என்னுடைய புத்தகங்களில் ‘மேதைகளின் குரல்கள்’ என்னைப் பலருக்கும் அறிமுகம் செய்தது. உதவி இயக்குநர்கள், சினிமா ஆர்வலர்கள் , இயக்குநர்கள் என பலரும் இந்தப் புத்தகம் குறித்து என்னுடன் உரையாடியிருக்கிறார்கள். “எங்க டேபிள்ல இந்தப் புத்தகம் எப்பவுமே இருக்கும்’ என்று சொல்லியிருக்கிறார்கள். சிலர் என்னைப் பார்த்ததும் பையில் இருந்த மேதைகளின் புத்த்கத்தினை எடுத்துக் காட்டி ‘எப்பவுமே கூட இருக்கும்’ என்றிருக்கிறார்கள். எனக்கு இதில் ஆச்சரியம் என்பதை விட, எனக்கு இந்தப் புத்தகத்தை மொழிபெயர்க்கும்போது நிகழ்ந்தது அவர்களுக்கும் நடந்திருக்கிறது என்று தான் நினைத்துக் கொண்டேன்.
சினிமாத் துறை என்பது நம்பிக்கைகளைக் கோரும் ஒரு துறை. மற்றத் துறையில் இருக்கும் சவால்களைக் காட்டிலும் சினிமாத்துறையில் அதிகம். அதில் முக்கியமானது ‘நிலைத்தன்மை’ இல்லாதது. அடுத்தததாக நாம் செய்கிற எதுவொன்றும் சரியாக அமையுமா என்கிற கேள்வி எழுந்து கொண்டே இருப்பது. இதற்கெல்லாம் நம்பிக்கை ஏற்படுத்திக் கொள்வது மிக அவசியமானது. இந்தப் புத்தகம் அதைச் செய்து கொண்டிருக்கிறது.
இந்தப் புத்தகத்தில் மொழிபெயர்ப்பு பணி மட்டுமே என்னுடையது. ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்வதற்கு முன்பு இந்தப் புத்தகத்தினைத் தான் கையில் எடுத்துப் போயிருந்தேன். என்று ஒருவர் சொன்னார். இந்தப் புத்தகத்தின் மூலம் நான் பெரும் நெகிழ்ச்சியான கருத்துகள், பாராட்டுகள் அனைத்துமே இதில் இடம்பெற்ற இருபது மாஸ்டர் இயக்குநர்களைச் சார்ந்தது. ஏதேனும் ஒரு பக்கத்தை சும்மாவேனும் புரட்டி அதில் உள்ளவற்றைப் படிக்கும்போது அவர்களே நம்முடன் இருப்பது போலத் தோன்றும். இது மொழிபெயர்க்கையில் எனக்குத் தோன்றியிருக்கிறது.
‘ஒண்ணுமில்ல..நாங்க இருக்கோம்ல’ என்று ஒவ்வொரு இயக்குநரும் நம்முடன் உரையாடுவார்கள். இது தருகிற உற்சாகமும் நம்பிக்கையும் அளப்பரியது.
ஏற்கனவே இந்தப் புத்தகம் சில பதிப்புகளைக் கண்டாலும் இப்போது மயூ பதிப்பகம் மூலம் வெளிவந்துள்ளது. 2024வரை சமகால இயக்குநர்கள் இயக்கியத் திரைபபடங்கள் வரையிலான ‘அப்டேட்’ இந்தப் புத்தகத்தில் உண்டு.
சினிமாவை நோக்கி ஒவ்வொரு நாளும் ஈர்க்கப்பட்டு வரும் அத்தனை பேருக்கும் இந்தப் புத்தகம் பயனுள்ளதாக இருக்கும். நாம் எழுதிய புத்த்கத்தினைப் பற்றி இப்படி சொல்வதில் நமக்கு உரிமையுள்ளதா என்பதே சந்தேகமே. ஆனால், இது பல வருடங்களாக இந்தத் துறையில் வாழ்ந்து, அதையே சுவாசமாகக் கொண்டிருக்கும் இயக்குநர்களின் சொற்கள் கொண்ட புத்தகம். அதனால் சொல்வதற்கு எனக்கு உரிமையுண்டு என்றே நினைக்கிறேன்.
மிகப்பணிவுடன் சொல்கிறேன், நான் மொழிபெயர்த்ததில் என்னை அடுத்தக் கட்டத்திற்கு அழைத்துப் போன புத்தகம் என்று ‘மேதைகளின் குரல்களை’ச் சொல்வேன்.
தொடர்புக்கு மயூ பதிப்பகம் 9042887209