எம்.டி வாசுதேவன் நாயர் எழுதிய திரைக்கதைகளுள் ஒன்று பெருந்தச்சன். அவர் எழுதிய திரைக்கதை வடிவம் ஸ்ரீபதி பத்மநாபன் அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு புத்தக வடிவமாக கிடைக்கிறது. புது எழுத்து பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
பதினைந்து வருடங்களுக்கு முன்பு முதன் முதலாக ‘பெருந்தச்சன்’ படத்தினைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது பார்த்த மனநிலைக்கும் இப்போது பார்ப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தன.
இலக்கியம் படைப்பவர்கள் வேறு திரைக்கதை ஆசிரியர்கள் வேறு, இரண்டுக்குமான அடிப்படை, கற்பனையை எழுத்தில் கொண்டு வருவது தான் என்றாலும், இலக்கியமும், திரைக்கதையும் வடிவத்தில் வெவ்வேறு வகைப்பட்டவை. இவை இரண்டிலுமே மேதைகளாக இருந்தவர்கள் வெகு சிலர் மட்டுமே. அவர்களில் எம்.டி.வாசுதேவன் நாயரை முக்கியமானவராகக் கொள்ளலாம். ஒரு இலக்கியவாதி திரைக்கதையாசிரியராக மாற்றம் கொள்ளும்போது ஏற்படும் சிக்கல்களை இவரது திரைக்கதைகளை பார்க்கவியலாது என்பதே அவர் மீது கொண்டிருக்கிற பிரமிப்பு.
அவர் எழுதிய ‘நாலுகெட்டு’, ‘இரண்டாம் இடம்’ ‘காலம்’ நாவல்கள் குறித்து யோசிக்கும்போது எம்டிவியின் நாவல் வடிவத்துக்கும் அவரது திரைக்கதை பாணிக்கும் ஒரு நெருக்கம் இருப்பதை உணரமுடிகிறது. அவர் காட்சியின் வழியாகவும் ஒலிகளாகவும் நமக்கு ஒன்றை சொல்கிறார். இது திரைக்கதை யுத்திக்கு அணுக்கமானது.
கலைகளின் அற்புதங்களில் ஒன்று சிற்பக்கலை. ஆனாலும் வடிவமைத்த சிற்பிகள் பெயர்கள் எதுவும் நமக்குத் தெரியாமல் போனது துரதிருஷ்டமே. சிற்பிகள் தங்களுடைய திறனை ஒரு கலைத் தொண்டென செய்திருக்க வேண்டும். கலைஞர்கள் என்பதைக் கடந்து இது தங்களது தொழில் என்கிற மனதோடு செதுக்கியிருக்க வேண்டும். ஆனாலும் தான் செதுக்கிய சிற்பத்தை ரசிக்கும் ஒருவன் ஒரு கணமேனும் தன் கலையின் சக்கரவர்த்தியாக தன்னை உணர்ந்தேயிருப்பான். அந்த மனத் திருப்தியே அவனை மேலும் மேலும் உந்தியிருக்க வேண்டும். கோயில்களையும் , மாளிகைகளையும் , கொட்டாரங்களையும் செதுக்கிக் கட்டிய தச்சர்களில் பெருமைமிக்கவர்களை பெருந்தச்சர்கள் என விளிப்பது வழக்கம். அப்படியான ஒரு பெருந்தச்சனின் கதை இது.
கேரளா மட்டுமல்லாது அநேகமாய் சிற்பிகள் வாழ்ந்த எந்த நிலப்பரப்பிலும் சொல்லப்படுகிற ஒரு தொன்மக் கதையின் மையத்தை மட்டும் கொண்டு எம்.டி.வி எழுதிய திரைக்கதை ‘பெருந்தச்சன்’. கேரளாவில் மட்டுமல்ல, கழுகுமலைப் பகுதிகளிலும் கூட இந்தத் தொன்மைக் கதை உண்டு. திருநெல்வேலி மாவட்டம் கழுகுமலையில் உள்ள சமணக்குன்றில் பாதியில் விட்டுப் போன சிற்பங்கள் உண்டு. இதற்குக் காரணமாக ஒரு பெருந்தச்சன் மற்றும் அவரது மகனுடைய கதையையும் சொல்கிறார்கள். இதே கதை தான் கேரளாவிலும் வேறு விதமாக சொல்லப்படுகிறது. அதாவது, தந்தையும் மகனும் கல், மர, சிற்பிகளாக வாழ்ந்திருந்தனர். மகன் அப்பாவின் சொல்லை மீறுகிறான். வீட்டை விட்டுப் போகிறான். அவன் திரும்பி வருகையில் சிற்ப வித்தைத் தெரிந்தவனாக மாறியிருக்கிறான். அவனுடைய சிற்பம் அப்பாவைக் காட்டிலும் அற்புதமாக அமைந்துவிடுகிறது. இதனைத் தாளமுடியாத தந்தை அவனை உளி வீசிக் கொன்றுவிடுகிறார். பின்னர் தான் செய்த செயலுக்குத் தானே வருத்தப்படுகிறார். இப்படியாக தந்தையே மகனை உளி கொண்டு கொன்ற கதை ஒன்று எங்கோ நிகழ்ந்திருக்க வேண்டும். அது வாய்மொழியாகவும், நாட்டுப்புறக் கதைகளாகவும் உலாவி வருகின்றன. பாதி செதுக்கப்பட்ட கோயில்களிலும் குன்றுகளிலும் இதே கதை மீண்டும் மீண்டும் எடுத்தாளப்படுகிறது.
எம்டிவிக்கு இந்தக் கதை ஒரு உந்துதல் மட்டுமே. நாம் பொக்கிஷங்கள் என வியக்கும் சிற்பங்களை வடித்த கர்த்தாக்களின் மனநிலையையும், அழகியலையும் சொல்லிப்பார்க்க எம்.டி.வி எடுத்துக் கொண்ட களமே இந்தத் திரைக்கதை. இதனை முன்னுரையிலும் இப்படி குறிப்பிடுகிறார், “பெருந்தச்சனை எழுத முடிவு செய்தபோது நமது பரம்பரை பரம்பரையான வாஸ்து சிற்ப சாஸ்திரத்தின் மீது ஒரு சின்ன வெளிச்சக் கீற்றையாவது வீழ்த்திப் பார்க்க முடியும் என்ற தன்னம்பிக்கை தான் எனக்கு பெரும் உற்சாகத்தைத் தந்தது” என்கிறார்.
இதனை செய்யவும் செய்திருக்கிறார்.
ராமன்குட்டி பெருந்தச்சன் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர். இவர் தன மனம் கொண்டு செய்யும் சிற்பமும், மரச்செதுக்கல்களும் அவருக்கு பெயரும் புகழும் பெற்றுத் தருகின்றன. மனைவி பிரசவத்தில் இறந்து போக மகன் கண்ணனை தன் மனைவி வீட்டாருடன் விட்டுவிட்டு ஊர் ஊராக கோயில் கட்டுமானங்களுக்கு செல்கிறார். அவருடைய நண்பர் உண்ணித் தம்புரான் அழைப்பின் பேரில் அவருக்கு ஒரு கோயில் கட்டித் தரவேண்டி செல்கிறார். அங்கு தம்புரானின் மனைவியான தம்புராட்டியின் முக சௌந்தரியத்தை மனதில் கொண்டு ஒரு சரஸ்வதி சிற்பத்தை வடிக்கிறார். தம்புரானுக்கு பெருந்தச்சன் மீதும் தம்புராட்டியின் மீதும் சந்தேகம் எழுகிறது. சந்தேகம் அவசியமற்றது என்று தம்புரானுக்கு உணர்த்திவிடுகிறார்கள். அவரும் உணருகிறார். காலம் செல்கிறது. பெருந்தச்சனின் மகன் கண்ணனுக்கு பதினேழு வயது. அப்பாவோடு இணைந்து அவனும் சிற்பம் செதுக்குகிறான். திறமைசாலியாக இருக்கிறான். தம்புரானின் ஊருக்கு பல வருடங்கள் கழித்து கோயில் மண்டபம் கட்ட வருகிறார்கள் பெருந்தச்சனும் அவரது மகன் கண்ணனும். இப்போது தமபுரானின் மகளுக்கும் பெருந்தச்சனின் மகனுக்கும் காதல் ஏற்படுகிறது. உயர்சாதி பெண் ஒரு ஆசாரியின் மகனை காதலிப்பதென்பது என்பது தம்புரானுக்கும், பெருந்தச்சனுக்கும் எதிர்கொள்ள முடியாத பிரச்சனை ஆகிறது. தன் ஆத்ம நண்பனான தம்புரானுக்காக பெருந்தச்சன் தன்னையும் தன் மகனையும் பலி கொடுக்கிறார் என்பதே கதை.
இதற்குள் எம்டிவி பல மாயாஜாலங்களை நிகழுத்துகிறார்.
இதோடு ஒரு தலைமுறைக்கும் அடுத்தற்குமான பரமபத விளையாட்டையும் ஆடி பார்த்திருக்கிறார். பெருந்தச்சன் ராமன் குட்டியும் அவரது மகன் கண்ணனும்,உண்ணித் தம்புரானும் அவரது மகள் குஞ்ஞிக்காவும் என்கிற இந்த நான்கு கதாபாத்திரங்களின் மனஓட்டத்துக்கு நடுவே கலை ஒன்று உருவாகி நிற்கிறது.
எம்டிவியின் மாபெரும் பலம் உணர்வுகளை அவர் காட்டும் விதம். மிகுந்த அழுகையும் வெடித்த சிரிப்பும் பெருங்கோபத்தையும் வார்த்தையால் மட்டுமே காட்டாத, உணர்வுகளால் வெளிப்படுத்தக்கூடிய வித்தை தெரிந்தவர். இது திரைக்கதைக்கு பெருமளவு உதவியிருக்கிறது.
“பெருந்தச்சனுக்கு அந்த வார்த்தை வலித்தது” என்பதை கதையாய் எழுதுகையில வார்த்தைகளால் எப்படியெல்லாம் வலித்தன என்பதை எழுதிவிடலாம். ஒரு திரைக்கதையாசிரியரின் சவாலே வலி எப்படி வெளிப்பட்டது என்பதை சொல்வதில் தான் இருக்கிறது. “வார்த்தை அவர் காதுகளில் பட்டு முடிப்பதற்குள்ளாகவே பெருந்தச்சன் அங்கிருந்து செல்ல தொடங்குகிறார்” என்று திரைக்கதையில் எழுதுகிறார். ஒரு காட்சியை அவர் ‘விஷுவலாக’ வெளிப்படுத்துகிற இடம் இது.
ஒரு கதையின் மையம் என்பது கதாபாத்திரங்களுக்கு இடையேயான முரண்களை எத்தனை ஆழப்படுத்துகிறோம் என்பதிலும் அமைகிறது. இந்தக் கதை மேலோட்டமாக சலனமற்ற ஒரு நதி போல் தோன்றினாலும், கதாபாத்திரங்கள் மனதுக்குள் உருவாக்குகிற போராட்டங்கள், பெரும் சுழலுக்கு ஒப்பானது. பெருந்தச்சன் தன் கலைகளை ஆராதிக்கும் தம்பிராட்டியை தன்னோடு இணைத்து நம்பூதிரி சந்தேகப்பட்டுவிட்டாரே என்பதில் அவரின் மனச்சுழல் தொடங்குகிறது. அது அடங்குகையில் தன்னுடைய மகன் தன்னுடைய கலையைக் கொண்டே தன்னை தோற்கடிக்க நினைக்கிறானோ என்கிற மற்றொரு சுழல் ஏற்படுகிறது.
பெருந்தச்சனின் மகனுக்கோ, இத்தனை அற்புதமான கலை மனமும், திறமையும் உள்ள தன்னை சாதியின் பெயரால் தனக்கு இஷ்டமான பெண்ணைத் திருமணம் செய்விக்க மறுக்கிறார்களே என்கிற சுழல்.
தம்புராட்டியின் மகளுக்கோ, எவரோ ஒரு நம்பூதிரியைத் திருமணம் செய்து கொண்டு அந்தப்புரத்தில் அடைந்து கிடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுவிடுமோ என்கிற பயம்.
உண்ணித் தம்புரானுக்கோ, தன்னுடைய கல்வியினால் தனக்கு இல்லாத மரியாதை பெரிய தரவாட்டுக்கு வாழ்க்கைப்பட்டுப்போன பின் வெறும் ஒரு நம்பூதிரியாய் வாழ்கிறோமே என்கிற ஏக்கம்..
இத்தனைக்கு நடுவில் திரைக்கதை சென்று கொண்டிருக்கிறது. அதனால் தான் படம் பாக்கும்போது கிடைக்கும் அனுபவத்தை விட, அதனைப் பற்றி நினைக்குந்தோறும் திரைக்கதையின் ஒவ்வொரு அம்சமும் மேலேறி வருகிறது.
“மரத்தை வெட்டி சிற்பமும் தூணும் செதுக்கறதுக்கு முன்னாடி அந்த மரத்துகிட்ட அனுமதி வாங்கினியா?” என்று மரத்தினை வெட்டிக் கொண்டிருக்கும் தனது மகனிடம் கோபம் கொள்கிறார். அவன் கேலியாக சிரிக்கிறான். “என்னது மரத்துகிட்ட அனுமதியா? எந்த கிரந்ததுல இருக்கு” என்று பெருந்தச்சனிடம் கேட்கிறான். இதற்கு அவர் சொல்லும் பதில் அலாதியானது. எம்.டி.வி இந்த மனதைத் தான் தன கதையில் முன்னிறுத்துகிறார். பெருந்தச்சன் சொல்கிறார், “நல்லா வாழ்ந்து முடிச்ச மரம் தன்னை வெட்டறதுக்கு சந்தோஷத்தோட சம்மதிக்கும். வணங்கும்போது அனுக்கிரகம் பண்ணும்..அதுல செதுக்கற சிற்பங்கள் என்னென்னைக்கும் ஜொலிக்கும்னு சொல்லுது சாஸ்திரம். மரத்து மேல கூடு கட்டியிருக்கற பறவைங்ககிட்டையும் வேறு இடம் பாத்துக்கங்கன்னு வேண்டி மன்னிப்பு கேக்கவும் வேணும்..” என்கிறார். மகன் கண்ணனுக்கு தான் வடிக்கும் மரச் சிற்பங்கள் கறுத்துப் போவதற்கான காரணம் புரிகிறது. “இதுக்குத் தான் அனுபவம் வேணுங்கறது; என்பது போல ஒரு சிரிப்பு சிரித்து விட்டு செல்கிறார் பெருந்தச்சன். ஒரு அற்புதமான காட்சி இது.
எம்.டி.வியின் கதைகள் அனைத்திலும் வாழ்க்கையின் உச்சங்களைத் தொட்ட ஒருவனின் சரிவைக் காண இயலும். அது ஒரு குடும்பத்தின் கதையாகவோ, தனி மனிதனின் கதையாகவோ இருக்கும். பிரபலமான தரவாடு ஒன்றின் சரிவு என்றும் இந்தக் கதையை புரிந்து கொளல்லாம், பெருந்தச்சன் போன்ற கலைகளின் மேல் அபிமானம் கொண்டிருக்கிற ஒரு தலைமுறையின் சரிவு என்றும் கொள்ளலாம்.
“நான் தொட்டு செதுக்கின சிலை கருவறைக்குள்ள போகும்போது தெய்வமாயிடுது. செதுக்கின நான் தீண்டத்தகாதவன் ஆயிட்டேன்” என்று தலை குனிந்து வருத்தம் கொள்ளும் பெருந்தச்சன் தான் தன் மகன் தமபுரானின் மகளைக் காதலிக்கிறான் எனும்போது அவஸ்தைக்கு உள்ளாகிறார். அவர் தன் மகனை புரிந்து கொள்கிறார். ஆனால் அதைக் காட்டிலும் தன் கலையும், தன் நண்பன் நம்பூதிரியின் மீதான நட்பும் பெரிதாகிவிடுகிறது. இதோடு ஆசாரியான தன் மகனைத் திருமணம் செய்து கொண்ட பின் நம்பூதிரியின் மகள் என்ன கதிக்கு இந்த ஜாதி கட்டமைப்பால் ஆளாவாள் என்பதை உணர்ந்திருக்கிறார். தான் பார்த்து தொட்டில் செய்து அதில் உறங்கிய தம்புரானின் குழந்தை அவள் என்கிற எண்ணமே அவர் மனதில் இருக்கிறது. இவற்றுக்கெல்லாம் முன்பு அவருக்குத் தன மகனின் உயிர் ஒரு நொடியில் பொருட்டே இல்லாமல் ஆகிவிடுகிறது. இந்த உணர்ச்சி மையத்துக்கு பெருந்தச்சனை கொண்டு வருவதற்குத் தான் அவரைப் பற்றி திரைக்கதை விலாவரியாக பேசுகிறது. மகனைக் கொல்லும் முந்தைய காட்சியில் தம்புரான் பெருந்தச்சனிடம் அழுதபடி கேட்பார், “ராமன்குட்டி..நீ பெரிய சிறுத்தையை உன் உளி கொண்டு சரியான இடத்துல தாக்கி கொன்னுட்டேன்னு கேள்விபட்டுருக்கேன்..அதே மாதிரி என்னைக் கொன்னுரு..உன் மகனை என் பொண்ணு விரும்பறதை விட இது மேல்” என்று அழுவார்.
அப்போதும் கூட தன் மகனைக் கொல்லும் எண்ணம் இல்லாமல் கையறு நிலையிலே நிற்கிறார் பெருந்தச்சன். ஆனால் அதற்கடுத்த காட்சி கதையின் உச்சம். யாராலும் பொறுத்த முடியாத கோபுரத்தின் மேற்கூரையை பெருந்தச்சன் வந்து பொருத்துகிற இடம். எல்லோரும் அதிசயமாய்ப் பார்த்துக் கொண்டிருக்கையில் தன் மகனை காவு வாங்குகிறார் பெருந்தச்சன். விஷயம் அறியாதவர்கள், பெருந்தச்சன் தன மகன் மேல் கொண்ட பொறாமையினால் கொன்றார் என்று கத்தும்போது ஒரு கணம் அது தான் உண்மையோ என்று அவருக்குத் தோன்றி விடுகிறது. தன்னையே மாய்த்துக் கொள்கிறார்.
எம்டிவி திரைக்கதையில் எழுதிய சில காட்சிகள் திரைப்படத்தில் விடுபட்டிருக்கின்றன. அதனால் திரைப்படத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தோன்றினாலும் மூல திரைக்கதையை வாசிக்கும்போது அந்தக் காட்சிகள் படத்திற்கு மேலும் ஆழம் சேர்த்திருக்கும் என்பதையும் மறுக்க முடியாது.
அதே போல் சில காட்சிகள் அவர் எழுதியது போலவே எடுக்கப்பட்டிருந்தால் பொருட்செலவு ஏற்பட்டிருக்கும். பெருந்தச்சன் போன்ற கதைகளுக்கு செலவு செய்திருந்தால் மிக அற்புதமான கலைப்படைப்பு நமக்கு கிடைத்திருக்கும். இதற்கு யாரையும் நாம் குறை கூற இயலாது. இந்தப் படைப்பை உள்வாங்கி படமாய் எடுப்பதற்கு ஒரு இயக்குனரும் தயாரிப்பாளரும் ஆர்வத்தோடு முன்வந்திருக்கிறார்கள் என்பதே மகிழ்ச்சி தான்.
ஒரு படைப்புக்காக எம்.டி வாசுதேவன் நாயர் சிற்ப சாஸ்திரத்தையும் நூல்களையும் சிற்பிகளின் வாழ்வு முறையையும் கண்டுணர தனக்குள் ஒரு வரலாற்றுப் பயணத்தை நிகழ்த்தியிருக்கிறார். அதில் அவர் நமக்கு கண்டு கொடுத்த ஒரு செதுக்கலே இந்த ‘பெருந்தச்சன்’
அருமை!
எழுத்தாளர் ஶ்ரீபத்மநாபா பெருந்தட்சன் திரைக்கதை வசனத்தை மொழிபெயர்த்தார். புது எழுத்து வெளியீடாக வந்துள்ளது.
ஆமாம் சார். நான் அதைப் படித்திருக்கிறேன். அந்தப் புத்தகத்தில் எம்.டி வாசுதேவன் நாயர் அவர்கள் எழுதிய முன்னுரையும் சிறப்பானது