பாளையங்கோட்டை – மூதூரின் வரலாறு

0
110

அடைகோழி ஆன பிறகு ஊரைத் தான் அதிகம் தேடுகிறது. நெல்லை கண்ணன் அவர்கள் எழுதிய ‘குறுக்குத்துறை இரகசியங்கள் – பாகம் இரண்டு’ வாசித்த பின் தேர்ந்தெடுத்த புத்தகம் ‘பாளையங்கோட்டை – ஒரு மூதூரின் வரலாறு”. ஆய்வாளர்கள் தொ.பரமசிவன் மற்றும் ச. நவநீத கிருஷ்ணன் அவர்களும் எழுதியிருக்கிறார்கள். காலச்சுவடு வெளியீடு.

பாளையங்கோட்டை நகரத்தின் தொன்மை, அதனை ஆண்ட மன்னர்கள் குறித்த செய்திகளோடு தொடங்குகிறது புத்தகம். பாளையங்கோட்டையில் மிகப்பெரிய கோட்டை இருந்ததென்பது அனைவரும் அறிந்ததே. அதன் எச்சங்கள் இன்றுமுண்டு. கோட்டை எங்கே அமைந்திருந்தது என்பதும், அதன் வளாகங்கள், சுற்றளவு, எல்லைகள் என விவரிக்கப்பட்டுள்ளன.

இதனை ஒரு தகவலாக வாசித்திருந்தால், அது வேறு. எனக்கும் பாளையங்கோட்டைக்குமான தொடர்போடு தான் என்னால் வாசிக்க முடிந்தது, ஒரு டைம் மெஷின் பயணம் போல.

கோட்டையின் சுற்றுச்சுவருக்கு வெளியில் அமைந்திருந்த சாராள்டக்கர் பள்ளியில் இரண்டு வருடங்கள் படித்திருக்கிறேன். பெண்களுக்காக தொடங்கப்பட்ட இரண்டாவது உறைவிடப் பள்ளியான மேரி சார்ஜெண்டில் ஒரு வருடம் படித்திருக்கிறேன். கோட்டையின் தெற்குசுவர் வழியாக நடந்து போய் கணக்கு ட்யூஷனுக்கு சென்றிருக்கிறோம்.

கோட்டையின் தெற்குப் புறத்தில் இருந்த சாலையில் தான் எங்களை போக வர அனாவசியமாக வம்பிழுத்துக் கொண்டிருந்த ஒரு பையனை வகுப்புத் தோழிகள் சிலர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினோம்.

கோட்டையின் கிழக்குப் பக்கமாக நடந்தே சென்றால் வருகிற பேரூந்து நிலையத்தின் அருகில் ஒரு கடையில் சமோசா மிக நன்றாக இருக்கும் என்பதைக் கண்டறிந்திருக்கிறோம்.

ஒருகாலத்தில் கொத்தளமாக இருந்து, ஆங்கிலேயர் காலத்தில் டென்னிஸ் கோட்டாக மாற்றப்பட்டு அதனை சுப்பிரமணிக் கரையாளர் என்பவர் வாங்கி மாவட்ட நூலகமாக மாற்றிய இடத்தில் தான் பல ஞாயிற்றுக் கிழமைகளின் பொழுதுகள் கழிந்திருக்கின்றன.

இப்படியாக ஒவ்வொரு இடத்தையும் அதனதன் நினைவுகளோடு தான் படிக்க முடிந்தது.

கிளாரிந்தா சர்ச், இங்கிலீஷ் சர்ச் இதனுள்ளே அமைந்த கல்லறைத் தோட்டங்கள் இவற்றுக்கெல்லாம் பலமுறை போயிருக்கிறேன். எனக்கு மிகப் பிடித்தமான இடங்கள் இவை.

வாஞ்சிநாதனால் சுடப்பட்டு மரணமடைந்த கலெக்டர் ஆஷ் துரையின் கல்லறையும் தமிழறிஞர் ஹென்றி பவரின் புத்தக வடிவிலான கல்லறையும் இருக்கக்கூடிய இடம் இங்கிலிஷ் சர்ச் வளாகம். இது தான் ஆங்கிலேயரால் முதன்முதலாக பாளையங்கோட்டையில் கட்டப்பட்ட கட்டடம்.

இந்த இடங்களை நண்பன் தனபாலும் நானும் பல புகைப்படங்களை எடுத்திருக்கிறோம். ஒரு கண்டோன்மென்ட் கல்லைத் தேடி மூன்று மணி நேரமாக அலைந்து கடைசியில் அதைக் கண்டுபிடித்தோம். அது நாங்கள் பலமுறை கடந்து வந்த சாலையில் ஒரு சாக்கடைக்குள் நின்று கொண்டிருந்தது.

தாய்த் தெய்வ வழிபாடும் குறித்தும், ஏன் இன்னமும் திருநெல்வேலி சாதியக் கட்டுபாட்டுக்குள் இருக்கிறது என்பதற்கான செய்திகளும் உள்ளன.

தென்னிந்தியாவின் ஆக்ஸ்ஃபோர்ட் என்று பாளையங்கோட்டையை சொல்வார்கள். நானும் பெருமைப்பட்டிருக்கிறேன். ஆனால் என்ன காரணம் என்று குறிப்பாகத் தெரியாது. அதிகளவில் பள்ளிகள் இருப்பதால் என்று நினைத்திருந்தேன். இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருந்த செய்திகள் நெகிழ வைத்தன.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆனி ஜேன் ஆக்ஸ்வித் என்கிற ஆங்கிலேயப் பெண்மணியிடம் பணியாள் வேலைக்கு சேர்ந்த சுப்பு என்கிற பார்வைத் திறன் அற்ற மாற்றுத் திறனாளி. இந்த சிறுவனுக்காக இங்கிலாந்தில் இருந்து ப்ரெய்லி முறைக் கல்வியை கற்றுக் கொள்கிறார் ஆனி ஜேன் ஆக்ஸ்வித். ஆங்கிலத்தில் இருக்கும் ப்ரெய்லியை தமிழுக்கு மாற்றுகிறார்.

அதற்காக தமிழைக் கற்றுக் கொள்கிறார். மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பி சுப்புவுக்குக் கற்றுத் தருகிறார். சுப்பு ஆர்வத்துடன் கற்றுக்கொள்ள, அவரையே ஆசிரியராக நியமித்து பள்ளி ஒன்றைத் தொடங்குகிறார். ஏழு மாணவர்களைக் கொண்டு தொடங்கப்பட்ட அந்தப் பள்ளி இப்போது வரை பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் கல்விக்கூடமாக இருந்து வருகிறது.

தமிழகத்தில் தொடங்கப்பட்ட பார்வைத் திறன் குறைந்த மாற்றுத் திறனாளிகளுக்கான முதல் பள்ளி உருவானதும், ப்ரெய்லியில் முதல் தமிழ்ப் புத்தகத்தை வெளியிட்டதும் பாளையங்கோட்டையில் தான்.

இது மட்டுமல்ல, செவி மற்றும் பேச்சுத்திறன் மாறுபாடு கொண்டவர்களுக்கான முதல் பள்ளியும் பாளையங்கோட்டையில் தான் தொடங்கப்பட்டிருக்கிறது. இதனைத தொடங்கியவர் ஃபிளாரன்ஸ் ஸ்வைன்சன் அம்மையார்.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்தப் பள்ளிகள் தான் எங்கள் ஊரை தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்ட் என்று சொல்ல வைத்திருக்கிறது.
s
ஒவ்வொரு இடங்களையும் அதன் வரலாறுகளையும் தெரிந்துகொள்ளும்போது புதிர்கள் விடுபடுவது போல இருந்தன.

இப்படியாக,

தோன்றுகிறபோது பளையங்கோட்டைப் பக்கம் அலைந்து திரியலாம்.

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments