உனக்கு என்ன ஆனது , மிஸ் சிமோன்?

0
301

நினா சிமோன். அறிந்து கொள்ளப்பட வேண்டிய வாழ்க்கை இவருடையது. சமூகத்தின் தாக்கத்தால் தனிப்பட்ட வாழ்க்கையினைத் தொலைத்துத் தேடிக் கண்டடைந்த வரலாறு இவருடைய வாழ்க்கை. நினா சிமோன் முதல் கறுப்பின செவ்வியல் பியானோ கலைஞராக அறியப்படுகிறார். ஆழமான , ஜீவனுள்ள குரல் கொண்டவர். எளிமையும் ஆழமும் கொண்ட பாடல்களை எழுதி இசையமைத்தவர். இந்தத் திறமைகளோடு அவர் எல்லோராலும் கொடாண்டப்படும் ஒரு வாழ்க்கையினை வாழ்ந்திருக்க முடியும். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. 1960களின் தொடக்கத்தில் அமெரிக்க ஐக்கிய மாகாணங்களில் கறுப்பினத்தவருக்கு எதிரான எந்த செயலுக்கும் அவர் எதிர்வினை ஆற்றினார். விளைவாக, புறக்கணிக்கப்பட்டார்.

புறக்கணிக்கப்பட்டதின் வலியினை அவரால் தாங்கிக் கொள்ள இயலாமல் போனது. தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை அவர் அதே நேரம் வெறுத்துக் கொண்டிருந்தார். ஒருநாள் எல்லோருடைய கண்பார்வையில் இருந்தும் காணாமல் போனார். அப்படி ஒரேடியாக மறைந்திருந்தால் இன்று அவர் குறித்து பேசியிருக்க மாட்டோம். அவர் மீண்டார். எழுபதாவது வயதில் இறக்கும் வரை அந்தப் பறவை மீண்டும் மீண்டும் தன்னை உயிர்த்தெழ வைத்து பாடிக்கொண்டே இருந்தது.

சிமோன் தான் நினைத்த வாழ்க்கைக்காக தன்னை உருமாற்றிக்கொண்டே இருந்தார். மனமும், சொல்லும் செயலும் ஒன்றாகவே ஆகியிருந்தார். இவரின் இந்த நேர்மை அவர் வாழ்ந்த காலத்தில் புரிந்து கொள்ளப்படவில்லை. கடினமான ஒரு ஆளுமையாகவே கணிக்கப்பட்டிருந்தார். 2015ஆம் ஆண்டு அவர் குறித்த ஆவணப்படத்தினை லிஸ் கர்பன் என்பவர் எடுத்த பிறகு உலகம் மீண்டும் அவரைக் கொண்டாடத் தொடங்கியது. குறிப்பாக பெண்கள் அவருடைய மனதை ஆழமாகக் கண்டறிந்தனர். தங்களோடு பொருத்திக் கொண்டனர். அவர் பிறந்தது 1933 ஆம் ஆண்டு. 90 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது பிறவிப்பயனைக் குறித்து பேசத்தொடங்கியிருக்கிறார்கள். அதற்கு சரியான காரணமாக அமைந்திருக்கிறது இந்த what happened , Miss Simome? ஆவணப்படம்.

ஆவணப்படத்தின் தொடக்கத்தில் மாயா ஏஞ்ஜலோ சிமோனுக்காக எழுதிய குறிப்பு காட்டப்படுகிறது. 

“மிஸ். சிமோன், நீ வழிபடப்பட்டாய், இப்போது கூட கோடிக்கணக்கானவர் உன்னை நேசிக்கிறார்கள். ஆனால், உனக்கு என்ன ஆனது , மிஸ் சிமோன்?”

மாயா ஏஞ்சலோவின் இந்த கேள்வியைத் தாங்கித் தான் தான் ஆவணப்படத்தின் தலைப்பு நிற்கிறது. நினா சிமோனைப் பற்றித் தெரிந்து கொள்ளுதல் என்பது தனிப்பட்ட மனுஷியின் வாழ்க்கையையோ, ஒரு பாடகியின் பயணமோ, முதல் கறுப்பின செவ்வியல் பியானோ கலைஞர் குறித்தோ மாத்திரமல்ல, அவரது வாழ்க்கை என்பது பொது வாழ்க்கையின் அழுத்தங்களால் எப்படி திசை மாறியது என்பதையும் சேர்த்தது தான். அப்போதைய அமெரிக்காவில் அடிமைத்தனத்துக்காக குரல் கொடுத்த ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட வாழ்க்கையும் பொது வாழ்க்கையும் ஒன்றின் மீது ஒன்றாய் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தது. அதன் சாட்சியாக இருந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையே இந்த ஆவணப்படம்.

ஆவணப்படத்தின் தொடக்கத்தில் நினா சிமோன் ஒரு மேடையில் வந்து நிற்கிறார். கூட்டம் கைத்தட்டுகிறது. அதை ஏற்றுக்கொள்ளும் விதமாக அப்படியே குனிந்து நிற்கிறார். பின்னர் நிமிர்ந்து கூட்டத்தினைப் பார்க்கிறார், சுற்றிலும் பார்க்கிறார். சிமோன் முகத்தில் நம்பமுடியாத, அதே நேரம் அமைதியான ஒரு பாவனை தெரிகிறது. மீண்டும் மீண்டும் எதுவும் தோன்றாமல் கூட்டத்தையே பார்க்கிறார். கூட்டம் கைத்தட்டலை விட்டு அவரைப் பார்க்கிறது. அரங்கம் முழுவதும் அந்த அமைதி. கைவிடப்பட்டு மீண்டு வந்த ஒரு குழந்தை போல் சுற்றிலும் பார்க்கிறார். பின்னர் மெதுவாக கைத்தட்டல் மீண்டும் எழுந்து அரங்கம் ஆர்ப்பரிக்கிறது. இது அவரது நிகழ்ச்சியின் ஆவணக்காப்பகத்தில் இருந்து நமக்குத் தரப்பட்ட காட்சிப்பதிவு. ஏன் இத்தனை நெகிழ்ந்து போனார் சிமோன்? அது ஆறு வருடங்களுக்குப் பிறகு அவர் மேடையில் மீண்டும் தோன்றும் நிகழ்ச்சி…

இந்த ஆறு வருட காலங்கள் அவர் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதும், அந்த ஆறு வருட இடைவெளிக்கான காரணமும் ஆவணப்படத்தில் சொல்லப்படுகிறது. நினா பிறந்தபோது கறுப்பின மக்கள் ஒரு இருண்ட குகை போன்ற பொந்துகளில் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கென திறமையும், வாழ்க்கையும் உள்ளன என்பதை அரசும், சமூகமும் மறுத்து வந்தன. சிமோனின் அம்மா தேவாலயம் ஒன்றில் பாதிரியாக இருந்தார். அவர் தன்னுடன் எப்போதும் சிமோனை அழைத்து செல்வது வழக்கம். தேவாலயத்தில் தான் முதன்முறையாக பியானோவைப் பார்க்கிறார் சிமோன். தெரிந்த சிலரிடம் அடிப்படையைக் கற்றுக்கொள்கிறார். வெளியில் விளையாட முடியாமல் அம்மாவுடன் எப்போதும் தேவாலயத்தின் கூடங்களில் அமர்ந்தபடி இருந்த சிமோனின் மொத்த உலகமும் பியானோவாகிப் போகிறது. தானே மனதில் தோன்றியதை வாசிக்கிறார். அது அவர் கைவிட்டுக்கொண்டிருந்த குழந்தைமையின் மொழியாகிறது. உள்ளே ஆழ்மனதில் துண்டுதுண்டாய் சிதறுகிற கற்பனைகளும், ஏக்கங்களும் இசையாக மாறின. அவர் விரல்கள் பூக்களின் தாவும் பட்டாம்பூச்சி போல இயல்பாய்த் தாவின.

இயல்பிலேயே இசையின் மீது கொண்ட பேரார்வத்தால் அவர் வாழ்ந்த தென் கரோலினா பகுதியில் பிரபலமடைகிறார். இதெல்லாம் நிகழும்போது அவருக்கு வயது ஆறு.  வீதிகளில் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்க, சிமோன் தேவனின் நன்மைக்காக பியானோ இசைத்துக் கொண்டிருந்தாள். அதை மீறி விளையாட வரும் நாட்களில் அவளைப் பாடச்சொல்லி, மற்ற குழந்தைகள் ஆடினார்கள். இனி தன் வாழ்க்கை முழுக்க இப்படித் தான் என்பது சிமோனுக்கு புரிய ஆரம்பித்திருக்கவில்லை.

இவரின் இசை ஆர்வத்தைப் பார்க்கும் ஒரு பெண்மணி சிமோனுக்கு தான் முறையான இசைப்பயிற்சி அளிப்பதாக சொல்கிறார். அவர் வெள்ளை இனப் பெண்மணி. முதன்முதலாக சிமோனின் திறமையைப் பற்றிக் கேள்விப்பட்டு அவர் அந்தத் தேவாலயத்துக்கு வரும்போது சிமோனின் அம்மாவும், அப்பாவும் தேவலாயத்தின் வாசலில் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களும் சரிக்கு சமமாய் முதல் வரிசையில் அமர்ந்தால் மட்டுமே நான் பியானோ இசைப்பேன் என்று கைகளை கட்டிக் கொண்டு உறுதியாக அமர்ந்து விடுகிறாள் சிமோன். அவள் உறுதி வென்றது.

அதன் பின்பு ஒவ்வொரு நாளும் நீண்ட தண்டவாளப் பாதையில் தனியொரு சிறுமியாக நடந்து சென்று இசையினைக் கற்கிறாள் சிமோன். அந்தப் பாதையைக் காட்டிலும் அவளை அச்சுறுத்தியது, எதிரில் வெள்ளையினத்தைச் சேர்ந்த எவரேனும் வந்துவிட்டால் என்ன செய்வது என்பது தான. ஏனெனில் கறுப்பின மக்கள் தங்குவதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் இருந்து வெளியே வந்து உலாவுவதே பெருங்குற்றமாக நினைக்கப்பட்டிருந்த காலகட்டம் அது. சிமோனுக்கு கற்றுத் தந்த இசை ஆசிரியரின் நிறமும், அவரது அடக்கமான சொற்களும் சிமோனுக்குள் ஒரு அந்நியத்தன்மையை கொடுத்தன. எந்த நேரமும் பயந்து கொண்டே கற்க வேண்டியிருந்ததாகஅந்தப் படத்தில் சொல்கிறார். பயமென்பது எப்போது வேண்டுமானாலும் நிராகரிக்கப்பட்டு விடுவோமோ என்பதாக இருந்திருக்கிறது.

ஓரளவுக்கு மேல் இசை கற்றுக்கொள்ள வேண்டுமெனில் இசைக்க்ல்லூரியில் சேர வேண்டும். ஆனால் சிமோனை யாரும் சேர்த்துக் கொள்ளவில்லை. அவருக்குத் தெரிந்து போனது, நம்முடைய இனம் தான் அதற்கு காரணம் என்று. யாருடைய பயிற்சியும் இனி தேவையில்ல, ஆன்மாவின் மொழிக்கு எதற்கு மற்றவரின் உதவி என அவரே இசையமைத்தார். மெதுவாக அவரது இசை பரவுகிறது.

இப்போது அவருக்கு ஆண்டி என்பவருடன் திருமணமாகிறது. ஆண்டி அமெரிக்கர். போலிஸ் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர். சிமோனின் திறமைக்கு அவரை முறையாக வழிநடத்தினால் பெரும் உச்சத்துக்கு போவார் என்பத கணித்தார். சிமோனைத் திருமணம் செய்து கொண்டதும் தனது வேலையை விட்டார். சிமோனுக்கு மேலாளர் ஆனார். அவர் தான் சிமோனின் மேடை நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். பணம் சேரத் தொடங்கியது. ஒரு பண்ணை வீட்டினை வாங்கினார்கள். அங்கு ஒரு பெண் குழந்தையும் பிறக்கிறது. “எனக்கு பெண் குழந்தை பிறந்த அடுத்த மூன்று மணிநேரங்கள் தான் வாழ்க்கையின் மிக அமைதியான, மகிழ்ச்சியான தருணத்தில் இருந்தேன்” என்கிறார் சிமோன்.

 இப்படியே அவர் வாழ்ந்திருக்கலாம். பணம், புகழ், சுற்றுப்பயணம் என..ஆனால் அவர் அடிமனதுக்குள், நம்முடைய இனத்தில் நான் கண்ட இந்த உயரத்தினை மற்றவர்கள் அடைய எது தடுக்கிறது என்கிற கேள்வி உறுத்திக் கொண்டே இருந்தது. அதே நேரம் கறுப்பினத்தவர்களின் சட்டப்போராட்ட உரிமைக்கான குரல் வலுவடைந்தபடி இருந்தது.

அங்கங்கு எழுந்த குரல்கள் மொத்தமாய் ஒருசேர வெகுண்டெழுந்தது அலபமா குண்டுவெடிப்பு சம்பவத்துப்பிறகு தான். அது சிமோனின் வாழ்க்கையையும் மாற்றி அமைத்தது. ஈஸ்டர் நாளில் அலபாமாவில் தேவாலாயம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் நான்கு சிறுமிகள் இறந்து போனார்கள். இது மாபெரும் கொந்தளிப்பினை ஏற்படுத்தியது.  இந்த சம்பவத்தை ஒட்டி சிமோன் பாடல்களை எழுதினார். அவை வலியும் உக்கிரமும் கொண்ட பாடல்களாக இருந்தன. இன்றளவும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக அந்தப் பாடல்கள் ஒலிக்கின்றன.

1963ல் மிஸிஸிப்பியில் கொலை செய்யப்பட்ட சட்ட உரிமை போராளி மெட்கர் எவர்ஸ் மரணமும், அலபமா வெடிகுண்டு சம்பவமும் அவருக்குள் பெருங்கோபத்தை ஏற்படுத்தியிருந்தன. அவர் அப்போது எழுதிய Goddamn Missisippi பாடல் சட்ட உரிமை போராளிகளால் தொடர்ந்து பாடப்பட்டது.

அவர் அந்தப் பாடலில் எழுதிய ஒவ்வொரு வார்த்தைகளும் அமெரிக்காவின் அத்தனை ஒடுக்கப்பட்ட மக்களின் மனதில் இருந்த காயங்களாக இருந்தன. ஒட்டுமொத்த அமெரிக்கச் சமூகமும் கறுப்பினத்தவரை எப்படிப் பார்க்கிறார்கள், எப்படி நடத்துகிறார்கள், என்ன கட்டளை இடுகிறார்கள் என்பதாக சொன்ன வரிகள் அவை.

அந்தப் பாடலை இப்படி முடிக்கிறார்

“நீ எனக்கருக்கில் வசிக்கத் தேவையில்லை..

என்னோடு வாழு

எனக்கு சமஉரிமையை கொடு

அலபாமாவை நீ அறிவாய்

நாசமாப்போன மிஸிஸிப்பி நகரத்தை அறிவாய்..

உனக்குத் தெரியும் தானே…

அவ்வளவு தான் சொல்வேன்”

இந்தப் பாடலைப் பற்றி பேசாத கறுப்பினத் தலைவர்களே இல்லை என ஆனது.

இப்போது முற்றிலும் சிமோன் தனது இலட்சியத்தை மாற்றிக் கொள்கிறார். எந்த மேடையிலும் அரசியல் கருத்துகளைப் பாடத் தொடங்கினார். மார்டின் லூதர் கிங் சுடப்பட்டு இறந்தபோது அதிகம் வேதனைக்குள்ளான அவர் அதையும் இசையாலேயே வெளிஉலகத்துக்கு தெரியப்படுதினார். வன்முறையற்ற ஒரு சமூகத்தினை உருவாக்கி அதன் மூலம் தங்களுக்கான உரிமையைப் பெற வேண்டும் என்று எழுந்த ஒரு குரலையும் மாய்ந்து போகச் செய்து தன் துயர வரலாறை அமெரிக்க எழுதிக் கொண்டது என்றார் சிமோன். ஏற்கனவே அமெரிக்காவின் மீதிருந்த வெறுப்பு அவருக்கு பன்மடங்கானது. இது தனக்கான நிலம் இல்லை என்று முடிவு செய்தார். இப்படி முடிவான பின்பு மனதுக்கு எல்லை இருக்குமா என்ன? கிடைத்த மேடைகளில் எல்லாம் தன் குரல் உயர்த்தி தனது மக்களுக்காக பாடினார். எல்லோரும் வருத்தப்பட்டது, அவருடைய நலன் விரும்பிகள் வருத்தப்பட்டார்கள். தனது பாடல்களின் மூலம் வன்முறையத் தூண்டுகிறார் என்பது அவர்களை கவலைக்குள்ளாக்கியது.. “நீங்கள்  கட்டடங்களுக்கு நெருப்பு வைக்கத் தயாரா?’ என்று கூட்டத்தினைத் தூண்டிக் கொண்டே இருந்தார்.

சில நேரங்களில் அது மிதமிஞ்சியும் போனது. அவரது கோபத்தையும், ஆவேசத்தையும் பியானோ கட்டைகளால் தாக்குப் பிடிக்க முடியாமல் போனது. “எனக்கு அஹிம்சை பிடிப்பதில்லை. நானே துப்பாக்கி ஏந்தி எல்லோரையும் சுட வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் முடியாது. அதனால் என் இசையை துப்பாக்கியாக நினைக்கிறேன்..என் வார்த்தைகளே தோட்டா” என்றார். அப்படித் தான் இருந்தன அந்த நேரத்தில் அவருடைய பாடல்களும்.

இதனால் அவருடைய வருமானம் பாதிக்கப்பட்டது. அவரை நிகழ்ச்சிக்கு அழைத்தால் அரசியல் பேசுவார் என தவிர்த்தனர். சிமோனுக்கு இது அழுத்தத்தைக் கொடுத்தது. ஒருபக்கம் ‘போனால் போகட்டும்’ என்று இருந்தாலும், ‘நான் என்ன தவறு செய்துவிட்டேன்..” என்கிற சீற்றமும் இருந்தன. இரண்டுக்கும் இடையில் அவர் ஊசாலாடிக் கொண்டிருந்தார். பின்னாட்களில் ஒரு நேர்காணலில் இப்படி சொல்கிறார், “ஒருவேளை நான் புரட்சிகரமான பாடல்களைப் பாடவில்லை என்றால் நான் இந்த நிலைமைக்கு வந்திருக்க மாட்டேன்..அப்போதும், இப்போதும் நான் மகிழ்ச்சியாக இல்லை. பொது வாழ்க்கை குறித்து எந்த நினைவுமின்றி பாடல்கள் பாடிக்கொண்டிருந்தவர்கள் சந்தோஷமாக இருந்தார்கள். அன்று சட்ட உரிமைக்காக போராடியவர்களில் ஒருவர் கூட இன்று காலத்தில் இல்லை..எல்லாம் கிடைத்து விட்டது என்று நினைக்கிறார்கள்..ஆனால் எல்லாம் கிடைத்துவிட்டதா? இதோ நான் எனது வாழ்க்கையை இழந்து நிற்கிறேனே” என்றார்.

இதே சமயம் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் கசப்பு ஏற்படத் தொடங்கியிருந்தது. அவருடைய கணவர் அவரை அடித்ததாக நாட்குறிப்பில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார். அதை அவருடன் அவரது இசைக்குழுவில் பயணித்தவர்களும் உறுதி செய்கின்றனர். இவர்களுடைய ஒரே மகளும் இந்த ஆவணபப்டத்தில் பேசியிருக்கிறார். சொல்லப்போனால் இந்த ஆவணப்படத்தின் ஆன்மா அவர் தான். சிமோனை ஒரு தாயாக, போராளியாக, பாடகியாக பார்த்ததை அவர் ஒவ்வொரு கட்டத்திலும் சொல்கிறபோது இப்படியொரு பார்வையா என்கிற வியப்பு ஏற்படுகிறது.

சிமோன் ஒருநாள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு அமெரிக்காவில் இருந்து லெபனானுக்கு சென்று விடுகிறார். அவருடைய மகள் சொல்கிறார். “எனது வீட்டில் நான் பழகிய எல்லாம் இருந்தன, தோட்டம், நாற்காலிகள் பீங்கான்கள்..நாய்கள்..எல்லாம்.ஆனால் எனது அம்மாவும், அப்பாவும் இல்லை..அவர்கள் திரும்பி வரமாட்டார்கள் எனத் தெரிய வரும்போது அந்த பழக்கப்பட்ட வீட்டில் தனிமையில் நின்றிருந்தேன்” என்கிறார். ஆண்டியிடம் இருந்து விவாகரத்து பெற்றுக்கொண்ட அவரை சிமோன் லெபனானுக்கு அழைத்துப் போகிறார். பதினான்கு வயது வரை சிமோனுடன் வாழ்கிறார் அவரது மகள். “துன்பகரமான வாழ்க்கை…என்னை ஒவ்வொரு நாளும் தற்கொலைக்குத் தூண்டிக்கொண்டே இருந்தது அந்த வாழ்வு” என்கிறார். எந்த வன்முறையை எதிர்த்து அமெரிக்காவே வேண்டாம் என்று சிமோன் தனது தாய்வழித் தேசமான ஆப்ரிக்காவுக்கு சென்றாரோ, அங்கே அதே வன்முறையைத் தன மகள் மீது செலுத்தியிருக்கிறார்.

மகள் தனது அப்பாவைத் தேடி அமெரிக்க சென்றபோது மீண்டும் தனிமையாகிறார். கையில் பணமும் இல்லாததால் பிரான்ஸ் சென்று அங்கு இரவு கிளப்புகளில் 300 டாலருக்காக பாடுகிறார். இதே நேரம் அவருக்கு மனப்பிறழ்வும் சேர்ந்து கொள்கிறது.அவரது நிலை தெரிந்து நண்பர்கள் மீட்கின்றனர். மனநல சிகிச்சை அளிக்கப்படுகிறது. தனது அம்மா மனநலம் பாதிககப்பட்ட நிலையில் இருக்கிறார் என்பதை மகளும் புரிந்து கொள்கிறார். அதன் பின்னர் அவர் கடைசி வரை சிமோனை விட்டுக்கொடுக்கவே இல்லை.

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மேடையேறுகிறார் சிமோன். அந்தக் காட்சி தான் ஆவணப்படத்தின் தொடக்கத்தில் அமைந்துள்ளது.. காதல் பாடல்களும், பிறகு புரட்சிகரமான் பாடல்களும் எழுதியவர் இப்போது வாழ்க்கையை வேறு கோணத்தில் பார்க்கத் தொடங்கியதன் விளைவாக ஆழ்ந்த புரிதலுடன் எழுதுகிறார்.

மிகுந்த உணர்வெழுச்சியும் அதை மறைக்கத் தெரியாத ஒருவருமான சிமோன் அதனாலேயே பாதிப்பினை அடைந்தார். “பியானோவை நான் வெறுக்கிறேன்” என்று இசை குறித்த சிந்தனையில்லாமல் அவர் வாழ நினைத்தார். ஆனால் அது தான் தனது அருமருந்து என்று கண்டுகொண்டார். மானுடத்துடன் தொடர்பு கொள்ள அவர் எப்போதும் தன வசம் இசையையே கொண்டிருந்தார்.

ஒரு மேடையில் நின்று, “நான் உங்களை நேசிக்கிறேன்..நீங்கள் என்னை நேசிக்கிறீர்கள்..ஆனால் இந்த இடம் எனக்கு பிடிக்கவில்லை..வெக்கையாக இருக்கிறது..அசிங்கமாக இருக்கிறது” என்று ஆயிரக்கணக்கானவர் முன்பு சொல்கிறபோது எல்லோரும் கோபப்பட்டிருக்க வேண்டும், மாறாக எல்லாரும் சிரித்தார்கள். அது சிமோனின் மனதினை புரிந்து கொண்ட ரசிகர்களின் அன்பளிப்பு, “சிமோன் உன்னை நாங்கள் அறிவோம்..நீ பூடகமில்லாலதவள்..உன் இசை போல மனதில் உள்ளதை சொல்லத் தெரிந்தவள்..அதனால் பரிசுத்தமான உன் ஆன்மாவில் இருந்து தோன்றும் இசை போல் சொற்களையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்” என்பது அந்த பார்வையாளர்களின் பதிலாக இருந்தது.

அதை புரிந்துகொண்டதால் தான் சிமோன் புன்னகையுடன தனது இசைப்பயணத்தைத் தொடர்ந்தார்.

சிமோனின் வாழ்க்கை அமைதியும், வேட்கையும், ஏக்கமும், கொந்தளிப்பும் உணர்வெழுச்சியும், பைத்தியக்காரத்தனமும் கொண்டது. நல்ல ஸ்வரங்களையும் மாறான சுருதிகளையும் கொண்ட ஒரு வாழ்க்கை அவருடையது.

அவரைத் தள்ளி நின்று பார்த்தவர்களுக்கு அவர் அடங்காத ஒரு பிறவியாக இருந்தார். நெருங்கியவர்களின் மனதோடு ஐக்கியமானார். இந்த ஆவணப்படத்துக்குப் பிறகு நினா சிமோனை எல்லோரும் மீண்டும் கண்டடைந்தார்கள்.. அவரை நோக்கிச் சென்றார்கள்.

முன்னைக் காட்டிலும் அவர் நேசிக்கப்படுகிறார்.

மாயா ஏஞ்சலோ கேட்ட கேள்விக்கு பதில் கிடைத்திருக்கிறது..

”என்ன ஆனாய் சிமோன்?”

“வலி சொல்லத் தெரியாதவர்களின் வாழ்க்கையானேன் மாயா” என்றிருப்பார் சிமோன் இருந்திருந்தால்.

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments