கஸுஹிரோ சூஜி (Kazuhiro Tsuji) ஜப்பானிய ஒப்பனைக் கலைஞர். உலகின் புகழ்பெற்ற சிற்பி. முகம் என்பது ஆழ்மனதின் வெளிப்பாடு என்பதை தனது கலையாகவே கொண்டிருக்கிறார். ஜப்பான் மற்றும் ஹாலிவுட்டின் பல படங்களுக்கு ஒப்பனைக் கலைஞராக பணி செய்தவர். டிக் ஸ்மித் உள்ளிட்ட ஒப்பனைக் கலையில் ஆளுமைமிக்கவர்களுடன் உதவியாளராக பணி செய்திருக்கிறார். இவரது படங்களின் பட்டியல் இவரின் சாதனைகளை சொல்கிறது. Planet of the Apes, Norbit, The Curious Case of Benjamin Button, Angels & Demons – இவை இவர் பணி செய்த படங்களின் சில உதாரணங்களே. யாரும் எதிர்பாராத வேளையில் ‘இனி திரைப்படங்களில் பணி செய்யப்போவதில்லை’ என்று முழு நேர சிற்பியானார். 2017ஆம் ஆண்டு நடிகர் கேரி ஒல்ட்மேன் ஒரு கதாபாத்திரத்தை ஏற்க வேண்டியிருந்தது. சூஜி ஒப்பனைக் கலைஞராக ஒப்புக் கொண்டால் மட்டுமே நடிப்பதாக சொல்லியிருந்தார். தனது நீண்ட கால நண்பரான கேரியின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் திரைத்துறைக்கு வந்தார் சூஜி. The Darkest Hour படம் பேசப்பட்டதற்கும் மேலாக கேரி ஒல்ட்மேனின் ஒப்பனைப் பேசப்பட்டது. 2017ஆம் ஆண்டுக்கான சிறந்த ஒப்பனைக் கலைஞர் விருதையும் சூஜிக்குப் பெற்றுத் தந்தது. மீண்டும் திரைத்துறையில் பங்கு பெறும் முடிவில் அவர் இல்லை.
கலைஞனின் ஆழ்மனமே படைப்பில் வெளிப்படுகிறது என்பார் சூஜி. இந்த நேர்காணலிலும் வெளிப்படுவதை நாம் புரிந்து கொள்ளலாம்.
உங்களுடைய ஆதர்சமாக எப்போதுமே டிக் ஸ்மித் இருந்திருக்கிறார். அவர் தான் நீங்கள் இந்தத் துறைக்கு வருவதற்கு காரணமாக இருந்தாரா?
கியோட்டாவில் ஒரு கடையில் வெளிநாட்டு பத்திரிகைகள் கிடைக்கும். அவற்றில் ஒரு பத்திரிகையில் ஒப்பனைக் கலைஞர்களுக்கான சிறப்பிதழாகக் கொண்டு வந்திருந்தனர். எனக்கு அப்போதே சிற்பங்கள், ஒப்பனை போன்றவற்றில் ஆர்வம் இருந்தது. என்னைப் பொறுத்தவரை ‘ஸ்பெசல் மேக்அப்’ என்பது பேய்ப்படங்களுக்கு கோரமாகப் போடப்படும் ஒப்பனை என்ற எண்ணமே இருந்தது. அது என்னை ஈர்க்கவேயில்லை. நான் பேய்ப்படங்களின் ரசிகனும் அல்ல. இந்தப் பத்திரிகையை வாசிக்கும்போது அதில் டிக் ஸ்மித்தின் ஒரு கட்டுரை இடம்பெற்றிருந்தது. அப்போது தான் Special Effect ஒப்பனைக்கு வெவ்வேறு அர்த்தங்கள் உண்டு என புரிந்தது. ஒரு மனிதனை மற்றொரு மனிதனாக மாற்ற முடியும் என்பதை டிக் ஸ்மித்தின் கட்டுரையே எனக்கு உணர்த்தியது.
நான் உடனேயே ஒப்பனைக் கலை குறித்த புத்தகங்கள் , கட்டுரைகள் போன்றவற்றை சேகரிக்கத் தொடங்கினேன். இதற்காக பல மணிநேரங்கள் நூலகத்தில் இருப்பேன். முதன்முதலாக ஆபிரஹாம்லிங்கன் சிலையை செய்தேன். ஒப்பனைக்கும் சிலை செய்வதற்கும் ஒரு நெருக்கம் உண்டு. ஒப்பனை செய்யத் தெரிந்து கொள்பவர்கள் அடிப்படையில் சிற்பம் செதுக்கத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். அப்போது தான் மனித உடலின் கூறுகள் பற்றி புரிந்து கொள்ள முடியும். ஆபிரஹாம் லிங்கன் சிற்பத்தை செதுக்கிய பிறகு என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்தச் சிற்பத்தை புகைப்படம் எடுத்து என்னுடைய ஆர்வத்தையும் கூறி டிக் ஸ்மித்துக்கு கடிதம் எழுதினேன். ஆச்சரியமாக அவரிடமிருந்து உடனே பதில் வந்தது. அவர் கடிதங்கள் வழி எனக்கு அறிவுரைகள் தந்தர்ர். வழிகாட்டினார். எனக்கு ஒரு புத்தகம் அனுப்பியிருந்தார். அவர் எழுதிய புத்தகம் அது. ஒப்பனைக் கலை குறித்த அகராதி என்று சொல்லலாம். தடிமனான புத்தகம். அப்போதே அது இரண்டாயிரம் டாலர் விலை. என்னிடம் அதனை விலை கொடுத்து வாங்க பணம் இல்லை என்றேன். “பணமெல்லாம் வேண்டாம்..நீ இதை பயன்படுத்திக் கொள்” என்றார். என்னை நேரில் சந்திக்காமலேயே என்னுடைய ஆர்வத்தைப் பார்த்து அவர் அப்படி உதவியிருகக் வேண்டும் என நினைக்கிறேன். எனக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டது.
டிக் ஸ்மித் ஒரு படத்தில் ஒப்பனைக் கலைஞராக பணி செய்ய ஜப்பான் வந்திருந்தபோது அவரை சந்தித்தேன். எங்களுடைய இணக்கம் அதிகமானது. தொடர்ந்து அவர் என்னை ஊக்கப்படுத்தினார். அவர் கிளம்பி அமேரிக்கா போனதும் எனக்கு ஹாலிவுட் படங்களில் வேலை செய்ய வேண்டும் எனத் தோன்றியது. மற்றுமொரு ஆளுமையான ரிக் பேக்கர் அப்போது MEN IN BLACK படத்தில் பணி செய்து கொண்டிருந்தார். அவரிடம் உதவியாளராக சேரலாம் என்கிற வாய்ப்பு வந்தது. ஆனால் என்னிடம் விசா இல்லை. அமெரிக்க்கா போவதற்கான வசதியும் இல்லை. என்னைப் பற்றி டிம் ஸ்மித் ரிக் பேக்கரிடம் சொல்லியிருக்கிறார். அவர் எனக்கு விசா வாங்கித் தந்து அவர்களே பயணத்துக்கும் ஏற்படு செய்தார்கள். 1996ஆம் ஆண்டு அப்படித் தான் ஹாலிவுட்டுக்குள் நுழைந்தேன்.
25 வருட காலங்களாக திரைத்துறையில் பணி செய்கிறீர்கள். உங்களுடைய பணி என்பது மற்றவர்களின் எண்ணங்களை, படைப்புகளை, கோணங்களை செயல்படுத்துவது என்பதால் தான் நீங்கள் உங்களை சுயாதீனக் கலைஞராக மாற்றிக் கொண்டீர்களா?
ஆமாம். இது ஒரு காரணம். படமெடுக்கும் வழிமுறைகள் எனக்கு அவ்வளவாகப் பிடிப்பதில்லை. இதற்கு நிறைய மனிதர்கள் தேவைப்படுகிறார்கள். அகிரா குரோசவா, குப்ரிக் போன்றவர்கள் மேல் மதிப்பு வைத்திருக்கிறேன். அவர்களால் ஆயிரக்கணக்கான மக்களை ஒற்றை இலட்சியத்தை நோக்கி நகர்த்த முடியும். அந்தளவுக்கு அவர்களிடம் உறுதியான கண்ணோட்டம் இருந்தது. அவர்களின் உணர்வுகள், எண்ணங்கள் உறுதியானவை. இந்த உறுதி பல நேரங்களில் கடினமானதாகவும், சிக்கலானதாகவும் அமையும். ஆனால் அவை படைப்பாக வெளிவரும்போது எல்லோருக்குள்ளும் தாக்கத்தை ஏற்படுத்திவிடும். என்னத் தேவை என்பதில் அவர்கள் தெளிவாக இருப்பார்கள். ஆனால் பெரும்பாலானவர்களால் நினைத்ததை வெளிக் கொண்டு வர முடியாது. இங்கு தயாரிப்பாளர்களும், பட நிறுவனங்களும் பணம் சம்பாதிப்பதற்காகத் தான் வருகிறார்கள். எல்லாமே வணிகமயமாகிவிட்டன. எப்போது கலை மேல் வணிகம் ஆதிக்கம் செலுத்தத் தொடங்குகிறதோ அப்போது எல்லாமே மாறத் தொடங்கிவிடும். திரைப்பட உருவாக்கங்களிலும் அது தான் நடைபெறுகிறது. திரைப்படங்களைப் பற்றியும், திரைத்துறை குறித்தும் குற்றச்சாட்டுகளைக் கேட்டு அலுத்து விட்டது. நான் என்னையும் சேர்த்து தான் சொல்லுகிறேன். இங்கே மிகப் பெரிய மேதைகள் இருக்கிறார்கள். அற்புதமான இயக்குநர்களை, நடிகர்களை சந்தித்திருக்கிறேன். ஆனால் இந்தத் துறை எனக்கானது அல்ல.
நீங்கள் மிகவும் அமைதியானவர். பலவற்றை ஒருசேர யோசிப்பவர். அதனாலும் கூட சினிமாச் சூழல் உங்களுக்கு கலாசார அதிர்வினை ஏற்படுத்தியிருக்கலாம்.
நான் கியாட்டோவில் வளர்ந்தவன். கியாட்டோவுக்கென்று தனித்துவம் உண்டு. குறிப்பாக அதன் இயற்கைச் சூழல். கியாட்டோவின் அருகிலேயே ஒசாக்கா என்றொரு நகரம் உண்டு. அந்த நகரத்தைப் பற்றி மக்கள் விவரிக்கும்போது அங்குள்ள மக்களின் உணவுப் பழக்கத்தினையே அதிகம் விளக்குவார்கள். அங்குள்ள மக்கள் உணவுவிரும்பிகள். ஒசாக்கா மக்களிடம் கேட்டுப் பார்த்தோமானால் கியாட்டோ மக்கள் நல்ல உடைகளுக்காக சாகக் கூடத் தயாராக இருப்பார்கள என்பார்கள். கியாட்டோ மக்கள் தங்களை மற்றவர்கள் எப்படி உள்வாங்க வேண்டும் என்பதை உடையைக் கொண்டே தீர்மானிக்கிறார்கள் என்பது ஒசாக்காக மக்களின் எண்ணம். என்னுடைய மாமா வீடு அங்கிருக்கிறது.
நான் ஒருமுறை அங்கு சென்றிருந்தபோது ஒரு விருந்தாளி மாமாவின் வீட்டிற்கு வந்திருந்தார். அவரை நன்றாக வரவேற்றார்கள், உபசரித்தார்கள். அவர் அங்கிருந்து நகர்ந்ததும் அவரைப் பற்றி அவதூறு பேசினார்கள். அப்போது சிறுவனாக இருந்த என்னை இது மிகவும் காயப்படுத்தியது. அநேகமாக அப்போதிருந்து தான் நான் யாரோடும் பழகாமல் உள்ளொடுங்கத் தொடங்கினேன். கூட்டமாக மக்கள் இருக்கும் இடங்களை வெறுத்தேன். நான் வளருகிறபோது அப்பா என்னுடன் அதிகமாய் இருந்ததில்லை. அம்மாவுக்குத் தான் என்னைப் பற்றி நன்றாகத் தெரியும். நான் நினைக்கிறேன் ஆசியாவில் வாழும் பெற்றோர் தான் தங்கள் குழந்தைகளை மற்றவர்கள் முன்பு மிக மோசமாக நடத்துகிறார்கள் என்று. ஆக நான் யாரை நம்புவது என்றேத் தெரியவில்லை. நான் மிகவும் நேசிக்கும் ஒருவராக என்னுடைய தாத்தா மட்டுமே இருந்தார். அவர் என்னை எப்போதுமே இழிவுபடுத்தியதில்லை. நான் எப்போதுமே அவருடனே சுற்றிக் கொண்டிருப்பேன் அல்லது வீட்டில் உள்ளப் பொருட்களைக் கொண்டு எதையாவது புதிதாக செய்து பார்த்துக் கொண்டிருப்பேன்.
கற்பனைவாதம் மற்றும் சர்ரியலிசத்துக்கு மாற்றாக எது உங்களை மிகுயதார்த்தம் (hYper realism) நோக்கித் திருப்பியது?
சிறுவனாக இருக்கும்போதே கற்பனை உலகத்தினுள்ளே இருப்பேன். யதார்த்தம் என்பது என்னைப் பொறுத்தவரை உயர்ந்தபட்ச கலை. இதனை சாத்தியப்படுத்துவதற்கு ஒருவர் ஒழுங்கமைந்தவராக இருக்க வேண்டும். இந்தக் கைவினைக் கலையை கற்றுக் கொண்டவராக இருக்க வேண்டும். எனக்கு அந்த சவால் பிடித்திருந்தது. எனக்கு இயற்கை பிடிக்கும். மனித உருவங்களை, மிருகங்களைப் பிடிக்கும். அவை எப்போதுமே ஒழுங்கோடு இருக்கின்றன. அதனால் தான் நான் மிகுயதார்த்தத்தை விரும்புகிறேன்.
Darkest Hour படத்திற்காக கேரி ஒல்ட்மனை வின்ஸ்டன் சர்ச்சிலாக மாற்றினீர்கள். இதற்காக வின்ஸ்டன் சர்ச்சிலைப் பற்றிய உங்களது வரலாற்று ஆராய்ச்சி என்னவாக அமைந்திருந்தது?
நான் சர்ச்சிலின் நிறைய புகைப்படங்களை பார்த்தேன். எல்லாமே இணையத்திலும், புத்தகங்களிலும், ஆவணப் படங்களிலும் கிடைக்கப் பெற்றப் படங்கள் தான். இதனை ஒரு பெரிய கோப்பாக சேகரித்துக் கொண்டேன். அவருடைய சுயசரிதையை வாசித்தேன். அவர் எந்த மாதிரியான வீட்டில் வசித்தார், எந்த மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்தார், என்பதை எல்லாம் தெரிந்து கொண்டேன். பிறகு கேரி ஒல்ட்மன் நடித்த படங்கள் அத்தனையையும் பார்த்தேன். அவர் எப்படித் தெரிகிறார், என்ன மாதிரியான மனிதர் என்பதெல்லாம் எனக்குத் தேவையாக இருந்தது.
ஒருவரின் ஆளுமை என்பது அவர்கள் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் மூலமாகவும், அவர்கள் முகத்தில் எதனால் எல்லாம் சுருக்கங்கள் ஏற்படுகின்றன என்பதிலெல்லாம் வெளிப்படும். முகங்களின் உணர்ச்சிகளை சுருக்கங்கள் மூலமாகவே நம்மால புரிந்து கொள்ள முடியும். அதனால் ஒரு முகத்தை நான் சுருக்கங்களின் மூலமாகாவே புரிந்து கொள்கிறேன். சர்ச்சில் முகத்தில் ஒரு சுருக்கம் குறைந்தால் கூட மக்கள் நினைப்பார்கள், “ஏன் இவர் இவ்வளவு மென்மையானவராக இருக்கிறார்?” என்றே நினைப்பார்கள்..
கேரி ஒல்ட்மனின் முகம் நீளவாக்கில் அமைந்திருக்கும். கூர்மைத் தன்மைக் கொண்டது. சர்ச்சிலின் முகமோ பரந்த, வட்டமான தலையைக் கொண்டது. கன்னத்தின் தசைகள் வாய்வரை தொங்கிக் கொண்டிருக்கும் படியான கதுப்புக் கன்னங்கள் கொண்டது. கேரி ஒல்ட்மனை நீங்கள் சர்ச்சிலாக்கியது அற்புதமான ஒரு மாற்றம். படத்தின் உங்களது தயாரிப்புப் பணிகள் பற்றி சொல்லுங்கள்.
முதலில் நான் கேரியின் தலையை அச்சில் வார்த்துக் கொண்டேன். பிறகு நிறையப் புகைப்படங்களை எடுத்துக் கொண்டேன். நாங்கள் அவருடைய உடலை 3D ஸ்கேன் எடுத்துக் கொண்டோம். ஏனென்றால் அவருடைய உடலை சர்ச்சிலினுடையது போல தடிமனாக காட்ட வேண்டியிருந்தது. அதன் பிறகு சேகரித்த புகைப்படங்களைக் கொண்டு கேரியின் தலைப் பகுதி அச்சினை வைத்து சிற்பம் செய்தேன். பிறகு கேரியின் முகத்தோடு அதனை ஒப்பிட்டுப் பார்த்து எந்த இடத்தில் மாறுதல் தேவை எங்கு மேம்படுத்த வேண்டும் என்பதைத் தீர்மானித்துக் கொண்டேன். அவர் முகத்துக்கு ஒப்பனை தான் தேவை முகமூடி அணிவிக்க வேண்டாம் என்று நான் உறுதியாக இருந்தேன். உண்மையிலேயே இங்கு சவாலாக இருந்தது சர்ச்சிலின் முக பாவனைகளை கேரியால் இந்த ஒப்பனைகளையும் மீறி வெளிப்படுத்த முடியுமா என்பதில் தான் இருந்தது.
முகத்தின் செயற்கை பூச்சுக்கு என்ன மாதிரியான ஒப்பனை சாதனங்களைப் பயன்படுத்தினீர்கள்?
உபகரணங்கள் – இப்படித் தான் நாங்கள் சொல்வோம். முகத்திற்கு நான் முக்கியமாக பயன்படுத்தியது சிலிகானைத் தான். Mould Life என்றொரு நிறுவனம் இருக்கிறது. அவர்கள் ‘பிளாட்சில் -10’ என்றொரு சிலிகானைத் தயார் செய்கிறார்கள். இந்த சிலிகானைத் தான் நான் பயன்படுத்தினேன். அது மிக மென்மையானது. அதனை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் உருமாற்றிக் கொள்ளலாம். பார்ப்பதற்கு தோல் போலவே தோன்றும். பொதுவாய் சிற்பதை செதுக்கி முடித்ததும் பாகம் பாகமாக வெட்டி அதனை துருப்பிடிக்க வைப்பேன். பிறகு துருப்பிடித்ததில் பிளாஸ்டிக் தூவி அதன் மேல் சிலிகானை ஊற்றிவிடுவேன். சிலிகான் ஒரு தோல் போல் மாறிவிடும். பிறகு அதன் ஒவ்வொரு பகுதியையும் பிரித்து நடிகர்களின் முகத்தில் ஒட்டுவேன்.
கேரியை சர்ச்சிலாக மாற்றுவதற்கு எவ்வளவு காலம் ஆனது?
படத்தின் இயக்குநர் ஜோ ரைட் ஒப்பனை சோதனையின் போது மூன்று விதமான முகங்களைக் காட்டுமாறு கேட்டிருந்தார். நான் மூன்று விதமான முக அமைப்புகளை அவருக்குக் காட்டினேன். இதற்கே இரண்டரை மாத காலங்களானது. அதன் பிறகு கேரியின் முகத்திற்கு அது எப்படி பொருந்துகிறது என்பதை சோதித்துப் பார்ப்பதற்கு அடுத்த இரண்டரை மாத காலமானது. ஐந்தாவது முறையாக நாங்கள் பரிசோதித்துக் கொண்டிருந்தோம் இதற்காக நான் இலண்டன் வந்திருந்தேன். அதன் பிறகும் கூட எனக்கு மாற்றம் செய்யவேண்டும் என்று தோன்றியது. பிறகு மற்றொரு முறை பரிசோதனை செய்து பார்த்தோம். ஆரம்பத்திலேயே நான் கேரியிடம் நான் படப்பிடிப்புத் தளத்துக்கு வரமாட்டேன் என்று சொல்லிவிட்டேன். அதனால் டேவிட் மலிநோவ்ஸ்கி மற்றும் லூசி சிப்பிக் தான் படப்பிடிப்புத்தளத்தில் பணி செய்தார்கள் (இருவருமே வெவ்வேறு படங்களுக்காக ஆஸ்கருக்கு இந்த வருடம் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்). ஒப்பனை எப்படி அமைய வேண்டும் என்று அவர்களுக்கு நான் கற்றுக் கொடுத்தேன். பிறகே படப்பிடிப்புத் தொடங்கியது.
நீங்கள் சிற்பமாக வடிக்கும் முகத்திற்கான நபரை எபபடித் தேர்ந்தெடுக்கிறீர்கள்?
அந்தக் குறிப்பிட்ட நொடி நேரத்தைத் தான் சொல்ல வேண்டும். சில நேரங்களில் சிலர் முகம் எனது மனதிற்குள் சட்டென்று தோன்றும். அவர்களைப் பற்றி சிந்தித்து கொண்டே இருப்பேன். பிறகு எனக்கு நானே சொல்லிக் கொள்வேன், “நான் இவரது முகத்தை செதுக்க இருக்கிறேன்”. ஆனால் நான் செதுக்கிய பெரும்பாலான முகங்களைக் கொண்டவர்கள் மிக மோசமான சிறுவயது அனுபவங்களைக் கொண்டவர்களாகவும் உடல் அல்லது மனரீதியான பிரச்சனைகளைக் கொண்டவர்களாகவுமே இருக்கிறார்கள். எனக்கு வாய்த்ததெல்லாம் மிக மோசமான சிறு வயது நினைவுகளே. அதிலிருந்து சிறந்தவற்றை மட்டும் கண்டு கொண்டு ஒரு சிறந்த மனிதனாக நான் வாழ விரும்புகிறேன்.
அதனால் தான் நான் வடிவமைக்கும் மனிதர்களின் முகங்களுக்குப் பின்னால் இருக்கிற அவர்களது துயரங்களை என்னுடைய வாழ்க்கையுடன் பிரதிபலித்து சிற்பம் செதுக்குகிறேன். இந்த சிற்பங்களைப் பார்ப்பவர்கள், “யார் இவர்கள்?” என யோசிக்க வேண்டும். அது தான் எனக்கு வேண்டும். ஏனெனில் நானும் தான் யோசித்தும் அதில் என்னைத் தேடிக் கொண்டுமிருக்கிறேன்.
உங்களை நீங்கள் சிற்பமாக செதுக்கியிருக்கிறீர்களா?
சிற்பத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் நான் ஒரு கல்லறைக் கல்லாகவே நினைக்கிறேன். அதாவது அந்த நிமிடத்தில் நான் என்ன நினைக்கிறேனோ அதை வெளிப்படுத்துகிறேன். அதோடு நான் எதையோ அங்கு விட்டுச் செல்கிறேன். எனக்கான கல்லறை எனக்குத் தேவையில்லை. ஏனெனில் எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. ஆனால் நான் என்ன நம்புகிறேன் தெரியுமா? ஒவ்வொரு நிமிடமும் நான் எதையாவது உருவாக்கும்போது நான் இங்கிருந்திருக்கிறேன் என்பதற்கான சாட்சியமாக அது இருக்கப்போகிறது என்றே நினைக்கிறேன். அதோடு மனிதகுலத்துக்கு நான் செய்கிற பெரிய மரியாதையாகவும் நான் இதனைப் பார்க்கிறேன்.
நாம் இங்கே எதற்காக இருக்கிறோம், நாம் இங்கே வாழ்வது ஏன் முக்கியமானது என்பதைக் கண்டுபிடிக்க முயற்சி எடுத்துக் கொண்டே இருக்கிறோம். ஏனெனில் பெரும்பாலான நேரங்கள் நாம் எதையாவது அழித்துக் கொண்டே இருக்கிறோம். நாம் ஏன் இங்கே இருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்வதற்காக நான் எதையாவது உருவாக்கிக் கொண்டே இருக்கிறேன்.
நீங்கள் மரணத்தைக் கண்டு அச்சம் கொள்கிறீர்களா? அது தான் உங்களது படைப்புகளில் வெளிபடுக்றதா?
நான் மரணத்தின் மீது அச்சம் கொள்ளவில்லை. நான் வலியையும் விரும்பவில்லை. வாழ்வும் மரணமுமே என்னுடைய படைப்புகளின் மையம். மரணத்தின் மீது அனைவரும் கொண்டிருக்கும் அச்சத்தையும், பாதுகாப்பின்மையையும் பற்றி நான் யோசிக்கிறேன். ஏனெனில் அதனை அடிப்படையாகக் கொண்டே தங்களையுமறியாமல் மக்கள் முடிவெடுக்கிறார்கள். தவறுகளையும் செய்கிறார்கள். இது போன்ற அச்சம் எனக்குள் ஏற்படும்போது நானே எனக்குள் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் கேட்டுக் கொள்கிறேன்.
உங்களின் பார்வையில் கலை என்பதற்கான விளக்கம் என்ன?
கலை என்பது மக்களுக்கு நாம் தருகிற ஒரு ஆன்மீகச் சடங்கு என்று தான் சொல்வேன். கலை செயல்பாடு என்பது நம்முடைய அடையாளங்களோடும் அச்சத்தோடும் இறுக்கப் பிணைந்தது. நாம் யார் என்பதை நம்முடைய கலை காட்டிக் கொடுத்துவிடும். கலை மனிதர்களைத் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளச் செய்கிறது. உறக்கம், உணவு, பாலியல் உறவு போல கலையும் நமக்கு அவசியமானது.
அருமை.
வாழ்வின் முகங்கள் தான் எத்தனை போதிக்கிறது.
மிகவும் நன்றி.
புது புது முகங்களை எனக்கு அறிமுகம் செய்கிறீர்கள்.
நன்றி கெளதமி