இந்த வருடத்தின் முதல் நாவலாக தமிழ்மகன் எழுதிய ‘ஞாலம்’ வாசித்திருக்கிறேன். இவருடைய ‘ஆண்பால் பெண்பால்’, ‘வெட்டுப்புலி’ நாவல்களை வாசித்திருக்கிறேன். தொடர்ந்து வரலாற்றுப் புனைவின் வழியாக பயணிப்பவர். ஞாலமும் அப்படியான ஒரு நாவல். இந்தமுறை அவர் சொல்லியிருப்பது நிலத்தின் கதையை. நிலம் என்பதே அதிகாரம் என்று முடிவெடுத்தவர்கள் யாரிடமிருந்து எப்படி நிலங்களைத் தன் வசம் கொண்டு வந்தார்கள் என்பதை சொல்லியிருக்கிறார். அந்த நிலத்தின் மனிதர்கள் பஞ்சத்திலும், கூலியாகவும் மாற்றப்பட்டதன் பின்னணியை விளக்கியிருக்கிறார். இவற்றை சொல்ல அவர் தேர்ந்தெடுத்த வரலாற்று கதாபாத்திரம் அத்திப்பாக்கம் வேங்கடாசல நாயகர். இங்கு நாயகர் என்பது ஒரு பட்டத்தினைக் குறிக்கிறது. தமிழ்நாட்டில் பகுத்தறிவுக் கொள்கைகள் பரவத் தொடங்கிய நூற்றி அறுபது ஆண்டுகளுக்கு முன்பே அதனைத் தொடக்கி வைத்தவராக வேங்கடாசலத்தினை சொல்கிறார்.
இன்று வடசென்னை என்றும் ஒருகாலகட்டத்தில் சென்னையாக இருந்த ஏழுகிணறு பகுதியில் வாழ்ந்தவர் இவர். செங்கல் சூலை வைத்திருந்தவர் சுண்ணாம்பு கற்களையும் கிளிஞ்சல்களையும் மொத்தமாக விற்கிறார். இவருடைய சுண்ணாம்பு கற்களும், கிளிஞ்சல்களும் தான் சென்னையின் நூற்றாண்டு கடந்து மாபெரும் கட்டடங்களாக நிற்கின்றன.பிரெஞ்சு படைக்கு பயந்து பிரிட்டிஷ் அரசால் சென்னையைச் சுற்றிக் கட்டப்பட்ட சுவரும் கூட இவருடைய சுண்ணாம்பைக் குழைத்துக் கட்டப்பட்டது. சுவற்றுக்கு வரிபோட்ட காரணத்தால் வந்த பெயர் தான வால்டாக்ஸ். இன்று சென்னையின் ஒரு இடத்துக்கான அடையாளமாக பெயர் மாறியிருக்கிறது.
அட்டையில் இருக்கிற ஓவியத்துக்கும் நாவலுக்கும்பெருங்கிய தொடர்பு உண்டு. ஒற்றை காளையை வைத்துக் கொண்டு சென்னை, செங்கல்பட்டு , விழுப்புரம் பகுதிகளுக்கு தொடர் பயணம் செய்கிறார் வேங்கடாசலம். போகிற இடங்களில் எல்லாம் நிலத்தின் கதைகளைக் கேட்கிறார். அந்த நிலத்துக்கான உரிமையைப் பெற்றிருந்தவர்கள் பஞ்சத்திலும் பட்டினியிலும் நிலத்தில் கூலிகளாக வேலை செய்வதைப் பார்க்கிறார். இந்தத் தகவல்களை அவர் தொகுத்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கிறார். இங்கிலாந்து ராணிக்கு கடிதங்களைத் தொடர்ந்து எழுதுகிறார். ஆங்கிலேயர்களுக்கு புரிய வேண்டுமென தொடர்ந்து பத்திரிகைகளில் எழுதுகிறார். நிலப் பகிர்மானத்தில் ஏற்பட்ட வஞ்சகத்தையும், அது தெரியாமல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அதனைத் தொடர்ந்ததையும் வெளிக்கொண்டு வருகிறார். ‘பாயக்காரிகளுக்கும் மிராசுதார்ர்களுக்குமான விவாதம்’என்கிற இவரது நூலை அடிப்படையாகக் கொண்டே இந்த நாவல் எழுதப்பட்டிருக்கிறது.
இந்த நாவல் நடந்த அக்காலகட்டத்தில் சென்னையில் நடந்த முக்கிய வழக்குகள், செங்கல்வராயர் போன்ற மனிதர்கள் செய்த அரும் செயல்கள் அப்போதைய சாதி அடுக்குகள், பக்கிங்க்ஹாம் கால்வாய், ஜார்ஜ் கோட்டை தேவாலயம் எழுப்பபட்டது போன்றவற்றை சேர்த்துக் கொண்டே வருகிறது நாவல்.
தமிழ்மகன் எழுத்தில் வரலாற்று செய்திகள் அதிகம் இடம்பெறும். அதோடு அவற்றை சரியான இடத்தில் இன்றைய சமூகம், அரசியலோடு பொறுத்தி சொல்வார். இதிலும் அவை நடந்திருக்கின்றன.
புனைவுக்குள் வரலாற்று நிகழ்வுகள் இணைப்பது ஒரு வகை என்றால், வரலாற்றைச் சொல்வதற்கு புனைவினைப் பயன்படுத்துவது மற்றொன்று. ‘ஞாலம்’ இரணாடவது வகை.
ஒரு நாவலுக்கு எடுத்துக் கொண்ட உழைப்பும், அதைத் தொகுத்து தந்ததும் வாசிக்க வியப்பாக இருக்கிறது. நல்லதொரு வரலாற்று ஆவணம் இந்த நாவல்.