நாங்கள் இருக்கும் தெருவில் சில நாட்களுக்கு முன்பு ஒரு சம்பவம் நடந்தது. இரவு எட்டு மணி இருக்கும். நடமாற்றமற்ற தெருவில், வெளிச்சமற்ற ஒரு மரத்தின் கீழ் இரு உருவங்கள் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தன. திடீரென ஒரு பெண் கத்தும் சத்தம். பதறிப்போய் அருகில் நானும் அதே சத்தத்தைக் கேட்ட பக்கத்து வீட்டுப் பெண்மணியும் சென்றோம். ஒரு இளைஞன், தன்னுடன் நின்று கொண்டிருந்த பெண்ணைக் கையைப் பிடித்து இழுக்கிறான். அவள் தெருவில் அமர்ந்துகொண்டு வர மாட்டேன் என்கிறாள். நாங்கள் இருவரும் என்னவென்று கேட்டோம். ‘இது என் வைஃப்..எங்களுக்குள்ள தீர்த்துக்கறோம்.நீங்க கிளம்புங்க” என்றான் அந்தப் பையன். அந்தப் பெண் திரும்பத் திரும்ப என்னை விட்டுருடா” என்றே சொல்லிக் கொண்டிருந்தாள். அவளை நோக்கி ஆபாசமான வார்த்தைகளை சொல்லியபடி இழுத்துக் கொண்டு போனான் அந்தப் பையன். நாங்கள் அவனைத் தடுத்து நிறுத்த முயன்றோம். அவன் எங்களை முறைத்தபடி அந்தப் பெண்ணை திட்டிக் கொண்டிருந்தான். எங்கள் இருவராலும் ஒன்றும் சொல்ல முடியவில்லை. இதற்குள் கூட்டம் சேர்ந்துவிட்டது. ஒரு கையில் அந்தப் பெண்ணைப் பிடித்துக் கொண்டு எல்லோரிடமும் ஒன்றயேத் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தான் ‘இவ என் வைப்..யாரும் தலையிடாதீங்க”. எல்லோரும் சொன்னது “புருஷன் பொண்டாட்டின்னா வீட்டுக்குள்ள வச்சிக்கோங்க..ரோட்டுல எதுக்கு சண்டை போடறீங்க?’ இப்போது அந்தப் பெண் விறுவிறுவென அவன் கையை உதறிவிட்டு நடக்கத் தொடங்கினாள். ஒரு ஆட்டோவை நிறுத்தி ஏறினாள். போய்க் கொண்டே இருந்தாள். இவன் ஆட்டோவின் பின்னால் ஓடினான். நாங்கள் எல்லோரும் அவர்கள் போன பாதையையேப் பார்த்துக் கொண்டிருந்தோம். ஒன்றும் செய்ய முடியாத இயலாமை எங்கள் எல்லாரிடமும் இருந்தது. இந்த ஒரு சம்பவத்தில் எங்களுக்கிருந்த கேள்விகளும், சந்தேகங்களும், கோபமும், ஆற்றாமையும் அ. வெண்ணிலாவின் ‘ததும்பி வழியும் மௌனம்’ கட்டுரைத் தொகுப்பில் உள்ளது. கணவன் மனைவி என்றால் அவன் தெருவில் நின்று பேசிய வார்த்தைகளை வீட்டுக்குள் பேசலாமா? கணவன் என்றாலும் மனைவியை தாழ்த்திப் பேசக்கூடாது என்று தானே சொல்லியிருக்க வேண்டும். வீட்டுக்குள் போய்ப் பேசு என்பது எந்த விதத்தில் நியாயம்? இப்படியான கேள்வியை இந்த ஒரு சம்பவம் ஏற்படுத்தியது போல, பல நூற்றாண்டுகளாக இந்தச் சமூகம் உருவாக்கி வைத்த பலவற்றைக் குறித்தும் கேள்விகளையும், வருத்தத்தையும் முன்வைக்கிறது இந்தப் புத்தகம்.
குங்குமம் வார இதழில் நாற்பது வாரங்கள் வெளிவந்த கட்டுரைத் தொடர் ‘ததும்பி வழியும் மௌனம்’. மௌனம் கடல் போன்றது. அதன் எல்லைக்குள் இருந்தபடி அலைகளை மட்டும் கரைக்கு அனுப்பி ஆழ்கடலில் அமைதியைக் கொண்டிருப்பது தான் மௌனமும். ஆனாலும் கடல் சில சமயங்களில் தன் கட்டுப்பாட்டை சட்டென விலக்கி கொந்தளிப்பது போல, மௌனம் கொந்தளித்தால் என்னவாகும் என்பதும் தான் இந்தத் தொடர். மௌனம் ததும்பி வழிகையில் முதலில் கேள்விகளையே எழுப்பும். இந்தத் தொடரும் அதையேச் செய்கிறது. நாம் கடக்கிற, கடக்க நினைக்கிற யாவற்றையும் ஒரு புள்ளியில் நிறுத்திக் கேள்வி கேட்கிறது.
நம் குழந்தைகளை கராத்தே, இசை, நடனம், அபாகஸ் என்று ஓட விடுகிறோமே, இது எத்தனை பெரிய இழப்பு கலைக்கு என்கிற ஒரு கேள்வி இன்று அவசியமாகிறது. இதற்கு அ.வெண்ணிலா தன்னுடைய பிரதேசத்தின் கூத்துக் கலைஞர்களிடமிருந்து கட்டுரையைத் தொடங்குகிறார். கலையே தன் வாழ்க்கையாக அனுபவிக்கும் ஒரு மகா கலைஞனும், ஒரு நாளைக்கு அரை மணிநேரம் கட்டாயத்தின் பேரில் ஒரு இயந்திரம் போல கலையைக் கற்றுக் கொள்ளும் மனநிலையும் ஒன்றா என்று கேட்கிறார். அது நாம் கலைக்கு செய்யும் பாதகம் தானே..வருடக்கணக்கில் சாதகங்கள் செய்து, அமிர்தவர்ஷிணி பாடினால் மழை வரும் என்றும் திரௌபதியாக கூத்தில் நின்று கண்ணா கண்ணா என்று தொண்டையடைக்க பாடும்போது அழும் பார்வையாளர்களையும் கொண்டது தானே கலையாக இருக்க முடியும்..இதனை இந்தக் குழந்தைகளை யோசிக்க விடாமல் செய்யும் நாம் அவர்களை கலைக்கு எதிரான திசையில் திருப்புகிறோம் என்பது புதிதான கண்ணோட்டம்.
முதல் பத்தியில் சொன்ன நிகழ்வில், அந்த இளைஞன் அந்தப் பெண்ணிடம் தகாத வார்த்தைகளை சொன்னபோது, நாங்கள் அவனருகில் செல்ல பயந்த காரணம், அந்த வார்த்தைகள் எங்களை நோக்கித் திரும்பும் என்று தான். அவன் சொல்லப்போகிற எந்த வார்த்தையிலும் உண்மை இருக்கப்போவதில்லை எனும்போது பெண்ணை கீழ்த்தரமாக சொல்லக்கூடிய வார்த்தைகளுக்கு ஒரு உயிர் வந்துவிடுவது போல பயந்து நின்றோம். அது தான் அவனுக்கும் தேவைப்பட்டிருக்க் வேண்டும்..அந்தப் பெண்ணை மீண்டும் மீண்டும் இழிவுபடுத்தும் வார்த்தைகளை சொல்லிக் கொண்டிருந்தான்..இதற்கு அர்த்தம், தலையிட்டால் உங்களுக்கும் இதே சொற்கள் தான் என்பது. கெட்ட வார்த்தைகள் என்ன செய்யும் என்கிற கட்டுரை இந்தத் தொகுப்பில் உள்ளது. அதில் சொல்லப்படுகிற ஒவ்வொன்றும் யதார்த்தமான உண்மைகள்.
தாய்வழிச் சமூகமாக இருந்த ஒன்று எப்போது ஆண்களின் முழுக் கட்டுப்பாட்டுகக்குள் வந்திருக்கும் என்பதற்கு ஒரு கட்டுரை பதில் சொல்கிறது. எப்போது பெண்களிடம் இருந்து நிலம் பறிக்கப்பட்டதோ அப்போது தான் அதிகாரமும் கைமாறியிருக்க வேண்டும். சொத்துரிமை பெண்களுக்கு மறுக்கப்பட்ட காலகட்டத்தில் அவள் முற்றிலும் அடிமையாயிருக்கிறாள். இதனை ஒரு கட்டுரையில் கோயில்களுக்கு நிலத்தினை நிவந்தம் அளித்த சோழர் கால அரச மகளிர் மூலம் நிறுவுகிறார் ஆசிரியர். செல்வாக்கும் அதிகாரமும் மிக்கவர்களே தானம் வழங்க இயலும், அதிலும் நில தானம் என்பது உயரிய ஒன்று. அதை அளிக்கும் உரிமையை பெண்களிடம் இருந்து பறித்துக் கொண்ட காலகட்டத்தில் தான் அவர்களுக்கான அதிகாரமும் பறிபோயிருக்க வேண்டும்.
பள்ளிக்கூடம், மாணவர்கள் , குழந்தைப் பருவம் குறித்து பல கட்டுரைகளில் பொறுப்புடனும் அக்கறையுடனும் எழுதப்பட்டிருக்கிறது. ஆண்டுவிழாக்களில் குழந்தைகள் ஆரவாரத்துடன் இருக்க, ஆசிரியர்களின் நிலை பற்றியும், பண்டிகைக்காலங்களில் குழந்தைகளுக்கு நாம் நல்ல நினைவைத் தரவேண்டும் என்பதும் முக்கியமானவை.
ஒரு எழுத்தாளர் தன்னுடைய காலத்தைக் கூர்ந்து கவனிப்பவராகவும், முந்தைய காலகட்டத்தைப் பற்றிய நுண்ணிய அறிவு உடையவராகவும் இருப்பது அவசியமாகிறது. ஒரு பெண் அதிலும் நடிகை அரசியலுக்கு வந்து அதிகாரத்தைக் கைப்பற்றும்போது அவருடைய தொழில் எந்தளவுக்கு இழிவாகப் பேசப்படுகிறது என்பதைப் பற்றிய ஒரு கட்டுரை இருக்கிறது. கள்ளச்சாராயம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டவர்கள் மந்திரிகள் ஆனதில்லையா, அப்போதெல்லாம் அவர்களைப் பற்றி எதுவும் பேசாதவர்கள் குத்து படத்தில் நடித்த ரம்யா என்கிற நடிகை கவர்ச்சியாக ஆடியதால் மட்டுமே வசைபாடுவதும், ஒழுக்கக்கேடு என்று சித்தரிப்பதும் எப்படி நியாயமாகும்? அதிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை இப்படிப் பேசுவதால், அது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்று எழுதியிருக்கும் அதே வேளையில் மற்றொரு பார்வையையும் முன்வைக்கிறார் அது இன்னும் முக்கியமாகிறது. பெண் என்பதாலே ரம்யாவுக்கு வெண்ணிலா கண்மூடித்தனமான ஆதரவு தெரிவிக்கவில்லை. சந்தர்ப்பத்துக்கு ஏற்ற மாதிரி எப்படி பொதுப்பிரச்சனையை தனது சுயநலத்துக்கு ரம்யா அரசியலாக்கினார் என்பதையும் பேசிவிட்டு, ஒரு அரசியல்வாதியை விமர்சிப்பது என்பது இது போன்ற செயல்களுக்கான எதிர்வினையாக இருக்க வேண்டுமே தவிர அவர் தொழில் சார்ந்ததாய் இருக்கக்கூடாது என்கிற வாதத்தையும் முன்வைக்கிறார்.
கேள்விக்குறிகளால் ஆனது தான் நமது வாழ்க்கை. கேள்விகளில் இருந்தே பகுத்தறிவு பிறக்கிறது என்று சொல்லும் ஒரு கட்டுரையில் அவர் இராஜேந்திர சோழன் பெரும்படையை வைத்துக் கொண்டு ஏன் வடஇந்தியா நோக்கித் தன் படையைத் திருப்பவில்லை என்கிற கேள்வி தொடங்கி இந்திய விடுதலையின்போது நேதாஜியின் நிலை என்னவானது என்பதையெல்லாம் முன்வைக்கிறார்.
பெங்களூர் நாகரத்தினம்மாள் என்கிற ஆளுமையைக் குறித்து தொடர்ந்து சில கட்டுரைகளில் பதிவாகியுள்ளது. தேவதாசி என்பவர்கள் குறித்த சமூகத்தின் பொதுப்பார்வையை மாற்றக்கூடிய கட்டுரைகள் அவை. அதில் நாகரத்தினம்மாளை முன்வைத்து எழுதப்பட்ட ஒவ்வென்றுமே புதிதானவை, நாம் அறிந்து கொள்ள வேண்டியவை. தியாகராஜர் ஆராதனை விழாவில் திருவையாறில் பெண்களும் கச்சேரி செய்ய வேண்டும் என்பதும். அவருடைய சமாதியை புதுப்பித்து அவர் கட்டியதையும், பெங்களூரில் உள்ள ஒரு குன்றுக்கு ‘ஆனந்தக் குன்று’ என்று பெயர் வரக் காரணமாக இவரே இருந்திருக்கிறார் எனபதும் எத்தனை அரிய செய்திகள்!

அ. வெண்ணிலாவின் மிகக்பெரிய பலமே ஆய்வுக்காக அவர் மெனக்கிடுவது தான். ஒவ்வொரு கட்டுரைக்குப் பின்னணியிலும் அவருடைய உழைப்பு, ஆய்வும் தெரிகிறது. போகிறபோக்கில் எழுதப்பட்ட கட்டுரைகளாக இவை இல்லை. சில கட்டுரைகள் காலத்தை ஒட்டியும், பல கட்டுரைகள் காலத்தைக் கடந்தும் நிற்கக்கூடியவை. இவருடைய கேள்விகள் நறுக்குத் தெரித்தாற்போல இல்லாமல், சிந்திக்க வைப்பதாக, வேறொரு கோணத்தைக் கொடுப்பதாக உள்ளது.
ஒரு வார இதழுக்கு ஒவ்வொரு வாரமும் கட்டுரை கொடுக்கவேண்டும் என்பதே சவால். நாற்பது வாரம் தொடர்ந்து எழுதியிருக்கிறார். எல்லாமே புதிய பார்வைகள், புதிய கண்ணோட்டங்கள். இப்படி அவர் தொடர்ந்து சலிப்பில்லாமல் எழுதுவதற்கு ஒரு காரணம் தான் இருக்க முடியும். அது அவர் மானுடத்தின் மீது கொண்ட கருணை. அவை தான் ஒவ்வொரு கட்டுரையிலும் வெளிப்படுகிறது.
இந்தப் புத்தகம் நம்மை உரையாடலுக்கு அழைக்கிறது. ததும்பி வழியும் மௌனங்கள் வெடித்து சிதறாமல், உரையாடல் தன்மைக்குள் இட்டுப்போவதை விட வேறு என்ன அழகிய மாற்றம் நிகழ்ந்துவிட முடியும்!அந்த மாற்றத்தை நிகழ்த்திய புத்தகம் இது.
புகைப்படம் நன்றி சசிகுமார் சாமிக்கண்ணு