அயல் வீட்டுக்காரியின் பயணம்

0
321

பெண்மையின் அகப்புற உலகங்களை விவரிக்கும் திரைப்படங்களில், போர்ப் பிரதேசங்களின் மதம் மற்றும் அரசியலை வைத்து பெண்ணுலகை அணுகும் திரைப்படங்களும் பங்கெடுத்துக் கொள்வதும் அவசியமான ஒன்றாகிறது.

தாய் என்கிற பிம்பத்தை ஒரு சராசரி மனம் எப்படியெல்லாம் வடிவமைத்துக் கொள்ளுமோ அதற்கு நேரெதிரான திசைகளில் சென்று ஒரு தாயை தனது பிள்ளைகளின் வழியாக நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறது பிரெஞ்சு திரைப்படமான “INCENDIES”. படம். இந்தப் படம் Denis Villeneuve என்கிற இயக்குநர் இயக்கியது. 2010ம் ஆண்டு வெளியான இந்தப் படம் அனைவாராலும் பாராட்டு பெற்றதோடு மட்டுமல்லாமல் உயரிய விருதுகளையும் பெற்றுள்ளது.

பெண்ணை, மதக்கோட்பாடுகளின் காணிக்கைகளுக்கு வேண்டி சிதைக்கப்படும் அவளின் பேருலகத்தை, அரசியல் பலிகளுக்கு செலுத்தப்படும் கோர வலிகளை , மையப்படுத்தி தன்னை நிறுவிக் கொண்ட திரைப்படங்களில்  அழுத்தமான வரவாய் அமைந்திருக்கிறது ‘INCENDIES’ திரைப்படம்.

கனடா நாட்டின் ஒரு பொது நீச்சல் குளம் ஒன்றில் நமக்கு அறிமுகமாகிறார் நாவல் மார்வன் என்கிற அறுபது வயதை எட்டிய பெண்மணி. முந்தைய நிமிடம் வரை மகள் ஜானியுடன் சகஜமாகவே பேசியபடி தண்ணீரில் நீந்திக் கொண்டிருந்த நாவல் மார்வன் சட்டென்று ஒரு கணத்தில் அமைதியின் வெறித்தப் பார்வையோடு உறைந்து விடுகிறாள். ஜானி எவ்வளவோக் கேட்டுப் பார்த்தும் முயற்சித்தும் பதில் அளிக்காது சலனமற்று உட்கார்ந்திருக்கும் அவள், முடிவில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மயக்கமாகிறாள். பிறகு சுயநினைவைத் திரும்பப்பெறும் அவள், தனது குடும்ப நண்பரும், வழக்கறிஞருமான லேபெல் என்பவரிடம் மட்டும் எதையோ கூறிவிட்டு இறந்து போகிறாள்.

லேபெல் ஜானியையும், அவளோடு பிறந்த இரட்டை சகோதரனான சீமொனையும் அழைத்து நாவல் மார்வன் எழுதி வைத்திருப்பதாக சொல்லி ஒரு உயிலை வாசிக்கிறார். புதிர்த்தன்மையோடு இருக்கிற அந்த உயிலின் இறுதி வாசகங்கள் பெரும் அதிர்ச்சியினை ஜானிக்கும், சீமொனுக்கும் தருகிறது. தான் எவ்வாறு அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதை அதில் கூறும் நாவல். ‘…கல்லறைப் பெட்டி இன்றி,  உலகத்தை நோக்கி இல்லாமல் நிலத்தைப் பார்த்தபடி, நிர்வாணமாக என்னுடல் புதைக்கப்பட வேண்டும். சத்தியத்தை நிறைவேற்றாத எனக்கு கல்லறையில் எழுதப்படுகிற வாசகங்கள் தேவை இல்லை. அதனால் கல்லறைக் கல்லோ, அதன் மீது எனது பெயரோ எழுத வேண்டிய அவசியம் இல்லை…’ எனத்  தொடங்கும் உயில் கடைசியில் நாவலின் கடந்த கால ரகசியங்களைப் புதிராய் வெளிப்படுத்துகிறது.

உயிலைப் படித்து முடிக்கும் போது சீமொனுக்கும் ஜானிக்கும் இரண்டு அதிர்ச்சிகள் இருக்கின்றன. மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரில் இறந்து போனதாக நம்பப்படும் அவர்களுடைய தந்தை இன்னமும் உயிரோடு தான் இருக்கிறார் என்பதும் தங்களுக்கு  மேலும் ஒரு மூத்த சகோதரன் ஒருவன் இருக்கிறான் என்பதும் தெரிய வருகிறது.  அப்பாவையும், மூத்த சகோதரனையும் கண்டுபிடித்து அவர்களிடம் ஒப்படைக்க சொல்லி இரண்டு கடிதங்களையும் தனித் தனியாக எழுதியிருக்கிறாள் நாவல் மார்வன். அந்த இருவரையும் கண்டுபிடித்து அவர்களிடம்  கடிதங்களைத் தருமாறு ஜானிடமும், சீமொனிடமும் ஒப்படைக்கிறார் லேபெல்.

சீமொனுக்கு இதெல்லாம் பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது. எல்லோரையும் போல் அம்மாவை அடக்கம் செய்து விடலாம் என்கிறான் அவன் . ஜானி அதை ஒத்துக் கொள்ளாமல் தன்னுடைய அம்மாவின் பின்னணியைத்தேடிப் போகும் முடிவினை எடுக்கிறாள்.

ஜானியிடம் அடையாளமாக இருப்பது அம்மாவின் பாஸ்போர்ட்டும் அவளது  இளைமைக்கால புகைப்படம் ஒன்றும் மட்டுமே. ஜானியின் பயணம் அவளுக்கு முற்றிலும் பரிச்சயம் இல்லாத மத்திய கிழக்கு நாடுகளை நோக்கிச் செல்கிறது. கனடா வருவதற்கு முன்பு நாவல் மார்வன் பிரெஞ்சு படித்ததாக சொல்லப்பட்ட ஒரு பல்கலைக்கழகத்திற்கு ஜானி செல்கிறாள். அங்கு நாவல் மார்வனைப் பற்றி குறிப்பிடும்படியான தகவல் எதுவும் அவளுக்கு கிடைக்கவில்லை.   

அடுத்தக் கட்டத் தேடலாக அம்மாவின் சொந்த இடமான ஒரு கிராமத்திற்கு செல்கிறாள். வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் ஒரு பெண் என்று நினைத்து அன்புடன் அவளை வரவேற்கும் பெண்கள், வந்தவள் நாவல் மார்வனின் மகள் எனத் தெரிந்ததும் திடீரெனக் கோபமாகக் கத்தத் தொடங்குகின்றனர். அரபு மொழித் தெரியாத ஜானி அவர்கள் ஏன் கோபப்படுகிறார்கள் என்பது புரியாமல் திகைக்கிறாள். ஒரு மூத்த வயதுடையப் பெண் ‘நாவல் மார்வனின் பெண்ணாக இருப்பதினால் நீ இந்த இடத்தை விட்டு உடனே வெளியேற வேண்டும்’ என்கிறாள். ஒரு இளம்பெண் அவர்கள் பேசுவதை பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்து ஜானிக்கு சொல்கிறாள். முப்பது வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த தன்னுடைய அம்மா மேல் இத்தனைக் கோபமாக அவர்கள் இருப்பது ஜானிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தன் அம்மாவின் பின்னணியில்  இருக்கிற உண்மைகளைத் தேடும் ஆவேசம் ஜானிக்குள் பற்றிக் கொள்கிறது.

இந்த நேரத்தில் அவளுக்கு தன்னுடைய அம்மா சிலவருடங்கள் சிறைச்சாலையில் கழித்திருக்கிறாள் என்ற செய்தி தெரிய வர, அதை நோக்கிய பயணத்தைத் தொடங்குகிறாள். சிறைச்சாலையில் கண்காணிப்பாளராக இருந்த ஒருவரை ஜானி சந்திக்கிறாள். அவரிடம் நாவலின் புகைப்படத்தை ஜானிக் காட்டுகிறாள். அதைப் பார்க்கிற அவர், ‘சில விஷயங்களை நீ தெரிந்து கொள்ளாமல் இருப்பதே உனக்கு நிம்மதியைத் தரும்’ என்கிறார்.

இப்போது நாவல் மார்வனின் பின்னணிக் கதைத் தொடங்குகிறது. முப்பது வருடங்களின் முந்தைய காலகட்டத்தில் லெபனான் போன்ற ஒரு மத்திய கிழக்கு நாடு ஒன்றில் கிறித்தவ குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணான நாவல் ஒரு நாள் இஸ்லாமிய அகதியான அஹமது என்பவனுடன் ஊரை விட்டு தப்பித்துச் செல்ல முயற்சி செய்ய நடுவழியில் தன்னுடைய சகோதர்களால் வழிமறிக்கப்படுகிறாள். நாவலின் அண்ணன்கள் அகமது ஒரு அகதி என்பதால்  சுட்டுக் கொன்று விடுகின்றனர். வீட்டுக்கு இழுத்து வரப்படும் நாவல் தான் கர்ப்பமாக இருப்பதை தனது பாட்டியிடம் சொல்லுகிறாள். அதிர்ந்து போகிறாள் பாட்டி.

குழந்தைப் பிறக்கும்வரை யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்துவிடும் நாவலுக்கு ஒரு ஆண் குழந்தைப் பிறக்கிறது. அதை அவள் முழுதாய்த் தொட்டு தூக்கும் முன்பே அவளது பாட்டி அந்தக் குழந்தையை அகதிகள் தங்கி இருக்கும் ஒரு அநாதை முகாமுக்குக் கொடுத்து விடுகிறாள். குழந்தையை அனுப்புவதற்கு முன்பு அடையாளத்திற்காக அதன் கணுக்காலின் பின்புறத்தில் தீயினால் மூன்று புள்ளிகளை சுட்டு வைக்கிறாள். கதறியபடி செல்லும் குழந்தையிடம், ‘ஒருநாள் உன்னைத் தேடி வருவேன் மகனே..இது சத்தியம்’ என்று மட்டும் அழுகையினூடாக சொல்கிறாள் நாவல்.

பாட்டியின் வற்புறுத்தலால் நகரத்தில் உள்ள மாமாவின் வீட்டில் தங்கி பல்கலைகழகம் ஒன்றில் பிரெஞ்சு படித்துக் கொண்டே மாமா நடத்தும் ஒரு பத்திரிகையில் பத்திரிகையாளராகவும் வேலைப் பார்க்கிறாள் நாவல். இஸ்லாமியர்களுக்கும், கிறித்தவர்களுக்கும் இடையில் உச்சக்கட்ட உள்நாட்டுப் போர் நெருங்கிக் கொண்டிருக்கிற அந்தக் காலகட்டத்தில் போர் காரணமாக அவள் படித்துக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகம் மூடப்படுகிறது. எந்த நேரமும் கலவரம் வெடிக்கக்கூடும் என்ற சூழலில் மாமாவின் குடும்பம் தற்காலிகமாக வேறு இடம் செல்லும் முடிவினை எடுக்கிறது.

 

அந்த நேரத்தில் தன்னுடைய மகன் அடைக்கலமாக இருக்கும் அனாதை விடுதி இருந்தப் பகுதியில் கலவரங்கள் தொடங்கிவிட்டன என்ற செய்தி நாவலுக்கு தெரிய வருகிறது. பிரிந்த மகனைத் தேடிக் கண்டுபிடித்து தன்னோடு அழைத்து வந்துவிடவேண்டும் என்கிற தீவீரம்  நாவலுக்கு எழுகிறது. ஏற்கனவே கலவரப் பகுதியாக மாறிப்போயிருந்த தன் மகன் தங்கியிருந்தப் பகுதிக்கு தனியாக செல்கிறாள் நாவல். அந்த விடுதி முற்றிலும் சிதைந்து போய் வெறும் செங்கல்லாய் நிற்கிறது. மிகுந்த பிரயாசையோடுத் தேடி வந்து எப்படியும் மகனை மீட்டு விடுவோம் என்ற தனது நம்பிக்கையில் விழுந்த அந்தப் பேரிடியைத் தாங்க முடியாமல் யாருமற்ற அந்த சிதைவுகளில் அமர்ந்து கதறுகிறாள் நாவல்.

வேறேதாவது அனாதை விடுதியில் தனது மகன் இருக்கக் கூடும் என்று மீண்டும் தனது பயணத்தைத் தொடங்குகிறாள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை மனித நடமாட்டம் அற்ற பாதையில் செல்லும் அவளுக்கு நீண்ட நேரத்திற்கு பின்பு ஒரு வாகனம் கண்ணில் படுகிறது. தன் கழுத்தில் அணிந்திருந்த சிலுவைக் குறியிட்ட மாலையை கழற்றிவிட்டு , தலையில் முக்காடு போட்டுகொண்டு இஸ்லாமியர்கள் இருக்கும் அந்த வாகனத்திற்குள் ஏறிக் கொள்கிறாள். வாகனத்திற்குள் உள்ள அனைவரின் முகத்திலும் உயிர் பயமும், இறுக்கமும் தெரிகிறது.

வழியில் கிறித்தவ மதத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் வாகனத்தை வழிமறித்து எந்தக் கேள்வியும், விசாரணையுமின்றி வாகனத்தை சுடத் துவங்குகின்றனர். நாவலும், அந்த வாகனத்தில் பயணம் செய்த மற்றொரு பெண்ணும், அவளுடைய பெண் குழந்தையும் மட்டும் துப்பாக்கி சூட்டிலிருந்து தப்புகின்றனர். வாகனத்திற்குள் சடலங்களுக்கு மத்தியில் ஒளிந்து கொண்டு தப்பிக்கும் வழி பற்றிக் கூட யோசிக்க முடியாமல் உறைந்து கிடக்கின்றனர் அவர்கள் மூவரும். தீவிரவாதிகள் பெட்ரோலை வாகனத்தின் மேல் ஊற்றத் தொடங்கியதும், நிலைமையின் விபரீதத்தை உணர்கிறாள் நாவல். சட்டென்று வெளியே போய் தன்னுடைய சிலுவை குறியிட்ட மாலையை காட்டி ‘நான் ஒரு கிறித்தவள்’ எனக் கத்துகிறாள். உடனிருந்த பெண்ணின் கையிலிருந்த பெண் குழந்தையைப் பிடுங்கி, ‘இவள் எனது குழந்தை’ என்கிறாள். அந்தக் குழந்தை அவள் அம்மாவைப் பார்த்துக் கதறிக் கொண்டே இருக்கிறது. தீவிரவாதிகள் நாவலை விடுவிக்கின்றனர்.  குழந்தை பிடிவாதமாக நாவலிடமிருந்து விடுபட்டு தனது அம்மாவிடம் ஓடத் துவங்கும் அந்த வினாடியில் கிறித்தவ தீவிரவாதிகள் குழந்தையை சுட்டு விடுகின்றனர். வாகனத்தையும் தீயிட்டுக் கொளுத்துகின்றனர். கண்ணுக்கு முன் நிமிட நேரங்களில் நடந்து போய்விட்ட இத்தனை கொடூரங்களும் நாவலை பெரும் அதிர்வுக்குள்ளாக்குகிறது.. மாலை வரை அதே இடத்தில் எரிந்து போன சடலங்கள் முன் அமர்ந்திருக்கிறாள்.

பிறகு தன்னுடைய மாமாவின் வீட்டிற்கு திரும்புகிற அவள் அங்கு காண்பது சிதைந்த மாமாவின் வீடு மற்றும் அலங்கோலமான அதன் நகரத்தையும் மட்டுமே தான். தொடர்ந்து மதத்தின் பெயரால் நடக்கிற அவலங்கள் நாவலை முக்கியமானதொரு முடிவை நோக்கித் தள்ளுகிறது. கிறித்தவ தலைவர் ஒருவரின் பையனுக்கு பிரெஞ்சு மொழியினைக் கற்றுத் தருவதாக அவர் வீட்டுக்குள் நுழைந்து அந்தத் தலைவரை கொலை செய்து விடுகிறாள் நாவல்.

இதன் காரணமாக அரசியல் கைதியாக பதினைந்து வருடம் மிகக் கொடூரமான தனிமைச் சிறையில் அடைக்கப்படுகிறாள். அந்த சிறையின் அதிகாரியான  அபு தாரிக் என்பவன் பெண் கைதிகளை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்பவனாக இருக்கிறான். அந்த சிறைச்சாலையில் எப்போதும் பெண்களின் கதறல்கள் கேட்டபடியே இருக்கின்றன. அந்த ஓலங்கள் கேட்கும்போதெல்லாம் நாவல் ஒரு அரேபியப் பாடலை சத்தமாக பாடத் தொடங்குகிறாள். அடிக்கடி அவள் பாடும் இந்தப் பாடல் சத்தம் தன்னை பகடி செய்வதாக அபு தாரிக்கிற்கு  தோன்றி விடுகிறது., அவன் நாவலை தன்னுடைய அறைக்கு வரவைக்கிறான். அறையை விட்டு அபு தாரிக் வெளியேறும்போது ‘இப்போது பாடு, உன் பாட்டை…’ என்று சொல்லிவிட்டுச் செல்கிறான். கையில் விலங்குடன் உடல் நடுங்க தன்னுடைய உள்ளாடையைக் கூட சரிசெய்ய முடியாமல் அவதிப்படுகிறாள்.

நாவல் சில நாட்களில் கர்ப்பமாகிறாள். கர்ப்பத்தைக் கலைக்க அவள் முயற்சி செய்தும் கூட சிறையிலேயே அவளுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்து விடுகின்றன. அந்தக் குழந்தைகளை ஒரு செவிலி சிறிது நாட்கள்  வைத்திருந்து நாவல் விடுதைலையாகும் நாளில் அவளிடம் ஒப்படைக்கிறாள். குழந்தைகளுடன் கனடாவுக்கு வரும் நாவல் மீதி வருடங்களை வழக்கறிஞர் லேபெலிடம் உதவியாளராக வேலை செய்து கழிக்கிறாள்.

தன்னுடைய அம்மாவின் இந்தக் கதைகள் ஒவ்வொன்றாய் விடுபடவிடுபட உடைந்து போகிறாள் ஜானி. தொடர்ந்து நிஹாத் என்கிற பெயரில் தன்னுடைய மூத்த சகோதரன் உள்நாட்டுப் போரில் இஸ்லாமிய வீரனாக இருந்தான் என்ற செய்தி அவளுக்குக் கிடைக்கிறது. நிஹாதைக் கண்டுபிடிக்க சீமொனை உதவிக்கு  வரவழைத்துக் கொள்கிறாள். இருவருமாக நிஹாத்தையும், அபு தாரிக்கையும் தேடுகிறார்கள்.

ஒரு கட்டத்தில் மிகவும் அதிர்வுக்குள்ளாக்கும் ஒருஉண்மை இருவருக்கும்  தெரிய வருகிறது . அது அபு தார்ரிக்கின் முழுப் பெயர் நிஹாத் அபுதாரிக் என்பதும் தங்களுடைய சகோதரனும், அப்பாவும் ஒருவரே என்பதும் தெரிய வந்ததும் எதிர்பாராத இந்த செய்திகளினால் இருவரும் நிலைகுலைந்து போகிறார்கள்.

நீச்சல் குளத்தில் தன்னுடைய அம்மா அதிர்ச்சியினால் செயலிழந்து போனது மூன்று புள்ளிகளை காலில் பெற்ற அபுதாரிக்கை அங்கே கண்டுகொண்ட பிறகு தான் என்பது ரகசியத்தைக் காப்பாற்றி வைத்திருந்த லேபெல் சொன்ன பிறகே ஜானிக்கும்., சிமொனுக்கும் தெரிகிறது.

ஆனாலும் அம்மாவின் இறுதி ஆசையை நிறைவேற்றும் பொருட்டு  அபுதாரிக்கை சந்தித்து நாவல் எழுதிய இரு கடிதங்களையும் ஒன்றும் பேசாமல் ஒப்படைக்கின்றனர். கடிதங்களின் வரிகளின் மூலம் தன்னுடைய அம்மாவைப் பற்றியும், தன்னால் அவளுக்கு நேர்ந்த சிதைவுகளையும் படித்து உறைகிறான் அபு தாரிக். அவன் அவளுடைய கல்லறையில் அமைதியாக போய் நிற்கிறான்.

மகனைப் பறி கொடுத்துத் தேடும் ஒரு தாயின் தேடல், தன் தாயின் இறுதி ஆசைகளை நிறைவேற்றப் போராடும் ஒரு மகள் என இருவரின் பயணங்களும் திரைக்கதையில் மாற்றி மாற்றிக் காண்பிக்கப்படுகின்றன.. படம் முழுக்கவே காலமும், தேச எல்லைகளும் இரு வேறு கால கட்டங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. தன் அம்மா தொடர்ந்து பலமுறை கற்பழிக்கப்பட்டிருக்கிறாள், அதன் மூலமே தாங்கள் பிறந்திருக்கிறோம் என்பதை அறிந்து அதனைப் பகிர்ந்துகொள்ளக்கூட இயலாதத் துக்கத்தை வெட்டவெளியில் தனது அழுகை மூலம் வெளிப்படுத்துகிறாள் ஜானி.

தனது காதலன், வாகனத்தில் தனக்கு அடைக்கலம் கொடுத்த இஸ்லாமியர்கள், தன்னால் காப்பாற்ற முடியாத அந்தப் பெண் குழந்தை, இழந்து போன படிப்பு, சிறையில் பட்ட வேதனைகள் என எல்லாமே இருந்தும் சொற்ப வாழ்க்கையையும் நாவல் நம்பிக்கையுடனே எதிர்கொண்டிருக்கிறாள். தனது ஒரே ஆதாரமான நம்பிக்கையை அபு தாரிக்கை சந்தித்தக் கணத்தில் சிதைந்த பின்  அவளது வாழ்வு முடிந்து போகிறது.. குடும்ப அமைப்பே ஒரு பொய்க்குள் சிக்கிய பின் எந்த விலை கொடுத்து உண்மையை மறுக்க முடியும்? என்கிற கேள்வியை தனக்கு எல்லா வகையிலும் சீரழிவை ஏற்படுத்திய அரசியலையும்,. சமூகம் ‘நம்புகிற’ மதத்தையும் நோக்கி கேள்வியாக முன் வைத்திருக்கிறாள் நாவல் மார்வன்.

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments