(சமீபத்தில் வெளியான எனது ‘மாபெரும் சபை’ புத்தகத்தின் முன்னுரை)
தமிழ் சினிமா பல்வேறு பரிட்சார்த்த முயற்சிகளை செய்துள்ளது. ஒரு நீண்ட பயணம் அதற்குண்டு. எந்தச் சாதனையையும் செய்கிற ஆர்வம் கொண்டது தமிழ்த்திரை. கற்பனைத்திறனும், தொழில்நுட்பமும், கலைஞர்களின் தொடர் வரவையும் தன்னிடத்தில் உள்ளடக்கியது. இவற்றையெல்லாம் தொகுத்து சினிமா பத்திரிகைகள், புத்தகங்கள், ஆய்வுகக்கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. இதற்காகவே வாழ்நாளை செலவழித்தவர்களும் இருக்கிறார்கள். இப்படி ஒரு துறை பற்றித் தொடர்ந்து ஆவணப்படுத்தப்படுவது, அதனுடைய வளர்ச்சிக்கு உதவும்.
இந்தப் புத்தகம் ஆய்வுக்கட்டுரை அல்ல, ரசனை சார்ந்து எழுதப்பட்ட புத்தகம். ஒரு வியப்பான விஷயத்தை உள்வாங்கினால், அதை மற்றவர்களிடம் பகிர வேண்டும் என்று தோன்றும் இல்லையா, அப்படி பகிருவதற்காக எழுதப்பட்ட புத்தகம்.
கொரோனா காலகட்டம். வீட்டில் அடைபட்டிருந்த நேரத்தில் ‘புதிய பறவை’ படத்தினைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்தப் படத்தினை எடுத்த தாதா மிராசியின் மற்றப் படங்கள் என்னவாக இருக்கும் என்கிற தேடுதலில் அடுத்தடுத்து அவர் படங்களைப் பார்க்கத் தொடங்கினேன். அவற்றை ஃபேஸ்புக்கில் ஒரு பதிவாக எழுதியிருந்தேன். அந்தப் பதிவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. யாவரும் இணையதளத்தில் அந்தப் பதிவை வெளியிட்டிருந்தார்கள். அதை என்னுடைய அப்பா வாசித்துவிட்டு, இன்னும் சிலவற்றை சேர்க்கலாம், மிக சுருக்கமாக இருக்கிறது என்றார். எனக்கும் அந்தப் பதிவு போதவில்லை எனபதே எண்ணமாக இருந்தது. தொடர்ந்து அடுத்தடுத்து ஒவ்வொரு இயக்குநரின் படங்களாக பார்த்து எழுதத் தொடங்கினேன். அவை ‘நினைவோ ஒரு பறவை’ என்னும் பெயரில் யாவரும் இணையதளத்தில் வெளிவந்தது. அப்பா காலமான பிறகு, அதனால் தானோ என்னவோ தொடரை என்னால் தொடர இயலவில்லை. அவர் இந்தத் தொடருக்கு நல்ல வாசகராக இருந்தார்.
இரண்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் படங்களைப் பார்த்து என்னுடைய இணையதளமான jadeepa.comல் தொடர்ந்து எழுதினேன். அந்தக் கட்டுரைத் தொடர் தான் முதல் பாகமாக இப்போது ‘மாபெரும் சபை’ எனும் பெயர் கொண்ட இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.
முதல் பாகமாக பத்து இயக்குநர்கள் குறித்து எழுதியிருக்கிறேன். இந்தியச் சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும் என தமிழ்ப்படங்களை அதன் உள்ளடக்கம் சார்ந்து பிரித்துக் கொள்ளலாம். சுதந்திரத்துக்கு முன்பு வெளிவந்தப் படங்கள் தணிக்கைக் காரணமாக பெரும்பாலும் புராணப் படங்களாக வெளிவந்தன. அதிலும் சில படங்கள் மறைமுகமாகவும், நேரடியாகவும் சுதந்திர உணர்வை வலியுறுத்தியும், அடிமைத்தனதை எதிர்த்தும் வெளிவந்தன. ஆனாலும் அநேகப் படங்களின் உள்ளடக்கம் ஒன்று போலவே இருந்தன.
அவற்றில் இருந்து மாறுபட்டு புதிய முயற்சிகள், கருத்துகள், சமூக சீர்திருத்தங்கள், குடும்பச் சிக்கல்கள் என வெவ்வேறு கதைக்களங்கள் கொண்ட படங்கள் வெளிவரத் தொடங்கின. திரைத்துறை மீது ஈடுபாடு கொண்டு பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த இளைஞர்கள் இயக்குநராகும் முயற்சியில் ஈடுபட்டார்கள். நாடகங்களில் பணி செய்தவர்கள், நாடகங்களை இயக்கியவர்கள் திரைப்படத்துறைக்கு வரத் தொடங்கினார்கள். கல்லூரி படிப்பை முடித்தவர்கள் திரைத்துறைக்கு படங்கள் இயக்கவந்தார்கள். ஒரு பெரும் அலை இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு திரைப்படத்துறையில் எழுந்தது. இவர்களில் தங்களுடைய முத்திரை பதித்த இயக்குநர்களின் படங்களை எழுதுவது என்பது ஒரு கடலைக் கடப்பது போன்றதான முயற்சி தான். ஆனால் , எழுத வேண்டும் என எண்ணம் தொடங்கியதும் அதற்காக படங்களைத் தொடர்ந்து பார்த்ததும் அற்புத அனுபவம்.
இன்றைய தலைமுறையினருக்கு பழைய படங்கள் என்பது அலுப்புத் தரக்கூடியது என்றும், மெதுவாக நகருவது, சோகமயமானது என்கிற எண்ணமும் உண்டு. இப்படியான படங்கள் எந்தக் காலத்திலும் உண்டு என்பது மறுப்பதற்கில்லை. அவை வெளிவந்த காலகட்டத்திலேயே மறக்கப்பட்டும்விடுகின்றன. இவற்றில் இருந்து வெளியேற வேண்டும் என்கிற நோக்கில் முனைப்புடன் செயல்பட்டு வந்த இயக்குநர்கள் குறித்த புத்தகத் தொடர் தான் இது.
அதோடு, தமிழ் சினிமாவில் அந்தந்தக் காலகட்டத்தில் சில இயக்குநர்கள் ஆளுமையோடும், புதிய சிந்தனகளுட்னும் இருந்திருக்கிறார்கள். இன்று கூட நாம் பேசத் தயங்குகிற சிலவற்றை பேசியிருக்கிறார்கள். தொழில்நுட்பம் வளர்ந்த காலகட்டத்துக்கு முன்பே அவர்கள் அதன் எல்லையை விரிவுபடுத்தியிருக்கிறார்கள். புதிய ஐடியா என்று இன்று ஒன்றிருந்தால், அதனை அப்படியே அல்லது அதன் சாயலோடு அறுபது வருடங்களுக்கு முன்பே முயற்சி செய்திருக்கிறார்கள். வெவ்வேறு எண்ணங்களும், கருத்துகளும், ரசனைகளும் கொண்ட இயக்குநர்கள் சமகாலத்தில் திரைதுறையில் பணியாற்றியதால், புதிய கதைகளும், முயற்சிகளும் வெளிவந்தன. ஒருவரைப் பார்த்து மற்றொருவர் பிரதி எடுக்கவில்லை என்பது இந்தப் படங்களைத் தொடர்ந்து பார்க்கையில் புரிந்து கொள்ள முடிந்தது. ஒவ்வொருவரும் தங்களுக்கென ஒரு பாதையையும் பாணியையும் உருவாக்கிக் கொண்டு அதில் சிறப்பாக பயணம் செய்திருக்கிறார்கள். இதோடு திரைக்கதையாசிரியர்கள், இயக்குநர்களின் உறவு செழுமையாகவும் இருந்தது. அதனாலும் வெவ்வேறு கதைக்களங்கள் கொண்ட படங்கள் நமக்குக் கிடைத்துக் கொண்டிருந்தன.
இந்தப் புத்தகத்தில் பத்து இயக்குநர்கள் இடம்பெறுகிறார்கள். 1980 வரையிலான தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் முப்பது பேரினைக் குறித்து எழுத வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். அடுத்தடுத்து புத்தகங்கள் வெளிவரும்.
இந்தப் புத்தகத்தை நடிகர் திரு. சிவாஜி கணேசன் அவர்களுக்கு சமர்ப்பித்திருக்கிறேன். சிறந்த நடிகர் எனதைக் கடந்து இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இயக்குநர்கள் சிவாஜி கணேசன் அவர்களைக் கதாபாத்திரமாகக் கொண்டு படங்கள் இயக்கியிருக்கிறார்கள். அதோடு, சிவாஜி கணேசன் ஒரு மையமாக இருந்திருக்கிறார் என்பது படங்களைப் பார்க்கிறபோது புரிந்து கொள்ள முடிகிறது. தேசியம், திராவிடம், சமூகம், குடும்ப உறவுகள், தலைவர்களின் தன்வரலாறு இதோடு கடவுளர்களாகவும் நடித்த ஒரு மையபுள்ளியாக இருந்திருக்கிறார். தங்கள் கனவுகளுக்கு ஒரு நடிகர் உயிர்கொடுக்க இருக்கிறார் என்பதே இயக்குநர்களுக்கு எத்தனை பெரிய பலமாக இருந்திருக்கும் என நினைத்துப் பார்க்கிறேன். ஒருவேளை, சிவாஜி கணேசன் இல்லையெனில் வேறு புதிய நடிகர்கள் கிடைத்திருக்கலாம். ஆனால் இயக்குநர்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லாமல் எந்த விதமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் சிவாஜி தாங்கிவிடுவார் என்கிற நம்பிக்கை ஏற்பட்டதென்பது நமக்கு அற்புதமான படங்கள் கிடைக்க வழி செய்துவிட்டன. இந்தப் புத்தகத்தில் மாபெரும் சபையினரான இயக்குநர்கள் மத்தியில் அவருக்கும் ஒரு பீடம் உண்டு என்பதால் சிவாஜிகணேசன் குறித்து ‘பெருங்களிறு’ என்கிற தனிக் கட்டுரையை இணைத்துள்ளேன்.
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் 1940 ல் இருந்து தொடங்கி பெரும்பாலான படங்கள் நமக்குக் கிடைக்கின்றன என்பது மகிழ்ச்சியான ஒன்று. வருத்தம் என்னவென்றால் சில இயக்குநர்களின் புகைப்படங்கள் பொதுவெளியில் நமக்குக் கிடைப்பதில்லை என்பது தான்.
இவை கட்டுரைகளாக வெளிவந்த காலகட்டத்தில் வாசித்து கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட என்னுடைய அப்பா ஜானகிராமன், பத்திரிகையாளர் கே.என் சிவராமன், ஏழுமலை வெங்கடேசன், ஒளிப்பதிவாளர் சி.ஜெ ராஜ்குமார், நடிகர், ஒளிப்பதிவாளர் இளவரசு உட்பட நண்பர்களுக்கு என்னுடைய நன்றிகள். இயக்குநர் திரு. பீம்சிங் குறித்த கட்டுரையை வாசித்து விட்டு என்னிடம் பல தகவல்களைப் பகிர்ந்து கொண்ட எடிட்டர், இயக்குநர் திரு லெனின் , இருதயநாத் பீம்சிங் இருவருக்கும் எனது வணக்கங்கள்.
கட்டுரைகளை வெளியிட்ட யாவரும்.காம் குழுவுக்கு நன்றி.
என்னுடைய எழுத்துகளுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் எனது கணவர் அய்யப்பனுக்கு எனதன்புகள்.
சிவாஜி கணேசன் அவர்களை என் அம்மாவின் வழியே தான் தொடக்கத்தில் கண்டுகொண்டிருந்தேன். அப்படியான ரசிகை எனது அம்மா. அவர்களுக்கு எனது நன்றி.
நூலுக்கு சிறப்பான அட்டைவடிவமைப்பைச் செய்து தந்த சந்தோஷ் நாராயணன், ஆவலுடன் பிழைத் திருத்தம் செய்த ஆர்.ஜே கோபாலன், நூல் வடிவமைப்பாளர் சந்தோஷ் கொளஞ்சிக்கு எனது நன்றிகள். எங்களுடைய மயூ பதிப்பகத்தின் மூலமாக புத்தகம் வெளிவருவதில் கூடுதல் மகிழ்ச்சி.
இந்தப் புத்தகம் எனக்குத் தந்த அனுபவத்துக்கு இணை ஏதுமில்லை. கறுப்பு வெள்ளைப் படங்களின் ரசிகையாக என்னை தக்க வைத்துக் கொண்டிருக்கும் காலத்தோடு கலந்த அத்தனை திரைப்பட மேதைகளுக்கும் எனது பணிவான வணக்கங்கள்.