அண்ணல் அம்பேத்கர் முன்னுரைகள்

0
8

கடந்த ஏப்ரல் மாதம் The Caravan இதழ் திரு.அம்பேத்கர் குறித்து ஒரு நீண்ட ஆய்வுக்கட்டுரை வெளியிட்டிருந்தது. அம்பேத்கரின் எழுத்துகள் குறித்த கட்டுரை அது. இப்படி சொல்வதைக் காட்டிலும் இன்று அவர் எழுத்துகளை நாம் வாசிப்பதற்கு முன்பாக அவரும் அவர் எழுத்துகளும் பட்ட சிரமங்களைச் சொல்கிற கட்டுரை என்று கூறவேண்டும்.

அந்தக் கட்டுரையில் அம்பேத்கர் தனது நூலகத்தை பராமரித்த விதம் பற்றியும், ஒரு நாளைக்கு வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் செலவழிக்கும் நேரமும், மெய்ப்புத் திருத்தத்துக்கு எடுத்துக் கொள்ளும் சிரமத்தையும் குறித்து விரிவாக எழுதியிருக்கிறார்கள்.

ஒவ்வொரு புத்தகத்தையும் அவர் எழுதியதை விட பதிப்பிக்க மேற்கொண்ட முயற்சிகளும் தோல்விகளும் வாசிக்கையில் என்னை வெகுவாக பாதித்தன. அந்தக் கட்டுரையை மொழிபெயர்க்க வேண்டும் என்று பாதி கடல் தாண்டியிருக்கிறேன்.

‘புத்தமும் தம்மமும்’ புத்தகத்தைப் பதிப்பிக்க அவருக்கு 20000 ரூபாய் தேவைப்பட்டிருக்கிறது. பல்வேறு இடங்களில் கேட்டும் கிடைக்கவில்லை. அப்படிக் கிடைத்த தொகையும் சொற்பம். 1956ஆம் ஆண்டு திரு.ஜவகர்லால் நேரு தலைமையிலான இந்திய அரசு 2500ஆம் ஆண்டு புத்த பூர்ணிமாவை விமரிசையாகக் கொண்டாட முயற்சி எடுக்கிறது. நேருவுக்கு அம்பேத்கர் கடிதம் எழுதுகிறார்.”புத்தமும் தம்மமும்” புத்தகத்தை பதிப்பிக்க சரியான தருணம் இது என்கிறார். பதில் வருகிறது. “புத்த பூர்ணிமாவுக்காக ஒதுக்கிய பட்ஜெட் தீர்ந்துவிட்டது. அரசாங்கத்தால் பதிப்பிக்க முடியாது” என்று.

அம்பேத்கர் மறைந்த டிசம்பர் ஆறாம் தேதிக்கு முந்தைய நாள் நடுஇரவு வரை அவர் எழுத்துப் பணியில் இருந்திருக்கிறார். தன்னுடைய புத்தகங்கள் என்றேனும் எவருக்கேனும் அல்லது அனைவருக்கும் பயன்படும் என்பதில் அவர் உறுதியாக இருந்த காரணத்தினாலேயே தொடர்ந்து பதிப்பிக்க பணம் இல்லாதபோதும் தோல்விகள் ஏற்பட்ட போதிலும் எழுதுவதின் மேல் கொண்ட பிடிமானத்தை அவர் விடவில்லை.

அவர் மறைந்த பின்பு பதிப்பிக்க வேண்டி காத்திருந்த எழுதப்பட்ட காகிதங்களின் கதி என்னவாயிற்று என்பதை அந்தக் கட்டுரை சொல்கிறது.

இந்தக் கட்டுரை என்னை வெகுவாக பாதித்திருந்தது. அப்போது கிடைத்த புத்தகம் தான் அண்ணல் அம்பேத்கர் முன்னுரைகள். வாசுகி பாஸ்கர் அவர்கள் தொகுத்திருக்கிறார்.

முதல் கட்டுரையே ‘புத்தமும் தம்மமும்’ புத்தகத்துக்காக எழுதிய முன்னுரை தான்..

ஒவ்வொரு கட்டுரையுமே அதி முக்கியமானது. ஒருவர் தன வாழ்நாளில் தேடித் தேடி வாசித்து அதை கேள்விகளாக்கி, பிறகு கேள்விகளில் இருந்து தேடத் தொடங்கி அதை அனைவரும் பகுத்தறிய வேண்டும் என்று எழுதிக் குவித்தவைகளின் முன்னுரைகள்.

இதனை வாசிக்கையில் ஒவ்வொரு புத்தகங்களையும் அவர் எழுதுவதற்கு முன்பு அது சார்ந்து அவர் கற்ற , வாசித்த அறிஞர்கள், புராணங்கள், சூத்திரங்கள், உபநிடதங்கள், பாஷ்யங்கள், தத்துவங்கள் பற்றி இயல்பாக சொல்கிறார். அந்தத் தேடலும் உழைப்பும் நமக்கு பிரமிப்பினை ஏற்படுத்துகிறது.

ஒரு பதிவாக இதை எழுதுவது என்பது அறிமுகம் மட்டுமே. சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் அதி முக்கியமான புத்தகம்.

தொகுப்பு : வாசுகி பாஸ்கர்

பதிப்பகம் : நீலம்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here