எனக்கான கட்டம் எது கோச்?

0
293

“நீ இருக்கும் இடம் என்பதைக் கடந்து ஒரு உலகம் உள்ளது..அதை நோக்கிச் செல்லும் தகுதி உனக்கு உண்டு”

“நீ இங்கிருந்து தான் வந்தாய்..இது உன்னுடைய இடம்”

இந்த இரண்டு வாக்கியங்களுக்கும் ஒரு மெல்லிய வித்தியாசமே உண்டு. ஆனால் அந்த வித்தியாசம் உறுதியானது. நரம்பின் உறுதியைப் போன்றது. இந்த வித்தியாசத்தைக் கண்டுகொள்ள Queen of Katwe படத்தினைப் பார்க்க வேண்டும்.

இந்தப் படம் 2016ல் வெளிவந்தது. இது உகாண்டா நாட்டுத் திரைப்படம். இதனை இயக்கியது இந்தியத் திரைப்பட இயக்குனரான மீரா நாயர். மீரா இதனை நவீன காலத்திய உகாண்டா திரைப்படம என்கிறார். இத்தனைக்கும் உகாண்டா சொந்தமாகத் திரைப்படம் எடுக்க ஆரம்பித்தது 2005ல் இருந்து தான். அதற்கு முன்பும் இப்போதும் கூட ஹாலிவுட் திரைப்படங்களை மொழிமாற்றம் செய்து தான் வெளியிட்டு வருகிறார்கள்.

மீராவின் கணவர் மஹ்மூத் மம்தானி உகாண்டா நாட்டைச் சேர்ந்தவர். மீராவுக்கு இந்தியா போலவே உகண்டாவும் சொந்த நாடானது. டிஸ்னி நிறுவனத்தின் துணைத் தலைவரான டெண்டோ நாகேண்டா என்பவருக்கு தனது சொந்தத் தேசமான உகாண்டா குறித்து திரைப்படம் எடுக்க வேண்டுமென்பது ஆசை. அவர் துணைத்தலைவராக டிஸ்னியின் பொறுப்பில் இருந்தபோதும் உகாண்டா போன்ற நாட்டில் இருந்து என்ன மாதிரியான படம் எடுத்து விட முடியும் என்பதும் அது வியாபாரரீதியாக எப்படி நிறைவளிக்கும் என்பதும் டிஸ்னியின் கேள்வியாக இருந்தது. “என்னிடம் எதைக் கதையாக எடுக்க வேண்டும் என்கிற யோசனை இருக்கிறது..இதனை மீரா இயக்கினால் சரியாக இருக்கும்”: என்று சொன்னதோடு மீராவை சந்திக்கிறார் டெண்டோ நாகேண்டா. மீராவிடம் அப்போது இவர் சொன்ன கதை தான் Queen of Katwe. மீராவைப் பொறுத்தவரை பல வருட காலங்களாக உகாண்டாவுடன் உறவு ஏற்பட்டிருந்தாலும் அந்தத் தேசத்தின் பின்னணியில் ஒரு படம் இயக்க முடியவில்லை என்கிற வருத்தம் இருந்தது. இருவரின் சந்திப்பும் இவர்களது கவலையை நீக்கி நீண்ட நாள் விருப்பத்தையும் நிறைவேற்றிக் கொண்டன.

காத்வே என்பது உகாண்டாவின் தலைநகரமான கம்பாலாவின் ஒரு பகுதி. மூன்று கிலோமீட்டர் தூரம் விரிந்திருக்கும் ஒரு குடியிருப்பு இது. சேரிப்பகுதி என்று சொல்லலாம். அன்றாடக் கூலிகளும் தெரு வியாபாரிகளும் வாழும் ஒரு இடம். இங்கிருந்து ஒரு சிறுமி சதுரங்க ஆட்டத்துக்குள் நுழைந்து ‘கிராண்ட்மாஸ்டர்’ பட்டத்துக்காக கனவு காண்கிறாள் என்பதே கதை. உண்மைக் கதையும் கூட.

இதனை டெண்டோ நாகேண்டா மீராவுக்கு சொன்னபோது தன்னால் காத்வேயை திரையில் சரியாகக் காண்பிக்க முடியும் என்று மீராவுக்குத் தோன்றியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இது ஒரு சிறுமி செஸ் சாம்பியன் ஆகிறாள் என்பதைக் காட்டிலும் அதோடு சொல்வதற்கான கதைகளும் சம்பவங்களும் ஏராளம் இருந்ததை புரிந்து கொள்கிறார் மீரா.

உடனேயே திரைக்கதையாசிரியர் வில்லியம் வீலரை வரவழைக்கிறார். இருவருமாக சேர்ந்து அந்த செஸ் வீராங்கனையான ஃபியானாவின் சுயவரலாற்றையும் அவளுடைய குடும்பத்தையும் அவளுக்கு பயிற்சி தந்த பயிற்சியாளரையும் சந்திக்கின்றனர். தாங்கள் நினைத்ததை விட இது முக்கியமான படமாக இருக்கப்போகிறது என்பது இருவருக்கும் தெரிகிறது.

மிகவும் பிற்படுத்தப்பட்ட சூழலில் இருந்து விளையாட்டுத் துறைக்கு முன்னேறுபவர்கள் ஒவ்வொருவரிடத்திலும் சொல்வதற்கு சம்பவங்களும், கண்ணீரும் உழைப்பும் மிகுதியாக இருக்கும். அதற்கு எந்த வகையிலும் குறைவில்லாத சொல்லப்போனால், இப்படியான சூழலில் இருக்கும் எவரும் நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒரு கனவினையுமே ஃபியானா கொண்டிருந்தாள். எந்த நேரமும் அவள் பின்வாங்கி விடக்கூடிய சூழலே அவளுக்கு ஒவ்வொரு நாளும் இருந்தது.

ஒரு சதுரங்கப் போட்டியில் பங்கெடுக்க ஃபியானா வருகிறாள் என்பதில் படம் தொடங்குகிறது. அவள் ஆட்டம் தொடங்கவிருக்கும் சமயம் அவளுடைய பின்னணிக் கதையும் தொடங்குகிறது.

காத்வேயின் சூழல் நமக்குக் காட்டப்படுகிறது. ஒரு பக்கம் நதி ஓடிக்கொண்டிருக்க, மறுபக்க கரையில் சேரும் சகதியுமான ஒரு பகுதியில் மக்கள் அது குறித்த எந்தத் தாக்கமுமின்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஃபியானா அவளுடைய அம்மா சகோதரர்கள் மற்றும் அக்காவுடன் ஒரு வீட்டில் அங்கு வாழ்கிறாள். அதை வீடு என்று சொல்வது அதிகம். நான்கு பக்கமும் மறைப்புகள் கொண்ட ஒரு அறை கதவுக்கு பதிலாய் பொத்தல்கள் விழுந்த ஒரு துணி மட்டுமே. ஃபியானாவின் அக்கா ஒரு இளைஞனுடன் நெருங்கிப் பழகுவதை ஃபியானாவின் அம்மா விரும்பவில்லை. நான்கு குழந்தைக்குத் தாய் என்றபோதும் அவள் இருபது வயதின் மத்தியில்  இருக்கிற ஒரு பெண். கணவன் இறந்தபின் ஐந்து குழந்தைகளை அவள் வளர்த்தாக வேண்டிய சூழல். இதில் ஒரு குழந்தை ஏற்கனவே இறந்தும் போயிருக்கிறது. இப்படியான பெண்களுக்கு ஏற்படுகிற உறுதியோடு வாழ்கிறாள் அவள்.

தினமும் ஃபியானாவுக்கும் அவளது சகோதரனுக்கும் மக்கள் கூடும் இடங்களில் மக்காச்சோளம் விற்பது தான் வேலை. இரவு உணவு சோளமாவினை கரைத்துக் குடிக்கும் கஞ்சி மட்டுமே. ஆனாலும் பனிரெண்டு வயதான ஃபியானாவிடம் எவரேனும் “வாழ்க்கை எப்படிப் போகிறது ஃபியானா? “ என்றால் “சிறப்பாக போகிறது” என்பாள் சிரித்தபடி.

அதே ஊரில் கடாண்டே என்கிற ஒரு விளையாட்டு பயிற்சியாளர் இருக்கிறார். வறுமையை கல்வியின் மூலம் ஒழிக்க  முடியவில்லை என்றால் விளையாட்டின் மூலம் நேர்செய்துவிடலாம் என்பது அவருடைய வாழ்க்கை விதி. அது அவரது அனுபவமும் கூட, ஃபுட்பால் வீரரான அவர் அதை விளையாட முடியாத உடல் நிலை கொண்ட குழந்தைகளுக்கு செஸ் பயிற்சியளிக்கிறார். காரணம், புட்பால் விளையாடும்போது அடிபடும் வாய்ப்புள்ளது. அங்குள்ள மக்களால் மருத்துவருக்கு செலவு செய்ய முடியாது. அதனால் உட்கார்ந்து விளையாடும் செஸ் பயிற்சி தரலாம் என்று முடிவு செய்கிறார். அங்கு தான் ஃபியானா ஒருநாள் செஸ் போர்டினைப் பார்க்கிறாள். கடாண்டே அங்கு வரும் குழந்தைகளுக்கு கஞ்சித் தருகிறார். இது தான் ஃபியானாவுக்கு முதல் ஈர்ப்பாக இருக்கிறது.

கடாண்டே ஃபியானாவையும் செஸ் பயிற்சியில் சேர்த்துக் கொள்ள அங்குள்ள குழந்தைகள் ஃபியானா மீது துர்நாற்றம் வீசுவதாக விலகுகிறார்கள். அதை மீறி ஃபியனாவுக்கு ஒரு சிறுமி சதுரங்கத்தின் அடிப்படை விதிகளைக் கற்றுத் தருகிறாள். அந்த சிறுமி சொல்கிற முதல் வார்த்தை தான் ஃபியானாவை செஸ் நோக்கி ஈர்க்கிறது. “இங்கு சிறியவை பெரிய காரியங்களை செய்யும்” என்று போர்வீரரைத் தூக்கிக் காட்டுகிறாள். பியானோ கண்கள் பளிச்சென மின்னுகிறது. அது அவள் எதிர்பார்த்திராத யாரேனும் சொல்ல மாட்டார்களா என்று ஏங்கிக் கொண்டிருந்த  சொற்கள். தன்னைச் சிறியவளாக அதுவரை நினைத்திருந்த ஃபியனாவுக்கு அது ஒரு தேவ வாக்கியம்.

மறுநாளே தேய்த்து தேய்த்து குளித்துவிட்டு மீண்டும் பயிற்சிக்கு வருகிறாள். அவளுடைய சகோதரனும் அவளுடன் விளையாட வருகிறான். இருவரும் வீட்டில் ஒரு துணியில் கட்டங்களை வரைந்து சோடா பாட்டில் மூடிகளை காய்களாக வைத்து விளையாடுகின்றனர். ஃபியானாவுக்கு சதுரங்க விளையாட்டின் நுணுக்கங்கள் பிடிபடுகின்றன. ஃபியானாவுக்குள் இயற்கையாகவே புத்திசாலித்தனமும் பல்வேறு நகர்வுகளை கணிக்கும் திறனும் இருப்பதை  கடாண்டே கண்டு கொள்கிறார். அவளுக்காகவும் மற்றக் குழந்தைகளுக்காகவும் அவர் மெனக்கிடுகிறார். சேரிக் குழந்தைகளை சதுரங்க போட்டிகளில் விளையாட அனுமதிக்க மாட்டோம் என்று சொல்பவர்களிடம் “என் குழந்தைகளைப் பற்றி உங்களுக்குத் தெரியவில்லை..அவர்கள் திறமையானவர்கள். நீங்கள் வாய்ப்பு தர வேண்டாம்..நியாயத்தின்படி நடந்து கொள்ளுங்கள்” என்று கேட்டு போட்டிகளுக்கும் அழைத்துச் செல்கிறார். காத்வே பிள்ளைகளிடம் திறமைகள் இருப்பதை ஒவ்வொருவரும் கண்டுகொள்கிறார்கள். குறிப்பாக ஃபியானாவின் விளையாட்டு எல்லோருக்கும் ஆச்சரியம் அளிக்கிறது.

ஒவ்வொரு போட்டிக்காகவும் ஃபியானா எப்படி முன்னேறுகிறாள் என்பதைப் படம் காட்டிக் கொண்டே போய், அவள் சாம்பியன் பட்டம் பெற்று தன்னுடைய இடத்துக்கு மகிழ்ச்சியாக வருகிறாள் என்பதோடும் ஃபியானாவைப் பாராட்டி அவளுக்கு அரசால் ஒரு வீடும் தரப்படுகிறது என்பதோடும் படம் நிறைவு பெறுகிறது.

ஆனால் இதற்கிடையில் பதிவு செய்யபப்ட்ட பியனாவின் வாழ்க்கை அதி முக்கியமானது. அவள் சதுரங்க ஆட்டத்தினை தன்னுடைய குடும்பத்தினை உயர்த்தும் ஒரு வாய்ப்பாக பார்க்கிறாள். சாதாரணமாய் மண்ணோடு மண்ணாக வாழ வேண்டியிருந்த வாழ்க்கையில் இருந்து தன்னை மீட்ட பயிற்சியாளர் கடாண்டேக்கு செலுத்தும் நன்றிக்கடனாக நினைக்கிறாள். மட்டுமல்லாமல், கடாண்டே சொல்வது போல மற்றவர்களைப் போல தனக்கும் வாய்ப்பு அளிக்கப்படவேண்டும் என்று போராடுகிறாள்.

கடாண்டே கதாபாத்திரம் அற்புதமானது. அவர் சதுரங்கத்தினைக் குழந்தைகளுக்கு சொல்லித்தரும் விதம் அசாதாரணமானது, “இந்த பிஷப் இங்கு மாட்டிக்கொண்டார்? என்ன செய்வீர்கள்?” என்றதும் குழந்தைகள் சதுரங்க போர்டினையேப் பார்க்கிறார்கள், “வாய்ப்பே இல்லை..ம்ஹும்ம்..ஒன்றும் செய்ய முடியாது” என்கிறார்கள் குழந்தைகள் . இப்போது கடாண்டே கேட்கிறார். “நீங்கள் தினமும் சில மைல் தூரம் நடந்து போய் தானே தண்ணீர் எடுக்கிறீர்கள்? தண்ணீர் எடுத்துக்கொண்டு வரும்போது சேரும் சகதியுமாக இருந்தால் என்ன செய்வீர்கள்?” என்றதும் குழந்தைகள் ஒரு பதிலைச் சொல்கிறார்கள்..”சரி..உங்களைத் தண்ணீர் பிடிக்க விடாமல் அந்தத் தண்ணீரை தங்கள் கம்பெனிகளுக்காக  முதலாளிகள் குழாயில் இருந்து நேரடியாகப் பிடித்துக் கொள்கிறார்கள்? இப்போது என்ன செய்வீர்கள்?” என்றதும் குழந்தைகளிடம் இருந்து ஒரு பதில் வருகிறது. “சரி.இப்போது தண்ணீர் எடுத்துக் கொண்டு வரும் வழியில் மழை வந்துவிட்டது..நகரவே முடியாது..ஆனால் தண்ணீரையும் வீட்டுக்கு எடுத்துப் போக வேண்டும்..நடந்தால் வழுக்கும் பாதை வேறு..இப்போது குடத்தினை எப்படி எடுத்துப் போவீர்கள்?” இப்போதும் குழந்தைகளிடம் தீர்வு இருக்கிறது. ஏனெனில் அது அவர்களது அன்றாடம். இந்தக் கஷ்டங்களைத் தாங்கித் தான் அங்கு தண்ணீர் பிரச்சனை ஒவ்வொருநாளும் தீர்க்கப்பட்டுவருகிறது. நதியின் கரையில் வாழும் அவர்களுக்கு நீர் கூட போராட்டம் தான். அப்போது கடாண்டே சொல்கிறார், “பாருங்கள்..உங்களிடம் உங்கள் பிரச்சனைக்கு தீர்வு இருக்கிறது..அது போலத் தான் பிஷப்பிணைக் காப்பாற்றுவதற்கும் உங்களிடம் தீர்வு இருக்கும்..யோசியுங்கள் “ என்றதும் குழந்தைகள் சதுரங்க பலகையைப் பார்த்து தீர்வு சொல்கின்றனர். இதனை ஃபியானா கவனிக்கிறாள். “முதலில் பிரச்சனை எப்போதுமே பெரிதாய் தெரியும்..மீள முடியாதோ என்று தோன்றும்..ஆனால் பிரச்சனையை உற்று நோக்கினால் அது தீரும் வழியும் அங்கேயே இருப்பதைப் புரிந்து கொள்ளலாம்” என்று சதுரங்க ஆட்டத்திற்கும் வாழ்க்கைக்குமான தீர்வையும் கடாண்டே சொல்லும்போதெல்லாம் ஃபியானா தன்னுடைய வாழ்க்கையில் அதைப் பொருத்துகிறாள்.

கடாண்டே தன்னுடைய மாணவர்களையும் ஃபியானாவையும் தேற்றுவதற்கு ஒரு யுத்தி வைத்திருக்கிறார். யார் எந்தக் கவலையில் இருந்தாலும் இனி ஒன்றும் செய்வதற்கில்லை என்று உட்கார்ந்தாலும் அவர் தனது கதையினை சொல்கிறார்.அவர் அனாதையாக்கப்பட்ட கதை அது..அதைக் கேட்கிற எவருக்கும் இதை விட நம்முடைய பிரச்சனை ஒன்றுமில்லை என்கிற எண்ணம் வந்துவிடும் . ஒவ்வொரு முறையும் கதையை சொல்லி இப்படி முடிப்பார், “நானே இன்று நன்றாக வாழ்கிறேன்..உங்களால் முடியாதா..வாழ்க்கை எப்போதுமே வாய்ப்புகளைத் திறந்தே வைத்திருக்கும்” என்பார்.

ஃபியானா ரஷ்யாவில் நடைபெறும் சர்வதேசப் போட்டியில் தோற்று ரஷ்யத் தெருவில் அழுதபடி ஓடுவாள். பின்னாலேயே  வரும் காண்டே அவளைத் தேற்றுவார். “நீங்க என்னை செஸ் விளையாட்டுக்கு அறிமுகம் செய்திருக்கக்கூடாது கோச்..நான் தெருவுல மக்காச்சோளம் விக்கத் தான் லாயக்கு” என்று அழுவாள் ஃபியானா. அந்த இடத்தில் தான் அவளை எப்படித் தேற்றுவது என்று தெரியாமல் திகைத்து நிற்பார் கடாண்டே.

ஃபியனாவின் அம்மா கதாபாத்திரம் சொல்லவேண்டியது. தன்னுடைய மகளிடம், “நீ காணும் கனவு நமக்கு எட்டாதது..நீ கனவே காணாதே மகளே..அது நடக்காமல் போனால் நீ ஏமாற்றமடைவாய்” என்று சொல்லிக் கொண்டே இருப்பாள். அதே நேரம் மகளிடம் எதோ ஒரு திறமை இருக்கத் தான் செய்கிறது என்று தெரிந்தபின் தன் அம்மா தனக்கு அளித்த ஒரே நல்ல உடையை கடையில் விற்று மகளுக்காக பணம் எடுத்து வருவாள்.

அவள் ஒருபக்கம் உறுதியானவளாகவும் மறுபுறம் அப்பாவியுமாகவும் இருக்கும் ஒரு அம்மா. திரையில் நமக்குக் காட்டுகிற அம்மா கதாபத்திரங்களில் ஃபியனாவின் அம்மா தனித்து தெரிபவள். ஒரு காட்சியில் கடாண்டே ஃபியானாவின் அம்மாவிடம “நம் குழந்தைகள் ஒருநாள் உலகைத் திரும்பிப் பார்க்க வைப்பார்கள்” என்பார். அவர் சொன்னதன் அர்த்தம் தான் பயிற்சியளிக்கும் குழந்தைகள் என்பதாக இருக்கும். அதற்கு சற்று கோபத்துடன் “:அது ஒன்றும் நம் குழந்தைகள் அல்ல..அவை எனக்குத் தான்  குழந்தைகள்..என் உடலில் நான் சுமந்த குழந்தைகள்” என்பாள். கடாண்டேவுக்கு சிரிப்பும் திகைப்புமாக இருக்கும் இந்த பதில்.

அவர் ஃபியனாவிடம் சொல்வார், “உன்னுடைய அம்மாவின் அதே போராட்ட குணம் உன்னிடமும் இருக்கிறது” என்பார்.

வீடிழந்து மழை வெள்ளத்தில் போகும் இடமற்று ஒரு வேளை உணவுக்குக் கூட வழியில்லாமல் பட்டினி கிடந்தது என ஒவ்வொரு கட்டத்தினையும் ஃபியானா எதிர்கொள்வாள். “ஏதாவது ஒரு வழி இருக்கும் என்று சதுரங்கத்தில் சொல்லிக் கொடுத்தீர்களே..இன்று நான் நிர்க்கதியாக இருக்கிறேனே. எனக்கான பாதுகாப்பான கட்டம் எது கோச்?” என்று ஃபியானா கேட்கும்போது கடாண்டே கண்கலங்கியபடி சொல்வார், “உனக்கான இடத்தை நீ உருவாக்கப்போகிறாய்” என்று.

ஃபியானா உருவாக்குகிறாள். முதன்முதலில் விமானத்தில் பறக்கும்போது ஜன்னல் வழி மேகத்தைப் பார்த்து அவள் கேட்பது, “கோச்,இது தான் சொர்க்கமா?’

“இல்லை அது இன்னும் மேலே இருக்கிறது”

அந்த இடத்துக்கு தான் வாழ்நாளில்  போக வேண்டுமென ஃபியானா விரும்புகிறாள். அந்த இடம் என்பது வானத்தின் மேல் அல்ல, பூமியில் அவள் வாழ்ந்த உகாண்டாவில் வீடிழந்து குழந்தைகளுடன் நடுரோட்டில் அலைந்த அவளுடைய அம்மாவுக்கான ஒரு வீடாக இருக்கிறது. அந்த சொர்க்கத்தை ஃபியானா உருவாக்குகிறாள்.

மிகவும் நெகிழ்ச்சியான படம் இது. படத்தின் முடிவில் ஃபியானா, அவளது கோச் கடாண்டே, அம்மா , சகோதரர்கள் எல்லோருமே திரையில் தங்களுடைய கதாபாத்திரங்களை ஏற்று நடித்தவர்களுடன் வருகிறார்கள். மிகவும் பெருமையாகவும் பிரமிப்பாகவும் இருக்கிறது அவர்களைப் பார்ப்பதற்கு. அவர்கள் அனைவரின் முகத்திலும் புன்னகையும் நம்பிக்கையும் தெரிகிறது. அது ஃபியானா போல ஒருவர் தனது அடையாளத்தை புரிந்து கொண்டு அதனை நிமிர்வோடு உலகத்துக்கு சொன்னதன் விளைவு.

“எப்படி ஜெயித்தீர்கள் ஃபியானா?”

“நான் காத்வேயில் இருந்து வந்திருக்கிறேன். தினமும் போராட்டம் தான்..சதுரங்கப் பலகையின் போராட்டத்தைப் போல..ஜெயிக்கத் தான் வேணும் போராட்டத்தில்”

இது தான் ஃபியானா பதக்கத்தினை வென்றதும் சொன்னது.

(நீலம் இதழில் கறுப்புத் திரை தொடருக்காக எழுதி பிரசுரமானது)

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Rjgopaalan
Rjgopaalan
1 year ago

மிகவும் அருமையான கட்டுரை மேம்.
பல விஷயங்களை சொல்லித்தருகின்றன இப்படமும் இவ்வெழுத்துக்களும்.

அதிலும்,

நானே இன்று நன்றாக வாழ்கிறேன்..உங்களால் முடியாதா..வாழ்க்கை எப்போதுமே வாய்ப்புகளைத் திறந்தே வைத்திருக்கும்” என்பதெல்லாம் ஹைலைட் !

கதாப்பாத்திரம், பிரச்சனைகளை எதிர்கொள்ளும் விதங்களை கையாண்ட விதம்,
திரைப்படம் உருவாகும் முன்பாக விஷயங்கள் என படிக்க படிக்க ஸ்வாரஸ்யமே !