தமிழ் சினிமாவின் ‘ட்ரெண்ட் செட்டர்களுள்’ ஒருவராக இயக்குனர் தாதா மிராசியைச் சொல்ல முடியும். மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர். மேற்கு வங்கம் எப்போதுமே அதன் நாடகங்களுக்கும் இலக்கியத்துக்கும் பெயர் பெற்றது. இலக்கியத்தில் இருந்து திரைப்படங்களை நமக்குத் தந்துகொண்டிருப்பது. தாதா மிராசியின் படங்களில் இவற்றையெல்லாம் பார்க்க இயலும். படங்கள் இயக்குவதற்கு முன்பாக இவர் திரைக்கதை மட்டுமே எழுதிய படங்கள் வெளிவந்திருக்கின்றன. இவருடைய படங்களில் ஒரு முழுமையான ‘வாழ்க்கையை’ பார்க்க இயலும். எந்தக் கதையையும்தான் ஆதியில் இருந்து தொடங்க மாட்டார். ஒரு ஊரில் ஒருவர் இருந்தார் என்கிற ரீதியிலான கதை அல்ல. கதை அதன் ஓட்டத்தின் இடையில் தொடங்கும். நாம் அதோடு இணைந்து கொள்கையில், கதையின் முன்னும்ம் பின்னுமான காட்சிகளை சொல்லிக் கொண்டே போவார்.
இவருடைய இயக்கத்தில் புதிய பறவை’ தமிழ்சினிமாவின் எப்போதைக்குமான ‘கிளாசிக்’. ஆங்கிலப் படமான Chase a Crooked Shadow படத்தின் தழுவலாக உத்தம் குமார் நடித்து வங்காளத்தில் ‘சேஷ் அங்கா’ என்ற பெயரில் வெளிவந்திருந்தது. இதனை பிரபல இயக்குநர் ஹரிதாஸ் பட்டாச்சாரியா இயக்கியிருந்தார். படம் அங்கு வெற்றி பெற்றது. அதைத் தமிழுக்கு கொண்டு வந்தார் தாதா மிராசி. ‘சேஷ் அங்கா’ படம் இன்றளவும் அதன் நீதிமன்றக் காட்சிகளுக்காக பேசப்படுகிறது. ஆனால் தாதா மிராசியோ ஒரே வீட்டுக்குள் கதையை அதன் வேகம் குறையாமல் எடுத்திருந்தார். ஆரூர் தாசின் மறக்கமுடியாத வசனத்தில் , விஸ்வநாதன் ராமமூர்த்தி அவர்களின் இசையில் அற்புதமான பாடல்களோடு படம் தமிழிலும் ‘புதிய பறவை’ பெரும் வெற்றி. திரில்லர் வகைப் படம் என்றபோதிலும் காதல் பட வரிசையிலும் வைக்கப்படுகிறது. கறுப்பு வெள்ளைக் கால படங்களில் வெகு சில இயக்குனர்களே படத்திற்கான ஒரு மனநிலையைத் தக்க வைப்பார்கள். ஒரு ஷாட்டைப் பார்த்தால் கூட எந்த இயக்குனர் எடுத்தத் திரைப்படம் என்று சொல்லுமளவுக்கான உருவாக்கத்தை வெகு சில இயக்குனர்களிடம் தான காண முடிந்திருக்கிறது. தாதா மிராசியைப் பொறுத்தவரை மற்றப் படங்களில் தவறவிட்ட இந்த உருவாக்கத்தை புதிய பறவையில் தந்திருப்பார். அந்தப் படத்தின் ஒரு ஷாட் போதும் இது புதிய பறவை என்று சொல்லவிட முடியும். சிவாஜி கணேசன் அவர்களின் சொந்தத் தயாரிப்பு இந்தப் படம். நாயகன் கொலைகாரன் என்பதே படத்தின் முடிச்சு. இந்தப் படத்தினை சிவாஜி ஏற்றுக்கொண்டதன் காரணம் கதையின் அமைப்பும் அதில் தன் திறமையைக் காட்டிவிட முடியும் எக்நிற நம்பிக்கையாகத் தான் இருக்க மூடியும். கதைக்குள் சௌகார் ஜானகியும், எம்ஆர் ராதாவும் வந்த பிறகு சிவாஜியின் தவிப்பும், மன உளைச்சலும் பார்க்கும் ஒவ்வொருவரையும் பாதித்தது . இறுதிக் காட்சியில் சிவாஜி நடித்திருந்த அளவுக்கு அவரது குரலும் நடித்திருந்தது. தன் மனைவியை கொலை செய்தபிறகு நடந்ததை விவரிக்க, என்ன நடந்தது என்பதைக் காட்சியில் காட்டுவார்கள். இங்கு சிவாஜியின் குரலை மட்டும் தனியாகக் கேட்க வேண்டும். அது கோபால் என்கிற கையறு நிலையில் இருக்கும் ஒரு மனிதனின் குரல். எத்தனை ஏற்ற இறக்கங்கள், பரிதவிப்புகள், கெஞ்சுதல்கள் கொண்ட குரல் அது!!
புதிய பறவை படத்தின் மனநிலையைத் தக்க விதத்தில் பெரும்பங்கு ஒளிப்பதிவாளர் கே.எஸ் பிரசாத்துக்கும் உண்டு. இந்தியத் திரைப்படங்கள் கறுப்பு வெள்ளையில் இருந்து வண்ணப்படத்துக்கு மாறுகிற காலகட்டத்தில் கே.எஸ் பிரசாத போன்ற ஒளிப்பதிவாளர்கள் ஒரு ‘ஸ்டைலை’ கடைபிடித்தார்கள். அது இன்றளவும் நாம் பேசக்கூடிய ஒரு கிளாசிக் வகையாக இருக்கிறது. ஒளியின் மூலமும் கேமரா கோணங்கள் வழியாகவும் கதாபாத்திரத்தின் மனநிலையைக் காட்டுவதை முயற்சித்த ஓளிப்பதிவாளர்களில் கே.எஸ் பிரசாத்துக்கு ஒரு இடமுண்டு. புதிய பறவையில் க்ளைமாக்ஸ் காட்சியில் சிவாஜி உண்மையைச் சொல்லத் தொடங்கும் முன் வைக்கப்பட்டிருக்கும் கோணங்களையும் ஒளியமைப்பையும் இதற்குஉதாரணமாகச் சொல்லலாம். பிறகு ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ பாட்டில் சிவாஜிக்கு வைக்கப்பட்டிருக்கும் கோணங்கள், புகையின் நடுவே தெரியும் அவரது முகம்..என முற்றிலும் வித்தியாசமான முயற்சியினை நமக்குத் தந்திருந்தார் பிரசாத்
இப்படி இசை, ஒளிப்பதிவு, வசனங்கள், நடிப்பு, இயக்கம் என எலலவற்றிலும் அவரவர் பங்கினை செய்றப்பாக வெளிப்படுத்திய இந்தப் படம் போல் தாதா மிராசியை இன்றளவும் தவிர்க்க முடியாத இயக்குனராக்கிவிட்டது.
தாதா மிராசியின் படங்கள் அனைத்திலும் சில ஒற்றுமைகளைப் பார்க்க இயலும். மிராசியே எழுதிய கதை, வேறு மொழியில் இருந்து ரீமேக் செய்தது, வேறு கதையாசிரியர்களிடமிருந்து பெற்ற கதைகள் எதுவாக இருந்தாலும் அதில் ஒரு அம்சத்தைத் தொடர்ந்து கவனிக்க இயலும். எல்லாக் கதைகளிலும் குற்றஉணர்வு என்பது கதையின் அடிநாதமாக அமைந்திருக்கும்.
‘மூன்று தெய்வங்கள்’ படத்தினை எடுத்துக் கொள்ளலாம். ஒரு வீட்டில் திருடுவதற்காக சிறையில் இருந்து தப்பித்த மூன்று கைதிகள் நுழைவார்கள். இவர்கள் கைதிகள், திருடர்கள் என்பதை அறியாமல் அந்த வீட்டில் உள்ளாவர்கள் இவர்களை விருந்தாளியாக நடத்துவார்கள். அந்த வீட்டின் உறுப்பினர்களாகவே மாறிவிடுவார்கள் இவர்கள். ஆனாலும் தாங்கள் சிறைச்சலையில் இருந்து வந்தவர்கள் என்பதை நினைத்து ஒவ்வொரு கணமும் குற்றஉணர்வில் மருகுவார்கள்.
அதே போல இரத்தத்திலகம் படம். தேசத்துக்காக ஒருவரைக் கொலை செய்துவிடும் இராணுவ வீரர் தன்னால் கொலை செய்யபப்ட்டவரின் வீடு என்று தெரியாமலேயே தஞ்சம் புகுவார். தெரியவந்தவுடன் ஏற்படும் குற்றஉணர்வு கதையை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்தி செல்லும். அதே போல தன காதலி தேசத்த்ரோகியாகிவிட்டால் என வெறுக்கும் நாயகன் அப்படியல்லா என்று தெரிய வந்தபோது ஏற்படும் குற்றஉணர்வு என கதையின் மையமே இந்த உணர்வில் தான் எழுதப்பட்டிருக்கும்’
மனைவியைக் கொலை செய்துவிட்டு அதனை மறைத்துக் கொண்டு மற்றொரு பெண்ணுடன் காதலில் விழுகிற ஒருவனின் குற்றஉணர்வு தான்புதிய பறவை.
தான் ஏமாற்றியது தெரிந்ததும் தற்கொலைக்கு முயன்ற காதலியை குற்ற உணர்வு காரணமாக காதலன் மீட்கப் போராடுவது – பூவும் பொட்டும்
தன்னால் விபத்துக்குளாகி மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவருக்கு பாதுகாவலராக வேலை செய்ய அந்த வீட்டுக்கே வந்து பணிவிடை செய்யும் ஒரு கதாபாத்திரம் ஜெய்ஷங்கருக்கு ‘ராஜா வீட்டுப் பிள்ளை’ படத்தில்.
இவை சில ‘குற்ற உணர்வின்’ உதாரணங்கள்.
மற்றொரு ஒற்றுமை, இவருடைய எந்தப் படமும் எந்த ஒரு சலசலப்புமின்றி சாதாரணமாகவே தொடங்கும். காதல்காட்சிகள், நகைச்சுவை, பாடல்கள் என்று பொழுதுபோக்கிற்கான அத்தனையும் இடம்பெற்றிருக்கும். இந்தக் கதையில் என்ன பிரச்சனை ஏற்பட்டு விடப்போகிறது என்று நம்மால் யூகிக்கவே முடியாத கதைகள். சட்டென்று ஒரு அசாதாரண சூழல் ஏற்பட்டபின் கதையின் தன்மை அப்படியே மாறிவிடும்.
இந்தக் கதாபாத்திரம் இந்தச் செயலை செய்யாது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும்போது அந்த எதிர்பாராத செயலை அந்தக் கதாபாத்திரம் செய்யும் அல்லது செய்திருக்கும்.
அண்ணாவின் ஆசை படத்தில் அண்ணன் நேர்மையானவர். நீதிக்கும், நல்ஒழுக்கத்துக்கும் பெயர் வாங்கியவர். அப்படியான ஒருவர் தன் தம்பிக்காக இறந்தது போல் நடித்து இன்சூரன்ஸ் பணத்தை பெற்றுத் தருவார்.
புதிய பறவையில் சிவாஜி கணேசன் கலாரசிகனாக வருவார். எல்லாரிடமும் அன்பைக் காட்டும் ஒருவர். காதலன். இவர் தான மனைவியைக் கொலை செய்திருப்பார்.
தேசத்தைத் தன் உயிர் போல் நினைக்கும் ஒரு பெண் சீனா இந்திய போரின் போது ஒரு சீன தேசத்தவனை மணப்பது என்பது ரத்தத்திலகத்தின் கதை.
இப்படி நாம் முற்றலும் எதிர்பாராதத் திருப்பங்கள் அந்தக் கதாபாத்திரத்தின் மூலமாக நடக்கும். சொல்லப்போனால் அந்தக் கதாபாத்திரத்தை எவ்வளவு உயர்வாக காட்டுகிறார்களோ அதற்கு நேர்மாறாய் அவர்கள் நடந்து கொள்வதும் அதற்கு பின்னணியில் இருக்கும் நியாமுமே கதைகளாக இவரது படங்களில் அமைந்திருக்கின்றன. இது தவிர இவருடைய படங்களில் தொடர்ந்து அப்போதைய நாட்டினுடைய நடப்பு விஷயங்களை ஒரு இடைச்செருகலாக சொல்லிக் கொண்டிருப்பார்.
இந்திய சீன யுத்தம், பீகார் பஞ்சம், இன்சூரன்ஸ் பற்றிய பிரச்சாரம் இப்படியாக.
இவருடைய இயக்கத்தில் வெளிவந்த படங்களைத் தொடர்ந்து பார்க்கையில் வெவ்வேறு கதைக் களத்தை கையாண்டிருக்கிறார் என்பது புரியும். எந்தக் காட்சியும் அனாவசியமானது என்று சொல்லிவிட முடியாத அளவுக்கு ஒரு நேர்த்தி இவருடைய படங்களில் உண்டு. ஒரு கதாபாத்திரத்தை அறிமுகம் செய்யும்போதே அதன் தன்மையையும், கதையில் அந்தக் கதாபாத்திரத்தின் பங்களிப்பு என்னவாக இருக்கப்போகிறது என்பதையும் சொல்லிவிடக்கூடியவர. பூவும் பொட்டும் படத்தில் பானுமதி அதற்கு முன்பு ஏற்றியிராத பாத்திரம். தன்னுடைய பதின்பருவ மகளை பார்ட்டிக்கு தயார் செய்யும் காட்சியில் அறிமுகமாவார் “சேச்சே…புழுக்கமா இருக்கு…மேக் அப் எல்லாம் கலைஞ்சு போயிடும் போல இருக்கு. வீடு முழுக்க ஏற கண்டிஷன் பண்ணுங்கன்னு உங்க அப்பாக்கிட்டக் கேக்கறேன். நான் சொல்றதை அவர் கேட்டாதானே?” என்று அறிமுகமாகும் கதாபாத்திரம். பானுமதி வருகிற காட்சிகள் அத்தனையும் ரசிக்கலாம். படபடவென பேசும் பானுமதியை அப்படியே பயன்படுத்திய படம் இது.
புதிய பறவைக்கு முன் பின் என்று இவரது படங்களில் வித்தியாசத்தை உணர முடிகிறது. புதிய பறவைக்கு பின்பு இவர் இயக்கியத் திரைப்படங்களில் கதைகளுக்கு முக்கியத்துவம் தந்திருந்தார். கதை ஒரே ‘ட்ராக்கில்’ செல்லாமல் பல்வேறு துணைக் கதைகள், ஒரு சிறிய சஸ்பென்ஸ் இவற்றோடு கதையை அமைத்துக் கொண்டார். அடுத்து என்ன நடக்கும் என்பதை முன்வைத்தே திரைக்கதை எழுதியிருக்கிறார். அதற்குத் தகுந்தார்போல கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். ஆனாலும் கூட தாதா மிராசி என்றால் புதிய பறவை தான் நினைவுக்கு வருகிறது.
இந்தியிலும் படம் இயக்கியிருக்கிறார். அறுபதுகளில் அடுத்தடுத்து படம் இயக்கியவர் எந்தக் காரணத்தாலோ இயக்குவதை குறைத்துக் கொண்டார். தாதா மிராசியைக் குறித்தத் தனிப்பட்ட தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. அவருடைய புகைப்படமும் நமக்குக் கிடைப்பதில்லை.
இவருடைய கதைகள், காட்சிகள் காலத்திற்கு ஏற்றது போல மாற்றபப்ட்டு பின்னாட்களில் பல்வேறு படங்களில் பயன்படுத்தப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. தாதா மிராசி என்பவர் நேர்த்தியான ‘ஸ்டைலிஷ்’ இயக்குனர் என்பதைக் கடந்து தான் நம்பும் ஒன்றை சொல்ல விழைந்தவர் என்று சொல்ல முடியும். சூழலால் குற்றம் செய்தவர்கள் கூட தங்கள் மனசாட்சிக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும். தவறு செய்வதை நல்ல மனம் கொண்டவர்கள் வெறுக்கிறார்கள் என்பதையே அவர் மீண்டும மீண்டும் சொல்ல நினைத்திருக்கிறார். அந்த வகையில் அபூர்வமான ஒரு இயக்குனர் தான் தாதா மிராசி.
‘
Omg. பிரமாதமான கட்டுரை. தீர்க்கமான பார்வை மற்றும் ஒப்பீடுகள். ஒற்றை வரியில் படங்களின் சாரம்சத்தை சொல்லியதும் அருமை. நீங்கள் சொல்லியதில் சில படங்கள் பார்க்கத்தவறியிருக்கிறேன். பார்க்க முயற்சிக்கிறேன். வாழ்த்துகளும் நன்றிகளும்.
புதிய பறவை எனக்கு மிகவும் பிடித்த படம். காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் தன் அப்பாவுக்கு மர்மக் கதை சொல்லி பயமுறுத்துவார் இல்லையா? அந்தப் பாணியில்தான் தாதா மிராசியும் கதை சொல்லுவாராம்.