Sunday, July 26, 2026
Home கட்டுரைகள் எஸ். ஜானகி – அஞ்சலி

எஸ். ஜானகி – அஞ்சலி

0
நன்றி THE HINDU ARCHIVES

எஸ். ஜானகி – அஞ்சலி

48,000 பாடல்கள். மனித குலத்துக்கு என்னென்ன உணர்வுகள் எல்லாம் உண்டோ, அத்தனையும் ஒரு மனுஷி தன் குரலால் வெளிப்படுத்தியிருக்கிறார். அறுபது ஆண்டுகாலம் இந்திய சினிமாவை ஆள்வதென்பது மாபெரும் சாதனை. எஸ். ஜானகி மறைந்த செய்தி கேட்டதும் ஒவ்வொருவருக்குள்ளும் ராகங்களும், பாவங்களும் வந்து வந்து அலைமோதியிருக்கும். அவருடைய பாடல்களில் ஏதேனும் ஒன்று நமக்கு வாழ்நாள் பாடலாகியிருக்கும். அந்தப் பாடலில் நாம் தேம்பியிருப்போம், மகிழ்வு கொண்டிருப்போம்ள், துயரம் ஆற்றியிருப்போம், காதலித்திருப்போம், தாபம் கொண்டிருப்போம். 

ஆந்திராவில் ஜானகியின் வீட்டு வானொலியோடு கூடவே பாடிப் பாடி குரல் வளத்தைச் சேர்த்துக் கொண்டவரை அவரது அம்மா  கர்னாடக சங்கீதம் கற்றுக்கொள்ள நாதஸ்வர வித்வான் பைடிசுவாமியிடம் அனுப்புகிறார். ‘அதெல்லாம் ஒண்ணும் கத்துக்க வேண்டாம். போக மாட்டேன்’ என்கிற சிணுங்கலுடன் இசை வகுப்புக்கு போனவர். அக்காக்களோடு சும்மா போய் உட்கார்ந்து கொண்டு அவர்களுக்குச் சொல்லித் தருவதை உள்வாங்கி சங்கதிகளை அனாயசமாகப் பாடிக்காட்டிய ஜானகியை அவர் போக்கிலேயே பாடவைத்தவர் அவரது குருநாதர்.  ‘அ..ஆவன்னா கூட ஸ்கூல்ல கத்துக்கல..எனக்குப் படிப்பு வராது. ஆனா எப்படியோ எழுத ஆரம்பிச்சேன். பாட்டு கத்துக்கல..ஆனா எதைக் கேட்டாலும் அப்படியே திருப்பிப் பாடுவேன்’ என்று பலமுறை சொல்லியிருக்கிறார். இது கடவுள் தனக்கு அருளியதாகச் சொன்னாலும், நமக்காக அருளியதும் தான். சிங்கார வேலனே தேவா..பாடலின் நாகஸ்வரப் பகுதி மேதை காருகுறிச்சி அருணாசாலம் அவர்களால் இசைக்கப்பட்டு உச்சஸ்தாயியில் உலாவும் சங்கதிகளுக்கு பொருத்தமான குரலை இசையமைப்பாளர் சுப்பையா நாயுடு  தேடும்போது எஸ்.ஜானகி அவருக்கு அறிமுகமானார். 19 வயது இளம்பெண்ணின் மகத்தான சாதனை அந்தப் பாடல்.  

ஜானகியின் திரைப்பட வரவோடு வானொலியும் வீடுதோறும் வரத் தொடங்கியிருந்தது. ஒவ்வொரு குடும்பத்தின் அங்கமானார் ஜானகி. திரைப்படங்களின் கதை சொல்லும் முறை மாறத் தொடங்கியபோது பாடல்களின் தன்மையும் வேறுபடத் தொடங்கின. வெவ்வேறு சூழலில் பெண்கள் பாடும் பாடல்கள் தொடர்ந்து படங்களில் இடம்பெறத் தொடங்க, ஜானகி பெண்களின் அந்தரங்கத் தோழியானார். மிதமிஞ்சிய உற்சாகத்தை பெண்கள் மனதுக்குள் கொண்டாடும்போதெல்லாம் ‘காற்றுக்கென்ன வேலி’ பாடலின் தொடக்க ஆலாபானையை இசைத்தார்கள். தனக்குப் பிரியமானவரிடம் தூது போகும் பாடலாக ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’ பாடலைத் தேர்ந்தெடுத்தார்கள். தாலாட்டும், பிரிவும், காதலும், துயரமும் , துக்கமும் என இவர் பாடிய பாடலைத் தேர்ந்தெடுத்து எந்தப் பெண்ணின் வாழ்க்கைக் கதையையும் சொல்லிவிடமுடியும். அத்தனை சூழல்களையும் இவரது பாடல்கள் சாட்சிகளாகியிருக்கிறது.

“காட்டில் ஒருவன் எனைக் கண்டான்

கையில் உள்ளதைக் கொடு என்றான்

கையில் எதுவும் இல்லை என்றே

கண்ணில் உள்ளதைக் கொடுத்துவிட்டேன்”

ஏதோ ஒரு கதையின் பகுதி போன்று அமைந்த ‘ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி’ பாடலின் வரிகள். ஆனால், இதை ஜானகியின் குரலில் கேட்க வேண்டும். அதை இனிமை என்பதா..இசையின் ஒட்டுமொத்த அசைவென்பதா, சலங்கையின் நாதமா.. என்ன வேண்டுமானாலும் பொருத்திப் பார்க்கலாம். தமிழின் ஒற்றெழுத்தை கூட நம்மால் உணரமுடிகிற உச்சரிப்புக்கு இந்தப் பாடல் அற்புத உதாரணம்.

டி.எம் சௌந்தராஜன் ஜானகி இருவரும் இணைந்து பாடல்கள் எல்லாமே பிரபலமானவை என்றாலும், பி.பி ஸ்ரீநிவாஸ் ஜானகி குரல்கள் இணைகிறபோது கிடைப்பதெல்லாம் அலாதி அனுபவம். ‘போலிஸ்காரன் மகள்’ படத்தில் ‘பொன் என்பேன் ..சிறு பூ என்பேன்’ என்று டிஎம்எஸ் மென்மையாக எடுத்துக் கொடுக்க, ஒரு இடைவெளி விட்டு ‘என்னென்பேன்  கலை ஏடென்பேன்’ என்று ஜானகி தொடங்கி ‘நம்மை நாம் அறிவோம்..வேறு யார் அறிவார்’ என்று முற்றுப்புள்ளியை அசைத்து நிறுத்துகிற இடம் வரை கேட்கக் கொடுத்து வைத்தவர்கள் நாம்.

கருப்பு வெள்ளை காலகட்டத்தில் சங்கீதத்தில் புலமை கொண்டவர்களே பாடகர்களானார்கள். ஜானகி சங்கீதத்தை முறையாகக் கற்றுக் கொண்டவர் அல்ல, அவரது பெரும் பலமே எதையுமே கேட்டதும் உள்வாங்கி அதை அப்படியே பாடாமல் உணர்வுகளோடும், அவருக்கேயுண்டான பாணியோடும் பாடியது தான். ஆர். சுதர்சனம், சுப்பையா நாயுடு, ஜி.ராமநாதன், சி.என் பாண்டுரங்கம், டி.ஆர் பாப்பா, ஜி.கே வெங்கடேஷ், ஏ.எம் ராஜா,  கே.வி மகாதேவன், விஸ்வநாதன் ராமமூர்த்தி என ஒவ்வொரு இசையமைப்பாளருக்கும் ஜானகி பாடிய பாடல்கள் ஒன்றை ஒன்று விஞ்சி நின்றன. கன்னடத்தில் ‘சந்தியா ராகா’ படத்தில் ‘நம்பிடே நின்ன நாததேவதையே’ பாடலைக் கேட்டவர்கள் ஜானகியை நாத தேவதை என்று கொண்டாடத் தொடங்கினார்கள். அந்தப் பாடல் மிக கடினமான சங்கதிகள் கொண்டது. அதோடு அதே படத்தில் இந்தப் பாடலை இசையாளுமைகள் பீம்சென் ஜோஷியும், பாலமுரளிகிருஷ்ணாவும் பாடியிருக்கிறார்கள். இந்த ஆளுமைகளுடன் பாடி தன்னை நிலைநிறுத்திக் கொண்ட பின்னும் தனது இசைப்பயணத்தை அவர் பணிவுடனே அணுகினார். ஒவ்வொரு முறையும் பாடல்களைப் பாடும்போது இசையமைப்பாளரின் நம்பிக்கையை பொய்யாக்கக்கூடாது..சரியாகப் பாடிவிடவேண்டும் என்று நினைத்திருக்கிறார். 2016 ஆம் ஆண்டு தன்னுடைய ஓய்வினை அறிவுக்கும் வரை அந்த அர்ப்பணிப்பு அவரிடம் இருந்திருக்கிறது.

1970 களின் பிற்பகுதியில் தமிழ் சினிமாவின் இசைமுகம் வேறொரு பரிமாணத்தைத் தொடங்கியது. ‘அன்னக்கிளி’ படத்தில் எஸ்.ஜானகி பாட வேண்டும் என்கிற இளையராஜாவின் விருப்பம் தொடர்ந்ததில் எத்தனை அற்புதமான பாடல்கள் நமக்கு கிடைத்திருக்கின்றன. அந்தக் காலகட்டம் தமிழ் சினிமாவுக்கு பொற்காலம். புதிய கதைகளைச் சொல்ல தமிழ்நாட்டின் பல்வேறு பின்னணியில் இருந்து இயக்குநர்கள் சினிமாவுக்கு வந்தார்கள்.அவர்கள் அத்தனை பேரின் கதைகளிலும் பெண் கதாபாத்திரங்கள் வலுப்பெற்றிருந்தன. அந்தப் பெண்கள் நாணவும், காதலை ஏக்கமாக மாற்றிக் கொள்ளும் பெண்களாக இல்லை. அவர்களுக்கென்று ஒரு குணம் , மனம் இருந்தது. அதை வெளிப்படுத்தும் பெண்களின் உணர்வுகளை பாடல்களாக இளையராஜா நமக்குத் தந்து கொண்டிருந்தார். அந்தப் பெண்களின் குரல்களாக ஜானகி இருந்தார். அவர் பாடாத கதாபாத்திரங்கள் இல்லை, கதாநாயகிகளும் இல்லை.

ஒரு குரல் என்னவெல்லாம் செய்யும் என்பதற்கு ஜானகியுடைய அறுபது ஆண்டுகால இசை வாழ்க்கை சாட்சி.  ‘எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது..உறவும் இல்லாமலே இரு மனம் எதோ பேசுது’ என்பதை முணுமுணுக்க வைத்திருக்கிறது. யாருமற்றிருக்கிறோம் எனும்போது ‘தாலாட்டும் பூங்காற்று நானல்லவா’ என ஆறுதல் தந்திருக்கிறது. சின்னத்தாயவள் பாடலின் உருக்கம் எவருக்கும் கண்ணீர் வரவைப்பது. காதலின் ஏக்கத்துக்கும், விரகதாபத்துக்கும் உண்டான நூலிழை வேறபாட்டினை எந்த விரசமுமின்றி ஜானகியால் பாடிவிடமுடியும். ‘பொன்வானம் பன்னீர் தூவுது’, ‘பொன்மேனி உருகுதுவும்’ ஒரே குரலின் சன்னமான வர்ணங்கள்.  இஞ்சி இடுப்பழகா என்று அப்பாவித்தனத்தைக் கொண்டு வந்துவிட முடியும். மலரே மௌனமா என்று எவரையும் காதலிக்க வைக்க முடியும். ‘கொட்ட பாக்கும் கொழுந்து வெத்தலையும்’ என  ஆடவும் வைப்பார். அழகு மலராட அபிநயங்கள் கூட’ என நாட்டியம் தெரியாதவரையும் தாளம் போடவைப்பார்.

ஒரு நாளைக்கு ஆறு பாடல்களுக்கும் மேலாக பாடி பதிவு செய்திருக்கிறார். சோகமும், மகிழ்வும், சிரிப்பும், பக்தியும், தாபமுமாக பாடல்கள் இருந்திருக்கலாம். ஒவ்வொரு உணர்வுக்குள்ளும் போய் வெளிவர வேண்டும். அதற்கான நியாயங்கள் செய்ய வேண்டும். கலைக்குத் தன்னை ஒப்புக் கொடுத்தவர்களால் மட்டுமே செய்யக்கூடிய ஒன்று இது. 48000 பாடல்கள் என்பது இனி ஒருவர் நினைத்துப் பார்க்க முடியாத சாதனை. ஜானகியம்மாவின் பிடித்தப் பாடல்கள் என்று கேட்டாலே நூறு பாடல்களை சடசடவென்று சொல்லி விடக்கூடிய அளவுக்கு ஒவ்வொருவருக்குள்ளும் ராஜ்ஜியம் நடத்தியிருக்கிறார். எந்த மொழியையும் அதன் உச்சரிப்பினை சரியாகப் பாட வேண்டும் என்று மெனக்கிட்ட, மொழிக்கு முன்பு தங்களை சரணடைய வைத்தத் தலைமுறையின் முன்னோடி பாடகி அவர்.

பாரத ரத்னா கொடுங்கள் அது தவிர எனக்கு வேறு எந்த விருதும் வேண்டாம் என்று தலை நிமிர்த்தி சொல்லக்கூடிய மேலான தகுதி அவரிடத்தில் இருந்தது. பள்ளிக்கூடப் படிப்பு இல்லாமல், சங்கீதத்தை முறையாகக் கற்றுக் கொள்ளாமல் பேராளுமைகளோடு களத்தில் நின்று அவர்கள் பாராட்டைப் பெற்று, கோடானு கோடி ரசிகர்களின் கண்ணீரையும், மகிழ்ச்சியையும் அன்பையும் தன் குரலினால் கிளர்ந்தெடுக்க செய்த ஒரு இசையரசியின் முன் விருதுகளுக்கு வேலையே இல்லை. 

ஒவ்வொரு பாடலுக்கும் அவர் எந்தளவுக்கு தன்னை ஒப்புக் கொடுத்திருப்பார் என்பதை அவரை விட யார் அறிவார்! எந்தப் பாடலையும் அவர் அசையாமல் நின்று பாடுவார். ஆனால் அவரது மனமும் உணர்வுகளும் எத்தனை எத்தனை அனுபவங்களின் கண்கொண்டு பார்த்திருக்கும்! இசையமைப்பாளர்கள் அனைவருமே தங்களின் கற்பனாஸ்வரங்களுக்கு குரல் கொடுக்கத் தேடிய கலைஞர் இவர்.

காற்றில் கரையும் குரல் அல்ல இது. காதலின் முன்பும், அன்பின் ஏக்கத்திற்கும், தெய்வத்தின் முன்பிலும், ஆழமான ஏக்கங்களிலும், குதூகலத்திலும் தன்னியல்பாக நமக்குள் வந்து நிற்கும் குரல் அது.  

(ஆனந்த விகடன் இதழுக்காக எழுதிய கட்டுரை)

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted