பெரியாரின் தொண்டர் சிவனும் ஆனார்!!

0
130

சிவாஜியா..? அவர் ஓவர் ஆக்டிங் பண்ணுவாரே!! இப்படியான ஒரு கருத்தை சிரித்தபடி இன்றைய
தலைமுறையினர் பலர் சொல்வதை நாம் கேட்டிருக்கக்கூடும். நடிப்பென்பது எப்படி அமைய
வேண்டும் என்று கேட்டால், அவர்கள் சொல்லும் பதில் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பது.
சரி, யதார்த்தமான நடிப்பு என்றால் எப்படி இருக்க வேண்டும்? என்று அடுத்த கேள்வி கேட்டால்
அவர்கள் அதற்கு சிலரை கைகாட்டுவார்கள், அறிவார்ந்த திரைப்பட ஆர்வலர்கள் என்றால்
அயல்நாட்டு நடிகர்கள் சிலரை சொல்வார்கள். ஆனால் அவர்களால் யதார்த்தமான நடிப்புக்கு ஒரு
சாதாரண விளக்கம் கூட தர இயலாது.


சிவாஜி அவர்கள் மிகை நடிப்பைக் கொண்டிருப்பவரா என்று கேட்டால், ஆமாம் என்று சொல்ல
முடியும். ஆனால் அந்த நடிப்பை ரசிக்க வைத்தவர். தான் என்ன செய்கிறோம் என்பதை உணர்ந்து
செய்தவர். தன்னை அவர் சிவாஜி கணேசனாக கருதிக் கொள்ளாமல் கதாபாத்திரமாகக்
கண்டுணர்ந்தவர். ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் தன் உணர்ச்சிகளை எந்த அளவில்
வெளிப்படுத்தும் என்பதைப் பொறுத்து அவரது நடிப்பை வெளிக்காட்டுபவர்.
மேடை நாடகக் காலம் தொடங்கி குக்கிராமங்களில் இருந்தெல்லாம் கூட நாடகத்தில்
நடிப்பதற்காக எத்தனையோ பேர் நகரத்தை நோக்கி ஓடி வந்திருக்கிறார்கள். நூற்றாண்டுகள்
கடந்தும் இன்றும் இது மாறவில்லை, இப்போதும் ஒரு நாளைக்கு சென்னையை நோக்கி
வருகிறவர்களில் நடிப்பின் மீது கொண்ட ஆசையினால் வந்திறங்குபவர்கள் உண்டு.
இப்படியான, எப்போதும் போட்டி கொண்ட ஒரு தொழிலுக்கு கணேசன் என்பவர்
சூரக்கோட்டையில் இருந்து கிளம்பி வருகிறார். நாடகங்களில் வேடங்கள் கிடைக்கின்றன.
திரைப்படத்தில் நடிக்கும் ஆர்வம் ஏற்பட எஸ்.எஸ். வாசன் அவர்களின் முன்பாக போய்
நிற்கிறார். அவர் கேட்டது சாதாரண வேடம். வாசனுக்கு சிவாஜி மீது நம்பிக்கையில்லை.
மெல்லிய மாறுகண் கொண்ட ஒருவரால் உணர்வுகளைக் கண்களில் வெளிப்படுத்த முடியாது
என்று திருப்பி அனுப்பி விடுகிறார், “நீ சினிமாவுக்கு லாயக்கில்லப்பா..வேறு வேலை பாரேன்’
என்ற அறிவுரையை எடுத்துக் கொண்டு சிவாஜி அமைதியாகியிருக்கவில்லை. பராசக்தியில்
வாய்ப்பினைப் பெற்றார்.

பராசக்தி படத்தின் நீதிமன்றக் காட்சிகளின் வசனங்கள் நமக்கு நினைவில் இருக்கும். ஆனால்
அந்த வசனத்தில் எந்த நொடியில் சிவாஜியின் கண்களில் கண்ணீர் கோர்த்தது என்பதும்,
ததும்பியது என்பதும் கண்களைத் தாண்டியது என்பதும் நமக்கு நினைவில் இருக்காது. அவை மிக
இயல்பாக உறுத்தாமல் வெளி வந்தக் கண்ணீர். கண்களை அகல விரித்து அந்தக் கண்ணீரை
அவர் அப்படியே கண்களுக்குள் மிதக்க வைத்திருப்பார். இதற்கு அவர் நாடகங்களில் எடுத்த
பயிற்சி காரணமாக இருந்திருக்கலாம்.

ஒரு ஓவியனும், பாடகனும் பார்த்த மாத்திரத்தில் இந்தத் திறமையைக் கொண்டிருக்கிறார்கள்
என்பதை எப்படி அறிந்து கொள்ளமுடியும்? விரலில் தூரிகை உறவாடும்போதும், பாடகன்
பாடும்போதும் தானே அவர்கள் திறமை தெரியும். ஆனால் நடிகர்களுக்கான சாபக்கேடு, பார்த்த
மாத்திரத்தில் அவர்கள் நல்ல நடிகர்கள் என்று தெரிந்து விட வேண்டுமென்பது.
இதற்காகத் தான் எந்தவொரு சிறந்த நடிகரும் தங்களுக்குக் கிடைக்கப்பெறும் முதல்
வாய்ப்பினைத் தவறவிடுவதில்லை. பராசக்தியில் தனது திறமையைக் கோடிட்டு மட்டுமே
காட்டியிருக்கிறார் சிவாஜி என்பது பின்னாட்களில் அவர் நடித்த மற்றத் திரைப்படங்களைப்
பார்க்கிறபோது புரிந்து கொள்ள முடிகிறது.

தமிழ்நாட்டில் சிவாஜியைப் போல பல்வேறு தரப்பட்ட கதாபாத்திரங்களை ஏற்று நடித்த
நடிகர்களை நாம பார்க்க முடியாது. பாடல்களில் சில சிவாஜியால் மட்டுமே பாரம்
தாங்கக்கூடியதாய் அமைந்திருக்கிறது. உதாரணத்துக்கு ‘ஆறு மனமே ஆறு’ பாடலைச்
சொல்லலாம். விரக்தியான மனநிலையில் உள்ள ஒருவன் ஒவ்வொரு கட்டமாகக் கடந்து
இறுதியில் பக்குவப்படுகிறான் என்கிற ஐந்து நிமிட பாடல் காட்சியில் அவர் காட்டிய
உடல்மொழியும், முக பாவங்களும்..எந்த அயல்நாட்டு நடிகரை இதில் நாம் இணையாக சொல்ல
முடியும்?
கலைஞன் என்பவன் அந்த மண்ணுக்கானவன். இங்கிருந்து உருவாகி இங்குள்ளவர்களுக்காக தன்
திறமையை பறைசாற்றுபவன். சிவாஜி இந்த மண்ணின் மனிதர்களை நன்றாக உள்வாங்கியவர்.
ஒரு தங்கைக்காக அண்ணன் எத்தனை தூரம் தன்னை விட்டுக் கொடுப்பான் என்பதை சிவாஜி
அறிந்திருந்தார். ‘கை வீசம்மா கை வீசு’ என்று பாடியபடி அவர் பாசமலரில் அழுவது இன்றைய
தலைமுறையினருக்கு சிரிப்பாகத் தோன்றலாம். அனால் முழுப்படத்தையும் பார்க்கும் ஒருவர்
அந்தக் காட்சி வரும்போது அழுவது என்பது சிவாஜியின் நடிப்பினால் அல்ல, தன் சகோதர
சகோதரியை நினைத்து.. இந்த ஏக்கத்தினை, துக்கத்தை உள்வாங்கிய நடிகரால் தான்
பார்வையாளர்களுக்குள் கடத்தமுடியும்.

ஒரு தெருக்கூத்து நடனம் ஆடவேண்டும் என்பதற்காக சிவாஜி பயிற்சிபட்டறைக்கு சென்றதாக
செய்திகள் இல்லை. இரவு முழுவதும் கண்விழித்து பார்த்து அடிமனதில் தேக்கியிருந்த கூத்துகள்
அவர் உடல் மூலமாக வெளிப்பட்டிருக்கின்றன. ‘நவராத்திரி’ படத்தில் வருகிற அந்தத்
தெருக்கூத்து பாடல் காட்சிக்கு முன்பும் பின்புமான சிவாஜியை நினைவிருக்கிறதா? அந்தப்
பணிவும், துணிச்சலும் அகங்காரம் அற்று சாவித்திரியிடம் கெஞ்சுகிற அந்தத் தொனியும், ‘நீ
தான்மா என் குலசாமி’ என்று கையெடுத்து கும்பிடுகிறபோது..இந்த மனிதர் தானே ‘தில்லானா
மோகனாம்பாள்’ படத்தில் ஒரு வேட்டு சத்தத்திற்கு மத்தியில் என் நாதஸ்வரம் இசைக்காது என்று
சீற்றத்துடன் எழுந்து போகும் சிக்கல் சண்முகனார்.
அந்தக் கூத்துக் கலைஞரையும், இந்த நாதஸ்வரக் கலைஞரையும் அருகருகில் வைத்துப் பார்த்தால்
ஒரே வார்ப்பில் வெளிவந்த ஒரே அச்சுகள் என்றா சொல்ல முடியும்? இரண்டு கலைஞர்களின்
மனநிலையை அவர் உள்வாங்கியிருந்தால் மட்டுமே இப்படி இரு கூறாக வெளிப்படுத்த இயலும்.

இவ்வளவு ஏன்? ஒரு மனிதர் தன வாழ்நாள் முழுக்க புகைபிடித்தால் கூட இவர் போல்
இலாவகமாக புகைக்க இயலாது. அத்தனை விதவிதமான பாணிகளை புகைபிடிப்பதில்
தந்திருப்பார். ஒருபுறம் எம்ஜிஆரும், எஸ்எஸ்ஆரும் இது மாதிரியான புகைபிடிக்கும் காட்சிகளில்
நடிக்கக்கூட மாட்டோம் என்று சொல்லிக் கொண்டிருக்க, மொத்தமாய் குத்தகை எடுத்துக்
கொண்டார் சிவாஜி. இதைச் சொல்வது கொஞ்சம் மிகை தான் என்றாலும் காட்சியின்
தன்மைக்கேற்ப அவர் சிகரெட்டில் இருந்து வெளிப்படும் புகையையும் கூட தனது கட்டுப்பாட்டில்
வைத்துக் கொண்டாரோ என்று கூட தோன்றும். ஏனெனில் அந்தப் புகைகளை பிராதனப்படுத்த
அதற்கென்று சில படங்களில் ஒளியமைப்பும் செய்திருப்பார்கள். ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’
பாட்டிலும், ‘யார் அந்த நிலவு’ பாடலிலும், நவராத்திரியின் கடைசி காட்சியில் காவல்துறை
அதிகாரியாக புகைபிடிப்பதிலும், பாரிஸ்டர் ரஜினிகாந்தாக புகையை வெளிவிடுவதிலும் அவர்
காட்டிய வித்தியாசங்கள் சாதாரணமாக வரக்கூடியது அல்ல, அது பயிற்சியினால் வெளிப்படக்
கூடியது.

கர்ணன், வீரபாண்டியகட்டபொம்மன், ராஜராஜசோழன் என மன்னர் கதாபாத்திரங்களை அவர்
ஏற்று நடிக்கையில் அந்த ஒப்பனையும், கீரிடமும் உடையும் ஒன்று தான். ஆனால் அதற்குள் அவர்
காட்டிய நடிப்புத் திறனே அவரை சோழனாகவும், கட்டபொம்முவாகவும் , கர்ணனாகவும்
நினைக்க வைத்தது.

தனது வாழ்நாளின் இறுதிவரை நடிப்பை ஒரு பயிற்சியாகக் கொண்டிருந்தவர் சிவாஜி.
பெண்களை மயக்கும் ஒருவராக, கடனாளியாக, குடிகாரனாக திருடனாக, துரோகம் செய்பவராக,
கொலைகாரராக ஒரு கதாநாயகன் நடிக்க முடியும் என்றும் அதற்கு நியாயம் செய்ய முடியும்
என்றும் தொடர்ந்து தனது படங்கள் மூலம் நிரூபித்த நடிகர்கள் தமிழ்நாட்டில் இல்லை எனலாம்.
இயக்குனருக்கும், எழுத்தாளருக்குமான நடிகராக எப்போதும் சிவாஜி இருந்திருக்கிறார்.
எப்படியான சிக்கலான கதாபாத்திரங்களாக இருந்தாலும் சிவாஜி அதற்கு பொருந்துவார் என்கிற
எண்ணம் தான் நமக்கு விதவிதமான கதைகளைத் தந்திருக்கின்றன.

சிவாஜி நடித்த பக்திப் படங்களைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். தமிழ் சினிமா தொடங்கிய
காலந்தொட்டு புராணமும், பக்திப் படங்களும் தொடர்ந்தபடி இருந்தன. ஏ.பி நாகராஜன் நமக்குக்
காட்டியதோ வித்தியாசமான பக்திப் படங்கள். ஏ.பி.என் படங்களின் கடவுள்கள் நம்மைப்
போன்ற சகஜமான மனநிலை கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் கோபம்
கொள்வார்கள், எரிச்ச்ளுருவார்கள், மற்றக் கடவுகளைக் கிண்டல் செய்வார்கள்..இதோடு நம்மை
அவர்கள் கடவுளர்கள் தான் என்று நம்பவும் செய்து விடுவார்கள்.
ஏபிஎன் கடவுளின்’ இத்தனை தகுதிகளுக்கும் நம்பியது சிவாஜியைத் தான். கடவுளாய்
நடிப்பதென்பது சாதாரணமல்ல. நுட்பமான ஒன்றையும் கவனிக்க வேண்டும். பெரியாரின் தீவிர
தொண்டனாய், முதல் படத்திலேயே கலைஞரின் பகுத்தறிவு வசனங்களைப் பேசித்
திரைத்துறைக்குள் நுழைந்த ஒருவரை மக்கள் கடவுளாய் ஏற்றுக் கொள்கிறார்கள் என்றால் அது
தனிப்பட்ட முறையில் சிவாஜியின் நடிப்புக்குக் கிடைத்த பெரும் அங்கீகாரம்.

ஒரு நடிகருக்கு மிகப்பெரிய சொத்து என்பது அவர்களது குரல். சிவாஜியின் நடிப்பைப் போன்றே
அவரது குரல் வளம் குறித்து தனிக்கட்டுரையே எழுத முடியும். நவராத்திரி படத்தில் ஒன்பது
வேடங்களில் நடித்தது அவரது உடல் மட்டுமல்ல, குரல்களும் தான். சிங்காரமான மொழிநடையும்,
வெள்ளந்தியான பேச்சும், ஆங்கிலக் கலப்பில் பேசியதும் , கம்பீரமான சிரிப்பினை வெடிக்க
வைத்து கர்ஜித்ததும் ..ஒரே குரலின் அசாத்தியமான பரிமாணங்கள்.


ஒரு கலைஞன் நம்மிடமிருந்து விடைபெறும்போது வெற்றிடத்தை விட்டுச் செல்கிறார்.
சிவாஜி நமக்கு விட்டுச்சென்றது ஒருபோதும் நிரப்ப முடியாத ஒரு வெற்றிடம்…
எப்படி ஒரு நடிகர் தன்னை இறுதி வரைக்கும் அப்படியே தக்க வைத்துக் கொண்டிருக்க முடியும்?
இதற்கு எனக்குத் தெரிந்த பதில் அவருக்கு தொழிலின் மீது இருக்கும் அளவு கடந்த பக்தி என்பதே.

அவருடைய சுயசரிதையை டிவி நாராயண சாமி என்பவர் எழுதியிருந்ததை சில வருடங்களுக்கு
முன்பு வாசித்திருக்கிறேன். அதில் சிவாஜி அவர்களின் ஒரு வாழ்க்கை சம்பவமாக சொல்வது,
நாடகக் கம்பெனியில் ஒருமுறை வேலை இல்லாத சமயம். சாப்பாட்டுக்கு பிரச்சனை ஏற்படுகிறது.
எப்படியோ கொஞ்சம் அரிசி கிடைக்கிறது. அடுத்தவேளை உணவு அரை வயிறுக்காவது
கிடைத்திருக்கிறதே என்ற நிம்மதியல் இருக்கும்போது அதில் மண்ணெண்ணெய் கொட்டி
விடுகிறது. அவர்கள் அதனையும் தண்ணீரில் பலமுறை அலசி வடித்து சாப்பிடுகிறார்கள். அந்த
மண்ணெண்ணெய் தோய்ந்த உணவின் சுவாசம் தன்னை துரத்திக் கொண்டே இருந்ததாக சிவாஜி
சொல்கிறார்.

அது போன்ற பல சுவாசங்கள் தான் சிவாஜியை நமக்கு நடிகர் திலகமாகத் தந்திருக்கிறது.

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments