‘
கொட்டுக்காளி’ படத்தினை ப்ரைமில் பார்த்தேன். திரையரங்கில் போய்ப் பார்க்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தேன். படம் வெளிவந்தபோது திரையரங்குக்குச் செல்ல முடியாத சூழல். இந்தப் படத்தின் இயக்குநர் பி.எஸ் வினோத்ராஜின் ‘கூழங்கற்கள்’ படம் எனக்குப் பிடித்திருந்தது. அதனாலும் கூட கொட்டுக்காளி மீது எதிர்பார்ப்பு கொண்டிருந்தேன்.
இயக்குநர் பி.எஸ் வினோத்ராஜ் மீது எனக்கு இருக்கும் வியப்பு அவர் தேர்ந்தெடுக்கும் நடிகர்கள் குறித்து. லைவ் சவுண்ட் எனும்போது நடிகர்கள் அனுபவசாலிகளாக அமைய வேண்டியிருக்கும். அப்படியெல்லாம் இல்லை என்று இரண்டு படங்களிலும் நிரூபித்திருக்கிறார். அடுத்ததாக அவர் தேர்ந்தெடுக்கும் கதை. ஒரு சிறிய முடிச்சினை வைத்துக் கொண்டு முன்னே பின்னே நூலைக் காட்டிக் கொண்டே இருக்கிறார். இது கூழாங்கற்களில் சரியாக வாய்த்திருந்தது. கொட்டுக்காளியில் வெறும் நூல் மட்டுமே தெரிகிறது.
படம் மெதுவாக நகர்கிறது, ஆட்டோ போய்க் கொண்டேயிருக்கிறது என்பதெல்லாம் கூட படத்துக்குத் தேவையெனில் ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று தான். சில படங்கள் அதற்கான ஒரு மொழியைக் கோரும். ஆனால், ஆட்டோ போய்க் கொண்டேயிருந்தால், அது நிற்கும் இடத்தில் பயணத்தின் அர்த்தம் தெரிய வேண்டும் இல்லையா..அந்த அர்த்தத்திற்குத் தானே படம் பார்க்கிறோம். இந்தக் குடும்பம் பேயோட்டியிடம் செல்கிறார்கள். அங்கே என்னவோ நடக்கப்போகிறது..அந்தப் பெண் இத்தனை தூரம் அமைதியாகக் காட்டப்பட்டிருக்கிறாள். அவளுக்கு அங்கு எதோ ஒன்று உடைபடப்போகிறது, அதன் மூலம் மற்றவர்களுக்கு ஒரு திறப்பு கிடைக்கப்போகிறது..அல்லது எதோ அநியாயம் அந்தப் பெண்ணுக்கு நிகழவிருக்கிறது..அது தவறு என்று பார்வையாளர்கள் நினைக்கப்போகிறோம்..இப்படி எதோ ஒன்றை நோக்கி நான் காத்திருந்தேன்…இது சூரி கதாபாத்திரத்துக்கான கதை என்றால், அவருக்கு அங்கு என்ன ‘தரிசனம்’ கிடைத்திருக்கிறது என்பதையாவது தெளிவாக சொல்லியிருக்கலாம். படம் முடிந்துவிட்டது என்று நான் நினைக்கவில்லை. கரண்ட் போய்விட்டது போல் இருக்கிறது என ஒரு நொடி நினைத்து பின்னரே, படமே முடிந்து விட்டது என்று புரிந்து கொண்டேன். திகைப்போ, நெகிழ்ச்சியோ, ஒரு புன்சிரிப்போ, கண்ணீரோ..இவை எதுவும் கூட வேண்டாம்.ஒரு செய்தி அல்லது என்னைப் போல பாமரருக்கு புரிந்து கொள்ளக்கூடிய ஏதோ ஒன்றை இந்தப் படம் கடத்தியிருந்திருக்கலாம் என்று தோன்றியது. ஏனெனில், வலிக்க வலிக்க அந்த ஆட்டோ சத்தத்தினையும், சிறுநீர் கழிக்கும் ஒலியையும், காற்றின் சலசலப்பையும் பொறுமையாக அவ்வளவு நேரம் கேட்டிருந்தேன்.
சரி, நாம் மொழிபெயர்த்துக் கொள்வோம் என மீண்டும் ரிவைண்ட் செய்து க்ளைமாக்ஸ் பார்த்தேன். அந்த சாமியாடி அந்தப் பெண் உடம்பில் உள்ள கெட்ட ஆவியை ஓட்டுகிறார். அந்தப் பெண் அப்போதும் அமைதியாக எதையோ பறி கொடுத்தது போல நிற்கிறாள். அந்த சடங்கினை எல்லாம் சூரி பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் மனதில் இப்படி தோன்றியிருக்கலாம் “இந்தப் பெண் நாம அடிச்சாலும் திட்டினாலும் பிடிவாதமாக இருக்கிறாள். எதிர்த்து ஒரு வார்த்தைப் பேசுவதில்லை..ஆனால் பாடுகிறாள். சொல்வதையெல்லாம் செய்கிறாள்..ஆனால் அழுத்தமாக இருக்கிறாள். அவளை என்ன செய்தும் அசைக்க முடியவில்லை. நம்முடைய ஆண்மைக்கும், அதிகாரத்துக்கும் சவாலாக நின்று கொண்டிருக்கிறாள். இத்தனை செய்தும் ஒரு புதிர் போல இருக்கிறாள். முடிவோடு இருக்கும் அவளுக்குள் பேயும் இல்லை..ஆவியும் இல்லை.. அவளுக்குள் இருப்பது இதன் எல்லையைத் தெரிந்து கொண்ட பிடிவாதம்..நாம் தோற்றுப் போகப்போகிறோம் இவளிடம்” என்று சூரி தெரிந்து கொள்ளும் இடத்தில் அவர் திகைத்து நின்றிருக்கலாம். இவை எனது யூகங்கள் தான். வேறு ஏதேனும் கூட இருந்திருக்கலாம். இப்படி படம் பாரத்த அனுபவத்தில் பார்வையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று இயக்குநர் நினைத்திருக்கலாம்.
OPEN ENDED க்ளைமாக்ஸ் வரவேற்கப்பட வேண்டியது தான். இப்படியான க்ளைமாக்ஸ் அமைப்பவர்களில் ஈரானிய இயக்குநர் அஸ்கர் ஃபர்ஹடியும் ஒருவர். எனக்குப் பிடித்த் இயக்குநர் அவர். அவர் பார்வையாளர்களுக்கு அத்தனை சாத்தியங்களையும் தந்துவிடுவார். கதாபாத்திரங்களின் நியாயங்களையும், அவர்களின் தவறுகளையும் சொல்லிவிடுவார். அதில் இருந்து ஒரு கேள்வியினை எழுப்பி நிதானமாக படத்தை முடிப்பார். நாம் அதுவரை படம் கொடுத்த அனுபவத்தில் இருந்து ஒரு முடிவுக்கு வந்துவிடலாம். அப்போதும் கூட யார் எந்த முடிவெடுத்தாலும் அது தர்க்கரீதியான நியாயம் இருக்கத் தான் செய்யும். அந்தளவுக்கு படத்தோடு ஒன்றியிருந்திருப்போம். அந்த ஒத்திசைவு இந்தப் படத்தில் எனக்கு அமையவில்லை.
இப்போதும் கூட அழுத்தமான பெண்களுக்கு பேய்ப் பிடித்திருக்கிறது என்று சொல்லும் வழக்கம் இருக்கிறது. மற்ற சாதியினரைக் காதலிக்கும் பெண்களை ‘அவனை’ மறக்கச் செய்வதற்காக கையாளும் யுத்திகளில் இப்படி நடந்து கொள்வது இன்றைக்கும் இருக்கிறது. இது பேசப்பட வேண்டிய ஒன்று தான். இதனைத் திரைப்படமாக எடுக்க நினைத்ததும் துணிவான, பாராட்டத்தக்க முயற்சியும் தான். ஆனால், ஒரு கனமான விஷயத்தை எல்லோருக்கும்ம் உணர்த்துவதற்கு ஒரு மெனக்கிடல் திரைக்கதையில் இருக்க வேண்டும் இல்லையா..வணீகரீதியான படங்கள் பலமுறை கனமான ஒன்றை எடுத்துக் கொண்டு, ஐந்து பாடல்கள் நான்கு சண்டைக்காட்சிகள் என்று காட்டி மக்களிடம் கருத்தை ஏற்றிவிடுகிறது. இயக்குநர் அவர் என்ன சொல்ல நினைக்கிறாரோ அதை சொல்லிவிடுகிறார். வணீகரீதியான படங்களைக் குறை கூறும் நாம், ஒரு கருத்தைச் சொல்ல திரைமொழியில் எந்தளவுக்கு மெனக்கிடுகிறோம் என்பதும் கவனிக்கப்பட வேண்டியது.
ஒருவேளை, எனக்கு இந்தப் படம் புரிதலைக் கொடுக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், பார்வையாளர் என்பவர் தனித் தனியானவர்கள் தானே!