சிதறிக்கிடந்த ரோஜா இதழ்கள் காலில் மிதிபடாமல் நடக்க வேண்டும் என கவனமாக எட்டு வைத்தாள் மணிமாலா. ரோஜாவும் மல்லிகையும் அவளுக்குப் பிடித்தமான மலர்கள். அதன் வாசனைகள் அவளின் கனவுகளில் துரத்தக்கூடியவை. வாசனை துரத்தும் இரவுகளின் விடியலில் அவள் மல்லிகையை சூடிக்கொள்ள நினைத்திருக்கிறாள். இதை அவள் நாதனிடம் சொல்லியதில்லை. சொன்னால் அடுத்த கணமே வாங்கித் தரக்கூடியவன் தான் என்றாலும் மணிமாலாவுக்கு சொல்லத் தோன்றியதில்லை.
நாதன் கிடத்தப்பட்டிருந்தான். மணிமாலா நாதனின் தலைமாட்டில் அமரவைக்கப்பட்டாள். அவளருகில் உட்காரத் தயங்கியோ விரும்பாமலோ இருவர் நகர்ந்து அமர்ந்தனர். மணிமாலாவுக்கு அவர்களை யாரென்று அறிந்து கொள்ளும் விருப்பமில்லை. வெறித்த பார்வை தான் எத்தனை வசதி என்று மணிமாலா அன்று உணர்ந்தாள். அவள் முன்பாக நடக்கும் சங்கதிகளை அவள் விரும்பாமலேயே கேட்டபடி இருந்தாள்.
“எப்படிடி உனக்கு மனசு வந்தது?” என்று நாதனின் அம்மா அழுது அரற்றினாள். தன்னை நோக்கிய கேள்வி என்று மணிமாலாவுக்கு தெரியும். இதற்கான பதிலை அவள் தனக்குள்ளாகவே ஆயிரம் முறை கேட்டுத் தெளிந்திருக்கிறாள். நாதன் இருந்திருந்தால் அவன் மணிமாலாவுக்கு ஆதரவாக பேசியிருப்பான். நாதன் எப்போதுமே தனக்காக பேசியதை மணிமாலா நினைத்துப் பார்த்தாள். அதை அவன் மணிமாலாவின் உவகை எனக் கொண்டான். எந்தவொரு சொல்லையும் செயலையும் மணிமாலாவை முன்வைத்தே செய்து கொண்டிருந்தான்.
மணிமாலாவுக்கு இப்போது புதிதாய் சில கண்கள் தன்னை துளைப்பது தெரிந்தது. நாதனின் தூரத்து உறவினர்களாக இருக்க வேண்டும் அல்லது பக்கத்து தெருக்களில் வசிப்பவர்களாகவும் இருக்கலாம். அவர்களுக்கு நாதனின் மரணம் ஒரு புதிர்..இந்தப் புதிரின் விடை மணிமாலாவுக்குத் தான் தெரியும் என்பது போல அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
லோசனி காதின் அருகே வந்து சொன்னாள். ‘மணி..போலிஸ் வந்துருக்கு. உன்கிட்ட விசாரிக்கனுமாம்..’ மணிமாலா சட்டென்று எழுந்தாள். லோசனி மணிமாலாவின் கையைப் பிடித்துக் கொண்டாள். அந்த வீட்டில் மணிமாலாவால் ஒவ்வொரு காலடியையும் தயக்கமின்றி எடுத்து வைக்க இயலும். இன்று பொருட்கள் நாதனின் மறைவின் பொருட்டு எங்கெங்கோ சிதறியிருக்கக்கூடும். நாதனின் அம்மா சுத்தத்துக்கு பெயர் போனவள். நாதனின் மரணத்தை எதிர்பார்த்திருந்த அவள் முன்கூட்டியே எந்தப் பொருட்களை இன்றைய தினத்தில் எங்கு வைக்க வேண்டும் என்று முடிவு செய்திருப்பாள்.
“நல்லா கேளுங்க..எல்லாத்தையும் செய்துட்டு தைரியமா இங்க வந்து உக்காந்துருக்கா..என் பையன் அவளுக்கு எவ்வளவு செய்துருப்பான்” என்று நாதனின் அம்மா உரக்கப் பேசிக்கொண்டிருந்தாள். அவள் வந்திருந்த போலீசிடம் தான் பேசியிருந்திருக்க வேண்டும். நாதனின் மரணத்தில் தன்னுடைய பங்கென ஒன்றுமில்லை என்பதாக அவளுக்கு நிரூபிக்க வேண்டியிருந்தது. நாதன் எதையோ அறுந்து இரண்டு நாட்கள் மருத்துவமனையில் கிடந்தபோது மணிமாலாவை வரவழைத்து ‘என் பையன் உசுருக்கு ஏதாவது ஒண்ணுன்னா..இந்த வீட்டை உனக்குத் தரமாட்டேன். அவன் ராவும் பகலுமா நின்னு கட்டித் தந்த வீடு“ என்றாள்.
ஒவ்வொரு காலடியையும் நிதானமாக எடுத்து வைத்து பக்கத்து அறைக்கு போனாள் மணிமாலா. பின்தொடர்ந்தாள் மணிமாலா. இதே அறையில் தான் மணிமாலாவுக்கும் நாதனுக்கும் முதலிரவு நடந்தது. அவள் நாதனிடம் இருந்து மூன்றாவது முத்தத்தைப் பெற்ற இடமும் அது தான். அந்த அறையில் அவள் வெளிச்சமென பரவி நிழலென வீழ்ந்திருக்கிறாள்.
“உக்காரும்மா”..என்றார் போலிஸ்.
பெண் போலிஸ்.
உக்கார வையுங்க என்றாள் போலிஸ் லோசனியைப் பார்த்து.
‘பரவல்ல…நான் உக்காந்துக்கறேன்..சொல்லுங்க மேடம்’
தன்னருகில் இருந்த நிழல் விலகிப் போனதைக் கவனித்தாள் மணிமாலா. லோசனி அந்த அறையில் இல்லை என்பதை உணர்ந்தாள்.
‘இங்க உங்களையும் என்னையும் தவிர யாருமில்ல மணிமாலா”
“ஆனா எல்லாரும் நம்மள தான் பாத்துட்டு இருக்காங்க மேடம்”
இதற்குள்ளான அர்த்தத்தை இன்ஸ்பெக்டர் அறிவாள். அதனால் அதைக் கடக்க நினைத்தாள்.
‘உங்க ஹஸ்பண்ட் நாதன் தற்கொலை செய்துட்டது உங்களுக்குத் தெரியும்..எதனால இப்படி முடிவு எடுத்தாரு?”
மணிமாலா கேள்வியை உள்வாங்கிக்கொண்டிருக்கும்போதே பதிலைத் தேடினாள்.
“மேடம்..ஒருத்தர் தற்கொலை செய்துக்க காரணம் நிச்சயமா இருக்கனுமா?”
“என்ன?”
“இப்படி வேணுமானா காரணத்தை சொல்லட்டுமா?..நாதன் எனக்காக தற்கொலை செய்துட்டாரு..அவர் தனக்குத் தானே திருப்திபடுத்த முடியாம செத்துப் போயிட்டாரு. ஒவ்வொரு தற்கொலையிலும் யாருக்கான செய்தியோ இருக்கும் மேடம்..நாதனோட மரணத்துல அவரே அவருக்கான செய்தியை சொல்லிக்கிட்டாரு”
“புரியற மாதிரி சொல்லும்மா..ஏதாவது சம்பவம் மாதிரி இருந்தா சொல்லு..உங்களுக்குள்ள சண்டை வந்ததா? நீ எதுவும் அவரை சொன்னியா?”
“சம்பவமா? ஒருத்தர் செத்துப் போறதுக்கு சம்பவங்கள் காரணங்களா இருக்கறதில்ல மேடம்..மனநிலை தான் காரணம்”
இன்ஸ்பெக்டர் நெற்றி நரம்பு பொறுமையில்லாமல் துடித்து அடங்குதை மணிமாலா அறிந்து கொண்டாள். அவளுடைய விரல்கள் இன்ஸ்பெக்டரின் நெற்றியை வருடாமலேயே மணிமாலா அதை உணர்ந்திருந்தாள்.
“இப்ப என்னோட ரிப்போர்ட்ல உன் வீட்டுக்காரர் இறந்ததுக்கு காரணம் என்னன்னு எழுதறது..நீ அவரை விட்டுப் போனதால தான் செத்துப் போயிட்டாருன்னு எல்லாரும் சொல்றாங்க”
“தெரியும் மேடம்..இப்படி எல்லாரும் சொல்றதுக்காகவே அவர் செத்துப் போயிருக்காரு”
“ஏம்மா? உன்னை நல்லா பாத்துக்கிட்டாருனு எல்லாரும் சொல்றாங்க..போன வருஷம் கூட எதோ பெரிய அவார்ட் வாங்கினியாம்..மேடையில கூட அவருக்குத் தான் நன்றி சொன்னியாம். எதுக்கும்மா அவரை இப்படி பண்ணிட்டே?”
“ஆமாம் மேடம்..உண்மை தான். நீங்க நிறைய கேள்விப்பட்டுட்டு வந்து கேக்கறீங்க. உங்களுக்கு நான் சொல்றதைக் கேக்கற பொறுமை இருக்காது. ஆனா அஞ்சு நிமிஷத்துக்குள்ள ஒரு வாழ்க்கையை சொல்லச் சொல்றீங்க..எங்க ரெண்டு பேரோட மனநிலையை பேசணும்னு சொல்றீங்க..ஒரு மனுஷன் ஏன் செத்துப் போனான்னு செத்த அவனுக்கேத் தெரியுமான்னு தெரியாது..ஆனா எங்கிட்ட கேக்கறீங்க..உங்களுக்கு ஒரு சம்பவம் வேணும்..அவ்வளவு தான மேடம்..உங்களுக்காக சொல்றேன்”
சப் இன்ஸ்பெகடர் கொஞ்சம் சுவாரஸ்யமடைவது போல மணிமாலாவுக்குத் தெரிந்தது. சப்இன்ஸ்பெக்டரின் உடல் அசைந்து முன் வந்தது. அவளது நிழல் மணிமாலாவின் கால்களில் அசைந்து கொண்டிருந்தது. வந்திருக்கும் சப் இன்ஸ்பெக்டருக்கு சற்று கனத்த சரீரம் என்பதை உள்ளுணர்ந்தாள் மணிமாலா.
“நீங்க சொன்ன அந்த அவார்ட் தர்ற விழாவுக்கு நான் என்ன புடவை கட்டியிருந்தேன் தெரியுமா?”
சப் இன்ஸ்பெக்டர் இயல்பாய் தன் உடலை முன்பக்கத்துக்கு நகர்த்தினாள்.
“சொல்லு”
“எனக்குத் தெரியாது..அதனால தான் உங்கக்கிட்ட கேட்டேன்..உங்க பின்னால இருக்கிற மேஜையில் அவார்ட் போட்டோ இருக்கும்… அதுல பார்த்து சொல் முடியுமா மேடம்?”
இன்ஸ்பெக்டர் மேஜையினைப் பார்த்தாள். அதன் மேல் அந்த புகைப்படம் சட்டமிடப்பட்டு இருந்தது. அதில் மணிமாலா அந்த சேலையை மிக நேர்த்தியாகக் கட்டியிருந்தாள்.
“ஆமா போட்டோ இருக்கு..பச்சையில, பிங்க் பார்டர் போட்ட புடவை கெட்டியிருக்கே”
“இந்த அவார்ட் வாங்கி ஒரு வருசம் ஆவுது..இன்னிக்குத் தான் என்ன புடவை கட்டியிருந்தேன்ன்னு கேட்டுத் தெரிஞ்சுசுக்கறேன்.”
சப் இன்ஸ்பெக்டருக்கு கொஞ்சம் ஆர்வம் ஏற்பட்டது.. மீண்டும் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு,
“அந்த புடவையில உடம்பெல்லாம் பிங்க் கலருல சின்ன சின்ன பூ போட்டுருக்கு”
மணிமாலா மெலிதாய் சிரித்தாள்.
“எனக்கு நிறங்கள் தெரியாது மேடம்..ஆனா எனக்குள்ள சில வண்ணங்கள் இருக்கு..அந்த வண்ணங்களோட தான் நான் எல்லாத்தையும் புரிஞ்சுக்கறேன்”
“ஓ!”
“ஸாரி…நான் எதோ சொல்ல வந்து உங்களை குழப்பிட்டேன் மேடம்..சம்பவம் கேட்டீங்கள்ல?”
“சொல்லு”
“இந்த அவார்ட் எனக்கு எதுக்குத் தந்தாங்க தெரியுமா? ஒரு பள்ளிக்கூடத்துல ஆசிரியையா வேலைப் பாக்கறேன்.என்னை மாதிரி உள்ளவங்க வாசிக்கறதுக்காக புத்தகங்களை ப்ரெய்லில எழுதறேன்..நிறைய முறை ரத்த தானம் செய்துருக்கேன்..ஆறு குழந்தைகளை தத்து எடுத்து படிக்க வைக்கறேன்..”
“பரவாயில்லையே…இவ்வளவு செய்துருக்கியா நீ”
மணிமாலாவுக்கு இது மாதிரியான வார்த்தைகளை உள்வாங்கும்போது ஏற்படுகிற எரிச்சல் இப்போதும் வந்தது. எப்போதும் போல கடக்க நினைத்தாள்.
“மணிமாலா நீ எதோ சொல்ல வந்தியே அதைச் சொல்லு..”
“ம்….இந்த அவார்ட் வாங்கறதுக்கு முந்தைய நாள் நாதன் என்கிட்டே மேடையில என்ன பேசப்போறேன்னு கேட்டாரு..மனசுல இருக்கறதை பேச வேண்டியது தான் அப்படின்னு சொன்னேன்.. நாதன் ஒரு காகிதத்துல எழுதி வச்சிருந்ததை வாசிச்சாரு..அதுல கண்கள் இல்லாத நானே சாதிக்க முடியுதுனா, நீங்க எல்லாம் எவ்வளவு செய்யலாம்..அப்படின்னு நான் சொல்லனும்னு எழுதியிருந்தது..அதைக் கேட்டதும் எனக்கு சுருக்குனு வந்தது மேடம்”
“அவரு எழுதினதுல தப்பேதும் இல்லையே…”
மணிமாலா மௌனமானாள். அந்த நாளை தனக்குள் கொண்டு வந்தாள். அன்றைய தினம் நாதனுக்கும் மணிமாலாவுக்கும் இது குறித்து விவாதம் எழுந்தது. மணிமாலா அன்றைய தினம் மேடையில் பேச வேண்டியதைப் பற்றி யோசித்திருக்கவில்லை. அவளுக்கு அந்த விருது விழாவே ஒவ்வாமையை ஏற்படுத்தியிருந்தது. அச்சில் தேய்ந்தது போல அனைவரின் வாயிலிருந்தும் வெளிப்படும் சொற்கள் அவள் செவிகளில் முட்டி மோதிக் கொண்டிருந்தன. தன் இயல்பில் வாழ பிடிவாதம் கொண்டிருந்தாள். இந்த உலகின் ஒவ்வொரு மூலைகளிலும் ஓசையின்றி பல ஆயிரம் பேர் செய்து கொண்டிருப்பதைத் தான் செய்கையில் தனக்கு மட்டும் இந்த கௌரவம் எதற்காக என்கிற கேள்வியை அவள் நாதனிடம் முன்வைத்தாள். அவன் அவள் கைபிடித்து மேடைக்கு அழைத்துப் போகும் நொடிகளுக்காக காத்திருந்தான். “விருதுகள் எனக்கல்ல இழந்த என் கண்களுக்கானவை” என்றாள் நாதனிடம். அவன் ‘அதனால் என்ன!’ என்றான்.
“இழந்த என் கண்கள் எனக்கு அச்சமயங்களில் அவமானத்தைத் தருகின்றன” என்றாள்.
“ஏன் என்னவெல்லாமோ யோசிக்கிறாய்?..கைதட்டல்களை புறந்தள்ளாதே” என்றான்.
“உங்களுக்கு என்னைப் புரிவதில்லை” என்றாள்.
பிறகு அப்படி சொல்லுவதையும் நிறுத்திக் கொண்டாள்.
சப் இன்ஸ்பெக்டர் “மணிமாலா…” என்றழைத்தாள்.
“மேடம்…உங்கக்கிட்ட இனிமே எதுவும் சொல்ல முடியாதுன்னு எனக்குத் தோணுது..நீங்க ஒண்ணு செய்யறீங்களா? நாதன் இறந்து போனது அவர் மனைவி மணிமாலாவின் மீது கொண்ட வெறுப்பினால் தான் அப்படின்னு உங்க ரிப்போர்ட்ல எழுதிடறீங்களா?”
எரிச்சலடைந்தாள் சப் இன்ஸ்பெக்டர்.
“யம்மா…பொழுது போகாம உன் முன்னாடி வந்து உக்காந்து கிடக்கல..புரியுதா? எனக்கு சுருக்கமா சொல்லு ..உன் வீட்டுக்காரர் எதனால இறந்து போனாரு?”
“சுருக்கமாத் தானே கேக்கறீங்க.. அவர் செத்து என்னை உயிரோட கொல்றதுக்கு..போதுமா?” என்று சட்டென எழுந்தாள் மணிமாலா. அடுத்த அறையில் காத்திருந்த லோசனி ஓடி வந்தாள்.
லோசனியிடம் சப் இன்ஸ்பெக்டர், “யம்மா..இந்தப் பொண்ணு எதையும் உருப்படியா சொல்ல மாட்டேங்குது..இது மாதிரி எழவெடுத்த காரியத்துக்குத் தான் என்னை அனுப்புவாங்க..பாவமே கண்ணு தெரியாத பொண்ணாச்சே பதமா பேசும்வோம்னு பேசறேன்…ரொம்பத் தான் எகிறுது. இது மாதிரி ஒரு பொண்ணை ஒருத்தன் கல்யாணம் பண்ணதே பெரிய விஷயம்.. அந்த எண்ணம் கூட இந்தப் பொண்ணுக்கு இல்லையே” என்று மூச்சு வாங்க பேசிவிட்டு அடுத்த வார்த்தைக்குத் திண்டாடினாள் சப் இன்ஸ்பெக்டர்.
எழுந்த மணிமாலா அப்படியே உட்கார்ந்தாள். சப் இன்ஸ்பெக்டர் இருக்கும் திசையை பார்த்துக் கொண்டே இருந்தாள். அவளின் மௌனமும் கண்களின் அலைபாய்தலும் சப் இன்ஸ்பெக்டருக்குள் தாள முடியாத அவஸ்தையைக் கொடுத்தது. ‘நல்ல கேசு நமக்குன்னு வந்து வாய்ச்சிருக்கு’ என்று தன்னை இங்கு அனுப்பிய இன்ஸ்பெக்டர் மீது பொசுங்கும் சொல்லை உள்ளுக்குள் சொல்லிக் கொண்டாள்.
“மேடம்..நீங்க என்னென்ன பேசியிருக்கீங்கன்னு உங்களுக்கு மறந்து போகும்..நான் உங்களுக்கு ஆயிரத்துல ஒருத்தி,.ஒரு கேஸ். அவ்வளவு தான்..ஆனா நீங்க என்ன பேசினீங்க, எங்க மூச்சு விடறதுக்கு இடைவெளி எடுத்துக்கிட்டீங்க, எந்த வார்த்தையில குரலை உச்சத்துக்கு கொண்டு போனீங்க இதெல்லாம் எனக்குள்ள பதிஞ்சு போயிடும் மேடம்..இனி உங்க குரலை எந்தத் திசையில என்னிக்குக் கேட்டாலும் ஒவ்வொரு எழுத்தும், சொல்லும், உங்க மூச்சும் சேர்த்து தான் எனக்குள்ள கேக்கும். எனக்கு நீங்க கண்ணு, மூக்கு முகம் கிடையாது. நீங்க ஒரு குரல். ஒரு ஸ்பரிசம்..ஒரு அசைவு”
இன்ஸ்பெக்டர் மணிமாலாவையே பார்த்தாள். லோசனி இன்ஸ்பெக்டருக்கு அருகில் இருந்த தண்ணீரை எடுத்துத் தந்தாள். வேண்டாம் என்று மறுப்பாய் கையை அசைத்தாள் இன்ஸ்பெக்டர். பெருமூச்சினை தந்துவிட்டு அமைதியானாள். அவளுடைய கண்கள் தரையில் ஒட்டியிருந்த ஸ்டிக்கர் பூக்கோலத்தை பார்த்துக் கொண்டிருந்தது. மணிமாலா தன்னை ஊடுருவதை உணர்ந்தாள் சப் இன்ஸ்பெக்டர்.
“சரிம்மா..சொல்லு..கேக்கறேன்”
“என்ன சொல்லணும் மேடம்? நாலு வருசம் என் கூட வாழ்ந்தவர நான் உணர்ந்துக்கிட்டேன் மேடம்? எனக்கு மூச்சு முட்டிருச்சு. ஒவ்வொரு நிமிஷமும் என் குறையை எனக்கு எடுத்துக் காட்டிட்டே இருந்த அவரோட குரல் எனக்குள்ள வெறுமையை ஏற்படுத்தினது”
இன்ஸ்பெக்டர் லோசனியைப் பார்த்து தலையசைத்தாள். லோசனி அங்கிருந்து அகன்றாள்.
புதிதாய் சில குரல்கள் கூடத்தில் கேட்டன, நாதனின் அம்மா ஒவ்வொரு மனிதருக்கும் ஏற்ற மாதிரி தனது குரலை ஏற்றவும் இறக்கவும் பழகியிருந்தாள். இப்போது அவள் குரல் தாழக் கேட்டது. வந்திருப்பது அத்தனை முக்கியமான நபரை இருக்க முடியாது என்று நினைத்துக் கொண்டாள் மணிமாலா.
இன்ஸ்பெக்டர் ஒருமுறை எழுந்து உட்கார்ந்தது மணிமாலாவுக்கு தரை கொடுத்த மெல்லிய அதிர்வில் தெரிந்தது,
“மேடம்..யாராவது யாரையாவது உருவாக்க முடியுமா?”
“என்ன?”
“நீங்க போலிஸ் வேலைக்கு வரணும்னு உங்களுக்கு எப்ப தோணிச்சு?”
“அது..சின்ன வயசுலேயே..எங்கப்பா என்னை போலிசாக்கனும்னு நினைச்சாரு”
“ஆனா நான் டீச்சராகனும்னு நினைக்கல..எனக்கு வரையணும்னு ஆசை.. The job of the artist is always to deepen the mystery” பிரான்சிஸ் பேகன் அப்படின்னு ஒருத்தர் சொன்னது இது. மர்மங்களை கண்டடையறது தான் ஒரு கற்பனைவாதியோட வேலையா இருக்க முடியும் இல்லையா? .நான் மர்மங்களை கண்டடைய விரும்பினேன் மேடம்…அஞ்சு வயசுல எனக்கு கண்ணு போச்சு..அதுக்கப்புறம் ஒவ்வொருத்தர் மனசுலேயும் உள்ள மர்மங்களை நான் தேட ஆரம்பிச்சேன்..ஒரு ஓவியரா ஆக முடியலேனாலும் பேகன் சொன்ன மாதிரி மர்மங்களைக் கண்டுபிடிக்க நினைக்கற ஒவ்வொருத்தருமே ஓவியர் தான்..”
தொடக்கத்தில் சிறு குறிப்புகளாக மணிமாலா சொன்னதைப் பற்றி எழுதிக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் நேரான பார்வையோடு மணிமாலாவை சந்தித்தாள்.
“நான் நாதனைத் தெரிஞ்சுக்க விரும்பினேன்..அதுல நான் வெற்றியடையும்போதெல்லாம் அவர் என்னை ஜெயிக்கணும்னு நினைச்சாரு..ஜெயிக்கணும்னு நினைக்கும்போதெல்லாம் அவர் அடுத்தக் கட்டத்துக்கு என்னை வாழ்க்கையில நகர்த்திக்கிட்டே போனாரு..நான் யாரு, நான் செஞ்ச வேலைகள் என்ன, என்னோட உழைப்பு என்னன்னு அவரே ஒவ்வொரு பத்திரிகைக்கும் எழுதிப் போடுவாரு..சில பத்திரிகைகள்ல இருந்து என்னை பேட்டி எடுக்க வருவாங்க..நான் வெறும் சாட்சி..எனக்கான குரலா அவர் தான் பேசினாரு..அவங்க எல்லாருமே போகும்போது நாதனை ஒரு உதாரணப் புருஷனா பார்த்தாங்க.. இவளை நான் தான் உருவாக்கினேனு எல்லார்கிட்டயும் அவர் நிரூபிக்க அவர் போராடினதை நான் பார்த்தேன். அது ஒரு விதத்துல என்னைத் தோற்கடிக்கற யுத்தினு எனக்குத் தெரியும்”
“உன்னை அவர் ஜெயிக்கத் தானேமா வச்சாரு”
“எது ஜெயிக்கறது மேடம்? நீ என்னால தான் ஜெயிச்சன்னு சொல்லும்போது அங்க வெற்றிக்கு என்ன மதிப்பிருக்கு?”
தன்னையறியாமல் இன்ஸ்பெக்டர் தலையாட்டினாள். எதையோ நினைத்து மீண்டுமாய் பெருமூச்சினை வீசி எறிந்தாள். . அந்த மூச்சின் ஒலியை உள்வாங்கி மணிமாலா அமைதியாக இருந்தாள். அந்த பெருமூச்சு தன் காலடியிலேயே சுழல்வதாக மணிமாலாவுக்குப் பட்டது. கால்கள் சற்று உஷ்ணமாயின.
“நாதன் என்னைக் கல்யாணம் செய்துக்க வரும்போது என்னால மறுக்க முடியல. இதுவரை வாழ்க்கையில் எனக்குன்னு எதையும் தேர்ந்தெடுக்கல..போடற ட்ரெஸ்ல இருந்து சிரிக்கற சிரிப்பு வரைக்கும் நான் மத்தவங்க தயவுல தான் இருக்கணும். நான் உடைக்க நினைக்கறேன் மேடம். எனக்கு இந்த சமூகம் செய்யற ஒவ்வொன்னும் இயல்பா இருக்கணும்னு நினைக்கறேன். ஆனா ஒவ்வொரு முறையும் நான் தோற்கடிக்கப்படறேன். எப்பவும் எல்லாருக்கும் நன்றியுள்ளவளா இருக்கணும்னு கட்டாயபடுத்தப்படறேன். அது என் வீட்டுல இருந்தே தொடங்கும்போது அதோட வலியை எப்படி மேடம் ஒரு சம்பவமா சொல்ல முடியும்?’
“எனக்குத் தான மேடம் கண்ணு தெரியாது? ஆனா நாதனுக்குத் தெரியுமே..என் முகம் ஒவ்வொரு முறையும் எப்படி இருக்கும்னு நான் கேட்டுருக்கேன்..அவர் என்னை நெருங்கும்போதும், கழுத்துல முத்தம் கொடுக்கும்போதும் என் முகம் எப்படி இருக்கும்னு நாலு வருசத்துக்கு முன்னாடி கேட்டேன். முகம் சிவந்துருக்கான்னு கேட்டேன். அவரு சிவப்புன்னா என்னன்னு தெரியுமான்னு கேட்டாரு? உணர்வுகளுக்கு நிறமிருக்கு..அது எனக்குப் புரியும்னு சொன்னேன்..அவரு எனக்குப் புரியாயதுன்னு முடிவு பண்ணிட்டாரு..நான் அதுக்கப்புறம் கேக்கறதே இல்லை..”
“இந்த வீடு என்னோட சம்பளத்துல கட்டினது. இதை விட்டு நான் வெளியே போறேன். நீங்க உங்க அம்மாவோட இருங்கன்னு சொன்னேன். அவர் அதை அவமானமா நினைச்சாரு. அவரோட உதவியில்லாம நான் வாழ முடியுங்கறதை அவரால ஏத்துக்க முடியல. இத்தனை நாள் என்னோட வெளிச்சம்னு அவர் எல்லார்கிட்டயும் வாங்கின பேரை, என் சாதனைக்கு பின்னாடி ஒளிவட்டமா அவர் இருந்ததை நிரூபிக்க நான் இல்லாமப் போனதை அவரால தாங்கிக்க முடியல.. என்கிட்டே தோற்றத்தை அவரால ஏத்துக்க முடியல. அவரோட சாவுல என்னைத் தோற்கடிக்க நினைச்சாரு… இதை நான் ஒரு சம்பவமா எப்படி சொல்றது மேடம்?”
என்று மணிமாலா அமைதியானாள்.
மணிமாலா மௌனம் மீள்வாள் என சப் இன்ஸ்பெக்டர் அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள். மணிமாலா அசையாமல் அமர்ந்திருந்தாள். சப்இன்ஸ்பெக்டர் இருக்கும் திசைநோக்கி கையெடுத்து கும்பிட்டாள். எழுந்து போனாள்.
சப் இன்ஸ்பெக்டர் அந்த அறிக்கையில் என்ன எழுத வேண்டுமெனத் தீர்மானித்திருந்தாள்.