நினைவோ ஒரு பறவை – சுந்தர் ராவ் நட்கர்ணி

0
363

ஒரு இயக்குனர் தொடர்ந்து வெற்றிப் படங்களை இயக்குவதென்பது அரிதல்ல. ஆனால், தன்னுடைய பாணி எது என்பதைத் தெரிந்து கொண்டு அதைக் கொண்டே தொடர்ந்து படம் இயக்கி வெற்றி பெறுவதென்பது அரிது.

ஒரு திரைப்படத்தை உருவாக்க அடிப்படையான திரைக்கதை, படத்தொகுப்பு, ஒளிப்பதிவு, இயக்கம் இவற்றில் எல்லாம் திறன் வாய்ந்தவர்கள் ஒன்று சேரும்போது படம் வெற்றி பெறும். இவையெல்லாம் அறிந்த ஒருவர் திறனும் வாய்க்கப் பெற்றிருந்தால்..அப்படித் தான் சுந்தர் ராவ் நட்கர்ணியின் படங்கள் ஜெயித்தன. இயக்கிய அநேகப் படங்களுமே நூறு நாட்களுக்கு மேல் ஓடியவை. மௌனப் படக் காலகட்டத்தில் இருந்து படங்கள் இயக்கத் தொடங்கி நாற்பது ஆண்டு காலம் தொடர்ந்து பணி செய்திருக்கிறார். மௌனப் படக் காலகட்டதில் இவர் இயக்கிய ஒன்பது படங்களும் இந்திப் படங்கள். இவரின் முதல் பேசும் படத்தினை தமிழில் இயக்குகிறார். படத்தின் பெயர் சாந்தா சக்குபாய்.

மராட்டிய மாநிலத்தில்  இறைவன் பண்டரிநாதரின் பக்தர்களில் பிரபலமானவர் சக்குபாய். 1939ல் வெளிவந்தது. படத்தின் டைட்டில் கார்ட் பண்டரிபுரத்தின் காட்சிகளில் தொடங்கும். படத்தின் இடையிலும் சக்குபாய் பண்டரிபுரம் செல்லும் காட்சியை கோயில் வளாகத்திலும் அதைச் சுற்றிலும் படமாக்கியிருக்கிறார். இவையெல்லாம் இந்தப் படத்தை மற்றப் படங்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டியிருந்தன. அதோடு மராட்டியக் கதை என்பதால் எல்லோருமே மராட்டிய பாணி உடைகளையே அணிந்திருப்பார்கள். ஆனால் தமிழில் பேசுவார்கள். பார்ப்பதற்கு சற்று வித்தியாசமாக இருக்கும்

ஹரிதாஸ் இந்திய சினிமாவே மறக்கவியலாத படம். சுந்தர் ராவ் நட்கர்ணி என்கிற இயக்குனரைத் தெரியாது என்பவர்கள் கூட ஹரிதாஸ் படத்தினைத் தெரிந்து வைத்திருப்பார்கள். ‘ஹரிதாஸ்படத்தினை இயக்கியவர் என்றால் தான் இவர் குறித்து பலருக்கும் தெரிகிறது.

தொடர்ந்து தமிழ்நாட்டில் 133 வாரங்கள் ஓடிய திரைப்படம். சென்னை பிராட்வே  சன் திரையரங்கில் தொடர்ந்து மூன்று தீபாவளிக்கு ஓடிய படமென்கிற சரித்திரம் இந்தப் படத்துக்கு உண்டு. அப்படியென்ன இந்தப் படத்தில் விசேஷம்? சுந்தர் ராவ் நட்கர்ணி இந்தப் படத்தை எப்படி சொல்ல வேண்டும் என்று முடிவெடுத்தது தான் விஷயம்.

ஹரிதாஸ்படத்தின் கதை ஸ்ரீ பக்த விஜயம்என்கிற நூலில் இருந்து எடுத்தாளப்பட்டது. இந்த நூலானது கிருஷ்ணரின் வெவ்வேறு விதமான பக்தர்களைப் பற்றி சொல்கிறது. பெரும்பாலும் வடநாட்டில் உள்ள பக்திப் பாடல்களை புனைந்தவர்கள் பற்றிய கதைகள் கொண்ட புத்தகம். துக்காராம், மீரா, கபீர் தாஸ், சூர்தாஸ் போன்றவர்களைப் பற்றியது. எல்லோருமே எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து கிருஷ்ணர் மீது கொண்ட பக்தியினால் கிருஷ்ணரை நேரில் தரிசனம் செய்தவர்களாக சொல்லப்படுபவர்கள். இந்தப் புத்தகத்தின் பாதிப்பில் இருந்தே இதே போன்ற ஒரு கதையை இளங்கோவன் என்பவர் எழுதுகிறார். அதற்குத் திரைக்கதை வடிவம் கொடுத்து  ‘ஹரிதாஸ்படமாக எடுக்கிறார் சுந்தர் ராவ். ஏற்கனவேசாந்தா சக்குபாய்படத்தினை இதே போன்ற களத்தை மையமாகக் கொண்டே இயக்கினார். இது போன்ற பக்தர்களின் கதைகள் அதற்கு முன்பும் தமிழ்த்திரையுலகில் அதிகம் வந்திருக்கின்றன. கதை புதிதில்ல. ஆனால் திரைக்கதை புதிது.

ஹரிதாஸ் படம் வெளியான ஆண்டு 1944. இரண்டாம் உலக யுத்தம் நடந்துகொண்டிருந்த நேரம். அதுவரை யுத்தத்தினால் இந்திய சினிமாவின் நிலை சொல்லும்படியாக இல்லை. அப்படியே படங்கள் வெளிவந்தாலும் புராண, இதிகாசப் படங்களாக வந்து கொண்டிருந்தன. அதிலும் ஹரிதாஸ் வெளியான அதே ஆண்டில் வெளிவந்த அனைத்துப் படங்களுமே புராணப் படங்கள் தான். ஹரிதாஸும் இதே வகைமையைச் சேர்ந்தது தான் என்றாலும் மக்கள் இந்தப் படத்தை மட்டும் அப்படிக் கொண்டாடினார்கள். புராணப் படத்தில் யதார்த்தத்தையும், நவீனத்தையும் சேர்த்திருந்தார் சுந்தர் ராவ்.

படத்தின் கதாநாயகன் பெயர் ஹரிதாஸ். முதல் காட்சியில் அவர் குதிரையில் பாடிக்கொண்டே வருகிறார்வாழ்விலோர் திருநாள் என்று பாடிக்கொண்டு வரும் அவரைப் பார்க்கும் பெண்கள் ரசிக்கின்றனர். சிலர் ஓடுகின்றனர். ஓடுகிற பெண்களை ஹரிதாஸ் ரசிக்கிறார். இப்படி  கதாநாயகனின் அறிமுகமும், அவரது கதாபாத்திரத்தையும் ஒரே பாட்டில் புரியவைத்துவிடுகிறார். பெண்களைப் பார்த்து விசிலடிப்பதும், கண்ணடிப்பதும் என அப்போதைய ரோமியோ வகை கதாபாத்திரம் அதுபெண் பித்தன் என்பதை இத்தனை நவீனமாக ஒரு படமும் அப்போது கையாண்டிருக்காது. ஏன் தியாகராஜா பாகவதர் அத்தனை பேருக்கும் குறிப்பாக பெண்களுக்கு பிடித்தவரானார் என்பதன் அர்த்தம் இந்தப் படாலில் நன்கு விளங்கும்.

மொத்தமே இந்தப் படம் 10,994 அடிகள் தான். இரண்டு மணிநேரத்தில் படம் முடிந்துவிடும். இதில் 45 நிமிடங்கள் பாடல்களுக்கானது. மீதி உள்ள ஒன்றேகால் மணி நேரத்தில் கதை சொல்லியிருக்கிறார்கள். அந்த ஒன்றேகால் மணி நேர கதையை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்கள். எம்.கே.டி இருப்பதால் பாடல்கள் நிச்சயம் வெற்றி பெறும் என்று தெரிந்திருக்கும். பாடல்களுக்காகவே அப்போதும் இப்போதும் ரசிகர்கள் உண்டு இல்லையா..அதிலும் பாகவதருக்கு கேட்கவே வேண்டாம். கூடவே பாடகி வசந்த கோகிலம் வேறு படத்தில் இருக்கிறார். வசந்த கோகிலம் தான் ஹரிதாஸின் மனைவியாக நடித்து பாடியும் இருக்கிறார். இவர்களோடு கலைவாணரும் மதுரமும் இருக்கிறார்கள். அதனால் காட்சியில் எத்தனை தூரம் ஆர்வத்தைக் கூட்டமுடியுமோ அதைச் செய்திருக்கிறார்கள். எந்தக் காட்சியிலும் அழுகையும், சோகமும் இல்லை என்பதே படத்துக்கு ஒரு கொண்டாட்ட மனநிலையைக் கொடுத்திருக்கும். கைத் தட்டி உற்சாகப்படுத்திக் கொள்ள பார்வையாளர்களுக்கு ஏராளமான காட்சிகள் உண்டு. யுத்தத்தினால் சோர்வைக் கொண்டிருந்த மக்களுக்கு இந்தப் படம் பெரும் பொழுதுபோக்காகவும் மன அழுத்தத்தை மாற்றுகிற உற்சாகமாகவும் அமைந்திருக்கும்.

கணவன் ஒரு பெண்ணை வீட்டுக்கே வரவழைத்து ஆடிப் பாடுகிறார் என்று ஒரு மனைவிக்குத் தெரிந்தால் என்னவாகும்? மூலையில் உட்கார்ந்து அழுவதோ, கணவனே கண்கண்ட தெய்வம் என தொழுது அனுப்பி வைப்பதோ இந்தப் படத்தில் இல்லை. கையில் கம்புடன் சுவர் ஏறிக் குதித்து ஆட்டத்தினைக் கண்டுகொண்டவர்களை ஓட ஓட விரட்டும் கதாபாத்திரம் தான் ஹரிதாஸின் மனைவி. கடைசி வரை எங்கும் அழுது கொண்டிருக்காமல் பிராக்டிகலாக யோசிக்கிற ஒரு பெண் அவர்.

டி.ஆர் ராஜகுமாரி ரம்பை எனும் நடனமாடும் பெண்ணாக நடித்திருக்கிறார். அவருடைய அழகும் கம்பீரமும் பிரபலமானது. மன்மதலீலையை வென்றார் உண்டோ பாடலில் அவர் கொடுக்கும் பறக்கும் முத்தம் அத்தனை பிரபலம்.

ஹரிதாஸ் தனது மனைவியின் பேச்சைக் கேட்டு அம்மா அப்பாவை வீட்டை விட்டு துரத்துகிறார் என்பதும், அதன்பிறகு தன்னைக் கட்டுப்படுத்த ஆள் இல்லாமல் ரம்பையுடன் வாழ்ந்து தனது சொத்துகளை அவள் பெயரில் எழுதிவைத்து நடுத்தெருவுக்கு வருகிறார் என்பதும் வரைக்குமான கதைக்கும் அதன் பிறகு வருகிற கதைக்கும் தொடர்பே இருக்காது. கதையின் பிற்பகுதிக்கான எந்தச் சாயலையும் கதையின் முற்பகுதி கொண்டிருப்பதில்லை. இது தான் இந்தப் படத்தின் முக்கிய அம்சம். தன்னை அடித்து விரட்டிய ஹரிதாஸின் மனைவி லக்ஷ்மியை பழிவாங்க ஆட்களை ஏவுகிறாள் ரம்பை. ஒரு பெண்ணை ஒரு பெண்ணே ஆள் விட்டு அடிக்க அனுப்பிய ஆதி காலப் படம் எனவும் சொல்லலாம்.

ஹரிதாஸ் ரம்பையிடம் தஞ்சமடைகிறான். மதுப்பழக்கத்துக்கு ஆளாகிறான. அங்கும் கூட ஹரிதாஸை மதுப்பழக்கத்துக்கு ஆளாக்க ரம்பை செய்வதை இப்போது பார்க்கையிலும் ஆச்சரியம் ஏற்படுகிறது. பின்னாட்களில் பல வணீகரீதியான படங்களில் வில்லனின் குழுவில் இருக்கும் பெண்களின் முன்மாதிரி இந்த ரம்பை தான். தான் முதலில் மது அருந்திவிட்டு இதுவா விஷம் என்கிறீர்கள்..தேவன் கொடுத்த அமிர்தமல்லவாஎன்று ரம்பை கொஞ்சலோடு  சொல்கிறபோது மறுபேச்சில்லாமல் வாங்கி அருந்துகிறான் ஹரிதாஸ். முடிந்தது கதை என்று பார்வையாளர்கள் உச் கொட்டியிருப்பார்கள். அப்படியான காட்சி இது.

படத்தின் இரண்டாம் பகுதி தான்ஸ்ரீ பக்த விஜயம்சாயல் கொண்டது. அப்போதைய படங்கள் புராண சாயல் கொண்டவையாக அமைய வேண்டும் என்கிற கட்டாயத்தினால் எடுக்கப்பட்ட காட்சிகளாக அமைந்திருக்கும். ஹரிதாஸ் ஒரு முனிவரையும் அவரால் சாப விமோசனம் பெற்ற மூன்று பெண்களையும் மட்டமாகப் பேசுகிறார். முனிவரிடம் கஞ்சா அடித்துவிட்டு போதையில் இருக்கும் நீ தியானம் செய்யும் முனிவரா..மூன்று பெண்களுடன் சல்லாபம் செய்வதற்குப் பெயர் சாப விமோசனமா என்று பேச முனிவர் கோபத்தில் ஹரிதாஸின் கால்களை துண்டித்துவிடுகிறார். பக்த விஜயக் கதைக்குள் செல்கிற காட்சி இது. ஹரிதாஸ் திருந்துகிறார். கிருஷ்ணர் காட்சி கொடுக்கிறார். லக்ஷ்மியோடும் அப்பா அம்மாவுடனும் ஹரிதாஸ் ஆன்மீக வாழ்க்கை வாழ்கிறார் என்பதாக அப்படம் முடிகிறது.

கிருஷ்ணரே தரிசனம் தந்தாலும் பெற்றோரின் சேவை தான் பெரிது என்கிறார் ஹரிதாஸ். இப்படியான மனமாற்றத்தை ஹரிதாஸ் அடைவதற்கு அவர் எப்படிப்பட்ட உல்லாசப் பேர்வழியாக இருக்க வேண்டும் என்பதையே  முதல் ஒன்றே கால் மணி நேரக் கதையும் பாடல்களும் சொல்கின்றன. மக்களும் அதற்காகவே திரும்பத் திரும்ப படத்தை ஓட வைத்தார்கள்.

வெறும் மனமாற்றம் பெறும் ஒருவராக ஹரிதாசைக் காட்டியிருந்தால் இத்தனை தூரம் படம் வெற்றி பெற்றிருக்கும் என்று சொல்ல முடியாது. எந்தக் கதையையும் சுவாரஸ்யம் குறையாத திரைக்கதை மூலம் சொல்லலாம் என்பதற்கு ஹரிதாஸ் சிறந்த உதாரணம்.

ஒவ்வொரு படத்திலும் இவர் கையாளும் திரைக்கதை அலாதியானது. ஒவ்வொரு காட்சியையும் ஆர்வமூட்டக்கூடிய வகையில் கொடுப்பதை இயல்பாகவே அவர் செய்திருக்கிறார்.

மகாதேவிபடத்தில் மகாதேவியாக சாவித்திரி நடித்திருப்பார். முதல் காட்சியில் சோழர்கள் ஒரு நாட்டினைக கைப்பற்றுகிறார்கள் என்பதாக தொடங்கும். வல்லபன் என்கிற கதாபாத்திரத்தில் எம்ஜிஆர் சோழ நாட்டின் சேனாதிபதியாக நடித்திருப்பார். கைப்பற்றப்பட்ட்ட நாட்டின் இளவரசி சாவித்திரி. சாவித்திரி வாள் சண்டை இடும் காட்சியில் தான் படம் தொடங்கும்.

பிறகு, மகாதேவியை யார் திருமணம் செய்வது என்று நடக்கும் போட்டியில் வல்லபன் வந்து கலந்து கொள்வதெல்லாம் அத்தனை சுவாரஸ்யமான திருப்பங்கள். இந்தப் படத்துக்கு வசனம் கண்ணதாசன். அப்போதைய அரசியலையும் இந்தப் படத்தையும் ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியாது. உங்கள் நாட்டின் வீரம் என்றோ செத்துவிட்டது. இந்த ஒருவரைத் தவிர  உங்கள் நாட்டில் வீரர்களே இல்லாதிருக்கும்போது இவருடைய வீரத்தில் நம்பிக்கையில்லாத நான் போட்டியிடுவதில் தவறென்ன? என்று சாவித்திரி கேட்பதும், அடுத்து யாரை நாட்டின் பாதுகாவலராகத் தேர்ந்தெடுக்கலாம் என்னுமிடத்தில் சின்னவர் மன்னவராக இருக்கலாம்.. என்று சபையினர் எம்ஜிஆரை முன்னிறுத்துவதும் திரைப்படம் நேரடியாகவும் மறைமுகமாகவும் அரசியல் பிராச்சாரத்தை முன்னெடுக்க முடியும் என்பதற்கான உதாரணங்கள். இந்தப் படம் முழுக்க ஆட்சி அதிகாரத்தில் விருப்பமேயில்லாத வல்லபனுக்குத் தான் பொறுப்புகள் தேடிவருகின்றன என்பது போன்றதான காட்சிகள் பல உண்டு

எந்தப் படத்தின் காட்சியும் ஒன்றரை நிமிடங்களுக்கு மேல் நீள்வதில்லை. அடுத்தடுத்து என்று சென்று கொண்டிருக்கும் காட்சிகள் இவரது திரைக்கதையின் பலம்.

எங்கே காட்சியைத் தொடங்கி முடிக்க வேண்டும் என்பதில் சுந்தர் ராவ் தெளிவாக இருந்திருக்கிறார். இதற்கு அவர் ஒரு எடிட்டர் என்பதும் ஒரு காரணம். சரியான இடத்தில்டிசால்வ்பயன்படுத்துவதும், எதைச் சொன்னால் போதுமானது என்பதிலும் அவர் காட்டிய விவேகம் இப்போதும் வியப்பளிக்கிறது.

அரசர் கால கதைகளாகஹரிதாஸ்’ ‘மகாதேவிபோன்றவற்றை இயக்குகிறபோது தேவைப்படும் இடத்தில் பிரம்மாண்ட காட்சியை வைக்கவும் இவர் தவறுவதில்லை. உதாரணமாக மகாதேவி படத்தில் தீர்த்த யாத்திரை செல்வதற்காக மன்னர்கள் கிளம்பும்போது பீரங்கி முழங்கி வழிநெடுக குதிரைகளும் மக்களும் நிற்கும் காட்சி. இதையாவது சிறிது நேரம் நீட்டித்திருப்பாரா என்றால், சில நொடிகள் மட்டுமே காட்டுகிறார். கதைக்கு எது தேவையோ அது மட்டுமே நமக்குக் காட்டப்படுகிறது.

அதே நேரம்கோடீஸ்வரன்படம் அதிகமும் வெளிப்புறக் காட்சிகள் இல்லாமல் எடுக்கப்பட்டவை. இரு வீடுகள் தான் படத்தின் மையம். இந்த இரண்டு வீடுகளின் பணக்கார ஏழ்மை நிலையைக் காட்ட அவர் மெனக்கிட்டிருக்கும் விதம் கவனிக்கத்தக்கது.

என் மனைவிபடத்தைப் பொறுத்தவரை வீட்டுக்குள் மட்டுமே எடுக்க முடியாத கதை. ஒரு மனிதரைத் தேடி சாரங்கபாணி கதாபாத்திரம் ஒரு நபரைத் தேடி அலைந்து கொண்டிருக்கும் கதாபாத்திரம். அதற்குத் தேவையான வெளிப்புறங்களையும் காட்டியிருக்கிறார். கோடம்பாக்கம் நகரத்தில் இருந்து ஒதுக்குப்புறமான இடம் என்று வயல்வெளிக்குள் காட்டப்பட்ட வீடு அப்போதைய சென்னையின் ஒரு காட்சி

என் மனைவிபடம் இவரது மற்றொரு மாஸ்டர்பீஸ். நான்கே கதாபாத்திரங்கள். அவர்களுக்கும் நடக்கும் கதை. நால்வரும் ஒருவரையொருவர் சந்தேகப்படுவார்கள். ஒருவரை ஒருவர் இன்னாரென்று தெரியாமல் தேடிக்கொண்டிருப்பார்கள்.

இந்தப் படத்தில் இரு பணிப்பெண்கள் பேசும் காட்சி வரும். தமிழ் சினிமாவில் எத்தனையோ காட்சிகள் வந்தபின்னும், இரண்டு பணிப்பெண்கள் அவரவர் எஜமானியைக் குறித்து அதி ஆர்வத்துடன் பேசுகிற காட்சி என்பது இதுவாகத் தான் இருக்கும். ஊஞ்சலில் உட்கார்ந்து அவர்கள் பேசுவதற்கு வைக்கப்பட்டிருந்த அந்த ஷாட்கச்சிதம்

இவரது பெண் கதாபாத்திரப் படைப்பு குறித்தும் சொல்லியே ஆக வேண்டும். அழுகை, விம்மல், சுய பச்சாதாபம் இவையெல்லாம் இல்லாத பாத்திர வடிவமைப்புகள். அத்தனை இயல்பு கொண்டவர்கள். சிறு செயற்கைத்தனமும் கொண்டிராதவர்கள்.

கோடீஸ்வரன்படத்தில் ஒரு காட்சியில் திருமணம் செய்து கொள்ள வேண்டி பெண் பார்க்க ஒரு மருத்துவர் வருவார். பெண்ணுக்கு நடக்கத் தெரியுமா? பாடத்தெரியுமா..ஆடத் தெரியுமா? என்றெல்லாம் கேட்டு சோதனை செய்தபின் எழுதப் படிக்க வருமா? என்பார். வருமே என்று அந்தப் பெண் மூன்று தடிமனான புத்தகங்களை எடுத்து வருவார்.

இதெல்லாம் வீட்ல இருக்கிற பொஸ்தகங்கள் போலருக்கு..உனக்கு எழுதப் படிக்க வருமான்னு கேட்டேன் என்பார்

இதையெல்லாம் நான் வாசிச்சிருக்கேன் என்பார் அந்தப் பெண்.

அந்த மருத்துவர் எனக்கு இதை எல்லாம் பார்த்தா கண்ணு வலிக்கும் என்று திருப்பிக் கொடுப்பார்.

இந்தப் படத்தில் நாயகியாக வரும் பத்மினி வருகிற காட்சிகளில் பலவற்றில் அவர் கையில் செய்தித்தாளோ, புத்தகங்களோ இருக்கும்.. கதாநாயகன் சிவாஜியோடு சமமாக பொருளாதாரம், சமூகம் என எல்லாவற்றையும் பேசுவார். ஒரு இடத்தில் கூட இவருடைய பெண் கதாபாத்திரங்கள் நாணிக் கோணி நின்றதே இல்லை. தடாலடியாகப் பேசும் பெண்கள் இவரது ஒவ்வொரு படத்திலும் உண்டு. அவர்கள் வரும் காட்சியெல்லாம் நன்றாகவும் ரசிக்கும்படியாகவும் அமைந்து விடுகிறது. இதை சுந்தர் ராவ் போகிறபோக்கில் செய்திருக்க முடியாது. திட்டமிட்டே வடிவமைத்திருக்கிறார். அவர் பார்த்த அல்லது விரும்புகிற பெண்களை மட்டுமே காட்சிப்படுத்தியிருக்கிறார் என்றுகூட எடுத்துக் கொளல்லாம்.

ஹரிதாஸ்மற்றும்என் மனைவிபடங்களில் ஒரு பெண்ணை மற்றொரு ஆணோ பெண்ணோ கோபத்தில் திட்டும் வசனங்கள் உண்டு. இன்று அந்த வசைகளை எல்லாம் படத்தில் வைக்கவே முடியாது. சென்சார் முதலில் கத்தரிக்கும், மட்டுமல்ல சொல்லத் தகுந்த வசைகளும் இல்லை அவை. அந்தக் காலத்தில் ஒரு பெண்ணைத் தரக்குறைவாக பேசுவதற்கு மிக சகஜமாக இது போன்ற வார்த்தைகளை எல்லோருமே பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது புரியவருகிறது.

பொதுவாக இவரது காலகட்டத்தில் வெளிவந்த படங்களில் கதாபாத்திரங்கள் உரையாடுகிறார்கள் என்றால், அநேகமும் நிற்பார்கள் பேசுவார்கள், நடப்பார்கள்..வெறும் உரையாடலுக்காகவே அந்தக் காட்சி அமைந்தது போல இருக்கும். இவரது ஒரு காட்சி கூட அப்படி இருப்பதில்லை. கதாபாத்திரங்கள் ஏதேனும் வேலை செய்து கொண்டோ அல்லது வேலைக்கு நடுவில் வந்து பேசுபவர்களாக இருப்பார்கள்.

சரியான ஒரு உதாரணம், ‘என் மனைவிபடத்தில் நாட்டு வைத்தியரான சாரங்கபாணி தன்னுடைய நோயாளி ஒருவருக்கு வீட்டின் ஒவ்வொரு இடத்திலும் போய் மருந்தினைக் கலக்கிக் கொண்டே தன் மனைவியின் குணங்களைப் பற்றிப் பேசுகிற நீளக் காட்சியை சொல்லலாம்.

ஒரு நடுத்தர வர்க்கத்து வீட்டின் பொருட்கள் அந்தக் கால கட்டத்தில் எப்படியெல்லாம் இருந்திருக்கும் என்பதற்கு இவரது படத்தினைப் பார்க்கலாம். வீட்டுக்குள் தான் காட்சி எடுக்கிறார் என்றால் வீட்டில் புழங்கும் பொருட்களைப்ராப்பர்ட்டியாகஇயல்பாக கதாபத்திரங்கள் பயன்படுத்துகிறார்கள். அதே போல ஒரு பொருளில் இருந்து ஒரு ஷாட் தொடங்குவதையும் தனது படங்களில் அவர் அதிகம் செய்து காட்டியிருக்கிறார். வசனங்களுக்கு இடையில் இடைவெளி இல்லாமல் தொடர்ந்து அடுத்தடுத்து பேசக்கூடிய பாணியை இவர் பின்பற்றியதும் கூட படத்தின் விறுவிறுப்பைக் கூட்டும் யுத்தியாக செய்திருக்கிறார்.

முழு நீளக் கதையில் முக்கியமாய் சொல்ல வேண்டிய கதைக்குள் நுழைவதற்கு அவர் நேரம் எடுத்துக் கொள்வதேயில்லை. கதாபாத்திரங்கள் யார் , பின்னணி என்ன, என்ன சிக்கல் நேரப்போகிறது யாரால் சிக்கல் வரப்போகிறது என்று சொல்வதற்கு மட்டும் சிக்கனமாய் சில காட்சிகள், பிறகு கதையின் மையத்துக்குள் போய்விடும் பாணி இவருடையது. இத்தனைக்கும் அதிக குழப்பமில்லாத ஒற்றை வாக்கியத்தில் சொல்ல முடிகிற வழக்கமான கதை தான் இவர் எடுத்தாண்டவை. ஆனால் சொன்ன விதத்தில் தான் பல இயக்குனர்களுக்கும் முன்னோடியாக இருந்திருக்கிறார். பெரிய நடிகரே நடித்தாலும் அவர்கள் எப்போது காட்சிக்குள் வர வேண்டுமோ அப்போது தான் வருவார்கள். மகாதேவியில் எம்ஜிஆர் முதல் ஷாட்டில் வருவார். அதன்பிறகு மீண்டும் பதினைத்து நிமிடங்களுக்குப் பிறகு தான் அவர் ‘ஹீரோ’ என்பதையே நமக்குக் காட்டுவர். ‘கோடீஸ்வரன்’ படத்திலும் சிவாஜிக்கு இதே போன்றதான பங்களிப்பு தான். அதுவரை கதையைத் தூக்கி நிறுத்துவது கதாநாயகிகளே. விதிவிலக்காக, ‘ஹரிதாஸ்’ படத்தில் கதை ஹரிதாஸைப் பற்றியது என்பதால் முதலில் இருந்து எம்.கே.டி காட்டப்படுகிறார்.

 இசைஞானமும் ரசனையும் கொண்டவர் என்பது இவரது படங்களின் பாடல்களில் வெளிப்பட்டிருக்கிறது. பாடகர்களைத் தொடர்ந்து நடிக்க வைத்தவர் என்று இவரைச் சொல்லலாம். சக்குபாய் படத்தில் ‘கன்னடத்து குயில்’ என்றழைக்கப்பட்ட அஸ்வத்தாமா, ஹரிகதா விற்பன்னரான பின்னி பாய் இருவரும் நடித்திருப்பார்கள். ஹரிதாஸ், வால்மீகி படத்திலும் ‘கிருஷ்ண விஜயம்’ படத்தில் நாரதராகவும் பாடகி வசந்தகோகிலம் நடித்திருக்கிறார். கிருஷ்ண விஜயத்தில் பாடகர் ஏ.எல் ராகவன் நடித்திருப்பார். இவர் இயக்கிய வால்மிகி எனும் படத்தில் ஹொன்னப்ப பாகவதர் நடித்திருந்தார்.

‘என் மனைவி’ , ‘கோடீஸ்வரன்’ போயிறு யதார்த்த வகைப் படங்களை மிக அருமையாகத் தந்த சுந்தர் ராவின் புகழ் ஹரிதாஸ் படத்தில் பல படிகள் ஏறியது. அதனால் தானோ என்னவோ வேலைக்கரி,. பராசக்தி போன்ற சமூகப் படங்கள் வெளிவந்த காலகட்டங்களிலும் இவர் இயக்கிய வால்மீகி, ஸ்ரீ கிருஷ்ணா விஜயம் போன்ற பக்தி படங்கள் சற்று வீழ்ச்சியை சந்தித்தன. ஒருவகையில் இப்படியான படமெடுக்கும் கட்டாயம் இவருக்கு உருவாக்கப்பட்டிருக்கலாம்.

சுந்தர் ராவ் நட்கர்ணியின் படங்கள் இன்று நமக்கு சில காணக் கிடைக்கின்றன. ஆனால் இவரைப் பற்றிய தனிப்பட்ட விவரங்களும் செய்திகளும் கிடைக்கப்பெறவில்லை. நாற்பது ஆண்டு கால திரைப்பட வாழ்க்கையில் மொத்தமே பதிமூன்று படங்கள் தான் இயக்கியிருக்கிறார்.

ஒரு தேர்ந்த தொழில்நுட்ப மேதையாகவும், கதை திரைக்கதை குறித்த தெளிவும் கொண்ட தமிழ் சினிமாவின் ஆளுமைமிக்க இயக்குநர் குறித்து தகவல்கள் எங்கும் கிடைக்கப்பெறவில்லை என்பது வருத்தமாகவே இருக்கிறது.

இயக்கம், படத்தொகுப்பு ஒளிப்பதிவு, சில விதிமுறைகளை தைரியமாக மீறியது என பலவற்றிற்கும் இவரை நினைவுகூரலாம் என்றாலும் பெண் கதாபாத்திர சித்தரிப்புக்கு இவர் கொடுத்த முக்கியத்துவத்திற்காக நினைவுகொள்வது இன்னும் பொருத்தமாக இருக்கும்.

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
ஜீவசுந்தரி
ஜீவசுந்தரி
1 year ago

வணக்கம் தீபா,
எப்போதும் போல் உங்கள் கட்டுரை சுருசுரு பட்டாசு ரகமாய் சிறப்பு. நான் ரசித்துப் படித்தேன்.

சட்டென்று கண்களுக்குத் தென்பட்ட பிழை என்றால், சுந்தர் ராவ் நட்கர்னியின் புகைப்படம். படத்தி இருப்பவர் நட்கர்னி அல்ல, கொத்தமங்கலம் சுப்பு. மாற்ற முடியும் என்றால் மாற்றி விடுங்கள்.

சாவித்திரி கண்ணன்
சாவித்திரி கண்ணன்
1 year ago

அரிய தகவல்கள்! ஹரிதாஸ், மகாதேவி படம் குறித்த விமர்சனங்கள் சுவாரஸ்யம். சுந்தர்ராவ் நட்கர்ணி நினைவு கூறப்பட வேண்டியவரே!