நீர்வழிப் படூஉம்

0
286

எழுத்தாளர் தேவி பாரதியின் ‘நொய்யல்’ நாவலைத் தான் முதலில் வாசித்திருந்தேன்.2023ல் கடைசியாக முடித்த நாவல் ‘நீர்வழிப் படூஉம்’.

 ஒரு ஊரார் சேர்ந்து ஒரு கிராமத்தை உருவாக்கிய நாவல் நம்மிடம் உண்டு. கோபல்ல கிராமத்தைச் சொல்லலாம். ஒரு கோயிலை உருவாக்கிய நாவலும் உண்டு. ‘உடையார்’ நாவலைச் சொல்லலாம். ஒரு சமூகத்தின் கதை உண்டு – “அம்மன் நெசவை’ச் சொல்ல முடியும். ஆனால் ஒரு நாவல் ஒரு சமூகம் இல்லாமல் போனால் என்னவானது என்று சொல்லியிருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. அதை ‘நீர்வழிப் படூஉம்’ சொல்கிறது. குடிநாவிதர்கள் சமூகத்தை நாம் அறிந்து வைத்திருக்கிறோம் என்று யாரேனும் சொன்னால்., “அதெல்லாம் இல்லை.. சொல்ல இன்னும் அதிகமிருக்கிறது’ என்று தேவிபாரதி சொல்லியிருக்கிறார். அதை அவர் எப்படி சொல்கிறார் என்பது தான் நாவலைப் பற்றி சொல்ல வேண்டியது.

ஒரு மரணம் ஏற்பட்டுவிடுகிறது. அங்கிருந்து தொடங்கும் கதை  ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த சித்திரத்தையும் உள்ளிழுக்கிறது. குடி நாவிதர்கள் குறித்த குறிப்புகள் ‘நொய்யலில்’ உண்டு. அதில் காட்டப்படுவது வேறொரு பார்வை. ‘நீர்வழிப் படூஉம்’ நாவலில் இன்னும் நுணுக்கமாக இருக்கிறது.

மரணத்தை சடங்காக முடித்து வைக்க ஓரிருவராவது வருவார்களா என்று நினைத்திருக்கும் வேளையில் ஒரு ஆவேசம் கொண்ட பாடல் ஒட்டுமொத்த ஊரையும் அழைத்து நிறுத்தும் இடம்..

ஒரு ஊரில் குடிநாவிதன் இல்லாமல் போனால் என்னவாகும் என்று சொல்லப்படுவதற்கு மட்டும் சில பக்கங்கள்.. அதன் முடிவில் ஒரு நாவிதராவது நமக்குக் கிடைத்துவிட மாட்டாரா என்று ஊரே சேர்ந்து ஊர் ஊராகத் தேடுவது.. இந்தப் படைப்பு எழுதப்பட்டதே இந்தப் பக்கங்களுக்குத் தான் என்று தோன்றியது..

இரண்டு பெண்கள் பொது இடத்தில் சண்டை போடுவார்கள். அதைத் தீர்க்க ஒரு தோழர் வருவார். இந்தக் காட்சியில் அப்படி சிரித்திருக்கிறேன்.

ஒருவகையில் இந்த நாவலை வாசிக்கும்போது என்ன சொல்ல வருகிறது என்று கூடத் தோன்றலாம். ஆனால் அது சொல்ல வேண்டியதை சொல்லியிருக்கிறது. இதை வாசிப்பதை ஒரு அனுபவமாகக் கொண்டால் ஒரு சிறந்த படைப்பை வாசித்துக் கொண்டிருக்கிறோம் என்று புரிந்து கொள்ளலாம்.

‘நொய்யல்’ நாவலில் நதியின் அத்தனை அம்சமும் வந்து போகும். சுழித்து ஓடும் வெள்ளமும், பொட்டுத் தண்ணீர் இல்லாத பாலையும் ஒரே நதியின் தோற்றங்களாக வந்து கொண்டிருக்கும்..நீர்வழிப் படுவும் நாவலில் நொய்யல் நதியின் இடத்தில் ஒரு சமூகத்தை நிறுத்த முடியும்..

இவர்களது சமூகத்தில் பெண்களின் பங்கு குறித்து எழுதப்பட்டிருக்கிற விதம் என்னை மிகவும் பாதித்தது. பிரசவம் தொடங்கி இறப்பு வரை மற்ற சமூகங்களுக்கு குடிநாவிதப் பெண்களின் பங்கு பற்றி எங்குமே பிரசார விவரணையாக இல்லை..ஆனால் அது தான் கதையாக எழுந்து நிற்கிறது.

தேவிபாரதியின் கதைகளிலும், நாவல்களிலும் ஒரு ஏக்கம் இருப்பதை புரிந்து கொள்ளலாம். அது கைவிட்டுப் போன நிலம், மனிதர்கள், பழக்க வழக்கங்களின் மீது கொண்ட பரிவும் சில நேரங்களில் கோபத்தையும் உணரலாம்.  சீர்கெட்டுப் போன ஒரு வீட்டை செம்மைப்படுத்தும் காட்சிகளை அவர் சிறுகதைகளிலும், நாவல்களிலும் காட்டிக் கொண்டே இருக்கிறார்.

இப்படியான கைவிட்டுப் போனவற்றை கட்டியெழுப்பவும், அதன் தடத்தைக் காட்டவுமே எழுதுகிறார் என்றும் நினைத்துக் கொள்கிறேன்.  

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments