இந்த வருடத்தில் முதலில் படித்து முடித்த நாவல் ‘யகுட்ஸ்க் கைதி’. ஷ்ரேயாஸ் பவே எழுதியது. தமிழில் அகிலா ஸ்ரீதர் மொழிபெயர்த்திருக்கிறார். 1945ஆம் ஆண்டு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் இறந்து போனதாகச் செய்திகள் வெளிவந்தன. ஆனால், இன்று அவரை அரசியல் மரணங்களில் தீர்க்கப்படாத புதிராக அவருடைய இறப்பு மாறியுள்ளது. அந்தப் புதிரை ஓரளவு விடுவிக்க முயற்சித்திருக்கிறது இந்த நாவல். தமிழில் ஸீரோ டிகிரி பப்ளிஷிங் பிறகு பிரிவில் பதிப்பித்திருக்கிறது.
துப்பறியும் நாவல் வகைமையைச் சேர்ந்தது. நேதாஜி இன்றளவும் தைரியத்துக்குப் பெயர் பெற்றவர். அவரை யாராலும் அசைக்க முடியாது, அவருக்குப் பின்புலமாக ஐஎன்ஏ என்கிற பயிற்சி பெற்ற படைப்பிரிவு இருந்தது. உலக அளவில் இருந்த தலைவர்கள் வியந்து பார்த்த ஒருவராக இருந்தார். இந்திய சுதந்திரத்தில் ஒருபக்கம் அஹிம்சை, ஒத்துழையாமை போன்ற போராட்டங்கள் நடந்து கொண்டிருக்க, மற்றொருபுறம் தானும் தன்னுடைய ஐஎன்ஏவுமாக நீண்ட நெடிய போராட்டத்தை முன்னெடுக்கக் கூடிய வேலைகளைச் செய்து கொண்டிருந்தார் நேதாஜி. இந்தியாவின் நம்பிக்கையான முகமாக இருந்தவர் ஒரு விமான விபத்தில் இறந்தார் என்றதும் அதை நம்பியவர்கள் அது அரசியலில் பழி தீர்க்கும் ஒன்றாக எடுத்துக் கொண்டனர். நம்பாதவர்கள், அவர் உயிரோடு எதோ காரணத்துக்காகத் தலைமறைவாக இருக்கிறார் என்று நம்பினார்கள். மொத்தத்தில் அவர் இறப்பு யாருக்கும் ஏற்புடையதாக இல்லை.
இதன் பின்னணியில் இந்த நாவல் கவனம் பெறுகிறது. நேதாஜியின் மரணம் தொடர்பாக கட்டுரைகளும், யூகங்களும், நாவல்களும் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. அவற்றில் எழுப்பப்படும் வினாக்கள், சந்தேகங்கள் , யூகங்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு வரலாற்றுத் தரவுகளை ஆய்வு செய்து ‘யகுட்ஸ்க் கைதி’ எழுதப்பட்டிருக்கிறது. இதனை ஆய்வு செய்ததில் நேதாஜியின் மரணம் குறித்த ஒரு முடிவு அல்லது பதில் இருக்கவேண்டும் இல்லையா, அதையும் இந்த நாவல் நெருங்கிச் சென்று சொல்கிறது. தரவுகளின் அடிப்படையில் அது ஏற்புடையதாவும் இருக்கிறது. இதற்காக ஷ்ரேயாஸ் பவே நமக்கு வரலாற்றின் விடுபட்ட கண்ணிகளைக் கோர்க்கிறார்.
உதாரணத்துக்கு, நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை என்று வைத்துக் கொண்டால், அவர் எங்கு சென்றிருக்க முடியும் என்கிற கேள்விக்கு ரஷ்யாவுக்கு சென்றிருக்கலாம் என்று நாவலில் அவரைத் தேடும் கதாபாத்திரங்கள் யூகிக்கிறார்கள். ஏன் ரஷ்யா என்றால், விமான விபத்துக்கு முன்பு ஐஎன்ஏ வீரர்களுக்காக அவர் ஆற்றிய உரையில், இந்தத் தேசத்தின் நலனுக்காக நான் உலகின் எந்த மூலைக்கும் செல்வேன்..ரஷ்யாவுக்கு செல்லக் கூட தயங்க மாட்டேன் என்றிருக்கிறார். அப்போதைய காலகட்டத்தில் ரஷ்யாவின் அரசியல் நிலைமை அத்தனை சாதகமாக நமக்கு இல்லை என்பதால் அவர் அதனைக் குறிப்பிட்டிருந்தார். அதனால் ஆபத்தான பயணமாக இருந்தாலும் அவர் அங்கு சென்றிருக்கலாம் என்று யூகிக்கிறார்கள். எதற்காக அவர் தலைமறைவானார், அந்த விபத்து எதனால் நிகழ்த்தபபட்டது, அதில் பயணம் செய்தவர்கள் யார், நேதாஜியின் உடல் என்றும் அஸ்தி என்றும் சொல்லப்பட்டது யாருடையது..ஒரு தேசத் தலைவரின் அஸ்தியை ஜப்பானில் இருந்து நம் நாட்டுக்குத் திரும்பப் பெற்றுக்கொள்ள சுதந்திர இந்தியாவின் முதல் அரசாங்க நிர்வாகம் ஏன் முன்வரவில்லை, நேதாஜி தன்னுடன் யுத்த நிதியாக எடுத்துச் சென்ற நூறு பவுண்டு தங்கம் எங்கே போனது,அந்த அநூறு பவுண்டு தங்கத்தினை அவர் சேகரிக்கும் முன் ஏன் ஹிட்லரை சந்தித்தார் என்பதற்கான பதில்களை சுவாரஸ்யமாகவும் நம்பும் விதத்திலும் தரவுகளோடும் சொல்லப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் தான் இந்த நாவலை குறிப்பிடுமபடியான ஒன்றாக மாற்றியிருக்கிறது.
அவர் மறைந்து இரண்டு வருடங்களில் இந்தியா சுதந்திரம் பெறுகிறது. நேருவும், படேலும் (காந்தியும் இருக்கலாம்) நேதாஜியின் நிலை குறித்து தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். அதற்காக ஐஎன்ஏவில் மிக சிறப்பான இடத்தைப் பெற்றிருந்த அனிஷ் சிங்கையும் அவரது மனைவியும் மருத்துவருமான ரூபாலியாயும் ரகசியமாக நியமிக்கிறார்கள். இவர்கள் தங்களுடன் ஒரு நம்பிக்கையான குழுவோடு நேதாஜியின் விமான விபத்துக்கு பின்புலமான புதிர் குறித்து அறியக் கிளம்புகிறார்கள். அப்படிக் கிளம்பியவர்கள் காணாமல் போனார்கள். அவர்களைப் பற்றியே எந்த அரசாங்கப் பதிவுகளும் இல்லாததால் அவர்கள் பிறந்ததாகவே கணக்கில் இல்லை, அதனால் காணாமல் போனதும் பதியப்படவில்லை. இந்தக் குழுவினர் கண்டுபிடித்தது என்ன, ஏன் காணமல் போனார்கள் என்கிற ஒரு கதையும், அவருடைய பேரன் அவர்களைக் கண்டுபிடிக்கக் கிளம்பும் சாகசமும் சேர்ந்து கொள்ள இரண்டு தடங்களில் நாவல் பயணிக்கிறது. ஒரு திரைக்கதையின் செதுக்கிய வடிவம் போல ஷ்ரேயாஸ் பவே இரண்டினையும் இணைக்கிறா.ர்
இரும்பு மனிதர் என அழைக்கப்படுகிற சர்தார் வல்லபாய் பட்டேல், இராஜஸ்தான் என்கிற புதிய மாநிலம் உருவாகியிருக்கிற விழாவினைத் தொடக்கி வைக்க டெல்லியில் இருந்து ஜெயப்பூருக்கு தன் மகள் மற்றும் உதவியாளருடன் தனி ஹெலிகாப்டரில் பயணம் செய்கிறார். ஜெய்ப்பூர் விமானத் தளத்தில் அவரை வரவேற்க ஒரு குழு காத்திருக்கிறது. ஹெலிகாப்டர் வந்து சேரவில்லை. பிறகு அது காணாமல் போய்விட்டதாகச் செய்தி வருகிறது. அதன் பிறகு விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஓரிடத்தில் தரையிரக்கப்பட்ட செய்தி வந்து சேர்கிறது. படேல், விழாவில் கலந்து கொள்கிறார். மறுநாள் ஜவஹர்லால் நேரு இது குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், “இந்த சம்பவத்தை என்னிடம் சர்தார் படேல் விழுந்து விழுந்து சிரித்தபடி சொன்னார்’’ என்று கலகலப்பாக்குகிறார். இது பத்திரிக்கை செய்தி. இது இப்போதும் காணக் கிடைக்கிறது. இதனை ஷ்ரேயாஸ் பவே இன்னும் ஆழமாகப் பார்க்கிறார். காணாமல் போன விமானம் தொலைந்ததில் இருந்து மீண்டும் கண்டுபிடிக்கும்வரை நடந்தது என்னவாக இருக்கும் எனபதையும் சொல்கிறார் இதனை யாரும் மறுக்க முடியாத அளவுக்கு சொல்லப்பட்டிருக்கிறது. அது உண்மை தான் என்றும் ஷ்ரேயாஸ் சொல்கிறார் இது உண்மை என்றால, அரசியல் மேடுபள்ளங்களை நினைத்து நம்மால் வியக்காமல் இருக்க முடியவில்லை.
சரி, நேதாஜி உயிரோடு இருந்திருந்தாரா எங்கு இருந்தார் என்று நாவல் சொல்லியாக வேண்டும் இல்லையா..அதையும் சொல்லியிருக்கிறது.
இத்தனை வருடங்களுக்குப் பிறகு நேதாஜியின் மரணம் குறித்து நாம் ஏன் அக்கறை கொள்ள வேண்டும் என்கிற கேள்வி எழுமானால், அரசியல் ஆட்டங்களில் சில காய்கள் நகர்த்தப்படும் விதம் என்றைக்குமே மாறாது என்பதை நாம் புரிந்து கொள்வதற்காக என்றும் எடுத்துக் கொள்ளலாம். சமூக வலைதளங்கள் உருவாகியுள்ள காலத்தில் ஒரு அரசியல் கைதியை எதுவும் செய்துவிட முடியாது, மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது ஒரு கற்பனையே என்றும் எடுத்துக் கொள்ளலாம். இன்று நம்மைப் பற்றிய தகவல்கள் நமக்கு மட்டுமே தெரியும், நாம் ரகசியம் காக்கிறோம் என்பதெல்லாம் எத்தனை முட்டாள்தனமான பொய் என்பதையும் இது சொல்கிறது. எப்போது மனிதர் தன்னைப் பற்றிய விவரங்களை ஏதேனும் ஒரு விதத்தில் ஒருவருக்கேனும் சொல்லி விடுகிறாரோ அதன் பின் அது எப்போது வேண்டுமானாலும் வெட்ட வெளிச்சமாகும் என்கிற நிலையில் தான் இருக்கிறோம்..இன்னும்சொல்லப்போனால் நாம் மனதில் காக்கும் ரகசியம் கூட பாதுகாப்பானதல்ல என்பதையும் இந்த நாவல் சொல்லிச் செல்கிறது. யோசித்துப் பார்த்தால் அது தான் உண்மை என்றும் தெரிகிறது.
நேதாஜிக்கு ஒருவேளை இதில் சொல்லப்பட்ட மாதிரியான நிகழ்வுகள் நடந்திருக்குமேயானால் நிச்சயம் நாம் எல்லோருமே அவருக்கு நிகழ்ந்ததை நினைத்து வெட்கப்படத்தான் வேண்டும்.
இதையெல்லாம் மொழிபெயர்க்க நிச்சயம் எழுபது ஆண்டு கால நிகழ்வுகளை மொழிபெயர்ப்பாளர் புரிந்து கொள்ள வேண்டியிருக்கும். எல்லா தொழில்நுட்ப வார்த்தைகளும் ஆங்கிலத்தில் உருவாகிவிட்டன. சமகால நாவலை மொழிபெயர்க்கையில் இதனை தமிழ்ப்படுத்துவதில் ஒரு சவால் உண்டு. அதிகம் புழங்கும் வார்த்தைகளை தமிழில் உறுத்தாமல் கொண்டு சேர்க்க வேண்டும், வாசிப்புக்கு அது தடையாகவும் இருக்கக்கூடாது. இது போன்ற நாவலின் விறுவிறுப்புக்கு அது குறுக்கே வரக்கூடாது. இதையெல்லாம் அகிலா ஸ்ரீதருக்கு எத்தனை சோதனைகளாக இருந்திருக்கும் என புரிந்து கொள்ள முடிகிறது. இதை அவர் நேர்த்தியாகக் கையாண்டிருக்கிறார். எங்குமே மொழிபெயர்ப்பு நாவலைப் படிக்கிறோம் என்கிற உணர்வு வரவில்லை. அத்தனை சரளம் அவரது மொழிநடையில். மாபெரும் தேடல் இதனை மொழிபெயர்க்கையில் அவருக்குள் இருந்திருக்க வேண்டும். அகிலாவுக்கு மனமார்ந்த அன்பு.
ஷ்ரேயாஸ் பவே நாவலை இப்போது தான் படிக்கிறேன். அவர் எழுதிய மற்றவற்றையும் படிக்கும் ஆவல் வருகிறது.
கையில் எடுத்தால் வைக்க மனம் வராது என்பதால் அதற்கான நேரத்தோடு படிக்க வேண்டும். இல்லாவிட்டால், என்னைப் போல வேலைகளை தள்ளி வைத்து படித்து விட்டு நடுஇரவில் வேலைகளைப் பார்க்க வேண்டியிருக்கும்.
பதிப்பகம் : பிறகு பிரசுரம் (zero degree Publishing)
புத்தகம் பெற : 8925061999