உண்மை எளிதன்று

0
8

ஆத்மார்த்தமான ஒரு படைப்பாளி தன்னுடைய படைப்புகள் மூலம் உரையாடவே விரும்புகிறார். குறிப்பாய் தான் உண்மை என்று நம்புகின்ற ஒன்றைப் பகிரவே தொடர்ந்து படைப்புலகத்துக்குள் தன்னை இருத்திக் கொள்கிறார். திரைப்பட இயக்குநர்களில் சிறந்தவர்கள் யாவருமே உண்மை பேச விழைபவர்களே. இந்த ஒரே காரணத்துக்காக பந்தாடப்படுபவர்களும் சொந்த அரசால் கைவிடப்பட்டவர்களும் உயிரினை விட்டவர்களும் கூட உண்டு.

ஒரு அற்புத உதாரணம் ஈரான் நாட்டின் இயக்குநர் ஜாஃபர் பனாஹி. அவர்களுடைய நாட்டில் பெண்கள் கால்பந்தாட்டதைப் பார்க்க தடை விதித்திருந்தது அரசு. ஆனால் அங்குள்ள இளம்பெண்கள் கால்பந்தாட்டத்தின் தீவிர வெறியர்கள். ஒரு பெண் கால்பந்தாட்டத்தை ஏன் பார்க்கக்கூடாது என்பதற்கு அரசு சொன்ன காரணங்கள் பல. அவற்றில் ஒன்று, ‘ஆண்கள் தொடையளவு உடை உடுத்திக் கொண்டு ஆடும் போது பெண்கள் அவர்களின் கால்களைப் பார்ப்பார்கள்’ என்பது. இது மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது. பனாஹி அந்தக் கோபத்தைப் படமாக்கினார். இறுதி வரை இப்படியொரு படம் எடுக்கப்போவதாக அவர் அரசு தணிக்கைக் குழுவிற்கு சொல்லவேயில்லை. படத்தைத் தனது அரசுக்கே தெரியாமல் உலகத் திரைப்பட விழாவிற்கு அனுப்பி வைத்தார். ‘Off Side’ என்கிற அந்தப் படத்தைப் பார்க்கும்போது அதில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அந்த அரசாங்கம் பதில் சொல்ல முடியாமல் தடுமாறியிருக்கும் என்பது புரியும்.

பனாஹி அதன்பின் திரைப்படம் இயக்கவே தடை செய்யப்பட்டிருந்தார். இன்றைக்கும் மனஉறுதிமிக்க இயக்குநர்கள் ஈரான் நாட்டிலிருந்து வெளிவந்தபடி இருக்கிறார்கள். மக்களின் தனிப்பட்ட வாழ்க்கைப் பிரச்சனைகளை கதையாக சொல்வதின் வழியாக அவர்கள் அரசாங்கத்தின் செயல்பாடுகளைத் தான் விமர்சிக்கிறார்கள்.

அரசாங்கங்கள் யாவும் திரைப்படத் தணிக்கையைத் தீவிரமாக தங்கள் வசம் வைத்திருப்பதன் முக்கியக் காரணம் திரைப்படங்கள் தங்களைக் கேள்வி கேட்கக்கூடாது என்பதற்காகத் தான். இரண்டு மணிநேரம் வேறெந்த கவனமும் இல்லாமல் ஒருவர் ஆழ்ந்து திரைப்படத்தை உள்வாங்கும்போது அதில் சொல்லப்படுகிறவற்றின் வீரியம் உள்ளிறங்கும். அதனாலேயே சில நாடுகள் திரைப்படங்களைத் தங்களது பிரச்சார உத்திக்கு பயன்படுத்துகிறார்கள். தங்கள் நாடு மற்றவரின் பார்வைக்கு எப்படிக் காட்டப்பட வேண்டும் என்பதைத் தணிக்கை மூலமாக அரசு தான் முடிவு செய்கிறது. இதற்கெல்லாம் எதிராக சளைக்காமல் போராடி மக்களை பாதிக்கிற எந்தவொன்றையும் திரைப்படத்தின் மூலமாகக் காட்டிவிடுகிற படைப்பாளிகளின் எண்ணிக்கையும் சாமானியம் அல்ல.

கதை சொல்லும் திறன், காட்சியை உருவாக்கிய விதம் என்கிற பல சிறப்பம்சங்கள் சிறந்த இயக்குநர்களுக்கான தகுதிகளாக இருந்தாலும் கூட இவர்கள் அனைவருக்குமே உள்ள பொதுப் பண்பு அவர்களின் மனதைரியம் தான்.

ஹிட்லரைக் கண்டு உலகமே ஒதுங்கிக் கொண்டிருந்த வேளையில் அவரை மையக் கதாபாத்திரமாகக் கொண்டு பகடி செய்து ஒரு படத்தை வெளியிடும் மன தைரியம் சார்லி சாப்ளினுக்கு இருந்தது.

‘The Great Dictator’ என்கிற அந்தப் படத்தை இரண்டு முறை ஹிட்லர் பார்த்தார் என்கிறார்கள். அதில் ஒரு காட்சி வரும். உலக உருண்டையை பலூன் போல தூக்கிப் போட்டு மகிழ்ச்சியாக் விளையாடிக் கொண்டிருப்பார் படத்தில் ஹிட்லரை நினைவுபடுத்தும் வேடத்தில் நடித்திருந்த சாப்ளின். அந்த விளையாட்டின் போது அவர் முகத்தில் பெருமையும், கர்வமும், பேராசையும் மினுங்கும். சில நிமிடங்களாக விளையாட்டு விரிந்து கொண்டே போகும். உலக உருண்டையை கையில் வைத்து ஆசையாய்ப் பார்க்கையில் எதிர்பாராத கணத்தில் பலூன் சட்டென்று உடைந்து போய் விடும். நிராசையாகவும், நம்பமுடியாமலும் அதையே வெறிப்பார் சர்வாதிகாரி. இந்தக் காட்சி நிச்சயம் படம்பார்க்கும்போது ஹிட்லரை பாதித்திருக்கக்கூடும். ஏனெனில் இதற்கு ஹிட்லர் தன்னை மீறி கண்கலங்கியதாக செய்திகள் உண்டு.

ஒரு திரைப்படம் மூலமாக தேர்ந்த ஒரு படைப்பாளரால் எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்தி விடமுடியும் என்பதற்கான மற்றுமொரு  உதாரணம் ‘Hotel Rwanda’.

2004ஆம் ஆண்டு வெளிவந்தது. பார்வையாளர்களை நெகிழ வைக்கக்கூடிய படம்.  1994ஆம் ஆண்டு ருவாண்டாவில் ஹூட்டு மற்றும் டூட்சி இனத்தவர்களிடையே உள்நாட்டுப் போர் நடந்தது. இதில் ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்ட டூட்சி இனத்தினர் படுகொலையானார்கள். அந்த சமயத்தில் ருவாண்டாவில் தங்கும் விடுதி ஒன்றில் ஆயிரத்து இருநூறு பயணிகளைத் தன் உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய விடுதியின் மேலாளர் பால் ருசெசாபெகினாவின் கதை இது. இந்தப் படம் பால் ருசெசாபெகினாவிற்கு மக்களிடம் பெரும் செல்வாக்கைப் பெற்றுத் தந்தது. பல நாடுகள்  அமைதிக்கான விருதுகளை பால் ருசெசாபெகினாவிற்கு  அளித்து கௌரவபடுத்தியது. உலகம் முழுவதும் சமாதான தூதுவராக வலம் வருகிறார் பால் ருசெசாபெகினா. இந்த கௌரவங்களும், அங்கீகாரமும் ‘Hotel Rwanda’ படத்தின் மூலமாகவே பால் ருசெசாபெகினாவிற்கு கிடைத்தது.

ஆனால் ஒரு திரைப்படத்தை மட்டும் வைத்துக் கொண்டு அதன் பின்னணியில் இருக்கிற உண்மைச் சம்பவங்களைக் கண்டுகொள்ளாமல் தனது தகுதிக்கு மீறி அவர் கொண்டாடப்படுகிறார் என்கிற குற்றச்சாட்டுகளும் எழுகின்றன. அந்தப் படம் காட்சி சுவாரஸ்யத்துக்காக சில சம்பவகங்களை சேர்த்துக் கொண்டது என்றும் கனிவானவராக சித்தரிக்கப்பட்டுள்ள பால்  வாடிக்கையாளர்களிடம் கறார்த்தன்மையுடன் நடந்து கொள்பவர் தான் எனவும் பலரும் தங்களின் அனுபவங்களின் மூலம் முன்வைத்தனர்.

எந்த நேரம் என்ன நடக்குமோ என்றுதான் வடகொரியாவையேப் பார்த்துக் கொண்டிருக்கின்றன உலக நாடுகள். ‘என்ன செஞ்சா இவரை வழிக்குக் கொண்டு வரலாம்’ என்று உலகத் தலைவர்கள் கூடிப் பேசுமளவுக்கு பயம் காட்டிக் கொண்டிருக்கும் ஒருவரை அசைத்துப் பார்த்தது ஒரு படம்.

அந்த நாட்டையே ஒரு இருட்டறைக்குள் வைத்து பூட்டி சாவியைத் தன் வசம் வைத்திருக்கும் அதன் ஜனாதிபதி கிம் ஜாங் உன் பற்றிய ஹாலிவுட் திரைப்படம் ‘The Interview’. ரோகன் சேத் என்பவர் இயக்கியது. இந்தப் படம் கிம் ஜாங் உன்னை பகடி செய்வதற்காகவே உருவாக்கப்பட்டது.

‘The Interview’ எப்படியும் வட கொரியத் திரையரங்குகளில் திரையிடப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் அங்கே படத்தை பலர் பார்த்திருந்தனர். வட கொரிய மக்களிடம் ‘The Interview’ படம் சேர்ந்தததற்கு பின்னணியாக நடைபெற்ற சம்பவம் ஆர்வமூட்டக்கூடியது.

இந்தப் படத்தின் குறுந்தகடுகளை தென்கொரியாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் வாங்கி அதை ராட்சச பலூன்களுக்குள் வைத்து வடகொரியாவின் எல்லைப் பகுதியில் பறக்க விட்டார். வட கொரியாவின் ராணுவம் அந்த பலூன்களை சுட்டு வீழ்த்தியது. பலூன்கள் வெடித்து குறுந்தகடுகள் வடகொரியாவுக்குள் சிதறின. எஞ்சிய குறுந்தகடுகள் பரவலாகி அங்கு மக்கள் மத்தியில் ரகசிய செல்வாக்கைப் பெற்றுவிட்டன. அந்தப் படம் கிம் ஜாங் உன்னை கடவுளாகக் காட்டும் பிம்பத்தை உடைத்து சாதாரண மனிதனாக காட்டியது. ஆபாசமான, கீழ்த்தரமான நகைச்சுவைக் காட்சிகளும் படத்தில் உண்டு என்றாலும் மரண பயத்தில் அழுகிற கிம் ஜான் உன்னை காட்டியதில் உள்ள உண்மைத் தன்மை தனக்கு பிடித்திருந்ததாலேயே அதனை மக்களிடையே பரப்பியதாக சொன்னார் தென் கொரிய சமூக ஆர்வலர்.  கிம் ஜாங் உன் அந்தப் படத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தாக வேண்டிய நிலை வந்தது. கிம் ஜாங் உன் அறிக்கை ஒன்றைத் தயார் செய்தார். அந்த அறிக்கை அங்குள்ள பள்ளிகளில் ஆசிரியர்களால் மாணவர்களுக்கு வாசித்துக் காட்டப்பட்டது.

ஒரு சர்வாதிகாரி ஒரு திரைப்படத்திற்காக ஏன் அச்சம் கொள்ள வேண்டும் என்கிற கேள்விக்கு விடை எல்லோரையும் விட கிம் ஜான் உன்னுக்குத் தெரியும். கிம் ஜான் உன்னின் அப்பா கிம் ஜான் இல் ஜனாபதியாக இருந்த காலத்தில் தனது கொள்கைகளைப் பரப்புகிற ஒரு ஊடகமாக திரைப்படங்களையே பெரிதும் நம்பியிருந்தார். ‘Nation and Destiny’ என்கிற ஒரு திரைப்படத்தை தானே தயாரித்து அந்தப் படத்தைத் தொடர்ந்து ஒன்பது வருடங்கள் நாளுக்கு இரண்டு முறை திரையரங்குகளில் திரையிட உத்தரவிட்டார். வட கொரியாவை விட்டு வேறு தேசத்திற்கு குறிப்பாக தென் கொரியாவுக்கு செல்லுகிறவர்களின் நிலைமை எப்படி மோசமடையும் என்பதை விளக்கும் திரைப்படமாக இருந்தது அது. தன்னுடைய ஆட்சிக் காலத்தில் வட கொரியப் படங்களை அவர் எல்லை தாண்டவிடவில்லை.

அவருடைய மகனான கிம் ஜாங் உன்னும் திரைப்படத்துறையைத் தன் வசமே வைத்திருக்கிறார். கிம் ஜாங் உன் தனது நாட்டின் திரைப்படங்கள் எந்த உண்மையைப் பேச வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார். இந்தப் பின்னணியில் தான் ‘the interview’ படம் மக்களிடம் செல்வாக்கு பெறுவதை அவர் வெறுத்திருந்தார்.

ஈரான், வடகொரியா போன்ற நாடுகளிலாவது அரசாங்கம் திரைப்படங்களுக்கு நேரடி கட்டுபாட்டினை விதிக்கிறது. அதனால் எதையும் வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ காட்ட முடியாது. ஆனால் தமிழ்நாட்டிலோ திரைப்படத்துறை அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வருவதில்லை. ஆனால் இங்கும் எதையும் வெளிப்படையாக விமர்சனம் செய்ய முடிவதில்லை. நடந்த உண்மைச் சம்பவங்களை அப்படியே படமாய்க் காட்டி விடுவதில் சிக்கல்கள் உண்டு. இத்தனைக்கும் தமிழகத்தில் எடுத்தாள வேண்டிய உண்மைக்கதைகள் அதிகமுண்டு.

நம்மிடையே இருக்கும் துயரங்களும், வரலாறுகளும் , போராட்டங்களும் சொற்களில் அடங்காதவை. ஆனால் எது படைப்பாளர்களை அதை நோக்கி தள்ளாமல் இருக்கின்றது? இதற்கு படைப்பாளிகளை மட்டுமே குறை சொல்லி விட முடியமா? ஜாதி, மதம், அரசியல், போலி வரலாற்றுத் திணிப்பு, நடிகர்களின் பிம்ப அரசியல் என பலவற்றையும் ஒரு இயக்குநர் யோசித்தாக வேண்டியிருக்கிறது. படத்தைப் பார்ப்பதற்கு முன்பாகவே தடை கோரும் விசித்திரத்தை தயாரிப்பாளர்களும் விரும்புவதில்லை.

திரைப்படம் என்பது கலை என்றும், சக்திவாய்ந்த ஊடகம் என்பதையும்  தமிழ் திரைப்பட படைப்பாளர்களில் சிலர் மட்டும் நினைவு கொண்டிருக்கிறார்கள். மற்றவர்களுக்கு இது வாழ்க்கையைப் பணயம் வைத்து மேற்கொள்கிற தொழில். சமகாலத்து அரசியலை, சமூகப் பிரச்சனையை ஒரு நடிகர் ஓரிரு காட்சியில் திரையில் பார்வையாளர்களை நோக்கி ஆவேசமாகப் பேசலாம். இந்தளவே போதும். இதையே அந்த நடிகரின் துணிச்சலாக நாம் பாராட்டிக் கொள்வோம். அந்தக் காட்சியின் தாக்கம் மறைவதற்குள் ஒரு காதல் பாட்டும் வந்துவிட்டால் படம் வணிகரீதியான வெற்றிக்கு தயாராகிவிட்டது என்பதாக எடுத்துக் கொள்ளலாம். ஒருபுறத்தில் ரசிகர்களும் அதையே விரும்புகிறார்கள். காலையில் செய்தித்தாள்கள் படிக்கிறபோது ஏற்படுகிற சமூக உணர்ச்சியை அடுத்த நிமிடத்தில் மறக்கச் செய்கிற நமது அன்றாட வாழ்க்கைமுறைகளைப் போலத் தான் பெரும்பாலான தமிழ்த் திரைப்படங்களின் உண்மையைச் சொல்லும் அக்கறையும்.

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கடந்த இருபது ஆண்டுகளாய் ஒரு பழக்கம் தொற்றிக் கொண்டுள்ளது. சின்னச்சிறிய கிராமங்கள் தங்களின் ஜாதி அடையாளத்தை ஊரின் முகப்பிலேயே காட்டிவிடுவது பல கால வழக்கம் தான் என்றாலும் இப்போதைய நவீன வடிவமாய் அதற்கான முகமாய் நடிகர்களை வரித்துக் கொண்டிருக்கின்றனர். ஊரின் நுழைவாயிலில் சாதித் தலைவர்களின் சிலைக்கு அருகிலேயே அவர்கள் சாதியைச் சேர்ந்த நடிகர்களின் படம் வரையப்பட்டிருக்கிறது.

இதுபோன்று ஜாதிக்குள் தன்னை நுழைப்பதை விரும்பாத தமிழகத்தின் நடிகர் ஒருவர் தான் அந்தக் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர் இல்லை என்று சொல்லிப் பார்த்தார். ஆனால் இன்றும் அவரது படங்கள் சாதி சார்ந்த சுவரொட்டிகளில் ஓட்டப்பட்டுத் தான் வருகின்றன. முன்னெப்போதும் இல்லாத அளவில் சாதி சார்ந்த பிம்ப அரசியல் ரசிகர் மத்தியில் தீவிரமாய் உள்ளிறங்கிவிட்டது. இந்தக் கதாநாயகர்கள் திரைப்படங்களில் ‘மரணிப்பதை’யோ தோல்வியுறுவதையோ அவரைத் தொழுபவர்கள் விரும்புவதில்லை.

ஒரு பேச்சுக்கு எடுத்துக் கொள்ளலாம். சமகாலத்து பிரபல நடிகர் ஒருவர் மகாத்மா காந்தியாக நடிக்க முன்வருகிறார் என்றால் காந்தி சுடப்பட்டு இறந்து போனார் என்கிற வரலாறைக் கூட நாம் மாற்ற வேண்டியிருக்கும். தோட்டாவினைக் கையில் பிடித்துத் தூக்கி எறிந்தார் என்பதாகத் தான் காட்டியாக வேண்டும்.

அரசியலில் நடைபெறும் சம்பவங்களை ‘மீம்ஸ்’களாக மாற்றி பகடி செய்ய முடியும். ஆனால் ஒருபோதும் திரைப்படத்தில் அப்படியே காட்டிவிட முடியாது. இதுவரை தமிழ்த் திரைப்படங்களில் முதலமைச்சர் கதாபாத்திரங்கள் பல வந்திருக்கின்றன. வந்த படங்களில் பெரும்பாலானவை அந்த முதல்வர் கதாபாத்திர வடிவமைப்பை எப்படிக் காட்டியிருக்கின்றன?  ஊழலற்ற, மக்களின் நலனை விரும்பிகிற ஒருவர் போலவும் அவரது அமைச்சர்கள் தான் தவறுகளை செய்பவர்கள் என்பது போலத்தான் காட்டப்பட்டு வருகின்றன. (‘முதல்வன்’ போன்ற படங்கள் விதிவிலக்கு). ஏனெனில் தமிழகத்தின் முதலமைச்சர் பொறுப்பில் உள்ளவரை சுட்டிக்காட்டிவிடுமோ என்பதால் ஏற்படுகிற அச்சமே காரணம்.

புனிதம், நேர்மை, ஆளுமை போன்றவற்றிக்கு நமக்கு விளக்கங்களை விட பிம்பங்களே எடுத்துக்காட்டாய்க் காட்டப்படுகின்றன. அதில் ஒரு துளி சேதாரம் ஏற்பட்டாலும் அதனால் ஆதாயம் அடைபவர்களால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. யார் மனதையும் புண்படுத்தாமல் படைப்புகளில் கருத்து சொல்ல வேண்டும் என்பது தான் இங்கு எதிர்ப்பாளர்களின் எண்ணமாக இருக்கிறது. இது வலது கை கொடுப்பதை இடது கை பிடுங்கிக் கொள்வதைப் போன்றது. ஜனநாயகத்தில் கருத்துரிமை என்பது குரல்வளைப் நெரிக்கப்பட்டது போன்றதாகத் தான் அமைந்திருக்கிறது. அதிலிருந்தும் அபூர்வமாய் வெளிப்பட்டு விடுகிற சொற்ப ஒலிக்குத் தான் கிடைக்கின்றன கூச்சல்களும் , மிரட்டல்களும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here