தமிழகத் திரையில் பெரும் சாதனை செய்த ஒரு இயக்குனராக பீம்சிங் அவர்களைச் சொல்ல வேண்டும். இருபத்திநான்கு வருடங்களாக தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் படங்களை இயக்கியிருக்கிறார். வருடத்திற்கு குறைந்தது இரண்டு படங்கள் வரை அவரிடம் இருந்து நமக்குக் கிடைத்திருக்கின்றன. இப்படித் தொடர்ச்சியாக கால் நூற்றாண்டு காலங்கள் தவறாமல் படமெடுக்கும் இயக்குனர் இனி நமக்குக் கிடைப்பது அரிதிலும் அரிது. அவர் இயக்கியப் படங்கள் எப்போதும் ‘கிளாசிக்’ வரிசையில் வைக்கப்படுகின்றன. அவர் இயக்கியதில் பிரபலமாக இன்று வரையில் பேசப்படுகிற ‘பாசமலர்’ போன்றதொரு படத்தின் பாதிப்பில் படங்கள் வந்தபடி இருக்கின்றன.
பீம்சிங் படங்களைத் தொடர்ந்து பார்க்கையில் அவர் குடும்ப உறவுகளுக்குத் தந்திருக்கும் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள முடியும். அவருடைய படங்கள் எல்லாமே உறவுகளுக்குள் நடக்கிற சிக்கல்களும், உணர்வுப் போராட்டங்களுமாகவே அமைந்திருக்கின்றன. கலைஞர் மு கருணாநிதி, சோலமலை, முரசொலி மாறன், மு வரதராஜன், வலம்புரி சோமநாதன், ஆரூர்தாஸ் என வெவ்வேறு எழுத்தாளர்கள் இவருடைய படங்களுக்கு திரைக்கதைகளும், வசனங்கள் எழுதியிருக்கிறார்கள். இவர்களில் சோலமலை அதிகமாக பீம்சிங்குடன் பணி செய்தவர். எழுத்தாளர்கள் மாறுகையில் கதை சொல்லும் விதமும் கூட மாறுவதைப் பார்க்க முடியும்.
உதாரணத்துக்கு சில படங்களைச் சொல்லலாம். ராஜா ராணி படத்திற்கு மு.கருணாநிதி அவர்கள் எழுதுகிறார். விதவைத் திருமணத்தினை ஆதரிக்கும் படம் இது. சில வருடங்கள் கழித்து ‘கன்னட பீஷ்மர்’ என்றழைக்கப்பட்ட புகழ்பெற்ற இயக்குனரும் திரைக்கதையாசிரியருமான ஜி.வி. ஐயர் எழுதிய ‘பழனி’ படத்தினையும் பீம்சிங் இயக்குகிறார். பழனி படம் விவசாயம் குறித்தும் உழுபவருக்கே நிலம் சொந்தம் என்பதையும் உயர்த்திப் பேசுகிறது. பிறகு ஜெயகாந்தன் எழுத்தில் ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ படமும் வெளிவருகிறது. இந்தப் படங்களில் எல்லாம் அரசியல், சமூகக் கருத்துகள் உண்டு. அவை அந்த்தக் காலக்கட்டத்தின் பேசுபொருட்களை மையமாகக் கொண்டவை. சீர்திருத்த திருமணங்களை உயர்த்திப் பேசும் ‘ராஜா ராணியும்’, பூமிதான இயக்கத்தினைப் பேசும் ‘பழனி’யையும் சமூக, அரசியல் படங்களில் வைக்க இயலும். அந்த அரசியல்களை பீம்சிங் உள்வாங்கியிருந்தார். இவற்றோடு அப்போதைய சமூகத்தில் நிலவிய குடும்ப சிக்கல்களையும்தனது படங்களில் சொல்லியிருந்தார். அதற்கான கதையாசிரியரும் அவருக்கு இருந்தார்கள்.
பீம்சிங்கின் படங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித் தனி கட்டுரைகள் எழுத இயலும். ஒவ்வொன்றுமே வெவ்வேறு களங்கள். பீம்சிங்கின் படம் என்றாலே தவறவிடக்கூடாது என்று ரசிகர்கள் நினைக்கும் அளவுக்கு பார்வையாளர்களுக்கான மரியாதையைப் படங்களில் கொடுத்திருப்பார். எதற்காகத் தன்னுடைய படங்களைப் பார்க்க ஒருவர் வருகிறார் என்பதை அறிந்து கொண்ட இயக்குனர்களில் ஒருவர் இவர்.
திரைப்படங்கள் சமூகத்தை பிரதிபலிக்க வேண்டும் என்று சொல்லப்படும் கருத்துகளுக்கு பீம்சிங்கின் படங்களை உதாரணமாகச் சொல்ல இயலும். ‘பாகப்பிரிவினை’ படம் தலைப்பு சொல்லும் பிரச்சனையைக் கொண்டது. இப்போது வரை தமிழ்ச் சூழலில் அண்ணன் தம்பிகளுக்கிடையில் சொத்துப் பிரிக்கப்படுவது என்பது தயக்கத்துடனேயே செய்யப்படுகிறது. சொத்துக்காக உடன் பிறந்தவர்கள் சண்டையிடுகிறார்கள் என்பது அவமானகரமான செயல் தான் இப்போதும் கூட. ஐம்பது வருடங்களுக்கு முன்பு இரு குடும்பங்கள் பாகப்பிரிவினை செய்துகொண்டு பிரிவது என்பது எத்தனை வலி மிகுந்ததாய் இருந்திருக்கும் என்பதற்கு பாகப்பிரிவினை என்றைக்குமான சாட்சி. பாகப்பிரிவினை படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சியைப் பற்றி சொல்லியாக வேண்டும். திரைப்படங்கள் ஆவணமாகவும் மாறும் என்பதற்கான எடுத்துக்காட்டு இந்தக் காட்சி. பாலையா தனது மனைவியின் வற்புறுத்தல் தாங்காது சொத்தினைத் தன் தம்பியுடன் பிரித்துக்கொள்ளும் காட்சி. சமையல் அறையில் பெண்கள் நின்று கூடத்தில் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அண்ணனும் தம்பியும் முகம் பார்க்க இயலாமல் ஆளுக்கு ஒருபுறம் திரும்பியிருப்பார்கள். ஊர் பெரிய மனிதர்கள் நடுக்கூடத்தில் அமர்ந்து சொத்தினை பிரிப்பார்கள். யார் யாருக்கு எந்தெந்த நிலங்கள், வீடுகள் தோட்டங்கள் என அளவு சொல்லி பிரித்துக் கொடுப்பார்கள். உணர்ச்சிகரமான காட்சி என்றபோதும் பாகப்பிரிவினை எப்படி நடந்திருக்கும் என்பதற்கான ஆவணக் காட்சியாகவும் இதைச் சொல்ல முடியும்.
ஐம்பதுகளில் தமிழ் சினிமாவுக்கு ஒரு முகம் இருந்தது. அது மெதுவாகத் தன்னை புரட்சிகரமான கருத்துகளுக்கான களமாக மாற்றிக் கொண்டிருந்தது. அரசியலும், சினிமாவும் ஒன்றையொன்று பற்றத்தொடங்கிய காலம். பீம்சிங் இயக்குனரான சமயம் தமிழ்சினிமா பல புதிய முயற்சிகளுக்கு தன்னை ஒப்புக் கொடுத்திருந்தது. ‘அந்தநாள்’ என பாடல்கள் இல்லாத திரைக்கதையில் புதிய யுத்தியைத் தந்திருந்த படமாக வெளிவந்தது. வைஜெயந்தி மாலா அப்போதைய பெண்களுக்கான குரலாக பேசிய ‘பெண்’ படம் வெளிவந்தது. எம்ஜிஆருக்கு ஒரு ஏற்றத்தைத் தந்த ‘மலைக்கள்ளன்’ படம் வெளிவந்திருந்தது. சிவாஜி பராசக்தியில் தொடங்கி சட்டென மேலேறிக் கொண்டு வந்துவிட்டிருந்தார். திராவிட அரசியலில் தீவிரமாக இருந்தவர்கள் திரைப்படங்களைத் தங்களது களமாகவும் மாற்றிக் கொண்டிருந்தனர். அவர்கள் எழுதிய படங்களில் பொழுதுபோக்கு அம்சங்கள் இருந்தாலும் அடிநாதமாக சமூகத்துக்கு சொல்ல நினைத்த கருத்துகளும் இருந்தன. சிவாஜியும், எம்ஜிஆரும் உச்சத்தைத் தொடுவதற்கு முன்பு எந்தவிதமான கதையையும் எந்த நடிகரும் சொல்லலாம் என்ற போக்கு இருந்தது. ‘ரத்தக் கண்ணீர்’ படத்தில் எம்.ஆர் ராதா சொன்ன கருத்துகளுக்கு அப்படியொரு வரவேற்பு கிடைத்திருந்தது. ஒருவகையில் தமிழ்த்திரைப்பட சூழல் ஒரு கலவையான நம்பக்கூடிய தவிர்க்கமுடியாத பொழுதுபோக்கு சக்தியாக முழுவதுமாக மாறியிருந்த காலகட்டம்.
இந்தக் காலகட்டத்தில் தான் பீம்சிங் இயக்குனராகிறார். இந்தச் சூழலின் தாக்கத்தினால் தனது படங்களில் அவருக்கேயான சமூக அக்கறையுள்ள கருத்துகளை சொல்லிக் கொண்டேயிருந்தார். குடும்ப அமைப்பு தான சமூகத்தின் ஆணிவேர் என்பதை அவர் நிலைநாட்டுவதற்காகவே படங்கள் எடுத்தாரோ என்று கூடத் தோன்றுகிறது. அவர் இயக்கிய முதல் இரண்டு படங்களான ‘அம்மையப்பன்’, ராஜா ராணி இரண்டுக்கும் கலைஞர் மு. கருணாநிதி வசனம் எழுதினார். அதற்கு முன்பு கலைஞர் எழுதிய படங்களில் நேரடியாக சொல்லப்பட்ட கருத்துகளை ராஜா ராணி படத்தில் ஆங்காங்கே வசனங்களாக வைத்து இறுதியில் மட்டும் பிரசாரம் போல மாற்றியிருப்பார்கள். இதற்கு படத்தில் ஒரு கதாபாத்திரமாக வரும் கலைவாணர் பெரிதும் உதவியிருந்தார். திரைப்படக் கலை என்பதை புரிந்து கொண்ட பீம்சிங் போன்ற இயக்குனர்கள் பயன்படுத்திய உத்தி அது. நாடகங்களின் தாக்கம் திரைப்படங்களிலும் இருந்த காலகட்டம் அது. அதே போல வங்காள மொழித் திரைப்படங்களின் கதைகளை தமிழுக்குத் தகுந்தாற்போல மாற்றி எடுத்துக் கொண்டிருந்தனர். பீம்சிங்கின் சில படங்களும் வங்காள மொழித் திரைப்படங்களில் இருந்து முறையாக உரிமை பெற்று தமிழில் எடுக்கப்பட்டன. அனால் அதை விடவும் தமிழ்நாட்டுக்கேயுரிய சில உணர்வுக் கொனதளிப்புகளை பீம்சிங் கையாண்டார். சிறந்த உதாரணமாக பாசமலர் படத்தினை சொல்ல வேண்டும்.
பாசமலர் என்பது படம் என்பதையும் கடந்து ‘பெரிய பாசமலர் அண்ணன்னு நினைப்பு’ என்கிற அளவில் வாழ்க்கையின் எடுத்துக்காட்டாக அன்றாட பேச்சுவழக்குகளில் பயன்படத் தொடங்கிவிட்டது. அண்ணன் தங்கை அன்பு, பாசம் தியாகம் இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்த படம் இது. வடமாநிலங்களில் , வங்காளத்தில் வெளிவந்த படங்களில் இந்தளவுக்கு அண்ணன் தங்கை பற்றிய படம் வெளிவந்ததில்லை. ஒரு படம் ஒருவரின் மனநிலையை நிச்சயம் மாற்றும். ஆனால் ஒருவரின் குணத்தையே மாற்றுமா என்றால் முடியும் என பாசமலர் சொன்னது. இந்தப் படத்தைப் பார்த்த பல அண்ணன்கள் தங்கள் தங்கையினைத் தேடி சென்று செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்ட கதைகள் உண்டு. இந்தப் படக் காட்சியையோ, மலர்ந்தும் மலராத பாடலையோ கேட்ட பலரும் இப்போதும் கண்கலங்குவதைப் பார்க்க இயலும். ஒரு திரைப்படம் எப்போது காட்டப்பட்டாலும் ஒருவரின் வாழ்க்கையை, அதன் சில பக்கங்களை நினைவு கொள்ளச் செய்கிறது என்றால் அது சிறந்த படம் என சொல்ல முடியும். பாசமலர் அறுபது ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்னும் நிலைத்து நிற்பதற்கான காரணம் அது நமக்கு நம்மை காட்டிவிடுகிறது.
பீம்சிங் படங்களுக்கு வெவ்வேறு கதாசிரியர்கள் பணி செய்தாலும் இவருடைய படங்களின் ஒருமைத்தனம் என்பது மிகப் பிரியமுடன் ஒற்றுமையாக வாழ வேண்டும் என நினைத்திருக்கும் ஒரு குடும்பம் எப்படி சிதையத் தொடங்குகிறது என்பதாகவே பெரும்பாலும் அமைந்திருக்கிறது. ‘பாசமலர்’ அண்ணனும் தங்கையும் பிரிகிறார்கள். ‘பழனி’யில் நான்கு அண்ணன் தம்பிகள் பிரிவது, ‘பாவமன்னிப்பு’ படத்தில் ஒரு வீட்டில் பிறந்த குழந்தைகள் பிரிக்கப்படுவது, ‘பாகப்பிரிவினை’யில் அண்ணன் தம்பிகள் பிரிந்துவிடுவது, ‘பார் மகளே பார்’ படத்தில் அக்கா தங்கைகள் பிரிந்திருப்பது, ‘படிக்காத மேதை’யில் வளர்ப்பு மகன் அவனது குடும்பத்தை விட்டுப் பிரிந்து போவது, ‘பாலும் பழமும்’ படத்தில் கணவன் மனைவி பிரிவது ..என குடும்பத்தின் பிரிவு எப்படி ஒவ்வொருவரையும் பாதிக்கிறது என்பதாகவே அமைந்திருந்தது. இதற்குப் பின்னணியாக விவசாயப் பிரச்சனை, தொழலாளர்களின் உரிமை, மத ஒற்றுமை என கருத்துகளையும் சொல்லிவிடுகிறார்.
பீம்சிங்கின் கதை சொல்லும் பாணியில் ஒரு ஒற்றுமை இருப்பதைப்பார்க்கலாம். ஒரு குடும்பம் மிக ஒற்றுமையாக , மகிழ்ச்சியாக இருப்பதைக் காட்டிவிடுவார். அந்தக் குடும்பத்துக்கு யாரால் பிரச்சனை வரப்போகிறது என்பதையும் காட்டிவிட்டு கதையின் மையப்புள்ளிக்கு வருவார். அந்த மையப் புள்ளியான காட்சி சரியே செய்யமுடியாத சிக்கல்களை உருவாக்கிவிட்டு அதை சரி செய்ய உணர்ச்சி மேலிடும் காட்சியாக இருக்கும். அதனை எப்படி சரிசெய்கிறார், தீர்வு எப்படி எட்டபடுகிறது என்பதற்கு நாடகீயமான காட்சிகள் கொண்டு நம்மை ஈர்த்துவிடுவார். இது இன்று சொல்லப்படும் மூன்றடுக்கு அடுக்கு திரைக்கதைகளுக்கு முன்மாதிரி என்று சொல்லலாம். படத்தின் இறுதிக் காட்சிகள் முழுக்கவுமே உணர்ச்சியின் உச்சத்திலேயே காட்சிகளை அடுக்குவார். படம் முடிந்து வெளியே வரும் பார்வையாளர்கள் கண்ணீரை ஒற்றிக்கொள்ளும்படியான காட்சிகள். பாசமலர் படத்தின் இறுதிக் காட்சி இப்போதும் காவியமாகப் பார்க்கப்படுகிறது.
அப்போதைய காலகட்டத்தின் வழக்கப்படி பெண் கதாபாத்திரங்கள் கதையினை நகர்த்தக்கூடியவர்கலாக இருப்பார்கள். முன்னணி இயக்குனர்கள் எல்லாருமே பெண்களுக்கு காத்திரமான பாத்திரங்களைத் தந்திருக்கின்றனர். பீம்சிங்கினைப் பொறுத்தவரையில் இவருடைய படங்களில் இரண்டு விதமான பெண் கதாபாத்திரங்கள் கதையினை நகர்த்துவார்கள். அடக்கமும், அன்பும், பண்பும் கொண்ட பெண்கள் கதாநாயகிகளாக இருப்பார்கள். மற்றொருபுறம் பணத்தின் மீது பேராசை கொண்ட பெண்கள் கதைக்குள் பிரச்சனையை ஏற்படுத்திக் கொண்டிருப்பார்கள். ஏதோ ஒரு காரணத்தாலோ அல்லது அப்போதைய காலகட்டத்தில் சமூகம் கொண்ட மனநிலையிலா என்பது தெரியவில்லை, நாடகத்தில் நடிக்கும் பெண்களை பலபடிகள் கீழே இறக்கியே பீம்சிங் கதாபாத்திரங்களைப் படைத்திருக்கிறார். ‘கூத்தாடும்’ பெண்கள் குடும்பங்களுக்கு இலாயக்கிலாதவர்கள் என்கிற தொனியை பல படங்களில் கொண்டு வந்திருக்கிறார். ‘பார் மகளே பார்’ படத்தில் சிவாஜி, சௌகாருக்கு இரண்டு மகள்கள் என்பதாக கதை. இருவரும் பரதம் ஆடுபவர்கள். ‘இதெல்லாம் குடும்பப் பொண்ணுங்களுக்கு கௌரவம் இல்ல’ எனக் கடுமையாக எதிர்ப்பார் சிவாஜி.
காமெடி ட்ராக் என்று தனியாக வைக்கப்படும் விதத்தினையும் பீம்சிங் படங்களில் பார்க்க முடியும். ஆனால் அதனைக் கதையோடு எதேனும் ஒருகட்டத்தில் தொடர்புபடுத்திவிடுவார். அந்தக் காமெடி ட்ராக் என்பது அப்போதைய ‘ட்ரெண்ட்’ல் உள்ள ஒரு விஷயத்தை ஒட்டியே இருந்திருக்கும். ‘பாலும் பழமும்’ படத்தில் எம்.ஆர் ராதா போலி நாட்டுவைத்தியராக இருப்பர். அந்தக் காலகட்டத்தில் நாட்டு வைத்தியம், சித்த வைத்தியம் என்கிற பெயரில் அதிகமும் போலிகளை இறக்குமதி செய்த வைத்தியர்களை கிண்டல் செய்திருப்பார் எம்.ஆர் ராதா. நடிகரும், பத்திரிகையாளரும் இயக்குனருமான சோ ராமசாமி அறிமுகமான ‘பார் மகளே பார்’ படத்தில் சோவின் கதாபாத்திரம் அத்தனை ரசனைக்குரியது. அவர் இந்தப் படத்தில் கார் மெக்கானிக். எதைப் பேசுவதாக இருந்தாலும் காரோடு தொடர்புபடுத்தியே பேசுவார். ஒவ்வொரு வசனமுமே ரசிக்கக்கூடியவை.
“உனக்கு அவ்வளவு தைரியமா?” என்பார் மனோரமா.
“இதுல என்ன தைரியம்..புதுசா வந்துருக்கற அம்மாம்பெரிய செவர்லே 41 வண்டியை இம்மாத்துண்டு சந்துக்குள்ள விடச்சொல்லு..பாடியில ஒரு ஸ்க்ராட்ச் கூட படாம தம்மாத்துண்டு டேமேஜ் ஆகாம கொண்டு வந்து நிறுத்துவேன்.பாக்கறியா?” என்பார்.
“அக்கா..ஆரவல்லியா இது? சும்மா ஜீப் காருக்கு பாடி கட்டின மாதிரி ஜம்முன்னு இருக்கு”
இப்படி வாயைத் திறந்தாலே கார்களையும், தன மெக்கானிசத்தையும் பற்றிப் பேசும் சோ நடுநடுவே பணக்காரர்களின் கார் மோகத்தையும் இடித்துக் காட்டுவார்.
‘பழனி’ படத்தில் நாகேஷ் பல குழந்தைகளின் தகப்பன். குடும்பக் கட்டுப்பாடு எத்தனை அவசியம் என்று சிரிக்க சிரிக்க சொல்லும் பாத்திரம்.
பீம்சிங் திரைக்கதை வசனம் எழுதிய படம் ‘ஆலயம்’. தயாரிப்பும் இவரே. திருமலை மகாலிங்கம் இந்தப் படத்தினை இயக்கியிருந்தார்கள். இந்தப் படத்தின் திரைக்கதையே ஒரு அறிய முயற்சி தான். காலை ஆறு மணிக்குத் தொடங்கி மாலை நான்கு மணி வரை நடக்கும் சம்பவங்கள் தான் மொத்தப் படமே. அதைக் காட்டுவதற்காக ஒவ்வொரு காட்சியின் தொடக்கத்திலும் காட்சியோடு தொடர்புபடுத்தி கடிகாரம் காட்டப்படும். ஒரு அலுவலகத்தில் நடக்கிற அத்தனையையும் கதைக்குள் கொண்டு வந்திருப்பார்.
ஒரு கதாபத்திரம் எப்படிப்பட்டது என்பதை அதனை அறிமுகம் செய்யும் காட்சியிலேயே சொல்லிவிடுகிறவர் பீம்சிங். “நீ என்ன மேன் வாயைத் திறந்தாலே நல்ல விசயமா பேசற..உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” – இது பார் மகளே பார் படத்தில் சிவாஜி எம்.ஆர் ராதாவைப் பற்றி சொல்வது. “அண்ணன் பெரிய படிப்பு படிச்சிருக்கு..நான் ஒரு வேட்டைக்கர்ரன்..படிப்பு ஏறாதவன்” இது படித்தால் மட்டும் போதுமா படத்தில் சிவாஜி தன்னையும் தன அண்ணனையும் அப்ற்றி சொல்வது.
“நீங்க கோயில் அறங்காவலர் குழுவுல இருந்தா நேர்மையான மனுஷன் இருக்கறேன்னு மத்தவங்க கோயிலுக்கு நன்கொடை குடுப்பாங்க” இது மேஜர் சுந்தர்ராஜன் கதாபாத்திரத்தைப் பார்த்து ஆலயம் படத்தில் வேறொரு கதாபத்திரம் சொல்வது.
இப்படி ஒரு கதபாதிரத்தின் தன்மையினை அறிமுகக் காட்சியில் சொல்லிவிட்டு இப்படிப்பட்ட கதாபாத்திரத்துக்கு என்ன சோதனை வருகிறது என்பதை மீதிக் கதையாக சொல்லிச் செல்வார்.
பீம்சிங் படத்தின் மற்றொரு முக்கிய அம்சம் படத்தொகுப்பு. இயக்குனர்கள் கிருஷ்ணன் பஞ்சு இயக்கியப் படங்களுக்கு தொடக்கத்தில் எடிட்டராக பணி செய்தவர் பீம்சிங். அவர் இயக்கியப் படங்களுக்கு எடிட்டிங் மேற்பார்வையாளராக இருந்தார். ஒரு எடிட்டர் திரைப்படம் இயக்கும்போது உள்ள அத்தனை நேர்த்தியையும் தனது படத்தில் கொண்டிருந்தார். எதைச் சுருங்கச் சொல்ல வேண்டும், எந்தக் காட்சிக்கு நீளம் இருந்தாலும் மக்கள் ரசிப்பார்கள் என்பதையெல்லாம் அறிந்திருந்தார்.
பாகப்பிரிவினை படத்தின் முதல் காட்சி – ஒரு சிறுவன் பட்டம் விட்டுக் கொண்டிருப்பான். அந்தப் பட்டம் ஒரு விளக்குக் கம்பத்தில் மாட்டிக் கோலும். அதை எடுக்க அந்த சிறுவன் அதில் ஏறுவான். மின்சாரம் தாக்கி கீழே விழுந்துவிடுவான். பிறகு படத்தின் டைட்டில் கார்ட் போடப்படும். அதன் பின் கதை வேறு ஒரு இடத்தில் தொடங்கும். அப்படி அடிபட்டு விழுந்த சிறுவன் தான சிவாஜி என்பது நமக்கு புரிந்தாலும், அதை படம் விலகாது. அதற்கென்று ஒரு காட்சியை வைத்திருப்பார். அதில் ஒரு நிகழ்வு போல அந்தக் காட்சியைச் சொல்லிச் சென்றிருப்பார். இந்த யுத்தியை நவீன காலத்து படங்களும் எடுத்தாள்வதைப் பார்க்கலாம். டைட்டிலுக்கு முன்பு ஒரு பின்னணிக் கதை சொல்லப்பட்டு அதனைத் தக்க சமயத்தில் கதையோடு இணைக்கும் யுத்தி அது.
அப்போதைய படங்கள் பெரும்பாலும் ஸ்டுடியோக்களில் எடுக்கப்பட்டன. பீம்சிங்கின் படங்கள் நேரடியாக கதை நடக்கும் களத்தில் எடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன. ‘பச்சை விளக்கு’ படம் ரயில்வே நிலையங்களிலும் ரயிலிலும் எடுக்கப்பட்டது. பழனி படத்தில் ஒரு தரிசு நிலம் முப்போகம் விளையக்கூடிய நிலமாக மாறுவது வரைக் காட்டப்பட்டிருந்தது. இதனைக் காட்சிப்படுத்தியதில் ஒரு சிறந்த படத்தொகுப்பாளராக பீம்சிங் தன்னை வெளிக்காட்டியிருப்பார். ‘ராஜா ராணி’ படத்தில் ஒரு மின்னணுப் பொருட்கள் விற்கும் கடையையும் காட்டியிருப்பார். இசைக்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி என்றால் , ஒளிப்பதிவுக்கு ஜி.விட்டல் ராவ். பாடல் வரிகளுக்கு கண்ணதாசன். பீம்சிங் அவர்களின் படங்களின் டைட்டில் கார்டுகளில் பெரிய மாற்றமிருக்காது. சிவாஜி இவரது படங்களில் தொடர்ந்து நடித்து வந்ததைப் போல எம்ஆர் ராதாவும் படங்களில் இடம்பெற்றிருந்தார்.
சிவாஜியும் பீம்சிங்கும் ‘ராஜா ராணி’ படத்தில் தொடங்கி தொடர்ந்து இருபது வருட காலங்கள் பயணம் செய்தார்கள். என்ன மாதிரியான கதாபாத்திரம் என்றாலும் சிவாஜி இருக்கிறார் என்று துணிந்து பீம்சிங் எடுத்தப் படங்கள் எல்லாமே இன்றளவும் நாம் யோசித்துப் பார்த்திராத களங்கள் தான்.
பீம்சிங் படங்களில் வருகிற சிவாஜி அப்பாவியானவர். பார் மகளே பார், பாவ மன்னிப்பு என சிவாஜிக்கு சில அரிய விதிவிலக்குகளும் உண்டு. மற்றபடி பாகப்பிரிவினை, பழனி, படித்தால் மட்டும் போதுமா, படிக்காத மேதை, பாசமலரில் வருகிற ஏழை சிவாஜி என இந்தக் கதாபத்திரங்கள் எல்லாருமே அத்தனை வெள்ளந்திகள். ஆனால் ஒவ்வொரு வெள்ளந்தித்னத்துக்கும் ஒரு தனி இயல்பு உண்டு. பாகப்பிரிவினை சிவாஜி மனதில் எதையும் வைத்துக் கொள்ளாமல் சட்டென்று பேசிவிடுகிற குணம் கொண்டவர். படித்தால் மட்டும் போதுமா சிவாஜி முதிர்ச்சியான அப்பாவித்தனம் கொண்டவர். படிக்காத மேதை சிவாஜி அன்புக்காக எதையும் செய்யக்கூடிய அப்பாவித்தனம் வாய்த்தவர். பழனி சிவாஜி கணேசன் அந்தக் காலகட்டத்து உழைக்கும் மக்கள் கொண்ட அப்பாவித்தனத்தை அசலாக எடுத்துக்காட்டியவர். பாசமலரும், பச்சை விளக்கும் ஒரே கதை தான். பச்சை விளக்கு படத்தில் தனது தங்கையின் டாக்டர் கனவு நிறைவேறுவதற்காக உழைக்கும் ஒரு அண்ணன் தன்னை இழந்து தன் தங்கையின் கனவை நிறைவேற்றும் கதை. இரண்டு சிவாஜிக்களும் வேறு வேறு.
பீம்சிங்கின் படங்களுக்கு இருந்த வரவேற்புக்கு காரணம் சிவாஜி, விஸ்வநாதன் ராமமூர்த்தி, கண்ணதாசன் , கதைகள் என பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமாக படங்களில் அவர் தருணங்களை உருவாக்கும் விதம் குறிப்பிட்டே ஆக வேண்டியது. கதைக்குள் ஒரு காட்சி என்பது போல இல்லாமல் அந்தக் காட்சியை கதையின் மையமாக மாற்றிவிடுவார். பார் மகளே பார் படத்தில் பிறந்த இரண்டு பெண் குழந்தைகளில் ஒருவர் தான் தனக்குப் பிறந்தது என்று சிவாஜி அறிந்து கொள்ளும் தருணம், பாசமலர் படத்தில் தனது தங்கையே தன்னை எதிர்த்துப் பேசுகிறாள் என்பது, பச்சை விளக்கு படத்தில் தங்கையிடம் தனியாகப் பேச வேண்டும் என்று கேட்டு கணவனுடன் தாம்பத்திய வாழ்க்கையிலும் ஈடுபட வேண்டும் என்பதை சிவாஜி விஜயகுமாரியிடம் நாசூக்காக சொல்லும் காட்சி, படித்தால் மட்டும் போதுமா படத்தில் ‘நான் ரசிகனும் அல்ல..’ என்று பாடி முடித்துவிட்டு மனைவியிடம் கெஞ்சுவது, படிக்காத மேதை படத்தில் வளர்ப்புத் தந்தையான எஸ்.வி ரெங்காராவே சிவாஜியை வீட்டை விட்டுப் போகச் சொல்லி அனுப்பி வைப்பது, பாகப்பிரிவினையில் பாகம் பிரித்த பின் சிவாஜி எல்லாரிடமும் உடைந்து அழுதபடி பேசுவது , பாலும் பழமும் படத்தில் தன்னால் முதல் மனைவியை மறக்க முடியவில்லை என இரண்டாம் மனைவியான சௌகார் ஜானகியிடம் புரிய வைப்பது, பழனி’ யில் முதல் தம்பி வீட்டை விட்டுப் போன பின் மற்ற தம்பிகளிடம் ‘இனிமே நீங்களும் எங்கிட்ட பேசாதீங்கடா..நீங்க பிரிஞ்சு போனா நான் செத்துப் போயிடுவேண்டா” என்று அழுகிற இடம் என இப்படி சொல்லிக் கொண்டே போகும் அற்புதத் தருணங்கள் பீம்சிங் படத்தில் உண்டு.
இந்தத் தருணங்கள் கதாபாத்திரங்களின் மனநிலையையும், கதையின் மையத்தையும் தொட்டு பின் வலுவாக நிலைபெற்றுவிடும்.
பாவ மன்னிப்பு மட்டுமல்லாது பீம்சிங்கின் எல்லாப் படங்களிலும் மாற்று மதத்தினரைக் காட்சியில் கொண்டு வந்திருப்பார். இதனைத் தொடர்ந்து தனது படங்களில் குறிப்பாக செய்திருக்கிறார். பழனியில் வரும் இப்ராஹீம், ஆலயம் படத்தின் தாமஸ், பச்சை விளக்கு ஜேம்ஸ் என..இவர்கள் கதாநாயகனுக்கு அனுக்கமான நண்பர்களாக இருப்பார்கள். குடும்பத்தில் ஒருவராக பழகுவார்கள்.
வட்டாரமொழியிலும் பீம்சிங் கவனமாக இருந்திருக்கிறார். கொங்கு, மதுரை வட்டாரப் பகுதிகளின் மொழிகளை அதிகம் தனது படங்களில் பேசவிட்ட இயக்குனர் என்று கூட சொல்லலாம்.
பீம்சிங் என்றதும் ‘ப’ வரிசை படங்கள் இயக்கினவர் தானே என்று மட்டும் சொல்லிச் செல்ல முடியாது. இன்று பேசுகிற மூன்றடுக்கு கதைகள், ஒரு படத்துக்குத் தேவைப்படுகிற நாடகத்தனம், உணர்ச்சிக் கொந்தளிப்புகள், கதாபாத்திரத்தன்மை என எல்லாவற்றையும் எந்தத் திரைப்படப்பள்ளிக்கும் செல்லாமல் தனது அனுபவத்தின் மூலமாக மட்டுமே திரையில் காட்டிய மேதை என்று சொல்லவேண்டும்.
இன்று வரை தொலைக்காட்சித் தொடர்களிலும், குடும்பப் படங்களாக கொண்டாடப்படும் திரைப்பங்களிலும் பீம்சிங் படங்களின் சாயல்கள் உண்டு, கதைகள் உண்டு. அவர் படத்தின் காட்சிகள் உண்டு. குடும்பத்தில் ஏற்படக்கூடிய உறவுச்சிக்கல்கள் என்று ஒரு கதைக்குள் வகுத்துக் கொண்டு புதிய கதைகளை நாம் சொல்லிவிட முடியாதபடி எல்லாவற்றையும் பீம்சிங் சொல்லிச் சென்றிருகிறார்.
ஒரு இயக்குனரின் மகத்தான சாதனை இது. முறியடிக்கப்பட முடியாத சாதனையும் கூட.
Excellent documentation of aesthetics of Legendary Director of Indian Cinema.
thank you so much
முழுமையான, நிறைவான விமர்சனம்! படிக்கும் போது அந்தந்த காட்சிகள் மனதில் தோன்றி மறைந்தன.