஸ்எஸ் உறுபினர் என்றபோது அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது.
நீதிமன்றம் ராகுல் காந்தியை மன்னிப்பு கோரச்சொல்லிக் உத்தரவிட்டது. ராகுல் காந்தி அதற்கு
மறுத்ததால் வழக்கு இன்றும் நிலுவையில் உள்ளது. வரலாறை மாற்றிப் பேசுபவருக்கு கொடுக்க
வேண்டிய தண்டனையை உண்மையைப் பேசுபவருக்குத் தந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில்
வெளிவந்துள்ளதாலும் இந்தக் கட்டுரை மிக அவசியமானதாகிறது.

1 COMMENT

  1. மிக முக்கியமான கட்டுரை! மறுக்க முடியாத ஆவணங்கள் கொண்டு எழுதப்பட்டு உள்ளது. கேரவானில் தீரேந்திர கே ஜா எழுதிய இந்தக் கட்டுரை தமிழ் வாசகர்கள் அனைவரும் படிக்க வேண்டியதாகும். மிகுந்த சிரத்தையுடன் இந்த நீண்ட கட்டுரையை தமிழில் மொழி பெயர்த்து தந்துள்ளீர்கள். சிறப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here