ஃபுக்குஷிமா பேரழிவுகள்

0
185

ஒரு மொழிபெயர்ப்பாளரின் பெயரைப் பார்த்தும் எதைப் பற்றியது என்று கூட யோசிக்காமல் வாங்கிய புத்தகம் இது. இதற்கு முன்பு நேரடியாக பிரெஞ்சில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட சிறுகதைகளையும் நாவல்களையும் சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர் மொழிபெயர்ப்பில் வாசித்த நம்பிக்கையில் இந்தப் புத்தகம் வாங்கினேன்.

வாசித்து முடித்ததும் ஒரு பெருமூச்சு வந்தது. அச்சம் ஏற்பட்டது. அதை மீறிய ஒரு நம்பிக்கையும். மிக்காயேல் ஃபெரியே ஜப்பானில் பணிபுரிந்த பிரெஞ்சு பேராசிரியர். இலக்கியவாதியும் கூட.

இவர் ஜப்பானில் தங்கியிருந்த காலகட்டத்தில் 2011ஆம் ஆண்டு ஜப்பானின் வட பகுதி நிலநடுக்கம், சுனாமி பேரலை மற்றும் அணுஉலை வெடிப்பு என மூன்று பேரழிவுக்கும் ஒரு சேர ஆட்பட்டது. அந்த அனுபவம் குறித்து எழுதிய புத்தகம் தான் இது – ஃபுகுஷிமா – ஒரு பேரழிவின் கதை.

மார்ச் மாதத்தில் மிக்காயேல் தனது மனைவி ஜூனுடன் வீட்டில் இருக்கையில் நில நடுக்கம் ஏற்படுகிறது. ஜப்பானில் அனைவருக்குமே நிலநடுக்கம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்கிற எச்சரிக்கை உணர்வு உண்டு. அதனால் ஒரு மேஜையின் அடியில் மனைவியுடன் தஞ்சம் கொள்கிறார். இப்படி எழுதுகிறார், “ஒருவர் தனது வாழ்நாளில் ஒருமுறையேனும் மேஜைக்கு அடியில் சில நேரங்களை செலவிட வேண்டும். குறிப்பாக எழுத்தாளர்கள். அங்கிருந்து நாம் பார்க்கும் ஒவ்வொன்றின் கோணமும் நமக்கு விசித்திரமானதாக அமையும்’ இது போன்ற ஒரு பார்வையில் தான் பேரழிவின் ஒவ்வொரு கணத்தையும் நமக்கு விளக்குகிறார் இவர்.

நில நடுக்கத்தின்போது அந்த சில நொடிகளின் பேரதிர்வை, ஓட்டத்தை, ஒலியை அவர் விவரித்த விதம்… எப்படியேனும் நுணுக்கமாக சொல்லிவிட வேண்டும் என்பதில் அவர் பயன்படுத்திய உவமைகள்..கண்ணை மூடிக் கொண்டு இருந்துவிடாமல் கண்களையும் காதுகளையும் அவர் திறந்து வைத்துக் கொண்டு எல்லாவற்றையும் உள்வாங்கியிருக்கிறார். “சப்தங்களால் ஆன சர்ப்பம் ஒரு ட்ராகனின் துடிப்பான வால் இவற்றோடு ஒரு மிருகம் நகர்ந்தது போல இருந்தது என்று சொல்லலாம்” என்கிறார். ஜப்பானியர்கள் மீன்பாதி பூனை பாதியுமான வடிவத்தை ஏன் நிலநடுக்கத்தின் உருவகமாக சொல்கிறார்கள் என்பது சட்டென விளங்கியது என்கிறார். “வளைந்து கொடுக்கக்கூடிய திரட்சியான ஏதோ ஒன்றின் உடல் சிதைந்து மீண்டும் உடனடியாக ஒன்று சேர்வது போல இருந்தது” என்கிறார்.

நிலநடுக்கம் என்கிற இயற்கை நம் முன்வைக்கும் சவாலுக்குப் பிறகு மனித மனம் பெறுகிற துல்லியத் தன்மையையும் உடல் அதிர்ந்து கொண்டே இருக்கிறபோது அவன் மனதில் எது மாதிரியான மாற்றங்கள் ஏற்படும் என்பதையும் மிகத் துல்லியமாக விளக்குகிறார்.
நிலநடுக்கம் ஏற்பட்ட காரணத்தால் சுனாமி பேரலை எழுந்து ஜப்பானில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்து போனதை பார்த்த சாட்சியாகவும் இருந்திருக்கிறார். இவரும் இவரது மனைவியும் பேரழிவு பாதித்த இடங்களுக்கு பயணம் செய்கிறார்கள். அங்கு கண்ட காட்சிகளை அவர் விவரித்த விதத்தில் எங்கும் கழிவிரக்கமோ, பச்சாதாபமோ இல்லை. உள்ளதை நமக்கு விளங்க வைக்க அவர் எடுத்துக்காட்டிய விதம் குறிப்பிடத்தகுந்தவை.

ஒரு வீடு நிலத்தில் இருந்து பெயர்தெடுக்கப்படும்போது ஏற்படுகிற ஒலியைக் கேட்டவர்கள் சொன்னதை நமக்கு விளக்கியிருக்கிறார்.

சாதரணமான கடல் அலைக்கும் அதே அளவு உயரம் கொண்ட சுனாமி பேரலைக்கும் உள்ள வித்தியாசத்தை அவர் விவரிக்கிறபோது அது எத்தனை தூரம் ஆற்றல் வாய்ந்தது என்பது தெரிகிறது. மட்டுமல்ல கடலின் மீது அச்சத்தைக் காட்டிலும் மரியாதையே ஏற்படுகிறது.

சுனாமி எத்தகைய வகையில் மரணங்களை நிகழ்த்தக்கூடியது ஒரு மனித உடலை அது என்னவெல்லாம் செய்யும் ஆற்றல் கொண்டது என்பதற்கு அவர் நேரில் சந்தித்த காட்சிகளை உதாரணமாக எடுத்து வைக்கிறார். ஐந்து சென்டிமீட்டர் கொண்ட ஒரு சுனாமி அலை இரும்பினை வளைத்து உருத்தெரியாமல் ஆக்கவல்லது எனும்போது மனிதர்களை நினைத்துப் பாருங்கள் என கண்ட காட்சிகளை எடுத்து வைக்கிறார்.

ஒரு கிராமத்தில் கடலை ஒட்டிய இடத்தில் மூன்று நூற்றாண்டுகளாக 70000 பைன் மரங்கள் நடப்பட்டு பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. கடல் வந்து போனபின்பு எல்லாம் அழிந்து ஒரே ஒரு மரம் மட்டும் நின்றிருக்கிறது. மாபெரும் பைன் மரக்காடுகள் அழிந்ததன் நினைவாய் அந்த ஒற்றை மரம். மனித்ரகளையே அங்கு பாதுகாக்க வழியில்லாமல் போனபின்பு அந்தக் கிராமத்தை சேர்ந்த சிலர் உடனடியாக அந்த மரத்தை சுற்றி பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அவர்களுக்கு அது இப்போது வெறும் மரமல்ல.

அணுஉலை பாதுகாப்பானது என்று சொல்லிக் கொண்டிருந்த அத்தனை பேரும் அணுஉலைக்கு ஆபத்து ஏற்படலாம் என்றதும் போட்டது போட்டபடி ஓடி ஒளிந்ததை பதிவு செய்கிறார். கடைசிவரை அணுஉலையின் பாதிப்பினை அரசு மர்மமாகவே வைத்திருந்ததை சொல்கிறார். மூன்று கிலோமீட்டர் தூரத்தில் அணுஉலைக்கு அருகில் யாரும் இருக்க வேண்டாம் என அரசு அறிவித்த சில மணி நேரங்களில் பத்து கிலோமீட்டர் எனவும், இருபது எனவும் பின்பு நூறு கிலோமீட்டர் தூரம் எனவும் எச்சரிக்கைகள் தொடர்ந்து நடுங்கிய குரலில் விடப்பட்டதை சொல்கிறார்.

ஜப்பானில் வர்த்தகம் செய்த வெளிநாட்டினர் ஒரே நாளில் பணியார்களையும் நிறுவனத்தையும் விட்டுவிட்டு அவரவர் நாடுகளுக்கு அச்சத்தில் சொல்லாமல் கொள்ளாமல் தஞ்சம் அடைந்ததையும் அவர் விட்டுவைக்கவில்லை. பெரும்பாலும் அவர்கள் பிரெஞ்சு தேசத்தினர் என்கிறார்.

பேரலை எழுந்த சமயம் இயற்கைக் கொடுத்த முன்னறிவிப்புகளை அவர் பலரிடமும் விஞஞானி களிடமும் கேட்டதை பகிர்ந்திருக்கிறார். ஒரு பள்ளிக்கூடத்தில் ஐந்து மாடிகளிலும் இருந்த கடிகாரங்கள் குறிப்பிட்ட சமயத்தில் சொல்லி வைத்தாற்போல் நகர்வதை நிறுத்தி காலத்தில் உறைந்திருக்கின்றன.

புத்தகத்தின் இறுதிப் பக்கங்களில் இத்தனை பேரழிவைப் பார்த்த அவர் சொல்கிற வாழ்க்கைக்கான நிலையான்மையும், நிலைப்பாடும் குறித்த வார்த்தைகள் முக்கியமானவை.

ஜங் ஹெங் என்பவர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்த நிலஅதிர்வை உணர்த்தும் மாபெரும் தாழியைக் குறித்து தொடங்கி அது எப்படி வரலாறிலும் கதைகளிலும் நீக்கமற நிறைந்திருந்தது என்பதில் கொண்டு வந்து முடிக்கிறார்.

புத்தகத்தை வாசிக்கும்போது இயற்கை பேரழிவின் ஊழிஆட்டம் என்பதைக் காட்டிலும் அதை மனித மனம் எப்படி உட்செரித்து தன்னியல்பாய் அடுத்த கட்டம் நோக்கி செல்கிறது என்பதை புரிந்து கொள்ளும் தருணமே புகுஷிமா எனக்குக் கொடுத்த கொடை என்பேன்.

புத்தகம் : ஃபுக்குஷிமா ஒரு பேரழிவின் கதை

எழுத்தாளர் : மிக்காயேல் ஃபெரியே

தமிழில் : சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர்

பதிப்பகம் : தடாகம் 

புத்தகம் வாங்க

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments