2019 : மோடி எப்படி வென்றார்?

0
111

மோடி எப்படி ஜெயித்தார்? மோடியால் எப்படி வெற்றி பெற முடிந்தது? மோடியால் அல்லாமல்
யாரால் வெற்றி பெற்றிருக்க முடியும்? அட! மீண்டும் மோடியா..!!! இவையெல்லாமே 2019
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்கு பின்பான இந்தியர்களின் மனநிலையாக இருந்தது.
அதற்கு முன்பு ஐந்து வருடங்கள் நரேந்திர மோடி தலைமையிலான பிஜேபி அரசு செய்த
சாதனைகள், குறைந்த பட்சம் அரசு செய்ய வேண்டிய கடமைகள் என்று வரிசைப்படுத்தினால்
திருப்தி தரும் வகையில் எதுவும் அமையவில்லை. ஆனாலும் எப்படி அறுதிப் பெரும்பான்மையில்
தேர்தலை வெற்றி கொள்ள முடிந்தது என்பது தான் வலதுசாரிக்கு எதிரானவர்களின் மனநிலை.
ஒரு ஊடகவியலாளராக, செய்தி ஆசிரியராக அரசியலை ஒவ்வொரு கணமும் கூர்ந்து கவனித்து
வரும் ராஜ்தீப் சர்தேசாய்க்கு அதற்கான பதில் தெரிந்திருந்தது. பதில் அனைத்தையுமே அவர்
ஆதரங்களின் அடிப்படையிலேயே முன்வைக்கிறார். அதைக்கொண்டு ஒரு புத்தகமும்
எழுதியிருக்கிறார். புத்தகத்தின் பெயர் 2019 HOW MODI WON INDIA. கடந்த நவம்பர் மாதம் இந்தப்
புத்தகம் வெளிவந்தது.

புத்தகத்தின் அட்டைமுகப்பில் நரேந்திர மோடியும், அமித்ஷாவும் தேர்தல் வெற்றியில்
சிரிக்கிறார்கள்..அந்த சிரிப்புகளுக்குப் பின்னால் இருக்கும் கதையை, வரலாறை, சம்பவங்களை,
உழைப்பை, தந்திரத்தை, திட்டமிடுதலை, சாதூரியத்தை, பதுங்கலை, காய் நகர்த்தலை,
வன்மத்தை , வியூகத்தை ஆதரங்களோடு விளக்குகிறார் ராஜ்தீப் சர்தேசாய். 2019 தேர்தல் வெற்றி
தானாக உருவானதல்ல, உருவாக்கப்பட்டது. கடும் திட்டமிடுதலுடன் ‘ஏற்படுத்தப்பட்ட’ வெற்றி
என்பது இதனை வாசித்து முடிக்கும்போது நமக்கு விளங்குகிறது.
பணமதிப்பிழப்பு, தவறான ஜிஎஸ்டி கொள்கை, ரபேல் ஊழல், பொருளாதார வீழ்ச்சி, பாஜக
தலைவர்களின் கீழ்த்தரமான பேச்சுகள், புல்வாமா தீவிரவாதத் தாக்குதல் எனத் தொடர்ந்து
இந்தியா அடுக்கடுக்காக அரசுக்கு எதிரானவற்றையே பார்த்துக் கொண்டே இருந்தது.
தவறுகளையும் கூட வெளிப்படையாகவே செய்தார்கள். அப்படியும் பாஜக ஜெயித்த வியூகத்தை
பகுதி பகுதியாக பிரித்திருக்கிறார்.

பிஜேபியின் வெற்றி வியூகங்கள் ஒவ்வொன்றும் எப்படித் திட்டமிடப்பட்டது இதற்குள் மக்களும்,
எதிர்கட்சிகளும், ஊடகங்களும், தேர்தல் ஆணையமும் எப்படி சிக்கிக்கொண்டனர் என்பது
உதாரணங்களோடு புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

2019 தேர்தல் முடிவு அறிவிப்பு நாளில் தனது செய்தி நிறுவன அறை எப்படி ரோலர் ஹோஸ்டர்
மனநிலைக்கு உட்பட்டதென்றும் , காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஊடகங்கள் பிஜேபிக்கு
விலைபோய்விட்டதாக ஆவேசமானதையும் விவரிக்கிறார். இந்த ஆவேசம் ராஜ்தீபுக்கு உள்ளூர
காயத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும். ஏனெனில் தொடர்ந்து பிஜேபி அரசு செய்துவரும்
தவறுகளைத் தான் தொடர்ந்து சுட்டிக்காட்டியதை யாரும் பொருட்படுத்தவில்லை என்பதோடு
தன்னை ‘வேண்டாதவர்’ வரிசையில் மோடியும், ஷாவும் பிற பாஜகவினரும் ஒதுக்கியதையும் பல
இடங்களில் சுட்டிக்காட்டுகிறார். இப்படி ஒருபக்கம் இருக்க எதிர்க்கட்சிகளின் குரலை பதிவு

செய்ய வேண்டுமென்று தான் எடுத்த முயற்சிகளை ராகுல் காந்தி, மன்மோகன் சிங், மம்தா
பானர்ஜி போன்ற தலைவர்கள் எப்படி நிராகரித்தார்கள் என்பதையும் சொல்கிறார்.
மோடியின் வெற்றியின் முக்கியமான ஒன்றாக அவர் குறிப்பிடுவது ஊடகங்களையும், சமூக
வலைதளங்களையும் மோடி தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட விதத்தை. இதற்கு பல
உதாரணங்களை ராஜ்தீப்பால் சொல்ல முடிகிறது. உதாரணமாய் 2019ஆம் ஆண்டின்
தொடக்கமான ஜனவரி ஒன்றாம் தேதி ANI ஊடக நிறுவனத்துக்கு அளித்த மோடியின்
நேர்காணலை சொல்ல முடியும். சொல்லப்போனால் அந்த நேர்காணல் பிரபலமாக்கப்பட்டது. பல
செய்தி அலைவரிசைகளை தன்னுடைய சந்தாதாரர்களாக ANI கொண்டிருந்ததால் நேர்காணல்
மீண்டும் மீண்டும் ஒளிபரப்பானது. கேள்விகள் ஒவ்வொன்றும் மோடியை காயப்படுத்தாத
வகையில் அமைந்திருந்தன. தன்னை என்ன வெளிக்காட்ட வேண்டுமோ அதை மட்டுமே தனது
பதிலாக வரும்படி மோடி செய்திருந்தார். இதனை ராகுல் காந்தி உள்ளிட்டவர்கள்
விமர்சித்திருந்தபோதும் மோடி நினைத்தது போல அவரது ‘இமேஜ்’ மக்கள் மத்தியில் உயரும்படி
அமைந்திருந்தது.

மற்றொரு புள்ளிவிவரமும் முக்கியம். தேர்தல் சமயமான 2019, ஏப்ரல் மாதத்தில் ராகுல் காந்தியை
விட மூன்று பங்கு நேரம் மோடி தொலைகாட்சியில் காட்டப்பட்டார். ஒரே மாதத்தில் மோடி 722
மணிநேரங்கள் காட்டப்பட்டிருக்கிறார். நமக்கு முன்பாக தொலைக்காட்சி ஊடகத்தில் ராகுல்
காந்தி காண்பிக்கப்பட்டது 252 மணிநேரங்கள். இத்தனைக்கும் இந்த மாதத்தில் ராகுல் காந்தி
மோடியை விட கூடுதலாய் ஒரு தேர்தல் கூட்டத்தை நடத்தியிருந்தார்.
மோடி அந்த மாதத்தில் தந்திருந்த நேர்காணல் 129 மில்லியன் இந்தி பேசும் மக்களை சென்று
சேர்ந்திருந்தது.

ஒவ்வொரு நேர்காணலும் திட்டமிடப்பட்டே உருவாக்கப்பட்டிருந்தது. ஐந்தாவது கட்டத்
தேர்தலின்போது ‘சலாம் இந்தியா’ என்ற பெயரில் ஒரு பேட்டி அளித்திருந்தார் மோடி.
சாதாரணமாக இல்லை. இரண்டாயிரம் பேர் ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில்
அமர்ந்திருக்க அவர்கள் மத்தியில் மோடி தோன்றுகிறார். சுற்றிலும் உள்ளவர்கள் ‘பாரத் மாத கி
ஜெய்’ என்று கோஷமிடுகிறார்கள். ‘மோடி மோடி’ என்று சந்தோஷத்தில் அலறுகிறார்கள்.
அவர்கள் மத்தியில் தேசத்தை காக்க வந்த ஒரு தூதன் போல தோன்றுகிறார். பிரபல
தொகுப்பாளர் ரசத் ஷர்மா கேட்க பதிலளிக்கிறார். அனைத்தும் ரெடிமேட் கேள்வி பதில்கள். அதே
போன்று பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருடனான மோடியின் நேர்காணல். இந்திய வாக்காளர்கள்
குறித்து சரியான கணிப்பு அது. ஒரு நட்சத்திர நடிகர், பிரதமரையும் அவரது எளிய பின்னணியைக்
கண்டும் வியப்பதென்பது எத்தகைய விளைவினை பாமர மக்களிடம் ஏற்படுத்தும் என்பதை
அறிந்து எடுக்கபப்ட்ட நேர்காணல் அது.

இப்படியான பிரம்மாண்டமான, உணர்ச்சிவசப்பட்ட நேர்காணல்கள் மக்களை மகிழ்விக்கும்,
உணர்ச்சிவசப்படுத்தும் என்பது மோடியின் நீண்ட கால அனுபவம். அதைத் தேர்தல் நேரத்தில்
எப்படி சரியாக செய்யவேண்டும் என்பதை புரிந்து வைத்திருந்தார். ஒரு எளிய மனிதன் பிரதமரான
சுய முன்னேற்ற பிரசங்கம் மோடிக்கு சரளமாய்க் கைவந்திருந்தது. தன்னை நேரு வழி வந்த
‘ராயல்’ காந்தி குடும்பத்துக்கு எதிரான சாதாரண ஒருவராய் ஒவ்வொரு முறையும் காண்பித்தார்.
இது அவரது வெற்றிக்கு பெரிதும் கைகொடுத்தது.

இது போன்ற எதிர்ப்பேச்சு இல்லாத கூட்டங்களில் பேசும் ஆர்வமுள்ள மோடி தான் பதவி
ஏற்றதில் இருந்து பத்திரிகையாளர் கூட்டங்களை நடத்துவதில்லை என்பதையும் சுட்டிக்
காட்டுகிறார் ராஜ் தீப். ஒவ்வொரு முறையும் பேட்டி வேண்டுமென்று கேட்கும்போது அவர் எப்படி
விதவிதமாக சமாளிப்பார் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

ஒருபக்கம் மோடி பிஜேபியின் முகமாக, தேசத்தின் ‘சௌகிதாராக’ தன்னை காண்பித்துக்
கொள்ளும் நேரத்தில் கட்சியை பலப்படுத்தும் வேலையை கச்சிதமாகவும், கடும் உழைப்போடும்
அமித் ஷா செய்தது பிரமிக்க வைக்கக்கூடியது. 2018ல் அமித் ஷா, ராஜ்தீப்பிடம் இப்படிச்
சொல்கிறார் “எங்களது இலட்சியம் பிஜேபியை உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியாக மாற்ற
வேண்டும் என்பது. நான் கட்சித் தலைமை ஏற்ற போது இரண்டு கோடி உறுப்பினர்களே
இருந்தார்கள். இப்போது பிஜேபியில் 9.2கோடி பதிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள். நானூறு
மடங்கு அதிகம். எந்தக் கட்சியாவது குறுகிய காலத்தில் இத்தனை பிரமாண்டமான வளர்ச்சி
பெற்றிருக்கிறதா?” என்று கேட்டிருக்கிறார். இதற்கு அமித்ஷா தந்த உழைப்பென்பது மறுக்க
முடியாதது. ஒருநாளைக்கு நான்கு மணி நேரங்களுக்கும் குறைவாக ஓய்விற்கு செலவிடும் இரண்டு
தலைவர்களை பிஜேபி கொண்டிருக்கிறது. மோடியும், ஷாவும் தூக்கத்தை, உணவை தொலைத்து
ஒவ்வொரு ஊராகச் சென்று தங்களது கட்சியையும், கொள்கையையும் வருடக்கணக்கில்
பரப்பியிருக்கிறார்கள். கட்சியை வளர்க்க ஒருங்கிணைப்பு அவசியம் என்பதை அவர்கள் புரிந்து
கொண்ட தருணம் அது.

இந்த ஒருங்கிணைத்தலை ஷா தேர்தலுக்கு முன்பு சரியாக செய்திருந்தார். ஆகஸ்ட் 2014 –
செப்டம்பர் 2018 வரை ஷா பயணம் செய்தது 7,90,000 கிலோமீட்டர்கள், அதாவது ஒருநாளைக்கு
சராசரியாக 519 கிலோமீட்டர். செல்லுமிடங்களில் எல்லாம் கட்சியினரை , தொண்டர்களை
சந்திப்பதை சளைக்காமல் செய்து வந்திருக்கிறார்.
கட்சியின் முக்கியப் பொறுப்பாளர் தங்களைத் தேடி வந்தது கட்சியினரிடம் நெகிழ்வையும்,
உற்சாகத்தையும், உறுதியும் ஏற்படுத்தியிருந்தன. இந்த அசுர உழைப்பு காங்கிரசில் இல்லாமல்
போனது மிகப்பெரிய சறுக்கலே,
கட்சி பிரம்மாண்டமானதாக மாறும் என்பதை முன்கூட்டியே தெரிந்து வைத்திருந்த அமித் ஷா
அதன் பின்பு எப்படி வழிநடத்த வேண்டுமென்பதையும் முன்தீர்மானமாகக் கொண்டிருந்தார்
என்கிறார் ராஜ்தீப்.

இத்தனைத் தொண்டர்களையும் வழிநடத்துவதில் உள்ள முக்கிய அம்சமே அவர்களுக்கு வேலை
கொடுப்பது தான். கட்சி பரபரப்பாய் இயங்கிக்கொண்டிருக்கிறது என்றும், தொண்டர்களை
மறக்கவில்லை என்பதையும் தலைமை உணர்த்திக் கொண்டேயிருக்க வேண்டும். இதனை பிஜேபி
தலைமை கச்சிதமாக செய்தது. தேர்தல் காலத்தில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பாராட்டுகள்,
அன்பளிப்புகள் போன்றவை ஒருபக்கம் வந்துகொண்டே இருந்தன. இன்னொரு பக்கம்
வாட்ஸ்அப், சமூக வலைதளங்களில் மோடி மற்றும் கட்சி தொடர்பான வீடியோக்கள், பதிவுகளை
பரப்புவது என தொடர்ந்து தொண்டர்களுக்கு ஓயாத பணி ஏற்படுத்தப்பட்டிருந்தது.
தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு அக்டோபர் 2018 ல் இருபத்திநான்கு மணிநேரமும்
இயங்கும் 161 கால் சென்டர்களை நாடு முழுவதும் பிஜேபி அமைத்திருந்தது. இதன் வேலை 8.6
இலட்சம் பிஜேபி பூத் உறுப்பினர்களுடன் தகவல் தொடர்பில் இருக்க வேண்டும் என்பது.

இதோடு மட்டுமல்லாமல் ஸ்வச் பாரத், உஜ்வாலா, சௌபாக்யா போன்ற அரசின் திட்டங்களால
பயனடைந்த பயனாளர்களைத் தொடர்பு கொண்டு அவர்களை எஸ்எம்எஸ், வாட்ஸ்அப்,
மின்னஞ்சல் மூலமாக மற்றவர்களுக்கு தங்கள் பெற்ற பயனை பரப்பும்படி செய்வதும் தான்.
தங்களது வாழ்க்கை மோடி அரசால் எப்படி பிரகாசமாக மாறியது என்பதாக அவர்கள் சொல்ல
வைக்கப்பட்டார்கள். இதற்காக கால் சென்டரில் 15000 பேர் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தனர்.
இது சாதாரண காரியம் அல்ல. இதற்கு ஆள் பலம் தேவை.. அதற்கு அமித் ஷா உழைத்துக்
கொண்டிந்தார். மற்றொருபக்கம் இந்த மாபெரும் சாத்தியங்களை நிகழ்த்த பணபலம் மிக
அவசியமாக இருந்தது. 2019 தேர்தலில் பிஜேபி அதிகமான பணபலம் உள்ள கட்சியாக
உருவெடுத்திருந்தது. ஜூன் 2019 அன்று சென்டர் ஃபார் மீடியா ஸ்டடீஸ் ஒரு அறிக்கை
வெளியிட்டது. அதன்படி தேர்தலின்போது பிஜேபி 27000 கோடி செலவிட்டிருக்கிறது. அந்தத்
தேர்தலில் மொத்தம் செலவான தொகை 60000 கோடி. அதாவது 45சதவீதம் பிஜேபி மட்டுமே
செலவிடப்பட்டிருந்தது.

Association of Democratic Rights (ADR) என்கிற அமைப்பு இப்படி சொல்கிறது. 2017 – 2018
நிதியாண்டில் பிஜேபியால் கார்ப்பரேட் தேர்தல் நன்கொடையாக பெறப்பட்ட தொகை நானூறு
கோடி. காங்கிரஸ் பெற்றது 19 கோடி. இது தவிர மோடி அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட
மூடுமந்திர தேர்தல் பத்திர அமைப்பு பிஜேபியின் பணவரவுக்கு பெரிய அளவில் உதவி
செய்திருந்தது.

இதன்படி கார்ப்பரேட்டுகள், தனிப்பட்ட நபர்கள், என யார் வேண்டுமானாலும் அரசியல்
கட்சிகளுக்கு தேர்தல் நிதியளிக்க உத்தரவாத பத்திரங்களை வங்கியில் வாங்கிக்கொள்ளலாம்
என்றது மோடி அரசு. இதன் மூலம் 2017 – 18ல் பிஜேபிக்கு கிடைத்த தொகை 215 கோடி.
காங்கிரஸ் பெற்றது ஐந்து கோடி.

பிஜேபி ஆட்சிக்கு வந்ததில் முக்கிய பங்கு அவர்களது இந்துத்துவ கொள்கையைத் திரும்ப திரும்ப
பெரும்பான்மை சமூகத்திடம் போதை போல் ஏற்றியிருந்தது என்பது என்பது அறிந்த செய்தி.
தெய்வீகமும், தேசியமும் என்கிற சூத்திரத்தை சரியாகக் கைக்கொண்டனர். இதற்காக திட்டமிட்ட
ஒவ்வொன்றும் புத்தகத்தில் பல பக்கங்களில் உண்டு.

உ.பியில் யோகி ஆதித்யநாத்தின் நேரடி ஆதரவு பெற்றது இந்து யுவ வாகினி சங்கம். காவி
இராணுவமாக உத்தரபிரதேசத்தை ஆண்டு கொண்டிருக்கிறது. இஸ்லாமியர்களுக்கு எதிரான
வன்முறைகளை மேற்கொண்டிருக்கும் இந்த சங்கம் அமித்ஷாவை ஈர்த்திருந்தது. உத்தரபிரதேசம்
முழுவதும் இவர்கள் பரவியிருந்ததைக் கண்டு அமித்ஷாவே வியந்த ஒரு சம்பவத்தை ராஜ்தீப்
புத்தகத்தில் குறிப்பிடுகிறார். உபி பயணத்தின்போது ஒரு ஆபத்தான பொழுதில் ஷா
சிக்கியிருந்தபோது காரினுள்ளிருந்து யோகியை அழைத்திருக்கிறார். அடுத்த ஐந்தாவது
நிமிடத்தில் ஏராளமான இளைஞர்கள் பைக்கில் அங்கு வந்து ஷாவினை அங்கிருந்து
மீட்டிருக்கிறார்கள். அனைவரும் இந்து யுவ வாகினியைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு
நாடாளுமன்றத் தேர்தலின்போது சீட்டு தர வேண்டுமென்பது யோகியின் அழுத்தமாக இருந்தது.
ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி போன்றவர்களை இஸ்லாமியர்களுக்கு ஆதரவானவர்கள் என்றும்,
இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்றும் பிஜேபி தலைவர்கள் சொல்ல, அதனை இவர்களைப்
போன்றவர்கள் பரப்பினார்கள். கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி செல்லும் பாதையில்

இந்துத்துவக் கும்பல் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கத்தி எரிச்சலூட்ட மம்தா கோபத்தில் அவர்களை
நோக்கித் திரட்டுகிறார். இதனை சில நிமிடங்களில் வைரலாக்குகிறார்கள். “ஜெய் ஸ்ரீ ராம்’ என்று
சொல்வதற்கு கூட இந்த நாட்டில் உரிமையில்லை, இந்துக்களுக்கு இவர்களால பாதுகாப்பு தர
இயலாது என்பதாக செய்திகள் பரப்பப்பட்டன. மம்தாவுக்கு ஜெய் ஸ்ரீ ராம் என்று சொன்னதில்
எந்த வருத்தமுமில்லை ஆனால் சொல்லப்பட்ட விதமும் அதற்கு முன்பு நடந்த சம்பவங்களுமே
காரணம் என்பது எளிதாக மறைக்கப்பட்டது.

இப்படியாக போலிச் செய்திகளையும், தகவல்களையும் எடிட்டிங் மூலம் ராகுல் காந்தி
போன்றவர்கள் தவறாகப் பேசியதாக சித்தரிக்கப்படும் வீடியோக்ளும் கீழ்மட்ட பாஜக
தொண்டர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டு பகிரப்பட்டன. இதனை தலைமையும் ரசித்து
ஊக்குவித்தது . பரபரப்பை விரும்பும் மக்களும், எதை எப்படிச் சொன்னால் மக்கள் ரசிப்பார்கள்,
உணர்ச்சிவசப்படுவார்கள் என்பதையும் நன்கு தெரிந்து கொண்ட கட்சியாக பிஜேபி
இருந்ததற்கான சம்பவங்களை உதாரணங்களுடன் ராஜ்தீப் எடுத்து வைக்கிறார்.
இதற்கு நேரெதிரான நிலையில் ராகுல் காந்தி இருந்திருக்கிறார். மோடி ஜெயித்ததில் பிஜேபியின்
வியூகம் எந்தளவுக்கு பயன்பட்டதோ அதே போல் பிரதான எதிர்கட்சியான காங்கிரசின் பங்கும்
உண்டு என்பதை பல இடங்களில் சுட்டிக்காட்டுகிறார்.

2011 ல் அன்னா ஹசாரே காங்கிரஸ் ஆட்சியின் ஊழலுக்கு எதிராக போராடியதை மக்கள்
இன்னும் மறக்கவில்லை. ராகுல் காந்தி அதனைத் தாண்டி பிஜேபியின் ரபேல் ஊழலை
தனியாளாக கொண்டு சேர்ப்பதில் பின்னடைந்திருந்தார்.

சௌகிதார் (காவலன்) என்று மோடி தன்னை முன்னிரூபாய்த்தியபோது ‘சௌகிதார் சோர் ஹை’
(காவலன் திருடன்) என்கிற காங்கிரசின் எதிர்க்குரல் எடுபடவில்லை. திருடன் என்று மோடியை
சொன்னபோது அதனையும் தனக்கு சாதகமாக்குகிறார் மோடி. “நான் டீக்கடையில் வேலை செய்த
ஏழைத்தாயின் மகன். உங்கள் காவலன், அரசக் குடும்பத்தில் பிறந்தவன் அல்ல “ என்கிறார்.
ரபேல் ஊழலை முக்கியமான பிரசார ஆயுதமாக ராகுல் மாற்றியிருந்தாலும் மக்களிடம் அது
பெருமளவில் போய்ச் சேரவில்லை. 75 சதவீத வாக்காளர்கள் ரபேல் குறித்த முழு விவரங்களையும்
அறிந்திருக்கவில்லை.

நேரு, ராகுல் காந்தியை விமர்சிக்கும் மோடி இந்திரா காந்தி குறித்து எந்தக் காட்டமான
விமர்சனத்தையும் சொல்லுவதில்லை என்கிறார் ராஜ்தீப். இதற்குக் காரணம் மோடிக்கு இந்திரா
காந்தி மேல் இருந்த ஈடுபாடு என்கிறார். எமர்ஜென்சி காலகட்டத்து அவரது உறுதியை மோடி
ரசித்திருக்கிறார். அந்த உறுதியை அவர் கைப்பற்ற, ராகுல் போன்ற காங்கிரஸ் தலைவர்கள்
அதனை கைவிட்டதின் விளைவும் மோடியை ஜெயிக்க வைத்திருக்கிறது.
முக்கியமான காலகட்டத்தில் ராகுல் கட்சியை விட்டு விலகியிருந்ததும், எதையும் அரசியலாக
பார்க்காமல் ஒரு நிறுவனமாக பார்த்ததையும், பாராளுமன்றத்தில் மோடியை
கட்டியணைத்ததையும், அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் படித்து வந்தவர்களுக்கு
முக்கியத்துவம் தந்து அனுபவம் வாய்ந்தவர்களை ஒதுக்கியதையும் சொந்தக் கட்சியினரே
ராகுலிடம் விரும்பவில்லை.

கூட்டணி ஏற்படுத்திக் கொள்வதில் தாமதம், குழப்பம், உள்கட்சி பூசல் இவையெல்லாம் ஒருபுறம்
காங்கிரசை சரிய வைத்திருந்தன. மக்களை மேடையின் முன்பும், தொலைக்காட்சி ஊடகங்களின்
முன்பும் மட்டும் ‘காட்டிக்கொள்ளாமல்’ அவர்களுடன் உரையாட விரும்பினார் ராகுல்.
பத்திரிகையாளர்களை அடிக்கடி சந்திதித்திருக்கிறார் என்கிறார் சர்தேசாய். அதே சமயம்
ஊடகங்கள் மேல் ராகுல் கொண்டிருந்த கசப்புணர்வு கூட அவரை அனைத்திலுமிருந்து ஒதுங்க
வைத்திருக்கிறது.

புல்வாமா தாக்குதல் சமயத்தில் மன்மோகன் சிங்கினை அவரது இல்லத்தில் ராஜ்தீப் சந்திக்கிறார்.
“எங்களது ஆட்சியிலும் பல சர்ஜிகல் ஸ்ட்ரைக் செய்திருக்கிறோம். ஆனால் நாங்கள் எதையும்
விளம்பரபடுத்தியதில்லை’ என்று மன்மோகன்சிங் தெரிவித்திருக்கிறார். இப்படி எதையும்
விளம்பரப்படுத்துகிற யுத்தி மோடியின் வெற்றிக்கு காரணமாக அமைந்திருக்கிறது. பிஜேபியைப்
பொறுத்தவரை யாரிடம் செல்வாக்கு இருக்கிறதோ அவர்களை கட்சி பேதமற்று தன்வசப்படுத்திக்
கொள்வதில் தீவிரமாக இருந்திருக்கிறார்கள். பல உடல்கள் இருந்தபோதும் தலைமை என்பது
நாட்டில் மோடியும், கட்சியில் ஷாவும் என்பதை ஒவ்வொரு விஷயத்திலும் அழுத்தமாய் காட்டிக்
கொண்டே இருந்திருக்கிறார்கள். ஆனால் காங்கிரசிலோ பல வருடங்கள் கட்சியில் இருந்தவர்கள்
அதனைப் பின்னுக்கு இழுத்தார்கள். அதே போல் கட்சியின் விசுவாசிகளுக்கு உரிய மரியாதை
தரப்படவில்லை என்பதும் பெரிய குறையாக இருந்தது கட்சியினரிடம் யார் சொல்வதைக்
கேட்பது என்கிற குழப்பம் தேர்தல் காலத்தில் அதிகம் இருந்ததை ராஜ்தீப் சுட்டிக்காட்டுகிறார்.
தமிழ்நாடு, கேரளாவில் பிஜேபி பல வியூகங்களை அமைத்து நாடாளுமன்றத் தேர்தலில்
பெருந்தோல்வி சந்தித்ததும் இடம்பெற்றிருக்கிறது. ஜெயலலிதா மரணத்தின் வெற்றிடத்தை
நிரப்ப தமிழ்நாட்டிலும், சபரிமலை விவகாரத்தை அரசியலாக்கியதன் மூலம் கேரளாவிலும்
பிஜேபி அரசியல் ரீதியாக காலூன்ற முயன்று தோற்றத்தையும் சொல்கிறார்.

இந்தப் புத்தகத்தை வாசிக்கையில் நமக்கு ஏற்படும் உணர்வென்பது பாஜக கட்சி தனது
அடித்தளத்தை மோடி , ஷா என்கிற இரு அசராத , சளைக்காத தலைவர்கள் மூலம் உருவாக்கிக்
கொண்டிருக்கிறது. இவர்கள் சொல் என்றால் செயல் என்று முடிக்க தொண்டர்கள் கூட்டம்
உள்ளது. மக்களவையில் பெரும்பான்மையைப் பெற ஒவ்வொரு நாளும், நிமிடமும்
உழைத்திருக்கிறார்கள். மற்றொரு புறம் தேசம், தேசியம், பாரத மாதா, இந்து, கலாசாரம்,
பாகிஸ்தான் நமது எதிரி, நான் தான் காவலன், பெண்களின் பாதுகாவலன், ஏழைத்தாயின் மகன்,
உறுதியானவன், கருப்பு பணத்துக்கும், ஊழலுக்கும் ஆதரவற்றவன் என்று மக்களை உணர்ச்சிக்
கொந்தளிப்பில் வைத்திருந்து ஆட்சியைப் பிடித்திருக்கிறார்கள்.

இந்த மகுடிக்கு பாமர மக்கள் மயங்கினார்கள் என்றால், படித்தவர்கள் மத்தியில் புத்திசாலிகளும்,
தேச அபிமானிகளும் உடைய கட்சி என்று தன்னை முன்னிறுத்தியது பிஜேபி. முதல்
தலைமுறையில் கல்வி கற்றவர்கள் தங்களைப் போன்ற ஒருவர் பிரதமராகியிருக்கிறார் என்று
நினைக்க, பல தலைமுறையினராக கல்வி கற்ற உயர்சாதியினர், தங்களைக் காக்க வந்த ரட்சகன்
என்கிற முகமுடியை நம்பினார்கள்.

அரசின் திட்டங்கள் என்பது மக்களுக்கு செய்யப்படும் கடமையாக இல்லாமல் உதவி என்பதாக
விளம்பரப்படுத்தப்பட்டன. பால்கோட் தாக்குதலில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் எத்தனை பேர்
உயிரிழந்தார்கள் என்று கேள்வி கேட்டவர்கள் ‘ஆன்டி இந்தியர்கள்’ ஆனார்கள்.

ஒவ்வொன்றையும் திட்டமிட்டு செய்து ஆட்சிக்கு வந்திருக்கும் ஒரு மாபெரும் கட்சி எதற்காக
இத்தனை மெனக்கிட்டது என்று யோசிக்கையில் அதற்கான பதில் அச்சம் தருகிறது.
தேசத்தை இந்து சுயராஜ்ஜியமாக்குவதற்கும், பொருளாதார் வீழ்ச்சி, வேலைவாய்ப்பினை
ஏற்படுத்துவதற்கும் தானா என்ற கேள்வி எழுகிறது. வெற்றியின் ருசி கண்டவர்கள் இவர்கள்.
வெற்றி எப்படி பெற முடியும் என்றும் அனுபவத்தில் கற்றுத் தேர்ந்தவர்கள்.
இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் ஒவ்வொருவருக்குமான முகமுடியைப்
போட்டுக் கொண்டு வெற்றி பெற்றதை ராஜ்தீப் சர்தேசாய் வருத்தத்துடன் பதிவு செய்கிறார்.
நேரடியான , வன்மமான தாக்குதல் ஏதுமின்றி அனைத்தையும் பதிவு செய்திருக்கிறார். தன் கண்
முன்னே தன்னைச் சேர்ந்தவர்களே கூட மோடியின் நிலை அறியாமல் அவர் பக்கம் சாய்ந்ததை
கசப்பான சிரிப்போடு கடந்ததாகச் சொல்கிறார்.
இந்தப புத்தகம் முடிவடையும் தருணம் அந்தச் சிரிப்பு நம்மிடத்திலும் தேங்குகிறது.

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments