கற்பூர நாயகியே….ஏ கனகவல்லி

0
395

திருநெல்வேலியில் இருந்த இருபது வருட காலகட்டத்தில் மூன்று வீடுகள் மாறியிருப்போம். ஒவ்வொரு வீட்டிற்கும் மறக்க முடியாத நினைவுகள் பல உண்டு. ஆனால் சென்னை குடிவந்த பிறகும் காலை மணி ஆறு என்றடிக்கும்போது திருநெல்வேலி சிக்கநரசய்யன் கிராமத்தில் வசித்த வீடு நினைவுக்கு வந்துவிடுகிறது. அங்கு இருக்கும் முருகன் கோயிலில் காலை ஆறு மணிக்கு பக்திப் பாடல்களை ரிகார்டரில் போடுவார்கள். அது ஸ்பீக்கரின் வழியே வீடுகளுக்குள் புகுந்து கூடுதலாய் தாலாட்டும். ‘முருகனைக் கும்பிட்டு முறையிட்ட பேருக்குஎன்று டி.எம்.எஸ் உருகிக் கொண்டிருப்பதைக் கேட்டுக்கொண்டே இன்றும் தாமிரபரணியில் அதிகாலை நீராடுபவர்களுக்கு இனி எதற்கு தனியே சொர்க்கப் பதவி ஆசை என்று நினைக்கத் தோன்றும்.

அதுவும் ஆடி மாத காலத்தில் தெருவுக்குத் தெரு எல்.ஆர் ஈஸ்வரியின் ராஜ்ஜியம் தான். ‘முத்துக்குளிக்க வாரீகளாபாடிய எல்.ஆர். ஈஸ்வரியை தாயே கருமாரிஎன்றும் பாடவைக்க முடியும் என்று தீர்மானித்தவர் தீர்க்கதரிசியாகத்தான் இருக்க முடியும். திரைப்படப் பாடல்களில் கிறக்கதைக் காட்டும் குரலால் பக்திப் பாடல்களில் உருக்கத்தையும் தர வைப்பதில் எல்.ஆர். ஈஸ்வர் இன்று வரை ராணி தான்.

ரோமன் கத்தோலிக்கரான லூர்து மேரி ராஜேஸ்வரி தான் எல்.ஆர் ஈஸ்வரி ஆனார் என்பதை எங்கள் தெருவில் வசித்த கமலா அத்தை ஒத்துக் கொள்ளவே போவதில்லை. ஏனெனில் கமலா அத்தையைப் பொறுத்தவரை அம்மனின் நேரடி அருள் பெற்ற தெய்வக்குழந்தை எல்.ஆர் ஈஸ்வரி என்பார். அந்தளவுக்கு ஈஸ்வரியின் குரல் மேல் கமலா அத்தைக்கு பக்தி கலந்த ப்ரேமம் இருந்தது.

திரைப்படப் பாடல்கள் எந்தளவுக்கு ஒருகாலகட்டத்தில் பெண்களை ஈர்த்து வந்திருந்ததோ அதை விட அதிகமான ஈர்ப்பினை பக்திப்பாடல்களும் தந்து கொண்டிருந்தன. இன்னும் சொல்லப்போனால் இப்போது வருகிற திரைப்படப்பாடல்கள் பெண் ரசிகைகளை கிட்டத்தட்ட இழந்துவிட்டன. ஆனால் பக்திப்பாடல்கள் இன்னமும் பெண்களை மையப்படுத்திக் கொண்டிருக்கிறது. இதில் விதிவிலக்காக ஐயப்பப் பாடல்களைச் சொல்லலாம்.

பக்திப்பாடல்கள் என்பது பெண்களுக்கு மாபெரும் வடிகாலாக இருந்திருக்கிறது. செவ்வாய், வெள்ளிகளில், நவராத்திரிகளில், திருவிளக்கு பூஜையின்போது என பாடுவதற்காகவே பக்திப்பாடல்களை மனப்பாடம் செய்துகொண்டு பாடுகிறார்கள். அப்படியானப் பாடல்களில் இன்று வரை மெகா ஹிட் அடித்த பாடல் என கற்பூர நாயகியே கனகவல்லியைச் சொல்லலாம்.

கல்லூரி காலத்தில் ஒருமுறை எங்கள் ஊரில் உலகம்மன் கோயிலில் ஒரு ஆடிமாத வெள்ளிக்கிழமையில் தோழிகளுடன் சென்றிருந்தேன். அங்கு ஒரு வயதான பெண்மணி எல்லோரையும் அதட்டி உருட்டிக் கொண்டிருந்தார். யாரையும் மதிக்காத அவரது பேச்சும், டாம்பீகமும் எங்களுக்குப் பிடிக்காமல் போனது. உலகம்மனே தன்னிடம் கேட்டுத் தான் பக்தர்களுக்கு அருள் வழங்குவாள் என்ற ரீதியில் இருந்தது அவரது நடவடிக்கைகள். யாரேனும் பாலாபிஷேகத்திற்கு பால் கொண்டு வந்தால் அந்தால தூர வச்சிட்டு வெலகி நில்லுஎன்பார் அதிகாரமாக. இவர் தான் அங்கு நடக்கும் கூட்டு வழிபாடுகளில் என்னென்னப் பாடல்கள் பாடவேண்டும் என்பதைத் தீர்மானிப்பவர். அன்றும் அப்படித் தான் ஒவ்வொரு பாடல்களாக அவர் எடுத்துக் கொடுக்க, மற்றவர்கள் பாடிக்கொண்டிருந்தனர். ‘கற்பூர நாயகியேஎன்று அன்று அவர் பாட மற்றவர்கள் தொடர்ந்தார்கள். அதில் பூவிருந்தவல்லி தெய்வானையம்மா……’ என்ற வரிக்குப் பிறகு ஓர் சின்ன சங்கதி வருமே அதைப் பாடும்போது சுருதி விலகி, குரல் கம்மி நாராசமாய் மாறிவிட்டது.

பாடிக்கொண்டிருந்த மற்றவர்கள் சிரிப்பைக் கஷ்டப்பட்டு அடக்க, நாங்கள் மட்டும் அடக்கமுடியாமல் சிரித்துவிட்டோம்.. அங்கிருந்த பெரியவர்கள் சும்மா கெடங்கஎன்று கண்களை உருட்டினார்கள். ‘ஷ்..ஷ்’’ என்றெல்லாம் சொல்லி எங்களை அடக்கி பார்க்கிறார்கள். எங்களால் சிரிப்பை நிறுத்தவே முடியவில்லை. ஒரு அலை போல அங்கிருக்கும் அத்தனைப் பேரையும் எங்களின் சிரிப்பு உள்வாங்கிக்கொண்டது. அந்தப் பாட்டி அவசர அவசரமாய் மங்களம் பாடி முடித்துக் கொண்டார். தெருவில் எங்களை எங்குப் பார்த்தாலும் முகத்தைத் திருப்பிக் கொள்வார் அந்தப்பாட்டி. பெயர் தெரியாத அந்தப் பாட்டிக்கு நாங்கள் அதன் பிறகு வைத்த பெயர் கற்பூர நாயகி’.

நெல்லையப்பர் கோயில் வாரம் ஒருமுறை அங்கு வாழும் மார்வாடி இனப் பெண்கள் குழுவாக அமர்ந்து பாடுவார்கள். முழங்கை வரை நீண்டிருக்கும் அவர்களின் கை வளைகளும் சேர்ந்து ஜல்..ஜல்..’என்றிசைக்கும். அவர்கள் பாடுகிற வடமொழி புரியாவிட்டாலும் அந்தப் பாடலின் இனிமை நம்மையும் கூடவே முணுமுணுக்க வைத்துவிடும். அந்த நேரம் சிவனையும், அம்மையையும் கடந்து சிறுமிகளாக வாழ்ந்த ராஜஸ்தானும், மும்பையும் அவர்கள் மனதிலாடக்கூடும். பாடல்கள் எப்போதுமே கடந்தகாலத்தை நமக்கு நினைவில் கொண்டு வரும் காலக்கருவி தானே.

பக்திப்பாடல்கள் என்று தனியே இல்லாமல் திரைப்பட பாடல்களில்  இடம்பெறுகிற பக்திப்பாடல்களுக்கும் பெண்களிடம் மவுசு அதிகம். ‘பழமுதிர் சோலையிலே தோழி..பார்த்தவன் வந்தானடிஎன்ற பாடலுக்கு இருக்கும் ரசிகைகள் இந்தத் தலைமுறையிலும் கூடத் தொடரத்தான் செய்கிறார்கள்.

பொண்ணுப் பாக்க வரும்போது ரெண்டு பாட்டுப் பாடணும், அதுக்கு சொல்லிக் குடுத்தாப் போதும் என்று என எங்களது பாட்டு வாத்தியாரிடம் எப்போதாவது இருபது வயதைத் தொட்ட அக்காள்களை அழைத்துக் கொண்டு வருவார்கள் அவர்களது அம்மாக்கள். அக்காக்கள் தலைகுனிந்து இருக்க அதைவிட நாணத்தோடு தான் இப்படிக் கேட்பார்கள் தாய்மார்கள். எங்களுடைய பாட்டு வாத்தியாருக்கு ஒரு பாட்டு, இரண்டு பாட்டுக் கற்றுக் கொடுப்பது என்பது பிடிக்காது. ஆனாலும் உள்ளூர்வாசிகளிடம் இதை வெளிப்படையாகச் சொல்ல முடியாது என்பதால் கடினமான சங்கதிகள் கொண்ட சியாமா சாஸ்த்ரி கீர்த்தனைகளைப் பாடிக் காட்டுவார்.  இல்லையேல் ‘ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி’ என்கிற எளிமையான திருப்பாவையை ஆண்டாளே பாட முடியாத சங்கதியில் பாடுவார்.

வந்தவர்கள் முகம் பீதியாகும். ‘இல்லே..இது இல்ல..கோயில்ல போடுவாங்கள்ல அந்தப் பாட்டு போதும், வெள்ளிக்கிழமையில விளக்குக்கு முன்னாடி பாடறதுக்கும் ஆகும்என்பார்கள். ‘இந்தப்பாட்டும் நல்லாத் தான் இருக்கும்என்று முதலில் இருந்து தொடங்குவார் வாத்தியார். ஒரே வகுப்பில் திரும்பிச் செல்பவர்கள் பிறகு என்றைக்கும் வருவதில்லை. எங்கேனும் அந்த அக்காக்களைப் பார்க்க நேரும்போது கையில் ஒரு குழந்தையுடன் போய்க் கொண்டிருப்பார்கள். ‘இவர்களைப் பொண்ணுப் பாக்க வரும்போது என்னப் பாடியிருப்பார்கள் என்று கேட்கத் தோன்றும்.

எனக்கு ஐந்து அல்லது ஆறு வயதாக இருக்கும். பக்கத்து வீட்டில் ஜெயந்தி என்று அக்கா இருந்தார். அவரைப் பெண் பார்க்க அன்று வந்திருந்தனர். நான் பிறந்தது முதல் என்னைத் தூக்கி வளர்த்தவர் ஜெயந்தி அக்கா என்பதால் அன்று அவருக்குத் தோழியாய் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. அன்று அவர் சிவப்பு நிற புடவை அணிந்திருந்தார் என்பது இப்போதும் நினைவில் இருக்கிறது. ஜெயந்தி அக்காவின் புடவை நிறமும் அன்றைய தினம் அவரது முகமும் இன்று வரை என் நினைவில் இருப்பதற்கான காரணம் ஒரு பாடல் தான். பயணங்களில், கோயில் விசேஷங்களில் என அந்தப் பாடலைக் கேட்கும்தோறும் ஐந்தாறு வயதுக்குள் புகுந்துவிடுகிறேன். ஜெயந்தி அக்கா அன்றைய தினம் பாடிய பாடல் கந்தன் கருணைபடத்தில் வருமே சொல்ல சொல்ல இனிக்குதடா..’. அன்று பெண் பார்க்க வந்தவரைத் தான் ஜெயந்தி அக்கா திருமணம் செய்து கொண்டார். அவர்கள் வாழ்க்கையிலும் அது மறக்கமுடியாத பாடலாகவே அமைந்திருக்கும்.

பாடுவதென்பது பெண்களின் இயல்பில் ஒன்று. தனிமையாக செய்கிற வேலைகள் என்பது பெண்களுக்குத் தான அதிகம். கோலம் போடுவது, துணி துவைப்பது, தைப்பது, சமையல் என எல்லாவற்றிலும் ஒரு தனிமையை எதிர்கொள்பவர்களாக பெண்கள் இருக்கிறார்கள். அந்த நேரத்து அந்தரங்க சிநேகிதியாக அவர்களுக்கு அமைவது பாடல்களே. அதிலும் பக்திப் பாடல்கள் என்பது கோலம் போடும்போது அவர்களுக்குள் இயல்பாகவே ஊற்றெடுக்கிறது. கடவுள் முன் தன்னுடைய பிரார்த்தனையை பேச்சு மொழியில் சொல்வதை விட பாடல்கள் வழி மன்றாடுவது என்பது வசதியாவும் இருக்கிறது.

எங்கள் ஊரில் பூக்காரம்மா ஒருவர் இருந்தார். சில வீடுகளுக்கு மட்டும் பதிவாக பூ தந்துவிட்டு மீதி நேரங்களில் எல்லாம் பெருமாள் கோயில் வாசலில் பூக்கட்டிக் கொண்டிருப்பார். அவர் அதிகம் பேசி யாரும் பார்த்ததில்லை. ஒருநாள் என்னிடம் அபூர்வமாய் ஒரு உதவி கேட்டார். அவர் பூ கொடுக்கும் ஒரு வீட்டில் ரேடியோவில் ஒரு பாட்டைக் கேட்டிருக்கிறார். அந்தப் பாடல் வரிகள் அவரை ஒருநாள் முழுவதும் முணுமுணுக்க வைத்திருக்கின்றன. அது ஒரு திரைப்பட பாடலென்றும், பாடியது பெண்குரல் என்றும் ஒரே அம்மன் பெயராக அதில் வரும் என்றார். என்னிடம் அவர் கேட்ட உதவி என்பது அந்தப் பாடலை எழுதித் தர வேண்டுமென்பது தான். அது என்னப் பாடல் என்பதைக் கண்டறிய துப்பு துலக்கினேன். நினைவில் இருந்த பாடல் வரிகளை எல்லாம் சொல்லிப் பார்த்தேன். ‘இல்லை..இல்லை..’ என்று சொல்லிக் கொண்டே இருந்தார். கடைசியில் அவர் தந்த பல்வேறு தகவல்களின் அடிப்படையில் அந்தப் பாடலைக் கண்டுபிடித்தாயிற்று. அது குஷ்பூ நடித்த ஒரு படத்தின் பாடல், ‘கோலவிழியம்மா..ராஜ காளியம்மாஎன்று நூற்றியெட்டு அம்மன் பெயர்களோடு உள்ள பாடல் அது. அதைப் பாடிய சித்ரா அவர்கள் இந்தப் பாடலின் ஒலிப்பதிவிற்குப் பின்னரும் மிகுந்த உணர்ச்சிமயமான நிலையில் இருந்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

அந்தப் பாடலை பதிவு செய்து டேப் ரிகார்டரில் போட்டு திரும்பத் திரும்ப ரீவைன்ட்செய்து கேட்டு எழுதியதில் எனக்கு அப்போது மனப்பாடமே ஆகியிருந்தது. எழுதியதை பூக்காரம்மாவிடம் தந்தபோது மிகவும் சந்தோஷப்பட்டார். அதன்பிறகு எப்போது என்னைப் பார்த்தாலும் ஒரு துண்டு பூவையேனும் தந்துவிட்டுப் போவார். இப்போதும் தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மாஎன்ற அந்தப் பாடலைக் கேட்கும்போது பூக்காரம்மாவும், இளவயதிலேயே ஒரு பெண் குழந்தைக்கு அவரைத் தாயாக்கிவிட்டு காணாமல் போன அவருக்கே கூட முகம் தெரியாத கணவரும் நினைவுக்கு வருகிறார்கள்.

ஒருமுறை திருநெல்வேலி பேரின்பவிலாஸ் திரையரங்க உரிமையாளருடன் பேசிக்கொண்டிருந்தபோது ஒருகாலகட்டத்தில் திரையரங்குகள் பெண்களுக்கான பொழுதுபோக்கு இடமாக இருந்ததை பல சம்பவங்களோடு சொல்லிக் கொண்டிருந்தார். ‘கரகாட்டக்காரன்படத்தின் மதிய காட்சிக்கு காலையிலேயே பெண்கள் கூட்டம் வெயிலையும் பார்க்காமல் காத்திருப்பார்கள் என்றார். அதிலும் பலர் மஞ்சள், சிவப்பு சேலைகளைக் கட்டிக் கொண்டிருப்பார்கள் என்பதை நினைவுகூர்ந்தார். படத்தின் இறுதிக் காட்சி நெருங்கும்போது திரையரங்கப் பணியாளர்கள் தயாராய் வைத்திருக்கும் வேப்பங்குலைகளுடன் பெண்கள் வரிசைக்கு அருகில் நின்று கொள்வார்களாம். ‘மாரியம்மாமாரியம்மாபாடல் ஆரம்பித்ததும் அங்கங்கு குலவை சத்தம் கேட்கத் தொடங்கும். அதன்பின் சில பெண்கள் எழுந்து நின்று சாமியாடத் தொடங்குவார்களாம். உடனே பணியாளர்கள் வேப்பங்குலைகளை அவர்கள் கையில் கொடுத்து விபூதி அடித்து சாமியைஇறக்குவார்களாம். இதை ஒரு சடங்காகவே செய்து வந்ததாக சொன்னார் உரிமையாளர்.

இயக்குனர் இராமநாராயணன் காலத்தோடு பக்திப் படங்களின் வருகை குறைந்து போனது. ஆனாலும் கூட தொலைக்காட்சித் தொடர்கள் அந்த இடத்தை ஓரளவு பிடித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் திரைப்பட, பக்தி பாடல் அளவுக்கு தொலைகாட்சித் தொடர்களில் வருகிற பக்திப் பாடல்கள் கவருவதில்லை.

இப்போது வருகிற பக்திப்பாடல்களை அவ்வப்போது கேட்பதுண்டு. ஒரே விதமான வார்த்தைகள், குரல்கள், மெட்டுகள் என அலுப்பும் சலிப்புமாக இருக்கிறது. இதில் துள்ளலிசை என்ற பெயரில் குத்துப் பாடல்கள்போல அம்மன் பாடல்களை கேட்பதற்கு மிகவும் அந்நியமாகி விடுகிறது.

திருவிளக்கை ஏற்றி வைத்தேன் திருமகளே வருகஎன்று கேட்கிறபோது இருக்கிற சுகம் தானே அதைப்பாடுகிறபோது பெண்களுக்கு ஒரு நிறைவைத் தருகிறது. சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பக்திப் பாடல்களின் தொகுப்பை அடிக்கடி பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்புவார்கள். ஒவ்வொரு பாடலையும் அவர் அனுபவித்துப் பாடுவதைக் கேட்கும்போது எதிரில் முருகரே வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்பது போலவே இருக்கும்.

சூலமங்கலம் சகோதரிகள், ஜேசுதாஸ், பாம்பே ரமணியம்மாள், பி.சுசிலா, வாணி ஜெயராம், எஸ்.பி.பி, டி.எம்.எஸ், எல்.ஆர்.ஈஸ்வரி என இவர்களது குரல்கள் கர்னாடக திரைப்பட பாடல்களைக் கடந்தும் வெகுஜன மக்களை ஈர்த்திருந்ததன் காரணம் பக்திப் பாடல்கள் தான். ‘கணபதியே வருவாய்..’ பாடலின் தொடக்கத்தில் வருகிற மேள, நாதஸ்வர, ஜால்ரா சப்தம் தொடங்கும்போதே கோயில் திருவிழாவிற்கான உணர்வு வந்துவிடுகிறது.  

மேடை மெல்லிசைக் கச்சேரிகளில் இந்தப் பாடல்களைத் தொடக்கத்தில் பாடும்போதே கச்சேரி எப்படி அமையப்போகிறது என்பதைக் கணித்துவிடமுடியும்.

கடவுள் முன்பாக தாளம் போட்டு சுருதி சுத்தமாக சங்கதியோடு பாடவேண்டும் என்கிற அவசியத்தை இந்தப் பாடல்கள் தான் உடைத்திருக்கும். இயல்பாக தங்கள் மனக்குறைகளை, பக்தியுணர்வை மென்மையான இந்தப் பாடல் வரிகள் கடத்துவதால் தான் காலம் தாண்டியும் இன்னும் நிலைத்து நிற்கின்றன. ஏனெனில் இவை வெறும் பக்திப் பாடல்களாக மட்டும் இருப்பதில்லை, ஒருவரின் ஆழ்மனதிலிருந்து வெளிப்படுகிற சுதந்திரமாகவும் இருக்கிறது.

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments