உயிர்த்த ஞாயிறு

0
181

உயிர்த்த ஞாயிறு வாசித்ததில் இருந்து மனம் நிலை கொள்ளாமல் இருக்கிறது.
ஸர்மிளா அவர்களை பேஸ்புக் எழுத்துகள் வழியாகத் தெரியும். ஒரே ஒருமுறை புத்தகக் கண்காட்சியில் சந்தித்திருக்கிறோம். மெஸன்ஜரில் சொற்பமாய் உரையாடியிருக்கிறோம். அவ்வளவே தான். சிக்கலான பொழுதில் தன்னுடைய வாழ்க்கையைக் கடத்திய அனுபவங்களை உயிர்த்த ஞாயிறில் வெளிப்படுத்துகிற ஸர்மிளா இன்னும் காத்திரமானவராகத் தெரிகிறார். அவர் சந்தித்த சிக்கல்களும், மனப்போராட்டங்களும் அதிலிருந்து மீண்டதும் யாருக்கோ என்பது போல நினைத்து வாசிக்க இயலவில்லை.
ஒரு பெண்ணின் வாழ்க்கை அனுபவங்கள் என சுருக்கி விட முடியாத புத்தகம் இது. 2019 ஏப்ரல் மாதம் ஈஸ்டரின் போது கொழும்பில் வெடித்த குண்டுகள் ஏற்படுத்திய அரசியல் சமூக பொருளாதார மாற்றங்கள் கூர்மையாக வெளிப்பட்டிருக்கின்றன. அத்தனை தெளிவான விவரணைகள். அது மிகவும் அவசியமானதாகவும் உள்ளன.
பயங்கரவாதத்துக்கு மாற்றாக பயங்கரவாதத்தைக் கையில் எடுக்கும் விதத்தினை இத்தனை எளிதாக புரிய வைத்து விட முடியாது. ஸர்மிளா ‘மந்த்ரா’ என்கிற பெண்கள் மேம்பாட்டுக்கான நிறுவனத்தை நடத்தினார் என்பது அவரை அறிந்தவர்களுக்குத் தெரியும்.. அதனை தொடர்ந்து நடத்தவிடாதபடி செய்திருந்தது குண்டுவெடிப்பு பயங்கரவாதம். தனிப்பட்ட விதத்தில் எதிர்கொண்ட பிரச்சனைகள் என்றால் இந்தப் புத்தகத்திற்கு அவசியமே இருந்திருக்காது. இவருக்கு மட்டுமல்ல, இந்த சம்பவத்துக்கு பிறகு இலங்கை முழுவதும் வாழ்கிற இஸ்லாமியர்களுக்கு எதிரான மனோபாவம் வியாபித்து இருந்ததை பல தரவுகளோடும், நேரில் கண்ட அனுபவங்களோடும் விவரித்திருக்கிறார்.
இஸ்லாமியர் என்பதால் வீட்டு உரிமையாளர் தொடங்கி அரசியல் பிரமுகர் வரையிலும் ஏற்படுத்திய தடைகள் ஒருபுறம், இஸ்லாமுக்கு எதிரானவள் என்கிற வெறுப்பு மறுபுறமும் என இரண்டு கூர்முனை கத்தியையும் எதிர்கொண்ட விதத்தினை எந்த சுயபச்சாதபமும் இன்றி பதிவு செய்திருக்கிறார்..
‘எப்போதும் மரணத்துக்கான ஒரு ஆயுதம் உங்களை நோக்கி குறிவைத்தபடி இருக்கிறது, எச்சரிக்கையாக இருங்கள்’ என்று காவல்துறை அழைத்து சொல்லியாயிற்று..யதார்த்தமும் அது தான். வீட்டில் வயதான தாயாரும், இரண்டு சிறிய மகன்களும் இருக்கிறார்கள். அவர்களின் ஒரே பற்றுக்கோடு ஸர்மிளா மட்டுமே. பதற்றமும், தைரியமும், குழப்பமும், ஆலோசனைகளுமாய் அப்போது கடந்த நாட்களை சொல்கிறார். ஜன்னல் வழியே எப்போது வேண்டுமானாலும் தன் அம்மாவின் மீது குண்டு பாயக்கூடும் என்று மகன் எல்லா ஜன்னல்களையும் மூடியபடி அலைந்த நாட்கள்..
‘அம்மா இவர் நம்ம மந்திராவுக்கு வந்துருக்கார்’ என்று மகன் காட்டிய ஒரு புகைப்படம் ஊடகங்களில் ஈஸ்டர் குண்டு வெறிக்கு காரணமான பயங்கரவாதிகளுள் ஒருவர் என காட்டப்படுக் கொண்டிருந்தது. இரண்டு முறை இப்படி கொலைகாரர்கள் கண் இமை வரை வந்து சென்றிருக்கிறார்கள். ஒரே வாக்கியத்தில் ஒரு காவல் அதிகாரி சொல்கிறார் “உங்களுக்கு ஆயுசு கெட்டி..’
தொடர்ந்து அடுத்தடுத்து வந்த மிரட்டல்கள், அச்சுறுத்தல்களின் போதும் சுயமாய் அவர் தன் கருத்தினை பொதுத் தளங்களில் வெளிப்படுத்தியபடி தான் இருந்திருக்கிறார். இதைத் தன் கடமையாகவே பிரகடனம் செய்கிறார். மத வெறுப்பு பிரச்சாரத்தினை எப்படிஎல்லாம் மேற்கொள்ளலாம், மதத்தினை எப்படி அரசியலாக்கலாம், தங்களுக்கு ஏற்றபடி எப்படி வளைக்கலாம் என அதிகாரமும், அரசியலும், சமூகமும் நடந்து கொண்டதை தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது.
அவர் தன்னை ஒரு சூப்பர் வுமனாக காட்டிக்கொள்ள விரும்பவில்லை. தன் மனக்குழப்பங்களை , சோர்ந்ததை, சில தோல்விகளையும் சொல்கிறார். இத்தனை தூரம் அவரை தூக்கிக் கொண்டு வந்தது அவருடைய உம்மாவும், மகன்களான பதிர்யும், ஈத்தும். எந்த நேரமும் தங்களுக்காக இந்த ஜீவன் சரியான முடிவையே எடுக்கும்..என்று ஸர்மிளாவை அவர்கள் புரிந்து கொண்டதும் அதனை ஸர்மிளாவும் உள்வாங்கியதும் தான் தூரங்களைக் கடக்க வைத்திருக்கிறது.
குழந்தைக்கு முன்பாக ‘எல்லாம் சரியாகிவிட்டது’ என்ற போலி நம்பிக்கையைத் தரவேண்டியதில்லை, சொல்ல வேண்டியதெல்லாம் ‘எல்லாம் சரியாகும்..சேர்ந்து சரி செய்வோம்..’ என்பதே. அது தரும் வெளிச்சத்தைப் பற்றிப் பேசும் நிறைவு கொண்ட புத்தகமாகவும் இருக்கிறது.

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments