ஹன்னா பீக்லர் – கலை இயக்குனர்

0
12

ஹன்னா பீக்லரின் (Hannah Beachler) அப்பா கட்டட வடிவமைப்பாளர். பீக்லரின் உலகம் வடிவங்களால் ஆனது. அப்பாவுக்கு தொழிலில் உதவுவதற்காகவே கட்டடக்கலை படித்தார். பிறகு ஆடை வடிவமைப்பு குறித்து தொடர்ந்து பயிற்சி பெற்றார். அவருடைய ஆர்வம் திரைப்படங்களில்  பணிபுரிவதை நோக்கித்  திரும்பியது. திரைப்படங்களில் காட்டப்படும் உலகத்தை ஒரு கலை இயக்குனர் தான் உருவாக்குகிறார் என்பது பீக்லருக்கு சுவாரஸ்யம் தருவதாக இருந்தது. அதை முயற்சி செய்து பார்க்கலாமே என்று முதலில் செட் வடிவமைப்பாளராக பயிற்சி எடுத்துக் கொள்கிறார். அவருக்குத் தொழில் நுணுக்கம் பிடிபடுகிறது. அதன்பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் இயக்குனர் ரான் கூக்ளரை சந்திக்கிறார். ரான் அப்போது Friutvale Station என்கிற குறைந்த பட்ஜெட் படத்தினை இயக்க முடிவு செய்திருந்தார். அவர் ஹன்னா பீக்லரை இந்தப் படத்துக்கு கலை  இயக்குனராக நியமிக்கிறார். படம் வியாபார ரீதியாகவும், விமர்சனத்திலும் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற படம் எனில் அதில் வேலை பார்த்தவர்கள் அத்தனை பேருக்கும் முகவரி உடனே கிடைத்துவிடும். பீக்லருக்கும் அவ்வாறே அடுத்தடுத்த படங்களில் வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தது.

திரைப்படத் துறைக்கு பீக்லர் செல்லவிருக்கிறார் என்றதும் அவர் சுற்றமும் நட்பும் சொன்னதெல்லாம் “கேமராவுக்கு பிண்ணனியில் பெண்கள் வேலை செய்வதே கஷ்டம்..அதுவும் நீ கறுப்பினப் பெண். ரொம்ப கஷ்டம்” என்பது தான். பீக்லருக்கும் அந்த சந்தேகம் இருந்தாலும் முயற்சி செய்ததில் பலன் கிடைத்தது. முதல் படத்தின்  வெற்றிக்குப் பிறகு கிடைத்த வாய்ப்புகளை அத்தனையையும் அவர் பயன்படுத்த நினைக்கவில்லை. தனக்கு சவாலாக  எவையெல்லாம் இருக்குமோ அந்தப் படங்களில் மட்டும் வேலை செய்தார். Creed படத்தில் ஒரு உடற்பயிற்சி கூடத்தினை வடிவமைக்க வேண்டும் என்பதற்காக பல நூறு உடற்பயிற்சி கூடங்களைப் போய்ப் பார்த்தார். அதனை புகைப்படமெடுத்துக் கொண்டார். படத்தில் அவர் வடிவமைத்திருந்த செட் மிகவும் பேசப்பட்டது.

எந்த நகரத்தில் படப்பிடிப்பு நடத்துகிறார்களோ அது குறித்த புகைப்படங்கள், வரலாறு, மக்கள் குறித்து தெரிந்து கொள்வதற்காக அங்கேயே போய்த் தங்கிவிடுகிற அர்ப்பணிப்பு பீக்லரிடம் இருக்கிறது. அதே போல ஒரு திரைப்படத்தில் பணி செய்ய ஒப்பந்தம் ஆனார் என்றால், தொடர்ந்து அந்தப் படம் முடியும் வரை படக்குழுவினருடன் இயங்குவது அவரைப் பற்றி ஆச்சரியமாக சொல்லப்படுவதாக இருக்கிறது.

அமெரிக்காவில் வளர்ந்தாலும் கூட அவருக்கு தனது தொன்ம நிலமான ஆப்ரிக்கா மீதான ஈடுபாடு அதிகம். அதனால் தான் ரான் அவரை Black Panther படத்துக்கு பணி செய்ய அழைத்தபோது மிக மகிழ்ச்சியாக ஒப்புக் கொண்டார். நவீனமும் மரபும் கலந்த ஒரு ஆப்ரிக்க சமூகம் எப்படி இருக்கும் என்கிற  ரானின் கற்பனையை நிகழ்த்திக் காட்டியவர் ஹன்னா பீக்லர். அதனை  Wakanda Returns படத்திலும் செய்து காட்டியிருந்தார்.

Black Panther படத்துக்காக பீக்லருக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. கலை இயக்கத்துக்காக கறுப்பினத்தவர் பெறும் முதல் ஆஸ்கர் இது என்பது குறிப்பிடத்தக்கது. உற்சாகமும், ஆழமும் கொண்ட நேர்காணல்கள் இவருடையது. அவருடைய நேர்காணலின் மொழியாக்கம் இது.

Black Panther படத்தினைப் பொறுத்தவரை உங்களது தனிப்பட்ட எதிர்பார்ப்பு எப்படி இருந்தது?

என்னுடைய எதிர்பார்ப்புகள் எப்போதுமே படத்தின் வசூலைப் பற்றி மட்டுமே இருப்பதில்லை. இந்தப்படம் தொடங்கும்போது எனக்கு இருந்த எதிர்பார்ப்பெல்லாம் நவீனமும் மரபும் கலந்த ஆப்ரிக்க உலகம் என்பது என்னவாக இருக்கும் என்பதை எப்படி உர்வாக்கப்போகிறேன் என்பது தான். அப்படி ஒன்று இருந்தால் எப்படி இருக்கும் என்பதை செய்து பார்க்கும் வாய்ப்பு எனக்கு இந்தப் படத்தில் கிடைத்தது. அடிமைத்தனத்துக்கு பின்புலமான வரலாறை நாம் அறிவோம். ஆனால் இந்த இனம் தனக்கேயான செழுமையான வேறுபட்ட கலாச்சாரத்தையும் கொண்டுள்ளது இல்லையா? அவற்றையெல்லாம் தான் காட்ட நினைத்தேன். இந்தப் படத்தில் இயக்குனர் ரான் கூக்ளர் பெரியதான கனவினை வைத்திருந்தார். அது எனக்கு பிடித்திருந்தது. அவரைப் பொறுத்தவரை அவரது படங்களில் முந்தைய தலைமுறை மற்றும் இப்போதுள்ளவர்களுக்கான முரண்பாட்டினை ஒவ்வொரு படத்திலும் காட்டிக் கொண்டே இருப்பார். எனக்கு அது குறித்து அதிகம் தெரியாது. ஆனால் Black Panther படத்தில் எல்லாமே ஒன்றாய் கலந்து ஒரு முழுமையான அனுபவமாக எனக்கு கிடைத்தது.

Black Panther படத்தில் அரசன் கதாபாத்திரத்துக்காக பயன்படுத்தப்பட்ட பொருட்கள்

கலை இயக்கத்தைப் பொறுத்தவரை அது தன்னளவில் ஒரு கதையை சொல்லிக் கொண்டிருக்கும். கதாபாத்திரங்கள் வழியாக ஒரு கதை சொல்லப்படுவதைப் போல இது பொருட்களின் மூலமாக கதை சொல்லப்படுவது. எப்படி ஒரு கதை உங்களுக்கு சொல்லப்படும்? நீங்கள் எப்படி புரிந்து கொள்வீர்கள்?

என்னைப் பொறுத்தவரை நான் முதலில் ஸ்க்ரிப்ட்டுடன் உட்கார்ந்துவிடுவேன். அதோடு என்னை நான் தொடர்புபடுத்திக் கொள்வேன். நமக்கு ஏற்கனவே அந்த இயக்குநர்களைத் தெரியும். தெரிதுகொள்ள வேண்டியதெல்லாம் ஸ்க்ரிப்ட் பற்றித் தான். ஸ்க்ரிப்ட் வாசிக்கும்போதே குறிப்பெடுத்துக் கொள்வேன். நான் எப்படி அந்த ஸ்க்ரிட்டைப் பார்க்கிறேன் என்று முதலில் எனக்கு நானே தெளிவுபடுத்திக் கொள்வேன். அதனையும் எழுதி வைத்துக் கொள்வேன். பிறகு இயக்குனருடன் உட்கார்ந்து என்னுடைய கருத்துகளை சொல்வேன். என்னுடைய உள்ளுணர்வுகள் சரிதானா என்று இயக்குனர்கள் சொல்வார்கள். பிறகு நான் என்ன செய்யப்போகிறேன் என்பதை விளக்குவேன்.

அதற்குப் பிறகு ஒளிப்பதிவாளருடன் பேசுவேன். உடை வடிவமைப்பாளரை சந்திப்பேன். ஏனெனில் ஒவ்வொரு படமும் வெவ்வேறானது. வெவ்வேறு குழுக்களுடன் வேலை செய்ய வேண்டிவரும். ஒளிப்பதிவாளர் உடை வடிவமைப்பாளர் போன்றவர்களுடன் பேசும்போது தான் அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள், நான் என்ன செய்யப்போகிறேன் என்ற தெளிவு வரும். மூவரின் எண்ணமும் ஒன்றிணைய வேண்டும்.

இவையெல்லாம் முடிந்தபிறகு மீண்டும் ஒருமுறை எல்லாவற்றையும் ஒன்றிணைத்து யோசித்துக் கொள்வேன். உதாரணத்துக்கு Black Panther படத்தையே எடுத்துக் கொள்ளலாம். இது முற்றிலும் புதிய ஒரு நாகரீகத்தை கட்டி எழுப்பக்கூடிய ஒரு படம். ஒரு உலகையே நிர்மாணிப்பது. அதனால் ஒரு நேரத்தில் ஒரு அடி தான் எடுத்து வைக்க வேண்டும். ஒரே நேரத்தில் பலவற்றையும் போட்டு குழப்பினால ஒன்றும் மிஞ்சாது. இயக்குனர் ரயான் ஆப்பிரிகா சென்றிருந்தபோது அங்கு எடுக்கப்பட்ட மனிதர்கள் சிலருடைய புகைப்படங்களை எனக்கு அனுப்பி வைத்தார். அதில் சிலர் கால்களில் சலங்கை கொண்ட கொலுசுகளை அணிந்தவர்களாக இருந்தார்கள். சிலர் முகத்துக்கு விதவிதமான முகமூடி அணிந்து கொண்டும் இருந்தார்கள். அவர் ஒவ்வொன்றாக அனுப்பிக் கொண்டிருக்கும்போது அவர் என்ன மாதிரியான மனிதர்களை மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று எனக்கு புரிய ஆரம்பித்தது.

இந்தப் படத்துக்கு நான் வெறும் படப்பிடிப்புத் தளத்தை நிர்மாணித்துக் கொடுக்கும் வேலையை மட்டும் செய்யவில்லை. ரயான் மனதில் வைத்திருந்த ஒரு உணர்வினை நான் கட்டிக் கொண்டிருந்தேன். படத்தில் காட்டப்படும் ஒவ்வொரு இடமும் ஒரு கதாபாத்திரமாக மாறின.

இந்தப் படத்தில் மைக்கேல் ஜோர்டான் பயன்படுத்திய முகமூடி டோகான் இனக்குழுக்கள் பயன்படுத்தியதன் பாதிப்பில் உருவாக்கப்பட்டவை. இதற்காக நான் டோகான் இனம் குறித்து கற்றுக்கொண்டேன்.  அவர்கள் மரவேலை நிபுணர்கள். இந்தப் படத்தில் ஆப்ரிக்காவின் ஒவ்வொரு இனக்குழுவும் எதில் தேர்ந்தவர்கள் என்பதை புரியவைத்தது. ஆப்ரிக்காவில் பெரும் சாம்ராஜ்யங்கள் இருந்திருக்கின்றன. அற்புதமான நாகரீகம் வளர்ச்சி பெற்றிருக்கிறது. ஆப்ரிகாவா? அங்கே என்ன இருக்கும்? என்று உதாசீனம் செய்பர்களுக்கு ஆப்ரிக்க நாகரீகம் வழமையானது என்று காட்ட நினைத்தேன். அங்கே நூலகங்களும், திட்டமிடப்பட்ட தெருக்களும், விதவிதமான முகமூடிகள் பயன்படுத்தப் பட்டதற்கான காரணங்களும் இருந்தன. அவை எல்லாமே ரோம பேரரசுகள் உருவாவதற்கு முன்பே அங்கே தோன்றியவை என்பது குறிப்பிடப்பட வேண்டியது.

வில்லாளிகள் இருந்திருக்கிறார்கள். ஒவ்வொரு இனக்குழுவும் ஒவ்வொரு வகையிலான உலோகங்களைத் தங்களுக்கு அம்பு செய்வதற்கு பயன்படுத்தியிருந்தார்கள். அதே உலோகத்தைத் தான வாள்களுக்கும், தலைக்கவசத்துக்கும் மார்புக் கவசத்துக்கும் பயன்படுத்தினார்கள்.

இதையெல்லாம் தெரிந்து கொள்ளும்போது ஒவ்வொரு முறையும் நான் ஆச்சரியப்பட்டேன் இவற்றை எல்லாம் வெளிக்கொண்டு வருவதற்கு இந்தப் படம் எத்தனை அற்புதமாக உதவியிருக்கிறது என்று ஒவ்வொரு நாளும் நான் நன்றியுடன் இருந்தேன்.

சுவற்றில் வரையப்பட்ட ஓவியங்கள் பண்டைய ஆப்ரிக்க அரண்மனை ஓவியங்களின் தாக்கத்தில் உருவாக்கப்பட்டவை

ஒவ்வொரு படத்துக்கும் நீங்கள் வேலை செய்யும் பணி மாறுமா?

ஆமாம். பட்ஜெட், நேரம் இதைப் பொறுத்து சிலவற்றில் மாற்றம் இருக்கும். எந்தப் படத்தில் வேலை செய்கிறேனோ அது   தொடர்பான ஆயிரம் புகைப்படங்களை சேகரித்து எனது அலுவலகத்தின் சுவர் முழுவதும் ஓட்டுவேன். அதனை பிரிண்ட் போடுவதற்கு நானோ, தயாரிப்பு நிர்வாகமோ செலவு செய்வோம். எப்படியோ எனக்கு அப்படி ஒட்டி வைத்தால் தான் வேலை செய்ய முடியும். உடை வடிவமைப்பாளர் ரூத் கார்டரின் அலுவலகத்துக்கு சென்றிருந்தேன். அவரும் அப்படித் தான் சுவர் முழுக்க வண்ண வண்ண படங்களை ஒட்டியிருந்தார். நூற்றுக்கணக்கான படங்கள். அவரும் கூட ஒவ்வொரு படமும் தொடங்குவதற்கு முன்பு அப்படி செய்வாராம்.

சின்ன , பெரிய பட்ஜெட் படமென்கிற பாகுபாடெல்லாம் எனக்குக் கிடையாது.  இரண்டுக்குமே எனது வேலை செய்யும் முறை ஒரே மாதிரி தான் இருக்கும். எது மாறும் என்றால் பெரிய பட்ஜெட் படமென்றால் கூடுதல் நேரம் எடுத்துக் கொள்ளும். திட்டங்கள் மாற்றமடையும் சாத்தியங்களும் உண்டு.

Black Panther படத்துக்கு எட்டு மாத காலங்கள் முன்தயாரிப்புக்கு ஆனது. Moonlight படத்துக்கு மூன்று வாரங்கள் தான் எடுத்துக் கொண்டேன்.

Black Panther படத்துக்கு என்னுடன் 300 பணியாளர்கள் பணிசெய்தார்கள். தச்சு வேலை செய்பவர்கள், சிலை செய்பவர்கள், ஓவியர்கள், பிளாஸ்டர் தொழிலாளர்கள், கலை இயக்குனர்கள், வண்ணம் தீட்டுபவர்கள், செட் அலங்காரம் செய்பவர்கள், பொருட்களை பாதுகாப்பவர்கள் என மாபெரும் குழுவாக வேலை செய்தோம். Moonlight படத்தில் என்னோடு சேர்த்து ஐந்து பேர் மட்டும் வேலை செய்தார்கள்.  நானே தச்சு வேலை, வண்ணம் தீட்டுவது என எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டேன். இரண்டையுமே நான் தொழில்முறையாகவே செய்தேன். அதனால் எனக்கு ஒதுக்கப்படுகிற பட்ஜெட் எதுவாக இருந்தாலும் அதனை முழுமையாக பயன்படுத்தி அந்த ஸ்க்ரிப்ட்டுக்கு எது நியாயமாகவும் சிறப்பாகவும் இருக்குமோ அதை செய்து விட வேண்டும் என்பது மட்டும் தான் எனது நோக்கம்.

நெருப்பினால் சுடப்பட்ட மரக்கட்டைகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது

Moonlight அழகான படம். கதாபாத்திரங்களின் உணர்வுகளை வசனங்கள் எந்தளவுக்கு வெளிப்படுத்தியதோ அதே போல அவர்களின் சுற்றுப்புறச்சூழலும் விவரித்துவிடும். நீங்கள் இதற்கு ஐந்து பேர் மட்டுமே வேலை செய்தோம் என்று சொல்கிறீர்கள். ஆச்சரியமாக இருக்கிறது.

Moonlight படத்தின் ஸ்க்ரிப்ட்டினை வாசிக்கும்போதே அதன் இயக்குனர் பேரி ஜென்கின்சிடம் சொன்னேன், “Friutvale Stationபடத்தின் ஸ்க்ரிப்ட் வாசிக்கும்போது என்ன உணர்வு எழுந்ததோ அதே போல இப்போதும் இருக்கிறது. இந்தப் படம் சாத்தியமாக வேண்டும். நான் இந்தப் படத்தில் இருக்கிறேனோ இல்லையோ, இந்தப் படம் ஸ்க்ரிப்ட் என்ன கோருகிறதோ அதை அப்படியே பிரதிபலிக்க வேண்டும். இந்தப் படம் மக்களை சென்றடைய வேண்டும். எனக்கு அந்த படத்தில் வேலை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. ஆனால் படத்தின் மொத்த பட்ஜெட்டுமே குறைவு தான். 1.5 மில்லியன் டாலர் தான் படத்தின் பட்ஜெட். என்னுடைய சம்பளத்தை அவர்களால் இந்த பட்ஜெட்டில் தரமுடியாது.

தொடக்க் காலகட்டங்களில் ஒரு படத்தில் வேலை செய்ய மியாமியில் இருந்து பதினேழு மணிநேரம் கார் ஒட்டிக் கொண்டு வருவேன். எனக்கு அப்போது தேவைப்பட்டதெல்லாம் அனுபவங்கள், கற்றுக்கொள்ளுதல் இவை தான். தொடக்கத்தில் Fruitvale Station படத்தில் வேலை செய்யும்போது எவ்வளவு கிலோமீட்டர் பயணம் செய்திருப்பேன் என்று உங்களால் கற்பனை செய்யக்கூட முடியாது. ஒரே காரணம் நல்ல படத்தில் வேலை செய்யப்போகிறோம் என்பது தான்.

கிடைத்த இடங்களில் தூங்கிக்கொள்வேன். எனக்கு ரயான் போல ஒருவர் இயக்குனராக அந்தப் படத்தில் கிடைத்தார். எங்களின் நட்பும், தொழில் மேல் கொண்ட ஆர்வமும் அந்தத் திரைப்படத்தை வேறொரு தளத்துக்கு எடுத்துப் போனது. அதனால் Moonlight படத்தினை பட்ஜெட் போன்றவற்றை எல்லாம் கடந்து ஆத்மார்த்தமாக செய்தேன். நல்ல படத்தில் எனது பங்களிப்பு இருப்பதை மகிழ்ச்சியாக நினைக்கிறேன்.

நீங்கள் உங்கள் துறையில் முன்னேற விரும்புபவர்களுக்கு என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?

உங்கள் துறை சார்ந்த எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளுங்கள். தச்சர்கள், வண்ணம் தீட்டுபவர்கள், சிலை செய்பவர்கள் இவர்களுடன் நேரடியாகப் பேசுங்கள். உங்களுடைய பங்களிப்பு எல்லாவற்றிலும் இருக்க வேண்டும். எப்போதும் சுற்றி உள்ளவர்களைக் கவனித்துக் கொண்டே இருங்கள். எல்லாவற்றையும் உள்வாங்குங்கள். உங்கள் வேலை என்பது வெறும் பொருட்களைக் கொண்டு நிரப்புவது அல்ல. ஒருவரின் உளவியல், குணாதிசயங்கள் எல்லாவற்றையும் புரிந்து கொள்ள வேண்டும். பொருளாதாரம் குறித்து, நகரங்கள் பற்றி, ஏன் நியூயார்க்கில் வாழ்பவர்கள் லாஸ் ஏஞ்சல்சில் வாழ்பவர்களை விட வித்தியாசமாக இருக்கிறார்கள் என்பது பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள்.

ஒவ்வொரு நகரத்துக்குள் உள்ள கட்டட வடிவமைப்பைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். லாஸ் ஏஞ்சல்சில் கார்களின் கலாசாரம் அதிகம் உண்டு. நியூயார்க்கில்  அது இருப்பதில்லை. பார்ப்பதற்கும் பழகுவதற்கும் இரு நகரத்தாரும் ஒன்று போல் இருப்பதாகத் தெரிந்தாலும் அப்படியல்ல. இரு நகரங்களில் வாழ்பவர்களின் இலட்சியங்களும், மனநிலையும் வெவ்வேறானவை. இதற்கு நகர வடிவமைப்பும் கூட காரணமாக இருப்பதை புரிந்து கொள்ளுங்கள்.

Black Panther – wakanda forever படத்தில் தண்ணீருக்கு அடியில் உள்ள ஒரு உலகத்தை உருவாக்க வேண்டியிருந்தது.

நான் இதற்கு மெசோஅமெரிக்க உலகத்தைத் தான் உந்துதலுக்காக எடுத்துக்கொண்டேன். மயன் நாகரிகமும் தான். படத்தில் தலோகன் உலகமாக காட்டப்படும் இந்த நீர் உலகத்திற்காக  நானூறு பக்கங்களுக்கு குறிப்புகள் எழுதிக் கொண்டேன். நாம் ஒரு கலாசாரத்தைக் கதையில் கொண்டு வரப்போகிறோம், அதன் மூலம் கதை சொல்லப்போகிறோம் என்றால் நமக்கு ஆதி வரலாறுகளைத் தெரிந்திருக்க வேண்டும் அல்லது இப்படி இருந்திருக்கலாம் என்கிற கற்பனை வேண்டும். அதனால் என்னை ஈர்த்த மூதாதையர்களின் வாழ்க்கை முறையினை படைப்பதற்கு நான் நிறைய கற்றுக்கொண்டேன்.

நாங்கள் வாகாண்டாவுக்காக தனி எழுத்துரு உருவாக்க வேண்டியிருந்தது. படத்தில் அதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதற்காக மேற்கு ஆப்ரிகா, தென் ஆப்ரிக்கா, காங்கோ, நைஜீரியா மொழிகளின் ஆதி வடிவத்தைத் தேடினேன். காலனியாதிக்கத்துக்கு முன்பு என்ன மாதிரியான வரலாறுகள், கதைகள் புனைவுகள் பேசப்பட்டன என்பதை ஆய்வு செய்தேன். பிறகு அதில் இருந்து எழுத்துரு எப்படி மாற்றம் கொண்டது என்பதையும் ஒரு புது மொழி அதில் இருந்து உருவானால் எப்படியாக இருக்கும் என்றும் எழுதி எழுதிப் பார்த்தேன். இது எளிதானதாக இல்லை. மீண்டும் மீண்டும் வடிவங்களை உருவாக்கிக் கொண்டே இருந்தோம். இயக்குனர் ரயான் என்னுடன் கூடவே இருந்தார். அவரும் நானும் எழுத்துகளின் வடிவங்களுக்குள் சிக்கிக் கொண்டிருந்தோம். அது ஒரு நல்ல அனுபவம்.

இவையெல்லாம் எனக்கு கற்றுக்கொள்கிற அனுபவம் தான்.

கற்றுக்கொண்டே இருங்கள். வழிகாட்டிகள் முக்கியமானவர்கள். இந்தத் துறையில் உங்களுக்கு வழிகாட்டக் கூடிய ஒருவரைக் கண்டடையுங்கள். எனது வழிகாட்டியாக நான் வின் தாமசை சொல்வேன்.

அவர் கறுப்பினத்தவர் என்பதற்காக மட்டும் சொல்லவில்லை அவர் பணி செய்யும் விதமும், அவருடைய உத்வேகமும் எனக்கு பிடிக்கும். அது நம்மையும் தொற்றிக்கொள்ளும்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here