Homeசிறுகதைகள்வாடைக் காற்று

வாடைக் காற்று

“கால் நடந்த நடையினிலே காதலையும் அளந்தாள்..
காலமகள் பெற்ற மயில் இரவினிலே மலர்ந்தாள்”
இந்த வரிகள் எப்போதும் அவளை கனவின் ஆழத்துக்கு அழைத்துச் செல்லும். இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் அதன் இந்த வரிகளிலேயே நின்றுவிட இயலுமா என காசி விசாலாட்சிக்குத் தோன்றியிருக்கிறது.
“அவன் ஏன் என்னை ப்ளாக் பண்ணினான்?”
அறுந்த வரிகள் உள்ளுக்குள் பாடலாய் தொடர்ந்தன.
உமா இப்போது தான் தொடங்கியிருக்கிறாள். காசி பாடலை மீண்டும் முதலில் இருந்து ஒலிக்க விட்டாள். உமாவும் தொடர்ந்தாள்.
“அவன் ஏன் என்னை இப்ப ப்ளாக் பண்ணான் காசி..?”
“அவள் கண்ணிரெண்டில் ஆடுதம்மா காதல் கொண்ட மனது”காசி மெதுவாக முணுமுணுத்தாள்.
“காதல் கொண்ட மனசு எப்படி இருக்கும் தெரியுமா காசி…?”
காசி தான் உட்கார்ந்திருந்த இடத்தை விட்டு முன்நகர்ந்து உமாவின் கையைப் பிடித்தாள். காசியின் டீ ஷர்ட் கைமடிப்பிற்குள் இருந்து வெளிப்பட்ட வெள்ளிக் காப்பு உமாவின் கையில் இருந்த கண்ணாடி டம்ளரில் மோதி நின்றது.
“அதிகமாகுது உமா. போதும்”
“ஆகட்டுமே… நான் செத்துப் போறேனே.அவன் ஏன் என்கிட்டே பேச மாட்டேங்கறான்?”
“அடுத்த வேலையைப் பாக்கப் போ உமா. விடு”
“நோ.அவன் இப்பவே எங்கிட்டப் பேசணும்.உன்ஃபோன்ல இருந்து அவனைக் கூப்பிடு”
காசி தன்னுடைய ஃபோனில் பாடலை நிறுத்தினாள். வீட்டு உரிமையாளரின் வளர்ப்பு நாய் குரைக்கும் ஒலி அகங்காரமாகக் கேட்டது..
“நான் கிளம்பறேன் உமா..”
“அதை எடுத்துக் குடு காசி…”
“வேண்டாம் உமா… இங்கேயே இருக்கட்டும்.ஏற்கனவே கோட்டா மீறிப் போயிட்டிருக்கே…”
என்று சொல்லும்போதே தவறி வெளியிட்ட உணர்வு காசி விசாலாட்சிக்கு வந்தது. அவள் இந்த சொல்லுக்காகவே இன்னமும் குடிப்பாள். கடைசிச் சொட்டின் விருப்பக்காரி. அது அங்கேயே இருந்தால் காலி செய்யாமல் விடப்போவதில்லை. பிறகு இரண்டு நாட்கள் அவள் போதமின்றிக் கிடப்பாள். வேலை இருக்கிறது. வந்தும் பார்க்க முடியாது. ஆபத்தினை அறிவிக்கும் தொலைபேசி அழைப்புகள் வரலாம். முன்பு நடந்த நினைவுகள் மனதை அச்சத்தின் பால் இழுத்தன.
“எனக்கு ஒரு கதை தோணுது காசி. ஒரு பொண்ணு. அவளுக்கு சினிமாவுல வேலை செய்யணும்னு ஆசை. படம் டைரக்ட் பண்ணனும். ‘இது ஒரு பொழப்பா’னு வீட்டுல திட்டறாங்க. கிளம்பி சென்னை வந்துடறா. அசிஸ்டெண்ட் டைரக்டரா வேலை செய்யறா. அங்க ஒருத்தன் மேல லவ்வு..காதல். அவன் இவ கூட அடிக்கடி சண்டை போடறான். அவங்க பிரியறாங்களா, சேரறாங்களா?’ இது தான் கதை.
“கதை நல்லா இருக்கு உமா”
“ஏன் பொய் சொல்றே காசி? இந்தக் கதையில புதுசா என்ன இருக்கு?”
“எல்லாக் கதையும் புதுசா இருக்க வேண்டியதில்ல உமா”
“ஆனா ஒவ்வொருத்தருக்கும் அவங்கவங்க வாழ்க்கை புதுசு தானே காசி. என் அப்பாவும், அம்மாவும் எங்கிட்ட சரியாப் பேசறதில்ல. சினிமாவுக்கு வந்துட்டேனாம். சொந்தக்காரங்க கேவலமா பேசறாங்களாம். ஆனா சொந்தகாரங்க எல்லாரும் சினிமா பாப்பாங்க காசி. அவனுக்கு வீட்டுல சப்போர்ட் பண்றாங்க. குடுத்து வச்சவன். இவன் ஏன் என்னை ப்ளாக் பண்ணான் காசி? நான் பாவம்.”
காசிக்கு தன்னுடைய அப்பாவின் முகம் நினைவுக்கு வந்துபோனது.
உமா சுவரில் சாய்ந்திருந்தாள். இமைகள் பாதி மூடியிருந்தன. வலது பக்கம் முடி மெலிதாக காற்றுக்கு வாகாய் பறந்து கொண்டிருந்தது. சிறுதுரும்பும் உறுத்தாத முகம். துலக்கின விளக்கு போல. உமாவை பார்க்குந்தோறும் காசிக்கு இப்படித் தோன்றும், “உன் முகத்தை தேச்சு விட்டா அதுலருந்து பூதம் வரும் உமா”
உமாவுக்கு வெட்கம் வருவதில்லை. “உன்னால தான் காசி இப்படியெல்லாம் சொல்ல முடியுது..” என்பாள்.
இப்போது கூட அவள் முகம் அசங்கினாலேபோதும்.பல பூதங்கள் வெளிவரும் போல இருந்தது.செதுக்கிய சாயல்.அந்த பூதங்கள் எல்லாமேஅவளுடைய காதலனை வதம் செய்யும், கேள்விகள் கேட்கும், சிரிக்கும், அழும், தேம்பும், முடியாமல் தோற்றுப்போய் ஒரேமுகமாய் கூடமாறும்.இராவண முகங்கள்.அந்த அறையில் ஒற்றை மின்விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. இதுவரைஇல்லாமல்தற்போதுஅந்த விளக்கொளி இப்போதுகண்கூசச் செய்தது.
விளக்கினைஅணைத்தால் அறைக்குள் கிடைக்கும் தோற்றம் பற்றிகாசிக்குள் ஒரு கற்பனை உருக் கொண்டது. ஒளியினை வசப்படுத்தும்தொழிலால் நேர்வது இது.உயரத்தில் ஒரு மெழுகுவர்த்தியைஏற்றிவைத்தால் அறை எங்கெங்கு இருளும், அதன் எல்லையிலிருந்துஎவ்வாறுஒளி படரும்என்பதை காசியால் அனுமானிக்க இயலும். அவள்சமபங்கில் இருளையும்ஒளியையும் நேசிப்பவள். இருளில் அமர்ந்து கொண்டு சுற்றிலும் பரவத் தொடங்கும்மெல்லிய சல்லான் போர்த்தி வரும் ஒளியையேக் கூர்ந்து பார்த்தபடி மணிக்கணக்காக அவளால் இருக்க முடியும்.இந்த பிரபஞ்சமே அவளுக்கு இருளும், ஒளியுமாகத்தான் பழகியிருந்தது.
உமா தான் முதலில் வியந்தாள். “லைட் மீட்டர் இல்லாமலேயே நீங்க ரீடிங்கை சரியாச் சொல்றீங்க. அதனால தான் கேமராமேன் உங்க பேரைச் சொல்லியேக் கூப்பிட்டிட்டு இருக்காரு.”
படப்பிடிப்புத் தளத்தில் காசி சிறிதும் உட்கார மாட்டாள். உமா இயக்குனர் பிரிவில் உதவியாளராகச் சேர்ந்த முதல் நாள் அன்று காசியை தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்.“பையன் பார்க்க வித்தியாசமாகத் தெரிகிறானே, இத்தனைத் தீவிரமான பாவனை கொண்ட எவரேனும் இருக்க முடியுமா?” என்று முதலில்நினைத்ததை அடிக்கடி காசியிடம்சொல்லியிருக்கிறாள்.
“கண்ணைச் சுருக்கிச்சுருக்கி எப்பவும்வெளிச்சத்தையே பாத்துகிட்டே இருக்கேனாஉமா, அதான்என் முகமே நெத்திக்கு மேலே மங்கிக்கு குல்லா வச்ச மாதிரி சுருங்கிப்போச்சு” என்றாள் காசி. அன்றும் சொன்னாள் ‘உன்னால தான் இப்படியெல்லாம் பேச முடியும் காசி. உன்னை பையன் மாதிரியே தான் நினைக்கத் தோணுது..”
“நிறைய பேர் அப்படித் தான் நினைக்கறாங்க. எனக்கு இந்த அடையாளம் பிடிச்சிருக்கு உமா. யாரும் நெருங்கறதில்ல. பொய்யான வாக்குறுதிகளைத் தர்றதில்ல.கண் பாத்துப் பேச முடியுது.இதுக்கு முன்னாடி நான் எப்படி இருந்தேன்னு யாராவதுசொல்லத் தொடங்கினா அதை நான் வெறுக்கறேன்” என்றுதூரமாய்த் தெரிந்த கடலின் அலையை வரவிட்டுசொன்னாள்.
பர்சினைப் பிரித்த போது பல மறைப்புகளுக்குப் பின்னே வைத்திருந்த பாஸ்போர்ட் அளவு புகைப்படம் சுண்டுவிரலால் நெம்பியதும் வெளியே வந்தது. அப்போது கூட காசி அதை பார்க்கவில்லை என்பதை உமா கவனித்தாள்.
அந்தரத்தில் படம்பிடிக்கப்பட்டிருந்த அந்தப் புகைப்படத்தில் காசி தன் முன்பக்கமாய் தவழவிட்டிருந்த கற்றைமுடியின் பின்னல் அடர்த்தியாகத் தெரிந்தது. கழுத்திலிருந்து நீண்டு இறங்கியிருந்த அந்த முடிக் கற்றை புகைப்படத்திற்குக் கீழும் தொங்கக்கூடுமென தோன்றியது. தரைநோக்கிப் பார்த்து கிண்டல் செய்தாள் உமா. காதுகளில் ஜிமிக்கித் தொங்கியது. மூக்குத்தியும் கூட குத்திப் போட்டிருக்கிறாள்.
“அம்சமா இருக்கே காசி.உனக்கு கோவி பொட்டு அழகா இருக்கு…” என்றாள்
“இதுஆக்ஸிடெண்ட்டுக்கு முன்னாடி எடுத்தது.என்முடி மேல எனக்கு எவ்வளவு ஆசை தெரியுமா?தலையிலஅடிபட்டதும்மொட்டை போட்டுட்டாங்க. காதுக்கு மேல தலைல நீளமா ஒருகோடு. பாலைவனத்துக்கு நடுவுல ரயில் ஓடற மாதிரி…”
“ஒரு மாசம் கோமாவுல இருந்தேன். நான்பிழைச்சதஆஸ்பத்திரில ஒரு திருவிழா மாதிரி கொண்டாடினாங்க தெரியுமா?.அதுக்கப்புறம்என்னவோஎனக்குஎல்லாமே புதுசா தெரிஞ்சது.நாம புதுசாப்பொறந்ததைக்கொண்டாடறாங்கன்னு பார்த்துட்டே இருந்தேன்.
அந்த நாளத் தான் அஞ்சு வருசமா பிறந்தநாளா கொண்டாடிட்டு இருக்கேன்.யாருக்கும் தெரியாது. அப்புறம்முடிய நீளமா வளக்க பிடிக்கல.தலை வாரினா வலிக்கும்.என்னோட ஒரு அடையாளமா நான் நினைச்சிட்டு இருந்ததை வெட்டி எறிஞ்சதுக்கப்புறம்நான் என்னை புதுசா ஆக்கிக்கிட்டேன். இப்ப ரயில் தண்டவாளத்த புதர் வச்சு மறைச்சிட்டு இருக்கேன்”.
உமா இன்னமும் நம்ப முடியாமல் அந்தப் புகைப்படத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“இந்த போட்டோவை நான் வச்சிக்கட்டுமா?”
உமா கேட்ட விதத்தில் மறுக்கத் தோன்றவில்லை.
“முடி தான் நம்மளப் பெண்ணா தீர்மானிக்குதா காசி?”
“ஆளுமை தான் தீர்மானிக்கணும். கொஞ்ச பேருதான் தோற்றத்தைப் பத்தி கேள்விகளே இல்லாம பழகியிருக்காங்க. அவங்கக் கண்ணுலயும் எந்த கேள்வியும் இருக்காது. ஆனா அது ரொம்ப அபூர்வமாத் தான் நடக்கும்”
“நீ அழகாத் தான் இருக்கே!”
உரக்க சிரித்தாள் காசி.
“அது ஏன் உமா,என்னை சமாதானப்படுத்தனும்னாநான் அழகா இருக்கேன்னு சொல்லணுமா?”
“இல்ல. நீ அழகாத் தான் இருக்கே!”
காசி தோளை குலுக்கிக் கொண்டு முதுகு நிமிர நடந்து போனாள். இருபது கிலோ கேமராவைத் தூக்கி தோள் மேல் வைத்து பின்னோக்கியும் அசராமல் நடக்கும் திறன். தோளில் குழந்தையைப்போட்டுச் செல்லும்இலாவகமும்,தீவிரமும் கொண்டதைப் போல.
காசி எழுந்து அறையின் விளக்கை அணைத்தாள்.
எதிர்பார்த்ததை விட நளினமானஅசைவொளியில் இருந்ததுஅந்த அறை. வெளியில்நின்றிருந்ததென்னை மரத்தின் கீற்று நிலவொளியை அறைக்குள்படர்த்தியிருந்தது.கீற்றின்கரிய அசைவுகளுக்கிடையேஉமாவின் முகம் தெரிந்தது. விளக்கை அணைத்த ஓர்மைஇல்லாதுஉமா கண் செருகிக் கிடந்தாள். கண் ஓரம் நீரின் தடம்.
முழங்கால்களைக் கட்டிக் கொண்ட தோரணையும் முகத்தின் மீதுதென்னைக் கீற்றின் அசைவும்…இப்போது உமாவின் காதலன் பார்த்தால் என்ன சிந்திப்பான்?
“அவன் என்னை யூஸ் பண்ணிக்கிட்டானா காசி?” உமா மெலிதாகப் பிதற்றிக் கொண்டுஆழ்ந்த நினைவுக்குள் போனாள்.
காசி தன்னுடைய அலைபேசியைஉமாவைநோக்கிப் பிடித்தாள். சாய்வுகொண்டதிடகாத்திரமான அவளதுபிடிக்குள் செல்ஃபோன் இருந்தது.உமாவை மெதுவாகஃபிரேமுக்குள் கொண்டு வந்தாள். உமாமோனநிலையில் ஒருக்களித்திருந்தாள். அவளதுபேச்சசைவு வருவதற்குள்ளாககாசி அவளைப்பதிவு செய்தாள். கிடைத்திராதகணம்.செயற்கைஒப்பனை வேலைகளுக்கு அவசியமில்லாமல் துலக்கமானபுகைப்படமாக வந்திருந்தது.

“அவன் என்னை யூஸ் பண்ணிக்கிட்டான் காசி.நான் இப்ப என்ன பண்ண? யூஸ் அண்ட் த்ரோ கப் மாதிரி ஆயிட்டேன்ல?” உமாகேவினாள். .
ஒரு நொடிக்கு முன்பாக நல்லவேளையாகஇவள் இதைக்கேட்டுத் தொலைக்கவில்லை,புகைப்படம் கேவலில் சிக்கியிருக்கும்.
“பேசு காசி…”
“வேலை இருக்கு… நீ தூங்கு… நாளைக்குஃபோன் பண்றேன்”
“நான் ஏன் உன்னை மாதிரி இருக்க மாட்டேங்கறேன்?உனக்கு யாரைப் பத்தியும் கவலை இல்ல..உன்னைப் பத்தியே கவலை இல்ல…
நீ லவ் பண்ணனும் காசி.லவ் பண்ணி பெயிலியாராகி.. என்னை மாதிரி புலம்பணும்.. இதே மாதிரி நீ புலம்பிட்டே இருக்கும்போது நாகிளம்பிப் போகணும்”
காசி புன்னகைத்தாள்.
“இப்ப நான் அவனை மறக்கணும். அதனாலஎன்னவேணுமானாலும் பேசுவேன்.கோச்சுக்காதே…
நம்பரஏன்ப்ளாக் பண்ணான் காசி?ஒரு கதை உருவாக்கறது மட்டும் தான்பெருசா?…. அதக் கேக்க ஆள் வேணும்… கேட்டு சரியா பேசறதுக்கு ஆள் இல்லாம எத்தன பேரோட கத செத்துப் போகுது தெரியுமா? அவனுக்காகநான் என்னென்ன செஞ்சேன்? நீஅவனக்கூப்புடு”
“சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டான்”
“சுத்தக் கோழை.நான் எவ்வளவு தைரியமா ஃபோனை ஆன் பண்ணி வச்சிருக்கேன்.கூப்புட்டா சண்டை போடுவேன். லவ் யூ சொல்லுவேன். அந்தத் தைரியம் ஏன் காசி அவன்கிட்ட இல்ல?”
“நீ தூங்கு உமா. யாருக்கும் இந்த நேரத்துல ஃபோன் பண்ணிட்டு இருக்காத. பேசணும்னு நினைச்சா எனக்கே பண்ணு.வேலை முடிச்சிட்டு லேட்டா தான் தூங்குவேன்”
“உனக்கு ஏன் பண்ணனும். நான்அவனுக்குத்தான்ஃபோன் பண்ணுவேன். அவன் ஏன் ப்ளாக் பண்ணுனான்னு தெரியுமா காசி?”
“கதவை பூட்டி சாவியை உள்ள போடறேன்”
காசி கீழே இறங்கி வண்டியை ஸ்டார்ட் செய்வதற்கு முன்பு காலி போத்தலையும்,நிரம்பியிருந்தமுழுபோத்தலையும் ஒசைப்படாமல் வண்டிக்கு முன்பாக வைத்தாள். ஹவுஸ் ஓனர் வீட்டினுள் அமர்ந்திருந்தார். சீரியல் வசனங்கள் வெளிவாசல் வரைக் கேட்டுக் கொண்டிருந்தன.பத்தரையோடு ஒரு நாளே முடிகிற வாழ்க்கை என்று நினைத்துக் கொண்டாள்.
வண்டி சீரற்று செல்லுமிடங்களில் எல்லாம் போத்தல்கள்உராயும் ஒலி சன்னமாய்க் கேட்டுக் கொண்டே வந்தது.
குப்பைத் தொட்டிகளைத் தேடிக்கொண்டே வந்தாள்.அடுத்தடுத்து இரண்டு தெருக்களிலும் குப்பைத் தொட்டிகளே கண்ணில் படவேயில்லை.வீடுகள் எல்லாம் உயர்தரமானவை. அந்தத் தெருவில் குப்பைத் தொட்டி இருக்குமெனில்அதுசலவைக்கல் மீதுகிழிதுணிபோலஎன்பதால் அங்கு வைக்க சம்மதித்திருக்க மாட்டார்கள்.
சாலையின் நேராக சென்று வலது புறம் திரும்பினால் ஒரு இடம் இருக்கிறது. காசி ஒவ்வொரு முறையும் கடக்கிறபோதும் பதற்றம் தருகிறஇடம். எத்தனையோ முறை கடந்திருக்கிறாள். ஒவ்வொரு முறையும் உடல் மெலிதாய் குலுங்கி அடங்கும். சிந்தனைசெயலற்றுப் போகும். அங்கு ஒரு குப்பைத் தொட்டி இருக்கிறது.
வேறு வழியில்லை. இருள் விரிந்து கிடக்க, வேகம் குறைத்து தன்னிச்சையாக ஒருகாலை தரைக்குக் கொண்டு வந்தாள். அந்தக் குப்பைத் தொட்டி அங்கே இருந்தது. பாட்டில்கள் கொண்டபையை எடுத்துதனித்து வைத்திருந்த ஒன்றைத்தூக்கி கையில் வைத்துக் கொண்டாள்.
உடனே அங்கிருந்து போயிருக்க வேண்டும்.ஆனால்நிற்க வேண்டுமாக தோன்றியது.யாருமற்ற அந்தத் தெருவில் தனிமையாய்தெரிந்த குப்பைத் தொட்டி மீது காசிக்கு தொடர்பு இருந்தது.அதன் அருகில் சென்று உற்றுப் பார்த்தாள். பச்சைகருமையைக்போர்த்தியிருந்தது.கனத்த நாற்றம். மனிதர்களின் கலைந்த வேஷங்களாய் சிதறிக்கிடந்தன அனைத்தும். போத்தலைதொட்டியருகே வைத்தாள்.
சிதறியபடிஇழந்த ரத்தத்திட்டுகள்இன்னமும் கலந்திருக்கக் கூடும் என நினைத்தாள்.மழையில் ஊறிக் காய்ந்தும்கிடக்கக் கூடும். ஏன் இந்தத் தொட்டி என்னைத் துரத்துகிறது? இப்போதும்என்னைஏன் தடுத்துக் கொள்கிறேன்?பதற்றத்திற்கு மருந்து எடுத்துக் கொள்ளும்படி ஏன் ஆகிறது?
குப்பைத் தொட்டியின் பழகிய வாடை அவளுக்குக் குமட்டலைத் தந்தது.வெகுநாளாய்துரத்தும் குமட்டல்.சொப்பனம் நிஜமெனஎதிலும்கடக்க இயலாதவாடை.அவளுடையமுதல்காலத்தின் கடைசிப் பகுதிஇதேக் குப்பைத் தொட்டியில் தான் சேகரமாகி இருக்கிறது.
இதே போன்றதொரு நேரம் தான். அவளதுவீட்டு உடைமையாளர் ஃபோனிலேயே அலறினார். ஃபோனை வைக்கவே விடவில்லை. இரண்டுபேருக்கும் பயங்கர சண்டையாம். அப்பா குடித்திருப்பார் போல. ஒரு புறம் பதற்றமாகவே இருந்தது. மறுபுறம் அவர் அடிக்கடி அலறினார்.தலைசாய்த்து பேசியபடி திரும்பியதுதான் தெரியும்.எதிரில் வந்த டெம்போவிலிருந்துகேட்டகடைசி நேர கூக்குரல் எதுவும்அவள் செவியில் விழவில்லை.அப்படியொரு வேகத்தில் மோதியது.
காற்றில் பறந்தது நினைவிருக்கிறது. அடிவயிற்றில் பூட்டப்பட்டகனம் கீழ்நோக்கி இழுத்தது.சத்தமேதும் எழுப்ப அவகாசம் இருக்கவில்லை.தலைமுரட்டுத்தனமாகமோதியது.உடல் பிடிப்பிழந்துஎதனுள்ளோமடங்கிவிழ,சொதசொதவென ஏதோ கவிழ்ந்தது.உடலின் அத்தனை பாகங்களும்கம்பியில் சூடுபட்டதைப்போல வெட்டி இழுத்தன.மூக்கின் அருகில் பெருகிய வாடைநெஞ்சை அடைத்தது. சகிக்கவியலாமல் குமட்டியது.
நினைவு வந்த பிறகு பிசைந்து வைத்த யானை பொம்மை ஒன்றுஅசைந்து அசைந்து இவளை நோக்கி பெரும்வீச்சத்தோடு கனவில்அடிக்கடி வந்து போனது.
அவள் வாழ்க்கையின் முன்ஜென்மம் அது என்றே நினைத்திருக்கிறாள்.அப்பாஅவளை விட்டு பிரிந்து போனார்.மருத்துவமனைக்கு ஒருமுறை கூடதன்னை வந்துபார்க்கவில்லை என்று நினைக்குந்தோறும் இரும்புக்கம்பியின் சூடு மேலூர்ந்ததை காசி உணர்வாள்.
இரவுகளில் திடுக்கிட்டு எழுவாள். பெருகும் நாற்றத்தை துரத்தவியலாமல்மலங்க பார்த்திருப்பாள். சந்தேகத்தில்விளக்குகளை எரியவிட்டு வீட்டின் ஏதேனும் மூலையில் குப்பைகள் கசிகின்றனவாஎனபலமுறை தேடியிருக்கிறாள்.சம்பளத்தில்அதிகம் செலவானதேஅறையை வாசனையாக்கும் திரவத்திற்கு தான். அந்த யானை வரும். வந்த பிறகு தான் தூங்கியதே அவளுக்குப் புரியும்.
மணம் மனதின் வழி என்று அறிந்தபோது மனம் கலவரத்தைத் துவக்கியது. இருளும் ஒளியுமே அவளை பாதுகாத்தது. தான் நேர்ந்தேடுத்த வேலைக்காக தன்னை அர்ப்பணிப்பு செய்வதில் மனம் தீவிரம் கண்டது.
வண்டியை ஓட்டிக்கொண்டிருக்கும்போதுஅந்த வீச்சம் வந்தது.சட்டையைமுகர்ந்து பார்க்கும்படிசெய்தது. கையில் பட்ட எண்ணம் வந்தது.வீடு வரை இந்த வீச்சத்தை எடுத்து செல்ல பிடிக்கவில்லை.வண்டி அவளின் மனம் அறிந்து வேண்டுமென்று பல தெருக்களைசுற்றிக்கொண்டுதன் போக்கில் வீடு நோக்கிப் போய்க்கொண்டிருந்தது.
அலைபேசி அழைத்தபோது அவள் வீட்டை நெருங்கியிருந்தாள். உமாதான் அடித்துக் கொண்டிருக்கிறாள். ஃபோனை எடுத்த போது அவள் சொன்ன சேதி சற்று எரிச்சலடைய செய்தது.உடைக்காத போத்தல் பத்தாயிரம் ரூபாயாம். காதலன் வாங்கிக் கொடுத்ததாம். பிறந்தநாள் வாழ்த்தொன்றை எழுதி போத்தலுக்கு அடியில் ஒட்டி வைத்து தந்திருக்கிறானாம். அவன் தன் மேல் காட்டிய பிரியத்தின் அடையாளம் என்றாள் உமா. மனிதன்வீம்புக்குஉண்டாக்கி வைக்கிற மதிப்பு எப்போதும் பெரிய விஷயங்களில் இல்லை என்று காசி நினைத்துக் கொண்டாள்.
வீட்டினுள் சென்ற பிறகு பத்தாயிரம் சன்மான போத்தலை எடுத்து வைக்கப் போன போதுதான் அதிர்ந்து போனாள். காலி போத்தல் தான் அவளிடம் பத்திரமாக இருந்தது.
சரியாகபத்தாயிரம்ரூபாய்போத்தலை அவளுடையவாழ்க்கையின் நினைவுச்சின்னதிற்கு சமர்ப்பித்திருந்தாள். உமா மீண்டும்மீண்டும் அழைத்தபோது போத்தலின் தீவிரம் புரிந்தது. வினையைத் தானே இழுத்துக் கொண்டு வந்து விட்டோம் என நினைக்கையில் தன் மீதே வெறுப்பும் வந்தது.
குப்பைத் தொட்டி தூரமாக தெரிந்த போதே சற்று பதட்டம் வந்தது. இதற்கும் நமக்கும் உண்டான சொந்தம் விடாது போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டாள். அருகில்செல்லும்போதுஅந்நேரத்தில்அங்கே இரண்டு மனிதர்கள்நின்று கொண்டிருப்பது காசிக்குத் தெரிந்தது.
வண்டியைதள்ளியேநிறுத்திக் கொண்டாள். விட்டுச் சென்ற போத்தல் கிடைக்குமாஎன்பதில்சந்தேகம் வந்தது. உமாவின் அழைப்பு இப்போது சத்தமின்றி அதிர்ந்தது. அவர்கள்அசைவதாக இல்லை.காசி மெதுவாக வண்டியை செலுத்தினாள். போத்தல் இருந்த இடத்தை கவனித்துப்பார்த்தாள்.மஞ்சள்ஒளியினை உள்வாங்கிய கண்ணாடி பொம்மை தனது வாடிக்கையாளருக்குக் காத்திருப்பது போல நின்றிருந்தது.
இருளின் ஒளிர்வில் வரும் உமாவின் ஒவ்வொரு அழைப்பினையும் பார்வையிட்டுக் கொண்டே அவர்களின் நகருதலுக்காக காத்திருந்தாள். ஒரு ஆள் அவளை பார்த்துவிட்டான். அவளும் அவனைப்பார்க்க நேர்ந்தது.அவளுக்குள்ளும் உள்ளூர அச்சம் வந்தது அதே சமயம் அந்த ஆள் மற்றவனிடத்தில் குறைந்த ஒலியில் ஏதோ சொன்னான். அவனும் அவளைப் பார்த்தான். அவள் வண்டியிலிருந்து இறங்கினாள். இரவின் அடக்கத்தில் அவளது உருவம் எதை உணர்த்தியதோ தெரியவில்லை. இருவரும் ஆளுக்கொரு திசை நோக்கி மெதுவாகநகர்ந்தார்கள்.
சில நொடிகள் வரை காத்திருக்கக் வேண்டும் என்று முடிவு செய்தாள். நொடிகள் கடந்தன.
வண்டியினை மெதுவாகத்திருப்பி குப்பைத்தொட்டிக்கு அருகில் நெருங்கவருகையில் எதிரில் வேறொரு வாகனஒலி கேட்டது.காவல்துறையினரின் வாகனம். வேறு வழியில்லாமல் அவள் குப்பைத் தொட்டியை கடந்து போக நேர்ந்தது.
இரண்டு தெருக்களை சுற்றிய பிறகேதிரும்பவும் அந்த சாலைக்குள்வர முடிந்தது. வேறு எந்த வாகனமும் இல்லை. தனதுவண்டியைசாலை முனையிலேயே நிறுத்திக் கொண்டாள். குப்பைத் தொட்டி நோக்கி நடந்தாள். சில அடிகளின் தூரம் தான்.நினைத்தால் ஆச்சர்யமாக இருந்தது. எந்த இடத்தினைக் கடக்க இதுவரை பதற்றமாகஇருந்ததோ அதே இடத்தினை இருளை ஊடுருவிநெருங்குகையில் அவளுக்கு அசாதாரணமாக இருந்தது.
அருகில் வந்ததும் தான்திகைத்தாள். ஒரு ஒல்லியான தேகம் கொண்டவயதான மனிதர்ஒருவர் போத்தலைக் கையில் வைத்து உருட்டிக் கொண்டிருந்தார்.போலீசுக்குபயந்துஒதுங்கியிருக்கவேண்டும். அல்லதுஒதுங்குவதேஇயல்பாய் இருந்திருக்கவேண்டும். அவர்அதனைத் தலைகீழாகக் கவிழ்த்தார். மீண்டும்நேராகத்திருப்பினார்.முகர்ந்துபார்த்தார்.காசிஅதையேப்பார்த்தபடிநின்றாள். அவளுக்குள் அந்தப் போத்தலை பெற்றாக வேண்டுமென்கிறஉந்துதல்இருந்தது.பத்தாயிரம் ரூபாய் காரணம்என்றாலும்இரவில் ஒளியுடனான விளையாட்டாகவும் அது இருந்தது.
“மனுஷநாய்ங்க… உள்ளஒண்ணுக்கு அடிச்சு வச்சிருப்பானுங்க” என்றுகுழறினார்.போத்தலைத் திறக்க முயன்று பார்த்தார்.அதுஅழுத்தமாக அடைபட்டிருந்தது.திறப்பதற்கானவித்தைகளை காட்டியபடிபோராடிக் கொண்டிருந்தார்.
காசிநகர்ந்துகிழவர் முன்பாக போய் நின்றாள். அவர் நிமிர்ந்து பார்த்துவிட்டு வெடுக்கெனபோத்தலை மறைத்துக் கொண்டார். காசி நகராமல் நின்றாள். அவரும்அவளையே புதிராகப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தார்.காசி அவரின் கைகளைப் பார்த்தாள். அவர்எழுந்தபடிபோத்தலை கைமாற்றி தன்முதுகுக்குப் பின்னால் எடுத்துப் போனார். அவரால் நிற்க இயலாமல் போனது. ஒருகணம்போத்தலின் கனம் தாங்காமல் விழுந்துவிடுவார்போலவும் இருந்தது.கெட்டியாகப் பிடித்தபடி நின்றார்.
அவர்எதுவும்பேசாது நின்றது அவளுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தது.எனினும்கிழவர் சளைக்காது நின்று கொண்டிருந்தார். பார்வை போத்தலிலிருந்து விலகி காசி மீதே இருந்தது.இரண்டுநபர்களுக்கும்இடையில் மக்கிய வாடையுடன் குப்பைத்தொட்டிசவம் போலக் கிடந்தது.
காசிகையைநீட்டினாள்.
அவர்மவுனமாகநின்றிருந்தார்.
“அது என்னோடது.தர்றீங்களா”
கிழவர்தருவதாக இல்லாமல் போத்தலை முன்புறம் கொண்டு வந்து காண்பித்து கையில் வைத்துஉருட்டினார்.அசையும்போதுமஞ்சள் வண்ணத்தைசெம்பழுப்பு நிற ஒளியாக வாங்கிய போத்தல்அவர் கையில் மினுமினுத்து உருண்டது.
இப்போதுகிழவரால் முற்றிலும் நிற்க இயலாமல் போனது. தன்னிடத்தில் இருந்து இரண்டடிகள் முன்னகர்ந்து வந்தார்.
“யாரு?” என்றார். அவருடையகுரல் அச்சுறுத்துவதாக இருந்தது. கண்கள்எந்த விளக்கின் ஒளியில் மின்னுகிறது என்பதை கவனித்தாள் காசி. அதுபின்புறக் கடையிலிருந்து வந்தது. இதே ஒளியில் மீண்டும் ஒரு பிம்பத்தினை அமைக்க முடியுமானால் தானே பாக்கியவான் என நினைத்தாள்.
“என்னோடதுதான்” என்றாள் காசி.
“ஓ” என்றுஅவள் எதிர் பார்க்காதவண்ணம் கடும் வெறுப்போடு போத்தலைகுப்பைத்தொட்டியில்வீசினார். பிறகுவெற்றிகொண்டமமதைநடையோடுஅவ்விடம் விட்டுச் சென்றார். காசிக்கு போத்தலின் மோதல் சத்தம் ஏமாற்றத்தை அளித்தது.நாற்றம் முன்னிலும் அதிகரித்தது.
ஓடிய இடத்திற்கே மீண்டும் வந்து நிற்பதுஎன்றஎதிர்பாராத நிலை.முடுக்கிவிடப்பட்ட விசை போல கால்கள் அவளை வழி நடத்தின.
உடைந்த தனது ஒரு பல் இந்த மண்ணில் தானேகிடக்கிறது என நினைக்கத் தோன்றியது.காலைமெதுவாகஅழுத்திவைத்துநடக்க வேண்டுமெனப் பட்டது. ஏதோ நெறிபடும் சத்தம் கேட்டது. தனது கால்களை தள்ளி வைத்துப் பார்த்தாள். காய்ந்த வாழை இலைகள்.
தரையைக் கூர்ந்து பார்த்தாள். குப்பைகள் சிதறிக் கிடந்தன. சற்றுத் தள்ளி இருளில் தூர்ந்து கொண்டு இரண்டு கோலிக் குண்டுகள் தெரிந்தன.அச்சம் சில்லிட்டது.அடர் வண்ண நிறத்தில்ஒரு நாய் கிடந்தது.காசி அதையேகவனித்ததும்சட்டென துள்ளி எழுந்து சிலிர்ப்பூட்டியது. இலட்சியம் கொண்ட குப்பைகள் நாய்க்காக அசைந்து கொடுத்தன.
அவளை விட்டு விலகாத அந்நாற்றம் முழுவதுமாகஇப்போது அவளை சூழ்ந்து கொண்டது.அவள் நினைவை எப்போதும் ஆக்கிரமித்திருக்கும் ஒரு சூறாவளி.காவல்துறையின்வாகன சத்தம்மீண்டும் எங்கிருந்தோ கேட்டபடியிருந்தது.
குப்பைத்தொட்டியின் விளிம்பில் கைவைத்தபோது அது வழுக்கியது.உள்ளே எட்டிப் பார்த்தாள். போத்தல் தரை இறங்கிக் கிடந்தது.ஏதோ ஒன்றில் மேல் கவிழ்ந்திருந்தது.எம்பிகால்களின் விசையால்அவள்மேலெழுந்தாள். உள்ளே குதித்தாள். திடுமென ஆடி குலுங்கிநின்றதுகுப்பைத் தொட்டி.நாய்ஓடுவதுபோலதள்ளிபோய் நின்றுகொண்டது.கண்டனக் குரலால் ஒருமுறைமிரட்டவும்செய்தது.
போத்தலைக் கையில் எடுத்தாள். அதுபிசுபிசுத்திருந்தது. அதன் மேல் வழிந்த பிசுக்குகளை தன்உடையில்துடைத்தாள். சாலையில் சென்று கொண்டிருந்த ஒருவன் நின்று நம்பமுடியாமல் வெறித்தபடி பார்த்தான். அவனுக்கு வெகு குழப்பமாக இருந்தது. சுற்றிலும் ஒருமுறை பார்த்து உறுதிசெய்துகொண்டான்.திரும்பிப் பார்த்த போது கிடைத்தஒளியில் அவன் முகத்திலிருந்த அச்சம் தெரிந்தது.இருவருமே பார்த்துக் கொண்டார்கள். அவன் தன் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு அகன்றான். எனினும்திரும்பிப் பார்த்துக் கொள்வதை மட்டும் விடாதுசாலை முனை வரைக்கும்சென்றான்.
காசி தன்னுடைய செல்ஃபோனை பாண்ட்பாக்கெட்டினுள்இருந்து எடுத்தாள். ஒரு புகைப்படத்தை ஓவிய நுட்பமாக அந்த செல்ஃபோனால் மாற்றித் தர முடியும்.அதை வாங்கியதே கூட தற்படம் எடுத்து ஓவியமாக்கிக்கொள்ளவே.இதுவரை அதற்கு முயன்றிராத அவளுக்கு இன்றுதன் வாழ்க்கையின் நினைவுச் சின்னத்தோடு ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளக் கூடியயோசனைவந்தது.
அதனுடனான தனது புகைப்படத்தை எடுத்துக்கொண்டாள். கைகள்பலவீனமாக நடுங்குவதை உணர்ந்தாள். தன்னிச்சையாய் வந்த சுவாசத்தில் வாடை இல்லை.சுவாசம் நிரம்பியது.
நிதானமாக வெளியில் குதித்தாள்.
வண்டியை நோக்கிப் போய்க்கொண்டிருந்தாள். நாய் அவளுடன் கூடவே தத்திநடந்து வந்தது.அவளதுஃபோன் அதிர்ந்தது.
உமா அழைத்தாள்.
“காசி…அவன் எங்கிட்ட ஃபோன்ல பேசிட்டான்… சாரி கேட்டான்… இப்ப நான் ஹேப்பி… வைக்கட்டா..பை’ என்றுஃபோனை வைத்தாள்.
காசி புன்னகைத்துக் கொண்டாள்.
வண்டியில் ஏறி போத்தலை பத்திரமாக வைத்துவிட்டு நிமிர்ந்து அமர்ந்தாள்.
நாய் வண்டியை ஒருமுறை சுற்றி வந்து பின்பக்கமாய் நின்று கொண்டது.அவள்போகையில்சற்றுதூரம் வரை வந்து விட்டுத் திரும்பியது.
எப்போதும் குறைவாக நெஞ்சில் நிறையும் காற்று இப்போது தடங்களில்லாமல் முழுதும் நிறைத்தது. வாடையற்ற பிரதேசமாக நகரம் இருளில் விரிந்தது. வண்டியில் சல்லென பறந்தாள் காசி.

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments