வயல்காட்டு இசக்கி – அ.கா.பெருமாள்

0
11

வயல்காட்டு இசக்கி என்கிற புத்தகம். ஆய்வாளர் திரு அ.கா பெருமாள் எழுதியது. மூன்று நாட்களுக்கு முன்பு தான் புத்தகம் வாங்கினோம். புத்தகத்தின் தலைப்பு ஈர்த்ததால், முதல் கட்டுரை வாசிக்கத் தொடங்க, விடுவேனா என்று ஏறி உட்கார்ந்து கொண்டது. அடுத்தடுத்து கட்டுரைகளினால் கீழே வைக்க மனமில்லை. ஒரு வரி கூட அனாவசியமானது இல்லை. அனைத்துக் கட்டுரைகளுமே ஒரு சிறுகதைக்கான தொடக்கமே. எல்லா வரிகளும் வார்த்தைகளும்.. தகவல்கள், ஆச்சரியங்கள், பிரமிப்புகள், நினைவலைகள், நாம் மறந்த வாழ்வியல்கள், அபூர்வ மானுடர்கள், கலைகள்…
பல வருடங்களாக அவர் வெவ்வேறு இதழ்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்தப் புத்தகம். முதல் கட்டுரை ராப்பாடிக் கிழவர் ஒருவரைப் பற்றியது. அவர் அந்த இனக்குழுவின் கடைசி மனிதர் என்கிறார் அ.கா. பெருமாள். அவரைத் தேடித் போன அனுபவத்தில் இருந்து கட்டுரைத் தொடங்குகிறது. என்னுடைய சிறு வயதில் ராப்பாடிகள் ராப்பாடினிகள் பற்றி தெரிவிக்கப்பட்ட பயமுறுத்தும் கருத்துகளில் இருந்து அவர்களின் வாழ்க்கை முறையும், திறன்களும் வேறாக இருந்திருக்கின்றன. வெவ்வேறு விதமான நெற்பயிர்களின் பட்டியலும், அதைப் பாதுகாக்கும் முறையினையும், செடிகளை அழிக்கும் பூச்சிகளிடமிருந்து எப்படி பயிர்களைப் பாதுகாப்பது என்பது குறித்தும், அந்த வருடத்தின் மழைக்கான அளவுகள் பற்றியும் ஒவ்வொரு ஊரைப் போய்ப் பாடிய பாணர்கள் போல இவர்கள் இருந்திருக்கிறார்கள்.
சாமியாடிகள் பற்றியும், ஊர்த் தெய்வங்களுக்கான படையல்களும், குறவர்கள் குறு நில மன்னர்களாகவும், கோயில் நிலத்தைப் பாதுகாக்கும் அதிகாரிகளாக இருந்தது குறித்தும் உள்ள தனித் தனிக் கட்டுரைகள்..
சாமியாடிகளுக்கும் அவர்களின் இச்சைகள் குறித்துமுள்ள ஆய்வுக் கட்டுரை. இதனை நித்தியானந்தாவோடு பொறுத்தி முடிக்கிறார்.
அரசர் காலத்தில் தரப்பட்ட விதவிதமான தண்டனைகள் பற்றியும், அது குறித்து செதுக்கப்பட்ட சிற்பங்கள் பற்றியுமான செய்திகள் என எதைச் சொல்ல, எதை விடுவது என்றிருக்கிறது.
வாழ்நாள் முழுவதும் பல மைல் தூரம் நடந்தும், கடந்தும் இவரைப் போன்ற ஆய்வாளர்கள் சேகரிக்கிற தகவல்களுக்கு கைமாறாய் நாம் என்ன செய்துவிட முடியும் என்று தோன்றும்.
நான்கு வருடங்களுக்கு முன்பு நாஞ்சில்நாட்டுக்கு ஒரு பயணம் மேற்கொள்ளும் முன்பு அந்தப் பகுதி கோயில்கள் பற்றிய அ.கா பெருமாள் அவர்களின் புத்தகங்களை வாசித்துப் போனேன். அவர் சொன்னத் தகவல்கள் நம் கண் முன் இடங்களாகவும், சிற்பங்களாகவும், பழக்கவழக்கங்களாகவும் இருந்தது நல்லதொரு மறக்கவியலாத அனுபவமாக இருந்தது.
இப்போது இந்தப் புத்தகத்தை வாசித்ததும் அடுத்த பயணத்துக்காக மணம் தயாராகிவிட்டது. என்னால் ஆகக்கூடியது இவர் எழுத்தை மனதில் கொண்டு பயணிப்பது மட்டுமே தான்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here