பாடகர் டி.எம் கிருஷ்ணா அவர்களுக்கு சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை எதிர்த்து பாடகிகள் ரஞ்சனி, காயத்ரி, ஹரிகதா வித்தகர் துஷ்யந்த் ஸ்ரீதர் அறிக்கை வெளியிட்டிருக்கின்றனர். மெட்ராஸ் மியூசிக் அகடமியில் நடைபெறும் விழாவினை புறக்கணிப்பதாகவும் தங்களது கச்சேரிகளை ரத்து செய்வதாகவும் தெரிவித்திருக்கிறார்கள். இதற்கு அவர்கள் கூறும் காரணம் டி. எம் கிருஷ்ணா, சங்கீத உலகத்துக்கு எதிராக செயல்படுகிறார், அதன் மாண்பைக் கெடுக்கிறார், ஈ.வே. ரா போன்ற தலைவர்களைப் பாராட்டுகிறார், அயோத்தி ராமர் கோயிலுக்கு எதிராக பேசுகிறார், எம்எஸ் சுப்புலட்சுமி, தியாகராஜர் போன்றவர்களைப் பற்றி அவதூறாக சித்தரிக்கிறார்..இப்படி நீள்கின்றன.
இந்த அறிக்கையதில் எங்குமே ‘அவருடைய சங்கீத ஞானத்தில் குறைபாடு உள்ளது என்றோ அவரது திறமை அகாடெமி விருதுக்கு தகுதியானது அல்ல என்றோ இல்லை. முற்றிலும் கிருஷ்ணாவின் தனி மனித கருத்துரிமைக்கு எதிரான காரணங்களாக இருக்கின்றன. டி.எம் கிருஷ்ணா தனி மனிதர். அவருக்கென்று கொள்கைகள் இருக்கின்றன. தனி மனித கருத்து சுதந்திரம் உள்ளன. தனிமனித ஒழுக்கத்தில் அவர் பிறழந்தார் என்றால், அதைச் சொல்லும் உரிமை கூட இவர்களுக்கு உண்டு. இதே சங்கீத உலகத்தில் பாலியல் சுரண்டல் இருக்கிறது என்று பேசப்பட்டபோது அநேகமும் அமைதி காத்தனர். ஆனால், ஒருவர் தனக்குப் பிடித்தமான கொள்கையைப் பின்பற்றுகிறார் என்றதும் எதிர்க்கிறார்கள். எதற்கு இத்தனை பதற்றம்? துஷ்யந்த் ஸ்ரீதர் சொல்கிறார்- எம்பார், பாலக்ருஷ்ண சாஸ்திரிகள், கமலா மூர்த்தி, காஞ்சி பரமாச்சாரியார் போன்றவர்களைத தான் பின்பற்றுவதாகவும் ம்யூசிக் அக்காடமி தனக்குக் கோயில் என்றும் சொல்கிறார். அது அவரது விருப்பம், சுதந்திரம்.ஆனால் மேற்சொன்ன்வர்களைப் பின்பற்றுவதால், அது கோயிலாகவும், அதை மாத்திரமே பின்பற்றாதவர்களுக்கு அங்கு மேடை இல்லை என்பதையும் சொல்வது எத்தனை ஆணவமிக்கது! மேற்சொன்னவர்களுக்கு எதிரானதாக மொத்த சமூகத்தையும் அவர் வைப்பதை எப்படி பார்த்துக் கொண்டிருப்பது?
நாம் வெளியில் இருப்பவர்கள். சங்கீத உலகத்தின் உள்அரசியலை அறியாதவர்கள். டி.எம் கிருஷ்ணாவுக்கு அதன் உள்ளும் புறமும் தெரியும். அதை அவர் வெளிப்படுத்திவிடும்போதெல்லாம் பதற்றத்தை அவர்கள் வெளிக்காட்டுகிறார்கள். திரு. எம். எஸ் சுப்புலட்சுமி குறித்து டி.எம் கிருஷ்ணா எழுதிய நீண்ட கட்டுரையை ‘காலச்சுவடு’ இதழில் வாசித்திருக்கிறேன். பின்னர் அது தனிப் புத்தகமாகவும் வெளிவந்தது. கிருஷ்ணா வார்த்தைகளையும் பொருளையும் சரியாகவே கையாண்டிருந்தார். அந்தக் கட்டுரைக்கு தேர்ந்த, சரியான மறுப்பினை யாரும் தந்ததாக எனக்குத் தெரியவில்லை. எம்.எஸ்சின் திறன் வீணடிக்கப்பட்டிருந்தது என்பதையே அவர் எழுதியிருக்கிறார். இது எப்படி எம் எஸ் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும்? தியாகராஜர் இராமர் மேல் கொண்ட பக்தியால் கீர்த்தனைகள் எழுதினார். ஆனால் அதே கீர்த்தனைகளை மேடையில் பாடும்போது அந்தக் கச்சேரிகளுக்கு பணம் வாங்காமல் பாடப்படுவதில்லையே. இதைத் தொழிலாக ஏற்றுக்கொண்ட பின்னர் முழுமையாக இறைபக்தியில் நாங்கள் எங்களை அர்ப்பணித்துக் கொண்டோம் , அதனால் எங்களுக்கு சொல்ல உரிமையுண்டு என்றும் சொல்லவியலாது. தியாகராஜர் பற்றிப் பேச கிருஷ்ணாவுக்கு அல்ல, பிராமணர்கள், அல்லாதவர்கள் அத்தனை பேருக்கும் உரிமை உண்டு.
ரஞ்சனி காயத்ரி சகோதரிகளும், துஷ்யந்த் போன்றவர்களும் மீண்டும் மீண்டும் சொல்வது இந்த மேடைகள் எங்களுக்கானவை. நாங்கள் மட்டுமே இறுதி வரை கைப்பற்றியிருப்போம். இசை என்னும் அற்புதக் கலையை வெறும் சாதியின் பெயரால் நாங்கள் மட்டுமே வைத்துக் கொண்டிருப்போம்..என்பது தான்.
டி.எம் கிருஷ்ணா அல்ல ஆபத்தானவர், சங்கீதத்துக்கு ஆபத்து இந்தக் கட்டுப்பெட்டித்தனம் தான்.