ஒரு புத்தக அறிமுக விழாவில் ரொமிலா தாப்பர் புத்தகம் விற்பனையில் இருப்பதைப் பார்த்தேன். அதுவரை இவரைக் குறித்த நூல் தமிழில் வெளிவந்திருக்கிறது என்று தெரியாமல் இருந்திருக்கிறேன். பெரும் ஆர்வத்துடன் வாங்கினேன்.
ரொமிலா தாப்பரின் கட்டுரைகளையும் சோமநாத் படையெடுப்பு குறித்து அவர் எழுதிய புத்தகத்தையும் மூன்று வருடங்களுக்கு முன்பு வாசித்திருக்கிறேன். சோமநாத் படையெடுப்பு பற்றிய புத்தகத்தினை அநேகமாக வாசிப்பதற்கு ஆறு மாதங்கள் வரை ஆகியிருந்தது. காரணம், அது மிக நிதானமாகவும் கூர்ந்தும் வாசிக்க வேண்டியிருந்தது. ரொமிலாவின் ஆங்கில மொழி நடை எனக்கு சற்று சிரமத்தைக் கொடுத்தது.
ரொமிலா மீது எனக்கு அளப்பரிய மரியாதையும், மதிப்பும் உண்டு. அவரின் கருத்துகள் தரவுகள் எனக்குள் ஏற்படுத்திய மாற்றம் அதிகம். என்னுடைய சிந்தனையை மாற்றிய தகவமைத்த எழுத்துகள் அவருடையது. அதனால் அவரைப் பற்றிய புத்தகம் தமிழில் வெளிவந்துள்ளது என்றதும் மகிழ்ச்சியாகிவிட்டது.
இந்தப் புத்தகத்தை எழுதிய திரு மருதன் அவர்களும் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அவரை முதன்முதலாக அன்று தான் சந்திக்கிறேன். அப்போது அவரிடம் ரொமிலாவின் எழுத்துகள் குறித்தும் எனக்கு அதில் ஏற்படுகிற தாக்கங்களும், புரிந்து கொள்வதில் ஏற்படுகிற சிக்கல்கள் குறித்தும் சொன்னேன். ஐந்து நிமிடங்கள் தான் பேசியிருப்போம். எனக்கிருக்கும் சிக்கல் பலருக்கும் இருப்பதை அவர் வெளிப்படுத்தினார். எப்படி அணுகவேண்டும் என்பதையும் சொன்னார். அதை அவர் இந்தப் புத்தகத்தின் முன்னுரையிலும் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புத்தகத்தின் வழி வழிகாட்டவும் செய்திருக்கிறார்.
முழுமையாக ரொமிலாவின் சிந்தனையையும் எழுத்துகளையும் உள்வாங்கி சிறப்பாகவும் எளிமையாக புரிந்து கொள்ளவும் எழுதப்பட்ட நூல் இது.
ரொமிலா வரலாற்று பேராசியை. ஆய்வாளர். தொடர்ந்து எழுதி வருபவர். நல்ல உரையாடல்களுக்கு வழிசெய்தவர். வரலாறும் அரசியலும், மதமும் வரலாறும், கலைகளும் வரலாறும் என தனது ஆய்வினை பன்முகத்தன்மையோடு அணுகியவர்.
சோம்நாத் கோயிலுக்கு முகம்மது கஜினி படையெடுப்பு நடத்தியதைக் குறித்து வரலாற்றில் பதிவு செய்யப்பட்டதை அவர் ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கிறார். கஜினி படையெடுப்பை அவர் மறுக்கவில்லை. ஆனால் இந்த சம்பவத்தை பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்களும், இந்துத்துவ அடிப்படைவாதிகளும் எப்படித் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தினார்கள் என்பதை அவர் தரவுகளோடு எடுத்து வைத்த விதம் மிக அவசியமானது.
ஐரோப்பிய சிந்தனையுடன் கூடிய சில வரலாற்று ஆய்வுகளைக் கொண்டு இந்தியாவை நாம் பார்க்க முடியாது என்பதைத் தீவிரமாக சொல்லிவருபவர்களுள் முன்னோடி இவர். மக்களின் பண்பாடு என்பது ஒற்றைத்தன்மையாக இன்று மாற்றப்படுவதின் ஆபத்துகளை அவர் சொல்லத் தவறியதே இல்லை.
இந்தியாவில் மட்டுமல்ல தென்கிழக்கு ஆசியாவிலும் பல்வேறு பார்வைகளில் இராமாயணம் எழுதப்பட்டு வந்துள்ளன. 300 இராமாயண பிரதிகள் உலகம் முழுவதும் உண்டு. பௌத்தத்தில் ‘தசரத இராமாயணம்’ என ஒன்று உண்டு., கேரள இஸ்லாமியர்களிடம் ‘மாப்ளே ராமாயணம்’ உண்டு., தாய்லாந்தில் இராமாயணக் கதை உண்டு. இவை எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து ஜேஎன்யூ பல்கலையில் பாடமாக வைத்திருந்ததை அங்குள்ள இந்துத்தவ மாணவர் அமைப்பு ‘இந்துக்களின் மனம் புண்படுகிறது’; என எதிர்த்து பாடத்திட்டத்தில் இருந்து தூக்கியதை ஆழ்ந்த வருத்தத்துடன் பதிவு செய்கிறார். இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் ஒற்றைப் பண்பாடு எனும் நோக்கில் வரலாறை அணுக முடியாது. மத வரலாறு என்பது இங்கு இன்றியமையாத தேவையாக இருக்கிறது என்கிறார்.
300 விதமான இராமாயணங்கள் இருப்பது இந்துக்களுக்கு ஒரு பிரச்சனை இல்லை ஆனால் இந்துத்துவவாதிகளின் அரசியலுக்கு அது எரிச்சலை ஏற்படுத்துகிறது என்பதைக் குறிப்பிடுகிறார். “ஒரு வரலாற்று ஆய்வாளரின் பணி, எது உண்மையான இராமாயணம் என்பதைக் கண்டறிந்து நிறுவுவது அல்ல, ராமர் யாருக்குரியவர் எனும் கேள்வுக்கு அவர் தீர்ப்பு வழங்க வேண்டிய தேவையில்லை. அவர் செய்ய வேண்டியதெல்லாம், ராமருக்கு ஒரு கதையல்ல, பல கதைகள் உள்ளன என்பது விருப்பு வெறுப்பின்றி பதிவு செய்வது தான்” என்பது ரொமிலாவின் பார்வை.
ரொமிலா இந்தப் பார்வையைத் தான் தனது ஆய்வுகளில் தொடர்ந்திருக்கிறார். நம்பிக்கையை வரலாறாக மாற்றும் பார்வையை அவர் எதிர்க்கிறார்.
ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் இருபது ஆண்டுகள் பேராசியையாக பணிபுரிந்த காலத்தில் அவர் எத்தகைய மாணவர்களை உருவாக்கியிருக்கிறார் எனபதையும் வரலாறை அணுகிய விதத்துக்காகவும் அதைத் தொடர்ந்து வெளிபடுத்தி வருவதாலும் கடுமையான எதிர்ப்புகளை இந்துத்துவவாதிகளால் பெற்றவர் அவர்.
ஆனாலும் அவரின் காத்திரமான எழுத்துகள் தொடர்கின்றன. அதற்கு காரணம் அவருக்கு அரசியல் தேவை இருக்கவில்லை. தன்னுடைய துறைசார்ந்த ஆர்வதையும் அறிவையும், தேடலையும் மக்கள் முன் எடுத்து வைப்பதே குறிக்கோளாக கொண்டிருக்கறவர்.
இந்தப் புத்தகத்தின் வழியாக ரொமிலா குறித்த புரிதல் ஏற்படும் என்பது உறுதி. ரொமிலாவின் தேவையை அவரின் பங்களிப்பை எடுத்துச் சொன்னதில் காட்டிய அக்கறையை முக்கியமானதாக நினைக்கிறேன்.
அசோகரும் காந்தியும் குறித்த ரொமிலாவின் சிந்தனைகளும் முற்கால இந்தியா குறித்த அவரது பார்வையும் இன்று எனக்கு அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாக இருக்கிறது. அதற்கு இந்தப் புத்தகம் எனக்கு வழிகாட்டியுள்ளது.
புத்தகம் : ரொமிலா தாப்பர் ஓர் எளிய அறிமுகம்
ஆசிரியர் : மருதன்
பதிப்பகம் : கிழக்கு