(இயக்குநர் , ஒளிப்பதிவாளர் திரு.செழியன் ஒளி வித்தகர்கள் புத்தகத்துக்கான அணிந்துரை)
திரைப்படம் என்பது காட்சி மொழியால் ஆனது என்பது நமக்குத் தெரியும். அந்தக் காட்சிமொழி என்பது என்ன? வெறுமனே நாம் நினைப்பதை ஒரு கேமரா வைத்து எடுத்தால் அது காட்சியாகிவிடுமா? எழுதுவது எல்லாம் இலக்கியம் ஆகிவிடுகிறதா?
காட்சி மொழிக்கென்று சில அடிப்படைகள் இருக்கின்றன. சிறுகதை ஒன்றை எடுத்துக் கொள்ளலாம். அது வார்த்தைகளால் ஆன ஒரு கலைவடிவமாக இருக்கிறது. அது திரைப்படமாக மாறும்போது அறிவியலும்,தொழில் நுட்பமும் கலந்து அது காட்சியாக மாறுகிறது.
காகிதத்திற்கும் திரைக்கும் இடையில் கேமரா இருக்கிறது. இந்தக் கேமராவை எப்படிக் கையாள வேண்டும். ?வார்த்தைகள் உருவாக்கும் சித்திரங்களை, திரையில் அதனினும் மேலான உணர்வுள்ள காட்சியாக மொழிமாற்றம் செய்ய என்ன செய்யவேண்டும்? உதாரணத்திற்கு பதேர் பாஞ்சாலியின் திரைக்கதையைப் படித்துவிட்டு அந்தப் படத்தைப் பாருங்கள். வார்த்தைகள் எப்படி அதிசயக்க வைக்கும் காட்சிகளாக மாறுகின்றன என்பது புரியும்.
காட்சியாக மாற்றும்போது ஒரு சிறந்த ஒளிப்பதிவாளர் என்ன செய்கிறார்? இயக்குனருக்கும் அவருக்குமான புரிதல் என்ன? எழுதப்பட்ட காட்சி ஒரு நாளின் எந்த நேரத்தில் எந்த ஒளியில் எடுக்கப்பட்டால் சிறப்பாக இருக்கும்? ஒரு நல்ல ஒளிப்பதிவாளருக்கு ஓவியங்கள் எப்படி உதவி செய்யும்?ஒரு சட்டகத்தை வடிவமைப்பது (Composition) என்றால் என்ன? வண்ணங்கள் ஒரு காட்சியின் தன்மையை எப்படி மாற்றுகின்றன? கேமரா நகர்வு என்றால் எப்படி இருக்கவேண்டும்?
Masters of light எனும் ஆங்கில நூலின் ஒருபகுதியின் மொழிபெயர்ப்பான இந் நூலில் இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் விடைகள் இருக்கின்றன.
ஒரு காட்சியில் நடிகர் எங்கு நிற்கிறார்? அந்த அறை முழுக்க வெளிச்சமாக இருக்க வேண்டுமா? நடிகருக்கு மட்டும் வெளிச்சம் போதுமா? புகழ்பெற்ற ஒளிப்பதிவு இயக்குனர் நெஸ்டர் ஆல்மன்ட்ராஸ் ’’முழுமையாக எதையும் காட்ட வேண்டியதில்லை’என்கிறார்.
ஒரு கதை சொல்லும்போது கதையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று உங்களால் ஊகிக்க முடிந்தால் அது ஒரு நல்ல திரைக்கதை இல்லை. அதுபோல ஒளிப்பதிவில் ஒரு ஷாட் வந்த பிறகு அடுத்து இந்த ஷாட்தான் வரும் என்று ஊகிக்க முடிந்தால் அது காட்சிப் படுத்தலில் உள்ள குறை. த்ரூபோ தன் படங்களில் ஷாட்களை எப்படி அடுக்குவார் என்று ஆல்மன்ட்ராஸ் சொல்கிறார்.
ஒரு ஒளிப்பதிவாளர் படப்பிடிப்பில் வேகமாக வேலை செய்ய என்ன செய்யவேண்டும்? என்ன மாதிரியான பயிற்சி அவருக்கு இருக்கவேண்டும் ? ஜான் அலோன்ஸொவின் நேர்காணலில் இதற்கான விடை இருக்கிறது. ஒளிப்பதிவில் Cheating என்பது முக்கியமான ஒரு நுட்பம். ஒரு காட்சி மருத்துமனையில் நடக்கிறது என்றால் நீங்கள் மருத்துவமனைக்குப் போய் அந்தக் காட்சியை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் வீட்டின் அறையிலேயே அதை எடுக்க முடியும்.
பரதேசி படத்தில் கிராமத்து மக்கள் அடிமைகளாக புலம்பெயர்ந்து வெகுதூரம் நடந்து செல்வதாக ஒரு பாடல் காட்சி இருக்கிறது. இந்தப் பாடலின் பெரும்பாலான ஷாட்கள் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுள்ள ஒரே மைதானத்தில் எடுக்கப்பட்டவை. நாம் கண்களின் வழியே ஒரு இடத்தைப் பார்ப்பதற்கும் அதே இடத்தை கேமரா வழியாக நாம் விரும்பும் லென்ஸ் களின் வழியே பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.
அதே படத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளிகள் தங்கி இருக்கிற இடம் பெரிய குளம் என்கிற ஊரின் மலைப்பகுதி. ஒரு ஷாட்டில் அவர்கள் தங்கி இருக்கிற குடிசையில் இருந்து நடந்துவருவார்கள். அடுத்த ஷாட்டில் மூணார் தேயிலைத் தோட்டத்தில் நடந்து செல்வார்கள். சில கோணங்களையும் காட்சியின் பின்னணியையும் நுட்பமாக இணைப்பதன் மூலம் தூர வித்தியாசம் இன்றி இடங்களை இணைக்கமுடியும்.
இவ்வாறு sounder என்கிற படத்தில் ஒரு காட்டுக்குள் நடக்கும் பிரமிக்க வைக்கும் துரத்தல் காட்சியை இருந்த இடத்தில் இருந்து கொண்டே எப்படி எடுத்தோம் என்று ஜான் அலான்சோ சொல்கிறார்.இந்தக் காட்சியைப் பார்த்துவிட்டு அலான்சோவின் நேர்காணலைப் படித்தால் நம்மால் பிரமிக்காமல இருக்கமுடியாது.
இரவுக் காட்சிகள் எப்போதுமே ஒளிப்பதிவாளர்களுக்குச் சவாலானவை. அதுவும் மின்சாரம் இல்லாத இடங்கள் என்றால் இன்னும் சுவாரஸ்யம். அதையெல்லாம் எப்படிக் கையாள்வது? ஒரு அறைக்குள் இரவுக் காட்சி எடுக்கும்போது சன்னல் வழியே மட்டும் வெளிச்சம் வந்தால் என்னாகும்?எந்தச் சூழலில் என்ன லென்ஸ் பயன்படுத்தவேண்டும்? இந்த நூலில் விளக்கங்கள் இருக்கின்றன.
‘ஜோக்கர்’ படத்தின் நீளமான முதல் காட்சியில் நடிகர் வெளியிலிருந்து வீட்டுக்குள் வருவார். வெளியில் வெயில் அடிக்கிறது. வீட்டுக்குள் மிகக்குறைவான வெளிச்சமே இருக்கிறது. காட்சி ஒரே ஷாட்டாக இருப்பதால் இந்த இருவேறான ஒளியை வித்தியாசம் தெரியாமல் எப்படி இணைப்பது? இந்த நூலில் அதற்கான பதில் இருக்கிறது.
ஜான் பெய்லியிடம் ஒரு காட்சியை எந்தக் கோணத்தில் எப்படி அமைக்க வேண்டும் என்று composition பற்றிக் கேள்வி கேட்கிறார்கள். அதற்கு அவர் பதில் சொல்கிறார்.’எந்த ஒரு ஷாட்டுக்கும் பதினைந்துவிதமாக composition செய்து பார்ப்பேன்’ என்கிறார்.
ஒரு முறை புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் கிறிஸ்டோபர் டோயலிடம்’ ஒளியமைப்பு செய்வதை எப்படிக் கற்றுக்கொள்வது? அதற்கு எதாவது பயிற்சி இருக்கிறதா என்று கேட்கிறார்கள்.
அதற்கு அவர் சொன்ன எளிமையான பதில் ’பாருங்கள்’.அவ்வளவுதான்.
இந்த நூலில் அலான்சோவிடம் ‘நேரடியான ஒளியைப் பயன்படுத்துவது எப்படி?’ என்று கேட்கிறார்கள். அதற்கு அலான்சோ அழகாக ’உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ செய்யுங்கள்.எது நல்லது என்று நினைக்கிறீர்களோ அதையே பின்பற்றுங்கள்’என்கிறார்.
லைலா மஜ்னு காதல்கதையில் லைலா என்ன அவ்வளவு அழகானவளா? என்று ஒரு கேள்வி வருகிறது. அதற்கு பதில் லைலா எவ்வளவு அழகானவள் என்று உங்களுக்குத் தெரிய வேண்டுமெனில் அவளை நீங்கள் மஜ்னுவின் கண்கள் வழியாகப் பார்க்கவேண்டும்’என்று கவிதைபோல பதில் வருகிறது. அதுபோல ஒரு திரைப்படத்தின் அழகை முழுமையாக உணர வேண்டுமெனில் நீங்கள் ஒரு ஒளிப்பதிவாளராக இருக்கவேண்டும்.
ஏனெனில் ஒளியை அறிவது என்பது அபூர்வமான அனுபவம்..உள்ளத்தில் ஒளி உண்டாயின்’ என்று பாரதி சொன்னதும் இதுதான். தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார். அந்த ஒளியை உணர்வதுதான் அனுபவம். குழந்தைகள் ஒளியின் தன்மையை எப்போதும் அறிந்திருக்கிறார்கள்.
ஒருமுறை பூங்காவில் இருக்கும் போது எனது மகள் தரையையே பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து,’என்ன? ‘என்று கேட்டேன். ‘இங்க பாருப்பா…. லைட்டும் ஷேடோவும் விளையாடுது’. பிறகு அந்தக் காட்சியை நானும் பார்த்தேன்.
வெயிலில் இலைகள் அசைகின்றன. அதன் நிழல் தரையில் விழுகிறது. காற்று அடிக்கும் போது நிழல் இருக்கும் இடத்தில் வெயிலும் வெயில் இருக்கிற இடத்தில் இலையின் நிழலும் மாறிமாறி விழுகின்றன. அதை விளையாட்டு என்ற குழந்தையின் சொல்லுடன் பொருத்தியதும் அந்த சாதாரணமான காட்சி கவிதையாக மாறுகிறது. இதை கியாரெஸ்தமி படமாகவே எடுத்திருக்கிறார்.
இந்த நூலிலும் ஒரு காட்சி இருக்கிறது.பில் பட்லர் மேசையில் இருந்த காலிபாட்டிலை எடுத்தபோது அவர் மகள் பாருங்க எவ்வளவு அழகு என்கிறாள்.பட்லர் பார்க்கிறார்.’ அந்தப் பச்சை நிறப் பாட்டிலின் மேல் ஒளிபட்டு வெள்ளை நிற மேஜை மேல் பச்சை நிறத்தில் ஒளி சிதறிக்கிடந்தது. இது பார்ப்பதற்கு அழகாக இருந்தது.ஆனால் நான் அதைப் பார்க்கவில்லை. இத்தனைக்கும் என்முன்னால் தான் அது இருந்தது.’ என்கிறார்.
இதுபோல நம் கண் எதிரில் ஒளியின் விளையாட்டு நடந்துகொண்டே இருக்கிறது. நமக்குப் பார்ப்பதற்கான அவகாசம் இல்லை. திரைப்படம் என்பது ஒளியின் விளையாட்டுத்தான். கண்கள் இருப்பவன் பார்க்கக் கடவன் என்பதும் இதுதான்.
அந்த ஒளி விளையாட்டின் அழகியலை, நுட்பத்தை, ஒளியின் தன்மையை உணர்ந்த மேதைகளின் நேர்காணல்களைப் பதிவு செய்கிறது இந்நூல்.
தமிழில் இதுபோன்ற நுட்பம் சார்ந்த நூல்கள் நிறைய வர வேண்டும். பொதுவாக ஒருநூலை வேற்று மொழியில் படித்து மூடிவைத்துவிடாமல் அதைத் தன் மொழியில் எல்லோரும் படிக்கவேண்டும் என்று மொழிபெயர்ப்பதற்கு ஓர் உயர்ந்த மனநிலை வேண்டும். தொடர்ந்து திரைப்படத்துறை சார்ந்த நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வருகிற தீபா இந்த நூலையும் அதே அக்கறையுடனும் ஈடுபாட்டுடனும் மொழிபெயர்த்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர்கள் மட்டுமல்ல திரைப்படத்தின் சகல துறையில் இருப்பவர்களுக்கும் பயன் படக்கூடிய இந்த அற்புதமான நூலைத் தாய் மொழியில் தந்திருக்கும் உங்களின் முயற்சி அற்புதமானது. வாழ்த்துக்கள்.
திரு.செழியன்
இயக்குநர், ஒளிப்பதிவாளர்
புத்தகம் வாங்க
https://www.commonfolks.in/books/d/oli-viththagaragal-part-1-2