‘ஆண்பாவம்’ படத்தை, முதலில் எப்போது பார்த்தேன் என்பது எனக்கு நினைவில்லை. இது பற்றி எனக்குக் குறையொன்றுமில்லை. பிடித்த பலவற்றின் தொடக்கமும் நமக்கு நினைவில் இருப்பதில்லை. ஆனால் வாசுதேவநல்லூர் ராமகிருஷ்ணா டாக்கீஸில் தான் முதன்முதலில் பார்த்தேன் என உறுதியாகச் சொல்ல முடியும். முப்பத்திஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் வளர்ந்த ஊர் அது. அங்கிருக்கும் ரசிகர்களின் ஒரே கனவுப்பெட்டி ‘ராமகிருஷ்ணா’ தான். இந்தப் படம் பார்த்தபோது புரண்டு விழுந்து சிரித்திருப்பேன் என்றும் சொல்ல முடியும். மூன்று வயது குழந்தைக்கும் சிரிப்பதற்கு அந்தப்படத்தில் காட்சியிருந்தது. சமீபத்தில் மீண்டும் பார்க்கையிலும் சிரிக்க முடிந்தது. நாற்பது வயதுக்குமான காட்சிகளும் உண்டு.
சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் ‘வாசகசாலை திரைக்களம்’ நண்பர்கள் ‘ஆண்பாவம்’ படத்தினைப் பற்றிய கூட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த நிகழ்ச்சியில் ஒரு பேச்சாளராக சென்றிருந்தேன். இயக்குநர் திரு. பாண்டியராஜனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியில் பேசவிருக்கிறேன் என்றதும் என்னுடைய நண்பர்கள் வாட்ஸ்ஆப்பில் அந்தப் படத்தின் வசனங்களை பதிவிட ஆரம்பித்துவிட்டனர். இவர்கள் யாவரும் அந்தப் படத்தினை முந்தைய நொடி தான் பார்த்து முடித்து விட்டு வந்தவர்கள் அல்ல. தங்களது நினைவில் இருந்து அப்படியே வசனங்களைத் தந்தார்கள். எனில் அந்தப் படத்தின் பாதிப்பை இப்போது நினைத்தாலும் வியக்காமல் கடக்க முடியவில்லை.
பொதுவாய் உலகத் திரைப்படங்கள் பற்றிய அதீதக் கற்பனை நம்மிடத்தில் நிலைபெற்றிருக்கிறது. எந்தப் படமானது அந்த நாட்டினையும், மக்களையும் பற்றி இயல்பாக பேசுகிறதோ, காட்டுகிறதோ , ஆன்மாவைத் தொடுகிறதோ அதுவே சிறந்த திரைப்படம். எனக்கு ‘ஆண்பாவம்’ அப்படியான ஒரு திரைப்படமாகத் தான் தெரிகிறது.
ஒரு கொண்டாட்டத்துக்கு நம்மை அழைத்து செல்கிறத் திரைப்படம் இது. ஆனால் இதற்குத் தான் மெனக்கிடல் தேவை. ‘மாயாவி’ படத்தில் ஒரு வசனம் வரும், ‘நானெல்லாம் சிம்ரன் போஸ்டரையே மூணு மணி நேரம் பாப்பேன்’ என்று. அது போல இந்தப் படத்தைப் பார்க்கவே வேண்டாம்,படத்தின் பெயரைச் சொல்வதே போதுமானது, உற்சாகம் காட்டுகிற ரசிகர்கள் இப்போதும் உண்டென்பதாலேயே வருடங்கள் கழிந்தும் நாம் இது பற்றி உரையாடிக் கொண்டிருக்கிறோம்.
தமிழின் முதல் முழு நீள நகைச்சுவைப் படமென்பது ‘சபாபதி’. இதை A.T கிருஷ்ணஸ்வாமி என்பவருடன் இணைந்து இயக்கியவர் திரு. மெய்யப்ப செட்டியார் அவர்கள். அதன்பின் சில படங்கள் அவ்வப்போது வந்தாலும் எண்பதுகளில் நகைச்சுவைப் படமென்பதின் உச்சத்தைத் தொட்ட ஒன்று என்றால் அது ‘ஆண் பாவமே’. சொல்லப்போனால் இது நகைச்சுவைப் படம் என்று முத்திரை குத்துவதில் கூட எனக்கு உடன்பாடில்லை தான். ஓர் இயல்பான கிராமத்து வாழ்க்கையை, மனிதர்களைப் பற்றிப் பேசுகிற படம். மனிதர்கள் எனும்போது நகைச்சுவை உணர்வைத் தனியாகத் தூரப்போடவா முடியும்?
ஆண்பாவம் வெளியான 1985ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் ஒருபக்கம் தனக்கேற்ற, ஏற்கத்தகாத கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்தார். பாண்டியராஜனின் இயக்கத்தில் முதல் படமான ‘கன்னி ராசி’ வெற்றிப் படமாக கொண்டாடப்பட்டிருந்தது. பிரபு அதற்கு முன்புவரை அதிகமாக அவருடைய அப்பாவோடு இணைந்தே படங்களில் நடித்திருந்தார். தனி நாயகனாக ‘கன்னி ராசி’யில் வெற்றி கண்டிருந்தார். கமல்ஹாசன் காதல் நாயகனாகத் தன்னை நிறுவிக் கொண்டுவிட்டார். ரஜினிகாந்த்தின் நூறாவது படமான ‘ஸ்ரீ ராகவேந்தரர்’ வெளிவந்த வருடம் அது. விஜயகாந்த் புரட்சி பேசும் கதாபாத்திரங்களை அதிகமாக ஏற்றுக் கொண்டிருந்த வருடமும் இது தான். மோகனின் படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டிருந்தன.
ஒருபுறம் ‘தப்புசெஞ்சா சாமி கண்ணைக் குத்தும்’ என்கிற மாதிரியான பக்திப் படங்கள், திகில் மற்றும் துப்பறியும் படங்களின் வரவு எனக் கலவையான படங்கள் திரையரங்கை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன.
இந்தச் சமயத்தில் வெளிவருகிறது ‘ஆண்பாவம்’. கதாநாயகனுக்குரிய எந்தவொரு பிம்பமும் பிரத்யேகமாகக் கொண்டிராத பாண்டியராஜன் என்கிற ஒருவர் நடித்து இயக்குகிறார். ஒரு கிண்டல்பாவத்தோடு தான் ரசிகர்கள் தன்னை அணுகுவார்கள் என்று பாண்டியராஜனுக்குத் தெரியும். தான் கதையின் நாயகனில் ஒருவர் என்றதும் அவருடைய உதவியாளர்கள் காட்டிய தயக்கத்தையும், ஏமாற்றத்தையும் உள்வாங்கியவர். வேறு வழியில்லாமலேயே தான் கதாநாயகனாக நடிக்க வேண்டியிருந்ததை அவர் நேர்மறையாக மாற்றுகிறார். இது நிச்சயம் அவருடைய குருநாதரான இயக்குநர் பாக்யராஜிடம் கற்றுக் கொண்ட ஒரு பாடமாக இருந்திருக்கும். பாக்யராஜ் தன்னுடைய நாயகப் பாத்திரத்தை எப்போதும் கச்சிதமாக வடிவமைப்பவர். தன்னுடைய பலம், பலவீனம் அறிந்து சுயபகடி செய்து கொள்பவர்.
இது ஆண்பாவம் படத்தில் பாண்டியராஜனுக்கு கை கொடுத்திருந்தது. ‘ஏம்மா..நான் அப்பவே சொல்லல..தம்பி முழி தான் அப்படியே தவிர மனசு அப்படி இருக்காதுன்னு” என்று தன் உருவத்தைப் பற்றி ரசிகர்கள் என்ன எண்ணக்கூடும் என்பதையும் யோசித்து கதாபாத்திரங்கள் மூலமாக அதை வெளிப்படுத்திய விதம் புத்திசாலித்தனமானது. அதனால் தான் படம் பார்க்கும் அனைவருமே பாண்டியராஜன் என்கிற நடிகன் மறைந்து போய் தங்களுடைய சுட்டித்தனமான இளைய மகனையும், அண்ணன்களுக்குத் தங்களது தம்பியையும், இந்த குணச்சாயல் கொண்ட நண்பனையும், தங்களையும் திரையில் கண்டனர்.
தமிழ் சினிமாவின் ஒவ்வொரு திரைப்பட கலந்துரையாடல்களின் போதும் ‘ஆண்பாவம்’ படம் ஏதேனும் ஒருவகையில் தன்னுடைய இருப்பை உறுதியாக்கிக் கொண்டே வருகிறது. ஒரு கதாபாத்திரத்தை எப்படி அறிமுகம் செய்கிறோம் என்பது முக்கியம். எப்படி ஒருவர் இந்தப் படத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறாரோ அதே ‘லயத்தை’ படத்தின் இறுதி வரை கொண்டு சேர்த்திருப்பது மிக முக்கியமானது.
வி.கே ராமசாமியின் அறிமுகம் என்பது மிக இயல்பாகக் கையாளப்பட்ட ஒன்று. ஊருக்கு நன்மை செய்கிற ஒரு பெரிய மனுஷன். மனைவியை இழந்தவர். வாழ்க்கையை அதன்போக்கில் எடுத்துக் கொள்பவர். இரண்டு மகன்களின் கள்ளத்தனங்களையும் தெரிந்து கொண்டவர்.
‘ஒரு கோயில் கட்டினேன், நீங்க யாரும் சாமி கும்பிட வரல, பள்ளிக்கூடத்தைக் கட்டினேன் நீங்க யாரும் படிக்க வரல, குளத்தை வெட்டினேன் நீங்க யாரும் குளிக்கவே வரல..ஆனா சினிமா கொட்டகையைக் கட்டினேன் கொட்டுமேளத்தோட என்னை வரவேற்கறீங்க”..’ என்று மிக இயல்பாய் கதைக்குள் வருகிறார். இவர் மூலமாய் இரண்டு கதாநாயகர்களின் அறிமுகம் காட்சியின் முடிவில் தொடங்குகிறது. ‘அண்டர்வேருக்காக அடித்துக் கொள்ளும் கதாநாயகர்களை அதற்கு முன்பு நிச்சயம் தமிழ் சினிமா பார்த்ததில்லை. பிறகும் கூட. இந்தக் காட்சியில் ரசிகர்கள் நிமிர்த்து உட்கார்ந்திருப்பார்கள். நமக்கு இந்தப் படம் நிச்சயம் பிடிக்கப் போகிறது என உற்சாகமடைந்திருப்பர்கள். ஏனெனில் முதல் நாள் பார்வையாளர்கள் எல்லோருமே பக்கத்துத் திரையரங்குகளில் ரஜினி படத்திற்கு டிக்கெட் கிடைக்காமல் ‘ஆண்பாவத்திற்குள்’ நுழைந்தவர்கள்.
சீதா என்கிற கதை நாயகியின் அறிமுகம் கோயிலில் அமைந்திருக்கும். இந்தப் படத்தின் சீதாவை நினைவுபடுத்திக் கொள்ளும்போதெல்லாம் அர்ச்சனைக் கூடையுடனோ குடத்துடனோ தான் நினைவு கொள்ள முடியும். கோயிலுக்கோ, ஆத்தங்கரைக்கோ மட்டுமே வெளியில் அனுப்பப்படும் ஒரு பெண் பாத்திரம் சீதாவுக்கு.
இந்தப் படம் வெளிவந்த காலகட்டத்தில் தமிழ், மலையாளத்தில் ரேவதி முன்னணி நடிகை. அவருக்கென தனித்த ரசிகர் கூட்டம் உண்டு. ரேவதியுடன் நட்பாய்ப் பழகியிருக்கிறேன். சில சந்தர்ப்பங்களில் மணிக்கணக்காகப் பேசியிருக்கிறோம். ‘நான் உங்கள் ரசிகை’ என்று சொல்வதற்கு நினைத்து அதற்கான சந்தர்ப்பம் வாய்த்தபோதும் சொல்லாமல் தயங்கியிருக்கிறேன். ஒருநேரத்தில் ஒரு உற்சாகமான உரையாடலின்போது, “உங்களது படங்களில் கிலுக்கம் (மலையாளம்), புன்னகை மன்னன், ஆண்பாவம் இவை மூன்றையும் அதிகம் ரசித்திருக்கிறேன் என்று சொன்னேன். மெலிதான் புன்னகையோடு சொன்னார், ‘I Know’. பலர் இதற்கு முன்பு அவரிடம் இதைச் சொல்லியிருப்பார்கள் என்று நான் யூகித்தேன். சில வினாடிகள் கழித்து நினைவில் இருந்து மீண்டவராய் சொன்னார், ‘ஆண்பாவம் எனக்கும் ரொம்பப் பிடித்தப் படம்’.
ரேவதி மாதிரியான ஒரு நடிகையைக் கதாநாயகியாக வைத்து எடுக்கப்பட்ட படத்தில் பாண்டியராஜன் எடுத்த ‘ரிஸ்க்’ பெரியது. பிரபலமான ஒரே நடிகை படத்தில் அவர் மட்டுமே. சீதா புதுமுகம், பாண்டியன் வளர்ந்து வருகிற ஒரு நடிகர். பாண்டியராஜனுக்கோ நடிகராக முதல் படம், கொல்லங்குடி கருப்பாயி என்கிற பாட்டி ஒரு முக்கியக் கதாபாத்திரம். இவர்களுக்கிடையில் ரேவதி தான் ரசிகர்களின் ஒரே தெரிந்த முகமாய் இருந்திருப்பார். அவரையும் படத்தின் பாதியில் வாய் பேச முடியாமல் ஆக்கியதோடு, படம் தொடங்கி ஒரு மணி நேரம் பதினேழு நிமிடங்கள் கழித்தே நமக்குக் காட்டுவது என்பதெல்லாம் திரைக்கதையில் மேல் இயக்குநர் கொண்ட அபார நம்பிக்கை மட்டும் தான். மொத்தமாக ஐந்து நாட்கள் மட்டுமே நடித்துக் கொடுத்த ஒரு படம் ரேவதியின் திரைப்பட வரிசைகளில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளது.
படத்தின் கதைக்கு நமக்குக் கிடைத்த கதாநாயகன் வி.கே ராமாசாமி. மிக இளைய வயதிலேயே வயதான கதாபாத்திரத்தில் நடிக்கத் தொடங்கியவர். அதே நேரம் வயதானவர்களுக்கான உடல்மொழியை வலிந்து உடலுக்குத் தந்திடாதவர். சுற்றிலும் எத்தனை நடிகர் திலகங்களும், புரட்சிக் கலைஞர்களும் இருந்தபோதும் தனது பாத்திரத்தை உணர்ந்து நடிக்கக் கூடிய நடிகர்களுள் அபூர்வமானவர். இந்தப் படத்தைப் பொறுத்தவரை இவரின் இருப்பே படத்துக்கு மாபெரும் பலம். “எங்க வீட்டுலேயும் தேதி காட்டற காலண்டர் இருக்கு..அதுல மகாலட்சுமி ஃபோட்டோவைக் காட்டி..இப்படித் தான்டா இருக்கும் பொண்ணுன்னு சொல்லிடறேன்” என்று தனது வருங்கால சம்பந்தி பூர்ணம் விஸ்வநாதனிடம் சொல்லும் இவர் மனதில் ரேவதி கதாபத்திரம் எதோ ஒரு வகையில் தெய்வீகமாய் பதிந்து போயிருக்க வேண்டும். தலையில் அடிபட்டு பேச முடியாமல் போயிருக்கும் ரேவதியை மருத்துவமனையில் சந்திக்க வரும்போதும் அதையே தான் சொல்லுவார். “எங்க வீட்டுலேயும் சாமி படங்க இருக்கு..எந்த சாமியும் பேசாது. அதுக்காக அதையெல்லாம் வெளில தூக்கியா போட்டுட்டோம்” எத்தனை வலுவான. இயல்பான வசனங்கள்!!
ரேவதி கிணற்றில் விழுந்து அடிபட்டு கிடப்பதும் அவரைத் திருமணம் செய்து கொள்ள முடியாமல் பெரிய பாண்டி வேறு பெண்ணை நேசிப்பதும் சோகக் காட்சிகளுக்கான அத்தனை சாத்தியங்களையும் கொண்டது. ஆனால் யாரும் கதறி அழுது தங்கள் சோகங்களைப் பகிர மாட்டார்கள். எத்தனை துயரமான காட்சியிலும் நம்மை ரசிக்க வைத்துவிடும் எதோ ஒன்று இருக்கும். ரேவதிக்கு நர்ஸ் ஊசி போடும்போது கருப்பாயி பாட்டி ஓட்டைக் கண் வழியாகப் பார்க்கும் பார்வை போல..
நகைச்சுவைக்காக தனி ட்ராக் என்பதாக இல்லாமல் அதற்காக காட்சிகள் உருவாக்காமல் அவரவர் இயல்பில் கதாபாத்திரங்கள் பேசும் படங்கள் தமிழில் மிக சொற்பம். அதுவும் முக்கியமாக பெண்களை இழிவுபடுத்தாத, மாற்றுத் திறனாளிகளையும் திருநங்கைகளையும், சாதிகளையும் கீழ்மைப்படுத்தி சிரிக்க வைக்காத ஒரு படம் என்கிறபோது நூற்றாண்டுகள் கடந்தும் மீண்டும் மீண்டும் பேசப்பட்டுக் கொண்டே இருக்கும்.
நகைச்சுவை என்ற பெயரில் வருகிற சில தமிழ்த் திரைப்படங்களில் படம் பார்க்கும்போது கேட்டு சிரிக்கிறோம், திரையரங்கை விட்டு வெளியேறும்போதே நினைவுபடுத்தி ரசிப்பதற்கான எந்தவொரு சாத்தியத்தையும் அந்தப் படங்கள் தருவதில்லை. ‘ஒன்லைனர் காமெடியை’ மட்டுமே நம்பி காட்சிகளை தொடங்கவோ முடிக்கவோ கொண்ட படங்கள் காலத்தால் பின்தள்ளப்படும்.
ஆண்பாவம் முக்கியப்படுவது இங்கே தான். இந்தப் படத்தின் வசனங்களைத் தனியாக சொல்லிப் பார்த்தோமானால் அதில் ஒரு சுவாரஸ்யமும் இருக்காது,
““அரசப்பட்டியில போய் இறங்கு, அங்க ஒரு கிணறு இருக்கும் அதுல குதி”
“நீ மட்டும் எங்கம்மாவைக் கட்டிக்கலாம்..நான் உங்கம்மாவைக் கட்டிக்க கூடாதா?“
“இப்ப முட்டிருச்சு”
“நீ ஏண்டா என் தெரு வழியா போன?”
“இவனை ஒரு வினோபா மாதிரி, வள்ளலார் மாதிரி, விவேகானந்தர் மாதிரி ஆக்கப்போறேன்” “
“புலித்தோலு”
“ஆண்டிப்பட்டினா உனக்கு லேசா இருக்கா..அங்க உள்ள பொண்ணுங்க எல்லாம் இலட்சனமா இருப்பாங்க”
“தாலி ரெண்டா வாங்கிடட்டுமா..?”
“கம்பியை இந்தக்காதுல விட்டு அந்தக் காது வழியால்ல எடுத்தாங்க”
“பதினெட்டு ரூபா கரெக்டா குடுத்துடாதீங்க..பஸ்சில எல்லாம் போயிருக்கேன் இரண்டு ரூவா சேத்து கொடுங்க”
//“அண்ணா..வாங்க…வாங்க..விளையாடலாமா?..
“யார் கூட?”
“நம்ம ஆண்டாள் கூடத் தான்..”
“கொடுத்து வச்சவன்டா”//
இப்படி தனித்தனியாய் வசனங்களை யாரிடமாவது சொல்லிப் பாருங்கள். சிரிக்க மாட்டார்கள். ‘ஆண்பாவம் படம் பார்த்தவர்கள் உடனடி வெடிச்சிரிப்பைத் தருவார்கள். அவர்கள் இந்த வசனங்ளை காட்சியின் பின்னணியோடு சேர்த்தே புரிந்து கொள்வார்கள். இப்படி கதையின் அங்கமாக நகைச்சுவை இழையோடிய ஒரு படத்தின் முக்கிய உதாரணமாய் ஆண்பாவம் வெகு வருடங்களுக்கு அமையப்போகிறது. மிக விரிவான தளத்தில் இந்தப் படம் குறித்துப் பேசிக் கொண்டே போகலாம். இந்தப் படத்தின் இசையைப் பற்றி மட்டும் மணிக்கணக்காக சிலாகிக்கலாம். சின்ன பாண்டியும் பெரிய பாண்டியும் காரில் வருபவரோடு மல்லுகட்டும் காட்சியில் பின்னணி இசை சண்டைக்கானதல்ல , அது ஒரு கொண்டாட்டத்திற்கான இசை.
கருக்கல்லின் சலனமற்ற நதியை கையறுநிலையின் வடிவமாகக் காட்டமுடியும் என்பதை ஒளிப்பதிவாளர் அசோக்குமார் உணர்ந்திருந்தார். அசோக்குமாரும் இளையராஜாவும் ‘ஆண்பாவம்’ படத்தின் மற்றவிரண்டு கர்த்தாக்கள். ஒவ்வொரு முறையும் சீதா தண்ணீர் எடுக்க வரும்போது ஒலிக்கிற அந்தப் பின்னணி இசை, விட்டு விட்டு ஒலிக்கிற புல்லாங்குழல்..எத்தனை தூரத்திலிருந்து கேட்டாலும், ஒரு பெண்ணின் காத்திருப்பை, ஏக்கத்தை சொல்லி விடக்கூடியது.
முப்பத்திஎட்டு வருடங்கள் –தலைமுறைகள் கடந்த பின்னும் நம்மை உரையாட வைக்க முடிகிறதென்றால் அடுத்தடுத்த சந்ததியினரையும் ரசிக்க வைப்பதில் ‘ஆண்பாவம்’ பின்னடையவா போகிறது?