சராசரியின் தடங்கள்

0
198

கடை ஒன்றிற்கு சென்றிருந்தபோது அங்குள்ள தொலைக்காட்சிப் பெட்டியில் தொடர் ஒன்று ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அது பெண்கள் மட்டுமே வேலை செய்யும் தையலகம். மூன்று பெண்கள் தைத்தபடியே அவ்வப்போது நிமிர்ந்து தொலைகாட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்தத் தொடரில் ஒரு இளம்வயதுப் பெண் தன்னுடைய அம்மாவிடம், ‘மத்தப் பொண்ணுங்க மாதிரி நான் சராசரியா வாழமாட்டேன்” என்று சொல்லிக் கொண்டிருந்தாள். இந்த வசனத்தைக் கேட்டதும் மூன்று பெண்களுமே தன்னிச்சையாக தலை தூக்கி தொலைகாட்சியைப் பார்த்தார்கள்.

மேம்போக்காகப் பார்த்தால் இது ஒரு சாதாரண வசனமே தான். ஆனால் அது எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. எனக்குத் தெரிந்த பெண்களில் யாரெல்லாம் சராசரி வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று யோசித்தேன். அதற்கு முன்பாக சராசரி வாழ்க்கை என்றால் என்ன என்ற கேள்வியும் வந்தது. .

வேலைக்கும் போய் குடும்பத்தையும் பார்த்துக் கொள்பவர்கள், திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் பெண்கள், ஆண்கள் அதிகமாய் வேலைப் பார்க்கும் ஒரு துறையில் தடம் பதித்தவர்கள் என இவர்களைத் தான் சராசரி வாழ்க்கை வாழாதவர்கள் என்று நினைக்கிறோமோ?

படிப்பு, திருமணம், பிறகு குடும்ப பராமரிப்பு அதன் பின் மரித்துப் போவது..இது தான் சராசரி வாழ்க்கைக்கான அருஞ்சொற்பொருளாக இருக்கக்கூடும் என்றால் நான் அறிந்த பெண்கள் யாரும் அப்படியில்லை. சொல்லப்போனால் இங்கு பெண்கள் எல்லோருமே ஒருவகையில் அசாதாரண வாழ்க்கை தான் வாழ்கிறார்கள்.

எனக்குத் தெரிந்த ஒரு பெண்ணிடம் ‘சராசரி வாழ்க்கை வாழ்வது என்றால் எதைச் சொல்வாய்?’ என்று கேட்டேன். அவளுக்கு பதினெட்டு வயதிருக்கும். ‘ஹவுஸ் ஒய்ஃப் தான் சராசரி வாழ்க்க வாழறவங்க’ என்றாள். சரி, நீ வேலைக்குப் போவியா’ என்று கேட்டேன். ‘ஆமாம் ..பின்னே..ஐஏஎஸ் படிக்கப்போறேன்’ என்றாள்.

அந்த பதில் சந்தோசம் தந்தது. ஆனால் பெண்கள் வேலைக்குப் போவதில் மட்டுமே சுதந்திரம் இருக்கிறது என்று நம்பப்படுகிறதோ என்ற கேள்வியும் எழுகிறது.

திருமணத்திற்குப் பிறகு ஒரு பெண் வேலைக்குப் போவதா வேண்டாமா என்பதை யார் தீர்மானிக்கிறார்கள் என்று யோசித்தால இன்று நாம் என்ன மாதிரியான வாழ்க்கைக்குள் இருக்கிறோம் என்பது புரியும்.

‘குடும்பம் ஒரு கதம்பம்’ என்றொரு படம் வந்தது. ‘ஸ்டோர் வீடு ‘ என்று ஒருகாலகட்டத்தில் பிரசித்தியாக இருந்த குடியிருப்புக்குள் நடக்கிற கதை. பெண்கள் வேலைக்கு செல்லத் தொடங்கிய காலகட்டத்தின் முற்பகுதியில் வெளிவந்த படம். படம் முழுக்கவுமே பெண்கள் வேலைக்கு செல்வதனால் ஏற்படுகிற சாதக பாதகங்கள் பற்றியே பேசும். விசு அவர்கள் இயக்கிய இந்தப் படத்தில் அவரது அபிமான நட்சத்திரமான கமலா காமேஷ் கதாபாத்திரம் அப்போதுள்ள குடும்பத் தலைவிகளின் அசலான வார்ப்பு. அவரது கணவனாக நடித்திருந்த விசு, வேலைக்குப் போகாமல் திண்ணையில் காலை ஆட்டிக் கொண்டு ஊர் கதையையும், வெட்டி நியாயத்தையும் பேசிக்கொண்டிருப்பார். ஆனால் தன் மனைவி காசநோயினால் அவஸ்தைப்பட்டுக் கொண்டே சமையல் வேலைக்கு செல்கிறாள் என்பதை கொஞ்சமும் உணராவதவராக இருப்பார்.

படிக்கும் வயதிலேயே ஒரு நோயாளியைப் பரமாரிக்கும் வேலையையும் சேர்த்து செய்யும் அவரது மகள். அந்த ஸ்டோர் வீடுகளில் ஒன்றில் பிரதாப் போத்தனும் அவரது மனைவியும் வசிப்பார்கள். இருவரும் வேலைக்குப் போவதால் ஒரே பெண் குழந்தையை விடுதியில் தங்கிப் படிக்க வைப்பார்கள். வேலைக்குப் போவதை வெறுக்கும் பிரதாப் போத்தனின் மனைவி கணவனின் விருப்பத்திற்காக மட்டுமே வேலைக்குப் போவாள். இந்தக் குடியிருப்பில் வாழும் எஸ்.வி சேகர், சுகாசினி தம்பதியினர் மனமொத்தவர்கள். ஆனால் அதல பாதாளத்தில் இருக்கும் அவர்களது பொருளாதார நிலைமை. தான் படித்த படிப்பிற்கு வேலை கிடைக்கும் என்று சுகாசினி சொன்னாலும், ‘பொண்டாட்டி வேலைக்குப் போயி, நான் திங்கணும்னு அவசியமில்ல’ என்று வீராப்பாக மறுப்பார் எஸ்.வி சேகர். இந்தக் குடித்தனக்காரர்களோடு கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரியாய் ஒரு கதாபத்திரம் வரும். அவரும் ,அவரது மனைவியும் கடிதங்கள் மூலமாக மட்டுமே உரையாடிக் கொண்டிருப்பார்கள். இருவருக்கும் ஒரே இடத்தில் பணிமாறுதல் கிடைக்காது.

அநேகமாய் இன்று எல்லோருடைய வீட்டில் உள்ள நிலைமைகளின் தொகுப்பாக இந்தப் படத்தை எடுத்துக் கொள்ளலாம். இதோடு இன்னொரு படத்தின் காட்சியையும் சொல்லலாம். நகைச்சுவைக் காட்சி தான் என்றபோதிலும் நமக்கு ஒரு உண்மையை உணர்த்தும் காட்சி. ‘சரஸ்வதி சபதம்’ படத்தில் நாகேஷும், அவரது மனைவியாக மனோராமாவும்  நடித்திருப்பார்கள். இருவருமே அரண்மனையில் வேலைப் பார்ப்பவர்கள். பிரச்சனை என்னவென்றால் நாகேஷுக்கு இரவு நேர காவல்காரன் வேலை. மனோராமாவோ பகலில் அரண்மனையில் வேலை செய்ய வேண்டும். இருவரும் பேசிக்கொள்ளும் தருணம் என்பது அரிதாகவே வாய்க்கும். அந்த நேரத்தில் அவர்கள் தங்களின் நிலைமையைப் பற்றி நக்கலுடனும், கேலியாகவும் பகிர்ந்து கொள்வார்கள். அரசர் காலந்தொட்டே இது போன்ற பிரச்னைகள் இருந்திருக்கின்றன.

பெண்கள் வேலைக்குப் போவது சுதந்திரமான ஒரு செயல் என்று சொல்லும்போது கூடவே ஒரு கேள்வியும் எழுகிறது. ஒரு பெண்ணை வேலைக்குப் போக அனுமதிப்பது அவளது திறமையை முன்னிறுத்தியா அல்லது பொருளாதார தேவைக்காகவா? குடும்பத்தை பராமரிப்பதற்கு கணவனின் வருமானம் மட்டுமே போதும் என்று நிலை வந்தால் பல  பெண்கள் வேலைக்கு செல்வதற்குத் தடை வந்துவிடும். அவர் அலுவலகத்தில் எவ்வளவு திறமையாக பணி செய்து நற்சான்றிதழ் பெற்றிருந்தாலும் அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.

என்னுடைய உறவினர் பெண் நன்றாகப் படிக்கக் கூடியவள். எம்இ படித்திருக்கிறாள். அவளது மதிப்பெண் பட்டியலையும், புத்திசாலித்தனத்தையும் கண்டு பல நிறுவனங்களில் இருந்து வேலைக்குச் சேர அழைப்பு வந்தது. கையோடு திருமணத்தையும் நடத்திவிடலாம் என்றொரு முடிவுக்கு  வந்து அதன்படியே அவளுக்குத் திருமணமூம் செய்து வைத்தார்கள் அவளது குடும்பத்தினர். திருமணம் முடிந்த ஒரே மாதத்தில் அந்தப் பெண்ணை வேலையை விட்டு நீங்கும்படி புகுந்தவீட்டினர் சொல்லிவிட்டனர். அதற்கு அவர்கள் சொன்ன காரணம், “என் பையனோட சம்பாத்தியமே போதும்” என்பது.

என்னுடைய அம்மாவுக்கு எழுபது வயதுக்கும் மேல். பல அனுபவங்களைக் கடந்து வந்தவர். இன்றும் அவருக்கு இருக்கும் துயர நினைவுகளில் ஒன்று நாற்பது ஐம்பத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பு மருத்துவம் படிப்பதற்கான தேர்ச்சி பெற்றபோதும் என்னுடைய தாத்தாவின் வெற்று பிடிவாதத்தால் பள்ளிப் படிப்போடு நின்றது. இன்றும் அந்த நினைவை அவரால் கண்கலங்காமல் சொல்ல முடிந்ததில்லை. திருமணம் ஆனபின்பும் கூட அரசாங்க வேலை கிடைத்தும் குடும்பப் பொறுப்பைக் காரணமாகக் காட்டப்பட்டு அனுமதி மறுக்கப்பட்டவர். வெறும் சொல்லோடு சொல்லாக ஒருபோதும் இந்த நினைவுகளை அவர் கடந்ததில்லை. அதனாலேயே  பிள்ளைகளான எங்களின் படிப்புக்கும், வேலைக்கும் அவர் முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

இது வேலைக்கு செல்லாத பெண்களின ஆறாத நினைவுகள் என்றால், வேலைக்குப் போகும் பெண்களின் நிலைமை இன்னும் சிரமம். அரசாங்கத்தில் உயர்பதவியில் இருக்கும் பெண்மணி ஒருவர் எங்களது குடும்ப நண்பர். காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர். திருமணம் ஆன பின்பு தான் தேர்வுகள் எழுதி உயர்பதவியில் அமர்ந்தார். இப்போது பணி ஓய்வு பெரும் வயது வந்துவிட்டது. பல இடையூறுகள் தருகிற பணி என்பதால் அவரால் உடல்நலத்தில் கவனம் செலுத்த முடிந்ததில்லை. பலமுறை வேலையை விட்டுவிடலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். ஆனாலும் முடியாத சூழல். காரணம் அவரது கணவர். மனைவிக்கு வேலை கிடைத்ததுமே தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையை கணவர் விட்டுவிட்டார். அதாவது முப்பத்தைந்து காலமாக அவரின் கணவர் பார்த்த வேலையெல்லாம் ‘குடும்பம் ஒரு கதம்பம்’ விசுவினை ஒத்தது தான்.

வேலைக்குப் போவதென்பது பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் தரக்கூடியது என்பது பலருக்கும் மாயையாகவே இருக்கிறது. தங்களுடைய ஏடிஎம் அட்டைகளைக் கணவரிடம் தந்துவிட்டு செலவுக்குத் தினமும் அவரிடம் கையேந்தும் நிலைமை உள்ள பெண்கள் இங்கு அதிகம். விரும்பிய புத்தகங்களைக் கடையில் காசு கொடுத்து வாங்கக்கூட முடியாமல் கைநிறைய சம்பாதிக்கும் பெண்களும் இருக்கிறார்கள்.

ஒரு பெரிய நிறுவனத்தில் ஐம்பதாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் எனக்குத் தெரிந்த ஒரு பெண் தான் ஆசைப்பட்ட ஒரு புடவையை வாங்க தன் தோழியிடம் கடன் வாங்கினார். புடவையின் விலை 800 மட்டுமே. கணவனிடம் தன் தோழி தனக்கு அன்பளிப்பாக அந்தப் புடவையைத் தந்ததாக சொல்லிவிட்டார். காரணம், அந்தப் பெண்ணின் கணவர் ஐந்து ரூபாய்க்குக் கூட கணக்குப் பார்ப்பவர். ‘வெள்ளை ‘போர்ட்’ பஸ்ல வந்தா ரெண்டு ரூபா மிச்சமாயிருக்கும்ல’ என்று கேட்பவர்.

பிடித்த வேலை அல்லது வேலைக்குப் போகாதது பற்றிய எந்த வருத்தமும் கொள்ளாமல் இருப்பது,  அனுசரணையான குடும்பம், தனக்கான  நியாயமானத் தேவைகளை சொந்த விருப்பத்தோடு நிறைவேற்றிக் கொள்வது போன்றவையுள்ள பெண்கள் வாழ்வதை சராசரி வாழ்க்கை என்று எடுத்துக் கொள்ளலாம். அதை இன்னும் மேம்படுத்தி சொல்வதானால், அது தான் நிம்மதியான வாழ்க்கை. இப்போது மீண்டும் யோசித்துப் பார்க்கிறேன் எனக்குத் தெரிந்தவர்களில் யாரெல்லாம் சராசரி வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று.

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Rjgopaalan
Rjgopaalan
1 year ago

கருத்துகளும் கூறிய விதமும் அருமை.
சந்தோஷம், வாழ்வின் வெற்றி.. இதற்கெல்லாம் அவரவர் பார்வையில் ஒரு அளவீடு வைத்துள்ளனர். அதே போல சராசரி வாழ்வு என்பதும்.
சக மனிதரை உணர்ந்து புரிந்து மதித்து நடத்தலும், அவரவர்களுக்கான சுதந்திரத்தோடு இருக்கவிடுவதும், இந்த அடிப்படையான சராசரி வாழ்வு பலருக்கும் கிடைக்க வழிகள்.

சராசரி வாழ்வினைத்தாண்டி பல உலகளாவிய நிகழ்வுகளையும் அறிவுகளையும் இது போன்று படைப்புகளாக அளிக்கிறீர்கள்.

300 பக்கம் படித்த புத்தகத்தின் சாராம்சத்தை 3 பக்கங்களிலும்,அனைவருக்கும் சென்று சேர்க்கிறீர்கள். உலகளாவிய படங்கள் , நிகழ்வுகள் என பலவற்றையும் வேவ்வேறு கோணங்களில் தெரிந்துகொள்ள முடிகிறது.
அதற்கே முதலில் நன்றிகள் பல.

தொடர்ந்து எழுதுங்கள் மேம். வாழ்த்துகள்.