நாயகன்

0
403

இதுவரை திரு கமல்ஹாசன் குறித்து அவருடைய ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் பேஸ்புக்கில் பதிவிட்டு வந்திருக்கிறேன். என்னை அதிகமும் கவர்ந்த ஆளுமை அவர்.

அந்தப் பதிவுகளின் தொகுப்பு இவை.

அறுபது வருட காலங்கள் சினிமாவில் ஒருவர் தன்னை நிலைநிறுத்திக் கொள்வது என்பது இனி நிகழ்வது அபூர்வம். மூன்று தலைமுறையினரும் அறிந்த ஒரு ஆளுமை. கமல்ஹாசன் ‘பிக் பாஸ்’ நெறியாள்கை செய்கிறார் என்றதும் ‘ஏன் இப்போது?” என்ற கேள்வி எனக்குள்ளும் எழுந்தது. அவருக்கு தனிப்பட்ட முறையில் காரணங்கள் இருக்கலாம். இப்போதுள்ள குழந்தைகளுக்கு கமல் நடித்த படக் காட்சிகளைப் பார்த்தால், ‘பிக் பாஸ்’ அங்கிள் தானே என்பார்கள். இதனை முக்கியமானதாக பார்க்கிறேன்.

தன்னுடைய பலம் , பலவீனம் அறிந்த ஒரு கலைஞர் கமல்ஹாசன். ஹீரோவாக மட்டுமே அழகனாய் அவர் நடித்திருந்தால் ஒரு காலகட்டத்தின் மேல் தாக்குப் பிடித்திருக்க முடியாது. தனது தோற்றத்தினை மாற்றிக் கொண்டே இருந்தார். அது வெறும் பரிசோதனை முயற்சி மட்டுமல்ல, ஒரு நடிகனாக இறுதி வரை நிலைநிறுத்திக் கொள்ள முடியும் என்று தனக்குத் தானே சொல்லிக் கொள்வதும் தான். ரொமாண்டிக் ஹீரோவாக திரையில் வந்து கொண்டிருக்கும்போதே ‘சப்பாணி’யாக நடிப்பது எந்த ஹீரோவும் எடுக்கத் தயங்குகிற முடிவு.


ஹீரோவில் இருந்து அவர் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளுக்கு மாறிய விதம் அவருக்கு மட்டுமல்ல தமழ் சினிமாவுக்கும் ஆரோக்கியமானது.

அவரை ஒரு திறமையான நடிகராக மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கையில் எனக்கான கதையை நானே எழுதுகிறேன் என திரைக்கதை எழுதி, சிலவற்றை இயக்கவும் செய்தார்.

எல்லாமே தன்னைத் தக்க வைத்துக் கொள்கிற ஒரு பேரார்வம் தான். திறமை கொண்ட பலரும் ஒருகட்டத்தில் தேங்கி நிற்பதற்கு காரணம், அவர்கள் தங்களுக்கான எல்லையை முடிவு செய்து கொண்டது.

இதன் பின்னணியில் தான் ‘பிக் பாஸ்’ கமலைப் பார்க்கிறேன். இதற்கு அடுத்து என்ன என்பதை அவர் தீர்மானித்திருப்பார். இதற்காக அவர் விலை கொடுக்கிறார், விலை கேட்கிறார். எப்படிப் பார்த்தாலும் அறுபது வருட காலங்களாக இந்தியாவின் அசைக்க முடியாத ‘entertainer’ஆக இருக்கிறார்.

எப்போதுமே மறுக்க முடியாத அளவுக்கு கமல்ஹாசன் அவர்கள் ஒரு இன்ஸ்பிரேஷன் தான். 

.

ஒரு துறையில் எழுபது ஆண்டு காலங்கள் விடாமல் பணி செய்தால் ஒருகட்டத்தில் அலுப்புத் தோன்றிவிடும். அலுப்பு வராமல் ஒரு பணியைச் செய்வதற்கு, செய்யும் பணி குறித்த ரசனை தேவை. சினிமாவை வெளியில் இருந்து பார்த்து ரசிப்பதற்கும் அதில் பணி செய்வதற்கும் வேறுபாடுகள் உண்டு. “கரும்பு திங்கறதுக்கு கூலியான்னு கேப்பாங்க. என்னோட விஷயத்துல எனக்கு பிடிச்ச வேலையை செய்யச் சொல்லி அதுக்கு காசும் குடுக்கறாங்க” என்பது திரு. கமல்ஹாசன் அடிக்கடி சொல்லும் ஒன்று.

ரசனையின் அடிப்படை ஒன்றை உள்வாங்குவது. தனக்கு மூத்தவர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் என இவர்களை இவர் உள்வாங்கும் விதம் கவனிக்கப்பட வேண்டியது. ஒவ்வொருவரைப் பற்றியும் அவரால் அவர்களின் தனித்தன்மையைச் சொல்லி பேசி விட முடியும். அவர்களின் பலத்தினை புரிந்து கொள்ள முடியும். நாகேஷ், மனோரமா, எஸ்.என் லக்ஷ்மி, சிவாஜி கணேசன், சாவித்திரி என மாஸ்டர்களைத் தொடக்கத்தில் இருந்தே ,பார்த்து வந்திருக்கிறார். அவர்களுக்கு ஈடு கொடுத்தும் அடக்கி வாசித்தும் பழகியிருக்கிறார்.

‘குமாஸ்தாவின் மகள்’ என ஒரு படம். திரு. ஏ.பி நாகராஜன் அவர்கள் இயக்கியது. படத்தில் இரண்டு காட்சிகளைக் குறிப்பிட வேண்டும். நாகேஷும், கமல்ஹாசனும் சந்திக்கிற முதல் காட்சி. ‘டைமிங்’ என்றால் என்ன என்பதை இந்தக் காட்சி உணர்த்திவிடும். நாகேஷுடம் இணைந்து அந்தக் காட்சியில் நடிக்கும் நடிகர் ஈடு கொடுப்பது கடினம். படத்தில் கடைசி பத்து நிமிடங்கள் மட்டுமே வந்து அசத்தி விட்டுப் போகும் மனோரமா. இங்கும் மனோரமாவுக்கும் கமலுக்கும் காட்சிகள் உண்டு. கமல் இளைஞனான பின் நடித்த ஆரம்ப காலப் படமென்றாலும் ஒரு இயல்புத்தன்மையை கொண்டு வர மெனக்கிட்டிருப்பார். அந்தப் பயிற்சியினாலேயே பின்னாட்களில் அவருக்கு இயல்புத்தன்மை கூடி வந்திருக்க வேண்டும்.


நான் நினைத்துக் கொண்டேன், இந்தக் காட்சிகளில் எல்லாம் அவர் நடிக்கும்போது ரிகர்சல் பார்த்திருந்தால், தன்னை மறந்து அவர் நாகேஷையும், மனோரமாவையும் நடிக்கவிட்டுப் பார்த்துக் கொண்டிருந்திருப்பார் என. ஏன் அப்படி சொல்கிறேன் என்பதற்கு அந்தக் காட்சிகளைப் பாருங்கள். சக கலைஞர்களை அவர் கொண்டாடுவது என்பது, அவர்களுக்குத் தான் நடிக்கும் அல்லது திரைக்கதை எழுதும் படங்களில் வலுவான காட்சிகளைக் கொடுத்துவிட்டு அதே காட்சியில் ஒதுங்கி நின்று விடுவார். விருமாண்டியில் எஸ்.என் லக்ஷ்மி வந்து அசத்தும் ஜல்லிக்கட்டு காட்சி, நம்மவரில் மகள் இறந்தபிறகு நாகேஷ் பேசுவது, உன்னால் முடியும் தம்பியில் மனோரமாவுக்கு கொடுக்கப்பட்ட காட்சிகள், தேவர் மகன் முழுவதும் சிவாஜிக்கு, அவ்வை சண்முகம் படத்தில் ஜெமினிக்கு..என சில காட்சிகளில் இவரும் நம்மைப் போல பார்வையாளர் மட்டுமே.. ஏனெனில் ஒரு கலைஞராக அவருக்கு ஒரு நடிகருக்கு எந்த மாதிரி காட்சிகள் கொடுத்தால் அவர்களால் அதன் எல்லை வரை போக முடியும் எனத் தெரியும்.

இன்று கிளாசிக் வகை உலகத் திரைப்படங்கள் நமக்குக் கிடைக்கத் தொடங்கிவிட்டன. சில நடிகர்களைப் பார்க்கும்போது கமல் எங்கிருந்து சிலவற்றைப் பெற்றுக்கொண்டிருக்கிறார் என்பது பிடிபடுகிறது. தவறொன்றும் இல்லை. நாம் பெற்றுக் கொள்வதற்காகவே தான் கலைகளே இருக்கின்றன. அதை அவர் எப்படி வெளிப்படுத்துகிறார் என்பது முக்கியம்.

சிறந்த கலைஞர்களை பசித்த புலி என்பார்கள். கமல் ரசித்து ருசிக்கும் ஒரு புலி. 


சமீபகாலங்களாக நேர்காணல்களில் இப்படிச் சொல்கிறார், “ஷேக்ஸ்பியர் இப்போது திரைக்கதை எழுத வந்தாலும் கூட அதற்கென பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும்” என்கிறார்.


திரைக்கதை எழுதுவதென்பது புனைவு ஆக்கம் அறிந்தால் மட்டும் கைகூடுவதல்ல. அது ஒரு கைவினை – craft…இப்படி அவர் சொல்வது காலத்தின் தேவையாகவும் இருக்கிறது.

தினமும் எழுதி எழுதி பெற்றுக்கொள்ள வேண்டிய உழைப்பு என்பதும் அவர் கருத்தே. ஒரு ஒன்லைன் கதையாக உருவெடுத்து அது திரைக்கதையாக மாற்றம் பெறுவது எளிதல்ல.‌ பயிற்சியல்லாத ஒருவரால் அது செம்மை பெறாது என்பதை இத்தனை வருட கால துறைசார் அனுபவம் கொண்ட ஒருவர் வற்புறுத்துவதை முக்கியமானதாக கருதுகிறேன்.

கமல்ஹாசன் திரைக்கதை எழுதிய படங்கள் ஒவ்வொன்றுமே தனித்தனியான முத்திரைகள் கொண்டவை. அந்தப் படங்களின் கதையை சும்மாவேனும் சொல்லிப்பார்க்கிற போது ‘ஏதோ கதையில இருக்கு …ஆனா ஒர்க் அவுட் ஆகுமானு தெரியல’ என்று தான் கேட்டவர்களுக்குத் தோன்றியிருக்கும். விருமாண்டி , அன்பே சிவம் இவற்றை உதாரணங்களுக்காக சொல்லலாம். ஆனால் அதை திரைக்கதையாக சாத்தியப்படுத்த முடியும் என்று அவர் நினைத்த காரணம். அந்த craft ஐ அவர் உள்வாங்கிய விதமே.


தீவிர திரைப்பட ரசிகராக இருக்கும். எவரையும் சட்டென நிறுத்தி ஹேராம் கதையை மட்டும் சொல்லச்சொன்னால். சேகரித்து சொல்வதற்கு சில நொடிகள் ஆகும். கதையாகவே அது ஒரு வளைந்து நெளிந்த பாதை. அதற்கு கொடுத்திருந்த திரைக்கதை வடிவமே குறிப்பிடத்தக்க படமாக நிலைநிறுத்தியிருக்கிறது.


திருஷ்யம்‌ படத்தினை தமிழ் மக்களும் பார்த்த பிறகும் அதனை தமிழில் கமல் நடிக்கக் காரணம் நடிப்புத்திறமையைக் காட்டலாம் என்கிற‌ சாதாரண காரணத்திற்காக இருக்காது. இது போன்ற sentimental thriller திரைக்கதையில் தான் நடித்து ரசிகர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் இருக்கும்.

இவரது திரைக்கதை குறித்து எந்த அம்சங்களிலும் பேசலாம் என்ற போதும் இரண்டு அம்சங்கள் என்னை ஈர்க்கக்கூடியன.


ஒன்று வசனங்கள். மற்றொன்று பாடல் இடம்பெறும் காட்சி சூழல்கள்.

நடிகராக அவர் பெற்றுக்கொண்ட பயிற்சியைத் காட்டிலும் திரைக்கதை எழுதுபவராக‌ கமல்ஹாசன்‌ மாறுகையில் மிகுந்த அக்கறையும் பணிவும் கற்றுக்கொள்ளலையும் கைகொண்டிருக்கிறார் எனத் தோன்றுகிறது.

இது இந்தத் தலைமுறை திரைப்பட படைப்பாளர்களுக்கும் பயிற்சி பெறுபவர்களுக்கும் அவர் சொல்கிற செய்தி.




60 வருடங்களுக்கு மேலாக ஒரே துறையில் ஆழ்ந்த பயணம் மேற்கொள்கிற ஒருவரால் அதன் அனுபவங்களை வெளிக்காட்டாமல் இருக்கவே முடியாது. கமல் அவர்களின் நேர்காணல்களைத் தொடர்ந்து பார்க்கையில், பதினைந்து வருடங்களுக்கு முன்பு அவரிடமிருந்த சிறு தயக்கம் இப்போதெல்லாம் இருப்பதில்லை என்பதை உணர முடியும்.

தன்னிடமுள்ள அத்தனை அனுபவங்களையும் ஏதேனும் ஒருவகையில் அனைவரிடமும் பகிர வேண்டும் என்கிற உணர்வு அவரிடத்தில் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

இதற்கு ஒரு காரணமாக நினைப்பது , அவர் மாபெரும் படைப்பாளர்களுட்னும், ஆளுமைகளுடனும் பணி செய்திருக்கிறார். அவர்களின் அனுபவங்களையும் சேர்த்தே தன்னிடத்தில் கொண்டிருக்கிறார். மற்றவர்கள் தன்னிடம் பகிர்ந்த அனுபவங்கள் தன வாழ்க்கைக்கும், தொழிலுக்கும் எப்படி உதவியிருக்கிறது என்பதை பலமுறை அவர் வெளிப்படுத்தியுள்ளார். திரு ஜெமினி கணேசன் அவர்கள் யோகாசனங்கள் மூலமாக உடலை வலுப்படுத்த முடியும், சில உடல் உபாதைகளுக்குத் தீர்வு காண முடியும் என்று நம்பியவர். நீண்ட நேர படப்பிடிப்பில் நிற்பதனால் ஏற்படும் கால் வலிக்கு ஜெமினி அவர்கள் கற்றுத் தந்த ஒரு ஆசனம் இன்றளவும் கைகொடுக்கிறது என்று சொல்லியிருக்கிறார். அது எப்படி என்றும் ஒரு நேர்காணலில் சொன்னார். இது ஒரு சாதாரண உதாரணம்.

தயாரிப்பு நிறுவனம் தொடங்கவேண்டுமென்று நினைத்தபோது திரு.எஸ்.எஸ்.வாசன் மற்றும், திரு.மெய்யப்ப செட்டியார், திரு.எல்.வி பிரசாத் போன்றவர்கள் எந்த மாதிரியான சிக்கல்களை எதிர்கொண்டார்கள் என்பதை கமல்ஹாசன் பூரணமாகக் கேட்டுத் தெரிந்து கொண்டார். இதனை அவர் தனக்குள் வைத்துக் கொள்ளாமல் இப்போது பொதுவெளியிலும் பகிர்கிறார் என்பதே முக்கியமானது.


ஒரு கதாபாத்திரத்தின் நம்பகத்தன்மைக்கு அதன் உடைத்தேர்வு முக்கியமானது என்று முதல்நாள் படப்பிடிப்பின்போது தனக்கு விளக்கினார் என்று குஷ்பு அவர்கள் பகிர்ந்திருக்கிறார்.

ஒரு வட்டார மொழியை உள்வாங்க வேண்டுமானால் அந்தப்பகுதி மக்களோடு எப்படி கலந்து பழகுவது, அதன் நுட்பத்தை எப்படி உள்வாங்குவது என ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். விருமாண்டி படம்குறித்த பேட்டி என நினைவு.


கமல்ஹாசன் விஜய் சேதுபதிக்கு நேர்காணல் கொடுத்த வீடியோவை இன்று தான் முழுவதும் பார்த்தேன்.

திரைத்துறையில் அறுபதாண்டு கால அனுபவம் கமல்ஹாசன் அவர்களுக்கு. அதில் சில துளிகளைத் தந்திருக்கிறார். இத்தனை ஆண்டு கால அனுபவத்தை கோர்வையாக எடுத்து சொல்ல முடிவது என்பது மிக முக்கியமானது.

திரைப்படங்களில் பணி செய்பவர்களுக்கு எதைக் காட்டிலும் முக்கியத் தேவை உந்துதல். அவர்களில் பலர் திரைப்படக் கல்லூரிக்கு சென்று கற்றவர்கள் அல்ல. கற்றுக்கொண்டதெல்லாம் திரைப்படங்களில் இருந்தும், பணி செய்கிற திரைப்படங்களிலும் இருந்தும் தான். இதை விட முக்கியமாய் தேவைப்படுவது, ‘நாங்க இருக்கோம் வழிகாட்டறோம்’ என்று சொல்லும் முன்னோடிகளை.

அதனாலேயே இந்தத் துறையில் சாதித்த சக கலைஞர்களை எப்போதும் கவனிக்கிறார்கள். முன்னோடிகளே அடுத்தத் தலைமுறையினரை வழிநடத்துகிறார்கள்.
அதனால் தான் கமல்ஹாசன் அவர்களின் அனுபவம் திரைத்துறைக்கு முக்கிய பங்களிப்பாக இருக்கிறது. எல்லாவற்றையும் குறித்து பேசுகிற அவர் தியாகையர் பற்றியும் நேர்காணலில் சொல்கிறார், அதுவும் உதாரண மேற்கோளாய்.

தியாகையரை உயர்த்தியே சொல்லியிருக்கிறார். தியாகையர் தெருவில் இராமர் புகழ்பாடி பிச்சை எடுத்தது போன்று என்னால் தர்ம காரியத்துக்கு திரைப்படங்களில் நடிக்க முடியாமல் இருந்தது. ஏனெனில் எனக்கு கார் வேண்டியிருந்தது, வசதி தேவைப்பட்டது’ என்பது கமல் ஹாசனது கருத்து. இதில் அவமதிப்பு என்ன இருக்கிறது? ‘சில வணிகரீதியான படங்களில் நடித்ததன் மூலம் கலையை வியாபாரமாக்கினேன்’ என்று வெளிப்படையாகத் தன்னைத் தானே விமர்சிக்கிறார். தியாகையர் தர்மத்திற்காக மட்டுமே இராமர் புகழைப் பாடினார். அது போல் தன்னால் கலைத்துறையில் இயங்க முடியவில்லை என்கிறார். இதில் தியாகைய்யரை எங்கு தரம் தாழ்த்தினார் என்று உண்மையிலேயே புரியவில்லை.

இதைச் சொல்வதற்கு ‘உனக்கு தியாகையரைப் பற்றி என்ன தெரியும்?’ என்ற கேள்வியை முன்வைக்கலாம். தியாகையரைப் பற்றி எனக்குத் தெரிந்திருக்க வேண்டியதில்லை. கமல்ஹாசன் சொன்னதை புரிந்து கொள்வதற்கான ‘காமன் சென்ஸ்’ இருந்தால் போதுமானது.

இவர்கள் கத்துவதெல்லாம் கமல்ஹாசன் தியாகையர் மேல் வைத்த விமர்சனத்துக்கானது அல்ல என்றே புரிந்து கொள்கிறேன். வேறு பலவும் சேர்ந்து வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்ட யுத்தி என்றே சொல்லலாம்.

ஏனெனில் நேர்காணலின் இறுதியில் கமல்ஹாசன் பேசியதையும் கவனிக்க வேண்டும். ‘அடித்தட்டு மக்கள் உணவில்லாமல் சிரமப்படுகிறனர், நீங்களும், நானும் அரசிடம் உரக்க குரல் கொடுக்க வேண்டும். செய்யாவிட்டால் அந்த மக்களுக்கு எதிராக நாமும் இருக்கிறோம் என்கிற அர்த்தமாகி ஆகிவிடும்’ என்கிறார்.

இது நிச்சயம் கலாசார காவலர்களுக்கு கோபம் ஏற்படுத்தியிருக்கும் என்று புரிகிறது.

கண்முன்னே மடிந்து கொண்டிருக்கும் அடித்தட்டு மக்களுக்கு குரல் கொடுங்கள் என்று ஒரு நாட்டின் பிரஜை சொன்னால், இவர்கள் எதை முன்னிலைப்படுத்தி கூப்பாடு போடுகிறார்கள்!!!

விஜய் சேதுபதியின் உடனான ஒரு நேர்காணலில் விஜய் சேதுபதி அவர்களும், பேட்டியாளரும் அதிகமும் குறுக்கிட்டார்கள். அதீத உற்சாகத்தின் விளைவாகவே அப்படி ஏற்பட்டது. ஆனாலும் கமல் அவர்கள் அதனைக் கையாண்ட விதமும், விஜய் சேதுபதி போன்ற நடிகர்களுக்கு அவர் தந்த அறிவுரையும் முக்கியமானது. எனக்கு மற்றவர்கள் கற்றுக்கொடுத்தார்கள், நான் அதனை உங்களுக்குத் தருகிறேன் என்கிற தொனி அந்த நேர்காணல் முழுவதும் இருந்தது.


மிக முக்கியமாய் சொல்ல நினைப்பது, மறைந்து போன பல கலைஞர்கள், ஆளுமைகளைப் பற்றி எவரேனும் திரும்பத் திரும்ப நினைவுபடுத்திக் கொண்டே இருக்கவேண்டும். இது தான் அவர்கள் நமக்குத் தந்து போனதற்கு நாம் செய்யும் மறு உபகாரம். இதனைத் தொடர்ந்து செய்து வருகிறார் திரு. கமல். இத்தனை அனுபவத்தையும் நமக்குப் பகிர்ந்து அளிக்க சமகாலத்தில் தமிழில் எவரும் இல்லை. இதில் எனக்கு கமல் அவர்களின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கிறது.


நல்ல நேர்காணல். கூச்சலை அதிகரித்தால் நிறைய பேருக்குபோய்ச் சேரும். கூடுதல் கூச்சலை எதிர்பார்க்கிறேன். 


நான் அதிகமும் பிரமிப்பு கொண்டிருப்பது பாடகர் கமல்ஹாசனில் தான். தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த பாடகருள் ஒருவராக அவரை நினைக்கிறேன். பாடிய எல்லாப் பாடல்களும் ஹிட். காலத்தால் அடித்துச் செல்லப்படாதவை. குறிப்பாய் எஸ். ஜானகி அவர்களுடன் இணைந்து பாடிய பாடல்கள் அத்தனையும்…

அடடா!!!

தவிரவும் ஒவ்வொரு பாடலிலும் சிறு சவால் அவருக்கிருக்கும் அல்லது அப்படியான பாடலையேத் தேர்ந்தெடுக்கிறார். ‘போட்டு வைத்த காதல் திட்டம்’ மற்றும் ‘ராஜா கைய வச்சா’ பாடலின் சரணங்கள்…
அவரைப் போல் மிமிக்ரி செய்துவிடலாம்.
பாட முயல்வது கடினம்.

கட்டையான பெண் குரலில் பயிற்சி எடுத்துக் கொள்ள முடிந்தால் கூட பேசிவிடலாம். பாடிப்பார்க்க வேண்டும். அதிலும் ஸ்ருதியும் லயமும் மாறாமல். ’ருக்கு ருக்கு ருக்கு’ பாட்டில் சாத்தியப்படுத்தினார்.

அந்த விக்ரம் பட டைட்டில் பாடல் – ‘விக்க்க்ரம்ம்ம்..’
பிறகு சுந்தரி நீயும், சுந்தரி ஞானும் பாடலின் பாலக்காடு மலையாள உச்சரிப்பு. ‘மோகன ராகம் நின் தேஹம்..கீர்த்தனமாக்கி ஞான் பாடும்..”

‘யார்..யார்….சிவம்..” பாடலின் அந்த காத்திரம்.

‘நினைவோ ஒரு பறவை” – வெறும் நடிப்புக்கு மட்டுமா காதல் இளவரசன் பட்டம் தந்திருப்பார்கள்..அந்தக் குரலுக்கும் தான்…

வசன நடைப் பாடலிலும் பெரும்பங்குண்டு அவருக்கு… “முன்பு ஒரு காலத்துல..” அந்த ‘மூன்றாம் பிறை’ நரிக்கதைப் பாடல்,
“கடவுள் பாதி..மிருகம் பாதி..” என

“குளிக்கிற மீனுக்கு குளிரென்ன அடிக்குது..பசி தாங்குமா..இளமை இனி..பரிமாறவா இளமாங்கனி” என இவர் எப்போது முடிக்கிறார், எஸ்.பி.பி எப்போது தொடங்குகிறார் என்பதே அறியாமல் தான் பல வருடங்கள் கேட்டிருக்கிறேன்..சுத்தமான இரட்டை நாயனங்கள்..

“காட்டு வழி காளைங்க கழுத்து மணி..
கேக்கையில நமக்கது கோயில் மணி…” வரிகளில் அந்த உயிரோட்டம்..



‘உன்னால் முடியும் தம்பி’ படத்தில் ‘பிலஹரி ராகத்தை நான் ரெண்டு மணி நேரம் பாடுவேன்” என்பார் பிலஹரி மார்த்தாண்டம் பிள்ளை.



“பத்து செகண்டுல கூட பாடலாம் போலருக்கே..” என்று மட்டும் வசனத்தை வைத்திருந்தால் யார் கேட்கப்போகிறார்கள்..ஆனால் அந்த பத்து செகண்டிற்குள் பிலஹரியை ஒரு காட்டு காட்டிவிட்டு பிறகு அந்த வசனத்தை சொல்கிறபோது எவ்வளவு புரிந்துவிடுகிறது..அது கமல் ஹாசனின் குரல் தானே..பயிற்சியும், அர்ப்பணிப்பும் இருந்தால் தான் அப்படி கொண்டு வர இயலும்..!!!

இப்படி அடுக்கினால் எங்கு முடிப்பது?

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments